அ.பாக்கியம்
இந்தியாவில் அவ்வளவு பணம்
இருக்கும் பொழுது நாங்கள் ஏன் வாக்காளர் மேம்பாட்டுக்காக நிதி உதவி செய்ய வேண்டும்
என்று மோடியின் விஜயத்தின் போது டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கேள்விகளை
எழுப்பினார். டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அரசில்
அரசாங்க செயல்திறன் துறையின் செயலாளர், உலகப் பெரும்
பணக்காரர் எலன் மாஸ்க் இந்தியாவிற்கு ஒதுக்கீடு செய்த 21
மில்லியன் டாலர் நிதி உதவி ரத்து செய்வதாக அறிவித்தார்.
சர்வதேச மேம்பாட்டுக்கான
அமெரிக்க நிறுவனம் (United
States Agency for International Development – USAID) என்ற
அமைப்பின் மூலம் இந்தியாவில் வாக்காளர்களை மேம்படுத்துவதற்கான நிதி அளிப்பது என்ற
திட்டத்தின் அடிப்படையில் 21 மில்லியன் டாலர் வழங்குவது என
ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதைத்தான் ரத்துசெய்துள்ளார்கள். இதுவரை இந்த
யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID) மூலமாக ஒதுக்கி பல்வேறு வகையில் செய்த
தும் நடந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தார்கள்
என்பதை அத்துறையில் பொறுப்பாளர் எலன் மாஸ்க் குறிப்பிடவில்லை.
மேற்கண்ட அறிவிப்புகள் இந்திய
அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமல்ல பல கேள்விகளையும் எழுப்பி உள்ளது.
பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் அமித் மாலவியாவும், முன்னாள்
அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரனும் இந்த நிறுவனத்தின் மூலம் வந்த பணங்கள் இந்தியாவின்
தேர்தல் செயல்முறையை சீர்குலைப்பதற்கு அமெரிக்காவிற்கு வழி வகுத்தது என்று
கூறியுள்ளார்கள். இவர்களது கட்சி அமெரிக்க அடிமை என்பதை மறந்துவிட்டார் போலும்.
மேலும் 2012 ஆம் ஆண்டு தேர்தல் அரசியல் முறைகளை
வலுப்படுத்துவதற்காக சர்வதேச தேர்தல் அமைப்புகளுக்கான அறக்கட்டளைக்கும்
யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID) நிறுவனத்திற்கும் புரிந்துணர்வு
ஒப்பந்தம் ஏற்பட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டி உள்ளனர். அதாவது காங்கிரஸ்
காலத்தில் நடைபெற்றதாக திசை திருப்பும் வேலையை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்
குழுவின் உறுப்பினராக இருக்கக்கூடிய சஞ்சய் சன்யால் இந்தியாவின் வாக்காளர்
வாக்குப்பதிவை மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 21 மில்லியன்
அமெரிக்க டாலர்களை யார் வாங்கினார்கள் என்பதை கண்டுபிடிக்க விரும்புகிறேன் என்று
கூறியது மட்டுமல்ல யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID) மனித வரலாற்றில்
மிகப்பெரிய மோசடி என்றும் கூறியுள்ளார். குட்டு வெனிப்பட்டவுடன் மற்றவர்கள் மீது
பழியை சுமத்தி தப்பித்துக் கொள்வதில் பாஜகவிற்கு நிகர் பாஜக மட்டும் தான் உள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக
அரசின் பல துறைகள் தொடர்ந்து இந்த நிதி உதவியை பெற்று வந்திருக்கிறார்கள் என்பதை
பத்திரிகைகள் அம்பலப்படுத்தி வருகிறது. பிரதமரை தலைவராக கொண்ட நிதி ஆயோக்
அமைப்பின் அனுமதியுடன் சம்ரித (SAMRIDH)
(புதுமையான சுகாதார பராமரிப்பு வினியோகத்திற்கான சந்தை மற்றும்
வளங்களுக்கான நிலையான அணுகல்) என்று அமைப்பு யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID)-யுடன் ஒப்பந்தம் செய்து நிதியை பெற்றுள்ளது.
இந்தியாவில் இரண்டாம் நிலை
மற்றும் மூன்றாம் நிலையில் உள்ள நகர்ப்புறங்களிலும் பழங்குடி பகுதிகளில் குறைந்த
செலவில் சுகாதார பராமரிப்புகளை செய்வதற்காக பணம் பெறக்கூடிய ஒப்பந்தத்தை
செய்துள்ளார்கள். பணம் செலவழிக்கப்பட்டதா என்பதற்கு எந்த விபரமும் இல்லை.
நிதி ஆயோக்கின் தலைவர் அமிதாப்
காந்தி இந்த நிதியானது மறுவரை செய்யும் முறைகளை உள்ளடக்கியது என்று
கூறியுள்ளார்.அதாவது ஒன்றுக்கு வாங்கி மற்றபெயரில் பயன்படுத்தலாம் என்பதுதான் இதன்
அர்த்தம். மோடி தலைமையிலான அரசு இந்த அமைப்பிடமிருந்து தொடர்ந்து நிதி பெறுவதற்கான
ஒப்பந்தங்களை செய்து வந்துள்ளது நிதிகளையும் பெற்றுள்ளது.
2022 ஆம் ஆண்டு
மகாராஷ்டிராவின் இன்றைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது மாநிலத்தில் விவசாயம்,
நீர், கழிவு நீர் மேலாண்மை ஆகிய துறைகளின்
மேம்பாட்டுக்காக யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID) நிறுவனமும் இஸ்ரேல்
நிறுவனமும் கூட்டாக திட்டங்களை உருவாக்கிய கூட்டத்தில் கலந்து நிதிகளை பெற
அடித்தளமிட்டுள்ளார்.
இந்தியாவில் டிஜிட்டல்
இடைவெளியை குறைப்பதற்காக,
அதாவது அதிக மக்களுக்கு டிஜிட்டல் முறைகளை கொண்டு செல்வதற்காக
யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID) உடன் ரிலையன்ஸ் அறக்கட்டளை ஒப்பந்தம்
செய்து நிதியைப் பெற்று திட்டங்களை அமல்படுத்தியுள்ளது இந்தியாவில் 17 மாநிலங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள்
மற்றும் சிறுமிகள் இந்த திட்டங்களின் மூலம் பயனடைந்துள்ளார்கள் என்று 2022 ஆம் ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். அறிக்கை மட்டும்தான்
கூறுகிறது.
இதைவிட மிக மோசமான செய்தி
யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID)
தூதுவராக பாஜகவின் முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி ராணி 2011 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்துள்ளது அம்பலப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி
மாதம் 21 ஆம் தேதி வரை அதாவரு 20
நாட்களுக்கு முன்புவரை ஸ்மிருதிராணி இந்த நிறுவனத்தின் நிகழ்வுகளில் கலந்து
கொண்டுள்ளார் என்பதை அம்பலப்படுத்தி உள்ளனர்.
2025-ஆம்
ஆண்டுக்குள் இந்தியாவில் காச நோய் இல்லாத நிலைமையை உருவாக்க வேண்டும் என்று தனது
கனவை நிறைவேற்றுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி 2021 ஆம்
ஆண்டு ஒரு கூட்டத்தை கூட்டி அதில் உரை நிகழ்த்தி உள்ளார். இந்த திட்டத்திற்கான
கூட்டத்தில் பில் கேட்ஸின் பி.எம்.ஜி.எஃப் அறக்கட்டளை, யு.எஸ்.ஏ.ஐ.டி
(USAID) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து
கொண்டிருக்கிறார்கள். 2025ம் வந்துவிட்டது. வந்த காசநோயும்
போனபாடில்லை.
2023 ஆம் ஆண்டு
ஜூன் மாதம் இந்தியாவிற்கும் யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID)-க்கும்
இடையே புரிந்துணர் ஒப்பந்தம் தொடர்பான கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை
தாங்கி உள்ளார். இந்தக் கூட்டத்தைப் பற்றி அமைச்சரவையிலும் விளக்கி
இருக்கிறார்கள். இந்திய ரயில்வே துறையை 2030 ஆம்
ஆண்டுகளுக்குள் கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக மாற்றுவது என்ற திட்டத்திற்காக
யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID)-யுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிலையங்களில் சூரிய சக்தி கூரைகளை இந்திய
ரயில்வேயுடன் இணைந்து அமைப்பதற்கான செயலில் இந்த அமெரிக்க நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
கோவிட் காலத்தில்
இந்தியாவிற்கு உதவ அமெரிக்க அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த உதவிகள் மேற்கண்ட
நிறுவனத்தின் மூலமாகவே நடைபெற்றது. அப்போதும் இப்போதும் வெளியுறவுதுறை அமைச்சராக
இருக்கக்கூடிய எஸ்.ஜெயசங்கரின் மகன் துருவ் ஜெய்சங்கர் என்பவர் யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID)-யின்
அமைப்பிலிருந்து உதவிய பெற்றுள்ளார் என்ற தகவலும் அம்பலமாகி உள்ளது. மேற்கண்ட
அமெரிக்க நிறுவனம் இந்தியாவிற்கு 100 மில்லியன் அமெரிக்க
டாலர்களுக்கு மேல் உதவி செய்துள்ளது.
மோடி அரசாங்கம் தொடர்ந்து
மேற்கண்ட நிறுவனத்திடம் இருந்து பல்வேறு விதமான உதவிகளை செய்வது என்ற பெயரில்
பணத்தைப் பெற்றுள்ளார்கள் அது எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பதற்கான ஆவணங்கள்
எதுவும் இல்லை என்பது இப்போது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. எனவே வழக்கம்போல் காங்கிரஸ்
மீதும் மற்றவரின் மீதும் பழி சுமத்தும் ஆயுதத்தை பாஜகவினர் எடுத்துள்ளார்கள்.
காங்கிரஸ் இப்போது யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID)
நிதிபற்றி வெள்ளை அறிக்கை வேண்டும் என்று அறிவித்துள்ளது.
எழுதியவர் :
அ.பாக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக