மத்திய காலத்தின்
பிற்பகுதியில் தோன்றிய பல புதிய தொழில்நுட்பங்கள் ஐரோப்பிய வரலாற்றின் போக்கையே
திசைமாற்றியது. இந்த தொழில்நுட்பங்களில் பெரும்பான்மையானது
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டவை என்று வரலாற்றில் அறிவியல் என்ற புத்தகத்தில் ஜே.டி. பெர்னால் குறிப்பிட்டுள்ளார்.
பேரரசுகளின் வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும், குழப்பங்களுக்கும் மத்தியில் சீனாவில் கலையும், இலக்கியமும், தொழில்நுட்பத்தின் படைப்புகளும் உலகம்
வியக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்ததன் ரகசியம் என்ன? மத்திய
காலத்தில் மட்டுமல்ல... பண்டைய சீனாவின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று அறிவியல்
தொழில்நுட்பத்தில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் ஆகும். ஒரு குறிப்பிட்ட அரச
வம்சத்தில் மட்டும் அல்ல அடுத்தடுத்துவந்த அரச வம்சங்களின் ஆட்சி காலத்திலும் இந்த
கண்டுபிடிப்புகளும் நடைமுறைப்படுத்தலும் தொடர்ந்து கொண்டே இருந்தது. நமது வழக்கமான
பார்வைகள் அல்லது மரபார்ந்த பார்வைகள் என்பது, அனைத்து புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் ஐரோப்பாவிலிருந்து வந்தவை என்பதாகத்தான் இருக்கிறது. இவை அனைத்தையும்
மறுவாசிப்புக்கு உட்படுத்தவில்லை என்றால் வரலாற்றின் உண்மைகள் வெளியே தெரியாமல்
போகும்.
சாங் அரசவம்ச காலத்திலேயே
அரிசியை ஊறவைத்து மது வகைகளை தயாரிப்பதைக் கண்டுபிடித்தார்கள். மரத்திலான செவ்வக
சவப்பெட்டிகளையும், பானைகளையும், ஊசிகள்,
கோடரிகள் போன்ற பொருட்களையும் கண்டுபிடித்து பண்டைய சீனர்கள் பயன்படுத்தி
இருக்கிறார்கள். உடலில் ஊசியை குத்தி சிகிச்சை பெறக்கூடிய அக்குபங்சர் வைத்தியமுறை பொதுகாலத்திற்கு முந்தைய(கிமு) மூன்றாம் நூற்றாண்டிலேயே
சீனாவில் நடைமுறைக்கு வந்து விட்டது.
குதிரையின் கழுத்துப்பட்டை (Horse-Collar),
காம்பஸ்(Compass), கப்பலின் திசைகளை மாற்றும்
சுக்கான் (Stern post rudder), வெடி மருந்து (Gun
powder). காகிதம், அச்சுமுறை(Printing)
ஆகியவை சீனாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டன. ஐரோப்பாவில் அல்ல.
குதிரையின் கழுத்துப்பட்டை
தானே, இது ஒரு கண்டுபிடிப்பா? என்று நினைத்து விடக்கூடாது.
குதிரையின் கழுத்தில் கட்டப்படும் கயிற்றைக் கொண்டுதான் குதிரையின் இயக்கத்தை
கட்டுப்படுத்த முடியும். கயிற்றை
அதிகம் அழுத்தினால் குதிரை மூச்சு திணறி இறந்து விடும். இந்த பாதிப்புகள் காரணமாக
ஐரோப்பாவில் குதிரைகளை அதிகம் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. சீனாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே குதிரையின் மூச்சுக்குழாயை அழுத்தாமல் அதன் கழுத்தில் போடுவதற்கான கழுத்துப்பட்டையை
கண்டுபிடித்து பயன்படுத்தினார்கள். இந்த கழுத்துப்பட்டையும்
அதன் சேணமும் ஐரோப்பாவிற்கு
வந்த பிறகுதான் ஐரோப்பாவின் போக்குவரத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் உருவானது.
கடல் வணிகம் பெருகுவதற்கு
கப்பல் போக்குவரத்து மிகவும் இன்றியமையாதது. வடக்கு திசையை அறிய உதவும் திசை காட்டி, கடல்
பயணத்தில் மிக முக்கியமான கருவி. இவற்றைக் கண்டுபிடித்தது
மட்டுமல்ல... கப்பல்களை தேவைப்படுகிற திசை நோக்கி திருப்புவதற்கான சுக்கானையும் கண்டுபிடித்து பயன்படுத்தினார்கள்.
பண்டைய காலத்தில் பயன்படுத்திய இந்த தொழில்நுட்பம்,
சீனாவில் மத்திய காலத்தில் சுக்கான் மற்றும் கீல்களுடன் அமைக்கப்பட்ட பெரிய
கப்பல்கள் உருவாக்கப்பட்டன. இதன் காரணமாக கடல் வணிகம்
மிகப்பெரிய அளவில் வளர்ந்தது. காந்தக் கருவிகளையும் சீனர்கள் கண்டுபிடித்து பயன்படுத்தியிருக்கிறார்கள்.
யுத்தங்களின் போக்குகளையே
மாற்றிய வெடிமருந்துகள் சீனாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. பதினோராவது
நூற்றாண்டில் சோங் அரசவம்ச காலத்தில் வெடி மருந்தை
கண்டுபிடித்து யுத்தத்தில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இந்த
கண்டுபிடிப்பு ஐரோப்பாவிற்கு வந்து மிகப்பெரிய விளைவுகளை உருவாக்கியது. ஐரோப்பாவில் புரட்சியும், பீரங்கியும் அரசியல்
அதிகாரங்களை மாற்றி விட்டதற்கு இந்த வெடி மருந்து கண்டுபிடிப்புகள் காரணமாக
அமைந்தது. அதுவரை தகர்க்க முடியாமல் இருந்த
நிலப்பிரபுக்களின் கோட்டைகளை நிர்மூலமாக்கினார்கள். மத்திய
காலத்தில் கிரேக்க நாகரிகத்தில் வெடிகுண்டு மருந்து என்ற எண்ணம் கற்பனையில் கூட
இல்லாத காலத்தில் சீனாவில் அது கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
சாய் லூன் (Cai lun) என்பவர்
பொதுக்காலத்தின் (கிபி 105) முதல்
நூற்றாண்டிலேயே, ஹான் வம்ச ஆட்சி காலத்தில் காகிதத்தை
கண்டுபிடித்து விட்டார். மல்பரி மரக்கூழுடன் நாணல்களையும்
பழைய துணிகளையும் இணைத்து கூழாக்கி அவற்றை உலர்த்தி காகிதத்தை உருவாக்கினார். சாய்
லூன் திருநங்கை என்ற பதிவும் உள்ளது. இதற்கான சான்றுகள் இல்லை. சீனாவில் காகிதம், அச்சு,
வெடிமருந்து, திசைகாட்டி என்ற நான்கு பெரிய
கண்டுபிடுப்புகளில் காகித்தை கண்டுபிடித்த
சாய் லூன் பெயர்மட்டும் வரலாற்றில் பதிவாகி உள்ளது. முதல்
நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த காகிதம் சீனாவில் மூன்றாம் நூற்றாண்டிலேயே
மிகப்பெரிய அளவிற்கு, அதாவது எழுதுவதற்கு
பயன்படுத்தப்பட்டது.
அச்சிடும்முறைகளை
கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகப்படுத்தி அசத்திய பெருமை சீனர்களுக்கே உண்டு. பொதுக்காலத்தின் ஐந்தாம் நூற்றாண்டில் அச்சு முறையை
கண்டுபிடித்தார்கள். உலகின் முதன் முதலாக உருவாகிய அச்சு பிரதி என்பது, பொதுக்காலத்தின் 868ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி அச்சடிக்கப்பட்டது. இந்த பிரதியின் பெயர்
ஜின் காங் சிம் (வஜ்ரசேதிகா பிரக்ஞபாரமிதா சூத்திரம்) என்ற
பௌத்த நூலாகும். இதன் பிரதி தற்போதும் பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளது. இதேபோன்று
ட்ரெடில் என்று அழைக்கப்படக்கூடிய நகர்வு அச்சுமுறையை 1450இல்
தான் ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டது. இதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் பி ஷங்க் (990-1050) என்பவர்
சுட்ட களிமண்ணை கொண்டு அந்த முறையை கண்டுபிடித்து பயன்படுத்தினார்கள்.
வணிகத்தில் பண்டமாற்று முறைகளே
முதலில் நாணயங்களாக பயன்படுத்தப்பட்டது காலஓட்டத்தில் உலோகங்களிலிருந்து பல
நாணயங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. சீனாவில் டாங் வம்ச ஆட்சி காலத்தில் செப்பு
நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. இவற்றை வணிகர்கள் சுமந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது என்பதை மன்னனிடம்
முறையிட்டார்கள். அதன் விளைவாக டாங்
வம்ச ஆட்சி காலத்தில் காகித நாணயங்கள் உலகிற்கு முதல் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
கண்டுபிடிப்புகளின் தாயகம்
சீனாதான் என்று சொல்லக்கூடிய அளவில், சீனாவில் அடுத்தடுத்த தொழில்நுட்ப முறைகள்
பயன்பாட்டுக்கு வந்தன. வார்ப்பு இரும்பு,
இரும்பை உருக்க உதவும் காற்றுத் துருத்திகள், எந்திரவியல்
இயக்க முறைகள், சுரங்கப் பணிகளுக்கான கருவிகள், பட்டாசு தயாரிப்புக்கான வெடி பொருட்கள், மடக்கிவிரிக்கப்படும்
குடைகள் என பலவும் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கு மேலாக
நிலக்கரியை பயன்படுத்தக்கூடிய முறைகள், சீனாவில் நடைமுறையில்
இருந்தது. எந்திரவியல் கடிகாரத்தை முதலில் உருவாக்கியது சீனர்கள் தான்.
ஹான் வம்சத்தின்
ஆட்சி காலத்தில் ஜியூஸ்காங் சுவான்சு என்ற கணித நூல் தொகுக்கப்பட்டது. இது ஒன்பது பாகங்களை
உள்ளடக்கியது. முன்பு இருந்த பல சீன கணித அறிஞர்களின்
குறிப்புகளை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்கள். ஐரோப்பாவில் கண்டறிந்தார்கள்
என்று கருதப்பட்ட பல கணித கோட்பாடுகள் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய
சீனாவின் நூல்களில் காணப்படுகிறது. காலண்டர் முறைகளையும் அதாவது ஒரு காலண்டர்
ஆண்டின் காலஅளவு 365.2425 நாட்கள் என்று வரையறுத்து உள்ளனர்.
கணிதத் துறையில் இன்னும் ஏராளமான பிரிவுகளை சீனர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அதிசயக்கத்தக்க மற்றொரு
கண்டுபிடிப்பாக வாயு உருளைகளை (கேஸ் சிலிண்டர் போல்) கண்டுபிடித்து பயன்படுத்தி
இருக்கிறார்கள். இயற்கை வாயுவை மூங்கில் கழிகளின் வழியாக
அடுப்புக்கு எடுத்துச் சென்று எரிய வைத்திருக்கிறார்கள்.
இதற்கான ஆதாரங்களாக ஸ்விட்ச்வான் பகுதியில் 600 அடி ஆழமுள்ள இடத்திலிருந்து வெளிவரும் குழாய் உச்சியில் நெருப்பு எரிந்து
கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சீனாவின் அறிவியல்
கண்டுபிடிப்புகளை மட்டுமே ஆய்வு செய்த ஜோசப் நீதாம் என்ற அறிஞர் கீழ்க்கண்ட வகையில்
தன்னுடைய குறிப்புகளை பதிவு செய்துள்ளார். வானிலையிலும், காலநிலை ஆராய்ச்சியிலும் சீனர்கள் ஐரோப்பியர்களை விட ஆயிரம் ஆண்டுகள் முந்தி
இருந்தார்கள். வானவியலில் சீனர்கள் திகைக்கும் படியான இரண்டு குறிப்புகளை
வைத்திருந்தார்கள். சூரிய வட்டத்தில் கரும்புள்ளிகள்
இருப்பதை ஐரோப்பிய அறிஞர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பாக 1100
ஆண்டுகளுக்கு முன்பே சீனர்கள் அறிந்து கொண்டிருக்கிறார்கள். அதாவது சூரிய ஒளியின்
வெளிவட்டத்தில் ஆராய்ச்சியை ஐரோப்பியர் தொடங்குவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பாகவே சீனர்கள் அதன் ஒவ்வொரு அங்கத்துக்கும் தொழில்நுட்ப பெயரை சூட்டி
இருக்கிறார்கள். மற்றொரு திகைக்க வைக்கும் கண்டுபிடிப்பு எந்திரவியல் கடிகாரங்கள்
ஐரோப்பாவில் 14வது நூற்றாண்டில் தான் பயன்படுத்தப்பட்டது
சீனாவில் எட்டாம் நூற்றாண்டிலேயே இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று ஜோசப் நீதாம் பதிவு செய்து உள்ளார்
மண்ணியல், கனிமயியல், நிலவரைவியல் போன்ற துறைகளிலும் அவர்கள்
முன்னோடிகளாக இருந்தார்கள். அணுக்களின் அடிப்படையிலான சிந்தனைகளை விட
அலைகளின் அடிப்படையில் அவர்களின் சிந்தனை இருந்தது என்று
தெரிவிக்கிறார். சீனர்கள் பயன்படுத்திய நீர்இறைப்பு
எந்திரங்கள், எந்திரவியல் கடிகாரங்கள்,
காற்றாலைகள், நீராளிகள் போன்றவைகள் மிகவும் சிக்கலான
வடிவமைப்புகளையும் இயக்கங்களையும் கொண்டிருந்தது. நீராவி இயந்திரங்களுக்கு
முன்னோடியாக ஒரு இயந்திரமும் சீனாவில் இருந்திருக்கிறது.
கடைசி வம்சத்துக்கு முந்தைய
வம்சமான மிங் அரசவம்சத்தின் ஆரம்ப ஆண்டுகளில் (1405-1433) மிகவும் குறிப்பிடத்தக்க
சாதனையாக கடற்படை நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது. அட்மிரல் ஜெங் ஹி என்பவர் தொழில் நுட்ப ரீதியாக
வடிவமைக்கப்பட்ட கப்பற்படைகளின் மூலம் ஜாவா, இந்தியா,
ஆப்பிரிக்க கொம்புமுனை, பார்மோஸ் ஜலசந்தி ஆகிய
இடங்களுக்கு வெற்றிகரமாக சென்று வந்தார். ஐரோப்பாவில் கடற்பயணத்திற்கான
ஆய்வுகள்கூட தொடங்காத காலத்திலேயே சீனாவின் கடற்படையானது சிறந்த தொழில்நுட்பத்
தன்மையுடன் அமைந்திருந்தது. இதற்கு அடுத்து 150 ஆண்டுகளுக்கு
பிறகுதான் ஸ்பெயின் கப்பல்கள் தங்களது பயணத்தை துவங்கின. சீனக் கப்பல்களின்
அளவிற்கு தொழில்நுட்பமும், அதன் எண்ணிக்கையும் ஸ்பானிஷ்
கப்பற்படையில் இல்லை.
மிங் வம்ச காலத்தில் உருவான
கப்பற்படையின் நோக்கம் குறித்தும் அந்த அரசரின் செயல்பாடுகள் குறித்தும் வரலாற்று
ஆசிரியர்கள் மேன்மையான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அன்றைய மிங் வம்ச அரசர்
அறிவித்த கொள்கைகளும் இன்று சீன அதிபர் ஜி
ஜின் பிங் அறிவிக்கிற கொள்கைகளுக்கும் ஒற்றுமை இருப்பதை நாம் காண முடியும். சீனா எந்த நாட்டையும் ஆக்கிரமிக்காது,
ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடாது, மேலாதிக்கம்
செலுத்தாது, பொருளாதார உறவுகளை வைத்துக் கொள்வதோடு, அந்த நாட்டின் வளர்ச்சியும் சீன நாட்டின் வளர்ச்சியும் இணைந்தே பயணிக்க
வேண்டும், அதாவது ‘‘வெற்றி வெற்றி’’ (win win) என்ற
கொள்கையின் அடிப்படையில் சீனாவின் சர்வதேச ஒத்துழைப்பு இருக்கும் என்று இன்றைய ஜி
ஜின் பிங் அறிவித்திருக்கிறார்.
மிங் வம்சத்தின் மன்னர் சீன
கப்பற்படையின் பயணத்தின் போது சென்ற இடங்களில் சீனப்பேரரசின் மகத்துவத்தை அறிவிக்க
செய்தார். ஆடம்பர பரிசுகளை அவர்களுக்கு கொடுத்தார்கள். சீனாவிற்கு தூதர்களை அனுப்ப
வேண்டும் என்று அழைத்தார்கள். சீனப்பேரரசின் மகத்துவத்தை மற்ற நாடுகளுக்கு
தெரிவிப்பதற்காக நௌடவ் (Knowtow) என்ற கை கூப்பி தலை வணங்கும்
சடங்குகளை நடத்தினார்கள். இதைக் கடந்து நாடு பிடிக்கும் கொள்கை எதையும்
கொண்டிருக்கவில்லை. சீனாவிற்கு காலனிகளைப் (நாடுகளை) பிடிக்க வேண்டும் என்றோ அதன்
மூலமாக கிடைக்கும் செல்வத்திலிருந்து சீனா வளர வேண்டிய அவசியம் இல்லை என்பதையும்
மிங் வம்ச அரசர் அறிவித்தார். அதே நேரத்தில் சீன நாட்டு வணிகர்கள் வணிகம்
செய்வதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்கி கொடுத்தார். சீன கடற்படை சென்றடைந்த
நாடுகளுடன் நட்புறவை பேணுவதையே குறிக்கோளாக கொண்டார்கள்.
1433ல் அடுத்த
பேரரசர் ஆட்சிக்கு வந்தவுடன் வடகிழக்கு எல்லையில் அச்சுறுத்தல் ஏற்பட்டதால்
கடற்பயணங்கள் நிறுத்தப்பட்டன. கப்பற்படையை அகற்ற உத்தரவிட்டார். மீண்டும் பயணங்கள்
மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சீனாவின் கடற்படை திறன்கள் மங்கி விட்டன. சீன
வர்த்தகர்கள் ஜெங் ஹி பயணித்த பாதைகளில் வர்த்தகங்களை திறம்பட நடத்தினாலும்
கப்பற்படை மீண்டெழவில்லை. வளர்ந்த கப்பற்படையை சீனா தன்முனைப்பாக நிறுத்திக்
கொண்டது.
மக்கள் தொகையிலும் பிரதேச
அளவிலும் தொழில் புரட்சி நடக்கிற வரை சீனா பெரும் பணக்கார நாடாகத்தான் இருந்தது.
பெரிய ஆறுகள், உட்புறங்களில் உள்ள கால்வாய்கள் மூலம் நடைபெறும் போக்குவரத்துக்களால்
மக்கள் இணைக்கப்பட்டார்கள். 15 ஆம் நூற்றாண்டில் சீனாவில் 28 தேசிய நெடுஞ்சாலைகளும் 53
மாகாண நெடுஞ்சாலைகளும் மொத்த சீனாவையும் இணைத்தது. மிக நீளமான சீனப் பெருஞ்சுவரும், சுமார் 1800 கிலோமீட்டர் நீளமுள்ள மாபெரும்
வாய்க்கால் என்று பெயரிடப்பட்ட வாய்க்காலும், மண்ணில் ஒரு
சொர்க்கம் என்று அழைக்கப்பட்ட பெய்ஜிங் பேரரசரின் அரண்மனைகள்
போன்றவை சீனர்களின் அறிவையும் பிரம்மாண்ட சிந்தனைகளையும் வெளிகாட்டக் கூடியதாக
அமைந்து இருந்தது
பொருளாதார நடவடிக்கைகள் இந்தப்
பாதைகளில் தீவிரமாக அமைந்தது. சீனா பல நூற்றாண்டுகளாக உலகின் அதிக உற்பத்தி
பொருளாதாரமாகவும்,
அதிக மக்கள் தொகை கொண்ட வணிகப் பகுதியாகவும் இருந்தது. அதன்
செல்வவளம் மேற்கத்திய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக இருந்தது.
1820 ஆம் ஆண்டு பிற்பகுதியில் உலக மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் 30 சதவீதத்திற்கு மேலாக சீனாவின் உற்பத்தி
இருந்தது. ஐரோப்பாவின் மேற்கு, கிழக்கை விட அமெரிக்காவை விட,
இந்த உற்பத்தி அதிகமானது. சீனாவிற்கு பயணித்த பெரும்பாலான
மேற்கத்திய பார்வையாளர்கள் அதன் பொருள் செல்வத்தை கண்டு வியந்தனர்.
1736 இல்
பிரெஞ்சு இயேசு சபையைச்சேர்ந்த ஜீன்பாப் கிஸ்ட்டு ஆல்டே
என்பவர் சீனாவிற்குச் சென்ற மேற்கத்திய பார்வையாளர்கள் தெரிவித்த கருத்துக்களை
சுருக்கமாக முன் வைத்தார்.
"உலகில்
மிக அழகானது இந்த நாடு என்பதை யாரும் மறுக்க முடியாது. மிகவும் அடர்த்தியான மக்கள்
தொகை கொண்ட, மிகவும் செழிப்பான ராஜ்ஜியம். சீனாவைப் போன்ற
ஒரு பேரரசு ஐரோப்பா முழுவதும் ஒரே இறையாண்மையின் கீழ் ஒன்று பட்டால் எப்படி
இருக்கும் என்பதற்கு சமமான முறையில் இருந்தது. பெரும்பாலான சீனர்கள் சீனாவில்
மதிப்புமிக்க உடைமைகளும் அறிவுசார் சாதனைகளும் இருப்பதாக நம்பினர். சீனாவின் உயர்
அடுக்கினர் இதை சாதாரண பொருளாதார பரிமாற்றமாக மட்டும் பார்க்காமல் அதன் மேன்மையை
உயர்த்தி பிடித்தனர்’’ என்று எழுதுகிறார். இவையெல்லாம் ஒரு சீன ஆதரவாளர் தனது
நூலில் எழுதவில்லை. அமெரிக்கா ராஜதந்திரி ஹென்றி கிஷிங்கர் தனது நூலில் வியந்து
எழுதுகிறார்.
இப்படிப்பட்ட பிரம்மாண்டமான
வளர்ச்சிகள் ஏன் அதற்குப் பின் உருவாகிய ஐரோப்பாவை மிஞ்ச முடியவில்லை. இது
சீனாவிற்கான கேள்வி மட்டுமல்ல... சீனாவைப் போன்று பண்டைய நாகரிகங்களில் ஒன்றான
இந்தியா மற்றும் அரேபிய நாடுகளின் நாகரிகங்களுக்கான
கேள்வியாகவும் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக