சீனா ஒரு கம்யூனிச நாடு. இங்கு
மத சுதந்திரமோ வழிபாட்டு சுதந்திரமோ இல்லை. வழிபாட்டுத் தலங்களை இடித்து தள்ளி
விட்டார்கள். இது நாத்திகர்களின் நாடு. சீனர்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் என்று, கம்யூனிச எதிர்ப்பாளர்களும்,
முதலாளித்துவ சிந்தனைவாதிகளும் பொய் மூட்டைகளை உலகெங்கும்
இன்றைக்கும் அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தகவல்
தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் அந்தப் பொய்யர்களின் வாய்களுக்கு
ஆப்பு வைக்கப்பட்டு விடுகிறது. மேற்கத்திய மீடியாக்கள் என்னதான் வரிந்து
கட்டிக்கொண்டு சீனாவைப் பற்றி தொடர்ந்து அவதூறு பிரசாரம் செய்தாலும் அவை
உடனுக்குடன் தவிடு பொடியாக்கப்பட்டு விடுகிறது. சீனாவைப் பற்றிய இட்டுக்கட்டியப்
பொய்கள், இன்று இருக்கும் இடம் தெரியாமல் போகும் அளவிற்கு
அனைத்து துறைகளிலும் சீனா வெகு தூரத்துக்கு முன்னேறிச் சென்றுள்ளது.
சீனாவில் தேவதூதர்களின்
பெயரால் மதங்கள் தோன்றவில்லை. கிறிஸ்துவமும்,
இஸ்லாமும் உருவமைக்கப்பட்ட முறைகளில் சீனாவில் மதங்கள்
உருவாகவில்லை. பெருந்தெய்வ வழிபாடு சீனாவில் கிடையாது. கன்பியூஸியம், லாவோயிசம், பௌத்தம் போன்றவைகள் கடவுளின் இருப்பைப்
பற்றி போதித்தவைகள் அல்ல. ஆனால், அக்காலத்திலேயே அவர்களுக்கு
வழிபாட்டுத் தலங்கள் உருவானது என்பதையும் மறுக்க முடியாது.
இன்றைய சீனாவில்
பெரும்பான்மையான மக்கள் எந்த ஒரு மதத்தையும் பின்பற்றக் கூடியவர்கள் அல்லர்.
சமீபத்திய தரவுகளின்படி,
சீனாவில், மதம் அற்றவர்கள் அல்லது
நாத்திகர்கள் சுமார் 50 முதல் 70
சதவீதம் பேர் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒரு பகுதியினர்
கன்பியூஸியம், தாவோயிசம் போன்ற சீன பாரம்பரிய மரபுகளை
கடைபிடிக்க கூடியவர்களும் இருக்கிறார்கள். சீன மக்கள் தொகையில் 15 முதல் 20 சதவீதம் பேர் பௌத்த மதத்தை
பின்பற்றக்கூடிய பகுதியினர். இதில் பல பிரிவுகள் உள்ளது. ஒப்பீட்டளவில் பௌத்தம்
சீனாவில் ஒழுங்கமைக்கப்பட்ட மிகப்பெரிய மதமாகும். தாவோயிசம் மதத்தை மக்கள்
தொகையில் சுமார் 2 முதல் 3 சதவீதம்
பேர் கடைபிடிக்கிறார்கள். சீனாவில், கிறிஸ்துவ மதத்தில்
இரண்டு முதல் ஐந்து சதவீதம் பேர் இருக்கிறார்கள். இவற்றில் கத்தோலிக்கமும்,
ப்ராட்டஸ்டன்ட்டும் மிகப்பெரிய பிரிவாக உள்ளது. இவை தவிர ஒரு சிறிய
சதவீதத்தினர் இந்து மதம் மற்றும் நாட்டுப்புற தெய்வ வழிபாடுகளை
கடைபிடிக்கிறார்கள். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் சீன
குடியரசில் பௌத்தம், தாவோயிசம், இஸ்லாம்,
கத்தோலிக்கம், ப்ராட்டஸ்டன்ட் ஆகிய ஐந்து
மதங்களை அங்கீகரித்து உள்ளது. மதம் அல்லது மதம் சார்ந்த மரபுகள் அரசியலில்
கலக்கக்கூடாது என்பதை கறாராக கடைபிடிக்கிறார்கள்.
மூதாதையர் வழிபாடும் அரசியல்
கருத்தாக்கமும்
எல்லா சமூகங்களைப் போலவும்
சீனாவில் ஆரம்ப காலத்தில் பழமைவாதமும் அறிவுமேன்மையும் இருந்ததை யாராலும் மறுக்க
முடியாது. பண்டைய சமூக வாழ்க்கையில் சீன மக்கள் இயற்கை வடிவங்களை வழிபட்டு
வந்தார்கள். சூரியன்,
சந்திரன், பூமி, வானம்,
மழை என இயற்கை வடிவங்களை தொடர்ந்து வழிபட்டு வந்தார்கள். கால
ஓட்டத்தில் உற்பத்தி முறை மாற்றங்களில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக
நிலப்பிரபுத்துவ அமைப்பு முறை உருவானது. நிலப்பிரபுத்துவத்தின் மிக முக்கிய
அம்சமாக குடும்ப அமைப்பு தோன்றி நிலைபெற்றது. இந்த குடும்பமுறை வளர்ச்சியின்
விளைவாக மூதாதையர்களை வழிபடும் வழக்கம் சீன மக்களிடம் உருவாகியது. இதன்
வெளிப்பாடாக மூதாதையர்களுக்கு தொடர்ந்து சடங்கு நடத்துவதும் அதற்கான விதிமுறைகளை
உருவாக்குவதும் ஏற்பட்டது.
சாங் வம்ச
(பொதுக்காலத்திற்கு
முன்பு கிமு 1600-1046) ஆட்சி காலங்களில் மரணம் அடைந்த
மூதாதையர்கள், உயிருடன் இருக்கும் தங்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக கடவுளிடம் சிபாரிசு
செய்ய முடியும் என்ற நம்பிக்கை சீன மக்களிடம் வலுப்பெற ஆரம்பித்தது. இந்த
நம்பிக்கையின் வெளிப்பாடாக மூதாதையர்களுக்கு உணவு, மது
வகைகள் மற்றும் இதர பொருட்களை படைக்க ஆரம்பித்தனர். மேலும் ஆரக்கில் எலும்புகளில்
தங்களது பிரச்சனைகளை எழுதி வைத்தால் அதன் மூலம் மரணம் அடைந்த மூதாதையர்கள்
தெய்வங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி நல்லதை செய்வார்கள் என்று நம்பினார்கள்.
மூதாதையர்களின் ஆவிகளை திருப்திப்படுத்தாதவர்கள், அவர்களது
கல்லறைகளை பராமரிக்காதவர்களின் குடும்பங்களை மூதாதையர்களின் ஆவி சீரழித்து விடும்
என்று அஞ்சினார்கள். இவற்றை முறைப்படி செய்தால் குடும்பம் செழிப்பாக இருக்கும்
என்று இந்த வழிபாட்டு முறைகளை பரவலாக கடைபிடித்தார்கள்.
சௌவ் வம்சம்
(பொதுக்காலத்திற்கு முன்பு கிமு 1046–256) ஆட்சி காலத்தில் இந்த
வழிபாட்டு முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. ஆளும் வர்க்கத்தால்
வழிபாட்டு முறைகளில் புதிய கருத்தாக்கம் திணிக்கப்பட்டது. சொர்க்கத்தின் உத்தரவின்
பேரில்தான் நல்லொழுக்கம் உள்ள ஆட்சியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றும் பேரரசர்களின்
அதிகாரம் அவர்களாக எடுத்துக் கொள்வதில்லை சொர்க்கத்திலிருந்துதான் வழங்கப்படுகிறது
என்ற முறையிலும் வழிபாட்டு முறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இந்தக்
கருத்துக்களை ஆளும் வர்க்கம் வலுவாகவே மக்களிடம் திணித்தது. இதன் விளைவாக
ஆட்சியாளர்கள் தெய்வீக சக்கரவர்த்திகளாக
சிம்மாசனத்தில் வீற்றிருந்தனர். இங்கு முதல் முறையாக இயற்கை வழிபாட்டு
நம்பிக்கைகளும்,
மூதாதையர் வழிபாட்டு முறைகளும் அரசியல் கருத்தாக்கமாக
மாற்றப்பட்டது.
சமூக வளர்ச்சிப் போக்குகள்
மேலும் பல அறநெறி கோட்பாடுகளை மக்கள் மேடைக்கு கொண்டு வந்தது. சௌவ் வம்ச ஆட்சியின்
இறுதி காலத்தில் குழப்பங்கள் மேலோங்கியது. ஆட்சியைத் தக்க வைப்பதற்கான முயற்சிகள்
நடந்து கொண்டே இருந்தது. இந்த குழப்பகாலத்தை இளவேனில், இலையுதிர்
காலம் என்றும் அழைப்பார்கள். ஒரு கட்டத்தில் சௌவ் வம்ச ஆட்சி வீழ்ச்சி அடைந்தது.
அடுத்த சில நூறாண்டுகள் பேரரசுகள் இல்லாத நிலை நீடித்தது. இக்காலத்தை சீன
வரலாற்றில் குழப்பங்களின் காலம் அல்லது போர்களின் காலம் என்று அழைக்கப்பட்டது.
மக்களின் வாழ்க்கை பெரும் துன்பத்திற்கு ஆட்பட்டது. போர்களால் பொருளாதார நெருக்கடி
மக்களை புதைகுழிக்கு அனுப்பியது. இந்தப் பின்னணியில், மக்கள்
மாற்றங்களை தேடுகிற சூழலில், அப்பொழுது முன்வைக்கப்படுகிற
கருத்துக்கள் மக்களால் வரவேற்கப்பட்டன. இந்த நிலையில்தான் கன்பியூஸியம், தாவோயிசம், மென்சியம், மோயிசம்
போன்ற அறநெறி கோட்பாடுகள் உருவாகின. இவையே அக்காலத்தில் சீன சமூகத்தை வழிநடத்திய
நெறிமுறைகளாக இருந்தன.
கன்பியூஸியம்
: மன்னன் வழியே மக்கள்
‘‘எதையும்
கண்டுபிடிக்காத அறிவு பரப்பாளர் நான்’’ என்று தன்னை பற்றி கன்பூசியஸ் கூறிக்
கொள்கிறார். தன் சீடர்களைப் பார்த்து உங்களைப் பற்றியும் உங்களைச் சுற்றியுள்ள
உலகைப் பற்றியும் தீவிரமாக ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை
வழங்குகிறார். அறிதல், படித்தல் என்ற செயல்பாட்டுக்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்கிறார். சீன மக்கள் இவரை தங்களது ஆசானாகவே கருதுகிறார்கள்.
வடக்கு சீனாவில் உள்ள லூ என்ற
பிரதேசத்தில் குங் என்ற போர் வீரர் குடும்பம் ஒன்றில் பொதுக்காலத்திற்கு முன்பு
கிமு 551 ஆம் ஆண்டு கன்பியூசியஸ் பிறந்தார். இவருடன் 9 பெண்
குழந்தைகள் பிறந்தனர். மூன்று வயதிலேயே தனது தந்தை இறந்ததினால் மிகவும் ஏழ்மை
நிலையை அடைந்து வறுமையில் வாடினார். உயிர் வாழ்வதற்கு கடுமையாக உழைக்க
வேண்டியிருந்தது. அவரது உழைப்பையும் திறமையும் கண்டு அரசாங்கத்தில் தானிய
களஞ்சியங்களை மேற்பார்வையிடும் பொறுப்புக்கு அவர் நியமிக்கப்பட்டார். கன்பூசியஸ்
சிறந்த முறையில் பணியாற்றியதைக் கண்டு தோட்டங்களையும், கால்நடைகளையும்
மேற்பார்வையிடுவதற்கான கூடுதல் பணியும் வழங்கப்பட்டது. சமூகத்தின் புறச்சூழ்நிலை
கன்பூசியஸின் சிந்தனையில் சில கேள்விகளை எழுப்பியது. ஆட்சி அதிகாரங்கள்
குழப்பத்தில் சிக்கிக் கொண்டுள்ள பொழுது, அதிகார பலமும்,
பண பலமும் உள்ளவர்கள் பல்வேறு விதமான முறைகேடுகளிலும் தீய
செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். ஏழைகள் மட்டும் கடும் நெருக்கடியில் சிக்கித்
தவிக்கிறார்கள். இந்த நிலைமையை மாற்ற வேண்டியது தன் கடமை என்று கருதினார்.
இதற்காக ஒரு சிறிய
பள்ளிக்கூடத்தை தனது 22வது வயதில் துவங்கி சிறப்பான முறையில் நடத்தி வந்தார். தனது பள்ளியில்
சேர்ந்த மாணவர்களுக்கு ஒழுக்கத்தைப் பற்றியும், குடும்பத்தாரிடம்
நடந்து கொள்ள வேண்டிய முறைகள் மற்றும் பெரியவர்களை மதிக்க வேண்டியதின் அவசியம்
பற்றியும் போதனைகள் செய்தார். இது மாணவர்களின் பெற்றோர்களை ஈர்த்தது. இதன் மூலம்
கன்பூசியஸ் பிரபலம் அடைந்தார். சுமார் 15 ஆண்டுகள் இந்தப்
பணியை செய்தார். இவரின் இந்தப் பணிகள் மூலமாக மக்களால் பாராட்டப்படுகிறார் என்பதை
அறிந்த அரசாங்கம் இவரை தலைமை நீதிபதியாக நியமித்தது. தனது 52
வது வயதில் இந்த பொறுப்புக்களை கன்பியூசியஸ் ஏற்றுக்கொண்டு பணியாற்றினார். அரசவம்ச
ஆட்சிகளில் வழக்கம் போல் நடைபெறுகிற சதிகள், சூழ்ச்சிகள்
போன்றவற்றால் நான்கு ஆண்டுகள் கழித்து தலைமை நீதிபதி பதவியிலிருந்து
வெளியேற்றப்பட்டார். இனி இந்த ஆட்சிப் பிரதேசத்தில் இருக்கக் கூடாது என்று
அங்கிருந்து வெளியேறினார். இந்தக் காலகட்டத்தில் கன்பூஸியசுக்கு பல சீடர்கள்
உருவானார்கள்.
கன்பியூசியஸ்
தீர்க்கதரிசி அல்ல சிந்தனையாளர்
கன்பூசியஸ் ஒரு தீர்க்கதரிசி
அல்லர். அவர் ஒரு சிந்தனையாளர். கடவுளைப் பற்றிய விவாதங்கள் வருகிற பொழுது கண்
முன்னே நடமாடும் மனிதர்களுக்கு தொண்டு செய்யாமல் காணாத பொருளுக்கு எப்படி தொண்டு
செய்ய முடியும் என்ற கேள்வியை எழுப்பியவர். இந்த உலகத்தில் பிறந்துவிட்டு உலக
விவகாரங்களில் ஈடுபடாமல் உலகத்தை விட்டு பரலோகத்துக்கு ஓடிவிடுவதில் என்ன அர்த்தம்
இருக்கிறது என்ற கருத்தை முன் வைத்தவர். நாடு குழப்பமான சூழ்நிலையில் இருந்த
பொழுது, பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவித்த பொழுது, இவரின் போதனைகள் மக்களிடம் வெகுவாக செல்வாக்கு பெற்றது. நம் வாழ்க்கையைப்
பற்றி பேசுகிறார் என்ற ஈர்ப்பு மக்களிடம் உருவானது. இதன் விளைவாக கன்பூசியஸ்
மக்களுக்கு தேவையான கல்வி முறைகளைப் பற்றியும், அரசியல்
செயல்பாடுகளைப் பற்றியும், சடங்கு நடத்த வேண்டிய
விதிமுறைகளைப் பற்றியும் திட்டங்களை உருவாக்கிக் கொடுத்தார்
கன்பூசியசின் போதனைகள்
அதிகாரக் கட்டமைப்புகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டவர்களாகவும், அதேநேரம்
அறநெறி அடிப்படையிலும் வாழ வேண்டும் என்பதை மையப்படுத்தி இருந்தது. இவரது
காலத்தில் அரசியல் குழப்பம் நீடித்ததால் இதற்கு முந்தைய, விண்ணகத்தின்
தீர்ப்பின் அடிப்படையில் நடைபெற்ற பேரரசு
ஆட்சி காலத்தில் இருந்த அமைதி மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்.
ஆட்சியாளர்களுக்கு மக்கள் கட்டுப்பட வேண்டும். தந்தைக்கு மகனும், கணவனுக்கு மனைவியும், மூத்தவர்களுக்கு இளையோர்களும்
என்ற முறையில் நன்னெறிகள் கடைபிடிக்கப்பட்டால் சமூகத்தில் நல்லிணக்கத்தை கொண்டு வர
முடியும் என்று போதித்தார். இந்த உறவுகளுக்கு மத்தியில் கடமைகளும், பொறுப்புகளும் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த தவறவில்லை.
குடும்பங்கள், குலங்கள், உள்ளூர்
அரசாங்கங்கள் என அனைத்தும் ஒரே மாதிரியான அதிகாரம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று
வலியுறுத்தினார். தனிமனித சிந்தனை முதல் பேரரசுகளின் அமைதி வரை ஒரு சங்கிலித்
தொடராக இவரது போதனைகள் அமைந்திருந்தது. இவர், பண்டைய
மூதாதையர்களின் வழிபாட்டு முறைகளை தனது போதனைகளில் இணைத்துக் கொள்ள தவறவில்லை.
இவரது போதனைகளில் மூதாதையர்களின் வழிபாட்டுக்கும், ஆவிகளுக்கு
படையல் போடும் சடங்குகளுக்கும் முதன்மை இடம் கொடுத்தார். சீன மக்களின் பாரம்பரிய
நம்பிக்கைகளின் மீது இவரது கோட்பாடுகள் அமைந்திருந்ததால் மக்கள் இவரை அதிகமாக
விரும்பினார்கள்.
நன்னடத்தையுடன் வாழ சடங்குகள்
மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மக்களிடம் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு மட்டத்திலும் கட்டுப்படுத்துபவர்கள்,
கட்டுப்படுத்தப்பட கூடியவர்களுக்கு எல்லா வசதிகளையும், வாய்ப்புகளையும் அளிக்க வேண்டும். இல்லை என்றால் நிலைமை மோசமாகி ஆட்சி
அமைப்புக்கும், குடும்பத்திற்கும் பேராபத்து ஏற்படும். ஒரு
இணக்கமான சமூகச் சூழல் உருவாக அடுக்கு முறையிலான அதிகார அமைப்பு அவற்றை
மதிப்பதற்கான சம்பிரதாயங்களும் கீழ்படிதல்களும் அவசியமானது என்பதை
வலியுறுத்தினார். இதுபோன்ற வலியுறுத்தல்கள்
மன்னர்களின் அதிகாரத்திற்கு மக்கள் கட்டுப்பட வேண்டும் என்ற முறையில் அமைந்தது.
மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு சுரண்டுவதற்கு ஒரு கருவியாக, கன்பூசியஸின் போதனைகளை மன்னர்கள் பயன்படுத்தினார்கள்.
குடும்பம் கன்பியூசிய
சிந்தனையின் அடிப்படை
கன்பூசியசின் மற்றொரு
முக்கியமான போதனைகளில் ஒன்று குடும்பம் தொடர்பானது. நிலப்பிரபுத்துவ சமூகஅமைப்பு
உருவான காலத்தில் குடும்ப அமைப்புகள் உறுதிப்பட்டது. இதன் தொடர்ச்சியாக குடும்பம்
பற்றி கன்பூசியஸ் மிக ஆழமான கருத்துக்களை எழுதி உள்ளார். குடும்பம் மிக அடிப்படையான
அமைப்பாக இருப்பதால் அவை நிலைத்து நிற்பதற்கு ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் தனது
குடும்பத்தை பாதுகாக்க,
வழிநடத்த பொறுப்பேற்க வேண்டும் என்று போதித்தார். இந்த போதனை
அடிப்படையில் சீன நாட்டு குடும்பங்கள் கன்பூசியஸ் எழுதிய சடங்குகள் தொடர்பான
நூல்களை பயன்படுத்தி அவர்களின் மூதாதையர்களுக்கு பணிவிடை செய்து வருகின்றனர்.
தனது குடும்பத்தை கடந்து
உறவினர்களுக்கு எந்த வகையில் உதவினாலும் அதுதான் தர்மம் என்று கன்பூசியஸ்
போதித்தார். இந்த போதனை ஆட்சியாளர்களுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும்
மிகப்பெரும் சாதகமாக மாறியது. இந்த போதனையை
முன்னிறுத்தி அரசு நிர்வாகத்திலும்,
வணிகத் துறைகளிலும் குடும்பத்தின் உறவினர்களை நியமித்து
கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். கன்பூசியஸின் உறவினர்களுக்கு உதவுவது தர்மம் என்ற
போதனை ஊழலுக்கும், வாரிசு அதிகாரத்திற்கும் வழி வகுத்தது.
கன்பியூசியஸ் இதை அறத்தின் அடிப்படையில் அமைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால்,
அதிகார வர்க்கம் தன்
நலன்களுக்கு பயன்படுத்தியது.
அதிகாரத்தை சட்டத்தின் மூலம்
நிலைநாட்டுவதை விட அறநெறி மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று கன்பூசியஸ்
விரும்பினார். சட்டத்தின் அடிப்படையில் நடக்க வேண்டும் என்றால் அதை மீறுவதற்கு
குறுக்கு வழியைத் தேடுவார்கள். அறநெறி அடிப்படையில் அதாவது தார்மீக அடிப்படையில்
மக்கள் வழிநடத்தப்பட்டால் அவர்கள் பழி பாவங்களுக்கு அஞ்சி நல்லவர்களாக நடப்பார்கள்
என்று அவர் போதித்தார். இதன் மூலம் அரசு,
மக்களுக்கு ஆற்ற வேண்டிய நற்பணிகள் பற்றி எடுத்துரைத்தார். ஆனால்
ஆட்சியாளர்கள் தங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கன்பூசியசத்தை
பயன்படுத்திக் கொண்டார்கள்.
கன்பியூஸியம் சீன சமுதாயத்தில்
மிகப்பெரிய செல்வாக்கு பெற்ற தத்துவமாகும். ஹான் அரச வம்சம் கன்பூசியஸ்
கோட்பாடுகளை அரசின் கோட்பாடுகளாக அல்லது அரசின் மதமாக அங்கீகரித்தது; ஆதரவளித்தது.
ஒரு கட்டத்தில் கன்பூசியஸ் எழுதிய நூல்களை பொதுத் தேர்வுக்கான பாட நூல்களாக
மாற்றினார்கள். கன்பூசியஸ் நூல்களை படித்து தேர்ச்சி பெற்றால்தான் அரசாங்கத்தில்
உத்தியோகம் கிடைக்கும் என்ற அளவிற்கு நிலைமை மாறியது. சீன நாட்டின் அதிகார
வர்க்கத்தை நாடு தழுவிய முறையில் கட்டமைத்ததில் கன்பியூசியம் மையமான பங்கு
வகித்தது. இந்த அதிகார வர்க்கம் சீன ஒற்றுமைக்கான காரணங்களில் ஒன்றாகவும்
திகழ்ந்தது.
கன்பியூசியம் நாடுகடந்து
மாற்றங்களை நோக்கி..
கன்பூசியம் கிழக்கு ஆசியா, தெற்கு ஆசிய
கலாச்சாரங்களை ஆழமாக பாதித்தது. கன்பியூஸியம் ஆன்மீக மதிப்புகள், சமூக கட்டமைப்புகள், அரசியல் அமைப்புகள் ஆகியவற்றை
வடிவமைத்தது என்றால் மிகையாகாது. இருபதாம் நூற்றாண்டு மத்திய காலம் வரை சீன
கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான புரட்சி நடக்கிற காலம்வரை செல்வாக்குடன் இருந்தது.
ஆனால் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களும் அதற்குள் நிகழ்ந்து வந்தன. செவ்வியல் கன்பியூசியம்,
நவ கன்பூசியம், புதிய கன்பூயூசியம் என்று
மூன்றாகப் பிரிந்து சிந்தனை போக்குகள் உருவாகின. டாங் அரச வம்ச காலம் வரை
செவ்வியல் முறைகள் செல்வாக்கு செலுத்தியது. சோங்
அரச வம்ச காலத்தில் அது பெரும் மாற்றமடைந்து கன்பியூசியம், தாவோயிசம், பௌத்தம் ஆகிய மூன்று மரபுகளையும்
உள்ளடக்கி நவ கன்பியூசியமாக உருவாகியது. ஆசிய நாடுகளுக்கு இந்த நவ கன்பியூசியம்
பரவியது. புதிய கன்பியூசியம் கோட்பாட்டாளர்கள் கம்யூனிசத்திற்கு மாற்றகவும்,
மேற்கத்திய தாராளவாதத்திற்கு மாற்றாகவும் கன்பூசிய மரபுகளிலிருந்து
சில கோட்பாடுகளை எடுத்துக்கொண்டு புதிய கன்பியூசிய கருத்துக்களை உருவாக்கினார்கள்.
கன்பியூசியத்தின் போதனை
முறைகள் ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக இருந்தது. அந்தக் கோட்பாடுகள் மூலம்
நிலப்பிரபுத்துவ வர்க்கம் மக்களை ஏமாற்றுகிறது என்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சி
அறிந்து அந்தக் கருத்துக்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியது. இன்றைய
சீனாவிலும் கன்பியூசியம் ஒரு மதமாக இல்லை என்பதை அனைவரும் அறிவோம். கன்பூசியத்தில்
இருக்கக்கூடிய, மக்களுக்கு சாதகமான கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு மக்களை
பாதிக்கக்கூடிய கருத்துக்களுக்கு எதிராக வலுவான அறிவியல் பிரச்சாரங்களை, மக்கள் இயக்கங்களை நடத்தி சீன கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக