Pages

வியாழன், ஜனவரி 29, 2026

57 சீனாவின் வறுமை ஒழிப்பு உலகிற்கு வழங்கிய ஞானம்

 

-


அ.பாக்கியம்

 

2021 ஆம் ஆண்டு, சீனா வறுமைக்கு எதிரான போராட்டத்தில் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளது என்று சீன ஜனாதிபதி அறிவித்தார். வறுமைக்கு எதிரான பணிகளில் ஈடுபட்ட அனைவருக்குமான பாராட்டு நிகழ்ச்சியில் கீழ்கண்டவாறு தெரிவித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா நெருங்கி வரும் இந்த முக்கியமான ஆண்டில் முழு கட்சி மற்றும் முழு தேசத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் சீனா வறுமைக்கு எதிரான போராட்டத்தில் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளது. தற்போதைய காலத்தில் வறுமை கோட்டிற்கு கீழே இருந்த 832 மாவட்டங்களுக்கு உட்பட்டு 1,28,000 கிராமங்களில் இருந்த 98.99 மில்லியன் மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். இனச் சிறுபான்மை தன்னாட்சி பிராந்திய வறுமை ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்பட்டுள்ளது. முழுமையான வறுமையை ஒழிக்கும் கடினமான பணி முடிக்கப்பட்டுள்ளது. இது மற்றொரு அற்புதமான சாதனையை குறிக்கிறது”( ஜி ஷின் பிங் 2021)

அறிவியல் பூர்வமான திட்டமிடலாலும், அர்ப்பணிப்பு மிக்க உழைப்பாலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன அரசாங்கமும் மக்களை மையப்படுத்திய வளர்ச்சி தத்துவத்தின் அடிப்படைகளை ஏற்றுக் கொண்டு இருந்ததால் இவற்றை சாதிக்க முடிந்தது. சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிச பயணத்தில் இந்த சாதனை குறிப்பிடத்தக்க அளவிற்கு பங்கு வைக்கின்றது.

சீனாவின் வறுமை குறைப்புக்கான நடவடிக்கைகள் உலகம் முழுவதும் வறுமை குறைப்பதற்கான மிகச் சிறந்த முன்னுதாரணத்தை வழங்கி உள்ளது. வறுமைக்கு எதிரான தனது வெற்றியின் மூலம் உலகிற்கான சிறந்த ஞானத்தையும் தீர்வையும் முன் வைத்துள்ளார்கள். இவற்றில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது தொலைதூரத்தில் உள்ள எளிதில் அணுகமுடியாத பிரதேசங்களில் வாழ்ந்த மக்களிடம் வறுமையை ஒழித்தது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனையாகும்.

அறிவியல் பூர்வமான திட்டமிடல் 

சீன நாடு முழுவதும் வறுமையை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து திட்டமிடப்பட்டது. வறுமை கோட்டிற்கு கீழே வாழக்கூடியவர்கள் யார் என்பதற்கான அளவுகோலை தீர்மானிப்பதில் அறிவியல் பூர்வ நடவடிக்கை மேற்கொண்டார்கள். இதற்கான வருமான வரம்பை உயர்த்தி கொண்டே வருவதன் மூலம் வறுமை கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி அவர்களை அடுத்தடுத்த வசதிகளை நோக்கி நகர்த்திச் சென்றார்கள். இனச் சிறுபான்மையுருக்கான தனியான திட்டங்களும் நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டது. பொருளாதாரம் வளர்ச்சியின் ஏற்ற இறக்கம் மீண்டும் வறுமைக்கோட்டில் தள்ளி விடாமல் இருப்பதற்கான திட்டமிடலும் இதற்குள் கொண்டு வந்தார்கள். இதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை நிறுவனங்களை உருவாக்கினார்கள். இவ்வாறு ஒவ்வொன்றும் துல்லியமாக நுண்ணோக்க அடிப்படையில் அவ்வப்போது ஆய்வுகள் செய்து முடிவுகள் மாற்றப்பட்டு மேற்கொள்ளப்பட்டது.

1984 ஆம் ஆண்டு வறுமை கோட்டிற்கு கீழே வாழக்கூடிய மக்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டது. விவசாயிகளின் தனிநபர் வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு வறுமை கோடு தொடர்பான வருமான வரம்பு உருவாக்கப்பட்டது. இந்த அளவுகோலின் படி 200 யுவான் (28 டாலர்) கீழே வருமானம் உள்ளவர்கள் வறுமையில் வாழ்வதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி 1985 ஆம் ஆண்டு 12.5 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே இருப்பதாக முடிவு எடுக்கப்பட்டு திட்டம் தீட்டப்பட்டது. இந்தத் திட்டத்தின் படி 1993 ஆம் ஆண்டு பரிசீமைக்கு உட்படுத்திய பொழுது 7.5 கோடி மக்கள் வறுமை அளவீடுக்கு கீழே இருந்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் சரியாக 60 லட்சம் மக்கள்(6.25 மில்லியன்) வறுமையில் இருந்து மீட்கப்பட்டார்கள்.

மீண்டும் 1994 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பதற்கான திட்டத்திற்கு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 592 மாவட்டங்கள் வறுமையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்று அடையாளம் காணப்பட்டு இந்த மாவட்டங்களுக்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்துடன் அறிவியல் தொழில்நுட்ப முறைகளையும் அமுலாக்கினர். அரசு சாரா அமைப்புகளை வறுமை ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்துவதற்கான முடிவெடுக்கப்பட்டு அமலானது. இந்த தொடர்ச்சியான நடவடிக்கையின் மூலமாக கிராமப்புற பகுதிகளில் உணவு உடை கிடைக்காத மக்களுடைய எண்ணிக்கை மூன்று கோடி (32.09 மில்லியன்) என்ற அளவில் குறைக்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு மற்றும் சீன அமைச்சரவையும் 2000 ஆண்டு வரை நடைபெற்ற வறுமை ஒழிப்பு திட்டங்களை ஆய்வு செய்து 2001-2010 வரையிலான திட்டத்தை உருவாக்கினார்கள். இந்தத் திட்டத்தின்படி வறுமை கோட்டிற்கு கீழே இருப்பவர்களுடைய வருமானம் 200 யுவான்களிலிருந்து 895 யிவான்களாக உயர்த்தப்பட்டது. வருடாந்திர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 2008 ஆம் ஆண்டு 895 யுவான் வருமானத்திலிருந்து 1196 யுவானாக தீர்மானிக்கப்பட்டது. மீண்டும் 2010 ஆம் ஆண்டு 1196 யுவானிலிருந்து 1274 யுவான்களாக உயர்த்தப்பட்டது.

இதன் காரணமாக வறுமை ஒழிப்பு திட்டத்தில் பயன்பெறும் மக்களின் எண்ணிக்கை கூடுதலானது. 2008 ஆம் ஆண்டு தரவுகளின் படி கிராமப்புறம் ஏழை மக்களின் எண்ணிக்கை 9.5 (94.22 மில்லியன்) கோடியிலிருந்து 2.6 (26.88 மில்லியன்) கோடியாக குறைந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் கணிசமான ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன

மாறிய அளவுகோலும் அடிப்படை மாற்றமும்

2011 ஆம் ஆண்டில் கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை முழுமையாக ஆய்வுசெய்து 2011-2020 ஆம் ஆண்டுகளுக்கான 10 ஆண்டு வறுமை ஒழிப்பு திட்டத்திற்கான வரைவு அறிக்கையை தீர்மானித்து வெளியிட்டார்கள். இதன் அடிப்படையில் இரண்டு முக்கிய முன்னேற்றங்களை உத்திகளை மாற்றினார்கள்.

முதலாவதாக வறுமை கோட்டிற்கு கீழே இருக்கக்கூடிய மக்களுக்கான வருமானத் தொகை 2010 ஆம் ஆண்டு இருந்த 1274 யுவான்கள் என்பதை 2300 யுவான்களாக உயர்த்தப் பட்டது. இந்த உயர்வு அசாதாரணமான முடிவாகும். அதாவது வறுமை கோட்டிற்கு கீழே வாழக்கூடிய மக்களின் வருமான வரம்பு 80.5 சதவிகிதம் என்ற அளவுக்கு உயர்ந்தது. இதனால் மீண்டும் வறுமை கோட்டிற்கு கீழே இருந்த சுமார் 2 கோடி மக்களை 10 கோடி மக்களாக உயர்த்தியது.

இரண்டாவதாக, இதுவரை வறுமை ஒழிப்பு என்பது உணவு, உடை என்பதை அடிப்படை அளவுகோலாகவும், இதர அடிப்படை தேவைகளை இரண்டாம் பட்சமாகவும் வைத்திருந்தார்கள். இந்தத் திட்டத்தின்படி வறுமை ஒழிப்பு என்றால், உணவு, உடை, கட்டாய கல்வி, அடிப்படை மருத்துவ வசதி, பாதுகாப்பான வீட்டு வசதி ஆகியவற்றை நிறைவேற்றினால்தான் அந்த மக்கள் வறுமைக்கோட்டில் இருந்து மீட்டெடுக்கப்பட்டவர்களாக கணக்கிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அமலாக்கப்பட்டது. இந்தத் திட்டம் 2014 ஆம் ஆண்டு கிராமப்புற வறுமை ஒழிப்பதற்கான முன்மாதிரியான திட்டமாக மாறியது.

2015 ஆம் ஆண்டு தீவிர வறுமை ஒழிப்பு என்ற திட்டத்தை மேலும் ஆழப்படுத்தி அறிவித்தார்கள். ஏற்கனவே பெருமளவு குறைக்கப்பட்ட வறுமையை முற்றிலும் அகற்றுவதற்கான திட்டமிடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அக்டோபர் 16, 2016 ஆம் ஆண்டு சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் 2020 ஆம் ஆண்டுக்குள் சீனாவில் எஞ்சி இருக்கும் வறுமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று அறிவித்தார். இது சீனாவின் பிரதான பகுதிகளில் வறுமை ஒழிப்பை நடத்தியதை விட மாறுபட்ட உத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவித்தார். குறிப்பாக மேற்கு சீனாவில் இனச் சிறுபான்மை பகுதிகளில் வறுமையில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அவற்றை இலக்காக வைத்து இலக்கு தீர்மானிக்கப்பட்ட வறுமை ஒழிப்பு என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை 11 வது ஐந்தாண்டு திட்டத்துடன் (2016-2020) இணைத்து அத்திட்டத்தின் முதன்மையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலாக மாற்றினார்.

தொலைதூர கடுமையான தட்பவெட்ப நிலைகளில் வாழும் இனச் சிறுபான்மை மக்களை மையமாகக் கொண்ட திட்டமாக இது மாற்றப்பட்டது. காரணம், சீனாவில் எஞ்சி இருக்கும் வறுமைசார் மக்களின் அதிகமான பேர் இங்கு இருந்தார்கள் என்பதால் அவற்றை இலக்காகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டது. 2015 முதல் 2017 ஆம் ஆண்டுகள் வரை வறுமை ஒழிப்பிற்கான ஆய்வுகளை மேற்கொண்டு 2018 முதல் 2020 ஆம் ஆண்டுகளுக்கான மூன்றாண்டு வறுமை ஒழிப்பு திட்டம் தீவிரமாக முடுக்கி விடப்பட்டது. மேற்கண்ட இலக்கு சார்ந்த வறுமை ஒழிப்பு பணி பெரும் பயனை கொடுத்தது. 2019 ஆம் ஆண்டில் ஆய்வுக்கு உட்படுத்திய பொழுது கிராமப்புற ஏழை மக்கள் தொகை ஒட்டுமொத்த சீனாவிலும் 1.1 கோடியாக குறைந்தது. அதாவது வறுமையின் சதவீதம் 0.6 என்ற அளவில் வீழ்ந்தது. இந்த மக்களும் அடுத்து இலக்கு தீர்மானிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு வறுமையில் இருந்து மீட்கப்பட்டார்கள். சீன நாட்டின் இந்தத் திட்டத்தின் வெற்றியை ஐக்கிய நாடுகள் சபை மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்வதுடன் பாராட்டவும் செய்தார்கள். 

சீன பண்புகளுடன் கூடிய சோசலிச வளர்ச்சியில் இந்த வெற்றியை ஏற்றுக்கொள்ளாத முதலாளித்துவ சிந்தனையாளர்களும் முதலாளித்துவமும் சீனாவில் வறுமை ஒழிக்கப்படவே இல்லை என்ற பொய் மூட்டைகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். மறுபுறத்தில் வறுமை ஒழிக்கப்பட்டு விட்டது இனி அனைத்தும் நல்லதாகவே நடந்து தானாகவே சோசலிசம் வந்துவிடும் என்று நினைக்கக்கூடிய கற்பனாவாத கம்யூனிஸ்டுகளும் இருக்கிறார்கள். சீன கம்யூனிஸ்ட் கட்சி நிலைமைகளை மாற்றுவதற்கான போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதற்கான சில முயற்சிகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

1980 ஆம் ஆண்டுகளில் மத்தியில் இருந்து சீனாவில் வறுமை படிப்படியாக குறைய ஆரம்பித்தது என்று ஆய்வுகள் வெளிப்படுத்துகிறது. இவ்வாறு குறைந்ததற்கு காரணம் அந்த நேரத்தில் முன் முயற்சி எடுக்கப்பட்ட விரைவான பொருளாதார வளர்ச்சி ஆகும். அதே நேரத்தில் மற்றொரு வளர்ச்சி போக்கு உருவானது. மிகத் தீவிரமான பொருளாதாரம் வளர்ச்சி ஏற்பட்ட பொழுது குறிப்பாக சீனாவின் கிழக்கு பிராந்தியங்களில் வளர்ச்சி அதிகமாக நடந்தது. இந்த வளர்ச்சி முறைகள் பிராந்தியங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்தியது. நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான வருமான இடைவெளியை அதிகமாகியது. இதனால் வறுமையில் வாடிய மக்கள் வறுமையில் இருந்து மீள்வதற்கான நிலையில் ஒரு மந்தம் ஏற்பட்டது. அது மட்டுமல்ல எதிர்கால பொருளாதார வளர்ச்சித் திறனையும் இந்த ஏற்றத்தாழ்வான வளர்ச்சி போக்குகள் கடுமையாக பாதிக்கும் என்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசாங்கம் உணர்ந்தது. உலகின் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி ஏற்றத்தாழ்வை உருவாக்கியது இந்த வளர்ச்சியில் ஏற்படுகிற பொழுது ஏற்றத்தாழ்வு உருவாவது தவிர்க்க முடியாத நிகழ்வு என்று முதலாளித்துவ நாடுகள் தங்களது சித்தாந்தமாக மாற்றிக் கொண்டார்கள். இதுதான் இந்தியா உட்பட பல நாடுகளில் போதிக்கப்படக்கூடிய விஷயம்.

இந்த ஏற்றத்தாழ்வுகளில் ஏழை மக்கள் கசிந்து வரும் பொருளாதார பலன்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று போதிக்கிறார்கள். இந்த நிலையை தொடரசெய்வதற்கு பல நாடுகளில் பொருளாதார காரணங்களும் மற்ற வேறு பல காரணங்கள்களும் இருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வை நீடிக்கவைப்பதற்கு மதம், பிரதேசம், இனம் போன்ற பலவற்றையும் காரணிகளாக மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் சீனாவில் இந்த ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை கணக்கில் எடுத்து அதை மாற்றுவதற்காக சீன சமூகத்தை அனைத்து வகையிலும் ஒரு மிதமான பலமான சமுதாயமாக உருவாக்க வேண்டும் என்ற முயற்சிகளை மேற்கொண்டார்கள். இதற்காக நிறுவனத் திறமைகளை பெரும் அளவு உயர்த்தினார்கள். இதன் விளைவு சர்வதேச அளவில் யாரும் சாதிக்க முடியாத அளவிற்கு, மற்றவர்கள் நம்ப முடியாத அளவிற்கு இந்த வறுமை ஒழிப்பு முயற்சி நடந்தேறியது. பொருளாதார செயல்முறைகளில் இந்த போக்குகள் மிகவும் ஒரு சவாலான நிலைமையாகும். இவற்றை முதல் படியில் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன அரசாங்கமும் வெற்றி கொண்டுள்ளது.

சவால்களும் எதிர்கொள்ளும் முறைகளும்

வறுமையை ஒழித்த பிறகு எழுகின்ற சவால்களையும் ஆய்வு செய்து வறுமையை ஒழிப்பதற்கான வழிகளை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. முடிந்தது வறுமை ஒழிப்பு என்று திட்டங்களை மூடிவிடவில்லை. இதற்கான ஆய்வுகளை மேற்கொண் டார்கள்.

மிகவும் ஏழ்மையான பகுதிகளில் வறுமை ஒழிப்பு கடினமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீண்டும் வறுமையில் விழுவதை தடுக்கும் பணிகளை வலுப்படுத்தவில்லை என்றால் மீண்டும் வறுமை நிலை உருவாகும். திட்டங்களுக்கும் செயல்படுத்தியவைகளுக்கும் இடைவெளிகள் முழுமை அடையவில்லை. இன்னும் இடைவெளி இருக்கிறது என்று கண்டு கொண்டார்கள். இயற்கை சூழலின் சாதகமற்ற அமைப்புகள் தொடர்ந்து நெருக்கடியை உருவாக்கிக் கொண்டு இருக்கும். வறுமை ஒழித்த பகுதிகளில் சிறு தொழில்கள் அடுத்தடுத்த வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கொண்டிருக்கவில்லை. சில ஏழ்மையான பகுதிகள் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொல்லாத நிலை நீடிக்கிறது. வறுமை ஒழிப்பில் இப்போது குறுகிய கால மற்றும் விரைவான தீர்வுகளை மட்டுமே செய்து முடிக்கப் பட்டுள்ளது. நீண்ட கால நன்மைகள் நிலையான வருமான வளர்ச்சியை முழுமையாக கருத்தில் கொள்வதில் கவன குறைவு உள்ளது. இதனால் நீண்ட கால விளைவுகளை அடைவது கடினமாகும். மனித வளங்களும் மற்றும் மூலதனம் ஆகியவை தொழில்களின் நீண்டகால நிலையான வளர்ச்சி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லை.

பொருளாதார உலகமயமாக்களின் பின்னடைவுகள் சர்வதேச நிதி சந்தை நெருக்கடிகள் குறிப்பாக சீன அமெரிக்க பொருளாதார வர்த்தக மோதல்கள் அனைத்தும் உற்பத்தியையும் வணிக நிறுவனங்களையும் பாதிக்கிறது. இதனால் கடுமையான சவால்களை சந்திக்கிற பொழுது வறுமையில் இருந்து மீட்ட பகுதிகள் கவனம் செலுத்துவது குறைந்து விட வாய்ப்பிருக்கிறது. இவற்றை எதிர்கொள்வதற்கு செயல்திறன் மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளது. சீனாவில் வறுமையில் இருந்து மீட்கப்பட்ட ஒன்பது கோடியே 80 லட்சம் மக்களில் மீண்டும் 20 லட்சம் பேர் வறுமையில் சிக்கும் அபாயம் இருப்பதாகவும் மேலும் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வின் முடிவுக்கு வந்துள்ளனர். அவற்றை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்கள்.

முதலில் வறுமை ஒழிப்புக்கான திட்டங்களும் கொள்கைகளும் குறிப்பிட்ட இந்த பகுதிகளுக்கு தேவைப்படுகிற காலம் வரை நீட்டிக்க வேண்டும் என்று முடிவு செய்து அமுலாக்கி வருகிறார்கள். மீண்டும் வறுமையில் விழுந்து விடாமல் இருப்பதற்கு உள்ளூர் வளங்களை பயன்படுத்தும் தொழில்களின் விகிதத்தை அதிகரிக்க முயற்சித்து வருகிறார்கள். சில தொழில்களில் அடுத்தடுத்த வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இல்லாதவற்றை அடையாளம் கண்டு மாற்று ஏற்பாடுகளை செய்கிறார்கள். வறுமையில் வாடும் மக்கள் நோயின் காரணமாக மீண்டும் வறுமையால் பாதிக்கப்படாமல் இருக்க மருத்துவ காப்பீடு திட்டத்தை தொழில்துறை தலைமையிலான கொள்கையாக மாற்றி இருக்கிறார்கள். இதன் மூலம் குறுகிய கால நீண்டகால நோயின் காரணமாக வறுமையில் வீழும் அபாயம் தடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வறுமை ஒழிக்கப்பட்ட பிரதேசங்களில் தொழில் மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை நிறுவி இருக்கிறார்கள். இவை இரண்டும் வறுமையில் வாழ்ந்த பகுதிகளில் மக்கள் சுய வளர்ச்சி திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான உதவிகளை செய்து பலனும் கிடைத்திருக்கிறது.

கிராமப்புற தொழில் முறை கூட்டுறவுகளின் கூட்டுப் பொருளாதாரத்தை ஏற்படுத்தி உள்ளனர். கால்நடை மற்றும் விவசாய பொருளாதாரத்தை நவீன மயமாக்குவதற்கு போதுமான முயற்சிகள் இல்லை என்பதை அறிந்து அவற்றை துரிதப்படுத்தி உள்ளார்கள். தொழில்துறை சார்ந்த வறுமை ஒழிப்பு என்ற இலக்கை மையமாகக் கொண்டு கிராமப்புற கலாச்சார அமைப்புகளையும், கிராமபுற சுற்றுலா தொழிலையும் மேம்படுத்தி இருக்கிறார்கள். இவை அனைத்துமே வறுமை ஒழிப்பிற்கு பிறகு ஆய்வு செய்து நடத்தக்கூடிய முயற்சிகள் ஆகும். இவை அனைத்தும் அற்புத விஷயங்களாக வெற்றி பெறக் கூடியது அல்ல. சில படிகள் முன்னேறி மேலும் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான அடித்தளத்தை இந்த முயற்சிகள் அமைத்துக் கொடுக்கும். வறுமை ஒழிப்பு காலத்திலும் வறுமை ஒழிப்பை நிறைவேற்றிய பிறகும் அடுத்து எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை ஆய்வு செய்து அதை தீர்ப்பதற்கான பாதையில் சீன சோசலிசம் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பொதுவான பின்னணியில் இருந்துதான் இனச் சிறுபான்மையின் பகுதியில் வறுமை ஒழிப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அ.பாக்கியம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனப் பொருளாதாரத்தின் புதிய தர்க்கம்

  Xu Feihong இந்தியாவுக்கான சீனத் தூதர் இது சீனா-இந்தியா ஒத்துழைப்புக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகிறது. வெளியிடப்பட்டது - ஜனவரி 29, ...