நதிப்படுகையில்தான் நாகரிகங்கள் தோன்றின. ஆனால் சீன நாகரிகத்தை பிரசவித்த மஞ்சள நதி மாறுபட்டது. சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய நதி இது. 5,464 கிலோமீட்டர் தூரம் ஓடி ஒன்பது மாகாணங்கள் வழியாக கடலில் சங்கமிக்கிறது. இதன் ஆற்றுப்படுகை மிகப் பெரியது. அடிக்கடி தனது போக்குகளை மாற்றி வெள்ளத்தை ஏற்படுத்தும்.எந்த திசை நோக்கி வெள்ளம் ஏற்படும் என்பதை கணிக்க முடியாது. இதனால் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் பேரழிவு உண்டாகும். இதை சீனாவின் துயரம் என்றும் அழைப்பார்கள். வரமும் சாபமும் இணைந்து பயணிக்கும் நதி இது.
1949ம்
ஆண்டு புரட்சிக்குப் பிறகு, 1960,1969,1992,2000 ஆகிய ஆண்டுகளில் சான்மென்சியா, லியுஜியாக்ஸியா,
லாங்யாங்சியா, Xiaolangdi ஆகிய
இடங்களில் பெரும் அணைகளைக் கட்டி சீனாவின் துயரத்தை சீனாவின்
செழுமையாக மாற்றினார்கள். பாலைவனங்கள் சோலைவனமாகவும், பெரும்
நீர் மின்சக்தி உற்பத்தி இடமாகவும் மாற்றினார்கள். இந்த நதிப்படுகையில்தான் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீன நாகரீகம் பிரசவிக்கப்பட்டது.
இங்குதான்
பண்டைய விவசாயிகளின் குடியிருப்புகளும்,
சிறு நகரங்களும் உருவாகி மக்கள் குழுக்களாக வாழ தொடங்கினார்கள். சீனாவின் கலாச்சார
கோளத்தில் புவியியல் மையமாக இந்தப்பகுதி விளங்கியது. சீனாவின் எழுதப்பட்ட
வரலாறுகளே 4000 ஆண்டுகளை கடந்து ஊடுருவிச் செல்கிறது.
கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் அவர்கள் கடைபிடித்த
சில பழக்க வழக்கங்களை இன்றும் கடைபிடிக்கிறார்கள் என்றால் அதன் தொடர்ச்சியை நாம்
புரிந்து கொள்ள முடியும். சீன நாகரிகத்தின் அறுபடாத இழைகள் தொடர்வதாக வரலாற்று
அறிஞர்கள் பதிவு செய்கிறார்கள். ஆசிய ஆப்பிரிக்க கண்டங்களில் (Afro-Eurasia)
நாகரீக தொட்டில்கள் என்று அழைக்கப்படும் பண்டைய எகிப்து, மெசபடோமியா, இந்தியா போன்றே சீன நாகரிகமும் மிகப் பழமையானது. பண்டைய சீன மக்கள் எகிப்தியர்கள்,
அசீரியர்கள், யூதர்கள் போன்றவர்களுக்கு
ஒப்பான முறையில் வாழ்ந்தார்கள்.
சீனா,
நிலபிரப்புத்துவ உற்பத்தி முறையில் நீண்ட காலம் நீடித்தது. ஆசிய கண்டத்தில்
இருந்த இதர நாடுகளைப் போலவே ஏன்
இந்தியாவைப் போலவே அங்கும் நேரடி அடிமை உற்பத்திமுறை, ஆதிக்கம் செலுத்தவில்லை. அதற்கு மாறாக அடிமைகள் இருந்தார்கள். அதற்கான மாற்று வடிவமாக பண்ணை அடிமை முறைகளும், நிலபிரப்புத்துவ உறபத்திமுறைகளும் ஆதிக்கம் செலுத்தின.
பொதுக்காலத்திற்கு முன்பு (BCE-Before Common Era) 2070 ஆண்டுகள் துவங்கி பொதுக்காலமான (CE-Comman Era) 1912 ஆம் ஆண்டுகள் வரை இந்த உற்பத்தி முறைகள் பல்வேறு வடிவங்களில் வளர்ச்சி
அடைந்து வந்துள்ளது. பி.சி.இ (BCE) 221ஆம் ஆண்டு நிலபிரப்புத்துவத்தின் முழுமையான கூறுகளை உள்ளடக்கிய பேரரசுகள் உருவாகின.
பி.சி.இ 2070 ஆம் ஆண்டு சீனாவில்
முதல் ஆட்சி வம்சமாக சியா அரச மரபு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடைசி அரச மரபாக குயிங்(Qing) வம்சம் (சி.இ.1912வரை) பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்காலத்தில் சீனப் பிரதேசங்கள் பல காலங்கள் ஒன்றுபட்டதாகவும், பல்வேறு காலத்தில் பிரிக்கப்பட்ட
பகுதிகளாகவும், மோதல்களும்,
சச்சரவுகளும் மாறி மாறி அரங்கேறிக் கொண்டிருந்தது. வம்ச ஆட்சிமுறை என்பது சீனாவில்
நிலப்பிரபுத்துவ சமுதாய உற்பத்திக் காலம் முழுவதும் பல்வேறு
வடிவங்களில் நீடித்த மன்னர் ஆட்சி முறையாகும். பேரரசுகள் பி.சி.இ 221 இல் உருவாவதற்கு முன்பு சுமார் 1850 ஆண்டுகள் மேற்கண்ட போக்குகள் வரலாற்றில் நீடித்தது.
‘யூ
தி கிரேட்’ என்கிற ‘யு ஜி இன்ஜினியர்’ என்பவர்
பண்டைய சீனாவில் ஒரு புகழ் பெற்ற மன்னர்.
இவர்தான் சீனாவின் முதல் அரச வம்சமான சியா வம்சத்தின் ஆட்சியை நிறுவினார். மஞ்சள் நதி வெள்ளத்தை கட்டுப்படுத்துவதில் இவர் திறமையாக செயல்பட்டதால்
இவரின் புகழ் புராணக் கதைகளாக கூட பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேர்மையும் தார்மீக உணர்வும் கொண்டவர் என்பதால் இவரின் பெயர் பல இலக்கியங்களில்
பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வம்சத்தின் ஆட்சி காலம் பி.சி.இ. 2070-ல் தொடங்கி பி.சி.இ. 1766 வரை நீடித்தது. மத
குருக்கள் ஆட்சியில் செல்வாக்கு செலுத்தினார்கள் என்றும் முறையான அதிகாரங்களை
பயன்படுத்தியதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுவாரஸ்யமான குறிப்பு
என்னவென்றால், இவர்கள் ஆட்சி காலத்தில்தான் சீன
நாட்காட்டிகளை தொகுத்து அளித்தனர். பிற்காலத்தில் உருவான கன்பூசியஸ் உட்பட பல அறிஞர்கள் யூ தி கிரேட் என்ற மன்னரின் அமைதியான நல்லாட்சி
என்று பாராட்டியுள்ளனர்.
இந்த அரசின் செயல்பாடுகள் குறித்து ஆரம்ப காலத்திற்கான ஆதாரங்கள் மிக
குறைவாகவே கிடைத்துள்ளது.
ஒரு
அரச மரபின் வீழ்ச்சியை தொடர்ந்து உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் அடுத்த அரச வம்சத்தை முன்னிலும்
வலுவானதாக உருவாக்கியது. பி.சி.இ 1600 முதல் பி.சி.இ 1046 வரை சாங் வம்சத்தினர் ஆட்சி செய்தனர். சீனாவில் கிடைத்துள்ள எழுத்து ஆதாரங்கள் அனைத்தும் இக்காலத்தை சேர்ந்தவை.
இவர்கள் ஆட்சி காலத்தில் சிறு நகரங்களை கட்டி அமைத்தார்கள்.
நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்க நிர்வாகத்தையும் உருவாக்கினார்கள். மக்கள் விவசாயத்தில் தினை வகைகளை பயிரிட்டனர். தங்களது பிராந்திய எல்லைகளை
பாதுகாப்பதற்காக அடிக்கடி போர்களை நடத்தினார்கள். வெண்கல
தொழில்நுட்பம், குதிரை வளர்ப்பது,
குதிரை இழுக்கும் தேரை அறிமுகப்படுத்தியது இவர்களின் ஆட்சி காலத்தில்தான். சீனாவில் முழு வளர்ச்சி அடைந்த எழுத்து முறையை கொண்ட முதல் கலாச்சாரம்
இவர்கள் காலத்தில் எழுச்சி பெற்றது.
சீன
வரலாற்றில் நீண்ட காலங்கள் ஆட்சி செய்த அரசமரபு சோவ் அரச மரபாகும். பி.சி.இ 1045 முதல் பி.சி.இ 256 வரை சுமார் 789 வருடங்கள் சீனாவை ஆண்டனர். இக்காலத்தில்தான்
இரும்பு, சீனாவின் வாழ்க்கையில் பிரவேசித்தது. செப்பு சிற்ப
வேலைகள் உச்சங்களை கண்டது. சீன மொழியின் எழுத்து முறை
விரிவடைந்தது. இக்காலத்தில் சீனாவில் பெரும் தாக்கங்களை
உருவாக்கிய சிந்தனை முறைகள் தோன்றின. கன்பூசியஸ்,
லாவோஸ், மோகி, ஆன்பெய், மென்சியஸ்சூ போன்ற அறிஞர்கள் இக்காலத்தில்
உருவானார்கள். இவர்கள் சீன சிந்தனை மரபில் முக்கிய இடம்
பெற்றவர்கள் ஆவார்கள். கன்பூசியனிசம், தாவோயிசம், சட்டவாதம் போன்ற பல தத்துவ பள்ளிகள்
இக்காலத்தில் உருவானது. அறிவு சாகசத்தின் காலமாக இக்காலம்
நினைவு கூரப்படுகிறது. இந்த தத்துவ பள்ளிகளில் மிகவும்
பிரபலமானவை கன்பூசியசால் பி.சி.இ 551-479 காலத்தில் நிறுவப்பட்டதாகும்.
மன்னராட்சி
முறையில் ஒடுக்கு முறைகள் மக்களை கிளர்ச்சி செய்யும் நிலைக்குத் தள்ளியது. அதிருப்திகள் மேலோங்கி ஆட்சி அதிகாரத்தை அசைத்தது. அதுவரை ஓரளவு பிரதேசங்களை கட்டுப்படுத்தி வந்த அரச வம்சங்கள் சிதைந்தது. பி.சி.இ 476 ஆம் ஆண்டுமுதல் பிசிஇ 221 ஆம்
ஆண்டு வரை சீன வரலாற்றை போரிடும் காலங்களின் வரலாறு என்று அழைக்கிறார்கள். ஒன்றுபட்ட அரசு பிரிந்து ஒருவருடன் ஒருவர் போரிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இவற்றில் ஏழு பிரதேசத்தின் அரசுகள் ஓரளவு வலுப்பெற்று இருந்தன. இவர்களுக்கிடையிலான யுத்தங்கள் மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன.
போரிடும்
காலங்கள் பல புதிய கண்டுபிடிப்புகளை தேவைகளிலிருந்து உருவாக்கியது.
இக்காலத்தில்தான் இதுவரை போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்ட வெண்கலத்துக்கு பதிலாக
இரும்பிலான ஆயுதங்கள் பரவத் தொடங்கியது. கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாக இருந்த
சில மாநிலங்கள் இந்த அரசுகளுக்கு கீழ் கொண்டுவரப்பட்டன. சோவ் அரசவம்ச காலத்தில்
உருவான தத்துவ பிரிவுகள், யுத்தம் நடக்கிற
காலத்தில் வாழ்க்கை தேவையிலிருந்து மேலும் விரிவடைந்தது. தாவோயிசம் என்ற நெறி மேலும் செல்வாக்கு பெறத்
தொடங்கியது. கணிதத் துறை வளர்ச்சி அடைந்தது மட்டுமல்ல, வணிகத்திற்கு பயன்படும் எண் கணிதம் மேலும் பெருமளவு விரிவடைந்தது. இரட்டைஇலக்க பெருக்கல்முறை
இக்காலத்தை சேர்ந்தது. உலகின் "தசம பெருக்கல் அட்டவணை" ஆரம்பம் இதுதான் என்பதை அமெரிக்க பல்கலைக்கழகங்கள் உட்பட பலரும் அங்கீகரித்து
உள்ளன.
மூங்கில்
கீற்று
இலைகளில் மையால் எழுதப்பட்ட ஏராளமான நூல்கள் இக்காலத்தைச்
சேர்ந்தவை. தற்போது சீன பல்கலைக்கழகங்களில் இது பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த
மூங்கில்கீற்று எழுத்துக்களால், எழுதப்பட்ட இலக்கியங்கள்
வரலாற்றின் தொடர்புகளை இணைக்கிறது.
சீனாவில்
இந்த 1850 ஆண்டுகளில், அரசு உருவாக்கமும் ஆட்சியாளர்களின்
நிர்வாக முறைகளும், படிப்படியாக வளரத் தொடங்கியது. ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை எதிர்த்து கிளர்ச்சிகள் தத்துவங்கள் என
அரங்கேறியது. இந்த மோதல்கள் மேலும் வளர்ச்சியை
ஏற்படுத்தியது. புதிய கண்டுபிடிப்புகளும், உற்பத்தி
கருவிகளின் வளர்ச்சி பெரும் பிரதேசங்களை கட்டுப்படுத்தும் பேரரசுகளை உருவாக்கியது.
அடுத்த 2000 ஆண்டுகள் சீனாவின் ஆட்சி முறைகள் பேரரசர்களின்
கட்டுப்பாட்டுக்குள் வந்தது. வளர்ச்சியும் அடக்குமுறைகளும்
கிளர்ச்சிகளும் புதிய புதிய தத்துவ போக்குகளும் சீன வரலாற்றில் புயலாக உருவெடுத்தன.
bakkiam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக