சீனாவில் மன்னர்களின்
மகுடங்கள் வீழ்வதும், புதிய மன்னர்களின் சிரம் கிரீடங்களை ஏற்பதும் தொடர்கதையாக இருந்தது.
உள்நாட்டு போர்களாலும், கலகங்களாலும் அரசுகள்
சிதறிப் போனாலும் மீண்டும் ஒன்று கூடி பேரரசாக உருவானது. சீன தேசத்தில் நிரந்தர உடைப்பு
ஏற்படவே இல்லை. கோடிக்கணக்கில் மக்கள் தொகையும், பல்வேறு
இனக் குழுக்களும், எல்லை ஓரங்களில் இருந்து நாடோடிக்
கூட்டங்கள் கலகம் செய்து தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டு இருந்தாலும், அவை எதுவும், ஒரே குடையின் கீழ் ஆட்சி நடைபெறுவதை நிரந்தரமாக வீழ்த்த
முடியவில்லை.
எண்ணூறு ஆண்டுகள் ஆட்சி செய்த
பேரரசும், இரண்டு ஆண்டுகளில் வீழ்ந்து போன பேரரசும் சீன வரலாற்றில் உண்டு. பல காலங்கள் சீன தேசம் மூன்று ராஜியங்களாக ஆளப்பட்டுள்ளது. ஐந்து ராஜியங்களை பத்து வம்சத்தை சேர்ந்தவர்களும் ஆட்சி செய்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட பகுதிகளில்
பதினாறுக்கும் மேற்பட்ட சிற்றரசுகள் செயல்பட்டும் இருக்கின்றன.
இரண்டரை நூற்றாண்டுகளுக்கு மேலாக கொந்தளிப்புகளும், கிளர்ச்சிகளுமாக சீனா பயணப்பட்ட பிறகுதான் ஹான்
அரச வம்சம் ஆட்சியைக் கைப்பற்றி பேரரசாக உருவானது. இந்தப் பேரரசு
உருவாவதற்கு முன்பும் (பொதுக்காலத்திற்கு முன்பு 206-
கி.மு.) பேரரசு வீழ்ச்சி அடைந்த (பொது காலமான 221-கி.பி.) பிறகும் சீனாவில் சில
நூற்றாண்டு வரலாறைப் பார்த்தால், மோதல்களால் இரத்தக்களறியாகவே
காட்சியளித்திருக்கிறது.
இந்த மோதல்களைப் பற்றி
பிற்காலத்தில் மாசேதுங் (மாவோ) குறிப்பிடுகிற பொழுது, ‘‘5.5 கோடியாக
இருந்த மக்கள் தொகை ஒரு கோடி அளவிற்கு குறைந்தது மட்டுமல்ல... வரலாற்றில்
மிகப்பெரிய இழப்புகளை சந்தித்த ஒரு காலமாக இக்காலம் இருந்தது’’ என்று கூறியுள்ளார்.
சீன வரலாற்றில் மட்டுமல்ல... உலக வரலாற்றில் கூட அதுவரை ஏற்பட்ட பேரிழப்பு என்பது
சீனாவில் ஏற்பட்ட பேரிழப்புதான் என்பதை மாசேதுங்கின் பதிவு
மூலம் அறிய முடிகிறது. ஆனாலும் மீண்டும் சீனாவை ஒன்றுபடுத்தி ஜின் வம்சம் பேரரசாக உருவானது.
அதன் பிறகு பொதுக்காலம் (கிபி) 618 முதல் 907 வரை ஆட்சி செய்த டாங்
வம்சம் சீனாவை கலாச்சாரம்,
கலை, இலக்கியம் போன்ற துறைகளில் மிகப்பெரும்
அளவு மேம்படுத்தியது. இவர்களின் ஆட்சி காலத்தில் பௌத்த நெறி சாதாரண மக்களின்
பிரதான வாழ்க்கை நெறியாக அல்லது மதமாக மாறியது. பேரழிவுக்குப் பிறகு மீண்டும்
பேரரசாக எழுந்து நின்ற வரலாறு உலகில் சீனாவுக்கு உள்ளது. இந்த நீண்ட வரலாற்றில்
சீனா ஒன்றுபட்டு இருத்தலுக்கான பொது அம்சம் என்ன என்ற கேள்வி தொடர்ந்து கொண்டுதான்
இருக்கிறது.
இப்படி சீனா ஒன்றுபட்டிருந்த
போது, உலகின் மறுபுறத்தில் வேறு விதமான நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருந்தன. கால
ஓட்டத்தில், ஐரோப்பிய துணைக்கண்டம் பல நாடுகளாக பிரிந்து போனது. அப்படி
பிரிந்த ஐரோப்பிய நாடுகளுக்கிடையே தொடர்ந்து போர்கள்
நடைபெற்று அடிக்கடி எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டு கொண்டே இருந்தன. போர் என்பது அன்றாட
வாழ்வின் அங்கமாக மாறிவிட்டிருந்தது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் சுமார் 30 ஆண்டுகள் நடைபெற்ற
போர்களில் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்களை பலியாயினர். இப்படி சண்டைப்போட்டு
செத்துக் கொண்டிருந்தால் சரியாக இருக்காது என்பதால், இதற்கு நிரந்தர தீர்வு காண
வேண்டுமென்று அன்று இருந்த அரசுகள்
ஜெர்மனியில் உள்ள வெஸ்ட் பாலியா என்ற இடத்தில் ஒன்று கூடி அமைதிக்கான வெஸ்ட் பாலியா ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்கள். எந்த நாட்டின்
இறையாண்மையிலும் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது, ஆக்கிரமிக்க
கூடாது என்பது இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை அம்சமாகும்.
ஐரோப்பாவில் 80க்கும் மேற்பட்ட
இனக்குழு வேறுபாடுகள் இருந்தாலும் பரப்பளவில் மிக
மிகச் சிறிய பிரதேசங்களாக இருப்பவை அவை. அதனால், எந்த வகையிலும் ஒன்றுபட்ட ஒரு
ஐரோப்பாவாக உருவாக்க முடியாத நிலை இருந்தது. அதே நேரத்தில் சீனாவில் அதன்
தனித்தன்மை காரணமாக எத்தனை பேரழிவுகள் நிகழ்ந்தாலும் ஒன்றுபட்ட சீனாவாக அது
உருவாகி எழுந்தது என்பதை அமெரிக்க ராஜ தந்திரியான ஹென்றி கிஷிங்கர் தனது நூலில் வியந்து எழுதியிருக்கிறார். அவர் மட்டுமல்ல பலரும் இதே
விஷயத்தை ஒப்பிட்டு வியப்படைந்து இருக்கிறார்கள். மேலும், ஒரே தேசிய இனமாக
இருக்கிற அரேபிய தேசிய இனங்கள் பல நாடுகளாக பிரிந்து போனது போல் சீனா பிரியவில்லை
என்பதையும் மற்றொரு உதாரணமாக வரலாற்றாசிரியர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.
சீனாவில் பிரிந்து போவதற்கான
கூறுகள் இல்லாமல் இல்லை. ஒரே மொழி, ஒரே தேசிய இனம் என்பது மட்டும் பிரிந்து
போகாமல் இருப்பதற்கு காரணியாக இருக்க முடியாது. வரலாற்றில் ஒரு மொழி பேசக்கூடிய பல நாடுகளும் ஒரு இனத்தை கொண்டிருக்கக்
கூடிய பல நாடுகளும் உள்ளன. சீனாவிலும் இந்த வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.
முதலாவதாக, வடக்குபகுதி
சீனாவிற்கும், தெற்குபகுதி சீனாவிற்கும் இடையிலான வேற்றுமை
என்பது நீண்ட காலமாக இருக்கக்கூடியது. அரசியல் அதிகாரத்தின் மையமாக வடக்கு பகுதி
சீனா திகழ்ந்தது என்றால், தென்பகுதி சீனா வர்த்தக
செயல்பாட்டின் மையமாக விளங்கியது. இது நீண்ட காலமாக இருக்கக்கூடிய குறிப்பிட்டுச்
சொல்ல வேண்டிய தீவிர வேறுபாடு ஆகும்.
இரண்டாவதாக தேசிய இனம் என்ற
அடிப்படையில் சீனாவில் ஹான்
தேசிய இனம் மிகப்பெரியது என்பதை அறிவோம்.
வடபகுதி முழுவதும் இந்த தேசிய இனம் இருக்கிறது. தென்பகுதி சீனாவில்
வூ, ஹக்கா, யூ, வே,
மின் என்று பல கிளை மொழிகளை பேசக்கூடிய தேசிய இனங்களும், வேறு பல தேசிய இனக்குழுக்களும் அதிகம் வாழ்கிறார்கள். இந்த வேற்றுமையும்
வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறது.
மூன்றாவதாக, வடபகுதியில்
கோதுமை பிரதான உணவாகும். தென்
பகுதியில் அரிசி பிரதான உணவாகவும் இருக்கிறது. உடல்
தோற்றங்களில் கூட சில மாறுபாடுகள் இருக்கிறது என்பதை மானுடவியலாளர்கள் பதிவு
செய்திருக்கிறார்கள். இந்த வேற்றுமைகளுடன் தான் சீனம் ஒற்றை அரசியல் குடையின் கீழ்
இருக்கிறது. இதற்கு காரணம் ஆட்சி முறைகள், மொழியின் தன்மை, புவியியல் அமைப்பு என பல காரணங்கள் இருக்கின்றன.
சீனாவின் ஆட்சி அதிகார நிர்வாக
முறை இந்த ஒற்றுமைக்கு ஒரு அடிப்படை காரணமாக அமைந்தது. பேரரசுகள் ஆட்சி செய்கிற
காலத்தில் அதிகாரங்கள் மாநில, மாவட்ட, வட்டம் என்ற அளவில் சிறு சிறு
பிரதேசங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. மற்ற நாடுகளை விட இந்த அதிகார பகிர்வு
சீனாவில் தொடர்ந்து இருந்தது மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தியது. பேரரசர் என்ற
முறையில் முழு நாட்டையும் தன் வசம் கொண்டிருந்தாலும் அதிகாரத்தின் அனைத்து பிரிவுகளையும் தன்னைச்சுற்றி
அமைத்துக் கொள்ளவில்லை. மாகாண, மாவட்ட, வட்ட என்ற வகையில் பிரிக்கப்பட்டு இருந்த
அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள்
உள்ளூர் ராஜாக்களை போன்று செயல்பட்டார்கள். அதே நேரத்தில்
பேரரசுக்கு கட்டுப்பட்டவர்களாகவும், கடமைப்பட்டவர்களாகவும்
இருந்தார்கள். சாதாரண மக்கள் பேரரசரை தெய்வத்துக்கு சமமாக பாவித்தனர். அவரை
தெய்வீக சக்தியாக கருதி காண முடியாத இடத்தில் எளிய மக்கள் வைத்திருந்தனர். உள்ளூர்
அதிகாரிகளுக்கும் பேரரசுக்கும் வளமான உறவுகள் கட்டமைக்கப்பட்டிருந்தது.
யுத்தம், பொது
கட்டமைப்புகள், ராணுவம், அதிகாரிகள்
நியமனம், வருவாய், நீதி பரிபாலனம், ஒட்டுமொத்த கண்காணிப்பகம் போன்ற நிர்வாகத்தை பேரரசுகள் தங்கள் வசம் வைத்துக்
கொண்டன. அது மட்டுமல்ல, பாதுகாப்பு மிக முக்கியமானது
என்பதால் ராணுவம், பெரும் சுவர்கள் கட்டல் ஆகியவற்றை பேரரசு
தன் வசம் வைத்துக் கொண்டது. மேலும், நீர்வழி கால்வாய்களை அமைப்பது,
பாசன வசதிகளை பெருக்குவது போன்ற திட்டங்களையும் பேரரசு
கவனித்துக் கொண்டது. உள்ளூர் அளவிலான சட்டம், நீதி, நிர்வாகம், கல்வி, உள்ளூர்
குடிப்படைகளை பராமரிப்பது போன்றவற்றை உள்ளூர் அதிகாரிகள் கையாண்டனர். உள்ளூர்
அதிகாரிகள் ஒரு ஏஜெண்டுகள் போல் செயல்படவில்லை. மாறாக
அதிகாரம் படைத்தவர்களாகவே செயல்பட்டார்கள். இந்த அதிகார
பகிர்வு ஒன்றுபட்ட பேரரசை பேணுவதற்கு பெரும் உதவியாக அமைந்தது.
சீனாவில் நீண்ட காலம்
பேரரசுகளின் ஆட்சி நடைபெற்றதால் நிரந்தரமாக நிர்வாக வர்க்கத்தினர்
உருவானார்கள். பேரரசுகள் இந்த நிர்வாக வர்க்கத்தினருக்கு
உரிய அனைத்து உரிமைகளையும் கொடுத்து, அவர்களின் பசிக்கு தீனி
போட்டு, பேரரசின் ஒற்றுமையை பாதுகாக்கும் பணியை செய்தார்கள். இவர்களின்றி ஒன்றுபட்ட பேரரசை பாதுகாக்க முடியாது என்ற நிலைமை இருந்தது.
சீனாவின் ஆட்சி முறை என்பது ஒன்றுபட்ட சீனாவை நிலை நிறுத்துவதற்கு முக்கிய காரணமாக
அமைந்தது.
மஞ்சள் நதிப்படுகையில் உருவான
காலத்திலிருந்து சீன நாகரிகத்திற்கு இடைவெளியற்ற ஒரு தொடர்ச்சி இருப்பதை அனைவரும்
ஒப்புக் கொள்கின்றனர். இந்தத் தொடர்ச்சியின் முக்கிய ஆதாரமாக சீன மொழியின் எழுத்து
வடிவம் முன்வைக்கப்படுகிறது. 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்த சாங் இன அரச வம்சத்தினர் எழுத்து
வடிவத்தை கண்டு பிடித்தனர். எழுத்து வடிவம் பண்டைய சாங் வம்ச காலத்தையும் தற்போதைய
காலத்தையும் இணைத்து நிற்கிறது. இவர்கள் எலும்புகளில் எழுத்துக்களையும், படங்களையும் பொறித்தனர். சாங் ஆட்சி கால எழுத்துக்களுக்கு "ஆரக்கில்
எலும்பு ஸ்கிரிப்ட்" (Oracle
bone script) என்று
அழைக்கப்படுகிறது. எகிப்தின் ஹைரோகிலிபிக்ஸ் (Hieroglyphics) போன்ற பண்டைய
எழுத்துருக்கள் இன்று பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டன. சிந்துவெளி நாகரிக
எழுத்தை இன்று நம்மால் படிக்க முடியவில்லை. ஆனால் டிராகன்
எலும்புகளின் உள்ள எழுத்துக்களை இன்றைய சீனர்களும் படித்து விட முடிகிறது. எனவே
காலத்தையும் இடத்தையும் இணைக்கும் பாலமாக இருக்கக்கூடிய சீன எழுத்துக்கள் அதாவது
சீன மொழி சீன தேசியத்தின் அடிப்படையான சக்தியாக இருக்கிறது. இது மட்டுமே காரணம் என்று
சொல்லி விடமுடியாது. சீன அரசியல் பின்புலங்களும் இதற்கு மற்றொரு காரணமாகும்.
கன்பூசியஸ் காலத்தில்
எழுதப்பட்ட கல்வெட்டுகளை இந்த சாங் காலத்து எழுத்தைக் கொண்டு புரிந்து கொள்ள
முடிகிறது. சித்திர வடிவத்திலான எழுத்துக்கள், காலந்தோறும் உச்சரிப்புகள்
மாறினாலும் இடத்திற்கு இடம் மாறினாலும் எழுத்தின் அர்த்தம் மாறுவதில்லை. இது
இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஆண்டுகள் வழக்கத்தில் இருந்து வருகிறது. இதுதான்
நாகரிக தொடர்ச்சியின் ஒரு முக்கிய அம்சமாக நீடிக்கிறது. கணினி யுகத்தில் பல மொழி
பேசக் கூடியவர்களுக்கு குறியீடுகள் ஒரே மாதிரியாக இருப்பதை தற்போது நாம்
அறிந்திருக்கிறோம். இதேபோன்றுதான் சீன மொழி மாறுபட்ட உச்சரிப்புகளில் பேசினாலும்
எழுத்தின் அர்த்தம் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எழுத்து வடிவத்தின் வயதை
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் கண்டுபிடித்துள்ளனர்.
சீன மருத்துவர்கள் பலர் தங்களுடைய பாரம்பரிய மருத்துவத் தொழிலுக்காக பூமியில் புதைந்துள்ள
விலங்குகளின் எலும்புகளை எடுத்து அவற்றை பயன்படுத்தினார்கள். இதற்கு டிராகன்
எலும்புகள் என்று பெயர். இந்த மருத்துவர்கள் பயன்படுத்திய எலும்புகளில் வினோதமாக
ஏதோ கிறுக்கப்பட்டு
இருப்பதை தற்செயலாக கண்டுபிடித்தார்கள். இந்த எலும்புகள் எங்கிருந்து
கொண்டுவரப்பட்டன என்று ஆராய்ந்த போது அவை பெரும்பாலும் மஞ்சள் நதிப்படுகையில் அமைந்திருந்த சாங் பேரரசின் தலைநகரான ஆன் யாங் பகுதியில்
இருந்துதான் கொண்டு வந்தார்கள் என்று கண்டுபிடித்தார்கள்.
இந்த எலும்பு சித்திரங்களை
ஆராய்ந்து போது மூவாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு சாங் வம்சம் எனப்படும் பேரரசு காலத்தில்
எழுதப்பட்டது என்று தெரியவந்தது. இவர்களின் ஆட்சி காலத்தில் ஆமை ஓடுகள், எலும்புகள் போன்றவற்றின் மீது எழுதும் பழக்கம் இருந்திருக்கிறது என்பதை
கண்டுபிடித்தார்கள். அதன் பிறகு நடைபெற்ற ஆய்வில் இந்தப் பகுதியில் ஒரு
லட்சத்துக்கு மேற்பட்ட ஓடுகள், எலும்புகளில் எழுதப்பட்டவை
கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சுமார் நாற்பதாயிரம் எழுத்துக்கள் புழக்கத்தில் இருந்தது. காலப்போக்கில் அறுநூறு எழுத்துக்களாக மாற்றப்பட்டு அச்சு வசதி ஏற்பட்ட பிறகு மேலும் எண்ணிக்கை
குறைக்கப்பட்டது.
சீன தேசத்தின் ஒற்றுமைக்கு ஹான் தேசிய இனம்
ஒரு காரணம் என்று மட்டுமே சொல்லலாம். பெரிய தேசிய இனம் என்பதால் அதுவே ஒற்றுமைக்கு
அடிப்படை என்று மதிப்பீடு செய்ய முடியாது. ஹான் தேசிய இனம்
சீனாவை ஒன்றுபடுத்தி நானூறு ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தது வரலாற்று உண்மை.
இன்று உலகில் உள்ள மிகப்பெரிய இனம் இதுதான். உலகில் உள்ள நூறு பேர்களில் இருபது பேர் ஹான் இனத்தைச் சேர்ந்தவர்கள். மஞ்சள் இனம்
என்று அழைக்கப்படுகிற மங்கோலாய்டு இனப்பிரிவில் ஹான் இனம்
மிகப்பெரியது. ஜப்பானியர், கொரியர், மங்கோலியர்கள், எஸ்கிமோக்கள்,
பசிபிக் தீவு இனத்தவர்கள், இந்தியாவின்
வடகிழக்கு இனக்குழுக்களில் பல இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மங்கோலாய்டு இனத்தை
சேர்ந்தவர்கள்தான். சீனாவின் மீது படையெடுத்துச் சென்ற எல்லைப்புற இனத்தைச் சேர்ந்த மங்கோலியர், மஞ்சூரியர் போன்றவர்கள் ஹான் இனத்துடன்
ஐக்கியமானார்கள்.
ஹான் இனத்தின்
ஆட்சி காலத்தில் சீன தேசியம் உருவானது என்ற கருத்து உள்ளது. உண்மையில் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக சீன தேசிய கருத்துக்கள்
உருவாகி இருந்தது என்பதை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். நவீன பாணியிலான
தேசியம் என்பது 19வது நூற்றாண்டின் கடைசியிலும் 20ஆம்
நூற்றாண்டின் துவக்கத்தில்தான் உருவானது
என்பதுதான் உண்மை. மஞ்சு வம்சங்கள் குயிங்
(சிங் என்றும் அழைப்பார்கள்) வம்ச ஆட்சி காலத்தில் தைப்பிங் விவசாயிகள் கிளர்ச்சி பதினான்கு ஆண்டுகள்
நடந்த பொழுது தேசிய உணர்வு மேலோங்கியது. இது அடிப்படையில்
விவசாயிகள் கிளர்ச்சி என்றாலும், இதற்கு தலைமை தாங்கி
அவர்கள் தேசிய உணர்வுகளையும் பயன்படுத்தினார்கள்.
சீன ஒற்றுமையின் மற்றொரு
முக்கிய காரணம் அந்நாட்டின் பேரரசுகள் தங்களைப் பற்றியும், உலகின் பிற
பகுதிகளை பற்றியும் வைத்திருந்த மதிப்பீடுகள். பூமியின் நடுநாயகமாக இருக்கக்கூடிய
நாம்தான் நாகரிகமானவர்கள், மற்றவர்கள் நாகரிக வளர்ச்சி
அடையாதவர்கள் என்று கருத்தை வைத்திருந்தார்கள். அதே
நேரத்தில் தங்களுக்கு அப்பால் உள்ளவர்கள் நாடோடிகள் எந்த நேரத்திலும் நமது தெய்வீக தேசத்தை தாக்கலாம் என்ற அச்சத்தோடும்
இருந்தார்கள்.
மேலும் இதர நாடுகள் மீது
படையெடுக்கும், ஆக்கிரமிக்கும் தேசியமாக சீன தேசியம் இருக்கவில்லை. ரோமானிய
பேரரசு மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமித்தது. ஐரோப்பிய
நாடுகள் பலவும் காலனிகளை ஆக்கிரமித்து உருவாக்கியது. சீன
வரலாற்றில் அவ்வாறு நடக்கவில்லை. சீனாவுக்கு அருகில் இருந்த ரஷ்யா, ஜப்பான், மேற்காசியா, மத்திய
ஆசியா, இந்தியா போன்ற நாடுகளுக்கு இடையில் தங்களுடைய
சாம்ராஜ்யத்தை விரிவு படுத்த வேண்டும் என்ற யுத்தம் நடந்ததை பார்க்க முடியாது. கிழக்கு ஆசியாவின் மீது கூட சீனாவின் செல்வாக்கு யுத்தத்தினால் ஏற்பட்டது
அல்ல. சீனா, திட்டமிட்ட ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை; கடல் கடந்து சென்று கொடி
நாட்டியதும் இல்லை. செங்கிஸ்கான், மகா அலெக்சாண்டர் போன்றவர்களுக்கு சமமான
பேரரசர்கள் இருந்தாலும் அவர்கள் நாடு பிடிக்கும் செயலில் ஈடுபடவில்லை. சீனா
தொடர்ந்து ஒற்றுமையுடன் ஒன்றுபட்ட சீனாவாக நீடிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக
அமைகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக