Pages

சனி, நவம்பர் 30, 2024

வந்தே விபத்து வராத பாதுகாப்பு.

 



மைசூர் தர்பங்கா பாகமதி எக்ஸ்பிரஸ் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் விபத்துக்கு உள்ளாகியது. 13 பெட்டிகள் தடம் புரண்டு 19 பயணிகள் படுகாயத்துடன் யாரும் உயிரிழக்காமல் தப்பிக்க வைத்ததில் ரயில் ஓட்டுனரின்  பங்கு மிக முக்கியமானது. 75 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த ரயில் மோதி இந்த விபத்து நடந்துள்ளது. வேகத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில்  ஈடுபட்டதால் பெரும் உயிர் பலி தவிர்க்கப்பட்டு இருக்கிறது. 


இந்திய பிரதமர் மோடி அவர்கள் 2019 க்கு பிறகு 50க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்களை கொடி அசைத்து துவக்கி வைத்துள்ளார். ஆனால் ரயில் விபத்துகளை தடுத்து பயணிகள் உயிரை பாதுகாப்பதற்கு எந்த முன்னுரிமையும் அளிக்கப்படவில்லை. 


ரயில்வே அமைச்சகத்தின் தரவுகளின் படி கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 3 ரயில் விபத்துக்கள் நடந்துள்ளன. ஒடிசா, பீகார்,ஆந்திர பிரதேஷ், மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ரயில் விபத்துகளில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்துள்ளார்கள். ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் விபத்துக்கள் மோடியின் ஆட்சியில் அதிகமாக்கி உள்ளது. சரக்கு ரயில் பயணிகள் ரயிலுடன் மோதுவது அல்லது பயணிகள் ரயில் சரக்கு ரயில் உடன் மோதுவது என்ற விபத்துக்கள் தொடர்கின்றன.


ஒவ்வொரு ரயில் விபத்துக்கு பிறகும் ரயில்வே பாதுகாப்பு பற்றி அதிகமாக பேசப்படுகிறது ஒன்றிய அரசின் அமைச்சர்கள் பெரும் திட்டங்களை அறிவிக்கிறார்கள். ஆனால் அவை எதுவும் அமலாவது இல்லை. ரயில் மோதல் தடுப்பு கவாச் சாதனங்களை ரயிலில் நிறுவ வேண்டும் என்ற முடிவுகள் அமலாகவில்லை. மொத்த ரயில் பாதையின் நீளத்தில் ஒரு சதவீதம் மட்டுமே விபத்து தடுப்பு பாதுகாப்பு சாதனமான கவாச் நிறுவப்பட்டுள்ளது. இந்த வேகத்தில் வேலை நடைபெற்றால் இப்பொழுது இருக்கிற ரயில் அமைப்புகளில் பொருத்தி முடிப்பதற்கு 50 ஆண்டுகள் ஆகும் என்று நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இன்னும் எத்தனை லட்சம் மக்களை பலி கொடுக்கப் போகிறார்களோ என்று தெரியவில்லை. ரயில்வே வருமானத்தில் இரண்டு சதவீதத்தை ஒதுக்கினால் முழுமையாக அமல்படுத்தி விடலாம் என்று தெரிவித்தும் மோடி அரசு பயணிகளின் பாதுகாப்பை பற்றி அவர்களின் உயிரைப் பற்றி கவலை கொள்ளாமல் இருக்கிறது. 


நாங்கள் ஆண்டுக்கு 17,000 கோடி பாதுகாப்பிற்காக ஒதுக்கி இருக்கிறோம் என்று ரயில்வே துறை அமைச்சர் வாய்ச்சவடால் அடித்தாலும் அவை அனைத்தும் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படவில்லை. ரயில்வே பாதுகாப்பு சிறப்பு நிதியானது கால்களுக்கான மசாஜர்கள் , பாத்திரங்கள், மின் சாதனங்கள், மரச்சாமான்கள், குளிர்கால ஜாக்கெட்டுகள் , கணினிகள், எக்ஸ்லேட்டர்கள் வாங்குவதற்கும், தோட்டங்களை உருவாக்குவதற்கும், கழிப்பறைகளை கட்டுவதற்கும் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்று  காம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அறிக்கை தெரிவித்துள்ளது. சிக்னல் அமைப்பை நவீன மயமாக்குதல் ரயில்வே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்ததற்காக,  கவாச் சாதனங்களை பொருத்துவதற்காக பயன்படுத்தவில்லை.


மோடி அரசை முன்னாள் ரயில்வே தலைமை பொறியாளர் அலோக் குமார் வரமா போன்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் அரசாங்கத்தின் தவறான முன்னுரிமைகள் தான் ரயில்வே கீழ்நோக்கி செல்வதற்கு காரணம் என்று  குற்றம் சாட்டி உள்ளனர். அதாவது பாதுகாப்பு எளிய மக்களின் பயணம் ஆகியவற்றை தடுத்து மற்ற அம்சங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை இவ்வாறு சுட்டிக்காட்டி உள்ளனர். தண்டவாளங்களை புதுப்பிப்பது போன்றவைகளும் புறக்கணிக்கப்படுகிறது. 

வேலைப்பளு அதிகமாக இருப்பது மனித தவறுகளுக்கு காரணமாக அமைகிறது என்று சிஏஜி அறிக்கை தெரிவித்த பொழுதும் மோடியின் அரசாங்கம் மூன்று லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப மறுக்கிறது. 


சமீப காலத்தில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மிகப் பெரும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டிகள் பொதுவாக ஏழை மக்களால் பயன்படுத்த படக்கூடியது. இந்திய வெகுஜன மக்களின் ஒரே போக்குவரத்து சாதனம் ரயில்வே என்பதை மோடி அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை.


வந்தே பாரத் அதிவேக ரயில்கள் வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சுதன்சு மணி என்ற நிபுணர், சாமானிய மக்களின் தேவைகளை கவனம் செலுத்தாதது அரசு செய்த தவறு என்று குற்றம் சாட்டினார். ஏழைகளின் பயண தேவைகளை பூர்த்தி செய்வதற்காக குளிரூட்டப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார் . வந்தே பாரத் வசதி படைத்த உயர்நிலைப் பயணிகளுக்கானது . ஆனால் சாமானியர்களின் நலன்களை புறக்கணிக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


தண்டவாளங்கள் நவீனப்படுத்தப்படாததால் வந்தே பாரத் உட்பட அதிவேக ரயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்திற்கு பதிலாக சராசரியாக 83 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறது என்பதுதான் உண்மை.


 அதிவேக ரயில்கள் அதாவது வந்தே பாரத் புல்லட் ட்ரெயின் போன்ற பெரும் திட்டங்கள் வேகத்தை விட அழகு படுத்துவதிலும், அதற்கான ஆடம்பர பொருட்களை பொருத்துவதற்கும் தான் கவனம் செலுத்துகிறார்கள் தவிர வேகத்தில் முன்னேற்றம் இல்லை


மக்களின் உயிர்களைப் பற்றி கவலைப்படாத ஒன்றிய அரசு ஒவ்வொரு விபத்துக்குப் பின்பும் சதி இருக்கிறது என்று ஏதாவது ஒரு காரணத்தை கூறி மக்களின் உயிர் பாதுகாப்பை புறக்கணிக்கிறது.தனது பிம்பத்தை அதிகப்படுத்திக்கொள்ள அதிவேக ரயில் என்ற விளம்பரங்களை அதிவேகமாக செய்து மக்களை சாகடிக்கிறது. வந்தே பாரத் வேகத்தை விட விபத்து வேகமாக வருகிறது ரயில் பாதுகாப்பு வராமலேயே இருக்கிறது.

அ. பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோழர் கா. சின்னையா தென் சென்னை கட்சி அமைப்பின் அடித்தளம்.

                                     அஞ்சலி    1966 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி கிராமத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வருகி...