Pages

வெள்ளி, ஜூலை 17, 2026

81 உய்குர்: முஸ்லீம் நாடுகளும் இரட்டை கோபுரமும்

 

அ.பாக்கியம்

சின்ஜியாங் தொடர்பான விவகாரங்களில் மேற்கத்திய ஊடகங்கள் தொடர்ந்து ஏராளமான, தவறான கருத்துக்களையும், பொய்களையும் பரப்பி வருகின்றன. இவற்றை இந்த நூற்றாண்டின் பொய்கள் என்றே அழைக்கலாம். இந்தப் பிரச்சினையை பயன்படுத்தி மேற்கத்திய நாடுகள் சீனாவின் நற்பெயரை கெடுக்கவும் அதன் உள் விவகாரங்களில் தலையிடவும் முயற்சி செய்து வருகின்றன.

முதலாவதாக, சின்சியாங் மாகாணத்தில் நடைபெறக்கூடிய விவகாரங்கள் பயங்கரவாதம். பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்த்து போராடுவதோடு இணைந்த ஒரு நடவடிக்கையாகும். ஆனால் மேற்கத்திய நாடுகள் இந்த பிரச்சனையை மதங்கள், இனக்குழுக்கள் மற்றும் மனித உரிமைகளுடன் இணைத்து பிரச்சனையை திசை திருப்புகிறார்கள். அப்பாவி மக்களை கடும் துயரத்துக்கு உள்ளாக்குகிற செயலில் ஈடுபடுகிறார்கள்.

1990 களில் இருந்து சின்ஜியாங் மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் இருந்தாலும் 2001 செப்டம்பர் 11 இல் அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு தீவிரவாத சக்திகள் சின்ஜியாங் மாகாணத்தில் ஆயிரக்கணக்கான வன்முறை தாக்குதல்களை நடத்தி உள்ளன. இதன் விளைவாக அப்பாவி மக்கள் பெரும் அளவில் உயிரிழந்ததோடு பெரும் சொத்து இழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. இவற்றில் உச்சபட்சமாக நடைபெற்றதுதான் உலகையே உலுக்கிய 2009 ஜூலை 5ஆம் தேதி நடந்த கலவரங்கள் ஆகும். இந்தக் கலவரத்தில் 197பேர்கள் உயிரிழந்தனர் 1700 க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இத்தகைய கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொண்டு சின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்திய அரசாங்கம், சட்டப்படி வன்முறை பயங்கரவாத செயல்களை ஒடுக்கியது. அத்துடன் நிறகவில்லை அவற்றின் மூல காரணங்களை கலைவதற்காக தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக 2017 ஆம் ஆண்டுகள் முதல் ஒரு பயங்கரவாத தாக்குதல் கூட நடைபெறவில்லை. மக்களின் உயிருக்கும், சுகாதார கட்டமைப்பிற்கும் வளர்ச்சிக்கும் உரிமைகளுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது இந்த நடவடிக்கைகளை சின்ஜியாங் கில் உள்ள அனைத்து இனக்குழு மக்களும் ஆதரவளித்தனர்.

 

உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு முக்கிய பங்களிப்பாகவும் இந்த நடவடிக்கைகள் அமைந்தது. இதன் விளைவாக சர்வதேச சமூகத்திடமிருந்து ஒரு நேர்மறையான வரவேற்பு கிடைத்தது. 2018-ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து, ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள், சீனாவில் உள்ள வெளிநாட்டுத் தூதரகப் பிரதிநிதிகள், ஜெனீவாவில் உள்ள ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கான நிரந்தரப் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் மதக் குழுக்களின் பிரதிநிதிகள் உட்பட 70-க்கும் மேற்பட்ட குழுக்களில் 1,000-க்கும் அதிகமானோர் சின்ஜியாங்கிற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் 90-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். சின்ஜியாங்கில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை அவர்கள் பெரிதும் பாராட்டினர். பயங்கரவாதத்தை ஒடுக்குவதிலும் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் கொள்கைகளுக்கும் இந்த நடவடிக்கைகள் இணக்கமாக உள்ளன என்றும், இவை முழுமையாக அங்கீகரிக்கப்பட்டு மற்ற நாடுகளுடன் பகிரப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 37 நாடுகளின் தூதர்கள் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பிரிவின் தலைவருக்கு கூட்டாக ஒரு கடிதத்தை அனுப்பினார்கள். அதில் மனித உரிமைகள் துறையில் சீனாவின் குறிப்பிட்டத்தக்க சாதனைகளை பாராட்டியது மட்டுமல்ல கடந்த மூன்று ஆண்டுகளில் சின்ஜியாங் மாகாணத்தில் ஒரு பயங்கரவாத தாக்குதல் கூட நடைபெறவில்லை என்பதையும் சின்ஜியாங்கிற்க்கு பாதுகாப்பும் நிம்மதியும் திரும்பியுள்ளது என்று பெருமையாக குறிப்பிட்டு இருந்தனர். இந்தக் கூட்டுக்கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் அல்ஜீரியா, கியூபா, எகிப்து, நைஜீரியா, பாகிஸ்தான், கத்தார், ரஷ்யா, சவூதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுடன் ஆப்பிரிக்கா, ஆசியா, மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளை சேர்ந்த நாடுகளும் அடங்கும்.

2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சீனாவின் சின்ஜியாங் மாகாண கொள்கையை ஆதரித்து அறிக்கை வெளியிட்ட நாடுகளின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்தது. இந்த 69 நாடுகளில் 28 நாடுகள் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய நாடுகளாகும். குறிப்பாக 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) உறுப்பினராக இருக்கும் நாடுகளாகும். இந்த அமைப்பின் சார்பில்தான் 2019ல் மார்ச் மாதம் சின்ஜியாங் மாகாணத்திற்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பி அறிக்கையை வெளியிட்டார்கள். அந்த அறிக்கையில் தனது முஸ்லிம் குடிமக்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு அளிப்பதற்காக சீனாவை பாராட்டி இருந்தார்கள். 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சின்ஜியாங்கில் ஏற்பட்டுள்ள மனித உரிமைகள் முன்னேற்றத்தை அங்கீகரிக்கும் வகையில், ஐ.நா பொதுச் சபையின் மூன்றாவது குழுவின் 74வது அமர்வில் 60க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினார்கள்.

இத்தனை நடந்தும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி அப்போதைய அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பியோ சீன அரசாங்கம் ஜின்ஜாங்கில் முஸ்லிம் உய்குர் மக்களையும் பிற இன, மத சிறுபான்மை குழுக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்துள்ளது என்ற பொய்யை மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டே இருந்தார்கள்.

சீன அரசாங்கம் சின்ஜியாங்கின் உய்குர் பிரச்சனைகளை யுத்தம் தொடுப்பதன் மூலமாக தீர்ப்பதற்கு பதிலாக மாற்றுவழியில் தீர்த்ததை கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம். ரஷ்யாவின் செச்சென்யாவில் 1994 முதல் 2009 வரை தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா இரண்டு போர்களில் ஈடுபட்டது போல் சீனா யுத்தத்தில் ஈடுபடவில்லை. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய பயங்கரவாதத்திற்கு எதிரான போர் போன்ற வழிகளிலும் சீனா ஈடுபடவில்லை. இதைவிட அதிகமாக அமெரிக்கா ஈராக்கை கைப்பற்றிய பிறகு அபுகிரைப் (அபுகிரைப் (Abu Ghraib) என்பது ஈராக்கின் பாக்தாத் நகருக்கு மேற்கே அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது முதன்மையாக 2004-ஆம் ஆண்டு ஈராக் போரின் போது அமெரிக்கப் படைகளால் அங்குள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரமான சித்ரவதைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக உலகளவில் அறியப்படுகிறது சிறைச்சாலை (குவாண்டானமோ (Guantanamo) என்பது கியூபாவின் தென்கிழக்கே அமைந்துள்ள அமெரிக்க கடற்படை தளமாகும். இது உலகெங்கிலும் உள்ள பயங்கரவாத சந்தேக நபர்களை எந்தவித விசாரணையும் இன்றி நீண்டகாலம் அடைத்து வைக்கும் சர்ச்சைக்குரிய ‘குவாண்டானமோ விரிகுடா தடுப்பு முகாம்’ மூலம் அறியப்படுகிறது.) முதல் கியூபாவின் அருகில் உள்ள குவாண்டனமோ சிறைச்சாலையில் நடத்திய சித்திரவதை கொலை மற்றும் ரகசிய முகாம்கள் அடிப்படையில் சீனா எந்த ஒரு கொடுமையான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.

 

மேலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 2001 ரெட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா 24 நாடுகள் மீது போர் தொடுத்தது போல் சீனா செய்யவில்லை. 2001 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, யேமன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு நடத்திய போர்களில், வன்முறைகளில் சுமார் 9,40,000 திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 4,32,000 பொதுமக்கள் அடங்குவர். இந்த மோதல்களின் விளைவாக காயம் அடைந்தவர்கள் அல்லது நோய்வாய் பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். அதே போல் போர்களால் சுகாதாரம், பொருளாதாரம் கட்டமைப்புகள், உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை அழிக்கப்பட்டதன் விளைவாக மறைமுகமாக இறந்த மக்களின் எண்ணிக்கையும் மிகஅதிகம். இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிந்தைய போர்நடந்த பகுதிகளில் சுமார் 3.6 முதல் 3.8 வரை அதாவது 36 லட்சம் முதல் 38 லட்சம் வரை மக்கள் மறைமுகமாக இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மொத்த இறப்பின் எண்ணிக்கை குறைந்தது 45 லட்சம் முதல் 47 லட்சம் என்ற அளவில் நடந்துள்ளது. சின்ஜியாங்கில் தீவிரவாதத்தில் ஈடுபடக்கூடிய குழுக்கள் அண்டை நாடுகளில் இருந்ததற்காக அந்த நாடுகள் மீது சீனா யுத்தத்தை தொடுக்கவில்லை.

ஐ.நா. பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் 2004-ல் பிபிசி-யிடம், ஈராக் மீதான அமெரிக்கத் தாக்குதல் சட்டவிரோதமானது என்று கூறினார். ஆனாலும், அமெரிக்க அரசாங்கத்தின் மீதோ அல்லது அதன் போர் திட்டமிடுபவர்கள் மீதோ எந்தவிதமான தடையும் விதிக்கப்படவில்லை, மேலும் இந்தப் போர்களில் எதையும் விவரிக்க ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும், போரில் பொதுமக்கள் இறப்பது என்பது வெறும் “இணை சேதம்” மற்றும் “போரின் விளைவுகள்” மட்டுமே என்றும், அது ஒரு திட்டமிட்ட கொலைச் செயல் அல்ல என்றும் வலியுறுத்தின.

லிபியாவில் இலக்கு வைத்து பொதுமக்களை அழித்தது சம்பந்தமாக நேட்டோ நாடுகளிடம் கேட்கப்பட்ட பொழுது நேட்டோ நாடுகள் சட்டத்தை மீறவில்லை என்றும் எந்த ஒரு அறிக்கையும் நேட்டோ நாடுகள் வேண்டுமென்றே பொதுமக்களை குறி வைக்கவில்லை, லிபியாவில் போர் குற்றங்களை செய்யவில்லை என்று குறிப்பிட வேண்டும் என்று வாதிட்டார்கள். இத்தனை நடந்து பிறகும் 10 லட்சம் மக்கள் இறந்தது ஈராக்கில் அல்ல மாறாக சீனாவில் சின்ஜியாங் மாகாணத்தில் கொல்லப்பட்டதாக ஆவணப் படங்களை போலியாக தயாரித்து வெளியிட்டார்கள். ஆனால் இவை அனைத்தும் இன்று பொய் என்று நிரூபணம் ஆகி வருகின்றது.

இரண்டாவதாக சிங்கில் உள்ள தொழிற்கல்வி மற்றும் பயிற்சி மையங்களை பற்றி அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். இவையெல்லாம சித்திரவதை முகாம்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். உண்மை என்னவென்றால் இவை தீவிரவாத கருத்துக்களை தடுப்பது, தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான பயனுள்ள நேர்மறையான அணுகுமுறையாகும். தீவிரவாதத்திற்கான மூல காரணங்களை களைவதற்கும், வன்முறை தீவிரவாத சிந்தனைகள் உருவாவதை தடுப்பதற்கு இந்த மையங்கள் நிறுவப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணங்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டது.

இந்த தொழிற்கல்வி பயிற்சி முகாம் பற்றி இதற்கு முந்தைய 76 வது அத்தியாயத்தில் விரிவாக விளக்கப்பட்டு இருந்தாலும், அதனுடைய நோக்கம் முழுமையாக அதில் எடுத்துரைக்கப்படவில்லை. தேவை கருதி இங்கே தொழிற்பயிற்சி முகாம்களின் நோக்கங்கள் முன்வைக்கப்படுகிறது.

தொழிற்கல்வி மற்றும் பயிற்சி மையங்களில், தீவிரவாதக் கருத்துக்களால் வழிதவறியவர்கள் அல்லது சிறு குற்றங்களைச் செய்தவர்கள், பொது மொழி, சட்ட அறிவு மற்றும் தொழில் திறன்களைக் கற்றுக்கொள்ளலாம். இத்தகைய கல்வியும் பயிற்சியும், தீவிரவாதக் கருத்துக்களிலிருந்து விடுபட்டு விலகி இருப்பதற்கும், தொழில் திறன்களில் தேர்ச்சி பெறுவதற்கும், அவர்களின் திறனை வலுப்படுத்தும். மேலும், இந்த முயற்சிகள் அவர்களைச் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக ஆக்குவதோடு மட்டுமல்லாமல், நிலையான வேலைகளைக் கண்டறியவும், சுயமாகப் பிழைப்பு நடத்தவும், ஒரு சிறந்த வாழ்க்கையை வாழவும் உதவும்.

தொழிற்கல்வி பயிற்சி மையங்களில்,

மனித உரிமைகளை மதிப்பது மற்றும் பாதுகாப்பது தொடர்பான அரசியலமைப்பு மற்றும் சட்டக் கோட்பாடுகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. பயிற்சி பெறுபவர்களின் கண்ணியம் முழுமையாக மதிக்கப்படுகிறது. மேலும் அனைத்து விதமான அவமதிப்புகளும் நிந்தனைகளும் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

பயிற்சி பெறுபவர்களின் சுதந்திரம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த மையங்கள் உறைவிடப் பள்ளிகளாக நிர்வகிக்கப்படுகின்றன. பயிற்சி பெறுபவர்கள் வீட்டிற்கு வருகை தரலாம் அல்லது தனிப்பட்ட காரியங்களைக் கவனிப்பதற்காக விடுப்பு கோரலாம்.

அதே சமயம், பயிற்சி பெறுபவர்கள் இனக்குழுக்களின் மொழிகளைப் பயன்படுத்துவதற்கான உரிமையும் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து விதிகளும் ஒழுங்குமுறைகளும், பள்ளி நேர அட்டவணைகள் மற்றும் உணவுப் பட்டியல்கள் ஆகியவை பொது மொழியிலும் இனக்குழுக்களின் மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளன.

பல்வேறு இனக்குழுக்களின் பழக்கவழக்கங்கள் முழுமையாக மதிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. பலவகையான ஹலால் உணவுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

மத நம்பிக்கையின் சுதந்திரமும் முழுமையாக மதிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. மத நம்பிக்கையாளர்கள் விடுப்பில் சென்றாலும், சட்டப்பூர்வமான மத நடவடிக்கைகளில் கலந்துகொள்ள சுதந்திரம் பெற்றுள்ளனர்.

மூன்றாவதாக சீனாவின் உய்குர் முஸ்லிம்களுக்காக அமெரிக்கா கண்ணீர் வடிப்பது, மனித உரிமை பற்றி பேசுவது போலித்தனம் என்பதை அதனுடைய பாலஸ்தீனக் கொள்கை அம்பலப்படுத்தி வருகிறது. மிகக் கொடூரமான முறையில் இஸ்ரேலை வைத்து பாலஸ்தீனத்தினுடைய குழந்தைகளையும், பெண்களையும், பொது மக்களையும் ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து வருகிறது. அது மட்டுமல்ல மத்திய கிழக்கில் தனது கட்டுப்பாட்டுக்கு வராத அனைத்தும் முஸ்லிம் நாடுகளையும் தாக்குதல் நடத்தி, மக்களையும், அதன் கலாச்சாரத்தையும், வரலாற்றுச் சின்னங்களையும் அழித்து வருகின்றது.

இதற்கு மாறாக, சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து பாலஸ்தீன பிரச்சனையை ஐரோப்பிய-அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் ஜியோனிசத்தின் தாக்குதல்களால் நடைபெற்று வருகிறது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 1955-ஆம் ஆண்டு பாண்டுங் மாநாட்டின் போது, ​​சீன மக்கள் குடியரசின் தூதுக்குழுவின் தலைவரான பிரதமர் சூ என்லாய், பாலஸ்தீன அகதிகள் பிரச்சினைக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளித்து, இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனப் பிரச்சினையை மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்க முன்மொழிந்தார்.

அன்று முதல், சீனாவின் மத்திய கிழக்குக் கொள்கை தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டு வந்தாலும், பாலஸ்தீனப் பிரச்சினை குறித்த அதன் அடிப்படை நிலைப்பாடு மாறாமல் உள்ளது. அமெரிக்க செனட் வெளியுறவுக் குழு, அமெரிக்க-இஸ்ரேல் பாதுகாப்பு உதவி அங்கீகாரச் சட்டத்தை நிறைவேற்றியபோது, ​​சீனா உடனடியாகவே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில், பாலஸ்தீனப் பிரச்சினை தொடர்பான ‘அமைதிக்கு நிலம்’ என்ற கொள்கையையும் பிற அடிப்படை நிலைப்பாடுகளையும் மீண்டும் வலியுறுத்தியது.

பாலஸ்தீனப் பிரச்சினை குறித்த சீனாவின் நிலைப்பாடு முஸ்லிம் உலகத்தின் பாராட்டைப் பெற்றது. அதன் விளைவாக 1950கள் மற்றும் 1960களில் பல்வேறு முஸ்லிம் நாடுகளுடன் தூதரக உறவுகள் நிறுவப்பட்டன. 1970களில் ஐ.நா. சபையில் சீனாவின் ஒரே சட்டப்பூர்வமான பிரதிநிதிகளாக சீன மக்கள் குடியரசின் அரசாங்கப் பிரதிநிதிகள் இருப்பதற்கு முஸ்லிம் நாடுகள் ஆதரவளித்தன; மேலும், அதன் தற்போதைய பட்டுப்பாதை முன்னெடுப்பிற்கு (BRI) முஸ்லிம் நாடுகள் பரவலான ஆதரவையும் பங்களிப்பையும் வழங்குகின்றன.

மறுபுறம், அமெரிக்காவின் பாலஸ்தீனக் கொள்கைகள், அமெரிக்காவிற்கும் முஸ்லிம் உலகிற்கும் இடையிலான உறவைச் சேதப்படுத்தியதோடு, அமெரிக்காவின் உலகளாவிய மூலோபாய நிலைநிறுத்தத்திற்கும் ஆபத்தை விளைவித்துள்ளன. 2008-ல் மேரிலாந்து பல்கலைக்கழகம் நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள 80% முதல் 90% வரையிலான மக்கள், அமெரிக்காவையும் இஸ்ரேலையும் முதன்மையான அச்சுறுத்தல்களாகக் கருதுகின்றனர். அதே நேரத்தில், வெறும் 5% பேர் மட்டுமே சீனாவை ஒரு அச்சுறுத்தலாகக் கருதினர். மேலும், அமெரிக்காவை ஆதரித்தவர்களைக் காட்டிலும், சீனா ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்கும் என்று நம்பியவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இருமடங்காக இருந்தது. தோஹாவின் அரபு ஆராய்ச்சி மற்றும் கொள்கை ஆய்வு மையம் 2017-2018-ல் நடத்திய அரபு கருத்துச் சுட்டெண் (Arab Opinion Index) கணக்கெடுப்பில், 11 அரபு நாடுகளில் உள்ள பதிலளித்தவர்களில் 84% பேர், பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அமெரிக்கா ஓர் அச்சுறுத்தலாக இருப்பதாக உணர்ந்தனர். சீனாவைப் பொறுத்தவரை இந்த

 எண்ணிக்கை 28% ஆக இருந்தது. சீனாவின் உய்குர் கொள்கைகளுக்கு மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள் அளிக்கும் ஆதரவானது, அடிப்படையில் சீனாவுக்கு அவை காட்டும் விசுவாசத்தின் வெளிப்பாடாகும்.

அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கால் பந்தாட்டம்: சீனா ஏன் மைதானத்திற்குள் இல்லை?

  அ.பாக்கியம் இப்படி ஒரு கேள்வியை எழுப்புகிற பொழுதே சீனா கால்பந்து போட்டியின் மைதானத்திற்கு வெளியே அனைத்து மாக இருந்தது என்பது ம் அடங்...