அ.பாக்கியம்.
. கீகீ.. கூகூ.. என ஓயாது இரைந்து கொண்டிருந்தன பறவைகள். கீழ்வானம் வெலுத்துடிச்சோ நேரமும் ஆயிடுச்சோ என்று கிழக்கே ஏறெடுத்துப் பார்த்தவாறு பனை மரங்களை நோக்கி வேகமாக நடை போட்டான் கட்டேறி. வெயில் வருவதற்குள் அஞ்சாறு மரம் ஏறி பதநி இறக்குனாத்தான் சில நாட்கள் வருமானத்துக்கு ஓடும்.
சரசரவென சத்தம் கேட்டது. அரவமோ என துணுக்குற்றான் கட்டேறி. அரவம் என்றாலும் தூக்கி வீசும் துணிச்சல் உள்ளவன் தான். ஒரு வேளை சக பனையேறும் தொழிலாளியாகவும் இருக்கக்கூடும்.
ரெண்டு மரம் ஏறி இறங்கி இரண்டு பானைகளை நிரப்பி விட்டான். கட்டேறி அடுத்த மரத்தில் ஏறி நிற்கும்போது அந்த சத்தம் கேட்டது. தாழி பானைக்குள் கலகலவென பதநி குடிக்கும் சத்தமும் பானை உருளும் சத்தமும்.
வா.. வா.. பல நாள் கள்ளன் ஒருநாள் பிடிபட்டியா என்று முணுமுணுத்த படி கையில் இருந்த கூறிய அரிவாளை பானைகள் மறுபுறம் மறைத்த செடி புதர்களின் மீது குறி தவறாமல் வீசினான் கட்டேறி. இருள் சூழ்ந்த நேரத்தில் கண்ணுக்கு ஏதும் தெரியவில்லை. அரிவால் எதிலோ பாயும் சத்தம் கேட்டது. "அம்மே". என்ற பிஞ்சு குறளின் அலறலும் கேட்டது விரைந்து ஓடினான்.. அங்கே அவன் கண்ட காட்சியில் நெஞ்சே வெடித்து வெளிவரும் போல் ஆகிவிட்டது
நாயோ நரியோ ஆடோ மாடோ என நினைத்த இடத்தில் அவன் செல்வமகள் தலையில் அரிவாள் பாய்ந்து ரத்தம் பீறிட்டு பாய்ந்தது.
அடிவயிறு கலங்க மண்டையைக் காட்டுமா, மண்டைய காட்டமா, என அலறினான் கட்டேறி.
ஆனால் ரத்தம் பாய்ந்ததில் உயிரிழந்த பொன்னம்மைக்கு அவன் குரல் கேட்கவில்லை....
புத்தகத்தின் முதல் பக்கம் இப்படித்தான் துவங்குகிறது
மண்டைக்காட்டு அம்மனின் வரலாற்றை திரிபுகளில் இருந்து வெளிக்கொண்டு வந்துள்ளார்.. குமரி மாவட்டத்தில் இருந்த நாட்டார் தெய்வங்களை எப்படி பெருந்தெய்வ வழிபாட்டு முறைக்குள் இழுப்பதற்கு வகுப்பு சக்திகள் செயல்பட்டார்கள் என்பதையும் இந்த வரலாற்றுடன் இணைத்தே தெரிவித்துள்ளார்.
மண்டைக்காடு அம்மனுக்கு அனைத்து விதமான அசைவ உணவுகளும் படைக்கப்பட்டன. ஆடு, கோழி, வாத்து, மீன் அனைத்தும் படைக்கப்பட்ட பட்டியலை காரணத்தோடு எழுதியுள்ளார்
பெரும்பாலும் கிறிஸ்தவர்களாக இருக்கக்கூடிய மீனவ மக்களும், அதற்கு அடுத்த குடியிருக்க கூடிய இந்து மக்களும், கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலிருந்து வரக்கூடிய கேரள மக்களும், இஸ்லாமியர்களும் ஒன்று கூடி அம்மனை வழிபட்டு வந்த பல நிகழ்வுகளை கண் முன்னிறுத்துகிறார்.
அதைவிட குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது பத்து நாட்கள் நடைபெறும் அம்மன் கோவில் கொடை திருவிழா எப்படி நடைபெறுகிறது என்பதையும், ஒவ்வொரு நாள் நடைபெறும் பூஜைகளைப் பற்றியும், அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வழிபாட்டிற்கு வருவதும், பத்து நாட்கள் பண ஓலை குடிசை போட்டு தங்குவதையும், திருவிழா காலங்களில் சாலையோரங்களில் இருக்கக்கூடிய கடைகளும், கடைகளில் இருக்கக்கூடிய விற்பனைப் பொருட்களைப் பற்றியும், குழந்தைகளுக்கான ஜவ்வு மிட்டாய் ஆரம்பித்து ஆட்டம் பாட்டம் வரை அவர் எழுதியிருப்பது சிறு குழந்தைகளாக இருந்த பொழுது விழாக்களில் கலந்து கொண்ட நினைவுகளை உசுப்பி விடுகிறது.
மண்டைக்காட்டில் ஆர் எஸ் எஸ் காரர்கள் எப்படி உள்ளே நுழைந்தார்கள் அதைச் சுற்றி நடந்த திட்டமிடல்களும் ஏற்பட்ட மோதல்களும் பற்றியும் துல்லியமாக நிகழ்வுகளை எடுத்துரைக்கிறார். தோழர் முருகேசன் மண்டைக்காடு அம்மனின் பக்தனாக சிறுவயதில் இருந்ததும், பக்கத்து கிராமம் அவருடைய வாழ்விடம் என்பதாலும் அனைத்தையும் கண் முன் காட்சிப்படுத்துகிறார்.
கலவரத்திற்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட அமைதி குழுவில் குன்றக்குடி அடிகளார் , மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஹேமச்சந்திரன், மணி போன்றவர்கள் அமைதியை நிலைநாட்ட எடுத்த முயற்சிகளையும் துல்லியமாக குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய அதிமுக அரசு விசாரணை கமிஷன் அமைத்ததும், வேணுகோபால் தலைமையிலான விசாரணை அறிக்கையில் ஆர்எஸ்எஸ் இன் திட்டமிட்ட செயல்களை அம்பலப்படுத்தியதையும் எழுதியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர் எஸ் எஸ் எவ்வாறு பொய் பிரச்சாரங்களை கட்டமைத்தார்கள் என்பதையும் கச்சிதமாக அம்பலப்படுத்தி உள்ளார்.
தோழர் முருகேசன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினராக துவங்கி அதன் மாவட்ட செயலாளர் ஆக பல ஆண்டு காலமும், மாவட்ட தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் மூன்று முறை பணி புரிந்திருக்கிறார்.
தோழர் முருகேசனம் , தோழர் தோழர்.செல்லசுவாமி இருவரும் மாவட்ட தலைவர் செயலாளராக இருந்த காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாலிபர் சங்கம் எழுச்சி பெற்ற காலமாக இருந்தது. குறும்பனை போராட்டம், கடற்கரை கிராமங்களில் வாலிபர் சங்க விரிவாக்கம், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக வாலிபர் சங்கத்தின் செயல்பாடு, உள்ளூர் மக்களின் கோரிக்கைகளுக்கான இயக்கம் என்று தொடர்ந்து போராட்டங்கள் என போராட்ட அலை வீசிக்கொண்டு இருந்தது, வாலிபர் சங்கத்தின் போராட்டங்களிலும் மாவட்ட மாநாடுகளிலும் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள். மாநிலத் தலைவர் என்ற முறையில் அடிக்கடி குமரி மாவட்டத்திற்கு சென்று கிராமங்கள்தோறும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு இருக்கிறேன். அரசியல் விழிப்புணர்வு மிக்க மாவட்டமாக அந்த மாவட்டம் இருந்தது என்பதை அப்போது நேரடியாக களத்தில் இருந்த பொழுது என்னால் கண்டுகொள்ள முடிந்தது.
தோழர். என். முருகேசன் ஒரு எழுத்தாளர் இல்லை என்றாலும் களப்போராளியாக பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். எனவே, தான் இருந்த பகுதியில் நடைபெற்ற இந்த வகுப்புவாத தாக்குதலை அவருக்குரிய அனுபவத்தோடு பகிர்ந்துள்ளார்.
இந்தப் புத்தகத்தை இந்த ஆண்டு வெளியிடுவதற்காக முயற்சி செய்த பொழுது இந்துத்துவாவாதிகள் காவல்துறையில் புகார் கொடுத்து வெளியிடக் கூடாது என்று தடுத்தனர். காவல்துறை புத்தகத்தின் நகலை கேட்டது அது காவல்துறை இல்லை என்று மறுத்து விட்டனர். தொடர்ந்து புத்தகத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் செய்த பொழுதெல்லாம் இந்துத்துவாவாதிகள் அதை தடுத்து பிரச்சாரம் செய்தார்கள். இறுதியாக இந்த நூல் மார்த்தாண்டத்தில் இந்துத்துவவாதிகளின் பெரும் எதிர்பிரச்சாரத்துடன் நடந்தது. இதனால் வெளியீட்டு அன்றே ஆயிரம் பிரதிகள் விற்பனையாகி முடிந்தது என்றால் அந்த பெருமை இந்துத்துவா வினரையே சேரும்.
பாலபிரஜாபதி அடிகளார் வாழ்த்துச் செய்தி. சாகித்திய அகடமி விருது பெற்ற பொன்னிலன் அவர்களின் அணிந்துரையுடன் புத்தகம் வெளிவந்துள்ளது.
வாங்கி வாசிக்கப்பட வேண்டியது.
புத்தகம் பெறுவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய
அலைபேசி எண் 9443791070
விலை ரூ 50/