Pages

வியாழன், ஏப்ரல் 02, 2026

சடங்குத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட படத்திறப்பு கூடுகை:





சடங்குகளாகவும் சம்பந்தப்படாதவர்களின் உரைகளாகவும் படத்திறப்பு நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கக் கூடிய காலகட்டத்தில், அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சடங்குத்தனத்தை முறியடித்த  படத்துக்காக இது அமைந்தது.

 மறைந்த தோழரின் சமகாலத்தில் களத்தில் பணியாற்றிய தோழர்களாலும், அவர்களால் உருவாக்கப்பட்ட தோழர்களின் பங்கேற்பாலும் , மறைந்த தோழர்களின் உறவுகளாலும் அரங்கம் நிரம்பி வழிந்த நிகழ்வாக தோழர். S.M. லூர்து அவர்களின்  படத்திறப்பும், அவரோடு பணிபுரிந்தவர்களும், அதற்குப் பிறகு இயக்கத்தில் பயணித்து மறைந்து போன 35 தோழர்களின் பட திறப்பும், 28.03.26 அன்று மாலை 5:30 மணி அளவில் வியாசர்பாடி சர்மா நகரில் என் பி மகாலில் நடைபெற்றது. 

நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து நிறைவுறுகிற வரை இறுக்கமும், நெகிழ்ச்சியும், சில பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த தோழர்களின் உணர்வுகளும் அரங்கத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் திட்டமிட்ட முறையில் துவங்கி குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டது.

தோழர். லூர்து அவர்களின் குடும்பம் முழுமையாக நிகழ்வில் பங்கு பெற்றனர். 120 தோழர்களின் பெயர் பட்டியலை எடுத்து அழைப்பு கொடுத்திருந்தாலும் 180 இருக்கையில் போடக்கூடிய அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் 240 தோழர்கள் கலந்து கொண்டது மறைந்த தோழர்களின் மகத்தான பணிகளை வெளிப்படுத்தியது.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை தோழர்கள். அ. பாக்கியம்-மு. துரைப்பாண்டியன் இருவரும் முன்னெடுத்திருந்தாலும், தோழர்கள். எஸ் ஏ. வெற்றி ராஜன், திருவேட்டை, ஜபருல்லா, விஜயன், சந்தியாகு, மோகன், போன்றவர்கள் களத்தில் நின்று எங்களுடன் இணைந்து நிகழ்ச்சியை சிறப்புற அமைத்துக் கொடுத்தார்கள். நிகழ்ச்சிக்கான நிதி உதவியை தானே முன்வந்து பல தோழர்கள் உதவி செய்தது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய செயலாகும்.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் எஸ்.ஏ வெற்றி ராஜன் முதலில் பேச, தோழர் எம்.துரை பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி 1980 ஆம் ஆண்டுகளில் துவங்கி பல தோழர்களின் பணிகளை குறிப்பிட்டு முடித்தார். தோழர் அ .பாக்கியம், லூர்து அவர்களின் பணியும் அப்பகுதியில் இயக்கம் எதிர்கொண்ட சவால்களையும் சுருக்கமாக எடுத்துரைத்தார். Repco வங்கியின் தலைவர் E .சந்தானம் அவர்கள் தனது இந்த உயர்வுக்கு லூர்து போன்றவர்களின் செயல்கள் காரணம் என்பதையும் நினைவு கூர்ந்தார். தோழர்கள் கலைச்செல்வன், திருவேட்டை, டி கே சண்முகம் போன்ற தோழர்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.

தோழர். எஸ் எம் லூர்து அவர்களுடன் இணைந்து பயணித்த தோழர், சிறுவயதிலிருந்தே நண்பர்களாகவும், வாழ்விடத்திலும் பணியிடத்திலும், இயக்கத்திலும் இணைந்தே பயணித்த தோழர்.A. ராமு அவர்கள் மறைந்த தோழர் லூர்து அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையை நிகழ்த்தினார்.

 அரங்கத்தில் இருந்த பலரின் கண்கள் கண்ணீரால் நனைந்தது. உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு நடக்க முடியாத சூழ்நிலையிலும் தோழர் ராமு அவர்களும் அவர்களது குடும்பமும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இக்காலத்தில் மறைந்த தோழர்கள் 35 பேர்களின் படத்தை தோழர் அ.சௌந்தரராஜன் திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். நான் நிகழ்வுக்கு வருவதற்கு முன்பாக வழக்கமான ஒன்று என நினைத்துக் கொண்டு வந்தேன். ஆனால் இங்கு வந்தவுடன் இந்த அரங்க சூழலும், மறைந்த தோழர்களின் படங்களும் என்னை வெகுவாக பாதித்துவிட்டது. ஒரு விதமான உணர்வுகளின் நடுக்கம் என்னை ஆட்கொள்கிறது என்று பேசினார். அவசரநிலை காலத்தில் இருந்து தோழர் லூர்து ராமு மற்றும் முக்கிய தோழர்களுடன் பணியாற்றியதை நினைவு கூர்ந்தார்.

தோழர் வே மீனாட்சி சுந்தரம் இக்காலங்களில் மாவட்டச் செயலாளராக இருந்து வழிகாட்டியவர். வடசென்னை பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு வியாசர்பாடி தோழர்களின் பங்கு என்பது மிக முக்கியமானது. தோழர் லூர்து போன்ற மிகத் துணிச்சலான, அர்ப்பணிப்பு மிக்க, அடுத்தவர்களை ஈர்த்து செயல்படக்கூடிய வல்லமை நிறைந்தவரின் பணியை நினைவு கூர்ந்தார். தோழர் லூர்து அவர்களின் மூத்த சகோதரர் மகள் செல்வி கவிதை வாசித்தார்.

நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் தோழர். எம் ராமகிருஷ்ணன், மாநில குழு உறுப்பினர் தோழர் L.சுந்தர்ராஜன், முன்னாள் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் கே மகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ராணி பகுதி செயலாளர் எம் விஜயகுமார் மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜ்குமார் நித்யராஜ், எம். பகவதி போன்ற தோழர்களும் கலந்து கொண்டார்கள். செங்குன்றத்திலிருந்து தோழர் லூர்து அவர்களின் பணியால் ஈர்க்கப்பட்ட எம் வீ நக்கீரன் அவர்களும், பெரியமேட் பகுதியில் இருந்து தோழர்கள் மனோகரன், சரளா, ராஜாமணி, உட்பட பல தோழர்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் முதுகுளத்தூர் தாலுகாவின் செயலாளராக பணியாற்றி தற்போது மாவட்ட குழு உறுப்பினராகவும் முழு நேர ஊழியராகவும் செயல்படக்கூடிய தோழர். முருகன் அவர்களும் வருகை தந்து கலந்து கொண்டார்.

தோழர். பாக்கியம் அவர்கள் நிகழ்வு நிறைவடைவதற்கு முன்பாக ஒரு வேண்டுகோளை முன் வைத்தார் தோழர் லூர்து, அமலதாஸ், சூசை மைக்கேல், சந்தியாகு என பல தோழர்கள் ஓட்டுநர் வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்ற பொழுது சாஸ்திரி நகர் பக்தவச்சலம் காலனி சத்தியவாணி முத்து நகர் பகுதிகளில் இருக்கும் கிளைகள் பயன்படுத்தக்கூடிய முறையில் ஒரு நூலகம் கட்ட வேண்டும் என்று நிதி வசூல் செய்து 1986 ஆம் ஆண்டு பணம் அனுப்பி வைத்தார்கள். அந்தப் பணத்தின் மூலம் சாஸ்தி நகர் 3வது தெருவில் தோழர் ராமு அவர்களின் தந்தையார் நடத்தி வந்த கடையை விலை கொடுத்து வாங்கி எனது பெயரில் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு அடுத்தடுத்து வந்த பகுதி குழு தோழர்கள் அந்த இடத்தை விற்பனை செய்து சர்மா நகர் பிரதான சாலையில் பகுதி குழுவிற்கான இடம் வாங்கினார்கள். காலப்போக்கில் அதையும் விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த அதிக தொகை வைத்து தற்பொழுது புது நகர் எட்டாவது தெருவில் செயல்படக்கூடிய பெரம்பூர் பகுதி குழு அலுவலகம் கட்டப்பட்டது. இந்த அலுவலகத்துக்கான அடித்தளம் பழைய தோழர்களால் போடப்பட்டது. எனவே அரங்கத்தில் தோழர் ராமு அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தோழர் லூர்து அவர்களின் பெரும் படத்தை பகுதி குழு அலுவலகத்திற்கு கொடுப்பது என்றும், அங்கு மறைந்த தோழர்களின் நினைவாக அவர்கள் எந்த நோக்கத்திற்காக நூலகம் அமைக்க வேண்டும் என்று விரும்பினார்களோ அதன் ஒரு பகுதியாக நூலகத்தை அமைக்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

நிறைவாக மறைந்த தோழருக்கான மௌன அஞ்சலியுடன் நிகழ்ச்சி முடிவடையும் முன்பாக, சாஸ்திர நகர் கிளைச் செயலாளர் ஜபருல்லா அவர்கள்  கடந்த கால தோழர்களின் பணியினை முன்னெடுப்போம், தடம் பதித்து வரலாற்றின் வடம் பிடிப்போம் என்று சபதம் ஏற்றார்.

லூர்து அவர்களின் படத்தையும் 35 மறைந்த தோழர்களின் படத்தையும் உயிர்ப்புடன் உருவாக்கிக் கொடுத்து, அழைப்பிதழ், டிஜிட்டல் பேனர், சுவரொட்டிகள் போன்ற வற்றை கலை நுட்பத்துடன் வடிவமைத்து கொடுத்த ஓவியர் வசந்த் அவர்களுக்கு, வீடியோ பதிவு செய்த தோழர் சரவணன் அவர்களுக்கும், தீக்கதிர் ராம் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு படத்திறப்பு அவரின் பணியினை மட்டும் நினைவு படுத்தாமல் அவரோடு இணைந்து இருந்த வரலாற்று நிகழ்வுகளையும் அவர்களுடன் பயணித்த தோழர்களின் பணிகளையும், பல்வேறு இடங்களில் பிரிந்து கிடந்த தோழர்களின் இணைப்பையும் ஏற்படுத்தியதாக பன்முகத்தன்மையுடன் அமைந்தது. இந்த நிகழ்வை சிறப்புடன் அமைத்துக் கொடுக்க உழைத்திட்டவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் நிதி உதவியை வழங்கியவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர். அ. பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சடங்குத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட படத்திறப்பு கூடுகை:

சடங்குகளாகவும் சம்பந்தப்படாதவர்களின் உரைகளாகவும் படத்திறப்பு நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கக் கூடிய காலகட்டத்தில் , அதிலிருந்து முற்றில...