Pages

வெள்ளி, ஏப்ரல் 03, 2026

அமைப்பின் அடையாளம் தோழர் தயாநிதி.

 


    

அமைப்பின் அடையாளம் தோழர் தயாநிதி.

            ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக,  திருவண்ணாமலை மாவட்டத்தையும் உள்ளடக்கிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக, வேலூர் மாவட்டத் தலைவராக, வாலிபர் சங்கத்தின் மாநில நிர்வாகியாக, இளைஞர் முழக்கம் ஆசிரியர் குழு உறுப்பினராக, விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர், மாநில செயலாளர்களில் ஒருவராக, சி ஐ டி யு ஆட்டோ சங்கத்தின் வேலூர் மாவட்ட முதல் செயலாளராக, கட்டுமான சங்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் என 45 ஆண்டு கால அரசியல் வாழ்வில் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்காகவும்  ஓய்வு ஒழிச்சலின்றி பணியாற்றி இயக்கம் வளர்த்தவர் தோழர் எஸ் தயாநிதி. இருதய அடைப்பிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் மீண்ட உடனே அவர், மீண்டும் ஓய்வு ஒழிச்சலின்றி பணியாற்ற நினைத்தார். அதற்காக மிகவும் சிரத்தை எடுத்தார். இது கால தேவனின் கண்களை உறுத்த, இயற்கை அந்த தோழனை உடனே அழைத்துக் கொண்டது. தோழர் தயாநிதி உடல் நலக்குறைவால் .... அன்று மரணமடைந்தார். அவருடைய படத்திறப்பு நிகழ்ச்சி 30.03.26. திங்கள் கிழமை மாலை வேலூரில் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு தோழர் காத்தவராயன் (மாவட்ட செயற்குழு உறுப்பினர்) தலைமை தாங்கினார்.  மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர். வே.மீனாட்சி சுந்தரம், தயாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார். நினைவேந்தல் பாடல்களை சாரல் இசை குழுவினர் பாடினார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்  ரவீந்திரன், மூத்த தோழர் B. சுந்தரராஜன், வாலிபர் சங்க முன்னாள் மாநில தலைவர் அ. பாக்கியம், எஸ். வாலண்டினா (மாநிலக்குழு உளுப்பினர்) ஆறுமுக நைனார் (மாநிலக்குழு உளுப்பினர்) விவசாய சங்கத்தின் மாநிலச் செயலாளர்களில் ஒருவரான பி. துளசி நாராயணன், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் தோழர் ரகுபதி, முன்னாள் மாவட்ட செயலாளர் காசிநாதன்,எம் பி ராமச்சந்திரன், செங்கை மாவட்டத்தின் சார்பில் சங்கர் (மாவட்ட செயற்குழு உறுப்பினர்) திருவண்ணாமலை  மாவட்ட செயற்குழு உறுப்பினர் லட்சுமணன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், திராவிடர் கழகத் தலைவர் மதிமுக வின் செயலாளர் விடுதலை சிறுத்தை கட்சியின் செயலாளர் உட்பட பலரும்  நினைவேந்தல் உரையை நிகழ்த்தினார்கள்.

தோழர் தயாநிதியின் தங்கை மகள் பிரித்தீயின் பேச்சில் இருந்து, குடும்ப உறுப்பினர்களால் தயாநிதி, எந்த அளவுக்கு நேசிக்கப்பட்டார் என்பது தெரியவந்தது.  பிரித்தீயின் பேச்சு அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

நிகழ்ச்சியில் பலரும் ஆற்றிய நினைவேந்தல் உரையில் இருந்து…

***

கலை இலக்கியத்துறையில் மிகுந்த திறனும் ஆர்வமும் உடையவர் தோழர் தயாநிதி. அதிலும் குறிப்பாக ஓவியக் கலைஞன் அவர். சிறந்த பாடகர்; நல்ல படைப்பாளி. இத்தனை திறமைகள் இருந்தும் ஊடக வெளிச்சத்திற்காக ஆசைப்பட்டவர் இல்லை. தன் திறமைகளை ஸ்தாபன நலன்களுக்காகவே பயன்படுத்தினார். கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஒரு காலத்தில் சுவரெழுத்துக்களே மிகப்பெரிய பிரசார ஆயுதமாக இருந்தது. அந்த ஆயுதத்தை அருமையாக பயன்படுத்தியவர் தோழர் தயாநிதி. வெள்ளை அடிக்கப்பட்ட சுவர்கள் எல்லாம் தயாநிதியை விரும்பி அழைக்கும். வா! உன் தூரிகையால் வெற்றுச் சுவரான எனக்கு விளம்பரம் கொடு. என்னை படங்களாலும், பிரசார வாக்கியங்களாலும் அழகுப்படுத்து. என் மூலமாக மக்கள் பிரச்னைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களிடம் கிளர்ச்சியை ஏற்படுத்து என்று தயாநிதியை விரும்பி அழைக்காத சுவர்களே இல்லை.

எதிலும் அமைப்பு நலனை பிரதிநிதித்துவப்படுத்தினாரே ஒழிய தன்னை பிரதானப்படுத்திக் கொள்ளாத பெருமகன் அவர். சொந்த வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் அவரிடம் சந்தர்ப்பவாதமோ பிழைப்பு வாதமோ இல்லை. வாழ்க்கையை அவர் நடத்தினார். பொறுப்புகளை ஏற்றுக் கொண்டாரே தவிர எந்த ஒரு பதவிக்கும் அது பொது சேவை பதவியாக இருந்தாலும் அதற்காக அலைந்தது கிடையாது, முன்மொழிந்து கொண்டதும் இல்லை. 45 ஆண்டுகால அரசியல் வாழ்வில் ஆடம்பர வாழ்க்கையை அண்டியது இல்லை. அமைப்பை கட்டுவதில் முன்னுரிமை கொடுத்ததினால் அனைத்து தோழர்களாலும் ஆகர்ஷிக்கப்பட்டார்.

****

திருவண்ணாமலை மாவட்டத்தையும் உள்ளடக்கிய தற்போது நான்கு மாவட்டமாக இருக்கக்கூடிய ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் முதல் முழு நேர ஊழியராக 1988 ஆம் ஆண்டு பணியினை துவக்கினார் தோழர் தயாநிதி. அவருடைய இணையர் சங்கரி அவர்களும் முழு நேர ஊழியராக பணியாற்றினார். ஒரு பணியில் இருந்து ஓய்வு பெற்று அடுத்த இயக்கப் பணிகளில் வந்து பணியாற்றுவதற்கும், எந்தப் பின்னணியும் இல்லாமல் முழு நேர ஊழியராக வந்து வாழ்க்கையை எதிர்கொள்வதற்கும் இடையில் மடுவுக்கும் மலைக்குமான வேறுபாடுகள் இருக்கும் என்பதையும்  உணர்ந்து கொண்ட அவர், அதை சிறப்பாக எதிர்கொண்டார். 1992 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பஸ் கட்டணம் உயர்வு எதிர்ப்பு போராட்டத்தில் 350 இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதில் தோழர் சங்கரி அவர்களும் 15 நாட்கள் 7 பெண்களுடன் சிறையில் இருந்தார்கள்.

****

வேலூர் மாவட்டத்தில் சிஎம்சி மருத்துவமனைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து நமது தோழர்கள் சிகிச்சைக்காக வருகிற பொழுது அவர்களுக்கு எல்லாம் எந்தவிதமான தயக்கமும் இன்றி, சலிப்புமின்றி அவர்கள் டிஸ்சார்ஜ்  ஆகி செல்லும் வரை உதவி செய்தார். இந்தக் கருத்தை ஆமோதித்துப் பேசிய தோழர் டி. ரவீந்திரன், ‘‘விவசாயிகள் சங்கத்தின் மாநாடு வேலூரில் நடைபெற்ற பொழுது, எனது இளைய மகள் நோய்வாய்ப்பட்டு 15 நாட்கள் சிஎம்சி மருத்துவமனையில் இருந்தாள். அந்த 15 நாட்களும் தோழர் தயாநிதியும், அவரது இணையர் சங்கரியும் உடனிருந்து  எனது மகளை கவனித்துக் கொண்டார்கள்.  தெரிந்த தோழர், தெரியாத தோழர் என்று ஆள் பார்த்து உதவி செய்ததில்லை அவர். அனைத்து தோழர்களுக்கும் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்த தயாநிதி அவர்’’ என்று உருக்கமாகப் பேசினார்.

***

வேலூர் சிறையில் நான் (பாக்கியம்) உட்பட 85 தோழர்கள் 9 நாட்கள் சிறையில் இருந்தபோது அன்றைய மாவட்டச் செயலாளர் நாராயணனும், தயாநிதியும் வெளியில் இருந்து எங்களை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். வேறு எந்த மாவட்டக் கட்சிக் குழுவுக்கும் இல்லாத ஒரு பணி வேலூர் மாவட்டக் கட்சிக்குழுவுக்கு இருந்தது. அது சிஎம்சி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் தோழர்களையும், மக்கள் பிரச்னைக்காக கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்படும் தோழர்களையும் கவனித்துக் கொள்வதாகும். தயாநிதி கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்த காலகட்டத்தில் இந்தப் பணியை தொடர்ந்து செய்து  வந்தார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரத்ததான கழகம் வலுவாக செயல்பட்ட மாவட்டங்களில் வேலூர் மாவட்டமும் ஒன்றாகும். இதற்கு தயாநிதி அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. முதன் முதலில் ரத்ததானம் வழங்குவதற்காக சிஎம்சி மருத்துவமனையை அணுகிய பொழுது அவர்கள் இடது சிந்தனை (left oriented) அமைப்புகளிடமிருந்து நாங்கள் ரத்தம் தானம் வாங்கிக் கொள்வதில்லை என்று மறுத்துவிட்டார்கள். தொடர்ந்து பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கும் நோயாளிகளுக்கும் ரத்தம் கொடுக்கும் பணியை தயாநிதி போன்றவர்கள் செய்து வந்ததை அறிந்து வேறு வழியின்றி வாலிபர் சங்கத்திடம் தொலைபேசியில் அழைத்து ரத்தம் கேட்க வேண்டிய நிலைமையை சிஎம்சி மருத்துவமனைக்கு தோழர் தயாநிதி உருவாக்கினார். அவரும் 92 முறைகள் ரத்த தானம் செய்துள்ளார். தன் வாழ்நாளை உழைப்பாளி வர்க்கத்துக்கு அர்ப்பணித்த அவர், ரத்த தானம் மட்டும் செய்யவில்லை. தான் இறந்த பிறகு உடலையும் மருத்துவ உலகிற்கு தானமாக தந்துவிட்டார்.

தோழமையின் சூழலை சுயநலன்கள் ஆக்கிரமித்து விடாமல் தோழமையின் உணர்வுகளை மேம்படுத்துவதில் தோழர் தயாநதி முன்னிலையில் இருந்தார். அவருக்கு எனது கண்ணீர் நிறைந்த அஞ்சலியை காணிக்கையாக்குகிறனே்.

தோழமையுடன்

அ. பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

75 சமூகத் திட்டங்களின் சீரான வளர்ச்சி-

  அ.பாக்கியம் இனச் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய ஒரு மாகாணத்தில் பொருளாதார முன்னேற்றங்கள் என்பது நாட்டின் பொருளாதார வளர்ச...