சில மரணங்களை மனம் ஏற்க மறுக்கும், சில மரணங்கள் அதிர்ச்சியூட்டக்கூடியதாக இருக்கும், தோழர் யு.கே. சிவஞானம் அவர்களின் மரணம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பத்து நாட்களுக்கு மேலாக அவரின் உடல்நிலை பற்றி தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்த எனக்கு இன்று காலை அபாய கட்டம் என்றும், ஒரு மணிக்கு அவருடைய மரண செய்தியும் வந்தடைந்த பொழுது அதிர்ச்சி அடைந்தேன்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளராக, மாவட்ட தலைவராக மாநிலத்தின் பொருளாளராக பல ஆண்டுகள் இணைந்து செயல்பட்டவர். நான் தலைவராகவும் தோழர் ரவீந்திரன் செயலாளராகவும் தோழர் யுகே சிவஞானம் பொருளாளராகவும் வாலிபர் சங்கத்தின் மாநில அமைப்பில் செயல்பட்டோம். அதன் பிறகு கோவை மாவட்ட கட்சி செயற்குழு உறுப்பினராகவும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆகவும் பொறுப்புகள் ஏற்று சுறுசுறுப்பாக செயல்பட்டவர்.
கோவை மாவட்டத்தில் வாலிபர் சங்க இயக்கம் வளர்ந்த பொழுது பன்முக கலாச்சார நடவடிக்கைகளில் வாலிபர் சங்கத்தை ஈடு படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர் தோழர் சிவஞானம் அவர்கள். குறிப்பாக கோவை மாவட்டத்தில் தொடர்ச்சியாக முயற்சி எடுத்து ரத்ததான கழகத்தை ஆரம்பித்த பணி தோழர் சிவஞானம் அவர்களுடையது. ரேஷன் அட்டைப் போராட்டம், பஸ் கட்டணம் மறியல்,அதேபோன்று பல உள்ளூர் பிரச்சனைகளில் தொடர்ந்து தலையிட்டு வந்தார்.
நான் எழுதி வாலிபர் சங்கத்தின் மாநில குழு வெளியிட்ட ஞாபகங்கள் தீ மூட்டும் என்ற புத்தகத்தைப் பற்றி நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டார். ஸ்டாலின் குணசேகரன் எழுதிய விடுதலை வேள்வியில் தமிழகம் என்ற இரண்டு பாகங்களையும் வாங்கி எனக்கு அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து எழுத வேண்டும் என்று முடிவு எடுத்து பல கட்டுரைகளை தீக்கதிர் நாளிதழில் எழுதினார். வைக்கம் போராட்டம் பற்றிய சிறு புத்தகத்தையும் வெளியிட்டார். கோவை மாவட்ட வாலிபர் சங்க வரலாறுகளை தொகுத்து எழுத வேண்டும் என்ற முறையில் பல தகவல்களை என்னுடன் பகிர்ந்து கொண்டு எழுத ஆரம்பித்தார்.
அன்றாட அரசியல் பணிகளையும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பணிகளையும் , எழுத்து பணிகளையும் ஒருங்கிணைத்து செயல்படக்கூடிய இந்த நேரத்தில் அவருடைய மரணம் என்பது பேரிழப்பாகும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காலதாமதமானாலும் மீண்டு வந்து விடுவார் என்ற நம்பிக்கை இருந்தது.இன்று காலை அந்த நம்பிக்கை தகர்ந்து பிற்பகல் ஒரு மணிக்கு முடிவுக்கு வந்தது.
தோழர் யூ.கே.சிவஞானம் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி செவ்வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக