Pages

வியாழன், ஏப்ரல் 03, 2025

14. மத நம்பிக்கை சுதந்திரம் என்றால் என்ன?



சீன வரலாற்றில் மாற்றங்களின் மகுடமாக 1949 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடந்த புதிய ஜனநாயக புரட்சி அமைந்தது. புரட்சி, வெறும் வார்த்தைகளோடு வலுவிழந்து போகவில்லை; மாறாக, சீன நாட்டின் பொருளாதார அமைப்பை அடியோடு மாற்றி அமைத்தது.  புரட்டிப் போடப்பட்ட பொருளாதார மாற்றங்களால் அதன் மேல்கட்டுமானமாக இருந்த மதமும் மாற்றங்களுக்கு உள்ளானது. மதஅமைப்புகளுக்குள் சீர்திருத்த சிந்தனையாளர்கள் சிரம் உயர்த்த ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் மதத்தின் முந்தைய ஆளும் வர்க்க வேர்கள் பிடுங்கி எறியப்பட்டது. நிலப்பிரபுத்துவ சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு இருந்த பௌத்தமும், தாவோயிசமும் சங்கிலியை அறுத்துக் கொண்டு வெளியே வந்தன. சீனத்திலிருந்த கத்தோலிக்க மதம், புராட்டஸ்ட்டென்ட் மதம், இஸ்லாம் மதம் ஆகியவற்றை ஏகாதிபத்தியம் தனது ஏவல் அமைப்பாக நடத்தி வந்தது. இந்த மதங்கள் சீனாவின் சுயாதிபத்ய தன்மையைத் தேடி எழுச்சி கொள்ள ஆரம்பித்தன. அதன் விளைவாக ஏகாதிபத்திய கட்டுப்பாட்டில் இருந்து விடுக்கப்பட்டது. ஒருபுறம் நிலப்பிரபுத்துவ வர்க்கமும், மறுபுறம் முதலாளித்து வர்க்கமும் சீனத்தில் மதங்களை தங்கள் பிடியில் வைத்திருந்தன. அவற்றில் இருந்து மதங்களை விடுவித்தது  அடிப்படையான மாற்றமாகும்.

விடுவிக்கப்பட்ட மத அமைப்புகள் எப்படி செயல்படுவது? மக்களின் மத நம்பிக்கைகளுக்கான செயல்பாட்டு வடிவங்கள் என்ன? என்பன போன்ற கேள்விகளை  புதிய அரசு எதிர்கொண்டது. மதம் என்பது திட்டவட்டமா வகையில்  வெகுமக்கள் தன்மையை கொண்டுள்ளது. மதப் பிரச்சினைகள் ஒரு வரம்புக்கு உட்பட்டு மிகவும் நீண்ட காலம் நீடித்திருக்கக் கூடியது. குறுகிய காலத்தில் அவை அழிந்து போகக் கூடியது அல்ல. சீனாவைப் பொறுத்தவரை மேலும் சில விசேஷமான காரணிகள் இருந்தன. சீனாவின் சில பகுதிகளில் மதம் என்பது இனப்பிரச்சினையுடன் இரண்டறக் கலந்து மதச் சடங்குகளும், நம்பிக்கைகளும், இனங்களின் பழக்க வழக்கங்களும், பிரிக்க முடியாத அளவிற்கு பிணைந்து கிடந்தது. சர்வதேச சூழலில் ஏற்படக்கூடிய மாற்றங்களாலும் சில காரணிகளாலும் உள்நாட்டில் மத செயல்பாட்டில் தாக்கங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. சீனத்தின் பல பகுதிகளில் வர்க்கப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த இடங்களில் எல்லாம் மதம் குறித்த கேள்விகளை ஊழியர்களும் மக்களும் எழுப்ப ஆரம்பித்தனர். அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான விடைகளை அரசு தேடிக்கொண்டிருந்தது.

1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு சீர்திருத்த கொள்கைகள் அமலாக்கத்திற்கான தயாரிப்புகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. 1978 ஆம் ஆண்டு அவற்றின் பணிகள் கீழ் மட்டம் வரை கொண்டு செல்லப்பட்டது. 1982 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி மதம் குறித்த ஒரு விரிவான தீர்மானத்தை நிறைவேற்றியது. "நமது நாட்டின் சோலிச காலத்தில் மதப்பிரச்சினை குறித்த அடிப்படை கண்ணோட்டம் மற்றும் கொள்கை" என்று தலைப்பிட்ட அந்த தீர்மானம் இதுவரை இல்லாத அளவு மிக விரிவான வகையில் மதக் கொள்கைகளை உருவாக்கிக் கொடுத்தது. சீன மக்களிடையே உள்ள முரண்பாடுகளில் முதன்மையான முரண்பாடாக மதம் இருக்கிறது என்ற முடிவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி வந்தது. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் சீன மக்கள் குடியரசு தனது கொள்கைகளை உருவாக்கிக் கொண்டது. கட்சி உறுப்பினர்கள், கட்சி கமிட்டிகள் மதப் பிரச்சினையில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான மிகத் துல்லியமான வரையறுப்புகளை தீர்மானம் முன் வைத்தது. "மதப் பிரச்சினையில் குறிப்பான எச்சரிக்கையுடனும் கூர்மையான விவேகத்துடனும் சிந்தனை மிக்க பரிசீலனை தன்மையுடனும் கட்சி உறுப்பினர்களும் கட்சி குழுக்களும் இருக்க வேண்டும்" என்று லெனின் எழுதியதை தீர்மானம் சுட்டிக்காட்டியது. சோலிசம் வந்துவிட்டது; பொருளாதார வளர்ச்சியும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே, மதம் சீக்கிரம் அழிந்துவிடும் என்ற கருத்து மேலோங்கி இருந்தது. இந்த கருத்தை மாற்றுவதற்கான செயலை  சீனக் கம்யூனிஸ்ட் கட்சி செய்தது. "சோஷலிச அமைப்பு நிறுவப்பட்டதாலும், நமது பொருளாதாரத்திலும், கலாச்சாரத்திலும் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டு விட்டதாலும் மதம் விரைவில் வாடிவிடும் என்று நினைப்பது எதார்த்தத்திற்கு மாறானது" என்று தீர்மானத்தின் மையஅம்சமாக முன்வைக்கப்பட்டது.

மத நம்பிக்கை சுதந்திரம்

சீனாவில் மதப் பிரச்சினைகளை அணுகுவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்கள் குடியரசும் ஏற்றுக்கொண்ட அடிப்படையான கொள்கை என்பது மத நம்பிக்கை சுதந்திரத்தை மதித்து பாதுகாப்பது என்பதாகும். மத நம்பிக்கையின் சுதந்திரத்தை மதித்தால் மட்டும் போதுமா? மதம் தொடர்பான அமைப்புகள், அதன் சடங்குகள் மற்றும் மதவிசுவாசிகளுக்கான பாதுகாப்பையும் மக்கள் குடியரசு உத்திரவாதப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தனர். இந்த முடிவு புரட்சிக்குப் பிறகு உடனடியாக எடுக்கப்பட்டாலும் 1982 ஆம் ஆண்டு இன்னும் துல்லியமாகவே வரையறுக்கப்பட்டது. இந்தக் கொள்கை எவ்வளவு நாள் நீடிக்கும் என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. மதம் மறைந்து போகும் வரை இந்தக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று ஆணித்தரமான முறையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி முடிவு எடுத்து அமலாக்கி வருகிறது.

இப்போது மத நம்பிக்கை சுதந்திரம் என்ற அடிப்படைக் கொள்கைகளை பார்ப்போம். சீனாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடிமகனுக்கும் மதத்தில் நம்பிக்கை கொள்வதற்கும், நம்பிக்கை இல்லாமல் இருப்பதற்கும் முழுமையான சுதந்திரம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட மதத்தில் பல்வேறு பிரிவுகள் இருக்கலாம். அவற்றில் எந்த ஒரு பிரிவை வேண்டுமானாலும் நம்புவதற்கான உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது.  ஒருவர் மத நம்பிக்கையற்றவராக இருந்து மத நம்பிக்கையாளராக மாறுவதற்கு முழு சுதந்திரம் இருக்கிறது என்பதைப்போல் மத நம்பிக்கையாளர் ஒருவர் மத நம்பிக்கையற்றவராக மாறுவதற்கும் முழுமையான சுதந்திரம் உண்டு. இதுதான் சீன மக்கள் குடியரசு மத நம்பிக்கை சுதந்திரம் தொடர்பாக அரசியல் சட்டத்தில் சேர்த்து இருக்கக்கூடிய கொள்கையாகும்.

இயக்கவியல் பொருள் முதல்வா அடிப்படையிலான நாத்திகத்தை கடைபிடிக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சி, அதன் தலைமையிலான அரசு இந்த மத நம்பிக்கை சுதந்திரத்தை எப்படி அமல்படுத்துவது என்ற சிக்கலான கேள்விகளை எதிர்கொண்டது. முடிவெடுப்பதும், போதனை செய்வதும் மிக எளிதானது. அமலாக்கம் கடினமானது. அதிலும் மக்களின் நம்பிக்கை தொடர்பான விஷயங்களை அமலாக்குவது எளிதான காரியம் அல்ல. மக்களின் விருப்பத்தையும் தேர்வையும் மாற்ற முடியாது. புறநிலை சட்டம் மற்றும் வரலாற்று உண்மைகளையும் மாற்ற முடியாது. இந்த இரண்டு கொள்கைகளும் சீரற்ற முறையில் அல்ல, கவனமாக பரிசீலித்த பிறகு உருவாக்கப்படுகின்றன.  நாத்திகத்தை கடைபிடிக்கும் கம்யூனிஸ்டுகள் இடைவிடாமல் தங்களது அறிவியல் பிரச்சாரத்தையும் பகுத்தறிவு பிரச்சாரத்தையும் தொடர்ந்து செய்ய வேண்டும். அதற்கு எந்த தடையும் இல்லை. அவை ஊக்குவிக்கப்படும். அதே நேரத்தில் வெகுமக்களின் ஆன்மீகம் சார்ந்த பிரச்சினைகளை கையாளுகிற பொழுது அவற்றை கருத்தியல் ரீதியாக வென்றெடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும். எடுத்த எடுப்பிலேயே நாம் அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற எண்ணத்தில் மக்கள் நாத்திகத்தை கடைபிடிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது பயனற்றது மட்டுமல்ல மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து நிலை உறுப்பினர்களும் இவற்றை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து அமலாக்கியது.

சீனாவில் நாத்திகக் கொள்கைகளை கடைபிடிக்கக் கூடிய கட்சி ஆட்சியில் இருப்பதால் அவை ஆத்திகக் கொள்கைகளுக்கு எதிரான செயல்பாடுகள் முன்னிலை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இன்றைய வரலாற்று காலகட்டத்தில்  மத நம்பிக்கை சுதந்திர கொள்கை அறிவிக்கிற பொழுது சீன மக்களிடையே மதம் தொடர்பான பிரச்சனைகள்தான் முதல்நிலை முரண்பாடு என்று அறிவித்தது. நாத்திகர்களுக்கும் ஆத்திகர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் ஒப்பீட்டு அளவில் இரண்டாம் பட்சமானது என்பதை கம்யூனிஸ்டுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். நாத்திக மற்றும் ஆத்திகம் இடையிலான வேறுபாடுதான் பிரதான வேறுபாடு என்று கருதி கம்யூனிஸ்டுகள் ஒருதலைபட்சமாக நாத்திக கருத்துக்களை திணிக்க ஆரம்பிக்கக் கூடாது. இது கட்சிக்கு மட்டுமல்ல வெகுமக்களையும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கும். இந்த வேறுபாடுகளை பிரதான முரண்பாடாக மாற்றினால் மதவெறி மேலோங்கி சோலி நிர்மாணத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். மத நம்பிக்கையாளர்களுக்கும் மத நம்பிக்கைற்றவர்களுக்கும் அரசியல் பொதுவானது. பொருளாதாரப் பிரச்சினைகள் பொதுவானது. இந்த இரண்டிலும் இருக்கக்கூடிய பொதுத் தன்மைகளை கவனத்தில் எடுக்க வேண்டும். கட்சியின் அடிப்படைப் பணி அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பதாகும். இந்த ஒன்றிணைப்பின் மூலமாகத்தான் ஒரு நவீன சக்திவாய்ந்த சோலிச அரசை கட்டியெழுப்ப முடியும் என்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிச, லெனினிச கோட்பாட்டின் அடிப்படையில் மதநம்பிக்கை சுதந்திர கொள்கையை உருவாக்கி உள்ளது. இதுதான் மக்களின் நலன்களுடன் உண்மையாகவே ஒத்துப் போகிறது. இதுவே சரியான கொள்கை என்று  முடிவெடுத்து களத்தில் இறங்கியுள்ளனர்.

ஒரு கேள்வியின் இரு அம்சங்கள்

சோலிச சமூக கட்டமைப்பில் ஒரே நேரத்தில் எதிர்மறைகளின் இரு அம்சங்களை கையாள வேண்டி இருக்கிறது. ஒரு புறத்தில் மக்களின் மத நம்பிக்கை சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். இது மக்கள் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உரிமைகள் ஆகும். அதே நேரத்தில் மக்கள் மதத்தை நம்பாமல் இருக்கவும் மத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்கவும் பிரச்சாரத்தை நடத்த வேண்டும். இந்த இரண்டையும் ஏக காலத்தில் சீன மக்கள் குடியரசு செய்ய வேண்டிய புறச்சூழல் ஆகும். இது மிகவும் நுணுக்கமான முறையில் அமலாக்க வேண்டிய செயல். தரம்வாய்ந்த, மதங்களின் வரலாற்றை அறிந்த, சிறந்த ஊழியர்களால் மட்டுமே இதை செய்து முடிக்க முடியும். ஒரு கேள்விக்கு எதிர் எதிரான இரு அம்சங்களை கையாள வேண்டி இருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்த முடிவை பெரும் பகுதி சிறப்பான முறையில் அமலாக்கி வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மத நம்பிக்கை உள்ள மக்களை வென்றெடுப்பதற்கு என்ன வழி என்ற கேள்விகள் எழுகிறது. அது உத்தரவு மூலமாகவோ, நிர்பந்தம் மூலமாகவோ சாத்தியமில்லை என்பதை மார்க்சிய சித்தாந்தம் தெளிவுபடுத்தி உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி அறிவியல் கல்வியை பரப்புவது, மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரங்களை தீவிரப்படுத்துவது போன்ற நடவடிக்கையில் மூலமாக மத நம்பிக்கையாளர்களை வென்றெடுக்க முடியும். இது மட்டும்தான் எதிர்காலத்தில் மக்கள் மத நம்பிக்கையிலிருந்து வெளிவருவதற்கு காரணமாக அமையும் என்பதை சீன மக்கள் குடியரசு தெளிவுபடுத்தி அமலாக்கி வருகிறது.

மத நம்பிக்கை சுதந்திரம் என்றால் அவற்றை எப்போதும் எந்த இடத்திலும் எந்த வடிவத்திலும் மனம் போன போக்கில் பயன்படுத்தலாம் என்ற நடவடிக்கைகளுக்கு சீனாவில் அனுமதியில்லை. மத நம்பிக்கை என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். குடிமக்களின் தனிப்பட்ட சுதந்திரமான தேர்வுதான் மத நம்பிக்கை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, சீனாவில் உள்ள மதங்கள் அரசு நிர்வாகத்திலோ, நீதித்துறை விவகாரங்களிலோ, பள்ளிக்கூடங்களிலோ, பொதுக்கல்வியின் பாடத்திட்டங்களிலோ தலையிடக்கூடாது என்பது கட்டாயமான சட்டமாகும். மிக முக்கியமான அறிவியல் பூர்வமான நடவடிக்கை என்பது,  குழந்தைகள், சிறார்கள் ஆரம்பத்தில் எந்த மதத்தையும் அவர்களாக தேர்ந்தெடுப்பதில்லை என்பது அனைவரும் அறிந்தது. 18 வயது வந்த பிறகுதான் அவற்றை தேர்ந்தெடுக்க முடியும் என்பதும் அறிவியல்பூர்வமானது. ஆனால் மதவாதிகள் குழந்தை பிறந்தவுடன் அதைச் சடங்குகளில் ஆரம்பித்து சுடுகாடு செல்லுகிற வரை மத நம்பிக்கை சங்கிலிகளால் அல்லது மத அமைப்புகளின் சங்கிலிகளால் கட்டி போடுகிறார்கள். இது இயற்கைக்கு விரோதமானது என்பதை கவனத்தில் கொண்டு செயற்கையான முறையில் சிறார்கள் மீது மதம் தொடர்பான போதனைகளை திணிக்க கூடாது என்றும் 18 வயது வரை உள்ளவர்களை வழிபாட்டுத் தலங்களில் உறுப்பினராக சேர்க்கக்கூடாது என்றும் சட்டம் இயற்றி உள்ளது. தேச ஒற்றுமை, இன ஒற்றுமைக்கு எதிராக மதம் எவ்வித செயல்களிலும் ஈடுபடக்கூடாது அவ்வாறு ஈடுபட்டால் அவை தண்டனைக்குரிய குற்றமாகும்.

சோலிச கொள்கைகளை கடைபிடிக்கும் அரசின் கீழ், மத நம்பிக்கைகள் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளை, நடைமுறை சடங்குகளை சாதாரணமாக நடத்துவதற்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு மதத்தை ஊக்குவிக்கவும் மற்றொரு மதத்தை புறக்கணிக்கவும் சோஷலிச அரசு அதிகாரத்தை பயன்படுத்தக் கூடாது என்று தெளிவாக செயல்படுகின்றனர். மத அமைப்புகள் சோலிச அமைப்பை எதிர்க்கக் கூடாது என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

15 சீனாவில் மதகுருமார்களும் மத வழிபாட்டுத் தலங்களும்

  மத நம்பிக்கை ச் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு என்ற கொள்கையை கடைபிடிக்கிற ஒரு நாட்டில் மத அமைப்புகள் எப்படி நடத்தப்படுகின்றன என்று கேள்வ...