அவர் உயிரோடு இருக்கிறார் என்று தான் எனது என்ன ஓட்டம் இருந்தது. அவர் மறைந்து விட்டார் என்பதை அறிந்திருந்தாலும் அந்த நிகழ்வு என் நினைவுகளில் ஆழ பதியவில்லை. சில நேரங்களில் அவரிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றி இருக்கிறது. ஆனால் இன்று அவரின் ஓராண்டு நினைவஞ்சலி முகநூல் போஸ்டரை பார்த்து மனம் கனத்தது.
உரத்த குரலில் அவர் என்றுமே பேசி யாருமே கேட்டிருக்க முடியாது. அவருடைய முகத்தோற்றமே இரக்க குணத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும். அந்தத் தோற்றமே அவருடைய செயலிலும் பிரதிபலித்தது.
தோழர் சத்தியநாதன் பகுதி செயலாளராக இருந்த பொழுது 1998 ல் வியாபாரிகளை அணிதிரட்டுவதற்கான கூட்டத்தை நடத்துகின்ற காலத்தில் அவரும் ஒரு நடைபாதை வியாபாரியாக கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் தொடர்ந்து கட்சியின் ஆதரவாளராக, உறுப்பினராக,ஊழியராக மாறிவிட்டார்.
என் எஸ் கே நகர் என்பது உழைப்பாளி மக்கள் நிறைந்த ஒரு இடம். பெரும்பகுதி குடிசை வீடுகள் இருந்தது. திராவிட இயக்கங்கள் பலமாக இருக்கிற இடம். அதே நேரத்தில் உள்ளூர் தாதாக்களும் நிறைந்திருந்த பகுதி. அந்த நகரில் தோழர் மார்ச்சான் மட்டுமே உறுதிமிக்க செயல்பாட்டினால் என் எஸ் கே நகரில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளையை உருவாக்கினார். சாந்தமான குணமும் தோற்றமும் இருந்தாலும் அழுத்தமான முறையில் செயல்களை செய்யக்கூடியவர்.
முதலில் ஆதரவாளர்களை முயற்சி எடுத்து சேர்த்தார் . கடையில் வேலை செய்தவர்களை கட்சியில் இணைத்தார் . இதன் மூலம் அந்தக் கிளையை செயல்படும் கிளையாக மாற்றினார். அது மட்டுமல்ல, நபர் அந்தப் பகுதி பொறுப்பாளராக இருந்தபோது, நடைபாதை உணவு விற்பனையாளர் சங்கத்தை , சத்தியநாதன், சீனிவாசன், சுந்தரம் போன்றவர்களுடன் இணைந்து சிஐடியூ மாவட்ட வழிகாட்டுதல் அடிப்படையில் உருவாக்கினார்.
அண்ணாநகர் பகுதியில் அவர் நிதி வசூலில் மிக முக்கியமான பங்கு வகித்தார் வீடுகளுக்கும் கடைகளுக்கும் சென்று வசூல் செய்வது என்.எஸ்.கே நகரில் வசூல் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டாலும் தனிநபராக அனைத்து கட்சியை சேர்ந்தவர்களிடமும் தயக்கம் இன்றி பேசி நிதி வாங்கி விடுவார். தனி நபர்களை சந்தித்து அதிக நபர்களிடம் நிதி வாங்கிய முதல் நபராக அண்ணாநகர் பகுதியில் தோழர் மார்ச்சான் இருந்தார்.
அவரது கடை அண்ணா நகர் சாந்தி காலனியில் தள்ளு வண்டியில் அமைக்கப்பட்ட நடைபாதை கடையாகவும் பிறகு சிறுகடையாகவும் நடத்தப்பட்டது. நடைபாதை கடையாக இருந்த பொழுது ஆளும் கட்சி தாதாக்களின் மாமுல் வசூலுக்கு எதிராக பல இன்னல்களை சந்தித்தாலும் உறுதியுடன் நின்று அவற்றை தடுத்தார். இதேபோன்று மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளின் கெடுபிடிகளையும் சட்டப்படி எதிர்கொண்டு தனது கடையை நடத்தினார் இவரின் இந்த முயற்சிகளுக்கு கட்சி முழுமையான துணையாக இருந்தது.
அவருடைய கடை, பசியுடன் சென்றவர்களுக்கு பசி ஆறுதல் அளிக்கக்கூடிய இடமாக எப்பொழுதுமே இருந்தது. வறியவர்கள் வந்து கையில் காசு இல்லாமல் அவருடைய கடையை வேடிக்கை பார்த்தால் அவர்களை அழைத்து உணவை கொடுத்து விடுவார். வயதானவர்கள் வந்தால் உணவுக்கு வழியில்லை என்றால் உணவையும் கொடுத்து சிறு தொகையும் கொடுத்து அனுப்புவார்.
வெளியில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமல்ல நான் அண்ணா நகர் பகுதியில் அமைப்பாளராகவும் செயலாளராகவும் செயல்பட்ட காலத்தில் காலை ஏழு மணி முதல் 11 மணி வரை கிளைகளுக்கும், அலுவலகத்துக்கும் சென்று வருவது வழக்கமாகக் கொண்டிருந்தேன். காலை நேரத்தில் சென்ற பொழுதெல்லாம் பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடந்து விட்டால் அவருடைய கடை தான் எனக்கு காலை உணவை உண்ணும் இடமாகும்.
நான் காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு சென்றிருந்தாலும் சென்று இறங்கிய உடனேயே கையில் உணவு தட்டுகளை கொடுத்து விடுவார். மறுத்தாலும் விடமாட்டார். நான் மட்டுமல்ல என்னுடன் வந்தவர்களுக்கும் அவர் உணவளிப்பார். நான் போனால் மட்டுமல்ல கட்சி தோழர்கள் யார் எப்பொழுது அவர் கடைக்கு சென்றாலும் உணவை கண்டிப்பாக கொடுப்பது அவருடைய வழக்கமாக இருக்கும்.
மாநாடுகள் நடைபெறுகிற பொழுது இரண்டு அல்லது மூன்று நாட்கள் கடையை மற்றவர்களை பார்க்க சொல்லிவிட்டு பஸ்ஸில் வந்து விடுவார். பஸ்ஸில் வரக்கூடிய அனைத்து தோழர்களுக்கும் சமைத்து பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு வந்து விடுவார்.
அவர் பெரிய அளவிற்கு வசதியானவர் அல்ல. ஆனாலும் வருமானத்தை செலவு செய்யக் கூடியவராகவே இருந்தார்.
வெள்ளம் அந்த காலத்தில் ஏழைகளுக்கு உணவை சமைத்து இலவசமாக கொடுத்தார். கொரோனா காலத்தில் பலருக்கும் உதவி செய்தது மட்டுமல்ல கட்சித் தோழர்கள் அளவிற்கு மிக அத்தியாவசியமான உதவிகளை செய்தார்.
அவருடைய என் எஸ் கே நகர் வீட்டில் தான் கிளை கூட்டத்தை, சில நேரங்களில் பகுதி குழு கூட்டத்தையும் கட்சி வகுப்புகளையும் தொடர்ந்து நடத்தி இருக்கிறோம்.
ஆரவாரம் இல்லாமல் அமைதியான முறையில் இதையெல்லாம் அவர் செய்து கொண்டிருந்தார். அண்ணா நகரின் கட்சி வளர்ச்சிக்கு கிளை செயலாளரை தாண்டி வேற எந்த பொறுப்பில் இல்லாமல் இருந்தாலும் பல தோழர்கள் செயல்படுவதற்கும் பல வழிகளில் உதவி செய்து கட்சி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார்.
திருச்சி துறையூரை சேர்ந்த அவர் சென்னைக்கு வந்து இயக்கத்தில் இணைந்து அவர் செய்த பணிகளை மறக்க இயலாது அவரோடு இணைந்து செயல்பட்டுவன் என்ற முறையில் அவருடைய பணி மீது அலாதியான மதிப்பு என்றைக்கும் எனக்கு இருக்கிறது. தோழர் மார்ச்சான் போன்றே டிபி சத்திரம் இந்திரா அவர்களும், அன்று அண்ணா நகருடன் இருந்த ஓசான்குளம் கிருஷ்ணன் அவர்களும் மக்களுடன் இணைந்து செயல்பட்டார்கள்.
தோழர் மார்ச்சான் மறைந்து ஓராண்டு ஆனாலும் அவருடைய மறைவை மனம் ஏற்க மறுக்கிறது. முகநூல் போஸ்டரை பார்த்து அவருடன் நெருக்கமாக இருந்து செயல்பட்ட தோழர் எம்.ராஜன் அவர்களிடம் பேசிய பொழுது இன்னும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவரது மகன் இன்று இயக்கத்தில் அவரது குடும்பத்தை பகுதி தோழர்கள் கவனித்து வருகிறார்கள்.இது போன்ற பல்வேறு தோழர்களின் பணிகளை உள்வாங்கி, அவர்களை நினைவு கூர்ந்து இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம். அவரைப் போன்ற வேர்கள் இல்லாமல் நம்மை போன்ற விழுதுகள் இல்லை என்பதை என்றென்றும் நினைவில் நிலை நிறுத்துவோம்.(21.10.24 முதல் நினைவுதினம்)
அ.பாக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக