அ.பாக்கியம்
சீன மக்கள் குடியரசின் ஆரம்ப
கட்டம் என்பது 1949 நிறுவப்பட்டதிலிருந்து 1958 வரையாகும்.
இக்காலங்களில் இன சிறுபான்மையினர் தொடர்பாக எடுக்கப்பட்ட கொள்கைகளும், இன வர்த்தகம் தொடர்பாக அமலாக்கப்பட்ட நடைமுறைகளும் சீனாவில் இன
சிறுபான்மையினரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. துவக்க காலத்திலேயே
போடப்பட்ட இந்த அடித்தளம் சீனாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியது.
துவக்க
காலத்தில் சிறுபான்மையினர் வாழ்ந்த எல்லைப்புற இனப் பகுதிகளில் ஒப்பீட்டு அளவில்
மெதுவான பொருளாதார வளர்ச்சி தான் இருந்தது. வரலாற்று நிலமைகள் காரணமாக மிகவும்
சிக்கலான சமூக சூழ்நிலைகளைக் கொண்டிருந்தன. இனக் குழுக்களுக்கு இடையிலான உறவுகளை
ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறவில்லை. இக்காலத்தில் இனச் சிறுபான்மையினர்
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளையும்,
சீன மக்கள் குடியரசின் கொள்கைகளையும் முழுமையாக புரிந்து
கொள்ளவில்லை.
இத்தகைய
கஷ்டங்களும் ஆபத்துகளும் நிறைந்த சூழலில்தான், இன வர்த்தகத்தின் முன்னோடிகளும் மக்கள்
விடுதலை ராணுவமும் இப்பகுதிகளுக்கு ஆழமாக ஊடுருவிச் சென்றனர். இப்பகுதியில் சீன
கம்யூனிஸ்ட் கட்சியின் இனக் கொள்கைகளை பிரச்சாரம் செய்தது மட்டுமல்ல, அம்மக்களின் கஷ்டங்களை தீர்ப்பதற்காக பல்வேறு உதவிகளை செய்தார்கள்.
இப்பகுதிகளில் பல்வேறு சாதகமான நிலைமைகளை உருவாக்கினார்கள். இந்த நடவடிக்கை இன
ஒற்றுமையை மேம்படுத்துவதிலும் சமூக ஒழுங்கை நிலை நிறுத்துவதிலும் தேசிய
கட்டுமானத்தை ஆதரிப்பதிலும் மிக முக்கிய பங்கு வகித்தது என்பதை குறிப்பிட்டுச்
சொல்ல வேண்டும்.
வளர்ந்த வணிக நிறுவனங்கள்
இன
வர்த்தகத்திற்காக எடுத்த முயற்சிகளின் விளைவாக இனச் சிறுபான்மை பகுதிகளில் அரசு
நடத்தும் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கையானது 1951 ஆம் ஆண்டு 841-ல்
இருந்து 1955-ல் 3609 என உயர்ந்தது.
அதாவது நான்கு ஆண்டுகளில் 3.3 மடங்கு அதிகரித்தது.
வாய்ப்புள்ள இடங்களில் விநியோகத்திற்காகவும், சந்தை
நடவடிக்கைகளுக்காகவும் கூட்டுறவு அமைப்புகள் நிறுவப்பட்டன. 1953 ஆம் ஆண்டு 43 மாவட்டங்களில் இன வர்த்தக பகுதிகளை
அடையாளம் கண்டு கூட்டுறவு அமைப்புகள் உருவாக்ககினார்கள். குவாங்சி ஜுவாங்
தன்னாட்சிப் பகுதியில் வர்த்தக நிறுவன அமைப்பு உருவாக்கப்பட்டது மட்டுமல்ல அதன்
கீழ் மாவட்ட, வட்டார அளவிலான வர்த்தக இனக்குழு அலுவலகங்கள்
அமைக்கப்பட்டது. இனப் பகுதிகளில் வணிக நிறுவனங்களும், வணிக
நடவடிக்கைகளும் கணிசமான அளவிற்கு முற்போக்கான முறையில் உருவாக்கப்பட்டு
செயல்படுத்தப்பட்டது.
1956ஆம் ஆண்டில் இப்பகுதியில் 2,800க்கும் மேற்பட்ட இன
வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டன. இன சிறுபான்மை பகுதிகளில் படிப்படியாக பொருளாதார
மையங்கள் வடிவம் பெற்று வளர்ந்தது. அரசு நடத்தும் வர்த்தக நிறுவனங்கள் ஏராளமான
நடமாடும் வர்த்தக குழுக்களை உருவாக்கினார்கள். கிராமங்களுக்கு பயணித்து விற்பனை
செய்யக் கூடியவர்களையும் அதிகமாக்கினார்கள். இந்தப் பயண விற்பனையாளர்களும்
நடமாடும் வர்த்தக குழுக்களும் பறந்த மேய்ச்சல் நிலங்களுக்கும், உயரமான மலைப்பகுதிகளுக்கும் சென்று விற்பனை செய்தார்கள், அது மட்டுமல்ல அந்தந்த பகுதிகளில் ஒரு பொருளாதார மையங்களை
உருவாக்கினார்கள். இதன் மூலம் இன சிறுபான்மை மக்களின் பொருட்களை கொள்முதல்
செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் எளிமையான நிலைமைகள்
உருவானது.
எடுத்துக்காட்டாக
ஜின் ஜியாங் மாகாணத்தில் குறிப்பாக மேய்ச்சல் நிலப்பகுதியில் அரசு நடத்தி வந்த
வர்த்தகத்தின் மூலமாகவும் கூட்டுறவு அமைப்புகள் மூலமாகவும் ஆறு ஆண்டுகளில் 1300க்கும் மேற்பட்ட
நடமாடும் வர்த்தக குழுக்களை உருவாக்கி அப்பகுதியில் பொருளாதார நடவடிக்கைகளை
அதிகப்படுத்தினார்கள். சியான்சி மியாவா என்ற தொலைவில் இருக்கக்கூடிய மாவட்டத்தில் 1955 ஆம் ஆண்டு கடைசி மூன்று மாதங்களில் மட்டும் 840 பயண
விற்பனையாளர்களை உருவாக்கி உட்பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு பொருட்களை
கொண்டு சேர்த்தார்கள். உள் மங்கோலியாவின் ஜீலின் கோல் லீக் என்ற பகுதி சுமார் 7000 மக்கள் தொகை கொண்டது. இது ஒரு புல் வெளிப்பிரதேசம். இந்தப்பகுதியை
பொருளாதார மையங்களாக மாற்றினார்கள். மேலும் புதிதாக கட்டப்பட்ட சாலைகள் மூலமாக
புதிய நகரங்களும், அதன் மூலமாக சந்தைகளும் தொடர்ந்து
உருவாகிக் கொண்டே இருந்தன. இந்த மாற்றம் இன சிறுபான்மை பகுதிகளில் பொருளாதாரக்
கண்ணோட்டத்தை பெரும் மாற்றத்திற்கு உள்ளாக்கியது.
அரசு வர்த்தகத்தை வளர்த்து
வந்த அதே வேளையில் தனியார் வர்த்தக நிறுவனங்கள் செயல்படுவதற்கான முழுமையான
வாய்ப்புகளும் வழங்கப்பட்டது. சீனா கம்யூனிஸ்ட் கட்சி கூட்டுறவு கொள்கைகளை
பின்பற்றுவதை தொடர்ந்து படிப்படியாக சோசலிச மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டிய
பணிகளையும் துவக்கி வைத்தது. இன சிறுபான்மை பகுதியில் தனியார் வணிகங்களின் சோசலிச
மாற்றம் 1956 ஆம் ஆண்டு தொடங்கி 1958 ல் நிறைவடைந்தது.
திபெத்தில் மட்டும் இது 1962 வரை நீடித்தது.
உதாரணமாக
குவாங்சி மாகாணத்தில் உள்ள 44 இன மாவட்டங்களில் 12,006 தனியார் வணிக நிறுவனங்கள்
செயல்பட்டன. இவற்றில் 16,704 ஊழியர்கள் பணிபுரிந்தனர். 1956ஆம் ஆண்டு இறுதியில் 9,882 தனியார் நிறுவனங்கள்
சோசலிச மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டன. இது மொத்தத்தில் 82
சதவீதம் ஆகும். இவை அனைத்தையும் அரசு பொதுத்துறை மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள்
மூலமாக நேரடியாக வர்த்தகத்தை நடத்துவது என்ற முறையில் அமலாக்கப்பட்டது. மீதமுள்ள 2124 தனியார் வணிக நிறுவனங்களும் அவற்றில் பணிபுரிந்த 20,084 ஊழியர்களையும் தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் நடத்துவதற்கு அனுமதித்தனர்.
ஊழியர்கள் அதிகாரிகளின்
எண்ணிக்கை அதிகரிப்பு
இன
வர்த்தகத்தின் வளர்ச்சியின் காரணமாக ஊழியர்களின் எண்ணிக்கையையும், அதிகாரிகளின்
எண்ணிக்கையையும் அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக இன சிறுபான்மை மக்கள்
மத்தியிலிருந்து இன வணிகத்திலும், ஒட்டுமொத்த பொருளாதார
மேம்பாடுகளுக்குமான ஊழியர்கள் உருவானார்கள். இதன் மூலம் தனித்திருந்த இனச்
சிறுபான்மை குழுக்கள் ஒட்டுமொத்த சீன பொருளாதார அரசியல் வளர்ச்சியுடன் இணைந்தனர். 1951 ஆம் ஆண்டு 10,000 ஆக இருந்த அதிகாரிகள் எண்ணிக்கை 1955 ஆம் ஆண்டு 60,563 என்ற அளவுக்கு அதிகரித்தது.
இவர்களில்
இன சிறுபான்மைக் குழுக்களைச் சேர்ந்த அதிகாரிகளின் எண்ணிக்யை மட்டுமே சுமார் 1700 லிருந்து 12,098 ஆக உயர்ந்தது. இது ஒட்டுமொத்த வர்த்தக அதிகாரிகளில் 20% ஆகும். குவாங்சி மாகாணத்தின் மேற்கு பகுதியில் உள்ள 31 இன மாவட்டங்களிலும், நகரங்களிலும் 8500 க்கு மேற்பட்ட இன வர்த்தக அதிகாரிகள் இருந்தனர். இது மொத்த அதிகாரிகளில்
சுமார் 50.5% ஆகும்.
தலைமை பொறுப்பில்
இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியது. இனச் சிறுபான்மை அதிகாரிகளின் அரசியல், தொழில் முறைகள்
கலாச்சார நிலைகள் ஆகிய அனைத்தும் மேம்படுத்தப்பட்டது. பல இனச் சிறுபான்மை
அதிகாரிகள் மேலாளர்களாக, முக்கிய பிரிவின் தலைவர்களாக,
பல்வேறு துணை நிறுவனங்களின் தலைவர்களாக பயிற்சிகளை பெற்று
பொறுப்புக்களுக்கு வந்தனர். இதன் தொடர்ச்சியாக பலரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியிலும்
அதன் இளைஞர் அமைப்புகளிலும் இணைந்தனர். இவ்வாறு சிறுபான்மை இன அதிகாரிகள்
ஊழியர்கள் இனப் பகுதிகளில் வணிகப் பணிகளை மேற்கொள்வதற்கும் அனைத்து இனக்குழு
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகித்ததுடன் இனக்குழு
மக்களிடையேயான உறவுகளையும் ஒற்றுமைகளையும் பலப்படுத்தினார்கள் அது மட்டுமல்ல சீன
கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை அந்த மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பெரும்
பங்காற்றினார்கள்.
சீன
கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்த இதர ஹான் இன அதிகாரிகளும் சில
கம்யூனிஸ்ட் கட்சியை சிறுபான்மை மக்களிடம் எடுத்துச் செல்வதில்
பெரும்பங்காற்றினார்கள். உள்ளூர் இன குழுக்களுடன் நட்புறவை ஏற்படுத்துவதற்கும்
இனக்குழுக்கள் இடையே ஒற்றுமையை உருவாக்குவதற்கும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்
தலைவர்கள் என்ற முறையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களும் பெரும்
பங்காற்றினார்கள். இவை அனைத்தும் சேர்ந்து இனச் சிறுபான்மை மக்கள் மத்தியில்
கம்யூனிஸ்ட் கட்சி பலமடைவதற்கான அடித்தளத்தில் உருவாக்கியது.
பூர்வீக பொருட்களும் புதிய
பொருட்களும்
இனச்
சிறுபான்மை மக்கள் வாழும் பகுதியில் அவர்கள் உற்பத்தி செய்யக்கூடிய பாரம்பரியமான
பொருட்களையும் விவசாய பொருட்களையும் அரசு இன வணிக குழு மூலமாக கொள்முதல் செய்து
வந்தது. அதே நேரத்தில் அவர்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு குறைந்த விலையில்
பொருட்களை விற்பனை செய்து வந்தார்கள். இன சிறுபான்மையினரின் உற்பத்தி பொருட்களின்
வகைகள் ஒரு சில மட்டுமே இருந்ததால் போதுமான அளவு அவர்களின் வர்த்தகம் மேம்பட
வில்லை. எனவே அவர்களின் உற்பத்திப் பொருட்களின் வகைகளை அதிகப்படுத்திட விநியோகம், ஏற்றுமதிகளை உறுதி
செய்வது, தொழில்துறை கட்டுமானத்தை அந்த பகுதியில் அமைப்பது,
ஆகியவற்றின் மூலம் புதிய பொருட்களின் உற்பத்திக்கு வழி
வகுத்தார்கள். 1955 ஆம் ஆண்டு இனச் சிறுபான்மையினர்
பகுதிகளில் உற்பத்தியான பொருட்களை கொள்முதல் செய்த பொழுது 1130.70 மில்லியன் யுவான்கள் மதிப்புள்ள பொருட்களை கொள்முதல் செய்தார்கள்.
அதேபோன்று
1704.39
மில்லியன் யுவான்கள் மதிப்புள்ள பொருட்களை அப்பகுதி மக்களுக்கு விநியோகம்
செய்தார்கள். இந்த இரண்டையும் 1951 ஆம் ஆண்டு கொள்முதல்
மற்றும் விநியோகத்துடன் மதிப்பிட்டால் ஏழு மடங்கு அதிகமாகும் என்பதை அறிய
முடியும். இந்த நடவடிக்கை இன சிறுபான்மையினரின் வாழ்க்கையில் மேம்பாடு அடைந்ததை
வெளிக்காட்டுகிறது. மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றம் என்பது உற்பத்தி செய்யும்
பொருட்களின் வகைகளை அதிகப்படுத்த எடுத்த முயற்சியாகும். குய்சோ மாகாணத்தில் 1951 ஆம் ஆண்டு மூன்று வகையான பாரம்பரிய பொருட்களையே உற்பத்தி செய்தார்கள்.
ஆனால் 1955ஆம் ஆண்டு 115 வகையான
பாரம்பரியமான பொருட்களை உற்பத்தி செய்து வணிகத்தை பல மடங்கு அதிகப்படுத்
தினார்கள்.
சீன
மக்கள் குடியரசு இனச் சிறுபான்மை மக்கள் உற்பத்தி செய்கின்ற பாரம்பரிய பொருட்களை
வாங்குவதற்காக கூடுதல் முதலீடுகளை செய்தது. 1952 மற்றும் 1954 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில்
3.1 பில்லியன் யுவான்களுக்கு மேல் முதலீடு செய்தனர். இந்த
முதலீட்டின் மூலமாக அதிகமான பொருட்களை வாங்கியதால் இனச் சிறுபான்மை மக்களின்
குடும்ப வருமானம் ஏற்கனவே இருந்ததைவிட பல மடங்கு உயர்ந்தது. மற்றொரு உதாரணம்,
யுன்னான் மாகாணத்தில் 1953 ஆம் ஆண்டு
சிறுபான்மை மக்கள் உற்பத்தி செய்த பொருட்களின் வகைகள் 1000
என்ற அளவில் இருந்தது. இதுவே 1955 ஆம் ஆண்டு 5000 வகையான பொருட்களை உற்பத்தி செய்யக் கூடியதாக மாறியது.
இன
சிறுபான்மையினர் வாழக்கூடிய பகுதிகளில் அவர்களின் வாழ்க்கை தேவைகளுக்கு
பற்றாக்குறையாக உள்ள பொருட்களை விற்பனை செய்வதற்கு சிறப்பு விற்பனை பிரிவுகள்
துவக்கப்பட்டன. தேயிலை,
பட்டு போன்ற பொருட்களை அதிகமாக இப்பகுதிகளுக்கு வழங்கினார்கள்.
பருத்தித் துணி இன சிறுபான்மை மக்களுக்கு அதிகமாக தேவைப்பட்டது. கணிசமான அளவிற்கு
துணிகளை வழங்கியது மட்டுமல்ல அவர்கள் சுயமாக துணிகளை நெய்து கொள்வதற்கான
நூல்களையும் வழங்கினார்கள். இது அவர்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் துணிகளை
தயாரித்துக் கொள்ள பயன்பட்டது. உப்பு, சர்க்கரை, புகையிலை, கருவாடு, ஆல்கஹால்
போன்ற பொருட்களுக்கு சிறுபான்மையர் பகுதியினருக்கு முன்னுரிமை கொடுத்து அதிகமாக
ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இவைகளில்
ஜரிகைகள், பட்டு நூல்கள், வெள்ளி நகைகள், இசைக்கருவிகள், துப்பாக்கி பொடி, வேட்டை உபகரணங்கள் போன்ற பொருட்களின் மதிப்பு அதிகமாக இருந்தாலும்,
இனச் சிறுபான்மையர் வாழக்கூடிய பகுதிகளில் இருந்து வெகு தொலைவில்
உற்பத்தி செய்யப்பட்டாலும் அவற்றை அரசின் உதவியோடு இன வணிக குழு கொள்முதல் செய்து
இனச் சிறுபான்மையின் பகுதியில் விநியோகம் செய்தார்கள். விநியோகத்தை
ஒழுங்கமைப்பதற்காக மக்கள் கமிட்டிகள் அமைக்கப்பட்டது. இது போன்ற முயற்சிகள்
எல்லைப்புற மாகாணத்தில் இருந்த இனச் சிறுபான்மையினரின் பொருளாதார வளர்ச்சியை
அதிகப்படுத்தியது மட்டுமல்ல அவர்களின் பொருளாதார நடவடிக்கைகளையும்
அதிகப்படுத்தியது. இக்காலத்தில் 1956 ஆம் ஆண்டில் இறுதியில்
குவாங்சி மாகாணத்தில் இனக்குழுக்கள் வசிக்கும் 31
மாவட்டங்கள் மற்றும் நகரங்களின் கொள்முதல் விநியோகத்தின் மதிப்பு 1952 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது 5.5 மடங்கு
கொள்முதலும் 3.2 மடங்கு விநியோகமும் அதிகரித்தது. மேலும்
குறிப்பிடத்தக்க அம்சம் இந்தப் பகுதிகளில் உற்பத்திகள் அதிகமானதால் வெளிநாட்டுப்
பொருட்களின் ஆதிக்கம் குறைந்துவிட்டது. தொடர்ச்சியான முயற்சிகள் தொழில் துறை
மற்றும் விவசாய பொருட்கள விலை விகிதத்தை குறைத்தது.
75 கிலோமீட்டர் மலை உயரத்தில், கிபைனோங், சன்யியாங் மற்றும் பான்ஷெங் ஆகிய நகரங்களில் வாழ்ந்த இனச்
சிறுபான்மையினருக்கு சந்தை கிடையாது. பல நாட்கள் பயணத்தில் சந்தையை அடைய வேண்டும்.
இவர்களிடம் பெரும்பான்மையாக இருந்த ஹான் இன வணிகர்கள் கடுமையாக சுரண்டினார்கள்.
அரைகிலோ மரக் காளான்களை கொடுத்து அரை கிலோ உப்பு வாங்கினார்கள். ஒரு முட்டையை
கொடுத்து ஒரு தையல் ஊசியை வாங்கினார்கள். ஒரு கொளுத்த பன்றியை கொடுத்து பழைய
போர்வையை வாங்க முடிந்தது. இவையே 1946 ஆம் ஆண்டு நடந்தது. 1952 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நகரங்களில் விற்பனை குழுக்கள்
அடுத்தடுத்து அமைக்கப்பட்டன. இதனால் இம்மக்கள் அரை கிலோ மரக்காளான்களை கொடுத்து
ஹான் இன வணிகர்களிடமிருந்து 15 கிலோ உப்பு பெற முடிந்தது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி இனச் சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு விதமான திட்டங்களை
அமல்படுத்தி வந்தாலும் பொருளாதாரத் துறையில் இன வணிகம் என்ற ஒரு சிறப்பு திட்டத்தை
சக்தியான முறையில் அமுலாக்கி வெற்றி கண்டது.
சீன
மக்கள் குடியரசின் ஆரம்ப நாட்களில் இனச் சிறுபான்மை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட
பணிகளில் மிக முக்கியமானதாக இன வர்த்தகம் இருந்தது. அவற்றுடன் இணைந்து
மருத்துவத்தையும் சுகாதார பராமரிப்பையும் மேற்கொண்டார்கள் . இன வர்த்தகப் பணி
மூலமாக இன சிறுபான்மை மக்கள் மத்தியில் இதர பணிகளை செய்வதற்கு எளிதான சூழ்நிலைகளை
உருவாக்கியது. மேலும் இன சிறுபான்மையினரிடையே சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்
அரசாங்கத்தின் அங்கீகாரத்தை ஊக்குவிப்பதிலும், மத்திய அரசுக்கும் இன சிறுபான்மைப்
பகுதிகளுக்கும் இடையே நெருக்கமான உறவுகளை வளர்ப்பதிலும், இன
ஒற்றுமையை பலப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்தது. உண்மையான வேலைகளில் சில
குறைபாடுகள் இருந்தபோதிலும், சீன மக்கள் குடியரசின் ஆரம்ப
நாட்களில் இன வர்த்தகப் பணியின் செயல்திறன் மற்றும் முக்கியத்துவம் சந்தேகத்திற்கு
அப்பாற்பட்டது.
சீன
மக்கள் குடியரசின் ஆரம்ப நாட்களில் இன வர்த்தகப் பணியின் நடைமுறை, சீனக் கம்யூனிஸ்ட்
கட்சியின் இன சமத்துவம் மற்றும் இன ஒற்றுமை பற்றிய கருத்துக்களை உள்ளடக்கியதோடு
மட்டுமல்லாமல், நவீன ஒருங்கிணைந்த பல இன சமுகத்தை
கட்டியெழுப்புவதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசாங்கத்தின் மகத்தான
முயற்சிகளையும் நிரூபிக்கிறது.
இன
வர்த்தகப் பணியின் தாக்கம் இன சிறுபான்மை பகுதிகளின் வளர்ச்சியை ஏற்படுத்தியதுடன்
நாட்டின் நவீன மயமாக்களுக்கு அவை துணை புரிந்தன இவை இரண்டுக்கும் இடையிலான
இயங்கியல் உறவை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். சீன தேசத்தின் பன்மைத்துவ
இனங்களின் ஒற்றுமை, மக்களை மையமாகக் கொண்ட ஆட்சி தத்துவம், சீன
கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன மக்கள் குடியரசு ஆகியவற்றின் வளர்ச்சி தத்துவம்,
வாழ்வாதாரம் சார்ந்த வளர்ச்சி தத்துவம் ஆகிய மூன்று அம்சங்களை இந்த
இன வர்த்தகப் பணிகளில் செலுத்திய கவனங்களின் மூலம் புரிந்து கொள்ள முடியும் இந்த மூன்றும்
பிரிக்க முடியாத உறவுகள் என்பதின் புற நிலை எதார்த்தம் என சீன கம்யூனிஸ்ட் கட்சி
வரையறுத்தது.
சுருக்கமாகச் சொன்னால்
சீனாவின் மக்கள் குடியரசு நிறுவப்பட்ட காலத்திலிருந்து 1958 ஆம் ஆண்டு வரை
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இனக் கொள்கைகளை உருவாக்குவதிலும் அவற்றை
அமல்படுத்துவதிலும் அனைத்து இனக்குழுக்களிடையே பரிமாற்றங்களை எளிதாக்குவதிலும் இன
வர்த்தகத்தை பிற இன பணிகளுடன் இணைத்து வெற்றிகரமான முறையில் அமலாக்கியது.
அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக