சீனா ஐந்தாயிரம்
ஆண்டுகள் பழமைவாய்ந்த நாகரிகத்தின் வரலாற்றுக்கு சொந்தமான தேசம் மட்டுமல்ல, நீண்ட காலம் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றை கொண்ட தேசம் என்ற சிறப்பையும் அது
பெற்றிருக்கிறது. இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது, இந்த நீண்ட வரலாறு
நெடுகிலும் சீனா, தனித்தே பயணப்பட்ட தேசமாக திகழ்கிறது. அதோடு,
வரலாற்றில் சீனா, பல துண்டுகளாக நிரந்தரமாக பிரிந்து மாறிவிடாமல் ஒன்றிணைந்த
தேசமாகவே இன்று வரை வெற்றி கண்டு வந்துள்ளது. சீனாவின் தனித்துவம் வரலாற்று
ஆசிரியர்களுக்கே வியப்பை ஏற்படுத்தி வரலாறு படைத்துள்ளது.
மேற்கத்திய நாடுகளின் கலாச்சார
திணிப்பு, அரசியல் வடிவங்கள், முதலாளித்துவ ஜனநாயக முறைகள்
போன்றவை சீனத்தின் மீது முழுமையாக செல்வாக்கு செலுத்த முடியவில்லை. பிரிட்டன், போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நாடுகள் காலனிகளாக வைத்திருந்த இந்தியா உட்பட பல நாடுகளில்
தங்களின் அரசியல் வடிவங்களை திணித்துச் சென்றன. சீனாவில் இது நடைபெறவில்லை.
உலகின் பிறபகுதிகளில்
குறிப்பாக மேற்காசிய பகுதிகளில் பாபிலோனியாவிலும், பாரசீகத்திலும், அஸீரியாவிலும், கிரேக்கம், மாசிடோனியா ஆகிய நாடுகளில் போர்கள்
நடைபெறுவதும், அவற்றின் மூலமாக வெற்றி கொள்வதும் இயல்பாக
தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. வெற்றி பெற்ற நாடுகளின் கலாச்சாரங்களை தோல்வி
அடைந்த நாடுகள் மீது திணிப்பதும், இணைப்பதும் நடந்து
கொண்டிருந்தன. அதனால் மோதல்களும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.
இதுபோன்ற நிகழ்வுகள் அருகில்
இருந்த சீனாவை எட்டிக்கூட பார்க்கவில்லை என்பது வரலாற்று ஆசிரியர்களின்
வியப்புகளில் ஒன்றாகும். உலகை ஈர்த்த ரோமப் பேரரசின் வெற்றிகள்கூட சீனதேசத்தின் எல்லைக்குள் எந்த
தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது வரலாற்று உண்மை. படையெடுப்புகளில் மிகப்
பெரும் அளவு இதர நாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்திய முகமதியர்களின்
வெற்றிகள்
கூட கங்கை பிரதேசங்களில் இருந்து மத்திய தரைக்கடலில் இருக்கக்கூடிய லேவண்ட்
(Levante)
தீவுகள்
வரை பரவியிருந்தது. அது மட்டுமல்ல இந்த வெற்றிகள் தெற்காசியாவின் முகத்தோற்றத்தை
கூட மாற்றி அமைத்தது. இந்தப் படையெடுப்பின் தொடர்ச்சி ஐரோப்பாவை கைப்பற்றும்
அளவிற்கு அச்சுறுத்தலாகவே மாறியது. இப்படிப்பட்ட நீண்ட தாக்கத்தை ஏற்படுத்திய படையெடுப்புகள் சீன
எல்லைக்குள் ஊடுருவவில்லை என்பதுதான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தனித்துவ
அம்சமாக வரலாறு பதிவு செய்துள்ளது.
பொதுக் காலத்தின் (கிபி) இருபது நூற்றாண்டுகளில்,
சீனதேசம் பதினெட்டு நூற்றாண்டுகள் அந்நிய நாடுகளின்
படையெடுப்புகள் இல்லாமல் பயணித்தது. மங்கோலிய வம்சத்தைச் சேர்ந்த மன்னன், செங்கிஸ்கானின் பேரன் குப்ளாய் கான் சீனதேசம் முழுவதையும் கைப்பற்றி, யுவான்
வம்சம் என்ற பெயரில் நூறு ஆண்டுகள் (1271-1368)
மட்டுமே
ஆட்சி செய்தார். அவருடைய ஆட்சிக்கு எதிராக சீன மக்களிடம் தேசிய உணர்வுடன் கூடிய
எழுச்சி ஏற்பட்டதால் அவர் ஆட்சி வீழ்த்தப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதி
காலத்தில் துவங்கி, இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை
பல ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ், போர்ச்சுகல், ஸ்பெயின், அமெரிக்கா,
ரஷ்யா, ஜப்பான் உட்பட சீனாவின் சில பகுதிகளை
ஆக்கிரமித்து இருந்தன. காலப்போக்கில் பெரும் பகுதி
பிரிட்டிஷார் வசம் வந்தது. ஒன்றரை நூற்றாண்டுக்குள் காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்கள்
தோற்கடிக்கப்பட்டார்கள்.
சீனா தனித்துவமும், ஒன்றுபட்டும் இருந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. வரலாற்றின் பெருமைகளை சீன
மக்கள் என்றும் கைவிட்டதில்லை. காலத்திற்கு ஏற்ற மாற்றங்களுடன் அவற்றை அடுத்த
தலைமுறைக்கு கடத்தி வந்தது முக்கிய அம்சமாகும். சீனாவில் ஆதிகாலத்தில் இருந்து
சரித்திரங்கள் ஒழுங்கான முறையில் எழுதப்பட்டு வந்திருக்கின்றன. உலகத்திலேயே மிகப் பழமையான சரித்திர ஏடுகளை சீனாவில் காணலாம். அவ்வப்போது
நடைபெறக்கூடிய நிகழ்வுகளை ஆண்டுகள் வாரியாக பதிவுசெய்து இருக்கிறார்கள். சரித்திர
ஆசிரியர்களுக்கு அரசின் ஆதரவு இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது காலத்திற்கு
முன்பு (B.C.E)
841 ஆம்
ஆண்டில் இருந்துதான் வரிசைக்கிரமமாக நிர்ணயித்து சொல்ல முடிகிறது என்றும், அதற்கு
முந்தியவற்றை உத்தேசமாகத்தான் சொல்ல முடிகிறது என்றும் சில அறிஞர்கள்
கூறுகிறார்கள். வருடங்கள் வித்தியாசங்கள் இருக்கலாமே தவிர நிகழ்வுகளை வரிசைக்கிரமமாக
எழுதப்பட்டதில் வித்தியாசம் காண முடியாது என பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்கள்
ஏற்றுக் கொண்டுள்ளனர்.
வரலாற்றின் வேர்களை தன்னகத்தே
சீன சமூகம் கொண்டுள்ளதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. மனித பரிணாம வளர்ச்சியில் பீகிங்மேன்
என்று அழைக்கப்படுகிற ஹோமோ எரக்டஸ் சிற்றினத்தைச் சார்ந்த மனித
மூதாதையர்களின் காலம் 3,60,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருதப்படுகிறது. இந்த
மனித இனத்தின் சுவடுகளை ஆய்வாளர்கள் சீனாவில் கண்டெடுத்துள்ளனர்.
சீனர்கள் ஆரம்பத்தில் தங்கள்
நாட்டை சீனா என்று அழைக்கவில்லை. தங்கள் நாட்டு பெயரை சுங்-ஹூவா அல்லது சுங்-குவோ என்று
பெருமையோடு அழைத்துக் கொண்டார்கள் இரண்டு பெயர்களையும் சேர்த்து
சுங்-ஹூவாமின்-குவோ என்று அழைக்கிறார்கள். சுங் என்றால் மத்திய பகுதி. ஹூவா
என்றால் புஷ்பம். குவோ என்றால் நாடு. பூமியின் மத்தியில் உள்ள புஷ்பம் போன்ற அல்லது புகழ் நிறைந்த நாடு என்று
பொருள்படும் வகையிலேதான் அழைத்தார்கள்.
சீனாவின் வடமேற்கில் உள்ள
கான்ஷூ, சென்ஷி என்ற இரண்டு மாகாணங்களில் சௌ வம்சத்தினர் ஆண்டு வந்தனர். இந்த பிரதேசத்திற்கு அப்பொழுது
சின் என்று பெயர். இவர்கள் சுற்று வட்டாரத்தில் இருந்த பகுதிகளை தங்களது படை பலத்தால் இணைத்துக் கொண்டு அனைத்து பகுதிகளையும் சேர்த்து சின் என்ற
பெயரிலேயே அழைத்தார்கள். இந்தப் பெயர் தான் சீனா என்ற பெயராக
மருவி, வெகு காலமாக சீனா என்று அழைக்கப்படுகிறது.
சீன மக்களின் தனித்துவமான சமூக அரசியல் வாழ்க்கைக்கு புவியியலின் பங்கு
மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. சீனா மித தட்பவெட்ப சீதோஷண நிலையை கொண்டிருக்கக் கூடிய நாடு இதனால் வளமான பிரதேசங்கள் அதிகமாக
இருக்கும். இந்த மண் வளத்தை பயன்படுத்தி தங்களது விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தி
கொண்டார்கள். எனவே
சீன மக்கள் தங்களது வாழ்க்கை தேவைகளுக்காக எந்த நாட்டையும் சார்ந்து நிற்கவேண்டிய
அவசியம் இல்லை. இதேபோன்று கனிம வளங்கள் நிறைந்த
பகுதியாகவும் இருந்தது. இந்த கனிம வளங்களை தங்களுக்கான தேவைகளை பூர்த்தி
செய்வதற்கு பயன்படுத்திக் கொண்டார்கள். சீனாவின் கிழக்கும் தெற்கும்
கடலால் சூழப்பட்டது. மேற்கே கோபி பாலைவனமும், தென்மேற்குப் பகுதியில்
இமயமலையும் அமைந்திருந்தது. இயற்கையிலேயே மூன்று
புறங்களிலும் சீனா இயற்கையை தன் அரணாக கொண்டிருந்தது. இதனால் மகாஅலெக்சாண்டர்
உட்பட படையெடுப்பாளர்கள் சீனாவிற்குள் வந்து வெற்றிபெற
முடியவில்லை. சீனாவின் வடபகுதியில் மட்டும்தான் அந்நியர்கள் படையெடுத்து வர
முடிந்தது.
மங்கோலியர்களும்,
மஞ்சூரியர்களும், பிற நாடோடி இனத்தவர்களும் அடிக்கடி இந்தப்
பகுதியிலிருந்து படையெடுத்து வந்தார்கள். இதனால் இவற்றை
நிரந்தரமாக தடுப்பதற்கு சீனப்பெருஞ்சுவர் கட்டப்பட்டது. இருந்தும் முழுமையாக
படையெடுப்புகளை தடுத்துநிறுத்த முடியவில்லை. எல்லைப் புற
தாக்குதல்கள் அவ்வப்போது நடந்து கொண்டிருந்தது. ஆனால் இவை சீன சமூகத்தை
பாதிக்கவில்லை. காரணம் படையெடுத்து வந்த மங்கோலிய, மஞ்சூரிய மற்றும் பிற நாடோடி இனத்தவர்கள் சீனாவின்
உள்ளே நுழைந்தபிறகு அதன் பிரம்மாண்டத்தை கண்டு அஞ்சினார்கள்.
தங்களை சீனக் கலாச்சாரத்தோடு இணைத்துக் கொள்ள வேண்டிய சூழல்
ஏற்பட்டது. படையெடுப்பாளர்களின் அரசியல் அதிகாரத்தை
நிலைநிறுத்த முடியவில்லை. தங்கள் கலாச்சாரத்தை திணிக்கவும் முடியவில்லை.
சீனாவோடு ஒப்பிடக்கூடிய பெரும்
நாடாக இந்தியா மட்டும்தான் அன்று இருந்தது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் சமூக கலாச்சார பொருளாதார
உறவுகள் மிக மிகக் குறைவு. பட்டுப்பாதையில் மட்டும்தான் பிற்காலத்தில் வணிகம்
நடைபெற்றது. இத்தகைய புவிசார் நிலைமைகள் சீனர்களின் அரசியல் சமூக தனித்தன்மைக்கு
பெரும் காரணமாக அமைந்தது. இதர நாடுகளுடன்
உறவு கொள்ள முடியாத புவிசார் அமைப்புகளினால் தனிமைப்பட்ட தன்மைகளும் இதற்குள்
உள்ளடங்கி இருந்தது. இது பற்றி பிற்காலத்தில் தோழர் மாசேதுங் குறிப்பிடுகிற
பொழுது...
"இந்தியாவைப் பற்றி சீனர்களுக்கு தெரியும். ஆனால், வரலாற்றின்
பெரும்பகுதி இவை இரண்டும் தனி இரண்டு ராஜ்ஜியங்களாக பிரிக்கப்பட்டுதான் இருந்தது.
இரு நாகரிகங்களும் பட்டுப்பாதையில் பொருட்களையும், பௌத்த
செல்வாக்கையும் பரிமாறிக் கொண்டன. ஆனால் மற்ற இடங்களில் கிட்டத்தட்ட பரிமாற்றங்கள்
நடைபெற முடியாத அளவிற்கு இமயமலை மற்றும் திபெத்திய பீடபூமியால் தடுக்கப்பட்டன.
மத்திய ஆசியாவின் பெரும் பாலைவனங்கள் சீனாவை பாரசீகம், பாபிலோனியா
மற்றும் அதன் அருகில் இருந்த கிழக்கு கலாச்சாரங்களில் இணைய முடியாமலும் ரோமானிய
பேரரசிலிருந்து பிரிந்தும் இருக்கும் அளவிற்கு செய்தன" என்று
குறிப்பிடுகிறார்.
சீனர்கள் பண்டைய காலத்திலேயே நெல்
சாகுபடியில் ஈடுபட்டார்கள். பொது
காலத்திற்கு முன்பு (கிமு) 2100-ம் ஆண்டுகளில் சியா
வம்ச ஆட்சி காலத்தில் நெல் சாகுபடி தழைத்தோங்கி இருந்தது. இது மஞ்சள் நதிப்படுகையில் ஒரு
நிலையான நாகரிகம் உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தது. இந்த நதிப்படுகையில்தான்
அடுத்தடுத்த மூன்று வம்சங்களின் ஆட்சிகள் தோன்றி நடைபெற்றதற்கான சான்றுகளை
கண்டுபிடித்து உள்ளார்கள். எனவே சீன மக்கள் விவசாய கலாச்சாரத்தை அடிப்படையாகக்
கொண்ட நிலைத்த இடத்தில் வாழ்ந்தார்கள்.
ஐரோப்பிய, ஆரிய
மேய்ச்சல் நில வாழ்க்கை, மங்கோலியர்களின் நாடோடி வாழ்க்கை
போன்று இவர்களின் வாழ்க்கை இடப்பெயர்வு வாழ்க்கை இல்லை. விவசாய வாழ்க்கையின்
காரணமாக சீனர்கள் உலகின் இதரப் பகுதிகளுக்கு புலம் பெயர வேண்டிய தேவை இல்லாமல்
இருந்தது. விவசாய சமூக வாழ்க்கையின் பின்னணியில்தான் சீனத்தின் அரசியல்
செயல்பாடுகளும் அமைந்திருந்தது. விவசாயிகளிடமிருந்துதான் படை வீரர்கள் சென்றார்கள். பல பேரரசுகளை எதிர்த்து நடத்திய
கலகங்களை விவசாய பகுதியை சேர்ந்தவர்கள் தலைமை தாங்கி நடத்தி ஆட்சியை
கைப்பற்றியது இந்தப் பின்னணியில்தான் நடந்தது.
சீனாவின் தட்பவெட்ப சீதோஷ்ண
நிலை என்பது சீனாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. சீனாவின்
தென்கோடி நிலநடுக்கோட்ட பகுதி தட்பவெட்ப நிலையிலும்,
வடகிழக்குபகுதி வெயில் குறைந்த பகுதியாகவும், சீனாவின்
கிழக்குப்பகுதி மூன்று பெரும் ஆறுகள் யாங்த்ஸி, மஞ்சளாறு, பெர்ல் ஆறு ஓடக்கூடிய பகுதியாகவும் அமைந்திருந்தது. சீன
நாட்டில் 65 சதவீத இடங்கள் மலைப்பிரதேசங்களாக
இருக்கிறது. உலகின் கூரை என்று சொல்லப்படும் திபெத் துவங்கி தென்மேற்கு
பீடபூமியாகவும், நீண்ட மலைத்தொடர்களாகவும் செல்கிறது. தாக்ளமான் பாலைவனமும், மங்கோலியாவுடன் இணைந்திருக்க கூடிய கோபி பாலைவனமும்,
வடக்கு பகுதியில் மிகப் பரந்த புல்வெளியும் நிறைந்து காணப்படுகிறது.
உலகில் உள்ள ஒரு சிலவற்றைத் தவிர அனைத்து தட்பவெட்ப நிலைகளும் சீனா என்ற பெரும்
பிரதேசத்தில் காணப்படுகிறது. இவை அனைத்தையும் விட தென்சீனக்கடல், கிழக்கு சீனக்கடல், மஞ்சள்
கடல், போஹாய்கடல் என 18000
கிலோ
மீட்டர் தொலைவுக்கு சீனாவின் நெய்தல் நிலம் நீண்டு செல்கிறது.
இத்தனை வளங்களைக் கொண்ட
பழமையான சீனாவில்
மக்கள் புலம்பெயர்ந்து செல்வதற்கு தேவை இல்லாமல் இருந்தது என்பதை
அறிய முடியும். புவியியல் ரீதியான வரம்பு எல்லைக்குள் மக்கள்
தங்களுக்கு இடையிலான உறவுகளை அமைத்துக் கொண்டார்கள். சீனப்
பெருஞ்சுவர் என்ற மனிதபடைப்பு சீன மக்களின் பொது பாதுகாப்பாக அமைந்தது. சீனப்
பிரதேசத்துக்குள்ளேயே நீளமான, அதிகமான சாலைகளும், நீர்வழிப் பாதைகளும் சீன மக்களை இணைக்கும் பொருளாதார காரணியாக அமைந்தது.
சீனாவின் தனித்தன்மையை அறிந்து
கொள்ளக்கூடிய அதே நேரத்தில், சீன சமூகத்துக்குள் இருந்த வர்க்க முரண்பாடுகள் வளர்ந்து கொண்டே இருந்ததையும்
தெரிந்து கொள்ள வேண்டும். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும், உபரி உற்பத்தியும் மாற்றங்களையும் வர்க்க மோதல்களையும்
உருவாக்கிக் கொண்டு இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக