Pages

திங்கள், ஏப்ரல் 14, 2025

தோழர் கா. சின்னையா தென் சென்னை கட்சி அமைப்பின் அடித்தளம்.

                                     அஞ்சலி



   1966 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி கிராமத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வருகிறார். தனது ஊர்காரரும் தனது தந்தைக்கு  நெருக்கமானவர் சென்னை திருவான்மியூரில் நடத்தி வந்த எஸ்.ஆர்.பி.டூல்ஸ் தொழிற்சாலையில் நிர்வாக பணியில் சேர்ந்தார். நகரத்து வாழ்க்கை ஈடு கொடுக்க முடியாமல் ஓராண்டுக்குள் சொல்லிக் கொள்ளாமல் ஊருக்கு திரும்பி விட்டார். 


அப்பொழுது 1967 ஆம் ஆண்டு புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியில் கூட்டணியின் சார்பில் தோழர் உமாநாத் போட்டியிட்டார். ஊரில் சுற்றித் தெரிந்த சின்னையா திமுகவினருடன் சேர்ந்து உமாநாத் வெற்றிக்காக தேர்தல் பணியாற்றினார்.


தேர்தல் முடிந்து விட்டது. தொடர்ந்து கிராமத்தில் என்ன செய்வது என்று கேள்வி எழுந்தது வேறு வழியில்லாமல் அதே கம்பெனியில் சேர்வதற்கு தங்கள் ஊரில் இருந்த முதலாளியை சந்தித்து பேசினார். அவர் வசைபாடிவிட்டு சென்னைக்கு வர சொன்னார். சென்னை வந்து அம்பத்தூரில் தங்கி இருந்த பொழுது எஸ்.ஆர்.பி.டூல்ஸ் கம்பெனியிலிருந்து நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்பட்டது. 


ஆனால் தபால் துறையின் கவனக்குறைவால் ஒரு மாதம் கழித்து தான் நேர்காணல் அழைப்பு கிடைத்து. மீண்டும் கம்பெனிக்கு சென்றால் அவரை உள்ளே சேர்க்கவில்லை. எனவே அப்பொழுது விமான நிலையத்தில் வேலைக்கான அழைப்பு வந்து நேர்காணலுக்கு காத்திருந்த பொழுது அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா மரணம் அடைந்து விட்டார் என்பதால் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. 


அதன் பிறகு அம்பத்தூரில் உள்ள ஒரு அட்டை கம்பெனியில் தற்காலிகமாக வேலை செய்தார். வாழ்க்கை கடினமாக இருந்தது. மீண்டும் எஸ்.ஆர்.பி.டூல்ஸ் தொழிற்சாலைக்குச் சென்று வேலை கேட்ட பொழுது அப்பொழுது முதலாளி வெளிநாடு சென்றதால் நுங்கம்பாக்கத்தில் இருந்த அவரது இல்லத்திற்கு சென்று முதலாளியின் மனைவியை சந்தித்து 1970 ஆம் ஆண்டு மீண்டும் அதே எஸ்.ஆர்.பி.டூல்ஸ் வேலைக்கு சேர்ந்தார். 


சொந்த ஊர் காரர் என்பதால் தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் இவர் நிர்வாகத்திற்கு அடி பணிந்து வேலை செய்வார் என்று தான் அவருக்கு இந்தப் பணி கொடுக்கப்பட்டது. 


மரம் சும்மா இருந்தாலும் காற்று இருக்க விடுவதில்லை. அங்கு தொழிற்சங்கம் நிர்வாகத்தின் ஆசைகளை நிறைவேற்றக் கூடியதாகவே இருந்தது. இந்த சூழலில் சோழர் சின்னையா மார்க்சிஸ்ட் கட்சியுடன் தொடர்பு ஏற்படுத்தி கட்சியில் இணைந்து எஸ்.ஆர்.பி.டூல்ஸ் என்ற தொழிற்சாலைக்குள் ஒரு கிளையும் ஆரம்பித்து விட்டனர். 


இவர்களின் முயற்சியால் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றக்கூடிய வகையில் வேறொரு தொழிற்சங்கத்தை ஆரம்பித்து தொழிலாளர்களை வென்றெடுத்தனர். அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் அந்த கிளைக்கு தோழர் ஏ.கே.பத்மநாபன் பொறுப்பாக இருந்திருக்கிறார். 

தோழர் சின்னையா அந்த தொழிற்சங்கத்தில் பொருளாளர் பொறுப்பினை வகித்தார். 


பெரும் வேலை நிறுத்தம் செய்து தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வும், கிராஜுவேட்டி, போனஸ் போன்ற அனைத்தும் கிடைக்கச் செய்தனர். முதலாளியால் இந்த சம்பள உயர்வை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பல்வேறு வகையில் அவற்றை முடக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இறுதியில் தொழிற்சாலையை மூடிவிட்டார். 


தொடர்ந்து ஏழு மாதங்கள் மூடப்பட்ட தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பெரும் கஷ்டத்துக்கு ஆளானார்கள். வேலை நிறுத்தம் பலவீனம் அடைந்தது. ராணிப்பேட்டையில் வேறொரு தொழிற்சாலை ஆரம்பித்து அங்கு உற்பத்தி செய்ய ஆரம்பித்தார்கள். 


அங்கு தொழிற்சங்கத்தை ஆரம்பிப்பதற்கு சின்னையா உட்பட பலரும் முயற்சி செய்த பொழுது அவர்கள் அனைவரையும் கைதுசெய்து இரவு முழுவதும் காவல்துறை வாகனத்திலேயே சுற்றிவிட்டு, அவசர கால நிலை என்பதால் உங்களை மிசா சட்டத்தில் அடைக்காமல் இத்தோடு விட்டு விடுகிறோம் என்று அனுப்பி விட்டனர். ஒரே நிபந்தனை இனிமேல் தொழிற்சாலை பக்கம் எட்டிப் பார்க்கக் கூடாது. வந்தால் உங்களைப் பிடித்து மிசாவில் அடைத்து விடுவோம் என்று எச்சரித்தனர். 


ஏழு மாதங்களாக மூடப்பட்ட தொழிற்சாலை திறப்பதற்காக தொழிலாளர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி நிர்வாகத்துடன் தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 


தொழிற்சாலையின் முதலாளி சுப்பிரமணிய செட்டியார் சின்னையா பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டால் நான் பேச்சுவார்த்தைக்கு வர மாட்டேன் என்று அறிவித்து விட்டார். அன்றைக்கு இருந்த தொழிலாளர் நல ஆணையர் தொழிற்சங்கத்தில் இருந்து வந்திருக்கும் ஒருவரை நான் வெளியே போக சொல்ல முடியாது என்று அழுத்தமாக தெரிவித்துவிட்டார். 


சின்னையா பேச்சுவார்த்தையில் இல்லை என்றால் நான் ஆலையை உடனே திறப்பேன். அவர் இருந்தால் தொழிற்சாலையை திறக்க மாட்டேன் என்று அறிவித்தார். நிலைமையை புரிந்து கொண்ட சின்னையா இதர தொழிலாளர்களின் நலம் கருதி பேச்சுவார்த்தைக்கு அவராகவே செல்வதில்லை என்று விலகிக் கொண்டார். 


பேச்சுவார்த்தை முடிவில் தோழர் சின்னையா உட்பட நான்கு சங்க நிர்வாகிகளை மீண்டும் வேலைக்கு சேர்க்க மாட்டேன் என்ற ஒரே நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் உடனடியாக கம்பெனியை திறக்கிறேன் என்று சுப்பிரமணிய செட்டியார் அடம்பிடித்தார். 


அனைத்து தொழிலாளர்களின் நலன் கருதி சின்னையா உட்பட நான்கு பேர்களும் வேலைக்கு செல்லவில்லை கம்பெனி உடனடியாக திறக்கப்பட்டது. 


தோழர் சின்னையா வேறு பணிகளுக்காக சில இடங்களில் பணியாற்ற சென்ற பொழுது 1977 ஆம் ஆண்டு கட்சியின் முழு நேர ஊழியராக வரவேண்டும் என்று தோழர் அ.சௌந்தரராஜன் மற்றும் மீனாட்சிசுந்தரம் ஆகியவர்களின் வேண்டுகோளை ஏற்று முழு நேர ஊழியராக வந்து போக்குவரத்து அரங்கத்தில் பணியாற்றினார். 


அன்றைய தினம் பி ஆர் பரமேஸ்வரன் மாவட்ட செயலாளராக இருந்த பொழுது சின்னயாவை கட்சிப் பணிக்கு பயன்படுத்துவது என்று முடிவு எடுத்து கட்சிப் பணியாற்ற தொடங்கினார். அப்பொழுது ஒன்றுபட்ட சென்னை ஏழு பகுதி குழுக்களாக செயல்பட்டது.  சின்னையா சிந்தாதிரிப்பேட்டை முதல் திருவான்மியூர் பகுதி வரை உள்ள ஒரு நீண்ட தென் சென்னை பகுதி குழுவிற்கு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டார். இதற்கு முன்பாக ஒரு அமைப்புக்குழு உருவாக்கப்பட்டு தோழர் எஸ் கே சீனிவாசனை கன்வீனராக கொண்டு தென்சென்னை பகுதி குழு செயல்பட்டது. 


1982 ஆம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒன்றுபட்ட சென்னை மாவட்டத்தின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஒரே நேரத்தில் கட்சி செயலாளராகவும் வாலிபர் சங்க மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டார். 1984ஆம் ஆண்டு திருவாரூரில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் மாநில பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார். 


1987 ஆம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்சிப் பணிகளுக்கு சென்றார். 1994 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை தெசென்னை என்று இரண்டாக பிரிக்கப்பட்ட பொழுது தென்சென்னை மாவட்ட குழுவின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு 2000 ஆண்டு வரை அதன் மாவட்டச் செயலாளராக பணியாற்றினார். 


உடல் நலக்குறைவால் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு 2000ம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தென் சென்னை மாவட்ட செயற்குழுவிலும், மாவட்ட குழுவிலும் இருந்து செயல்பட்டார்.

தோழர் சின்னையா நீண்ட காலம் கட்சி மற்றும் வெகுஜன இயக்கப் பணிகளை திறம்பட நடத்தினார். 


தோழர் சௌந்தரராஜன் தனது பதிவில் குறிப்பிட்டிருப்பது போல் அவருக்கு தொடர்ந்து உடல் உபாதைகள் இருந்த போதும், இயக்கப் பணிகளில் தொய்வின்றி செயல்பட்டு வந்தார் 1978 ஆம் ஆண்டு முதல் அவரை நான் நன்கு அறிவேன். தொடர்ந்து அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். 


அவர் சிறந்த அரசியல் ஊழியர்,, விமர்சனக் கண்ணோட்டத்துடனும் வர்க்க பார்வையுடனும் அனைத்தையும் அணுகக் கூடியவர். தனக்கு நெருக்கமானவராக இருந்தாலும் கடுமையாக விமர்சனம் செய்வதை தவிர்க்காமல் கடைபிடித்தவர். 


வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக இருந்த பொழுது மயிலாப்பூர் ரோட்டரி நகரில் அலுவலகம் இருந்தது வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இரவு ஒரு மணி வரை நடைபெறும். அதன் பிறகு பஸ் இல்லாததால் அனைவரும் நடந்தே வீட்டுக்கு செல்வோம். தோழர் சின்னையா அகத்தியலிங்கம் நான் அம்பத்தூர் வேலாயுதம், போன்றவர்கள் நடந்து செல்வோம். ஒரு சிலர்  வட சென்னைக்கு செல்வார்கள். இரவு நடந்து வருவது என்றால் பேசிக் கொண்டு வரக்கூடிய செய்திகள் அனைத்தும் அரசியல் சார்ந்ததாக இருந்ததால் அது ஒரு நடை வகுப்பாகவே மாறிவிடும். 


சின்னையா ஸ்தாபனத்தை கராராக நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்ககூடியவர். அவர் கட்சியின் மாவட்ட குழுவில் ஆலோசனைகளை முன் வைக்கிற பொழுது ஒரு திட்டத்தின் நுனி முதல் அடி வரை தெளிவான முறையில் எழுத்து மூலமாக முன்வைத்து விடுவார். 


அந்த முன்மொழிவில் அரைவேக்காட்டுத்தனமோ, அதிகார தோரணையோ இல்லாமல் ஏற்றுக் கொள்ளக் கூடிய முறையில் முன்மொழிவுகளை செய்வார்.அவரிடமிருந்துதான் நான் உட்பட பலரும்  ஸ்துலமான முன்மொழிவுகளை வைப்பதற்கு கற்றுக் கொண்டோம். துண்டு பிரசுரங்களையும், அறிக்கைகளையும் நேர்த்தியான முறையில் ரத்தினச் சுருக்கமாக தயார் செய்வதில் கெட்டிக்காரர். 


மாவட்ட செயற்குழுவில் அரசியல் விவாதங்களை ஆழமான முறையில் நடத்துவார். கட்சியின் தோழர்களை வெறும் விமர்சனம் பண்ணுவது, குறை கண்டுபிடிப்பது போன்றவற்றை கடந்து அவர்களை தனிப்பட்ட முறையில் அழைத்து விஷயங்களை பேசக்கூடிய ஏராளமான சம்பவங்களை எடுத்துச் சொல்ல முடியும். கட்சியின் ஊழியர்களை இழக்காமல் அவர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். 


ஒன்றுபட்ட மாவட்ட செயற்குழுவில் நானும் அவருடன் இருந்தேன். தோழர் லதா முழுநேர ஊழியராக சிஐடியு அலுவலகத்தில் பணிபுரிந்தார். அத்துடன் உழைக்கும் பெண்கள் அமைப்பு, மாதர் சங்கம் போன்றவற்றிலும் பணியாற்றினார்.  கணவன் மனைவி இருவரும் முழுநேர ஊழியர்கள். எனக்கு முழு நேர ஊழியர் ஊதியம் அதிகமாகவும், லதாவிற்கு குறைவாகும் இருந்தது. லதா விற்கு மட்டுமல்ல பெண் முழு நேர ஊழியர்களாக இருந்தவர்களுக்கும் ஊதியம் குறைவாகவே இருந்தது. தோழர் சின்னையா இது எப்படி சரியாக இருக்கும் இரண்டு பேரும் முழு நேர ஊழியர்கள் தான் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதியா என்று அப்பொழுது செயலாளராக இருந்த வி எம் எஸ் இடம் கேள்வி எழுப்பி இருவருக்கும் சமமான ஊதியமாக மாற்றினார் அது இதர பெண் முழு நேர ஊழியர்களுக்கும் அமலாகியது.


தேர்தல் வேலைகளை செய்வதில் தோழர் சின்னையா கெட்டிக்காரர். 1984 ஆம் ஆண்டு விபிசி போட்டியிட்ட வில்லிவாக்கம் தேர்தல் உட்பட 1980 ஆம் ஆண்டு பெரம்பூரில் தோழர் முருகையன் போட்டியிட்ட தேர்தல், அதன்பிறகு நடைபெற்ற பல தேர்தலிலும் அவருடைய தேர்தல் தயாரிப்பு பணிகள் மிகவும் பிரபலமானதாகும். 


துவக்கம் முதல் வாக்கு எண்ணிக்கை வரை என்னென்ன செய்ய வேண்டும் என்பதை எப்படி செய்ய வேண்டும் என்பதை தெளிவான முறையில் எழுதி முடித்து விடுவார். கோவையில் நடைபெற்ற அரசியல் மாநாடு உட்பட பல தேர்தல் பணிகளுக்கு வெளி மாவட்டங்களுக்கு சென்று பணியாற்றி இருக்கிறார். 


சென்னையில் பல இடைக்கமூட்டிகளில் வரக்கூடிய அமைப்பு பிரச்சினைகளில் அகநிலைப் பார்வை இல்லாமல் அணுகக் கூடிய ஒரு செயலாளராக தோழர் சின்னையா செயல்பட்டார். அண்ணாநகர் பகுதியில் கட்சியில் அமைப்பு பிரச்சனைகள் தலைதூக்கிய பொழுது நான் அதன் கன்வீனராக இருந்து செயல்பட்டதுடன் தோழர் சின்னையா பொறுப்பாளராக இருந்து வழிகாட்டினார். 


அப்பொழுது அவர் அம்பத்தூரில் கள்ளிகுப்பத்தில் குடியிருந்தார் இரவு 11 மணி வரை அண்ணா நகரில் பணிபுரிந்து விட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும் அவரின் வழிகாட்டுதல் அந்தப் பகுதியில் கட்சியை ஒற்றுமைப்படுத்தி வளர்ப்பதில் எனக்கு உதவியாக இருந்தது. அப்போதைய தென் சென்னை மாவட்டத்தில் அண்ணாநகர் பகுதியில் பல பகுதிகளில் மக்கள் செல்வாக்கும் மக்களிடம் அறிமுகமான உள்ளூர் தலைவர்களும் இருந்தார்கள் இப்பொழுதும் இருக்கிறார்கள். ஒரு வலுவான செயல் ஒற்றுமையுடன் வளர்ச்சி அடைவதற்கு தோழர் சின்னையாவின் வழிகாட்டுதல் மிக முக்கியமானதாகும். 


சென்னை மாவட்டம் வடசென்னை தென்சென்னை என்று பிரிக்கப்பட்ட பொழுது வடசென்னை வலுவாக இருந்தது. தென் சென்னையில் அந்த அளவிற்கு இயக்கம் இல்லை. எனவே காலப்போக்கில் என்னவாகும் என்ற கேள்வி பலரிடம் எழுந்தது. ஆனால் சின்னையா அவர்களின் அரசியல் தெளிவு, தத்துவார்த்த புரிதல், ஸ்தாபன திறமை இவை மூன்றும் இணைந்து  தென்சென்னையிலும் வட சென்னைக்கு நிகரான கட்சியை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டினார்.


அவர் வீட்டில் இருந்த பொழுது கூட முகநூல் மூலமாக அவர் செய்திருக்கக் கூடிய பணி என்பது மிக முக்கியமானது ஒரு வர்க்க உணர்வுள்ள கம்யூனிஸ்ட், எந்தவிதமான பிழைப்புவாதம் இல்லாத கம்யூனிஸ்ட் தனது இறுதி மூச்சு வரை பணியாற்றக் கூடியவன் என்பதை முகநூல் பணிகள் மூலமாக நிரூபித்திருக்கிறார்.


நான் மாவட்ட செயலாளராக செயல்பட்ட பொழுது பெரும்பாலான நேரங்களில் அவரின் எல்லைக்கு உட்பட்டு சிறந்த வழிகாட்டுதலை செய்திருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. சிறந்த வாசிப்பு பழக்கமுடையவர். அவர் நோய்வாய் பட்டு இருக்கிறார் என்பதை அறிந்தவுடன் இந்த ஒரு மாதத்தில் அடிக்கடி வரை சந்தித்தேன். கடந்த ஒரு வாரம் எனது மைத்துனர் இதே நோயால் இறந்ததால் இந்தவாரம் மட்டும் சந்திக்க முடியவில்லை. அதற்குள் அவர்நிலை பேசமுடியாத அளவிற்கு சென்றுவிட்டது. 


நேற்றைய தினம் 12/04/25 நானும் லதாவும் அவரை சந்தித்து நீண்ட நேரம் அவருடன்  இருந்தோம். நான் தோழர் வி எம் எஸ் வீட்டிற்கு போகலாம் வாங்க என்று அழைத்த பொழுது வருகிறேன் என்று தலையாட்டினார். நான் வரட்டுமா என்று கேட்ட பொழுது படுத்திருந்தபடியே எனது காலரை பிடித்துக் கொண்டார். நான் கலங்கி விட்டேன். 


நான் சந்தித்த பொழுதும், தோழர் உமாபதியுடன் அவரை சந்தித்த பொழுதும்  பல்வேறு அரசியல் பிரச்சனைகளை பேசினோம். அவரின் நோய்க்குள் செல்வதை தவிர்த்தேன். அவரோ தன் மரணம் உறுதியாகிவிட்டது, அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை, அடுத்த சில வாரங்களில் வலி அதிகமாகும் பொழுது அதை குறைப்பதற்கான மருந்துகளை மட்டும் எனக்கு கிடைக்க செய்யுங்கள் என்று உமாபதி இடம் கேட்டுக்கொண்டார். 


அதன்படி அதற்கான சில மருந்துகளை நேற்றைய தினம் அரவிந்திடம் கொடுத்தார். எனவே அவர் மரணத்திற்கான காலம் தெரிந்தபிறகும் அதை எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் இருந்தார். நான் அவரை சந்தித்த பொழுதெல்லாம் கண்டிப்பாக இது பற்றி முகநூலில் எழுதக்கூடாது என்ற முடிவோடு தான் சந்தித்தேன். 


எது எப்படி இருந்தாலும் தோழர் சின்னையா இன்று நம்மிடம் இல்லை. ஆனால் அவரின் அமைப்பு பணிகள் ஆழமாக பதிந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் இருக்கிறார்கள். நான் அவரிடம் அடிக்கடி அரசியல் விஷயங்களையும்,தத்துவார்த்த விஷயங்களையும், ஸ்தாபன விஷயங்களையும் விவாதிக்க கூடிய ஒருவனாக இருந்தேன். தற்பொழுது விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தான் இப்படி இருக்கிறார்கள். தோழர் சின்னையா இப்போது இல்லாத பொழுது அந்த வெற்றிடம் எனக்கு ஏற்பட்டுள்ளது. 


சென்னை மாவட்டத்தின் குறிப்பாக தென் சென்னை மாவட்டத்தின் கட்சி அமைப்பாளர்களில் மிக அடித்தளமான முறையில் விளங்கிய சின்னையாவின் இழப்பு பேரிழப்பாகும். 


ஆழ்ந்த அஞ்சலியை உரிக்காக்குகிறேன்.


அ.பாக்கியம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

17 வெள்ளை மாளிகையின் கருப்பு அறிக்கையும் சீன அரசின் வெள்ளை அறிக்கையும்

  அமெரிக்காவில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த டொனால்ட் டிரம்ப் சீனாவுடன் சித்தாந்த மோதல் தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூற...