Pages

சனி, நவம்பர் 30, 2024

அதானியிடம் தாரைவார்க்கப்படும் தாராவி குடிசை பகுதி



மும்பையில் நகர நிர்வாகத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் ரியல் எஸ்டேட் துறை என்பது பொன்முட்டையிடும் வாத்தாக இருக்கிறது. மும்பை பெருநகர பகுதி, ரியல் எஸ்டேட் வணிகத்தில் நாட்டின் அதிக லாபம் கொண்ட பகுதியாக செயல்படுகிறது. 


ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவி மும்பை நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. தாராவி மேம்பாட்டு திட்டம் தொடர்ந்து பேசப்பட்டு வரக்கூடிய ஒரு திட்டமாகும். சென்னைக்கு ஒரு கூவம் மேம்பாட்டு திட்டம் என்றால், மும்பைக்கு தாராவி திட்டம் ஆகும்.


சுமார 259.54 ஹெக்டேர் (641 ஏக்கர்) பரப்பளவு கொண்டது. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 6.5 மக்கள் தொகையும் கடந்த 15 ஆண்டுகளில் மேலும் 18 லட்சம் சேர்ந்திருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 


தோல் பதனிடும் தொழில், மண்பாண்டம் செய்யும் தொழில், கேட்டரிங் தொழில், எம்பிராய்டரிங், மறுசுழற்சி வணிகம் என பல குடிசைத் தொழில்கள் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக இருக்கிறது. சுமார் 200 சதுர அடிக்குள் இந்த தொழில்கள் ஒவ்வொன்றும் அமைந்துள்ளது. 


தலித்துகளும் பிற்பட்டவர்களும் இஸ்லாமியர்களும் இணைந்து வாழக்கூடிய ஒரு பகுதியாக சமூக நல்லிணக்கத்தின் பகுதியாக தாராவி இருந்து வருகிறது. 


ரியல் எஸ்டேட் வளர்ந்த பிறகு நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்தவுடன் கடந்த 20 ஆண்டுகளாக மராட்டிய அரசு தாராவி பகுதியில் மேம்பாட்டு திட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறது. தாராவி மறு வடிவமைப்பு இன்று பலரும் பேசக் கூடியதாக மாறி உள்ளது. 


தாராவியின் மொத்த பரப்பளவு 259.54(641 ஏக்கர்)ஹெக்டேரில் 179.  59 (429ஏக்கர்) ஹெக்டேரில் திட்டத்தை அமலாக்க 2008 ஆம் ஆண்டு மகாராஷ்டிர சோசியல் ஹவுசிங் அண்ட் ஆக்சன் லீகல் ( Maharashtra social housing and action legal (mashall) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நியமித்து குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும்படி நியமித்தது.


 இதன்படி 49643 குடிசைகள், 39208 குடியிருப்புகள், 10435 வணிகக் குடியிருப்புகள் இருப்பதாக கணக்கெடுத்து முடித்தது. இவை தவிர தாழ்வாரப் பகுதியில் (chawals) 9522 குடியிருப்புகள் இருந்தன அவற்றில் 6981 குடியிருப்புகளும் 2541 சிறு தொழில்கள் கூடங்களாக செயல்பட்டது. மொத்தம் 81 ஆயிரம் குடியிருப்புகள் இருந்தது இந்தப் பகுதியில் முன்மொழிக்கப்பட்ட மறு வடிவமைப்பு மேம்பாட்டு திட்டம் குடியிருப்புகளுக்கும், வணிக இடங்கள் அனைத்துக்கும் ஒதுக்கீடு செய்வதை உள்ளடக்கிய திட்டமாகும். 


2018 ஆம் ஆண்டு பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இத்திட்டத்திற்கான சர்வதேச டெண்டர் முறையை அறிவித்து ஏலம் விடப்பட்டது துபாய் நாட்டைச் சேர்ந்த செக் லிங்க் டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் ரூபாய் 7200 கோடி ஏலத்தில் திட்டத்தை வென்றது. அதானி குழுவும் இந்தப் போட்டியில் பங்கேற்று 4539 கோடி என அறிவித்து திட்டத்தை பெற முடியவில்லை. 


2022 ஆம் ஆண்டு கோவிட் தொற்று நோய் , நிதி நிலைமைகள் என்ற பல காரணங்களை காட்டி மகாராஷ்டிரா அரசாங்கம் டென்டரை ரத்து செய்தது. புதிய டெண்டரை அறிவித்து அதானி ப்ராப்பர்ட்டீஸ் ரூபாய் 5069 கோடிக்கு ஏலத்தில் வென்றது அதானி குடும்பத்திற்கு டெண்டர் வழங்கியதை எதிர்த்து செக்லிங் டெக்னாலஜி நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. 


7200 கோடி ரூபாய் ரெண்டரை ரத்து செய்து அதானிக்கு 5069 கோடிக்கு கொடுத்ததின் நோக்கம் அனைவரும் அறிந்ததே. அதானியுடன் ரியல் எஸ்டேட் பெரும் நிறுவனமான டி எல் எப், உட்பட மற்றொரு நிறுவனமும் பங்குபெற்றது அதானி செல்வாக்கால் திட்டத்தை கைப்பற்றினார். 


ஏற்கனவே திட்டத்தை ஏலம் எடுத்து இருந்த செக்லிங் டெக்னாலஜி நிறுவனம் 254 ஹெக்ட்ரில் உள்ள அனைத்து குடியிருப்புகளையும் முழுமையாக கணக்கெடுத்து 200 ஏக்கரில் அனைத்து குடிசை வாசிகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் வீடு கொடுக்க திட்டமிட்டு இருந்தது. 100 ஏக்கர் தோட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. 300 ஏக்கர் கட்டிடங்கள் கட்டி விற்பனைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது. அதாவது செக்லிங் டெக்னாலஜி நிறுவனம் தாராவியில் வசித்த அனைவருக்கும் 350 சதுர அடி வீடுகளை வழங்க தயாராக இருந்தது. 


தற்போது அதானி அறிவித்துள்ள திட்டம் இதிலிருந்து மாறுபட்டது மட்டுமல்ல தாராவி மக்களை நடுத்தெருவில் நிறுத்தக்கூடிய திட்டமாக இருக்கிறது. அதானி குழுமத்தின் திட்டத்தின் படி தகுதியான குடியிருப்புகள் தகுதியற்ற குடியிருப்புகள் என்று இரண்டாக பிரிக்கிறார்கள். 81 ஆயிரம் குடியிருப்புகளில் 64 ஆயிரம் மட்டுமே தகுதியானது என்று அறிவிக்கிறார்கள். 


சுமார் 7 லட்சம் மக்கள் தாராவிக்கு வெளியே வாடகை வீடுகள் அல்லது நிரந்தர வீடுகளை பெறக்கூடிய முறையில் வெளியேற்றுவதற்கான திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஜூன் 1 2000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்களுக்கு தாராவியில் 350 சதுர அடியில் வீடு கட்டி கொடுக்கப்படும்.  ஜனவரி 1, 2011க்கு முன்பு வந்தவர்களுக்கு 300 சதுர அடியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தாராவிக்கு வெளியே வீடு கட்டி கொடுக்கப்படும். இதற்கு இவர்கள் 2.4 லட்சம் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு வந்தவர்கள் தாராவிக்கு வெளியே வாடகை வீடு அல்லது தவணை முறையில் செலுத்தக்கூடிய வீடுகள் வழங்கப்படும்.


தகுதியற்றவர்களுக்காக தாராவிக்கு வெளியே மும்பையின் பல இடங்களில் வீடுகள் கொடுக்க வேண்டும் என்று 20 பகுதிகளை மகாராஷ்டிரா அரசு அதானி குழுமத்திற்கு ஒதுக்கி உள்ளது. ஒரு மாதத்திற்கு பிறகு இந்த இடம் 23 பகுதி என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த 23 இடங்களில் 12 இடங்களில் நிலத்தின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவை கொண்டு இருக்கிறது. மொத்தத்தில் 1250 ஏக்கர் நிலம் தாராவிக்கு வெளியே அதான் குழுமத்திற்கு அளிக்கப்பட உள்ளது. 


மும்பையில் பல குடிசை பகுதிகள் மறுபடிவமைப்பு செய்யப்பட்டு வந்த பொழுதும் அவை பொதுத்திட்டமாக அறிவிக்கப்படவில்லை.ஆனால் தாராவி மேம்பாட்டு திட்டம் பொது திட்டமாக அறிவிக்கப்பட்டு தகுதியற்றவர்களுக்கு வீடு கொடுக்கிறோம் என்ற பெயரால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை மும்பையில் சுருட்டுவதற்கான வாய்ப்பை அதானி குழுமத்திற்கு அளித்து உள்ளார்கள்.


மும்பையில் குடியிருப்பு இடிக்கப்பட்டு பொதுத் திட்டத்தின் கீழ் அமுல்படுத்தினால் குடியிருப்பவர்களோ அல்லது வணிக நிறுவனமோ 35 சதவீதம் இடத்தை கூடுதலாக பெறுவார்கள். ஆனால் தாராவியிலிருந்து வெளியேற்றப்படும் குடியிருப்பு வாசிகள் 300 சதுர அடி மட்டுமே பெற முடிகிறது. தகுதியற்றவர்களுக்கு இந்த சலுகையும் இல்லை என்று அறிவித்து விட்டார்கள். 


அதானி குழுமம் தாராவியில் கட்டிக் கொடுக்கப்படும் ஒவ்வொரு 350 சதுர அடிக்கும் 628 சதுர அடி நிலத்தை தனது வணிகப் பகுதியாக மாற்றிக் கொண்டு விற்க முடியும். தகுதியான குடியிருப்புகளின் எண்ணிக்கையை கணக்கிட்டாலும் அதானி குழுமம் தாராவியில் 2.24 கோடி சதுர அடியை விற்பதற்கான வாய்ப்பு உள்ளது. தகுதி இல்லாதவர்கள் என்ற முறையில் தாராவிக்கு வெளியே கொடுக்கப்படும் நிலத்திலும்  7.86 கோடி சதுர அடிகளை விற்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. 


மொத்தத்தில் மும்பையில் நிலங்கள் மறு வடிவமைப்பு செய்து கார்ப்பரேட் கைகளுக்கு மாற்றப்படுகிறது. ஏழை மக்களின் நகர வாழ்க்கை நிரந்தரமற்றதாக மாறிவிட்டது ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கார்ப்பரேட் கம்பெனிகளின் அடிமைகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். 


அ.பாக்கியம்


தகவல் ஆதாரம்: பிரண்ட் லைன் செப்டம்பர் 18



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

15 சீனாவில் மதகுருமார்களும் மத வழிபாட்டுத் தலங்களும்

  மத நம்பிக்கை ச் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு என்ற கொள்கையை கடைபிடிக்கிற ஒரு நாட்டில் மத அமைப்புகள் எப்படி நடத்தப்படுகின்றன என்று கேள்வ...