Pages

ஞாயிறு, டிசம்பர் 01, 2024

சீனா: தொழில்நுட்பத்தில் வெளிநாட்டு திறமைகளை திருடுகிறதா?

 



சீனா தொழில்நுட்பத் தொழில்களில் வெளிநாட்டுத் திறமைகளை திருடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. அமெரிக்காவின் நியூ வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பரபரப்பான தலைப்பை கொடுத்து சீனா வேலை வாய்ப்புகள் மூலம் தாக்குதல் நடத்துகிறது என்று எழுதுகிறது. அதாவது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய குறிப்பாக அமெரிக்காவில் இருக்கக்கூடிய பல நாட்டைச் சேர்ந்த திறமைசாலிகள் நிபுணர்கள் சீனாவை நோக்கி செல்வதை தான் இப்படி எழுதி வருகின்றனர். 


உண்மை நிலவரம் என்ன?


அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள தொழிலாளர்களின் 70% வெளிநாட்டினர். அமெரிக்காவில் உள்ள ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் 20% குடியேறியவர்களால் நிறுவப்பட்டது. மேலும் 25 சதவீதம் குடியேறியவர்களின் வாரிசுகளால் நிறுவப்பட்டது இதில் அமேசான், ஆப்பிள் போன்ற நிறுவனங்களும் உள்ளடங்கும். 


சீனாவில் இருந்து குடியேறி அவர்களின் பங்களிப்பு மிகப்பெரியது.ஜூம் மற்றும் டோர்டாஷ் போன்ற வெற்றிகரமான நிறுவனங்கள் சீனாவில் இருந்து குடியேறியவர்களால் நிறுவப்பட்டது. குறைக்கடத்தி(semiconductor) சின்னமாக விளங்கக்கூடிய லாம் ரிசர்ச் சீனாவில் பிறந்த பொறியாளரால் நிறுவப்பட்டது. அமெரிக்காவின் சிறந்த செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சியாளர்களில் 38 சதவீதம் பேர் சீனாவை சேர்ந்தவர்கள் 

என்விடியா (Nvidia) மற்றும் பல நிறுவனங்கள் தைவானில் இருந்து  அமெரிக்காவிற்கு சென்ற சீனர்களால் நிறுவப்பட்டது.


தற்போது சீனாவின் வளர்ச்சி கண்டு, வாய்ப்புகளைக் கருதி உலகின் திறமைசாலிகள் சீனாவை நோக்கி செல்கின்றனர். திறமையான வெளிநாட்டின்ருக்கான புதிய விசாக்கள், அதிக சம்பளம், ஆராய்ச்சி செய்வதற்கான போதுமான மானியங்கள், சீனாவில் வாழ்வதற்கான சிறந்த வாழ்க்கைத் தரம் ஆகியவை அவர்கள் சீனாவை நோக்கி செல்வதற்காக காரணமாக மாறுகிறது. 




சீனா ஆயிரம் திறமைகள் திட்டம் (Thousand Talents Program TTP) ஏராளமான விஞ்ஞானிகளை சீனாவை நோக்கி ஈர்த்து வருகிறது. இந்தத் திட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமான வெற்றியை தந்துள்ளது.


இப்போது அமெரிக்காவில் வாழ்கின்ற சீனர்களும் இதர நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டினரும் சீனாவை நோக்கி படையெடுக்கின்றனர். நோபல் பரிசு பெற் ஃப்ரெஞ்ச்  நாட்டை சேர்ந்த  லேசர் விஞ்ஞானி ஜெரார்ட் மௌரோ (Gérard Mourou ) அவருக்கு சென்று பணியாற்ற விருப்பப்பட்டு சென்றுள்ளார். அமெரிக்காவில் இருக்கும் சீன வழித்தோன்றல் விஞ்ஞானிகள் ஆண்டுதோறும் அமெரிக்காவில் இருந்து வெளியேறுவது அதிகமாகி வருகிறது. 2010 ஆம் ஆண்டு சீனா மற்றும் ஹாங்காங் பகுதிக்கு 500 பேர்களும் இதர நாடுகளுக்கு 400  பேர்கள் வரை வெளியேறினர். 2021 ஆம் ஆண்டு சீனாவிற்கு  சுமார் 2000 பேர்களும், இதர நாடுகளுக்கு 500 முதல் 700 பேர்கள் வரை வெளியேறுகின்றன


அமெரிக்காவை பிடித்து ஆட்டக்கூடிய இன ஒதுக்கல், சீனாவுக்கு எதிரான பிரச்சாரம், புவிசார் அரசியல் செயல்பாடுகள் காரணமாக அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான சீன விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் சீனாவிற்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற சீன மாணவர்களும் சீனாவிற்கு திரும்பி வருகின்றனர்.


காரணம்,

சீனா ஆராய்ச்சி துறையிலும், காப்புரிமை, அறிவியல் வெளியீடுகளில் உலகில் முதலாவது இடத்தில் உள்ளது. உலகில உயர்தர வெளியீடுகளில் சீனா முன்னிலையில் உள்ளது. ஆராய்ச்சி துறைக்கான உலகில் உள்ள 10 சிறந்த நிறுவனங்களில் ஏழு நிறுவனங்கள் சீனாவில் உள்ளது உயர்தர அறிவியல் வெளியீடுகளில் சீனா முதல் இடத்திலும் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.



சீனாவின் Huawei நிறுவனத் மட்டும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக (R&D) 1.5 பில்லியன் டாலர் செலவழிக்கிறது. அங்கு மட்டும் 36,000 தலைசிறந்த விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் உருவாக்கப்பட்டு முன்னணி தொழில்நுட்பங்களில் பணியாற்றுகிறார்கள்.



சீனா இப்போது முழு ஐரோப்பிய யூனியனை (EU) விட R&Dக்காக அதிக பணத்தை செலவழிக்கிறது. அமெரிக்காவிற்கு சமமான அளவில் செலவு செய்கிறது.

 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக 2021 ஆம் ஆண்டு அமெரிக்கா 806. 0 பில்லியன் டாலர்,சீனா 667.6 , பில்லியன் டாலர் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளை உள்ளடக்கிய செலவு 474.1 பில்லியன் டாலர் ஆகும்.



சீனா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக 2023 ஆம் ஆண்டு 500 பில்லியன் டாலர் செலவு செய்வது. இந்தத் தொகை வாங்கும் திறனுடன் ஒப்பிட்டால்  ஒரு ட்ரில்லியன் டாலர் அளவிற்கு இணையாகும். 


சர்வதேச காப்புரிமைகளில் சீனா உலகை வழி நடத்துகிறது  சர்வதேச

 காப்புரிமைகளில் 80 சதவீதத்தை 5 நாடுகள் பெற்றுள்ளன.  காப்புரிமையில் சீனா 25.5% அமெரிக்கா 20.4%  ஜப்பான் 18.0% தென்கொரியா 8.2% ஜெர்மனி 6.2% மற்றவர்கள் 21. 7%இவற்றில் சீனா முதலிடத்தில் இருக்கிறது சீனாவில் ஹுவை (Huawei) நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. 


அமெரிக்கா சீனாவின் முன்னேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு வெறிபிடித்து அலைவதை விடுத்து சீனாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் ராணுவ அச்சுறுத்தல்கள் போன்றவற்றை கைவிட்டு தொழில்நுட்பத்திலும் வளர்ச்சியிலும் மக்களின் வாழ்க்கை பெற மேம்பாட்டிலும் சீனாவுடன் போட்டி போட வேண்டும் இது உலகத்திற்கு நல்லது என்று சீனா வலியுறுத்தி வருகிறது. 


அ.பாக்கியம்


தகவல் ஆதாரம் 

https://x.com/Kanthan2030/status/1862136599053770999?t=83gh8yQeQnP2X01udIQ9Bw&s=19




சனி, நவம்பர் 30, 2024

மார்க்சின் மறுவார்ப்பு எலினார்:

 அ.பாக்கியம்.

     காரல் மார்க்ஸ் ஜென்னி இருவருக்கும் பிறந்த ஏழு குழந்தைகளில் ஆறாவதாக பிறந்தவர் எலினார். ஏழு குழந்தைகளில் நான்கு பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். மூன்று பெண் குழந்தைகள் ஜென்னி கரோலின், ஜென்னிலாரா, ஜென்னி ஜூலியா எழினார் ஆகிய மூன்று பெண் குழந்தைகள் முறையே 38, 66, 43 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். இந்த மூன்று பெண்களும் அவர்களது இணையர்களும்  காரல் மார்க்ஸின் கருத்துக்கள் அடிப்படையில் அரசியல் போராட்டங்களில் புரட்சிகளில் கலந்து கொண்டவர்கள் 


குறிப்பாக இளைய மகள் எலினார் பற்றி இந்த புத்தகம் விரிவாக பேசுகிறது. காரல் மார்க்ஸ் லாரா என்னைப் போன்றவள் என்றாலும் எலினார் நானே தான் என்று குறிப்பிடும் அளவிற்கு எலினாவின் பொது வாழ்க்கை இருந்தது.



இந்தப் புத்தகத்தில் மார்க்ஸ் இருந்த காலத்திலும் அதன் பிறகும் மார்க்சியத்திற்கு எலினா ஆற்றிய பங்கு விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


எலினாவின் வாசிப்பு களப்போராட்டம் காதல் குடும்ப வாழ்வில் ஏற்பட்ட வேதனைகள் என அனைத்தும் சுருக்கமான முறையில் தேவையான விறுவிறுப்புடன் எழுதப்பட்டுள்ளது. எடுத்து படித்தால் உடனே முடித்து விடலாம். அந்த அளவிற்கு எழுத்து நடை உள்ளது. 


எழுத்து ஆய்வு கற்பித்தல் மொழிபெயர்ப்பு தொழிற்சங்க பணி என தனது செயல்பாட்டில் பன்முக ஆற்றலை கொண்டவராக எழினார் செயல்பட்டு உள்ளதை என்னுள் வாசிப்பின் வலி உணர முடிகிறது என்று வாழ்த்துரை வழங்கியுள்ள மூத்த தலைவர் டி கே ரங்கராஜன் குறிப்பிட்டுள்ளார். எலினாவின் களப்போராட்டங்கள் பெரும் அனுபவங்களை இயக்கத்திற்கு கொடுத்தது.


72 பக்கங்கள் உள்ள சிறு புத்தகம் 12 துணை தலைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் வ. பொன்னுராஜ் அவர்கள் மிகச் சிறந்த முறையில் எழினார் வாழ்வின் சாரத்தை பிழிந்து கொடுத்துள்ளார். 


நேற்றைய தினம் (2.9.24) பல்லவன் ரயிலில் அரியலூர் செல்கிற பொழுது இந்த புத்தகத்தை வாசித்து முடித்தேன். சுற்றி நடந்த எந்த நிகழ்வும் இந்த புத்தகத்தின் வாசிப்பிலிருந்து என்னை வெளி கொனரவில்லை. அதன் உள்ளே மூழ்கி முடித்தேன்.


இந்தப் புத்தகத்தை பாரதி புத்தக ஆலயம் மே மாதம் வெளியிட்டு உள்ளது விலை ரூபாய் 80/

தோழர் அரிகரன்: களப்பணிக்கான வழிகாட்டி :

 



25 9 2024 அன்று அதிகாலை 3:30 மணியளவில் தோழர் ஹரி அவர்கள் தனது 74 வது வயதில் மரணம் அடைந்தார். 


முன்னாள் விமானப்படை வீரர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் எழும்பூர் பகுதி செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழும்பூர் பூங்கா நகர் பகுதியில் முதல் பகுதி செயலாளர் வங்கி ஊழியர் சங்கத்தின் செயல்பாட்டாளர் என  பல களம் கண்டவர் தோழர் அரி.


1985 ஆம் ஆண்டு ஓட்டேரி அருகில் உள்ள ஸ்ட்ரான்ஸ் ரோடு நியூ பேரன்ஸ் ரோடு இடங்களில் வாலிபர் சங்கம் உருவாக்கப்பட்டது. தோழர்கள் நாராயணன், ராதாகிருஷ்ணன், வள்ளுவன், சுப்பிரமணி, சங்கர் மோகன் கொசப்பேட்டை சரவணன், இவர்களுடன் எம்ஆர்எப் சீனிவாசன் இணைந்து இந்த கிளையை உருவாக்கினார்கள். இந்த கிளையின் சார்பில் 1986 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடிதண்ணீர் போராட்டம் சென்னை நகரத்தில் மக்கள் எழுச்சி கொண்ட குடிநீர் போராட்டத்தில் துவக்கமாக அமைந்தது. 1987 ஆம் ஆண்டு வாலிபர் சங்கத்தின் மூன்றாவது அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெ ற்ற நேரத்தில் வீடு வீடாக உண்டியல் வசூலை மேற்கண்ட தோழர்கள் கொசப்பேட்டை பகுதியில் நடத்திய பொழுது, தோழர ஹரி  இயக்கத்தில்  ஈர்க்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அகில இந்திய மாநாட்டுப் பள்ளிகளின் பிரச்சாரமும் தயாரிப்புகளும் அவரை இயக்கத்திற்குள் செயல்பாட்டாளராக மாற்றியது. 


1989 ஆம் ஆண்டு எழும்பூர் பூங்கா நகர் வாலிபர் சங்கத்தின் அமைப்புக்குழு உருவாக்கப்பட்டூ தோழர் ராஜன் (தற்போது அண்ணா நகர் பகுதி குழு உறுப்பினர்) அதன் ஒருங்கிணைப்பாளராகவும், பெரியமேடு வின்சென்ட், நியூ பேரன்ட்ஸ் ரோடு வள்ளுவன், ஸ்டிரான்ஸ் ரோடு சங்கர், பெரியமேடு வின்சென்ட் என மேலும் சில தோழர்கள் அமைப்பு குழு உறுப்பினர்களாக இருந்த செயல்பட்டார்கள். அதே ஆண்டு கடைசியில் எழும்பூர் பூங்கா நகர் பகுதி குழு மாநாடு நடத்தி தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் ஹரி வாலிபர் சங்கத்தின் முதல் பகுதி செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டு எழும்பூர் பகுதி முழுவதும் வாலிபர் சங்கத்தை விரிவு படுத்தினார். 


1993 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் எழும்பூர் பகுதி குழு மாநாடு நடைபெற்ற பொழுது, பகுதி செயலாளராக தேர்வு செய்யப்பட்டு 2001 ஆம் ஆண்டு வரை பகுதி செயலாளராக செயல்பட்டார். 


இந்தியன் வங்கியில் பணிபுரிந்தாலும் அவர் களப்பணியாற்றுவதில் ஆர்வமாக இருந்து செயல்பட்டார். பல வாலிபர் சங்க தோழர்கள் களப்பணியில் இருந்த பொழுது அரசு வேலை கிடைத்து இணைந்தார்கள். அவர்களும் தங்கள் பணிகளை குறைக்கவில்லை. ஆனால் ஹரி வங்கி பணியில் சேர்ந்த பிறகு களத்திற்கு வந்தார். அதுவே ஒரு துணிச்சலான முடிவும், செயலும் ஆகும். 

ஸ்டாரரன் ரோட்டில், தற்போது செயல்படக்கூடிய பள்ளியை நடத்துவதற்கான பல போராட்டங்களை நடத்தியவர், காவல்துறையின் தாக்குதலை நேருக்கு நேராக எதிர்கொண்டவர், 19 90 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க தூதரகம் முன்பு நடந்த பேரணியில் போலீஸ் நடத்திய கடுமையான தாக்குதலில் இருந்து ஏராளமான பெண்களை பாதுகாத்தது மட்டுமல்ல காவல்துறை பெண்கள் மீதான தாக்குதலை பலவந்தமாகவும் தடுத்து நிறுத்தினார் அவர்கள் வீசிய கண்ணீர் புகை குண்டுகளை எடுத்து பெண்களுக்கு பாதிப்பு வராமல் எறிந்தவர்கள் மீது எறிந்தா. 


காவல்துறையில் அதிகாரியாக தேர்வு பெற்ற பொழுது நியமனத்திற்கு பணம் கேட்டார்கள் என்ற காரணத்தினால் அந்த உயர் பதவிக்கு செல்லவில்லை என்று பலமுறை தெரிவித்தார். 


அப்போதைய சென்னை நகர கமிஷனர் துரை அவர்கள் இருந்தார். அண்ணாசாலையில் எந்தப் போராட்டமும் நடக்கவும் கூடாது துவங்கவும் கூடாது  என்று முதலில் தடை விதித்த கமிஷனர் அவர்தான். ஒரு பள்ளிக்கூட பிரச்சினைகள் தொடர்பாக அவருடைய அறையில் உள்ளே புகுந்து உங்கள் குழந்தைகளுக்கும் சேர்த்து தான நாங்கள் போராடுகிறோம் என்று அவர் பேசியதும் நடந்து கொண்டதும் மாற்ற அதிகாரிகளை எல்லாம் கலங்க செய்தது. அன்றைய தினம் ஐஎஸ் உதவி ஆணையராக இருந்தவர் என்னிடமும், அகத்தியலிங்கமிடமும் தொடர்பு கொண்டு கமிஷனரிடமே இப்படி பேசுகிறார் கொஞ்சம் சொல்லி வையுங்கள் என்று தெரிவித்தார்கள். கமிஷனர் அவர் எடுத்த பிரச்சனையை நியாயம் என்று உணர்ந்து கொண்டார். 


இது போன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் சாதாரண மக்களிடம் இரண்டற கலந்து வாழும் கொள்கையை கடைப்பிடித்தார்.

உண்டியல் வசூல் செய்வதில் அன்றைக்கு இருந்த இளைஞர்களிடம் காணப்பட்ட தயக்கத்தை உடைத்து சகஜமான முறையில் வசூலிப்பதற்கான பயிற்சியை கொடுத்தவர். கொசப்பேட்டை சரவணன் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு கையை முறித்த பொழுது காவல்துறையின் மீது வழக்கு போடுவதிலும் போராட்டங்கள் நடத்துவதிலும் காவல்துறை கடைசியில் மன்னிப்பு கேட்டாலும் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று  என்று வழக்கை தொடர்ந்து நடத்தியதில் பங்கு கொண்டார். 


போராட்டங்கள் அதிகமாக நடந்த காலத்தில் அவர் இணைந்தார். பெரிய மேட்டுப்பகுதியில் செயல்பட்ட தோழர்கள் மனோகரன் ராமமூர்த்தி சரளா ராஜாமணி ராஜன் வில்சன் விஜயன் நெல்சன் குமார் விஜயகுமார் போன்றவர்கள் முயற்சியால் சூலை, அவதான பாப்பையா ரோடு, கே.பி பார்க், நரசிங்கபுரம் போன்ற இடங்களில் பல போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தது. மறுபுறத்தில் நம்மாழ்வார் பேட்டையில்  போக்குவரத்து ஓட்டுநர் ரவனையா, சின்னையா, போக்குவரத்து ஓட்டுநர் சங்கர், சம்பத், நாகராஜன், மோகன் குமார், இளங்கோ, தோழர் தேவி, குமரன், மதிவாணன் போன்ற தோழர்களின் செயல்பாட்டால்  நம் ஆழ்வார் பேட்டை போராட்ட களமாக இருந்தது. இந்த இரண்டு பகுதிக்கும் இடையில் உருவான நியூ பார ன்ஸ் ரோடு, ஸ்டார்ன்ஸ ரோடு பகுதிகளில் எழுச்சி கண்டது ஹரியின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. 


இந்தப் பணியின் தொடர்ச்சியாக சாலை மாநகர் திடீர் நகர் பகுதிகளிலும் இயக்கங்கள் உருவாகி புகழேந்தி கிருஷ்ணமூர்த்தி போன்ற தோழர்கள் இயக்கத்திற்குள் ஈர்க்கப்பட்டார்கள். ஓட்டேரி பகுதியில் கொசப்பேட்டையிலும் அப்பளத் தொழிலாளர்கள் பிரச்சனைகளிலும்  தோழர் அரி தலையிட்டு உதவினார்


தோழர் ஹரியின் தயக்கமற்ற கள செயல்பாடு அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தது. அவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட காலத்திலும், தொடர் சிகிச்சையில் இருந்த போதும், சாத்தியமான செயல்பாடுகளை செய்து கொண்டே இருந்தார். எழும்பூர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாதாரண மக்கள் அறிந்து கொள்ளக்கூடிய உள்ளூர் தலைவராகவே பரிணமித்தார்.


அவருக்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அதிகமான தோழர்கள் கலந்து கொண்டு இருக்கலாம் என்று ஆதங்கம் இருந்தாலும், பழைய தோழர்களால் தகவல் கிடைத்த, அவருடன் பணியாற்றிய பழைய தோழர்கள் கலந்து கொண்டது சற்று ஆறுதலாக தான் உள்ளது.

களப்பணியின் வழிகாட்டியாக செயல்பட்ட தோழர் ஹரிகரன் அவர்களுக்கு  வீரவணக்கம்.

பாக்கியம்.

செவ்வணக்கம் தோழா

 


சில மரணங்களை மனம் ஏற்க மறுக்கும், சில மரணங்கள் அதிர்ச்சியூட்டக்கூடியதாக இருக்கும், தோழர் யு.கே. சிவஞானம் அவர்களின் மரணம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பத்து நாட்களுக்கு மேலாக அவரின் உடல்நிலை பற்றி தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்த எனக்கு இன்று காலை அபாய கட்டம் என்றும், ஒரு மணிக்கு அவருடைய மரண செய்தியும் வந்தடைந்த பொழுது அதிர்ச்சி அடைந்தேன்.

 


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளராக, மாவட்ட தலைவராக மாநிலத்தின் பொருளாளராக பல ஆண்டுகள் இணைந்து செயல்பட்டவர். நான் தலைவராகவும் தோழர் ரவீந்திரன் செயலாளராகவும் தோழர் யுகே சிவஞானம் பொருளாளராகவும் வாலிபர் சங்கத்தின் மாநில அமைப்பில் செயல்பட்டோம். அதன் பிறகு கோவை மாவட்ட கட்சி செயற்குழு உறுப்பினராகவும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆகவும் பொறுப்புகள் ஏற்று சுறுசுறுப்பாக செயல்பட்டவர். 


கோவை மாவட்டத்தில் வாலிபர் சங்க இயக்கம் வளர்ந்த பொழுது பன்முக கலாச்சார நடவடிக்கைகளில் வாலிபர் சங்கத்தை ஈடு படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர் தோழர் சிவஞானம் அவர்கள். குறிப்பாக கோவை மாவட்டத்தில் தொடர்ச்சியாக முயற்சி எடுத்து ரத்ததான கழகத்தை ஆரம்பித்த பணி தோழர் சிவஞானம் அவர்களுடையது. ரேஷன் அட்டைப் போராட்டம், பஸ் கட்டணம் மறியல்,அதேபோன்று பல உள்ளூர் பிரச்சனைகளில் தொடர்ந்து தலையிட்டு வந்தார்.


நான் எழுதி வாலிபர் சங்கத்தின் மாநில குழு வெளியிட்ட ஞாபகங்கள் தீ மூட்டும் என்ற புத்தகத்தைப் பற்றி நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டார். ஸ்டாலின் குணசேகரன் எழுதிய விடுதலை வேள்வியில் தமிழகம் என்ற இரண்டு பாகங்களையும் வாங்கி எனக்கு அனுப்பி வைத்தார். 


தொடர்ந்து எழுத வேண்டும் என்று முடிவு எடுத்து பல கட்டுரைகளை தீக்கதிர் நாளிதழில் எழுதினார். வைக்கம் போராட்டம் பற்றிய சிறு புத்தகத்தையும் வெளியிட்டார். கோவை மாவட்ட வாலிபர் சங்க வரலாறுகளை தொகுத்து எழுத வேண்டும் என்ற முறையில் பல தகவல்களை என்னுடன் பகிர்ந்து கொண்டு எழுத ஆரம்பித்தார்.


அன்றாட அரசியல் பணிகளையும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பணிகளையும் , எழுத்து பணிகளையும் ஒருங்கிணைத்து செயல்படக்கூடிய இந்த நேரத்தில் அவருடைய மரணம் என்பது பேரிழப்பாகும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காலதாமதமானாலும் மீண்டு வந்து விடுவார் என்ற நம்பிக்கை இருந்தது.இன்று காலை அந்த நம்பிக்கை தகர்ந்து பிற்பகல் ஒரு மணிக்கு முடிவுக்கு வந்தது. 


தோழர் யூ.கே.சிவஞானம் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி செவ்வணக்கம்.

வந்தே விபத்து வராத பாதுகாப்பு.

 



மைசூர் தர்பங்கா பாகமதி எக்ஸ்பிரஸ் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் விபத்துக்கு உள்ளாகியது. 13 பெட்டிகள் தடம் புரண்டு 19 பயணிகள் படுகாயத்துடன் யாரும் உயிரிழக்காமல் தப்பிக்க வைத்ததில் ரயில் ஓட்டுனரின்  பங்கு மிக முக்கியமானது. 75 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த ரயில் மோதி இந்த விபத்து நடந்துள்ளது. வேகத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில்  ஈடுபட்டதால் பெரும் உயிர் பலி தவிர்க்கப்பட்டு இருக்கிறது. 


இந்திய பிரதமர் மோடி அவர்கள் 2019 க்கு பிறகு 50க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்களை கொடி அசைத்து துவக்கி வைத்துள்ளார். ஆனால் ரயில் விபத்துகளை தடுத்து பயணிகள் உயிரை பாதுகாப்பதற்கு எந்த முன்னுரிமையும் அளிக்கப்படவில்லை. 


ரயில்வே அமைச்சகத்தின் தரவுகளின் படி கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 3 ரயில் விபத்துக்கள் நடந்துள்ளன. ஒடிசா, பீகார்,ஆந்திர பிரதேஷ், மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ரயில் விபத்துகளில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்துள்ளார்கள். ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் விபத்துக்கள் மோடியின் ஆட்சியில் அதிகமாக்கி உள்ளது. சரக்கு ரயில் பயணிகள் ரயிலுடன் மோதுவது அல்லது பயணிகள் ரயில் சரக்கு ரயில் உடன் மோதுவது என்ற விபத்துக்கள் தொடர்கின்றன.


ஒவ்வொரு ரயில் விபத்துக்கு பிறகும் ரயில்வே பாதுகாப்பு பற்றி அதிகமாக பேசப்படுகிறது ஒன்றிய அரசின் அமைச்சர்கள் பெரும் திட்டங்களை அறிவிக்கிறார்கள். ஆனால் அவை எதுவும் அமலாவது இல்லை. ரயில் மோதல் தடுப்பு கவாச் சாதனங்களை ரயிலில் நிறுவ வேண்டும் என்ற முடிவுகள் அமலாகவில்லை. மொத்த ரயில் பாதையின் நீளத்தில் ஒரு சதவீதம் மட்டுமே விபத்து தடுப்பு பாதுகாப்பு சாதனமான கவாச் நிறுவப்பட்டுள்ளது. இந்த வேகத்தில் வேலை நடைபெற்றால் இப்பொழுது இருக்கிற ரயில் அமைப்புகளில் பொருத்தி முடிப்பதற்கு 50 ஆண்டுகள் ஆகும் என்று நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இன்னும் எத்தனை லட்சம் மக்களை பலி கொடுக்கப் போகிறார்களோ என்று தெரியவில்லை. ரயில்வே வருமானத்தில் இரண்டு சதவீதத்தை ஒதுக்கினால் முழுமையாக அமல்படுத்தி விடலாம் என்று தெரிவித்தும் மோடி அரசு பயணிகளின் பாதுகாப்பை பற்றி அவர்களின் உயிரைப் பற்றி கவலை கொள்ளாமல் இருக்கிறது. 


நாங்கள் ஆண்டுக்கு 17,000 கோடி பாதுகாப்பிற்காக ஒதுக்கி இருக்கிறோம் என்று ரயில்வே துறை அமைச்சர் வாய்ச்சவடால் அடித்தாலும் அவை அனைத்தும் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படவில்லை. ரயில்வே பாதுகாப்பு சிறப்பு நிதியானது கால்களுக்கான மசாஜர்கள் , பாத்திரங்கள், மின் சாதனங்கள், மரச்சாமான்கள், குளிர்கால ஜாக்கெட்டுகள் , கணினிகள், எக்ஸ்லேட்டர்கள் வாங்குவதற்கும், தோட்டங்களை உருவாக்குவதற்கும், கழிப்பறைகளை கட்டுவதற்கும் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்று  காம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அறிக்கை தெரிவித்துள்ளது. சிக்னல் அமைப்பை நவீன மயமாக்குதல் ரயில்வே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்ததற்காக,  கவாச் சாதனங்களை பொருத்துவதற்காக பயன்படுத்தவில்லை.


மோடி அரசை முன்னாள் ரயில்வே தலைமை பொறியாளர் அலோக் குமார் வரமா போன்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் அரசாங்கத்தின் தவறான முன்னுரிமைகள் தான் ரயில்வே கீழ்நோக்கி செல்வதற்கு காரணம் என்று  குற்றம் சாட்டி உள்ளனர். அதாவது பாதுகாப்பு எளிய மக்களின் பயணம் ஆகியவற்றை தடுத்து மற்ற அம்சங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை இவ்வாறு சுட்டிக்காட்டி உள்ளனர். தண்டவாளங்களை புதுப்பிப்பது போன்றவைகளும் புறக்கணிக்கப்படுகிறது. 

வேலைப்பளு அதிகமாக இருப்பது மனித தவறுகளுக்கு காரணமாக அமைகிறது என்று சிஏஜி அறிக்கை தெரிவித்த பொழுதும் மோடியின் அரசாங்கம் மூன்று லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப மறுக்கிறது. 


சமீப காலத்தில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மிகப் பெரும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டிகள் பொதுவாக ஏழை மக்களால் பயன்படுத்த படக்கூடியது. இந்திய வெகுஜன மக்களின் ஒரே போக்குவரத்து சாதனம் ரயில்வே என்பதை மோடி அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை.


வந்தே பாரத் அதிவேக ரயில்கள் வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சுதன்சு மணி என்ற நிபுணர், சாமானிய மக்களின் தேவைகளை கவனம் செலுத்தாதது அரசு செய்த தவறு என்று குற்றம் சாட்டினார். ஏழைகளின் பயண தேவைகளை பூர்த்தி செய்வதற்காக குளிரூட்டப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார் . வந்தே பாரத் வசதி படைத்த உயர்நிலைப் பயணிகளுக்கானது . ஆனால் சாமானியர்களின் நலன்களை புறக்கணிக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


தண்டவாளங்கள் நவீனப்படுத்தப்படாததால் வந்தே பாரத் உட்பட அதிவேக ரயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்திற்கு பதிலாக சராசரியாக 83 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறது என்பதுதான் உண்மை.


 அதிவேக ரயில்கள் அதாவது வந்தே பாரத் புல்லட் ட்ரெயின் போன்ற பெரும் திட்டங்கள் வேகத்தை விட அழகு படுத்துவதிலும், அதற்கான ஆடம்பர பொருட்களை பொருத்துவதற்கும் தான் கவனம் செலுத்துகிறார்கள் தவிர வேகத்தில் முன்னேற்றம் இல்லை


மக்களின் உயிர்களைப் பற்றி கவலைப்படாத ஒன்றிய அரசு ஒவ்வொரு விபத்துக்குப் பின்பும் சதி இருக்கிறது என்று ஏதாவது ஒரு காரணத்தை கூறி மக்களின் உயிர் பாதுகாப்பை புறக்கணிக்கிறது.தனது பிம்பத்தை அதிகப்படுத்திக்கொள்ள அதிவேக ரயில் என்ற விளம்பரங்களை அதிவேகமாக செய்து மக்களை சாகடிக்கிறது. வந்தே பாரத் வேகத்தை விட விபத்து வேகமாக வருகிறது ரயில் பாதுகாப்பு வராமலேயே இருக்கிறது.

அ. பாக்கியம்

மார்க்சிஸ்ட் கட்சியின் மனிதாபிமான ஊழியர் மார்ச்சான்:

 



அவர் உயிரோடு இருக்கிறார் என்று தான் எனது என்ன ஓட்டம் இருந்தது. அவர் மறைந்து விட்டார் என்பதை அறிந்திருந்தாலும் அந்த நிகழ்வு என் நினைவுகளில் ஆழ பதியவில்லை. சில நேரங்களில் அவரிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றி இருக்கிறது. ஆனால் இன்று அவரின் ஓராண்டு நினைவஞ்சலி முகநூல் போஸ்டரை பார்த்து மனம் கனத்தது. 


உரத்த குரலில் அவர் என்றுமே பேசி யாருமே கேட்டிருக்க முடியாது. அவருடைய முகத்தோற்றமே இரக்க குணத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும். அந்தத் தோற்றமே அவருடைய செயலிலும் பிரதிபலித்தது. 


தோழர் சத்தியநாதன் பகுதி செயலாளராக இருந்த பொழுது 1998 ல் வியாபாரிகளை அணிதிரட்டுவதற்கான கூட்டத்தை நடத்துகின்ற காலத்தில் அவரும் ஒரு நடைபாதை வியாபாரியாக கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் தொடர்ந்து கட்சியின் ஆதரவாளராக, உறுப்பினராக,ஊழியராக மாறிவிட்டார். 


என் எஸ் கே நகர் என்பது உழைப்பாளி மக்கள் நிறைந்த ஒரு இடம். பெரும்பகுதி குடிசை வீடுகள் இருந்தது. திராவிட இயக்கங்கள் பலமாக இருக்கிற இடம். அதே நேரத்தில் உள்ளூர் தாதாக்களும் நிறைந்திருந்த பகுதி. அந்த நகரில் தோழர் மார்ச்சான் மட்டுமே உறுதிமிக்க செயல்பாட்டினால் என் எஸ் கே நகரில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளையை உருவாக்கினார். சாந்தமான குணமும் தோற்றமும் இருந்தாலும் அழுத்தமான முறையில் செயல்களை செய்யக்கூடியவர்.


முதலில் ஆதரவாளர்களை முயற்சி எடுத்து சேர்த்தார் . கடையில் வேலை செய்தவர்களை கட்சியில் இணைத்தார் . இதன் மூலம் அந்தக் கிளையை செயல்படும் கிளையாக மாற்றினார். அது மட்டுமல்ல, நபர் அந்தப் பகுதி பொறுப்பாளராக இருந்தபோது, நடைபாதை உணவு விற்பனையாளர்  சங்கத்தை , சத்தியநாதன், சீனிவாசன், சுந்தரம் போன்றவர்களுடன் இணைந்து சிஐடியூ மாவட்ட வழிகாட்டுதல் அடிப்படையில் உருவாக்கினார்.


அண்ணாநகர் பகுதியில் அவர் நிதி வசூலில் மிக முக்கியமான பங்கு வகித்தார் வீடுகளுக்கும் கடைகளுக்கும் சென்று வசூல் செய்வது என்.எஸ்.கே நகரில் வசூல் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டாலும் தனிநபராக அனைத்து கட்சியை சேர்ந்தவர்களிடமும் தயக்கம் இன்றி பேசி நிதி வாங்கி விடுவார். தனி நபர்களை சந்தித்து அதிக நபர்களிடம் நிதி வாங்கிய முதல் நபராக அண்ணாநகர் பகுதியில் தோழர் மார்ச்சான் இருந்தார்.


அவரது கடை அண்ணா நகர் சாந்தி காலனியில் தள்ளு வண்டியில் அமைக்கப்பட்ட நடைபாதை கடையாகவும் பிறகு சிறுகடையாகவும் நடத்தப்பட்டது. நடைபாதை கடையாக இருந்த பொழுது ஆளும் கட்சி தாதாக்களின் மாமுல் வசூலுக்கு எதிராக பல இன்னல்களை சந்தித்தாலும் உறுதியுடன் நின்று அவற்றை தடுத்தார். இதேபோன்று மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளின் கெடுபிடிகளையும் சட்டப்படி எதிர்கொண்டு தனது கடையை நடத்தினார் இவரின் இந்த முயற்சிகளுக்கு கட்சி முழுமையான துணையாக இருந்தது. 


அவருடைய கடை, பசியுடன் சென்றவர்களுக்கு பசி ஆறுதல் அளிக்கக்கூடிய இடமாக எப்பொழுதுமே இருந்தது. வறியவர்கள் வந்து கையில் காசு இல்லாமல் அவருடைய கடையை வேடிக்கை பார்த்தால் அவர்களை அழைத்து உணவை கொடுத்து விடுவார். வயதானவர்கள் வந்தால் உணவுக்கு வழியில்லை என்றால் உணவையும் கொடுத்து சிறு தொகையும் கொடுத்து அனுப்புவார். 


வெளியில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமல்ல நான் அண்ணா நகர் பகுதியில் அமைப்பாளராகவும் செயலாளராகவும் செயல்பட்ட காலத்தில் காலை ஏழு மணி முதல் 11 மணி வரை கிளைகளுக்கும், அலுவலகத்துக்கும் சென்று வருவது வழக்கமாகக் கொண்டிருந்தேன். காலை நேரத்தில் சென்ற பொழுதெல்லாம் பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடந்து விட்டால் அவருடைய கடை தான் எனக்கு காலை உணவை உண்ணும் இடமாகும். 


நான் காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு சென்றிருந்தாலும் சென்று இறங்கிய உடனேயே கையில் உணவு தட்டுகளை கொடுத்து விடுவார். மறுத்தாலும் விடமாட்டார். நான் மட்டுமல்ல என்னுடன் வந்தவர்களுக்கும் அவர் உணவளிப்பார். நான் போனால் மட்டுமல்ல கட்சி தோழர்கள் யார் எப்பொழுது அவர் கடைக்கு சென்றாலும் உணவை கண்டிப்பாக கொடுப்பது அவருடைய வழக்கமாக இருக்கும். 


மாநாடுகள் நடைபெறுகிற பொழுது இரண்டு அல்லது மூன்று நாட்கள் கடையை மற்றவர்களை பார்க்க சொல்லிவிட்டு பஸ்ஸில் வந்து விடுவார். பஸ்ஸில் வரக்கூடிய அனைத்து தோழர்களுக்கும் சமைத்து பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு வந்து விடுவார்.


அவர் பெரிய அளவிற்கு வசதியானவர் அல்ல. ஆனாலும் வருமானத்தை செலவு செய்யக் கூடியவராகவே இருந்தார். 

வெள்ளம் அந்த காலத்தில் ஏழைகளுக்கு உணவை சமைத்து இலவசமாக கொடுத்தார். கொரோனா காலத்தில் பலருக்கும் உதவி செய்தது மட்டுமல்ல கட்சித் தோழர்கள் அளவிற்கு மிக அத்தியாவசியமான உதவிகளை செய்தார்.


அவருடைய என் எஸ் கே நகர் வீட்டில் தான் கிளை கூட்டத்தை, சில நேரங்களில் பகுதி குழு கூட்டத்தையும் கட்சி வகுப்புகளையும் தொடர்ந்து நடத்தி இருக்கிறோம். 


ஆரவாரம் இல்லாமல் அமைதியான முறையில் இதையெல்லாம் அவர் செய்து கொண்டிருந்தார். அண்ணா நகரின் கட்சி வளர்ச்சிக்கு கிளை செயலாளரை தாண்டி வேற எந்த பொறுப்பில் இல்லாமல் இருந்தாலும் பல தோழர்கள் செயல்படுவதற்கும் பல வழிகளில் உதவி செய்து கட்சி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார். 


திருச்சி துறையூரை சேர்ந்த அவர் சென்னைக்கு வந்து இயக்கத்தில் இணைந்து அவர் செய்த பணிகளை மறக்க இயலாது அவரோடு இணைந்து செயல்பட்டுவன் என்ற முறையில் அவருடைய பணி மீது அலாதியான மதிப்பு என்றைக்கும் எனக்கு இருக்கிறது. தோழர் மார்ச்சான் போன்றே டிபி சத்திரம் இந்திரா அவர்களும், அன்று அண்ணா நகருடன் இருந்த ஓசான்குளம் கிருஷ்ணன் அவர்களும் மக்களுடன் இணைந்து செயல்பட்டார்கள். 


தோழர் மார்ச்சான் மறைந்து ஓராண்டு ஆனாலும் அவருடைய மறைவை மனம் ஏற்க மறுக்கிறது. முகநூல் போஸ்டரை பார்த்து அவருடன் நெருக்கமாக இருந்து செயல்பட்ட தோழர் எம்.ராஜன் அவர்களிடம் பேசிய பொழுது இன்னும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 


அவரது மகன் இன்று இயக்கத்தில் அவரது குடும்பத்தை பகுதி தோழர்கள் கவனித்து வருகிறார்கள்.இது போன்ற பல்வேறு தோழர்களின் பணிகளை உள்வாங்கி, அவர்களை நினைவு கூர்ந்து இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம். அவரைப் போன்ற வேர்கள் இல்லாமல் நம்மை போன்ற விழுதுகள் இல்லை என்பதை என்றென்றும் நினைவில் நிலை நிறுத்துவோம்.(21.10.24 முதல் நினைவுதினம்)


அ.பாக்கியம்

தொழிற்சங்கம் வைத்தால் தொழில் பாதிக்கப்படும், உண்மையா? சாம்சங் அடிமைகளுக்கு பதிலடி!

 


தொழிற்சங்கம் வைத்தால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும். வேலை நிறுத்தம் செய்தால் தொழில் அழிந்து விடும் என்று கடந்த ஒரு மாத காலமாக samsung அடிமைகள் பிரச்சாரம் செய்தார்கள்? இந்தப் பிரச்சாரம் பொய் என்பதை ஹிந்து பத்திரிகையின்(23.10.24) தரவுகள் வெளிப்படுத்தி உள்ளது.


அதிக தொழில்மயமான மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு மகாராஷ்டிரா குஜராத் ஆகிய மாநிலங்களில் வேலை நிறுத்தம் என்பது பொதுவாக காணப்படுவது. அங்கெல்லாம் தொழிற்சாலைகள் அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது. தொழிலாளர் எண்ணிக்கையும் அதிகமாயி கொண்டு தான் இருக்கிறது. 


2008 -2018 ஆம் ஆண்டுகளுக்கு இடையில்  நாடு முழுவதும் நடைபெற்ற வேலை நிறுத்தங்களில் தமிழ்நாடு 26 சதவீதம் ஆக உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் தொழிற்சாலைகளில் 16 சதவீதம் தொழிற்சாலைகளையும் அதற்கு ஏற்ற வகையில் தொழிலாளர்களின் கொண்ட முதல் மாநிலமாகவும் இருக்கிறது. 


இதே காலத்தில் வேலை நிறுத்தத்தில் 17 சதவீதம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இதில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. சாம்சங் அடிமைகள் ஏன் தொழிற்சங்கம் இல்லாமல் வேலை நிறுத்தம் இல்லாமல் ஆட்சி செய்ய முடியவில்லை என்பதற்கு பதில் சொல்வார்களா? 


நாடு முழுவதும் நடைபெற்ற வேலை நிறுத்தத்தால் ஏற்பட்ட இழப்புகளில் 24 சதவீதம் இழப்புகள் ஏற்பட்டு குஜராத் முதலிடத்தில் வகிக்கிறது என்ற உண்மையை அறிந்து கொள்வது அவசியம். 


உலகில் 50 நாடுகளில் தொழிற்சங்க அடர்த்தியை, அதாவது தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை அதில் உறுப்பினராக இருக்கிற தொழிலாளர்கள் எண்ணிக்கையை கணக்கில் எடுத்தால் இந்தியா 20 சதவீதத்தில் உள்ளது. சீனாவில் இது 44. 2 சதவீதமாக அதே மக்கள் தொகை, அதே அளவு தொழிலாளர்களை,  அதிகமாக இளம் தொழிலாளர்களை இந்தியா வைத்திருந்த போதிலும், தொழிற்சங்க அடர்த்தியில் சரி பாதி தான் உள்ளது. சீனாவில் தொழிற்சங்கம் இருப்பதினால், வேலை நிறுத்தம் நடப்பதினால் தொழில் வளரவில்லையா? 

உலகின் உற்பத்தி துறையில் முதல் இடத்தில் இருக்கக் கூடியது  சீனா என்பது அனைவரும் அறிந்தது தான். இந்தியாவை விட  எகிப்து, ரஷ்யா,தென் ஆப்பிரிக்கா, பல ஐரோப்பிய நாடுகளில் தொழிற்சங்க அடர்த்தி அதிகமாக இருக்கிறது என்பதை தரவுகள் வெளிப்படுத்தி உள்ளன. 


உண்மையை மறைத்து அவதூறு பிரச்சாரங்களை அள்ளி வீசுவதற்கு முதலாளி வர்க்கத்திற்கான அடிமை உணர்வு தான் அடிப்படையாக உள்ளது. 


அ.பாக்கியம்.

கிளர்ச்சிகர நகரங்கள்’

 ‘


டேவிட் ஹார்வியின் புகழ்பெற்ற புத்தகங்களில் ஒன்று. நான் வளர்ச்சியின் பெயரால் வன்முறை என்ற புத்தகத்தை எழுதிய பொழுது அடிக்கடி இந்த புத்தகம் பற்றிய தகவல்களை பார்த்தேன். பல காரணங்களினால் புத்தகத்தை வாங்கி படிக்க இயலவில்லை. ஆனால் அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆவல் அடி மனதில் இருந்தது. தற்பொழுது இந்த புத்தகத்தை தமிழில் சிந்தன் புக்ஸ் வெளியீட்டகத்தால்  வெளியிடப்பட்டுள்ளது. 

தோழர் கே பாலச்சந்தர் இந்த புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து  உள்ளார்.

நேற்று புத்தகம் கிடைத்தவுடன் 18 பக்கம் வரை மொழிபெயர்ப்பாளர் குறிப்புரையை படித்து முடித்தேன்.


கிளர்ச்சிகர நகரங்களின் புத்தகத்திற்கு தேவையான வகையில் சென்னை நகரில் ஏற்பட்ட மாற்றங்களை தனது சொந்த அனுபவங்களின் மூலமாகவும் அவர் பங்குபெற்ற அல்லது முன்னெடுத்த பல இயக்கங்கள் தொடர்பாகவும் விரிவான முறையில் எழுதி இருக்கிறார். புத்தகத்தின் உள்ளே செல்வதற்கு முன் இப்படிப்பட்ட குறிப்பு என்பது மிகவும் அவசியமானது. அதுதான் புத்தகத்தை வாசகனின் வாழ்நிலையோடு இணைக்க கூடியதாக இருக்கும். மொழிபெயர்த்த பெரும்பணி பாராட்டக்கூடிய அதே நேரத்தில் எழுதி இருக்கக்கூடிய குறிப்புரையும் மதிப்பு மிக்கது.தொடர்ந்து புத்தகத்தை படிக்க வேண்டும்

அ.பாக்கியம்

மண்டைக்காட்டு அம்மன் வரலாறும் வர்ணாசிரம ஆக்கிரமிப்பும்

 அ.பாக்கியம்.


. கீகீ.. கூகூ.. என ஓயாது இரைந்து கொண்டிருந்தன பறவைகள். கீழ்வானம் வெலுத்துடிச்சோ நேரமும் ஆயிடுச்சோ என்று கிழக்கே ஏறெடுத்துப் பார்த்தவாறு பனை மரங்களை நோக்கி வேகமாக நடை போட்டான் கட்டேறி. வெயில் வருவதற்குள்  அஞ்சாறு மரம் ஏறி பதநி இறக்குனாத்தான் சில நாட்கள் வருமானத்துக்கு ஓடும். 

சரசரவென சத்தம் கேட்டது. அரவமோ என துணுக்குற்றான் கட்டேறி. அரவம் என்றாலும் தூக்கி வீசும் துணிச்சல் உள்ளவன் தான். ஒரு வேளை சக பனையேறும் தொழிலாளியாகவும் இருக்கக்கூடும். 


ரெண்டு மரம் ஏறி இறங்கி இரண்டு பானைகளை நிரப்பி விட்டான். கட்டேறி அடுத்த மரத்தில் ஏறி நிற்கும்போது அந்த சத்தம் கேட்டது. தாழி பானைக்குள் கலகலவென பதநி குடிக்கும் சத்தமும் பானை உருளும் சத்தமும். 


வா.. வா.. பல நாள் கள்ளன் ஒருநாள் பிடிபட்டியா என்று முணுமுணுத்த படி கையில் இருந்த கூறிய அரிவாளை பானைகள் மறுபுறம் மறைத்த செடி புதர்களின் மீது குறி தவறாமல் வீசினான் கட்டேறி. இருள் சூழ்ந்த நேரத்தில் கண்ணுக்கு ஏதும் தெரியவில்லை. அரிவால் எதிலோ பாயும் சத்தம் கேட்டது. "அம்மே". என்ற பிஞ்சு குறளின் அலறலும் கேட்டது விரைந்து ஓடினான்.. அங்கே அவன் கண்ட காட்சியில் நெஞ்சே வெடித்து வெளிவரும் போல் ஆகிவிட்டது 

நாயோ நரியோ ஆடோ மாடோ என நினைத்த இடத்தில் அவன் செல்வமகள் தலையில் அரிவாள் பாய்ந்து ரத்தம் பீறிட்டு பாய்ந்தது. 

அடிவயிறு கலங்க மண்டையைக் காட்டுமா, மண்டைய காட்டமா, என அலறினான் கட்டேறி.

ஆனால் ரத்தம் பாய்ந்ததில் உயிரிழந்த பொன்னம்மைக்கு அவன் குரல் கேட்கவில்லை....

புத்தகத்தின் முதல் பக்கம் இப்படித்தான் துவங்குகிறது 

மண்டைக்காட்டு அம்மனின் வரலாற்றை திரிபுகளில் இருந்து வெளிக்கொண்டு வந்துள்ளார்.. குமரி மாவட்டத்தில் இருந்த நாட்டார் தெய்வங்களை எப்படி பெருந்தெய்வ வழிபாட்டு முறைக்குள் இழுப்பதற்கு வகுப்பு சக்திகள் செயல்பட்டார்கள் என்பதையும் இந்த வரலாற்றுடன் இணைத்தே தெரிவித்துள்ளார். 


மண்டைக்காடு அம்மனுக்கு அனைத்து விதமான அசைவ உணவுகளும் படைக்கப்பட்டன. ஆடு, கோழி, வாத்து, மீன் அனைத்தும் படைக்கப்பட்ட பட்டியலை காரணத்தோடு எழுதியுள்ளார் 

பெரும்பாலும் கிறிஸ்தவர்களாக இருக்கக்கூடிய மீனவ மக்களும், அதற்கு அடுத்த குடியிருக்க கூடிய இந்து மக்களும், கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலிருந்து வரக்கூடிய கேரள மக்களும், இஸ்லாமியர்களும் ஒன்று கூடி அம்மனை வழிபட்டு வந்த பல நிகழ்வுகளை கண் முன்னிறுத்துகிறார்.

அதைவிட குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது பத்து நாட்கள் நடைபெறும் அம்மன் கோவில் கொடை திருவிழா எப்படி நடைபெறுகிறது என்பதையும், ஒவ்வொரு நாள் நடைபெறும் பூஜைகளைப் பற்றியும், அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வழிபாட்டிற்கு வருவதும், பத்து நாட்கள் பண ஓலை குடிசை போட்டு தங்குவதையும், திருவிழா காலங்களில் சாலையோரங்களில் இருக்கக்கூடிய கடைகளும், கடைகளில் இருக்கக்கூடிய விற்பனைப் பொருட்களைப் பற்றியும், குழந்தைகளுக்கான ஜவ்வு மிட்டாய் ஆரம்பித்து ஆட்டம் பாட்டம் வரை அவர் எழுதியிருப்பது சிறு குழந்தைகளாக இருந்த பொழுது விழாக்களில் கலந்து கொண்ட நினைவுகளை உசுப்பி விடுகிறது.

மண்டைக்காட்டில் ஆர் எஸ் எஸ் காரர்கள் எப்படி உள்ளே நுழைந்தார்கள் அதைச் சுற்றி நடந்த திட்டமிடல்களும் ஏற்பட்ட மோதல்களும் பற்றியும் துல்லியமாக நிகழ்வுகளை எடுத்துரைக்கிறார். தோழர் முருகேசன் மண்டைக்காடு அம்மனின் பக்தனாக சிறுவயதில் இருந்ததும், பக்கத்து கிராமம் அவருடைய வாழ்விடம் என்பதாலும் அனைத்தையும் கண் முன் காட்சிப்படுத்துகிறார். 

கலவரத்திற்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட அமைதி குழுவில் குன்றக்குடி அடிகளார் , மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஹேமச்சந்திரன், மணி போன்றவர்கள் அமைதியை நிலைநாட்ட எடுத்த முயற்சிகளையும் துல்லியமாக குறிப்பிட்டுள்ளார். 

அன்றைய அதிமுக அரசு விசாரணை கமிஷன் அமைத்ததும், வேணுகோபால் தலைமையிலான விசாரணை அறிக்கையில் ஆர்எஸ்எஸ் இன் திட்டமிட்ட செயல்களை அம்பலப்படுத்தியதையும் எழுதியுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர் எஸ் எஸ் எவ்வாறு பொய் பிரச்சாரங்களை கட்டமைத்தார்கள் என்பதையும் கச்சிதமாக அம்பலப்படுத்தி உள்ளார். 

தோழர் முருகேசன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினராக துவங்கி அதன் மாவட்ட செயலாளர் ஆக பல ஆண்டு காலமும், மாவட்ட தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் மூன்று முறை பணி புரிந்திருக்கிறார். 

தோழர் முருகேசனம் , தோழர் தோழர்.செல்லசுவாமி இருவரும் மாவட்ட தலைவர் செயலாளராக இருந்த காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாலிபர் சங்கம் எழுச்சி பெற்ற காலமாக இருந்தது. குறும்பனை போராட்டம், கடற்கரை கிராமங்களில் வாலிபர் சங்க விரிவாக்கம், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக வாலிபர் சங்கத்தின் செயல்பாடு, உள்ளூர் மக்களின் கோரிக்கைகளுக்கான இயக்கம் என்று தொடர்ந்து போராட்டங்கள் என போராட்ட அலை வீசிக்கொண்டு இருந்தது, வாலிபர் சங்கத்தின் போராட்டங்களிலும் மாவட்ட மாநாடுகளிலும் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள். மாநிலத் தலைவர் என்ற முறையில் அடிக்கடி குமரி மாவட்டத்திற்கு சென்று கிராமங்கள்தோறும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு இருக்கிறேன். அரசியல் விழிப்புணர்வு மிக்க மாவட்டமாக அந்த மாவட்டம் இருந்தது என்பதை அப்போது நேரடியாக களத்தில் இருந்த பொழுது என்னால் கண்டுகொள்ள முடிந்தது. 

தோழர். என். முருகேசன் ஒரு எழுத்தாளர் இல்லை என்றாலும் களப்போராளியாக பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். எனவே, தான் இருந்த பகுதியில் நடைபெற்ற இந்த வகுப்புவாத தாக்குதலை அவருக்குரிய அனுபவத்தோடு பகிர்ந்துள்ளார். 


இந்தப் புத்தகத்தை இந்த ஆண்டு வெளியிடுவதற்காக முயற்சி செய்த பொழுது இந்துத்துவாவாதிகள் காவல்துறையில் புகார் கொடுத்து வெளியிடக் கூடாது என்று தடுத்தனர். காவல்துறை புத்தகத்தின் நகலை கேட்டது அது காவல்துறை இல்லை என்று மறுத்து விட்டனர். தொடர்ந்து புத்தகத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் செய்த பொழுதெல்லாம் இந்துத்துவாவாதிகள் அதை தடுத்து பிரச்சாரம் செய்தார்கள். இறுதியாக இந்த நூல் மார்த்தாண்டத்தில் இந்துத்துவவாதிகளின் பெரும் எதிர்பிரச்சாரத்துடன் நடந்தது. இதனால் வெளியீட்டு அன்றே ஆயிரம் பிரதிகள் விற்பனையாகி முடிந்தது என்றால் அந்த பெருமை இந்துத்துவா வினரையே சேரும். 

பாலபிரஜாபதி அடிகளார் வாழ்த்துச் செய்தி. சாகித்திய அகடமி விருது பெற்ற பொன்னிலன் அவர்களின் அணிந்துரையுடன் புத்தகம் வெளிவந்துள்ளது. 

வாங்கி வாசிக்கப்பட வேண்டியது. 

புத்தகம் பெறுவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய 

அலைபேசி எண் 9443791070

விலை ரூ 50/

அதானியிடம் தாரைவார்க்கப்படும் தாராவி குடிசை பகுதி



மும்பையில் நகர நிர்வாகத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் ரியல் எஸ்டேட் துறை என்பது பொன்முட்டையிடும் வாத்தாக இருக்கிறது. மும்பை பெருநகர பகுதி, ரியல் எஸ்டேட் வணிகத்தில் நாட்டின் அதிக லாபம் கொண்ட பகுதியாக செயல்படுகிறது. 


ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவி மும்பை நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. தாராவி மேம்பாட்டு திட்டம் தொடர்ந்து பேசப்பட்டு வரக்கூடிய ஒரு திட்டமாகும். சென்னைக்கு ஒரு கூவம் மேம்பாட்டு திட்டம் என்றால், மும்பைக்கு தாராவி திட்டம் ஆகும்.


சுமார 259.54 ஹெக்டேர் (641 ஏக்கர்) பரப்பளவு கொண்டது. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 6.5 மக்கள் தொகையும் கடந்த 15 ஆண்டுகளில் மேலும் 18 லட்சம் சேர்ந்திருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 


தோல் பதனிடும் தொழில், மண்பாண்டம் செய்யும் தொழில், கேட்டரிங் தொழில், எம்பிராய்டரிங், மறுசுழற்சி வணிகம் என பல குடிசைத் தொழில்கள் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக இருக்கிறது. சுமார் 200 சதுர அடிக்குள் இந்த தொழில்கள் ஒவ்வொன்றும் அமைந்துள்ளது. 


தலித்துகளும் பிற்பட்டவர்களும் இஸ்லாமியர்களும் இணைந்து வாழக்கூடிய ஒரு பகுதியாக சமூக நல்லிணக்கத்தின் பகுதியாக தாராவி இருந்து வருகிறது. 


ரியல் எஸ்டேட் வளர்ந்த பிறகு நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்தவுடன் கடந்த 20 ஆண்டுகளாக மராட்டிய அரசு தாராவி பகுதியில் மேம்பாட்டு திட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறது. தாராவி மறு வடிவமைப்பு இன்று பலரும் பேசக் கூடியதாக மாறி உள்ளது. 


தாராவியின் மொத்த பரப்பளவு 259.54(641 ஏக்கர்)ஹெக்டேரில் 179.  59 (429ஏக்கர்) ஹெக்டேரில் திட்டத்தை அமலாக்க 2008 ஆம் ஆண்டு மகாராஷ்டிர சோசியல் ஹவுசிங் அண்ட் ஆக்சன் லீகல் ( Maharashtra social housing and action legal (mashall) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நியமித்து குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும்படி நியமித்தது.


 இதன்படி 49643 குடிசைகள், 39208 குடியிருப்புகள், 10435 வணிகக் குடியிருப்புகள் இருப்பதாக கணக்கெடுத்து முடித்தது. இவை தவிர தாழ்வாரப் பகுதியில் (chawals) 9522 குடியிருப்புகள் இருந்தன அவற்றில் 6981 குடியிருப்புகளும் 2541 சிறு தொழில்கள் கூடங்களாக செயல்பட்டது. மொத்தம் 81 ஆயிரம் குடியிருப்புகள் இருந்தது இந்தப் பகுதியில் முன்மொழிக்கப்பட்ட மறு வடிவமைப்பு மேம்பாட்டு திட்டம் குடியிருப்புகளுக்கும், வணிக இடங்கள் அனைத்துக்கும் ஒதுக்கீடு செய்வதை உள்ளடக்கிய திட்டமாகும். 


2018 ஆம் ஆண்டு பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இத்திட்டத்திற்கான சர்வதேச டெண்டர் முறையை அறிவித்து ஏலம் விடப்பட்டது துபாய் நாட்டைச் சேர்ந்த செக் லிங்க் டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் ரூபாய் 7200 கோடி ஏலத்தில் திட்டத்தை வென்றது. அதானி குழுவும் இந்தப் போட்டியில் பங்கேற்று 4539 கோடி என அறிவித்து திட்டத்தை பெற முடியவில்லை. 


2022 ஆம் ஆண்டு கோவிட் தொற்று நோய் , நிதி நிலைமைகள் என்ற பல காரணங்களை காட்டி மகாராஷ்டிரா அரசாங்கம் டென்டரை ரத்து செய்தது. புதிய டெண்டரை அறிவித்து அதானி ப்ராப்பர்ட்டீஸ் ரூபாய் 5069 கோடிக்கு ஏலத்தில் வென்றது அதானி குடும்பத்திற்கு டெண்டர் வழங்கியதை எதிர்த்து செக்லிங் டெக்னாலஜி நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. 


7200 கோடி ரூபாய் ரெண்டரை ரத்து செய்து அதானிக்கு 5069 கோடிக்கு கொடுத்ததின் நோக்கம் அனைவரும் அறிந்ததே. அதானியுடன் ரியல் எஸ்டேட் பெரும் நிறுவனமான டி எல் எப், உட்பட மற்றொரு நிறுவனமும் பங்குபெற்றது அதானி செல்வாக்கால் திட்டத்தை கைப்பற்றினார். 


ஏற்கனவே திட்டத்தை ஏலம் எடுத்து இருந்த செக்லிங் டெக்னாலஜி நிறுவனம் 254 ஹெக்ட்ரில் உள்ள அனைத்து குடியிருப்புகளையும் முழுமையாக கணக்கெடுத்து 200 ஏக்கரில் அனைத்து குடிசை வாசிகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் வீடு கொடுக்க திட்டமிட்டு இருந்தது. 100 ஏக்கர் தோட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. 300 ஏக்கர் கட்டிடங்கள் கட்டி விற்பனைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது. அதாவது செக்லிங் டெக்னாலஜி நிறுவனம் தாராவியில் வசித்த அனைவருக்கும் 350 சதுர அடி வீடுகளை வழங்க தயாராக இருந்தது. 


தற்போது அதானி அறிவித்துள்ள திட்டம் இதிலிருந்து மாறுபட்டது மட்டுமல்ல தாராவி மக்களை நடுத்தெருவில் நிறுத்தக்கூடிய திட்டமாக இருக்கிறது. அதானி குழுமத்தின் திட்டத்தின் படி தகுதியான குடியிருப்புகள் தகுதியற்ற குடியிருப்புகள் என்று இரண்டாக பிரிக்கிறார்கள். 81 ஆயிரம் குடியிருப்புகளில் 64 ஆயிரம் மட்டுமே தகுதியானது என்று அறிவிக்கிறார்கள். 


சுமார் 7 லட்சம் மக்கள் தாராவிக்கு வெளியே வாடகை வீடுகள் அல்லது நிரந்தர வீடுகளை பெறக்கூடிய முறையில் வெளியேற்றுவதற்கான திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஜூன் 1 2000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்களுக்கு தாராவியில் 350 சதுர அடியில் வீடு கட்டி கொடுக்கப்படும்.  ஜனவரி 1, 2011க்கு முன்பு வந்தவர்களுக்கு 300 சதுர அடியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தாராவிக்கு வெளியே வீடு கட்டி கொடுக்கப்படும். இதற்கு இவர்கள் 2.4 லட்சம் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு வந்தவர்கள் தாராவிக்கு வெளியே வாடகை வீடு அல்லது தவணை முறையில் செலுத்தக்கூடிய வீடுகள் வழங்கப்படும்.


தகுதியற்றவர்களுக்காக தாராவிக்கு வெளியே மும்பையின் பல இடங்களில் வீடுகள் கொடுக்க வேண்டும் என்று 20 பகுதிகளை மகாராஷ்டிரா அரசு அதானி குழுமத்திற்கு ஒதுக்கி உள்ளது. ஒரு மாதத்திற்கு பிறகு இந்த இடம் 23 பகுதி என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த 23 இடங்களில் 12 இடங்களில் நிலத்தின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவை கொண்டு இருக்கிறது. மொத்தத்தில் 1250 ஏக்கர் நிலம் தாராவிக்கு வெளியே அதான் குழுமத்திற்கு அளிக்கப்பட உள்ளது. 


மும்பையில் பல குடிசை பகுதிகள் மறுபடிவமைப்பு செய்யப்பட்டு வந்த பொழுதும் அவை பொதுத்திட்டமாக அறிவிக்கப்படவில்லை.ஆனால் தாராவி மேம்பாட்டு திட்டம் பொது திட்டமாக அறிவிக்கப்பட்டு தகுதியற்றவர்களுக்கு வீடு கொடுக்கிறோம் என்ற பெயரால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை மும்பையில் சுருட்டுவதற்கான வாய்ப்பை அதானி குழுமத்திற்கு அளித்து உள்ளார்கள்.


மும்பையில் குடியிருப்பு இடிக்கப்பட்டு பொதுத் திட்டத்தின் கீழ் அமுல்படுத்தினால் குடியிருப்பவர்களோ அல்லது வணிக நிறுவனமோ 35 சதவீதம் இடத்தை கூடுதலாக பெறுவார்கள். ஆனால் தாராவியிலிருந்து வெளியேற்றப்படும் குடியிருப்பு வாசிகள் 300 சதுர அடி மட்டுமே பெற முடிகிறது. தகுதியற்றவர்களுக்கு இந்த சலுகையும் இல்லை என்று அறிவித்து விட்டார்கள். 


அதானி குழுமம் தாராவியில் கட்டிக் கொடுக்கப்படும் ஒவ்வொரு 350 சதுர அடிக்கும் 628 சதுர அடி நிலத்தை தனது வணிகப் பகுதியாக மாற்றிக் கொண்டு விற்க முடியும். தகுதியான குடியிருப்புகளின் எண்ணிக்கையை கணக்கிட்டாலும் அதானி குழுமம் தாராவியில் 2.24 கோடி சதுர அடியை விற்பதற்கான வாய்ப்பு உள்ளது. தகுதி இல்லாதவர்கள் என்ற முறையில் தாராவிக்கு வெளியே கொடுக்கப்படும் நிலத்திலும்  7.86 கோடி சதுர அடிகளை விற்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. 


மொத்தத்தில் மும்பையில் நிலங்கள் மறு வடிவமைப்பு செய்து கார்ப்பரேட் கைகளுக்கு மாற்றப்படுகிறது. ஏழை மக்களின் நகர வாழ்க்கை நிரந்தரமற்றதாக மாறிவிட்டது ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கார்ப்பரேட் கம்பெனிகளின் அடிமைகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். 


அ.பாக்கியம்


தகவல் ஆதாரம்: பிரண்ட் லைன் செப்டம்பர் 18



செவ்வாய், ஜூலை 02, 2024

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9





பாக்கியம்

இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது. சீனாவின் வேகமான வளர்ச்சி அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க அளவு விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் உலக மக்களின் முன்னேற்றத்திற்கு சீன வளர்ச்சி தனது பங்களிப்பை செலுத்தி வருகிறது. பொருளாதாரத் துறை, அறிவியல் துறை, விண்வெளித் துறை, தொழில்நுட்பத்துறை என அனைத்து துறைகளிலும் சீனாவின் முன்னேற்றம் வெகு வேகமாக ஏற்படுகிறது. அவற்றில் குறிப்பிடத்தக்கது விண்வெளி ஆய்வில் ஏற்பட்டிருக்க கூடிய முன்னேற்றம். இதுகுறித்து, அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி தெரிவித்த கருத்துக்களில் இருந்தே நாம் புரிந்து கொள்ளலாம். 


மூச்சடைக்கும் முன்னேற்றம்: 

அமெரிக்க விண்வெளி  துறையின் கமாண்டர் ஜெனரல் ஸ்டீபன்  வைட்டிங் (Stephen Whiting)) சீனாவின் விண்வெளி திட்டம் "மூச்சடைக்கும் வேகத்தில் முன்னேறுகிறது" என்று குறிப்பிட்டுள்ளா். அத்துடன் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. இந்த ஆண்டு சந்திரனின் மிகவும் தொலைதூரத்தில் உள்ள இடத்தில் சீனா ஒரு விண்கலத்தை இறக்கி உள்ளது. இதுவரை அமெரிக்காவோ மற்றவர்களோ செய்யாத செயலை சீனா சாதித்து உள்ளது. 2024 ஆம் ஆண்டு 100 சுற்றுப்பாதைகளுக்கான விண்கலங்களை சீனா செலுத்த உள்ளது. 2023 ஆம் ஆண்டு அனைத்து நாடுகளும் சேர்ந்து அனுப்பிய விண்கலங்களோடு ஒப்பிட்டால் இந்த எண்ணிக்கை சரிபாதி ஆகும். இதிலிருந்தே சீனாவின் விண்வெளி முன்னேற்றத்தை அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். விண்வெளித்துறையில் சீனாவின் இந்த அசுர வளர்ச்சிக்கு அமெரிக்காவின் முட்டாள்தனமான ஒரு நடவடிக்கைதான் காரணம் என்றும் அவர் தன் கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். சீனாவின் விண்வெளி திட்ட வளர்ச்சி அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை பின்னுக்கு தள்ளி வருகிறது என்ற உண்மையை உலகம் அறிந்து கொண்டு வருகிறது. 



விண்வெளி திட்டத்தில் அமெரிக்கா பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளது என்பதை மறுக்க முடியாது. அதை வைத்துக்கொண்டு இதர நாடுகளை மேலாதிக்கம் செய்தது என்பதையும் மறக்க முடியாது. இந்த வளர்ச்சிக்கு ஒரு சீன விஞ்ஞானியின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது என்பதை மேலே குறிப்பிட்ட அமெரிக்க இராணுவ அதிகாரி தெரிவிக்கிறார். அந்த விஞ்ஞானியின் பெயர் கியான் சூசென்(Qian Xuesen) என்பதாகும். 1911ஆம் ஆண்டு சீனாவின் ஷாங்காய் நகரில் பிறந்த அவர், 1935 ஆம் ஆண்டு அவர் தனது இளங்கலை இயந்திர பொறியியல் பட்டத்தை அங்கு முடித்த பிறகு அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு அவர் எம்ஐடி-ல் (Massachusetts institute of technology) வானூர்தி பொறியியல (Aeronautical engineering) முதுகலை பட்டத்தை பெற்றார். பின்னர் கால்டெக்கில் (CALTECH) காற்றியக்கவியல் (aerodynamics)மற்றும் கணிதத்தில் முனைவர் பட்டத்தை பெற்றார். நான்கு ஆண்டுகள் கழித்து அங்கு இணை பேராசிரியராக மாறினார். 

அவர் நாசாவின் புகழ் பெற்ற ஜே பி எல் என்று அழைக்க கூடிய ஜெட் ப்ரோபல்ஷன் ஆய்வகத்தை(Jet propulsion Laboratory) வேறு சிலருடன் இணைந்து உருவாக்கினார். இதன் மூலம் தான் முதல் அமெரிக்க விண்கலம் எக்ஸ்ப்ளோரர்-1 ஜுபிடர்-c ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவரால் உருவாக்கப்பட்ட ஜேபிஎல் நாசாவின் மிகச்சிறந்த  விண்கலங்களை உருவாக்கி அனுப்பி வருகிறது. இரண்டாம் உலக யுத்தகாலத்தில் கியான் சூசன் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் ஆலோசனை நிபுணராக பணியாற்றினார். பாதுகாப்புத் துறையின் கர்னல் பதவிக்கு சமமான முறையில் இருந்தது. போரின் போது  நேச நாடுகளால் பயன்படுத்தப்பட்ட பலவிதமான ஏவுகணைகளை கியான் உருவாக்கி வெற்றிக்கு உதவினார். இரண்டாம் உலக யுத்தத்தில் ஜெர்மன் தோல்வியடைந்த பிறகு ஜெர்மன் விஞ்ஞானிகளை விசாரிக்கவும் அவர்களை அமெரிக்க ஏவுகணை திட்டத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யவும் அமெரிக்கா திட்டமிட்டது. அந்தப் பணியில் கியான் சூசன் ஈடுபடுத்தப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் நிரந்தர குடியிருப்பதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டது. 

 

சிவப்பு பயம் (Red Scare):

இந்தப் பின்னணியில் 1949 ஆம் ஆண்டு மாசேதுங் தலைமையில் சீனாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது. ரஷ்ய புரட்சிக்கு பிறகு ஏற்பட்டது போல் மீண்டும் சிவப்பு பயம்(RED SCARE) அமெரிக்காவிற்கு ஏற்பட்டு விட்டது. அதன் தாக்கம் அமெரிக்காவில் வரக்கூடாது என்பதற்கான முயற்சியில் ஈடுபட்டது. ஒரு வருடம் கழித்து அமெரிக்கா, கியான் சூசென்னை கம்யூனிச அனுதாபி என்றும் அவர் உளவு பார்த்தார் என்றும் குற்றம்சாட்டியது. அவர் 1938-ல் கலிபோர்னியாவில் பசடேனா கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார் என்றும், அமெரிக்காவிலிருந்து கால் டெக் கல்வியாளர்களுடன் வெளிப்படையாக இணைந்து செயல்பட்டார் என்றும் குற்றம்சாட்டியது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர், சீனா மற்றும் ரஷ்யாவிற்கு உளவு பார்த்ததாகவும், அமெரிக்கா குற்றச்சாட்டு பட்டியல் வாசித்தது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையுமே கியான் சூசன் மறுத்தார். ஆனாலும் கியான்  மற்றும் அவரது குடும்பத்தாரும் சந்தேகத்தின் அடிப்படையில் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சூசன் ராக்கெட் மற்றும் ஏவுகணை பணிகளில் ஈடுபடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டு அவரும் அவரது குடும்பத்தாரும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.  

மரணம் வரை மன்னிக்கவில்லை 

20 ஆண்டுகாலம் அவர் வாழ்ந்த மற்றும் பணிபுரிந்த ஒரே இடம் அமெரிக்கா. அந்த நாட்டின் விண்வெளி துறை வளர்ச்சிக்கு தான் ஆற்றிய பங்கை கூட கணக்கில் எடுக்காமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் சந்தேகத்தின் அடிப்படையில் கொடூரமான முறையில் வெளியேற்றப்பட்டதை கியான் சூசனாலும் அவரது குடும்பத்தாரும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடும் கோபத்திற்கு உள்ளானார்கள். அமெரிக்காவை விட்டு வந்த பிறகு தன் மரணம் வரை அவர் அமெரிக்காவை மன்னிக்கவே இல்லை. 2009 ஆம் ஆண்டு தனது 97வது வயதில் அவர் மரணம் அடைந்தார். 1955 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் பல்வேறு விதமான அழைப்புகளையும் நிராகரித்தார். அது மட்டுமல்ல… மேற்கத்திய பத்திரிகையாளர்கள் பலமுறை அவருடன் நேர்காணல் நடத்த வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளைகூட அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. 

சீனாவிற்குச் சென்ற பிறகு சீனாவின் விண்வெளி ஆய்வில் ஈடுபட்டார். 1970ஆம் ஆண்டு சீனாவால் ஏவப்பட்ட முதல் விண்கலத்திற்கு மிக முக்கிய பங்காற்றினார். ஏவுகணை தயாரிப்பிலும் முக்கிய பங்காற்றினார். சீனாவின் ராக்கெட்டின் தந்தை என்றும் தேசிய வீரராகவும் போற்றப்பட்டார்.

அமெரிக்க கடற்படையின் 51வது செயலாளர் அமெரிக்க ராக்கெட் மற்றும் ஏவுகணை உந்து உற்பத்தி நிறுவனமான ஏரோஜெட்டின் தலைவருமான டான் கிம்பால் (Dan Kimball) கியான் சூசனை அமெரிக்காவுக்கு வரவழைக்க, அங்கேயே தங்க  வைப்பதற்கான பல முயற்சிகளை அவர் மேற்கொண்டார். ஆனால் அது நடக்கவில்லை. இதுகுறித்து அவர் கருத்து தெரிவித்தபோது,  ‘‘இந்த நாடு (அமெரிக்கா) செய்த முட்டாள்தனமான செயல் அது. அவருக்கு என் அளவுக்குகூட  கம்யூனிச சிந்தனை இருந்தது இல்லை. நாங்கள் அவரை கட்டாயப்படுத்தி ஒரு எல்லைக்கு கொண்டு சென்றுவிட்டோம். அதனால்தான் அவர் எங்களுக்கு எதிரானவராக மாறிவிட்டார்’’ என்றார். 

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் சீனாவில் ஏற்பட்ட புரட்சி அமெரிக்காவை கதிகலங்க வைத்து விட்டது. 

முதல் சிவப்பு பயம் 1917-1920 ஆண்டுகளில் அமெரிக்காவை ஆட்டிப்படைத்தது. சோவியத் யூனியன் போல் இங்கு ஒரு புரட்சி ஏற்படும் என்று அஞ்சினார்கள். 1919 ஆம் ஆண்டு அதாவது சோவியத் புரட்சிக்கு அடுத்த ஆண்டு அமெரிக்காவில் 3600 க்கு மேற்பட்ட வேலை நிறுத்தங்கள் நடைபெற்றது. இவையெல்லாம் அமெரிக்காவின் சிவப்பு பயத்தை அதிகரித்தது. எனவே கம்யூனிஸ்டுகள் அமெரிக்காவில் இருப்பவர்களின் வீடுகளை கைப்பற்றி விடுவார்கள், தேவாலயங்களை இடித்து விடுவார்கள், அமெரிக்க சமூகத்தை மாற்றி அமைத்து விடுவார்கள் என்று பிரச்சாரங்களை கட்டவிழ்த்து, கம்யூனிஸ்டுகளையும், முற்போக்காளர்களையும், ஜனநாயகவாதி களையும் நிறவெறிக்கு எதிராக போராடக் கூடியவர்களையும் வேட்டையாடியது.  

இரண்டாவது சிவப்பு பயம் 1949 சீன புரட்சிக்கு பிறகு அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. 1957 வரை இதை தீவிரமாக அமலாக்கினார்கள். அமெரிக்க செனட்டர் ஜோசப் ஆர் மெக்கார்த்தி என்பவர் கம்யூனிஸ்ட்டுகளை அழித்து ஒழிப்பதற்கான திட்டங்களை உருவாக்கினார். இதற்கு மெக்கார்த்திசம் என்று பெயர். இந்த சிவப்பு பயத்தால் தான் சீன விஞ்ஞானி கியான் சூசன் வேட்டையாடப்பட்டார். 


மனித குலத்திற்கான சீன விண்வெளி சாதனைகள்: 

இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிடப் பட்டிருந்த ஸ்டீபன் வைட்டிங் தெரிவித்த விண்கலத்தின் பெயர் Chang'e-6 ஆகும். இது சந்திரனின் வெகு தொலைவில் உள்ள தெற்கு பகுதியில் இறக்கப்பட்டது. இந்த விண்கலம் மூலமாக 1935.3 கிராம் எடையுள்ள மண் மற்றும் பாறைகள் கொண்ட கனிமங்களை சீன விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர். இதற்கு முன்பு சீனா Chang'e- 5 விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் மூலம் 204.3 கிராம் எடையுள்ள பொருட்களை பெற்றது. அந்தப் பொருட்கள் சந்திரனின் அருகில் இருந்த தூசிகளாகும். அவற்றைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டனர். தற்போது கொண்டு வந்துள்ள சந்திரனின் மாதிரிகள் இன்னும் தனித்துவமான அறிவியல் முக்கியத்துவத்தை உடையது. சந்திரனின் பரிணாமத்தையும் சந்திரனைப் பற்றிய நமது புரிதலையும் மேம்படுத்துவதற்கான அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. சந்திரனில் உள்ள வளங்களை ஆய்வு பண்ணுவதற்கு இந்த கனிம வருகை மிக முக்கிய பங்காற்றும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

2030 ஆம் ஆண்டுக்குள் சந்திரனின் தென்துருவத்தில் ஒரு அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்க வேண்டும் என்று 2019 ஆம் ஆண்டு சீனா திட்டமிட்டது. மேலும் சந்திரனை முழு ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதற்காக லாங் மார்ச் ராக்கெட் சேஞ்ச் விண்கலங்கள், லேண்டர்கள், ரோவர்கள் போன்றவற்றை சந்திரனில் இறக்கியது.

முதல் விண்கலம் Chang'e-1 2007 ஆம் ஆண்டு செலுத்தப்பட்டது. இது நிலவை முழுமையாக ஸ்கேன் செய்து அனுப்பியது. இரண்டாவது விண்கலம் 2010 ல் அனுப்பப்பட்டது. சந்திரனை இன்னும் விரிவான முறையில் படம் எடுத்து அனுப்பியது. மூன்றாவது விண்கலம் 2013 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது. இது சந்திரனில் தரை இறங்கியது. நான்காவது விண்கலம் 2018ஆம் ஆண்டு செலுத்தப்பட்டது இந்த விண்கலம் யூடு-2 என்ற லேண்ட் ரோவரை சந்திரனில் தரையிறக்கி நடமாட விட்டது. ஐந்தாவது விண்கலம் 2014ஆம் ஆண்டு செலுத்தப்பட்டது. தற்போது செலுத்தியுள்ள ஆறாவது விண்கலம் சீனாவின் நீண்ட காலத்திட்டமான சந்திரனின் தென்துருவத்தின் அருகில் ஒரு சந்திர ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்குவதற்கான குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஆகும். 2026 இல் ஏழாவது விண்கலத்தை செலுத்துவதன் மூலம் தென் துருவத்தில் உள்ள அனைத்து வளங்களையும் ஆய்வு செய்திட முடியும். எட்டாவது விண்கலத்தை 2028 ம் ஆண்டு செலுத்த உள்ளது. இது இது சந்திரனின் தொழில்நுட்பங்களை சரி செய்து வளங்களை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் அழைப்பும் ஓநாய் சட்ட திருத்தமும்:    

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள கனிமங்களை உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளுடன் பகிர்ந்து கொள்ள சீனா விரும்புகிறது. ஆனால் அமெரிக்கா ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது மட்டுமல்ல… தடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்கிறது. அமெரிக்காவுடன் விண்வெளி ஒத்துழைப்பில் சீனா எப்போதுமே திறந்த மனப்பான்மையை கடைப்பிடித்து வருகிறது. அமெரிக்காவுடன் புவி அறிவியல் விண்வெளி அறிவியல் ஆகியவற்றின் ஒத்துழைப்புக்கான பணிக்குழுவை சீனா நிறுவி உள்ளது. மேலும் சிவில் விண்வெளி ஒத்துழைப்பு குறித்த உரையாடலுக்குமான குழுவையும் அமைத்துள்ளது. செவ்வாய் கிரக ஆய்வுகளில் இருந்து சுற்றுப்பாதை தரவுகளை பரிமாறிக் கொள்வதற்கான ஒரு முறைமையிலும் சீனா நிறுவியது. 

ஆனால் இவற்றை தடுக்கக்கூடிய முறையில் அமெரிக்கா ஓநாய் சட்டதிருத்தம் (wolf amendment) கொண்டு வந்தது. இந்த சட்டம் சீனாவுடன் அமெரிக்காவின் நாசா (national aeronautics and space administration) விண்வெளி திட்டத்தில் ஒத்துழைப்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று தடை விதித்தது. தற்போது உலகில் அனைத்து மக்களுக்குமான விண்வெளி ஆய்வுகளை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா சுயநலத்தின் அடிப்படையில் தடையாக இருக்கிறது. தனது மேலாதிக்கம் தகர்ந்து விடும் என்ற அச்சத்தில் செயல்படுகிறது

அமெரிக்கா தனது சுயநலத்திற்காக பல நேரங்களில் விவாதிக்க தயாராக இருக்கும். சீனா 2018 ஆம் ஆண்டு chang'e-4 அனுப்பி யுடு 2 (Yutu- 2) என்ற இதன் லேண்ட்ரோவரை சந்திரனில் இறக்கியது. டிசம்பர் 7ஆம் தேதி இறக்கப்பட்ட இந்த லேண்ட் ரோவர் டிசம்பர் 12ஆம் தேதி தனது சுற்றுப்பாதை செயல்பட துவங்கியது. இதுவரை மிக நீண்ட நாட்கள் சந்திரனில் செயல்படக்கூடிய லேண்ட் ரோவர் இதுதான். இன்றும் செயல்பட்டு வருகிறது.  

இதற்கு முன்பு சோவியத் யூனியன் அனுப்பிய லூனோ கோட் (Lunokho-1) ரோவர் 321 நாட்கள் தொடர்ந்து சந்திரனில் செயல்பட்டது. 2018 ஆம் ஆண்டு சீனா அனுப்பிய இந்த ரோவர் 2022 ஆம் ஆண்டு ஜனவரி வரை ஆயிரம் மீட்டர் அதாவது 3300 அடி பயணித்து உள்ளது. சந்திரனின் உள்ள இந்த யுடு-2 ரோவர் தனது பயணத்தின் போது வரலாற்று தடங்களை அழித்து விடுமோ என்று அமெரிக்கா அச்சப்படுகிறது. எனவே அது பற்றி விவாதிக்க தயார் என்று தீவிர ஆர்வம் காட்டுகிறார்கள். 1969இல் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் கால் தடம் நிலவில் இருக்கிறது. இது பற்றி குறிப்பிடுகிற பொழுது சீனாவின் மூத்த  ஆராய்ச்சியாளர் லி ஹாங்போ ஆம்ஸ்ட்ராங்கின்  கால் தட அடையாளம் பற்றி அமெரிக்க குழு கவலைப்பட தேவையில்லை. அவைகளை பாதுகாக்க கூடிய வேலைகளையும் சீனா செய்யும் என்று தெரிவித்தார்.

அமெரிக்கா, சீனாவை விண்வெளித் திட்டத்தில் சேர்க்கக்கூடாது என்று தொடர்ந்து தனிமைப்படுத்தி வரும் நிலையில் சீனா தன்னந்தனியாக விண்வெளி சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. தற்போது சீனாவின் டியாங் யாங் விண்வெளி நிலையம் விண்வெளியில் பிரம்மாண்டமாக செயல்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டு சீனாவும் ரஷ்யாவும் இணைந்து சந்திரனில் தளத்தை உருவாக்க போவதற்கான திட்டத்தை அறிவித்தனர். மேலும் இரு நாடுகளால் உருவாக்கப்பட்டு வரும் சர்வதேச நிலவு ஆராய்ச்சி நிலையத்தில் திட்டத்தில் சேருமாறு அழைப்பு விடுத்தனர். சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, பெலாரிஸ், அஜர் பைஜான், வெனிசுலா, பாகிஸ்தான், எகிப்து உள்ளிட்ட உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலைய ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை தடுக்கும் வகையில் அமெரிக்கா ஆர்ட்டெமி திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.  

அமெரிக்காவின் விண்வெளி திட்டம் மல்டி மில்லியனர்களின்  குடியேற்றத்திற்கான திட்டமாக இருக்கிறது. சீனாவோ மனிதகுல வளர்ச்சிக்கான பாதையில் விண்வெளி ஆராய்ச்சியை முன்னெடுத்து செல்கிறது. 

 

. பாக்கியம் 

சிபிஐஎம் மாநில குழு உறுப்பினர்

 

14. மத நம்பிக்கை சுதந்திரம் என்றால் என்ன?

சீன வரலாற்றில் மாற்றங்களின் மகுடமாக 1949 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடந்த புதிய ஜனநாயக புரட்சி அமைந்தது. புரட்சி, வெறும் வ...