101 ஆண்டுகள்
பொதுவுடமை வாழ்க்கையின் இலக்கணமாய் வாழ்ந்து காட்டி மறைந்துள்ளார். யாரும் வாழ
முடியாத வாழ்க்கையை வரலாற்றில் பதிவு செய்துள்ளார். போராட்டங்களும் சிறை கொட்டடிகளும் அவரின்
அன்றாட வாழ்வுகளாக மாறியது. உடல் அனுமதிக்கிற வரை முடங்கி விடாமல் இயங்கிக் கொண்டே
இருந்தார்.
எளிமையாய் வாழ்ந்தார் என்று
ஒற்றை வரியில் சடங்குபூர்வமான வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. டீக்கடைகளில் டீ
குடிப்பதும் தோளில் கை போட்டு பேசுவதும்
பயண நேரங்களில் காத்திருப்பதும் எளிமை என்று எடுத்துக் கொள்ளக்கூடிய காலம்
இது. கம்யூனிஸ்டுகள் அவ்வாறு இருப்பது எளிமையல்ல. அது கம்யூனிஸ்டுகளின் அடையாளம்.
மாக்ஸிம் கார்க்கி அவர்கள எளிமையை பற்றி பேசுகிற பொழுது எளிதில் அணுகக் கூடியவராக
லெனின் வாழ்ந்தார் என்பார். அதுபோல் தோழர் ஆர். என். கே. அவர்கள் அனைவராலும்
எளிதில் அணுகக்கூடிய எளிமையானவராக இருந்தார். எளியவர்களிடம் பாசத்தோடு
பேசக்கூடியவராக, தான் தலைவர் என்ற அனைத்து இடைவெளிகளையும்
புறம் தள்ளி அவர்களின் ஒருவராக அணுகக் கூடியவர்.
கிளைச் செயலாளர், இடைக்கம்பட்டி
செயலாளர், மாவட்ட பொறுப்புகள், மாநில
விவசாய சங்க செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில
செயலாளர், அகில இந்திய தலைவர்களின் ஒருவராக அமைப்புகளின்
அனுபவங்களையும் போராட்டங்களின் அனுபவங்களையும்
பெற்றிருந்த பெரும் தலைவர்.
தனிநபர் தொடர்புக்கும், தோழமைக்கும்
முன்னுதாரணமாக திகழ்ந்தார். எனது குடும்பம் பல்லாவரத்தில் குடியிருந்த பொழுது தோழர் ஆர்.என்.கே அவர்கள் தோழர்கள் டாக்டர்
ரவீந்திரநாத் சாந்தி அவர்களின் மருத்துவமனைக்கும், வீட்டிற்கும்
வருகிற பொழுதெல்லாம் எங்களது வீட்டிற்கும் தவறாது வந்து செல்வார். எங்கள் வீட்டை
கடந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டால் வீட்டிற்கு வந்துவிட்டு அதன் பிறகு
ரவீந்திரநாத் அவர்களின் வீட்டிற்கு செல்வார். தோழர் ரவீந்திரநாத் அவர்கள் எனது மருத்துவ பரிசோதனைக்காக தோழர் ஆர்.என்.கே
அவர்களின் மகள் மருத்துவர் ஆண்டாள் அவர்களிடம் அனுப்பி வைத்தார். அதை அறிந்த தோழர்
ஆர்.என்.கே அவர்கள் தொடர்ச்சியாக எனது உடல்நிலை பற்றி வாய்ப்பு கிடைக்கிற
போதெல்லாம் விசாரித்துக் கொண்டே இருப்பார். எனது எழுத்துக்கள் எதையாவது வாசிக்க
வாய்ப்பு இருந்து வாசித்து விட்டால் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதன்
கருத்துக்களை பகிர்ந்து கொள்வார். எனக்கு மட்டுமல்ல அவருக்கு அறிமுகம் இல்லாத
எழுத்தாளர்கள் எழுதினாலும் சிறப்பாக இருந்தால் தன்னுடைய கருத்துக்களை நேரடியாக
பேசி விடுவார். தான் ஒரு உயர்ந்த பொறுப்பில் அல்லது கமிட்டிகளில் இருக்கிறோம் என்ற
எண்ணம் என்றுமே வெளிப்பட்டதாக காண முடியாது. பகட்டுகளையும், பந்தா
அரசியலையும் வெறுக்கக் கூடியவராக இருந்தார்
தனது முதிர்ந்த வயதுகளிலும்
நிகழ்வுகளுக்கு அழைத்தால் மறுக்காமல் இயன்றவரை கலந்து கொள்வார். சில ஆண்டுகளுக்கு
முன்பு திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தோழர் நக்கீரன் அவர்களின் இளைய மகன்
திருமணத்திற்கு வரவேண்டும் என்று நானும் அவரும் சென்று கேட்ட பொழுது, அவர் வர முடியாத
நிலையில் இருந்தார். ஆனாலும் காணொளி மூலமாக மணமக்களை வாழ்த்த வேண்டும் என்ற
கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்றிக் கொடுத்தார். தோழர்களின் உணர்வுகளை
உள்வாங்கிக் கொண்டு அவர்களின் உள்ளங்களில் உயர்ந்து நின்றார்.
தமிழக பொதுவுடமை இயக்கத்தின்
பெரும் அடையாளமாக எண்ணற்ற முன்னுதாரணங்களை தன்னுடைய வாழ்க்கையின் மூலமாக வருங்கால
தலைமுறைகளுக்கு வழங்கிச் சென்றிருக்கிறார்.
தோழர் ஆர் என் கே
அவர்களுக்கு வீரவணக்கம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக