Pages

வியாழன், ஏப்ரல் 09, 2026

67 சிறுபான்மையினரின் அறிவுக்களம்


அ.பாக்கியம்

சீனாவில் இனச் சிறுபான்மை மக்களின் கல்வியை வளர்ப்பதில் இரு மொழி கொள்கைகளும், முன்னுரிமை கொள்கைகளும், ஒன்பது ஆண்டுகள் கட்டாய கல்வி முறைகளும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியதைவிட, சீன மக்கள் குடியரசு உருவாக்கிய உறைவிடப் பள்ளிகள் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. சீன மொழியில் இதற்கு நெய்டிபன் அதாவது உள்துறை பள்ளி என்று அழைக்கிறார்கள். இந்த உறைவிடப் பள்ளி தொடர்பாக மேற்கத்திய நாடுகள் அவதூறு மூட்டைகளை அவிழ்த்துக் கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக திபெத்திய பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ள உறைவிடப் பள்ளிகள் தொடர்பாக அதிக பொய் பிரச்சாரங்களை செய்கிறார்கள். திபெத்திய குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவதாகவும், கட்டாயமாக உறைவிட பள்ளிக்கு அனுப்பப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட திபெத்துக்கு ஆதரவான சர்வதேச பிரச்சார குழு சுமார் 10 லட்சம் குழந்தைகள் உறைவிடப் பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொய்களை கட்டமைக் கிறார்கள். இந்த உறைவிடப் பள்ளிகள் திபெத்திய குழந்தைகளின் தாய்மொழி, பண்பாடு மற்றும் அவர்களின் அடையாளத்தில் இருந்து பிரித்து சீனமயமாக்குவதற்கு ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் சும்த்துகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டின் மூலக்கர்த்தாவாக இருப்பது 14 வது தலாய்லாமா ஆகும். இது குறித்த உண்மை நிலைமைகளை இதற்கு அடுத்த பகுதியில் காணலாம். சீன சோசலிசத்தில் உறைவிட பள்ளிகள் எவ்வாறு செயல்படுகிறது, எவ்வளவு செயல்படுகிறது என்பதை முதலில் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேவைதான் புதிய கண்டுபிடிப்புகளின் தாய்

 

சீன மக்கள் குடியரசும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் இனச் சிறுபான்மை மக்களுக்கு கல்வி வழங்குவதற்கான திட்டங்களை உருவாக்குகிற பொழுது அங்கிருந்த புறச்சூழலைகள் உறைவிடப் பள்ளிகளின் தேவைகளை உணர்த்த ஆரம்பித்தன. 1950 ஆம் ஆண்டுகளிலேயே இதற்கான கருத்துக்கள் உருவாக ஆரம்பித்தது. ஒவ்வொரு இடத்திற்கும் கல்வியை கொண்டு செல்ல வேண்டும் என்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பொழுது 1950 ஆம் ஆண்டுகளில் இறுதிப்பகுதியில் இதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது.

ஆரம்ப கட்டத்தில் இனச் சிறுபான்மை மாணவர்கள் பரந்த மேய்ச்சல் நிலப் பகுதிகளிலும், மலைப்பிரதேசங்களிலும் சிதறிக் கிடந்தனர். அவர்களின் வாழ்க்கை மேய்ச்சல் நில வாழ்க்கையாக இருந்தது. முதலில் கூடார பள்ளிகள் (டெண்ட்) அமைத்துக் கற்றுக் கொடுத்தனர். அவ்வாறு அமைக்க முடியாத இடங்களில் நடமாடும் கற்பித்தல் பள்ளிகளை உருவாக்கினார்கள். இவற்றுடன் கூடவே குதிரை ஏற்ற பள்ளிகளும் உருவாக்க உருவாக்கப்பட்டது. ஜின்ஜியாங் பகுதிகளில் குதிரை வளர்ப்பு மற்றும் குதிரை ஏற்றத்தில் திறமையான கசாக், கிர்கிஸ் போன்ற இனக் குழுக்களின் கலாச்சாரத்தை மேம்படுத்தும் வகையில் பாரம்பரிய குதிரை ஏற்ற கலைகளை பள்ளிகளில் கற்பித்தனர். இவை கல்வி முறையின் ஒரு பகுதியாக மாறியது. இவற்றைத் தொடர்ந்துதான் உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.

இவை ஆரம்ப காலத்தில் குறைவாக இருந்தாலும், கலாச்சார புரட்சிக்கு பிறகு 1980 ஆம் ஆண்டுகளில் சீர்திருத்தம், திறந்துவிடுதல் கொள்கையின் காலத்தில் இன சிறுபான்மை மக்கள் தனித்து விடப்படுகிறார்கள் என்ற நிலைமை உருவாகாமல் இருப்பதற்கு தீவிரமான முறையில் உறைவிடப் பள்ளிகளை உருவாக்கினார்கள். குறிப்பாக 1980 ஆம் ஆண்டுகளில் இனச் சிறுபான்மையினரின் கல்வி விரிவாக்கத்திற்காக உள்மங்கோலியா, ஜின்ஜியாங்க், மற்றும் திபெத்திய பகுதிகளில் இருந்த மேய்ச்சல் நிலம் மற்றும் மலைப்பகுதியில் வசித்தவர்களுக்கான தங்குமிட பள்ளிகளை அதிகமாக்கினார்கள். ஆரம்ப காலத்தில் துவக்கப் பள்ளிகள் மட்டும் தங்குமிட பள்ளிகளாக இருந்தது. பிற்காலத்தில் தேவையை கருதி இடைநிலைப் பள்ளிகள் வரை தங்குமிட பள்ளிகளாக மாற்றப்பட்டன. 2011ஆம் ஆண்டுகளில் உறைவிடப் பள்ளிகள் தொழிற்கல்விகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. உறைவிடப் பள்ளிகள் 1950 ஆம் ஆண்டுகளில் துவக்கப்பட்டு 1980 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய அளவில் விரிவுபடுத்தப்பட்ட ஒரு மாபெரும் திட்டமாக மாறியது

நவீன கல்விக்கான ஊற்றுக்கண்   

சீனாவில் கட்டாய கல்வி சட்டம் அமலாக்க வேண்டும் என்றால் உறைவிட பள்ளிகளின் தேவை அவசியமாகியது. அதிகாரப்பூர்வமாக தினமும் பள்ளிக்குச் சென்று வருவது தொலைதூரத்தில் இருக்கும் மாணவர்களுக்கு சாத்தியமற்றது. எனவே இப்பள்ளிகள் அமைக்கப் பட்டது. இந்த அமைப்பு கல்வி சமத்துவத்தை மேம்படுத்துவதையும், இன கலாச்சாரத்தை பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. தற்காலத்தில் நவீன கல்வி பாடத்திட்டத்தை கற்றுக் கொள்ளக் கூடிய வகையில் உறைவிடப் பள்ளிகளில் ஆய்வகங்கள், நூலகங்கள், கணினி அறைகள், உணவு கூடங்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் உருவாக்கப் பட்டுள்ளன. அரசு அளித்திடும் நிதி உதவி என்பது மாணவர்களின் தங்குமிடம், உவுணக்கானது மட்டுமல்ல கல்விக்கட்டணமும், அத்தியாவசிய வாழ்க்கைச் செலவுகளையும் உள்ளடக்கியதாகும்.

திபெத்திய பகுதியில் மழையர் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை 15 ஆண்டுகள் பொது நிதி உதவி மூலமாக கல்வியை வழங்குகிறார்கள். இந்தப் பள்ளியின் சேர்க்கை என்பது முற்றிலும் தன்னார்வமானது. தங்களின் குழந்தைகளை உறைவிடப் பள்ளி மாணவர்களாக சேர்ப்பதா வேண்டாமா என்பதை பெற்றோர்கள்தான் தேர்வு செய்து கொள்கிறார்கள். அருகில் இருக்கக்கூடிய மாணவர்கள் பகலில் படித்துச் செல்லக் கூடியவர்களாக இருக்கிறார்கள். உறைவிட பள்ளி மாணவர்கள் வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் வீட்டிற்கு சென்று வருகிறார்கள். சீன அரசாங்கத்தின் கண்ணோட் டத்தின்படி புவியியல் சவால்களுக்கு இந்த பள்ளிகள் ஒரு நடைமுறை தீர்வாக உள்ளது. அதுமட்டுமல்ல வறுமை ஒழிப்புக்கான ஒரு கருவியாகவும், சிறுபான்மை மாணவர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்குவதாகவும் இந்த உறைவிடப் பள்ளிகள் அமைந்துள்ளது. அதே நேரத்தில் சிறுபான்மை மக்களின் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் இந்த பள்ளிகளின் பாடத்திட்டங்களில் இருக் கின்றது.

மேற்கத்திய நாடுகளில் உறைவிட பள்ளிகள் பெரும்பாலும் உயர் குடி, செல்வந்த குடும்பங்களுக்கு சேவை செய்யக் கூடியதாகும். சீனாவில் அரசு நடத்தும் உறைவிட பள்ளி அமைப்பானது சாதாரண குடும்பங்களுக்கு சேவை செய்வதை முதன்மை பணியாக கொண்டுள்ளது. அரசாங்கத்தின் மானியங்கள் தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கான தரமான கல்விக்கு செலவு செய்யப்படுகிறது. இந்த உறைவிட பள்ளிகள் ஒரு நிலைத்த தன்மையை உருவாக்குகின்றன. இதன் மூலம் கல்வியில் வெற்றிபெறுவதும், ஒழுக்கமான சூழலில் வாழ்வதும் நன்கு கட்டமைக்கப்பட்ட கல்விசூழலையும் இந்த உறைவிடப்பள்ளிகள் உருவாக்குகின்றது என்று சீனா மற்றும் உலகமயமாக்கல் மையத்தைச் சேர்ந்த மரியூர் யூஜென்ஸ் கவாலோ தெரிவிக்கின்றார்.

இந்த உறைவிட பள்ளிகள் மூலமாக சிறுபான்மை மாணவர்களின் கல்வி அறிவு மேம்படுகிறது. இதனால் அவர்களின் குடும்பங்கள் மேல்நோக்கிய சமூக இயக்கத்தில் உள் நுழைவதும், சமூகத்தில் உயர் அந்தஸ்து கிடைப்பதும், அதிக வருமானமும் கிடைப்பதற்கான மதிப்பு மிக்க வழிகளை இந்த உறைவிட பள்ளிகள் வழங்கி இருக்கிறது. இதன் காரணமாக இனச் சிறுபான்மை உறைவிட பள்ளிகள் அப்பகுதி பெற்றோர்களால் அதிகம் விரும்பப்பட்ட பள்ளி முறையாகவும் உயர்ந்து நிற்கிறது.

திபெத்திற்கு அறிவு சார் உதவி

 

1980 ஆம் ஆண்டு அன்றைய சீன நாட்டின் பிரதமர் ஹூ யாவோ பாங் திபெத்திற்கு பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தின் போது திபெத்தின் வளர்ச்சி குறித்து பல்வேறு துறைகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் அடிப்படையில் கல்வித்துறையில் போதுமான வளர்ச்சி ஏற்படவில்லை என்பதை கவனத்தில் எடுத்துக்கொண்டு, அரசு சார்பிலும், சீன கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் கூடுதல் கவனம் செலுத்தக்கூடிய முறையில் திபெத் திற்கான அறிவுசார் உதவி என்ற ஒரு சிறப்பு திட்டத்தை உருவாக்கி னார்கள்.இந்தத் திட்டத்தின் படி திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள உள்ளுர் அரசாங்கமும், மத்திய அரசும் இணைந்து பல திட்டங்களை உருவாக்கியது மட்டுமல்ல, சீனாவின் வளர்ச்சி அடைந்த பகுதியான கிழக்கு சீனாவில் இருந்த மாகாண அரசுடன் ஒப்பந் தங்களை ஏற்படுத்தி திபெத்தின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டார்கள்.

கிழக்கு மாகாண அரசுகளின் உதவியுடன், திபெத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக 1984 ஆம் ஆண்டு முதல் பெய்ஜிங், தியான்ஜின், சோங்கிங், ஹெனான், ஹெபே, ஷான்டாங், ஜியாங்சு, ஷான்சி, ஹுனான், ஹூபே, அன்ஹுய், ஷான்சி மற்றும் யுன்னான் ஆகிய இடங்களில் திபெத்தியர்களுக்காக சிறப்பு வகுப்புகளை அரசாங்கம் நடத்தி வருகிறது. திபெத்திற்குத் தேவையான திறமையாளர்களைப் பயிற்றுவிப்பதே இதன் நோக்கம். இந்த உறைவிடப் பள்ளிகளில் இடைநிலைக் கல்வியும், மேம்பட்ட மேல்நிலைக் கல்விகளும் போதிக்கப்படுகிறது. சீனியர் மற்றும் இடைநிலை அளவில் தொழிற்கல்விகளும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக 11 முதல் 14 வயதுடைய திபெத்திய குழந்தைகள் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று இந்த சிறப்பு உறைவிட பள்ளிகளுக்கு வருகிறார்கள். அவர்களின் அனைத்து செலவுகளும் அரசாங்கத்தால் செய்யப்படுகிறது. இந்தப் பள்ளிகளை நடத்துவதற்கு ஒரு கூட்டு நிதி ஒப்பந்தமும் போடப்பட்டது.

இந்தத் திட்டம் நாடு முழுவதும் விரிவடைந்த பொழுது 1985 ஆம் ஆண்டு திபெத்திய தன்னாட்சிப் பகுதி மாணவர்கள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தின் மூலமாக பயன் அடைந்தார்கள். இந்த உறைவிட பள்ளிகளில் படித்த ஒட்டுமொத்த திபெத்திய மாணவர்களில் 70% விவசாய குடும்பத்திலிருந்தும் மேச்சல் நில குடும்பத்திலிருந்தும், நாடோடி வாழ்க்கை நடத்தும குடும்பத்திலிருந்தும் வந்தவர்கள் என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது. 20% மட்டுமே நகர்ப்புறங்களில் இருந்து உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்தவர்கள். இந்தப் பள்ளிகளில் 10% திபெத்தில் பணியாற்றக்கூடிய பெரும்பான்மை ஹான் இன பிரிவுகளின் குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டது. உறைவிடப் பள்ளிகளில் படித்த திபெத்திய மாணவர்களில் 90% பேர் திபெத்திற்கு திரும்பி அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டார்கள். உயர்கல்வி படிக்க விருப்பப்பட்டவர்கள் அதற்கான வாய்ப்புகள் அரசால் வழங்கப்பட்டது. மிகவும் பின்தங்கிய கடுமையான இயற்கை சூழலை கொண்ட திபெத்தில் கல்வி வளர்ச்சிக்கு மத்திய அரசும், வளர்ந்த மாநிலங்களும் செய்த உதவிகள் மூலமாக, சீனாவில் மற்ற பகுதி மாணவர்களுக்கு இணையான கல்வியை திபெத் மாணவர்கள் பெற முடிந்தது.

மற்றொரு முக்கிய மாகாணம் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பகுதியாகும். 2000 ஆண்டு இலையுதிர் காலத்தில் மட்டும் இங்கு உள்ள இனச் சிறுபான்மை மாணவர்களுக்காக 12க்கும் மேற்பட்ட உறைவிட பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஒரு சில மாகாணங்களை தேர்ந்தெடுத்து அந்த மாகாணங்களில் இருந்த 21 நகரங்களில் சிறுபான்மையினருக்கான உறைவிடப் பள்ளிகளை உருவாக்கினார்கள். 2017 ஆம் ஆண்டில் 14 வெவ்வேறு மாகாணங்களில் உள்ள 45 நகரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட உறைவிடப் பள்ளிகளை இனச் சிறுபான்மையினருக்காக மட்டும் அமைத்தனர். இந்த 45 நகரங்களில் இருந்த உறைவிடப் பள்ளிகளில் பல்வேறு இனச் சிறுபான்மையினர் படித்தாலும் ஜின்ஜியாங்க் மாகாணத்தில் இருந்து மட்டும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் படித்தார்கள். இவர்கள் அனைவரும் வறட்சி நிறைந்த பகுதிகளில் இருந்து படிக்க வந்தவர்கள் குறிப்பாக உய்குர் இஸ்லாமிய இனச் சிறுபான்மையினராக இருக்கக்கூடிய மாணவர்கள் இதில் அதிகமாக சேர்ந்திருக்கிறார்கள்.

இங்குள்ள உறைவிட பள்ளிகளில் படிக்கிறவர்கள் உயர்கல்விக்காக சீனாவின் புகழ்பெற்ற பெய்ஜிங், பூடான் பல்கலைக் கழகங்களில் அதிகமான அளவிற்கு சேர்கிறார்கள். திபெத்தியர்கள், உய்குர் தவிர உய், கசாக், சலார் போன்ற பிற இனச் சிறுபான்மையினரும் உறைவிட பள்ளிகளில் அதிகமான அளவு சேர்கிறார்கள். இந்த உறைவிடப் பள்ளிகளில், துவக்கப்பள்ளி பாடங்கள், இடைநிலைப் பள்ளி பாடங்கள், தொழிற்கல்வி பாடங்களை கடந்து பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான பிரதான கல்வி முறைகளை கற்றுக் கொடுப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

சீனாவில் இனச் சிறுபான்மையினருக்கான உறைவிட பள்ளிகள், ஒழுக்கம் நிறைந்ததாகவும், தேவையான கட்டுப்பாடுகளுடனும், உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடிய முறைகளிலும் நடத்தப்படுகிறது. உறைவிடப் பள்ளிகள் சீன மாணவர்களுக்கு புதிதல்ல. வரலாற்று வழியில் பல்வேறு அனுபவங்கள் அவர்களுக்கு இருக்கிறது. இனச் சிறுபான்மையினருக்கு இது புதிய சூழலாகவும், புதிய முறையாகவும் இருந்தது. அவர்களின் புதிய சூழலை கணக்கில் கொண்டு வார விடுமுறைகளுக்கு குடும்பத்துடன் இருப்பதும், விடுமுறை நாட்களில் வீடுகளுக்கு செல்வதற்கும் போதிய வசதிகளை செய்து கொடுத்தார்கள். இதற்கு ஏற்ற வகையில் உறைவிட பள்ளிகளை மேம்படுத்துகிறார்கள். மற்றொரு குறிப்பிட்ட சொல்லக் கூடிய அம்சம் பெரும்பான்மை இனமான ஹான் இன மாணவர்களும் உறைவிட பள்ளிகளில் படிப்பதால் இன ஒற்றுமைக்கான அடித்தளம் அங்கே உருவாக்கப்படுகிறது.

அ.பாக்கியம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

67 சிறுபான்மையினரின் அறிவுக்களம்

அ.பாக்கியம் சீனாவில் இனச் சிறுபான்மை மக்களின் கல்வியை வளர்ப்பதில் இரு மொழி கொள்கைகளும் , முன்னுரிமை கொள்கைகளும் , ஒன்பது ஆண்டுகள் கட்ட...