Pages

வியாழன், பிப்ரவரி 20, 2025

7. சீனா∶ கிழக்குலகின் அறிவுக் களஞ்சியம்

 



ரலாற்றில் ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப கல்வி முறைகளும், கற்பித்தல் முறைகளும் மாறுபடுகின்றன. நாகரிகங்களின் தொட்டில் என்று அழைக்கப்படும் பல இடங்களில் நாகரிக தோற்றக் காலத்திலேயே கல்வி போதிக்கும் முறைகளும் தோன்றத் துவங்கிவிட்டன. காலப்போக்கில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு ஏற்ப கல்வியின் வளர்ச்சியும் பல மாற்றங்களை பெற்று வளர்ந்து வந்தது. இந்தியாவில் அதிகாரத்தில் இருந்த வர்க்கத்தினரால் பிறப்பின் அடிப்படையில் கல்வி முறை புகுத்தப்பட்டது. வேதங்கள் புனிதமானது, அனைவரும் படிக்க கூடாது என்று கல்வியை கட்டுப்படுத்தினர். உபநிடதங்கள் தோன்றிய காலத்தில் அவை பிரம்ம ஞானம் என்ற பெயரால் மேலும் புனிதப்படுத்தப்பட்டு சுருக்கப்பட்டது. குலக் கல்வி முறை பிரதான வடிவமாக கடைபிடிக்கப்பட்டது. பண்டைய சீனாவிலும், மத்திய கால சீனாவிலும் கல்விமுறை பிறப்பின் அடிப்படை மற்றும் குலக்கல்வி வடிவம் ஆகியவற்றை கடந்து நிலப்பிரபுத்துவ வர்க்க சமுதாயத்திற்கு ஏற்ற முறையில் கல்வி முறைகள் உருவானது.

"பள்ளி" பற்றிய முதல் குறிப்பு

நிலப்பிரபுத்துவ சமூகம் சீனாவில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. அரசு கல்வி நிறுவனங்களும், தனிநபர்கள் நடத்தக்கூடிய கல்வி நிறுவனங்களும் செயல்பட்டதற்கான தரவுகள் கிடைத்துள்ளது. சியா வம்சத்தின் காலத்திலிருந்து (பொதுக்காலத்திற்கு முன்பு-கிமு2070-1600), பண்டைய மன்னர்களும் பேரரசர்களும் தங்கள் ராஜ்யங்களை நிர்வகிப்பதிற்கு அவர்களுக்கு உதவ நன்குபடித்த அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பது பாரம்பரியமாக இருந்தது. சீனாவில் "பள்ளி" பற்றிய முதல் எழுத்துப்பூர்வ குறிப்பு, ஷாங் வம்சத்தின் (பொதுக்காலத்திற்கு முன்பு-கிமு சுமார் 1800-1050) ஆரக்கிள் எலும்புகளில் எழுதப்பட்டதிலிருந்து அறியமுடிகிறது. இது சீனாவில் முதலில் எழுதப்பட்ட முக்கிய வரலாற்றுப் பதிவாகும். ஆரக்கிள் எலும்புகளில் பள்ளிகளின் செயல்பாடு அல்லது நோக்கம் பற்றிய சிறிய தகவல்களும் உள்ளன.

சோவ் வம்ச (பொதுக்காலத்திற்கு முன்பு-கிமு1046-221)  ஆட்சியின் போது உற்பத்தி சக்திகளின் விரிவாக்கம் மற்றும் கலாச்சாரத்தின் சிறப்புடன் பல பள்ளிகள் நிறுவப்பட்டன. மேற்கு பகுதியை ஆட்சி செய்த சோவ்  வம்சத்தினர் காலத்தில் நிலப்பிரபுத்துவ பண்ணைஅடிமை முறைகள் பரவலாக இருந்தது. இதன் பின்னணியில் அரசு பள்ளிகள், கிராமப் பள்ளிகள் என பள்ளி முறைகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. அரசுப் பள்ளிகள் நிலப்பிரபுக்களின் குழந்தைகளுக்காகவே நிறுவப்பட்டன. உள்ளூர் பள்ளிகள் நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டு இருந்தன. ஷு, சியாங், சூ மற்றும் சியாவோ என்று வகைப்படுத்தப்பட்டு இருந்தது. பொதுவாக, ஷூவில் நன்றாகப் படித்த மாணவர்கள் அடுத்த நிலைக்குச் சென்று மேல்நோக்கிச் செல்லலாம். உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால், அவர்கள் மேலும் படிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

ஆட்சிப் பணி தேர்வு

சீன வரலாற்றில் அறிவுசார் மரபுகளில் அடிப்படைகளில் மிக முக்கியமானது பேரரசர் காலத்தில் உருவாக்கப்பட்ட தேர்வு முறைகள் ஆகும். இதில் மிகப் பிரசித்தி பெற்ற தேர்வு முறை ஆட்சிப் பணி தேர்வு முறையாகும். இந்த தேர்வு முறைகள் பிரதேச அடிப்படையில், வட்ட அடிப்படையில் நடத்தப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் நிர்வாகங்களை மேற்கொள்வதற்கும், அரண்மனைக்கு தேவைப்பட்ட அதிகாரிகளை தேர்வு செய்வதற்கும் தற்கால தேர்வு முறைகளைப் போன்று சிவில் சர்வீஸ் தேர்வு முறை நடத்தப்பட்டது என்றால் நாம் வியப்பதை தவிர வேறு வழியில்லை. இந்தத் தேர்வின் மூலம் உருவாக்கப்பட்டது தான் மிகப்பெரிய அதிகார வர்க்கம். அரசர்கள், இளவரசர்கள், இளவரசிகள் போன்றவற்றைத் தவிர மற்ற அனைத்து பதவிகளும் தேர்வின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது.

சீனாவில் வாரிசு அடிப்படையில் அதிகார வர்க்க பதவிகள் அளிக்கப்படுவதில்லை. எந்த ஒரு சீனனும் உயர்கல்வி பெற்று தேர்வு எழுதி பேரரசரின் அமைச்சர் நிலை வரை பதவி உயர்வு பெறுவதற்கு எந்த தடையும் இல்லாமல் இருந்தது. இந்தத் தேர்வு முறைகள் வருவதற்கு முன்பு, உலகின் பல இடங்களில் இருந்தது போலவே வாரிசுகள் பதவிகளை வகித்தனர். தேர்வு முறை வந்த பிறகு அனைத்தும் தலைகீழாக மாற்றப்பட்டது. மங்கோலியர் ஆட்சி காலத்திலும் ஒரு சில மன்னர்களின் ஆட்சி காலத்தை தவிர ஏனைய காலங்கள் முழுவதும் சுமார் 1300 ஆண்டுகள் இந்த தேர்வு முறைகள் கடைபிடிக்கப்பட்டது.

நேர்த்தியான தேர்வு முறைகள்

இந்தத் தேர்வு முறையில் ஒரு மாணவர் முதலில் வட்டார அளவிலிருக்கக் கூடிய ஆட்சிக்கான தேர்வு எழுத வேண்டும். அதில் வெற்றி பெற்றவர் உள்ளூர் வட்டார நிர்வாக பொறுப்பில் சேரலாம். அவர் அடுத்த கட்டமாக, மாவட்ட நிர்வாக பொறுப்புக்களை பெற விரும்பினால் அதற்கான தேர்வு முறைகளை எழுதி வெற்றி பெற்று சேரலாம். இதற்கு அடுத்து மாகாண அளவில் பொறுப்புக்களை பெற வேண்டும் என்றால் அதற்கான முறையில் தொடர்ந்து தேர்வு எழுதி அந்த பதவிகளை பெறலாம். மிகவும் கடினமாக உழைக்க வேண்டிய தேர்வு முறைகளாக இந்த முறைகள் இருந்தது.

இதேபோன்று நகர நிர்வாக பொறுப்பை பெறுவதற்கு தேர்வு முறைகள் நடந்தது. உச்சகட்டமாக அரண்மனையில் அமைச்சர் அந்தஸ்து வரை உயர்வதற்கு கடினமாக உழைக்கக்கூடிய தேர்வு முறைகள் இருந்தது. இதுதான் தேர்வு எழுதும் மாணவர்களின் இறுதி இலக்காக இருந்தது. அந்த அளவிற்கு படிப்படியான தேர்வு முறைகள் தற்காலத்தில் இருப்பது போல் இருந்திருக்கிறது. பேரரசு காலத்தில் நிர்வாக பதவி என்பது அதிகாரிகள், அரசியல்வாதிகள், காவல்துறையினர், நீதிபதிகள், சமூக தலைவர் என்ற எல்லா பொறுப்புக்களையும் ஒருசேர நிர்வகிக்கும் மிகப்பெரிய பதவியாகும். வெற்றி பெற்று பொறுப்பேற்றவர்கள் சகல அதிகாரங்களின் மையமாக விளங்கினார்கள் என்றால் மிகையாகாது.

பண்டைய சீனாவில் கல்விக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் இருந்தது. எல்லா தரப்பு மக்களுக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு இருந்தது. தேர்வு எழுதக்கூடியவர்கள் பெட்டிப்  படுக்கையுடன் நகரங்களுக்கு சென்று தங்கி படித்து ஒரு நாள் முதல் மூன்று நாட்கள் வரை தேர்வு எழுதவேண்டும். தேர்வு மையங்கள் இதற்கென்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. விடைத்தாள்களை திருத்தும்பணி மிகமிக கட்டுப்பாட்டுடன் கடைபிடிக்கப்பட்டது. அப்பொழுது மாணவர்களின் பெயர்களுக்கு மாற்றாக ரகசிய எண்களை கொடுத்து அதன் மூலமாக விடைத்தாள்களை திருத்தக்கூடிய முறைகளை கடை பிடித்திருக்கிறார்கள். மாணவர்களின் கையெழுத்தை வைத்து எந்த மாணவன் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மாணவனின் விடைத்தாளை நகல்  எடுத்து அந்த நகலை மட்டும் மதிப்பீட்டுக்கு அனுப்புவார்கள்.

 ஒட்டுமொத்த தேர்விலும் 5 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே வெற்றி பெறுவார்கள். மிக்கடினமான தேர்வுமுறைகள் என்பதால் தோல்வியடைந்தவர்கள் ஏற்கனவே இருக்கக்கூடிய உள்ளூர் பதவிகளில் நீடிக்கலாம். மற்றவர்கள் ஏதாவது ஒரு உள்ளூர் அதிகாரியாக பணி செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். அனைத்து ஆண்களும் தேர்வு முறைகளில் பங்கு பெறலாம். சில பேரரசர்கள் காலத்தில் குறிப்பாக  யுத்தங்களின் ஆட்சி காலம் என்று வரையறுக்கப்பட்ட காலங்களில் பெண்களும் இந்த தேர்வை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு எழுதுவதற்கு நகரங்களை நோக்கி வரவேண்டும் என்ற நிலையும் அதற்கான செலவுகள் மிக அதிகம் என்பதாலும் சாமானிய மக்கள் இந்த தேர்வு முறைகளில் கலந்து கொள்வது கடினமானதாக இருந்தது. இருந்தாலும் மிகவும் பின்தங்கிய பாமர பின்னணி கொண்ட குடும்பத்தவர்களிலிருந்து பலர் தேர்வில் தேர்ச்சி பெற்று உயர் பதவியை பெற்றிருக்கிறார்கள் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. பல நேரங்களில் வணிகப் பின்னணியை கொண்டவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதில்லை. காரணம் அவர்கள் பதவியை தவறாக பயன்படுத்துவார்கள் என்ற அச்சம் இருந்தது.

சராசரியான சூழலில் தேர்வு செய்யப்பட்டவர்களில் சுமார் 83 சதவீத நிர்வாகிகள், பொருளாதார அடிப்படையில்  கீழ்த்தட்டு பின்னணியை சார்ந்தவர்களாக இருந்தார்கள் என்றும், பிற இடங்களை வசதிபடைத்தவர்கள் பெற்றிருந்தார்கள் என்பதையும் ஆய்வுஅறிக்கை யிலிருந்து அறிய முடிகிறது. வர்க்க நிலைபாடுகளை மிகத் துல்லியமாக இது வெளிப்படுத்துகிறது. பொதுக்காலம் (கிபி) 1015  முதல் 1874 வரை சுமார் 800 ஆண்டுகள்  ஜியாங்சியில் உள்ள லியுகாங் என்ற கிராமத்திலிருந்து 300க்கும் மேற்பட்டவர்கள் பேரரசின் உயர்பதவிகளை பெற்றிருக்கிறார்கள். அவர்களின் சிலர் அமைச்சர்களாகவும் ஒருவர் பிரதம அமைச்சராகவே  பதவி வகித்தார் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

கன்பூசிய பாடத்திட்டங்கள்

பேரரசு காலத்தில் சீனக் கல்வியின் பாடத்திட்டம் என்பது கன்பியூசியசின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது. ஐந்து கிளாசிக்கல் புத்தகங்கள் மற்றும் நான்கு புத்தகங்கள் ஆகியவற்றை படிப்பதன் மூலம் ஒழுக்கம், சமூக நடத்தை போன்றவற்றை இந்தத் திட்டம் போதிக்கிறது. ஐந்து புத்தகங்கள் என்பது பாடல்களின் புத்தகம், ஆவணங்களின் புத்தகம், சடங்குகளின் புத்தகம், மாற்றங்களின் புத்தகம், வசந்தம் மற்றும் இலையுதிர்கால ஆண்டுகள், ஆகியவற்றைப் பற்றிய புத்தகங்களை படிக்க வேண்டும்.

நான்கு புத்தகங்கள் என்பது கன்பூசியசின் புத்தகங்கள், கோட்பாடுகள், கற்றல் முறைகள், மென்சியஸ் என்ற ஞானியின் கோட்பாடுகள் ஆகியவற்றை படிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக கன்பியூசியசின் மதிப்பீடுகள் பரோவுபகாரம், நீதி, உரிமை, ஞானம், நம்பகத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டுதான் கல்வி பாடத்திட்டம் அமைந்திருந்தது. வடக்கு மற்றும் தெற்கு வம்சங்களின் வரலாற்று அகாடமி (420-589), டாங் வம்சத்தின் கைரேகை அகாடமி (618-907) சாங் வம்சத்தின் சட்ட அகாடமி (960-1279) மற்றும் மிங் வம்சத்தின் பெயிண்டிங் அகாடமி (1368-1644) போன்ற ஆளும் வர்க்கங்களுக்கு சிறப்புத் திறமைகளைப் பயிற்றுவிப்பதற்காக அரசாங்கத்தால் பல தொழில்முறை கல்விக்கூடங்கள் உருவாக்கப்பட்டன.

பொதுவாக கன்பியூசியஸ் மரபுகள்  அரசின் சித்தாந்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஹான் அரச வம்ச காலத்தில் கன்பியூசியஸ் கோட்பாட்டை  அரசின் அதிகாரபூர்வ மதமாகவே மாற்றினார்கள். மன உறுதியுடன் உழைப்பவர்கள் மற்றவர்களை ஆளுகிறார்கள்; தங்கள் பலத்தால் உழைப்பவர்கள் மற்றவர்களால் ஆளப்படுகி றார்கள் என்று மென்சியின் அறிவுரையை பின்பற்றி கல்வி மீதான பாரம்பரிய அணுகுமுறையை சீனப்பேரரசர்கள் மேற்கொண்டார்கள்.

ஐரோப்பாவில் வாரிசுமுறை சீனாவில் தகுதி முறைகள்

பேரரசர்கள் காலத்தில், தொழில்முறை அதிகார வர்க்கத்தின் தேவைக்காகத்தான் மையப்படுத்தப்பட்ட தேர்வு முறைகள் சேவை செய்தது. இந்தக் கல்வி முறைகள்  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது அதிக முக்கியத்துவம் கொடுப்பதைவிட அறநெறியை வளர்ப்பதாக அமைந்தது. மிக முக்கிய குறிக்கோளாக அமைய வேண்டிய தேசிய வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு திறமைகளை உருவாக்குவதற்கு பதிலாக பேரரசர்களின் ஆட்சி அதிகாரத்திற்கு தேவைப்பட்ட பல நிலையிலான அதிகாரிகளை உருவாக்குவதற்கான கல்வி முறையாக இது இருந்தது.

உயர் வர்க்கத்தில் இருந்தவர்கள் அரசாங்கப் பதவியை அடைவதற்கு இந்த கல்வியை ஒரு கருவியாக பயன்படுத்தினார்கள். எனினும் ஒட்டுமொத்தமாக உலக வரலாற்றில் தேர்வு முறைகள் சீனாவின் மத்திய காலத்தில் உச்சகட்டத்தில் இருந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்றுபட்ட சீனாவாக தொடர்ந்து நீடிப்பதற்கு இந்த தேர்வு முறையும், இதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரும் அதிகார வர்க்கமும் முக்கிய  காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

சீனாவிற்கு கல்வி பயில்வதற்காக வருகை தந்த பல அறிஞர்களை எப்போதும் வியப்படைய செய்தது பண்டைய அதிகார வர்க்க தேர்வு முறையாகும். 15ஆம் நூற்றாண்டுகளுக்கு பிறகு சீனாவுக்கு வருகை புரிந்த கிறிஸ்தவ பிரச்சாரகர்கள் இந்த தேர்வு முறையை கண்டு பிரமித்துபோய் இருக்கிறார்கள். வேறு எங்கும் அவர்கள் அறிந்தவரை நடைமுறையில் இல்லாத மிகப்பெரிய தேர்வு முறையாக சீனாவில் இருப்பதை கண்டனர். கிறிஸ்துவ பாதிரிமார்கள் மூலமாக பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் பிறகு அமெரிக்காவிற்கும் இந்த தேர்வுமுறைகள் அறிமுகமாகி இப்போது உலகெங்கும் உள்ள ஜனநாயக நாடுகளில் கூட இந்த தேர்வு முறைகள் நிலவி வருவதை நாம் பார்க்க முடிகிறது.

மத்திய காலத்தில் ஐரோப்பாவில் நிலவிவந்த வாரிசு அடிப்படையிலான பிரபுத்துவ அதிகார வர்க்க முறைகளை காட்டிலும், சீனாவில் உருவாக்கப்பட்ட தகுதி அடிப்படையிலான தேர்வு முறைகள் முற்போக்கானதாக இருந்தது. மிக முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு அம்சம் 1584ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு அரசியல் சாராத நிர்வாக முறைகளை உருவாக்குவதற்கு நார்த் கோர்ட்-ட்ராவல்யான் என்ற கமிஷனை அமைத்தது. அவர்கள் கொடுத்த அறிக்கையில் சீனாவின் பாரம்பரிய தேர்வு முறைகள் செல்வாக்கு செலுத்தியது. இந்த அடிப்படையில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளில் இந்தியாவில்தான் முதல் முதலில் சிவில் சர்வீஸ் தேர்வு முறைகள் அமலாக்கப்பட்டு அதன் பிறகு பிரிட்டனுக்கும் சென்றது.

சீன தேர்வு முறைகளில் பல சிறப்புகள் இருந்தாலும் கன்பூசியஸ் கோட்பாடுகளின் போதாமை காரணமாகவும், கன்பூசியஸ் கோட்பாடுகளால் உருவாக்கப்பட்ட அதிகார வர்க்கத்தினரின் பிற்போக்குத்தனத்தாலும், அவர்களின் கொடூர நடவடிக்கைகளாலும், குயின் வம்சம் கலகலத்துப் போனது. 1905 ஆம் ஆண்டு தேர்வு முறை கைவிடப்பட்டது. புதிய கல்வி முறைகளுக்கான விவாதங்களும், நடைமுறைகளும் துவங்க ஆரம்பித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

16 தேசபக்த மதங்களும் தேச விரோத செயல்களும்

  மத அமைப்புகளின் நம்பிக்கைகள் தேச எல்லைகளைக் கடந்து இருந்தாலும் ஒவ்வொரு தேசத்தின் எல்லைக்குள் தான் செயல்முறைகள் அமைந்திருக்கும். எனவே மதத...