Pages

வியாழன், ஏப்ரல் 23, 2026

69 இனச் சிறுபான்மை மொழியும் சீன மொழியும்

 



அ.பாக்கியம்

மொழி என்பது பெரும்பாலும் ஒரு இனத்தின் நல்ல குறிகாட்டியாகும். காரணம் ஒவ்வொரு இனக் குழுவும் அதன் சொந்த மொழியை கொண்டிருக்கும். மொழி என்பது ஒரு இனத்தின் வரலாறு, பண்பாடுகள் ஆகியவற்றோடு பிரிக்க முடியாமல் இணைந்து இருக்கக்கூடியது. மொழி அடிமைத்தனம் எண்ணங்களின் அடிமைத்தனத்தில் கொண்டு போய் விட்டு விடும். இலக்கிய மொழி செத்துவிட்டால் எந்த ஒரு கருத்தையும் அந்த மொழியில் திட்டவட்டமாக தெரிவிக்க முடியாது. எனவே ஒவ்வொரு இனத்தின் மொழியும் அவற்றின் உணர்வுகளோடு கலந்து இருக்கக்கூடிய ஒன்றாக மாறிவிடுகிறது.

சீனா ஒரு பரந்த மொழிப்பன்முகத்தன்மை கொண்டதாகவும், பல இனங்களைக் கொண்டதாகவும் இருக்கின்ற பல்லின நாடு என்று அழைக்கப்படுகிறது. அதே நேரத்தில் சீனாவின் இனச் சிறுபான்மை மொழிகள் உலகின் மொழியியல் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு மகத்தான பகுதியாகவும் இருந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறு உலகம் முழுவதும் பல்லின நாடுகளாக இருக்கக்கூடியவற்றில் மொழிக் கொள்கை பெரும்பாலும் சர்ச்சைக்குரியதாகவும், மாறிவரும் சமூக அரசியல் சூழலில் எளிதில் பாதிக்கக் கூடியதாகவும் உள்ளது. சீனாவின் மொழிக் கொள்கைகளும் அரசியல் மாற்றங்களின் அலைகளுக்கு ஆளாகித்தான் இருந்தது.

மொழிச் சூழலும் மொழிப்பயன்பாட்டுச் சூழலும்.

1949ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிறகு இனச் சிறுபான்மை மக்களுக்கான மொழிக் கொள்கையும், பெரும்பான்மை சீன மக்கள் பேசக்கூடிய சீன மொழியைப் பற்றிய கொள்கைகளும் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. சோவியத் நாட்டின் அணுகு முறையிலிருந்து சற்று வேறுபட்டதாக இருந்தது. மொழிச் சூழல் என்பது சமூக மொழியியல் இலக்கியத்தில் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய சொல்லாகும். சீனாவில் மொழிப் பயன்பாட்டுச் சூழல் என்ற சொற்றொடரை பொதுவாக பயன்படுத்துகின்றனர். மொழி பயன்பாட்டுச் சூழல் என்பது ஒரு நாடு, ஒரு புவியியல் பகுதி, ஒரு இனக்குழு அல்லது ஒரு அமைப்பு ஆகியவற்றில் குறிப்பாக கவனம் செலுத்துவதை மட்டும் குறிப்பிடக் கூடியதாகும். சீனாவில் இந்த மொழிப் பயன்பாட்டுச் சூழல் என்ற முறைகளை தங்களது ஆய்வு முடிவுகள் மூலமாக பின்பற்றி வருகிறார்கள்.

மொழி பன்முகத்தன்மையின் தாயகம்

சீனா 140 கோடி மக்கள் தொகைக்கு மேல் இருக்கக்கூடிய ஒரு நாடு. சீனாவிற்கு வெளியே உள்ள பெரும்பாலான மக்கள், சீனாவில் ஒரே மொழிதான் இருக்கிறது என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மாண்டரின் மொழியை மட்டும் பேசுகிறார்கள் என்ற கருத்து நிலவுகின்றது. ஆனால் சீனா வியக்கத்தக்க மொழி பன்முகத் தன்மைக்கு தாயகமாக விளங்குகிறது என்பதுதான் உண்மை. மற்றவர்கள் நினைப்பது போல் மாண்டரின் மொழி நாடு முழுவதும் பேசக் கூடியதுதான். சீன மொழியில் இது எளிமைப்படுத்தப்பட்ட வடிவமாகும்.

ஆனால் உண்மையில் சீனாவில் 284 பழங்குடி மொழிகள் உட்பட மொத்தம் 309 மொழிகள் புழக்கத்தில் உள்ளன. உலக மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் பேர் சீன மொழியை தாய்மொழியாக பேசுகிறார்கள். சீனாவின் மொழி இயல் நிலப்பரப்பு நம்ப முடியாத அளவிற்கு பன்முகத்தன்மை வாய்ந்ததாகவும், அதே நேரத்தில் சிக்கல் நிறைந்ததாகவும் உள்ளது. குறிப்பாக சில விஷயங்களை அறிந்து கொள்வதற்கு கீழ்க்கண்ட உதாரணங்களை எடுத்துச் சொல்லலாம். சீன மொழி என்று பொதுவாக அழைக்கப்படுவதிலேயே எட்டுக்கும் மேற்பட்ட முதன்மையான மொழி குழுக்கள் இருக்கின்றன.

மாண்டரின் மொழி சீனாவின் அதிகாரப்பூர்வமொழியாகவும், உலகில் மிகவும் பரவலாக பேசப்படும் தாய் மொழியாகவும் இருக்கிறது. சீனாவில் மட்டும் 100 கோடிக்கு மேல் மக்கள் இதை பேசுகிறார்கள். இது நாடு முழுவதும் பொது மொழியாக செயல்படுவதுடன், கல்வி அரசாங்கம் ஊடகங்களின் மொழியாகவும் விளங்குகிறது.

கான்டோனீஸ் அல்லது யூ என்று அழைக்கப்படும் மொழி தெற்கு சீனாவில் அதிக மக்களால் பேசப்படுகின்ற நன்கு அறியப்பட்ட சீன மொழியாகும். சுமார் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதை பேசுகிறார்கள்.

ஷாங்கைனீஸ் அல்லது வூ என்று அழைக்கப்படுகிற மொழியானது சீனாவின் கிழக்குப் பகுதியில், குறிப்பாக ஷாங்காய், தென்கிழக்கு ஜியாங்சு மாகாணம், ஜெஜியாங் மாகாணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கக்கூடிய 83 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

மின் மொழிகள் புஜியான் மாகாணத்திலும், குவாங்டாங், ஜெஜியாங், ஹைனான் மற்றும் தைவானின் சில பகுதிகளிலும் பேசப்படுகின்றன. அவை பொதுவாக வடக்கு மின் மற்றும் தெற்கு மின் எனப் பிரிக்கப்படுகின்றன. சீனா மற்றும் தைவானில், சுமார் 5 கோடி மக்கள் தெற்கு மின் மொழியைப் பேசுகிறார்கள். மின் மொழிகளைப் பிரத்தியேகமாகச் சுவாரஸ்யமாக்குவது என்னவென்றால், அவை தங்களுக்குள்ளேயேகூட ஒன்றுக்கொன்று புரிந்துகொள்ள முடியாத வையாக இருப்பதுதான். வடக்கத்திய மின்மொழி பேசுபவர்களால், தெற்கத்திய மின்மொழி பேசுபவர்களைப் பெரும்பாலும் புரிந்து கொள்ள முடிவதில்லை. வெளியாட்கள் சாதாரணமாக “சீன மொழி” என்று அழைக்கக்கூடிய மொழிகளுக்குள் இருக்கும் அசாதாரணமான மொழிப் பன்முகத்தன்மையை இது எடுத்துக்காட்டுகிறது.

ஹாக்கா என்று அழைக்கக்கூடிய மொழி சுமார் 36.8 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. குவாங்டாங், ஜியாங்சி, ஹுனான் மற்றும் சிச்சுவான் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் இவர்கள் இருக்கிறார்கள். வரலாற்று ரீதியாக சீனாவுக்குள் இடம் பெயர்ந்து வந்தவர்கள். இதனால் இவர்களுடைய மொழி வெவ்வேறு பிராந்தியங்களில் பரவியது.

மேற்கு சீனாவின் பல பகுதிகளில் கான் மொழி 22.6 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். இவற்றில் ஐந்துக்கும் மேற்பட்ட வட்டார மொழிகளும் உள்ளன. சியாங் அல்லது ஹுனானிஷ் என்ற மொழி 38 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

வேறுபட்ட மொழிகளும் ஒற்றை எழுத்து முறையும்.

பெரும்பான்மை சீன மக்களால் பேசப்படும் மொழிகளில் எத்தனை பிரிவுகள் இருந்தாலும் ஒரு மொழி பேசக் கூடியவர்கள் மற்றொரு மொழி பேசக் கூடியவர்களிடமிருந்து புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தாலும் இவர்கள் அனைவருக்கும் எழுத்து முறை ஒன்றுதான். சீனாவில் எழுத்துமுறை ஒன்றாக இருப்பது ஒரு சுவாரசியமான சூழலை உருவாக்குகிறது. பல மொழி பேசக் கூடியவர்கள் ஒரே எழுத்தின் மூலம் தொடர்பு கொள்ள முடியும். இங்கு பேச்சு வழக்கு மொழிகள் வேறாகவும் எழுத்து மொழிகள் ஒன்றாகவும் இருக்கிறது.

 

சீன மொழியானது இப்போது இருப்பது போலவே முன்பும் இருந்து வந்தது. இதனால்தான் சீன இலக்கியத்தின் வளர்ச்சி தனி வழியில் செல்ல வேண்டியதாயிற்று. ஐரோப்பிய மொழிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இலக்கியத்திலும், சிந்தனை வளர்ச்சியிலும் சீனர்களின் சிறப்பு இயல்புகள் காணப்படுவதற்கு காரணமாகும். ஓர் சைச் சொற்களைக் கொண்ட(ச்சிங், ச்சொங், ச்சாங்,) மொழி என்று இது கூறப்படுகிறது. ஓரசை கொள்கை அடிப்படையிலேயே சீன மொழியின் எழுத்து நிர்ணயிக்கப்படுகிறது. இந்த எழுத்தின் தன்மையால்தான் சீனாவின் நீண்ட கால இலக்கியத்தை அழிந்தொழியாமல் தொடர்ந்து அறிய முடிகிறது “(சீனாவும் சீன மக்களும்-லின் யூடாங்) என்று எழுதியிருக்கிறார். சீன மரபில் பேரரசர் பேசும் சீன மொழிகள் பல்வேறு வகைகளாக இருந்தாலும் அவை ஒரு நிலையான மொழியாக கருதப்பட்டன மற்ற அனைத்து மொழி வகைகளும் நிலையான ஒன்றை கொண்டிருந்தாலும் அவற்றை பேச்சு வழக்கு மொழிகள் என்று தான் குறிப்பிட்டார்கள். புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங் களினால் இந்த வகைகள் அனைத்தும் மாற்றி அமைத்து மேம்படுத் தப்பட்டன.

இனச் சிறுபான்மை மொழி அமைப்புகள்.

சீனாவில் இனத்திற்கும் மொழிக்கும் இடையே மூன்று முக்கிய உறவுகள் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இனச் சிறுபான்மை பகுதியில் சிக்கலான மொழி அமைப்புகள் இருந்தது. ஒரு இனம் அல்லது கிளை பல பேச்சு வழக்குகளை கொண்ட மொழிகளை பயன்படுத்தியது. இவற்றை பொதுவாக சிறுபான்மை தேசிய இனத்தின் மொழி என்று எடுத்துக் கொண்டாலும் அவற்றுக் கிடையிலான சிக்கலான உறவுகள் காணப்பட்டன.

முதலாவதாக ஒரு இனம் ஒரே மொழியை பேசக்கூடிய வகை. இதில் ஹான் இனத்தவர்கள், மங்கோலியர்கள், திபெத்தியர்கள், மியாவ் இனத்தவர்கள் அடங்குவார்கள்.

இரண்டாவதாக ஒரு இனம் பல மொழிகளை பேசக்கூடியதாக இருக்கிறது. தெற்கில் உள்ள யாவ் இனத்தவர் ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளை கொண்டுள்ளனர். யுன்னானில் உள்ள ஜிங்போ இனத்தவர்கள் இரண்டு மொழிகளை பேசுகிறார்கள். திபத்தில் இருக்கின்ற மோன்பா இனத்தவர்கள் இரண்டு மொழிகளை பேசுகிறார்கள். யி(Yi) என்ற இனம் இவர்களுக்கென்று தனி பேச்சு மற்றும் எழுத்து மொழிகள் இருந்தாலும், ஆறு வகையான பேச்சு வழக்குகளை ஒரு குறுகிய எல்லைக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த இனம் சீனாவில் உள்ள மிகப் பழமையான இனங்களில் ஒன்றாகும். இதன் மக்கள் தொகை 6.58 மில்லியன் ஆகும். இவர்கள் முக்கியமாக யுன்னான், சிச்சுவான், குயிஷோ மாகாணங்களிலும் வாழ்கின்றனர்.

மூன்றாவதாக பல இனங்கள் ஒரு மொழியை பேசக்கூடிய தன்மையாகும். ஹுய், மஞ்சு, ஷே, துஜியா, கெலாவ், ஹெஜென், சிபே மற்றும் காவோஷான் ஆகிய எட்டு இனக்குழுக்கள் சீன மொழியைப்பயன்படுத்துகின்றன. இனக்குழுக்கள் இடையே காணப்படும் இந்த மொழி அமைப்புகளால் இனத்திற்கும் மொழிக்கும் இடையிலான தொடர்புகள் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது. ஆங்கிலம் கற்பது உலகில் எந்த இடத்திற்கும் செல்ல வாய்ப்பு இருப்பது போல் சீனா முழுவதும் பரவலாக பயன்படுத்தக்கூடிய மொழியான மாண்டரின் கற்பது சீனா முழுவதும் தொடர்பு கொள்வதற்கான ஒரு மொழியாகும். சிறுபான்மையினரிடையே தொடர்பு நோக்கங்களுக்காக இந்த மாண்டரின் மொழி பயன்படுத்தப்படுகிறது.

எழுத்து வடிவம் பெற்ற மொழிகள்

சீனாவில் உய் மற்றும் மஞ்சு இனம் தவிர மற்ற அனைத்து இனங்களுக்கும் சொந்த மொழிகள் உள்ளன. 1950 களிலிருந்து சீன அரசு இன மொழிகளின் வளர்ச்சிக்கு உதவும் கொள்கைகளை உருவாக்கியது. இதன் அடிப்படையில் புதிய எழுத்து வடிவங்கள் உருவாக்கப்பட்டன. 1949 ஆம் ஆண்டு புரட்சிக்கு முன்பு சீனாவில் 21 இன சிறுபான்மை மொழிகள் தங்களுக்கான 24 எழுத்து வடிவத்தை கொண்டிருந்தன.

மங்கோலிய, திபெத்திய, உய்குர், யீ, கொரிய, கசாக் மற்றும் டாய் போன்ற 21 இன சிறுபான்மையினர் தங்களுக்கென சொந்த எழுத்துமுறைகளைக் கொண்டிருந்தனர். இந்த எழுத்துமுறைகளில் சில நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன; உதாரணமாக, யீ மற்றும் திபெத்திய எழுத்துமுறைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளன, அதே சமயம் மங்கோலிய, உய்குர் மற்றும் டாய் எழுத்துமுறைகள் பல நூறு ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளன.

 

1950-களில் இருந்து, லத்தீன் (ரோமன்) எழுத்து முறையை அடிப்படையாகக் கொண்டு, ஜுவாங் (Zhuang), புயீ (Buyi), மியாவ் (Miao), லி (Li), ஹானி (Hani) போன்ற 10-க்கும் மேற்பட்ட இனங்களுக்கு 14 புதிய எழுத்து வடிவங்கள் உருவாக்கப்பட்டன 4 இனக் குழுக்களுக்கான ஐந்து எழுத்து வடிவங்கள் மேம்படுத்தப்பட்டன.

இந்தப் பணிகள் அனைத்தும் சீன அரசின் ஒருங்கிணைந்த முயற்சியின் கீழ் நடைபெற்றன. இருப்பினும், சில இனக்குழுக்கள் புதிதாக உருவாக்கப்பட்ட எழுத்துவடிவங்களைப் பயன்படுத்த மறுத்துவிட்டனர். உதாரணமாக, லி மக்கள் தங்களுக்கென உருவாக்கப்பட்ட புதிய எழுத்தைக் கைவிட்டு, சீன மொழியையே பயன்படுத்தத் தேர்வு செய்தனர். எழுத்து மொழிகளை உருவாக்கும் செயல்பாட்டில், இன சிறுபான்மையினர் தாங்கள் பயன்படுத்த விரும்பும் மொழிகளைத் தேர்ந்தெடுக்க அரசு அனுமதித்தது.

சில சிறுபான்மையினர், புதிய எழுத்து மொழியைப் பயன்படுத்திய பிறகு, அது தங்கள் தேவைகளுக்குப் பொருந்தவில்லை என்பதைக் கண்டறிந்து, வேறு புதிய மொழியைப் பயன்படுத்தத் தேர்ந்தெடுத்தனர். 1982-ல் உய்குர் மற்றும் கசாக் குழுக்கள் அரபு எழுத்துக்களைப் பயன்படுத்தும் தங்கள் அசல் மொழிக்குத் திரும்பினர். யி குழுவினர், தாங்கள் புதிதாக உருவாக்கிய எழுத்து மொழியைக் கைவிட்டு, தரமான யி மொழியை ஏற்றுக்கொண்டனர். தற்போது, சீனாவில் 21 இன சிறுபான்மையினருக்கு 27 எழுத்து வடிவங்கள் உட்பட, தங்களுக்கென சொந்த எழுத்து மொழி உள்ளது.

இன சிறுபான்மையினரின் எழுத்து மொழியில் ஏற்பட்ட சீர்திருத்தங்களுக்குப் பிறகு, புதிய எழுத்து மொழி மேலும் எளிமையாக் கப்பட்டது. இப்போது எழுத்து மொழியைக் கொண்டிருந்த இன சிறுபான்மையினர், தொடக்கப் பள்ளிகள் முதல் உயர் கல்வி வரை இருமொழிக் கல்வியைத் கற்கத்தொடங்கினர். எழுத்து மொழி இல்லாத இன சிறுபான்மையினர், கற்பிப்பதற்காக சீன அல்லது பிற இன சிறுபான்மையினரின் எழுத்து மொழியைப் பயன்படுத்தத் தொடங்கினர். பல இன சிறுபான்மையினர் தங்கள் சொந்த மொழியில் செய்தித்தாள்களையும், பத்திரிகைகளையும் வெளியிடுகின்றனர். 1998-ல், பதினேழு இன சிறுபான்மையினர் 83 செய்தித்தாள்களையும் 184 பத்திரிகைகளையும் வெளியிட்டனர்.

 

மேற்கண்ட பின்னணியில் இனச் சிறுபான்மை மொழிகளை பாதுகாப்பது மட்டுமல்ல வளர்த்தெடுக்கும் பணிகளையும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்கள் குடியரசும் செய்தது. எழுத்து மொழி உள்ள அனைத்து சிறுபான்மை இனங்களுக்கும் தொடக்கப் பள்ளிகள் முதல் உயர்கல்வி வரை இரு மொழி கொள்கையை தொடர்கிறார்கள். தேசிய சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வகுப்புகள் உள்ளூர் மொழி பாடப்புத்தகங்களை பயன்படுத்தி கற்பிக்கப் படுகின்றன. மாண்டரின் இரண்டாவது மொழியாக கற்பிக்கப்படுகிறது. 1990 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் இனச் சிறுபான்மையினரில் 68 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எழுத்து வடிவ மொழிகளை பயன்படுத்துகின்றனர் இது இனச் சிறுபான்மை மக்கள் தொகையில் 60 சதவீதத்திற்கு மேலாகும்.

துறவியின் குற்றச்சாட்டும் உண்மைநிலையும்

திபெத்திய மாகாணத்தில் அனைத்து பெயர்ப்பலகைகளும் திபெத்திய மொழி மற்றும் ஹான் இரு மொழிகளிலும் காணப்படுகிறது. எங்காவது திபெத்திய மொழி எழுதப்படவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

1988 ஆம் ஆண்டுகள் விதிகளின்படி மாவட்ட அளவிலோ, அதற்கு மேலே இருக்கக்கூடிய நிறுவனங்களால் அந்த பிராந்தியங்களுக்குள் செயல்படுவதற்காக வழங்கப்படும் அனைத்து ஆவணங்களும் திபெத்திய மொழியிலும், ஹான் மொழியிலும் இருக்க வேண்டும். பேரூராட்சி மற்றும் கிராம அளவிலான ஆவணங்கள் திபெத்திய மொழியில் மட்டும் இருக்கலாம். 1991 ஆம் ஆண்டு முதல் கீழ் நிலையில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் திபெத்திய மொழியில் இல்லாத ஆவணங்களை செயல்படுத்த மறுக்கும் உரிமையை பெற்றுள்ளன. அனைத்து உள்ளூர் அரசு துறைகளிலும் அதிகாரப்பூர் ஆவணங்கள் மட்டுமின்றி, அரசு முத்திரைகள், சான்றிதழ்கள், படிவங்கள், உறைகள், காகிதங்கள், அறிவிப்பு பலகைகள், கையொப்பங்கள் ஆகியவற்றில் திபெத்திய மொழியும் சீன மொழியும் பயன்படுத்த வேண்டும் என்பது அமுலாகி வருகிறது.

திபெத்தின் உயர் மக்கள் நீதிமன்றமும், உயர் மக்கள் அரசு வழக்கறிஞர் அலுவலகமும், சட்ட ஆவணங்களை கையாளுவதற்கு இரு மொழியையும் பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் இத்துறைகள் சட்டங்கள் மற்றும் சட்டச் சொற்கள் குறித்த தொடர் புத்தகங்களை திபெத்திய மொழியில் வெளியிட்டுள்ளன.

 

உள்ளூர் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளுக்கு திபெத்திய மொழியே ஒரு முக்கிய மொழியாக இருந்து வருகிறது. திபெத் மக்கள் வானொலி நிலையம் தினமும் 41 மணி நேரம் ஒளிபரப்பு செய்கிறது. இதில் 20.5 மணி நேரம் திபெத்திய மொழியில் அமைந்த நிகழ்ச்சிகளாகும். திபெத்திய தொலைக்காட்சி நிலையம் தினமும் 12 மணி நேரம் திபெத்திய மொழி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. 1999 ஆம் ஆண்டு திபெத்திய மொழிக்கான செயற்கைக்கோள் அலைவரிசை தொடங்கப்பட்டது.

சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்கள் பேசப்படும் திபெத்திய மொழி அழிக்கப்படுகிறது அல்லது அழிந்து வருகிறது என்று குற்றம் சாட்டுவது அபத்தமானது. இது வளர்ச்சி அடையும் மொழியாக இருக்கிறது. தீபெத்தில் வாழுகின்ற ஹான் மொழி பேசும் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் திபெத்திய மொழியை கற்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மேம்பட்ட தொழில்நுட் பங்களையும், புதிய அறிவையும் திபெத்தில் செயல்படுத்த முடியும் எனக் கூறுகின்றன.

காரணம், திபெத்தில் பின்தங்கிய உள்ளூர் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் மேம்படுத்துவதற்கு புதிய தொழில்நுட்பங்கள் அவசியமாக தேவைப்படுகின்றனர். திபெத்திய மொழியை கற்றுக் கொண்டால் மட்டுமே தேவைப்படுபவர்களுக்கு தகவல் சென்றடைவது உறுதி செய்ய முடியும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி தெளிவுபடுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக ஹான் மொழியிலிருந்து திபெத்திய மொழிக்கு மொழிபெயர்ப்பது பெரும் பணியாக மாறி நடைபெறுகிறது.

சீன அரசாங்கம் திபெத்திய மொழியை படிப்படியாக கைவிட்டு வருகிறது என்ற தலாய்லாமா வகையினர் முன் வைக்கும் குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் நிலைமைகள் இருக்கிறது. ‘திபெத் டெய்லி’யின் திபெத்திய மொழிப் பதிப்பு தினமும் 16,000 பிரதிகள் விற்பனையாகும் சிறப்பைப் பெற்றுள்ளது.

இதுவரை, திபெத்திய மொழியில் 108 தலைப்புகளிலான மக்கள் அறிவியல் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், விவசாயத் தொழில்நுட்பம் குறித்த பல தொலைக்காட்சி ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டு திபெத்திய கிராம மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான துறை தெரிவித்துள்ளது.

 

திபெத்தில் திபெத்திய மொழி இலக்கியத்திற்கான ஐந்து பருவ இதழ்கள் வெளியாகி வருகின்றன; அவற்றில் இரண்டு இதழ்கள் இதுவரை மொத்தம் 100 இதழ் வெளியீடுகளைக் கண்டுள்ளன. மேலும், அனைத்து பயில்நிலை நாடகக் குழுக்களும் தங்கள் கலைநிகழ்ச்சிகளில் திபெத்திய மொழியையே பயன்படுத்துகின்றன; திபெத்தில் செயல்படும் பத்து தொழில்முறை நாடகக் குழுக்களும் பெரும்பாலும் திபெத்திய மொழியிலேயே தங்கள் நாடகங்களை அரங்கேற்றுகின்றன.

1989-ஆம் ஆண்டிலிருந்து, ‘திபெத் மக்கள் பதிப்பகம்’ மற்றும் ‘திபெத் பண்டைய ஆவணங்கள் பதிப்பகம்’ ஆகியவை திபெத்திய மொழியில் 441 நூல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கிறது. இதற்கிடையில், திபெத்திய மொழியில் வெளியாகும் 20 செய்தித்தாள்களும் இதழ்களும் புழக்கத்தில் உள்ளன.

கடந்த ஐந்து தசாப்தங்களாக, திபெத்திய மொழியின் ஆய்வு, பயன்பாடு மற்றும் பரவலாக்கம் ஆகியவை திபெத்தின் சமூகப் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக நிலைத்தன்மையை ஊக்குவிப்பதிலும், அறிவியல், கலாச்சாரம் மற்றும் கல்வியின் செழிப்பையும் முன்னேற்றத்தையும் முன்னெடுத்துச் செல்வதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளன என்று இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

சீன அரசாங்கம் திபெத்திய மொழியைப் படிப்படியாகக் கைவிட்டு வருகிறது” என்றும், “திபெத்திய கலாச்சாரம் அழிக்கப்பட்டு வருகிறது” என்றும் தலாய் லாமா தரப்பினர் பரப்பி வரும் வதந்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை மேற்கூறிய அனைத்துச் சான்றுகளும் நிரூபிக்கின்றன.

அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

69 இனச் சிறுபான்மை மொழியும் சீன மொழியும்

  அ.பாக்கியம் மொழி என்பது பெரும்பாலும் ஒரு இனத்தின் நல்ல குறிகாட்டியாகும். காரணம் ஒவ்வொரு இனக் குழுவும் அதன் சொந்த மொழியை கொண்டிருக்கும்...