சௌவ் வம்சத்திற்கு பிறகு சீனாவில் 255 ஆண்டுகள்
போர்க்காலமாகவே இருந்தது. தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற கதையாக சீனாவில் பல
சிற்றரசர்கள் உருவாகினர். பிரதேசங்கள் இணைவதும் பிரிவதும் தொடர் நிகழ்வானது. எல்லைகள்
மாறிக்கொண்டே இருந்தன. சீனாவில் இருந்த சிற்றரசுகளில் சக்தி வாய்ந்த சிற்றரசாக
சின் பிரதேசம் இருந்தது. இதன் அரசன் மற்ற சிற்றரசர்களைக் காட்டிலும் வலிமை மிகுந்தவராக
இருந்தார். பிசிஇ 221 ஆம் ஆண்டு சௌவ் வம்சத்திற்கு முடிவு கட்டப்பட்டது. அதன் கடைசி
மன்னனை வெற்றிக் கொண்ட அரசன் தன்னை சீன சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டார். அவர்
பெயர் சின் ஷி ஹூவாங் தீ என்பதாகும். இதற்கு தெய்வீக சக்கரவர்த்தி என்று அர்த்தம்.
கின் வம்ச காலத்தில் சீனா முழுவதும் அவர்களின்
கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எதிரிகள் இருக்கும் இடம் தெரியாமல் போனார்கள். பேரரசரின்
ஒருங்கிணைப்பு மையப்படுத்தப்பட்ட அதிகாரத்திற்கு வழி வகுத்தது. அரண்மனைகள், பெரிய கட்டிடங்கள்,
சாலைகள் பிரம்மாண்டமாக உருவாகின. இந்த வம்சத்தின் மன்னர், தனக்கு முன் யாராலும் செய்ய
முடியாததை செய்து காட்டினார். அதாவது சீனாவை ஒன்றிணைத்து ஒரு சக்தி வாய்ந்த அரசாக மாற்றினார்.
சிதறிக் கிடந்த ராணுவ அமைப்புகளை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து பலமான ராணுவத்தை
கட்டமைத்தார். தேச பாதுகாப்பிற்காக பல இடங்களில் தற்காப்புசுவர்கள் கட்டப்பட்டன. ஒரு
பேரரசு தொடர்வதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. கின் வம்ச சக்கரவர்த்தியின் சாதனைகளும்,
அவரால் மக்களுக்கு ஏற்பட்ட வேதனைகளும் வரலாற்றில் நிலைத்து நின்றது. சிற்றரசுகளாக இருந்தபடி
எப்போதும் போரிட்டுக் கொண்டு மக்களின் அமைதியை குலைத்து வந்த பிரதேசங்களை முழுவதுமாக
கின் பேரரசர் வெற்றி கொண்டு தன் குடையின் கீழ் கொண்டு வந்தார். சீனாவை 36 மாகாணங்களாகப்
பிரித்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனி அதிகாரியை நியமித்து திறம்பட நிர்வகித்தார்.
அவர் ஆட்சிக் காலத்தில் அமைதி இருந்தது. ஆனால், மக்களுக்கு உரிமைகள் பறிபோனது. உரிமையை
விட அமைதிக்கே அப்போது மக்கள் முன்னுரிமை கொடுத்தனர்.
ஆனாலும் சீனாவின் வடக்கு பகுதியில் இருந்து
தார்தாரியர்கள் என்பவர்கள் அவ்வப்போது திடீர் தாக்குதலை நடத்தி மக்களின் அமைதியை சீர்குலைத்தார்கள்.
இந்தத் தொடர் தாக்குதலை தடுப்பதற்காக வடக்கு எல்லையில் நீண்ட சுவர் எழுப்ப சக்கரவர்த்தி
தீர்மானித்தார். 2650 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு சுவர் எழுப்பினார். சீனப்பெருஞ்சுவரின்
மொத்த நீளம் 21196 கிமீ ஆகும். இதை கட்டி முடிக்க 3 லட்சம் பேர் வேலை செய்தனர். சிறைக்
கைதிகளும், அரசுக்கு ஆகாதவர்களும் இந்த வேலையை செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர்.
சின் ஷி ஹூ வாங் தீ சக்கரவர்த்தியாக மாறிய பிறகு தன் புகழ்பாடிகளை
மட்டும் நல்லபடியாக பார்த்துக் கொண்டார். அவருக்கு முன்னால் இருந்த அரசர்கள், அறிஞர்கள்
மற்றும் வரலாறை யாராவது புகழ்ந்து பேசினால் அவர்களை ஒடுக்கி உருத்தெரியாமல் செய்வதை
கொள்கையாகவே வைத்துக் கொண்டிருந்தார். தங்கள் (கின் வம்ச) ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட
வரலாறு, மத நூல்கள், வைத்திய நூல்கள், விவசாய நூல்கள், மந்திர சாஸ்திர நூல்கள்தான்
இருக்க வேண்டும். அதற்கு முந்தைய எதுவும் இருக்கக்கூடாது. அவற்றை தீயிட்டு கொளுத்த
வேண்டும் என்று உத்தரவிட்டார். அரச கட்டளை அப்படியே நிறைவேற்றப்பட்டது. தேசம் முழுவதும்
இருந்து வரலாற்று நூல் உள்பட பல வகையான நூல்கள் தலைநகருக்கு எடுத்து வரப்பட்டு தீயிட்டுக்
கொளுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான நூல்கள் எரிக்கப்பட்டன. பல தரப்பட்ட அறிவு, அக்னிக்கு
இரையாக்கப்பட்டது. தங்களது அரிய அறிவு பொக்கிஷங்களை தர விரும்பாத பலர் தங்களை தாங்களே
எரித்துக் கொண்டனர்.
இன்று இந்தியாவை ஆளுகின்றவர்களும் ஒரு தேசம்,
ஒரு தலைவர், ஒரு மதம், ஒரு மொழி என்று ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றனர். வரலாற்றை தங்களுக்கு
ஏற்றாற்போல் வளைத்துக் கூறி, திரித்து கூறி திரிந்து கொண்டிருக்கின்றனர். அறிவுக்கு
அப்பாற்பட்ட விஷயங்களை வரலாறாக கட்டமைத்து, ஒற்றை தலைமையை உருவாக்கும் முயற்சியில்
ஈடுபட்டு வருகின்றனர். ஆடுகள் நனைகிறதே என்று இந்துத்துவ ஓநாய்கள் முதலைக் கண்ணீர்
வடிக்கின்றன.
எல்லா சிற்றரசர்களையும் வெற்றிகொண்ட பிறகு ‘தெய்வீக சக்கரவர்த்தி’ செய்த
காரியம், அந்த பிரதேசங்களில் இருந்து எல்லா ஆயுதங்களையும் ஆயுத தளவாடங்களையும் தலைநகருக்கு
கொண்டு வரச் செய்து அவற்றை உருக்கி விட்டார். அதைக் கொண்டு பல உருவச் சிலைகளை உருவாக்கி
விட்டார். இதன் மூலம் அந்த பிரதேசங்களில் மக்களை
நிராயுதபாணியாக்கி விட்டார். அரண்மனைகளை கட்டுவதில் அலாதி ஆர்வம் கொண்டு, தலைநகரைச்
சுற்றி 70 மைல்கள் சுற்றளவில் 270 ஆடம்பர அரண்மனைகளை கைதிகளைக் கொண்டே கட்டி
முடித்தார். பி.சி.இ. 210 ஆம் ஆண்டில் தெய்வீக சக்கரவர்த்தி (சின் ஷி ஹூ வாங் தீ) இயற்கை
எய்தினார். அத்துடன் கின் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது. குறுகிய காலமே (15 ஆண்டுகள்)
கின் வம்சம் ஆண்டாலும், ஒரு பேரரசு உருவாக கின் வம்சம்தான் அடித்தளம் அமைத்து கொடுத்தது.
பி.சி.இ. 206ஆம் ஆண்டு ஹான் அரச வம்சம் ஆட்சியை
கைப்பற்றியது. ஹான் வம்சத்தை உருவாக்கியவர் லியூ பாங்க் என்ற விவசாயி ஆவார். லியூ பாங்க்
தான், விவசாயிகளின் எழுச்சிக்கு தலைமை தாங்கி படை அமைத்து கின் வம்சத்தை வீழ்த்தி ஹான்
வம்சத்தை ஆட்சிபீடத்தில் ஏற்றினார். உலகத்திலேயே முதல் முதலாக மக்கள்திரள் பங்குபெற்ற
புரட்சி இதுதான் என்று சீன சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்த வம்சத்தைச்
சேர்ந்த மன்னர்கள் மொத்தம் 26 பேர். 420 ஆண்டுகள் வரை ஹான் வம்சம் சீனாவை ஆட்சி செய்தது.
சீனாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் தங்களை ஹான் வம்சத்தினர் என்று சொல்லிக் கொள்வதில்
பெருமைப்படுகின்றனர்.
ஹான் வம்ச ஆட்சிக் காலத்தில் பல்வேறு முக்கிய
நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நிலவரி ரத்து செய்யப்பட்டது. முந்தைய ஆட்சிக் காலத்தின்
அநீதியான சட்டங்கள் நீக்கப்பட்டன. மன்னர்களின் ஆடம்பர செலவுகள் குறைக்கப்பட்டன.
புதிய அரண்மனைகள் கட்டப்படவில்லை. கனிமங்கள் அரசுடமையாக்கப்பட்டன. இரும்பு, உப்பு ஆகியவற்றை
அரசே உற்பத்தி செய்தது. வருமான வரி கணக்கிடும் முறை கொண்டு வரப்பட்டது. ஐந்து சதவீத
வருமான வரி செலுத்த வேண்டும் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டது. நாணய புழக்கம் அதிகமானது.
பாலங்கள், கால்வாய்கள் ஹான் வம்ச ஆட்சிக் காலத்தில் பல்கிப் பெருகின.
தலைநகரத்தில் ஆயிரக்கணக்கான நூல்களைக் கொண்ட
பொது நூலகம் அமைக்கப்பட்டது. வெளிநாடுகளுடன் அதிக வணிகத் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன.
தபால் முறைகள் கொண்டுவரப்பட்டன. சீனாவில் முதல் நூற்றாண்டிலேயே காகிதம் கண்டுபிடிக்கப்பட்டதால்,
உலகத்திலேயே முதன்முதலாக காகிதத்தை உற்பத்தி செய்து அதில் எழுத தொடங்கியவர்களும் அதன்
மீது அச்சடித்து புத்தகம் உருவாக்கியவர்களும் சீனர்களே ஆவார்கள். ஹான் வம்ச
காலத்தில் நிறைய நூல்கள் எழுதப்பட்டன; நிறைய நூல்கள் அச்சிடப்பட்டன. சீன சரித்திரத்தின்
தொடர்ச்சி எழுத்தில் கொண்டுவரப்பட்டது. ஹான் வம்ச ஆட்சி காலத்தில்தான் சீனாவில் கன்பூசியஸ்
மதம், அரச மதமாக அறிவிக்கப்பட்டது. புத்த மதமும் அப்போதுதான் சீனாவில் காலடி எடுத்து
வைத்தது.
சீனாவின் வலிமையான பேரரசுகளில் மிக முக்கியமானதாக
ஹான் வம்சப் பேரரசு கருதப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் மக்கள் தொகை எண்ணிக்கையில்
5.5 கோடியை கடந்தது. பேரரசின் எல்லைகள் கொரியா, மங்கோலியா, வியட்நாம், ஜப்பான் மற்றும்
மத்திய ஆசியாவின் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டன.
மக்கள் தொகை வளர்ச்சியால் தேவைகள் அதிகமாகின.
அது வேளாண்மை, கைத்தொழில், வணிகம் ஆகியவற்றின் வளர்ச்சியை துரிதப்படுத்தியது. அரசு,
நிலங்களை கைப்பற்றி மீண்டும் மறுவிநியோகம் செய்தது. ஏற்கனவே சிறப்பு பெற்றிருந்த சீனப்பட்டு
தொழில் மேலும் விரிவடைந்தது. பி.சி.இ190ல் ‘உய்’ அரசனால் தொலைநோக்குப் பார்வையுடன் பட்டுப்பாதை அமைக்கப்பட்டது.
இதனால் இந்தியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் வணிகத்தில் பெரும் பயனடைந்தன. கல்வி,
அரசுடைமை ஆக்கப்பட்டது மட்டுமல்ல நாடு தழுவிய தேர்வு முறையும் கொண்டுவரப்பட்டது. தொழில்நுட்பத்தில்
சமகால ரோமானிய பேரரசுக்கு இணையாக வளர்ந்தது. காகிதங்களை அதிகமான முறையில் இக்காலங்களில்
உற்பத்தி செய்ததால், அதற்குரிய தொழிற்சாலைகள் அதிகமாகின. தொழிலாளர்களும் அதற்கேற்ப
அதிகமானார்கள். எழுதப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. கலை இலக்கியம்
செழித்தது. வரலாறு குறித்த பார்வை மேம்பட்டது. நிலத்தை உடமையாக வைத்திருந்த பணக்கார
குடும்பங்கள்தான் ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தின.
ஹான் பேரரசு பி.சி. 220 ஆம் ஆண்டு வீழ்ச்சி
அடைந்தது. ஹான் வம்சப் பேரரசு வீழ்ச்சிக்குப் பிறகு சுமார் 400 ஆண்டு காலம் சீனாவில்
நிலையற்ற அரசுகளால் குழப்பங்களும், அமைதியின்மையும், அதிகரித்தன. வடக்கு சீனா, தெற்கு
சீனா, மேற்கு சீனா என்று மூன்று பிரதேசங்களாக மாறி மூன்று ராஜ்ஜியங்களின் ஆட்சி நடைபெற்றது.
வடக்கு சீனாவில் மட்டும் 16க்கும் மேற்பட்ட சிற்றரசுகள் செயல்பட்டு வந்தன. இதனால்
தார்த்தாரியர்கள் மீண்டும் படையெடுத்தார்கள். சில பகுதிகளில் வென்றார்கள்; ஆனாலும்
அங்கு தொடர்ந்து நீடிக்க முடியாமல் வெளியேறினார்கள். இந்த காலகட்டத்தில் சீனாவில் புத்த மதம் மிக வேகமாக பரவியது. ஏராளமான புத்த மடங்கள் உருவாகின. புத்த
பிக்குகளும் அதிகரித்தனர். புத்த மதத்தை அறிந்து கொள்ள சீனர்கள் பலர் இந்தியாவிற்கு பயணப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில்
இந்தியாவிற்கு வந்தவர் தான் பாஹியான் ஆவார்.
மேலும், நிலையற்ற அரசுகள் இருந்தாலும், இந்தக்
காலகட்டத்தில் சீனர்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்றிருந்தனர். சக்கரத்திற்கு
தேவையான கண்டுபிடிப்புகள், சதுர வடிவிலான வில், நீர் ஆற்றலில் இயங்கும் பொம்மைகள்,
நீர் பாய்ச்சலுக்கு தேவையான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வெடிபொருட்களும், திசைகாட்டி
கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டன.
நானூறு ஆண்டுகள் குழப்பத்திற்கு பிறகு மக்களின்
சலிப்பும் இழப்பும் உச்சத்தை அடைந்த காலகட்டத்தில் 618 ஆம் ஆண்டு தாங் வம்சம் ஆட்சி
பீடத்தைக் கைப்பற்றியது. இந்த ஆட்சி 907 ஆம் ஆண்டு வரை சுமார் 289 ஆண்டு காலம் நிலை
பெற்றது. இந்த வம்சத்தில் 23 மன்னர்கள் அடுத்தடுத்து ஆட்சி செய்தார்கள். இந்த வம்சத்தை
சேர்ந்த தை த்ஷூங் என்ற மன்னன்
மகா அலெக்சாண்டருக்கு சமமான முறையில் பேசப்படுகிறார். அவர், மன்னருக்கான ஆடம்பரங்களைத்
துறந்தார். குற்ற செயல்களை குறைக்கக்கூடிய ஏராளமான நடவடிக்கைகளை எடுத்தார். சிறைக்
கைதிகளை திருத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டார். மரண தண்டனைகளை குறைப்பது என்று முடிவுடன்
செயல்பட்டார்.
இவர் காலத்தில்தான் இந்தியாவிலிருந்து பலர்
புத்த மதத்தை பரப்புவதற்கு சீனாவிற்கு சென்றனர். பார்ஸி, கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களும் அங்கு
சென்று மதப்பிரசாரம் செய்துள்ளனர். இவர் காலத்தில் தான் யுவான் சுவாங் இந்தியாவிற்கு
பயணப்பட்டார். சீனாவின் பல பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அறிஞர்
பெருமக்கள் விவாதம் நடத்துவதற்கான ஏராளமான அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 56,000 நூல்களைக்
கொண்ட நூலகம் செயல்பட்டு உள்ளது. ஐரோப்பியர்களே சீனாவை அறிந்து கொள்ள வேண்டும் என்று
ஆர்வப்பட்டார்கள்.
அடுத்தடுத்து வந்த மன்னர்களின் மக்களுக்கு
எதிரான செயல்பாடுகளாலும், மன்னராட்சியில் இருக்கின்ற வழக்கமான உள் பூசல்களாலும், தொடர்ந்து
மக்களை புறக்கணிக்கிற போதும் மன்னராட்சி மண்ணைக் கவ்வுகிறது.
தாங் வம்ச ஆட்சி 907 ம் ஆண்டு வீழ்ச்சி அடைந்த
பிறகு 960 ஆம் ஆண்டு வரை சுமார் 50 ஆண்டுகள் 5 வம்சங்கள் சீனாவை ஆட்சி செய்தன. 960
முதல் சோங் வம்ச ஆட்சி தொடங்கியது. இதிலிருந்து 319 ஆண்டுகள் இந்த வம்சத்தின் பெயரைச்
சொல்லி 1271 ஆம் ஆண்டுகள் வரை பல மன்னர்கள் ஆட்சி செய்தனர்.
இன்றைய சீன எல்லைகளுக்கு அப்பால் இருந்து
முதல் முறையாக சீனாவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியவர் மங்கோலிய இனத்தைச் சேர்ந்த
செங்கிஸ்கானின் பேரன் குப்ளாய் கான் ஆவார். இவர் தோற்றுவித்த வம்சத்தின் பெயர் யுவான்
அரச வம்சமாகும். செங்கிஸ்கான் 1211 ஆம் ஆண்டு சீனாவின் வடபகுதி மீது படையெடுத்தார்.
சீனாவின் வடபகுதியை வெற்றி கொண்டார். சீனாவின் தெற்கு பகுதியையும் கைப்பற்றி நினைத்த
அவர், அதற்குள் 1227 ஆம் ஆண்டு இறந்து விட்டார். அதனைத் தொடர்ந்து மங்கோலியர்கள் சீனாவின்
உட்பகுதியில் இருந்த சில ஆட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டு 1234 ஆம் ஆண்டு கின் ஆதிக்கத்தை
தோற்கடித்து சீனாவின் மற்றொரு பகுதியை கைவசப்படுத்தினர். 1259 ஆம் ஆண்டு மங்கோலிய அரசின்
தலைமை பதவிக்கு வந்த செங்கிஸ்கானின் பேரன் குப்ளாய்கான் 1260 ஆம் ஆண்டு துவங்கி
1271 ஆம் ஆண்டு முழு சீனத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். எனினும்
சீனாவின் எதிர்ப்பு பலமாக இருந்தது. தேசப்பற்று என்ற உணர்விலும், மங்கோலியர்களின் அன்னிய
ஆட்சி என்ற முறையிலும் மிக வலுவான முறையில் மங்கோலியர்களின் ஆட்சிக்கு எதிர்ப்புகள்
உருவாகின.
குப்ளாய் கான், சீனாவில் மிகப்பெரும் கால்வாய்களை
வெட்டினார். குறிப்பாக தலைநகரத்திற்கு தானியங்கள் கிடைக்கின்ற வழியில் ஏற்கனவே துவக்கப்பட்டு
நின்று போயிருந்த கால்வாயை நான்கு மாநிலங்கள் வழியாக மேலும் ஆழப்படுத்தி நீளமாக வெட்டியெடுத்து
தலைநகருடன் இணைத்தார். இந்த கால்வாயின் நீளம் 1800 கிலோமீட்டர் ஆகும். ஆசிய அதிசயங்களில்
இதுவும் ஒன்றாகும். மக்களுக்கு தேவையான தானியக்கிடங்குகளையும் பெரும் கட்டிடங்களையும்
கட்டினார்.
1271 முதல் 1368 வரை சுமார் 100 ஆண்டுகள்
சீனாவை மங்கோலியர்கள் ஆட்சி செய்தார்கள். சீனாவில் ஏற்பட்ட அந்நிய ஆட்சி இதுதான் என்று
வரலாற்று அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். குப்ளாய்கான் தலைமையிலான யுவான் வம்சம்
சீனா முழுவதும் ஆட்சி செய்தது. முதல் முறையாக சீனா முழுவதும் ஆட்சி செய்த சிறுபான்மை
இனம் யுவான் வம்சம்தான். இவர் காலத்தில் தான் 6400 கிலோமீட்டர் தூரம் உள்ள பட்டுப்பாதை
அரசின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக இருந்தது. ஐரோப்பிய சாகச பயணியான மார்க்கோ போலோ
பல ஆண்டுகள் சீனாவில் பயணம் செய்தார். மங்கோலியர்களின் ஆட்சி காலத்தில் சீனாவில் பாரம்பரிய
சமூக அமைப்பு மற்றும் கலாச்சாரம் மிகப்பெரிய மாற்றத்திற்கு உட்பட்டது. மங்கோலிய ஆதிக்கத்திற்கு
எதிராக மக்களிடையே பொதுவான உணர்வுகள் மேலோங்கியது. இது ஒரு தேசிய உணர்வாக இருந்தது.
மங்கோலியாவில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரங்களால், சீனமக்களின் எழுச்சியால் யுவான் வம்சம்
வீழ்ச்சி அடைந்தது.
அதன்பிறகு மிங் அரச மரபு ஆட்சியை கைப்பற்றியது.
1368 முதல் 1644 வரை மிங் அரச மரபினர் 276 ஆம் ஆண்டுகள் சீனாவை ஆட்சி செய்தனர். 17
மன்னர்கள் இந்த வம்சத்தின் பெயரால் ஆட்சி செய்தனர். இவர்களும் ஹான் இனத்தை சார்ந்தவர்கள்தான்.
ஆரம்ப கட்டத்தில் அரசு, கட்டுப்பாடும், ஒழுங்கும் நிறைந்ததாக இருந்தது. அடுத்தடுத்து
வந்த அரசர்கள் சுகபோக வாழ்க்கையில் மூழ்கி திளைத்ததோடு, மக்களுக்கு எதிராகவும் செயல்பட
ஆரம்பித்தனர். இதனால், ரகசிய இயக்கங்கள் உருவாகி அரசிற்கு எதிராக செயல்பட ஆரம்பித்தன.
எதிர்த்தவர்களைப் பிடித்து மிங் அரசு சிறையில் அடைத்தது. தூக்கு மேடையில் ஏற்றியது.
மோசமான அரசாட்சியால் மக்கள் பசி, பட்டினியோடு
வாழ்க்கை நடத்தினர். அவர்களிடமிருந்து அரசு கருணையற்ற முறையில் வரி வசூலித்தது. பட்டினி
கிடப்பவர்களிடம் வரி வசூலித்து மன்னர்கள் ஆடம்பரங்களில் மூழ்கித் திளைத்தனர். இந்த காலகட்டத்தில்,
ஜப்பானியர்கள் சீனா மீது படையெடுத்தார்கள். மஞ்சூரியாவில் இருந்து மஞ்சூரியர்கள் சீனாவின்
சில பகுதிகளில் தாக்குதல் நடத்தினார்கள்.
மிங் வம்ச ஆட்சியைப் பற்றி சிறப்பாக சொல்வதற்கு வரலாற்றில் ஒன்றுமில்லை. ஆனாலும், சீனாவின்
எதிர்கால வாழ்வுக்கு இந்த ஆட்சியின் போது அடித்தளம் போடப்பட்டது. சீனாவின் சரித்திர
போக்கை வேறொரு வழியில் திருப்பி விடுவதற்கு இந்த ஆட்சி காரணமாக இருந்தது. சீனாவிற்கும்
அந்நிய நாடுகளுக்குமான தொடர்பு இவர்கள் காலத்தில் வலுப்பட்டது. ஐரோப்பிய வியாபாரிகள்
சீனாவிற்கு வந்தனர். வியாபாரிகளை பாதுகாக்கப் போர் வீரர்களும் வந்தார்கள். ஐரோப்பிய
வல்லரசுகளின் வருகை மிங் ஆட்சி காலத்தில் ஆரம்பமானது.
உள்நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சி மற்றும் நெருக்கடியால்
மிங் ஆட்சி, வீழ்ச்சியை சந்தித்தது. மஞ்சு இனத்தை சேர்ந்த குயிங் அரச மரபு ஆட்சியைக்
கைப்பற்றியது. 1644 முதல் 1912 ஆம் ஆண்டு வரை இந்த அரச மரபினர் சீனாவை ஆட்சி செய்தனர்.
இதுதான் சீனாவின் வம்ச ஆட்சிகளின் கடைசி ஆகும். 1683 ஆம் ஆண்டிலேயே இன்றுள்ள முழு சீனாவையும்
இதன் ஆட்சி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. குயிங் வம்சம், ஏற்கனவே இருந்த
பிரதேசத்தை இரட்டிப்பாக்கியது. வெளிநாட்டு அழுத்தங்கள், உள்நாட்டு குழப்பங்கள், போர்களில்
ஏற்பட்ட தோல்விகள் காரணமாக 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் குயிங் வம்சம் சரியத்
தொடங்கியது. 1911 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சின்ஹாய் புரட்சியை தொடர்ந்து முடியரசு வீழ்ந்தது.
முதல் சீன குடியரசு உருவானது.
கடைசி பேரரசின் காலத்தில் ஐரோப்பியர்கள் வழக்கம்போல்
வணிகம் என்ற பெயரால் உள்ளே நுழைந்தனர். அதிகாரத்தை கைப்பற்றினர். கடந்த 3000 ஆண்டுகள்
சீனாவில் ஏற்படாத பெரும் மாற்றங்கள் ஏற்பட துவங்கின.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக