Pages

வியாழன், ஜூலை 31, 2025

திபெத்தை சீனா அபகரித்ததா ? அமைதியாக இணைத்ததா?

அ.பாக்கியம்

 

1949 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி மாசேதுங் தலைமையிலான புதிய ஜனநாயகப் புரட்சி சீனத்தில் வெற்றி பெற்றது. ஜப்பானிய படையெடுப்புகளை தோற்கடித்து, ஷியாங்காய் ஷேக் தலைமையிலான முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சியை வீழ்த்தி, யுத்த பிரபுக்களை விரட்டியடித்து சீனா முழுமைக்கும் மக்கள் விடுதலைப் படை வெற்றிகொண்டது. இதில் திபெத் பிரதேசத்தை செம்படை படையெடுத்து கைப்பற்றவில்லை. அதற்கு மாறாக இரண்டு ஆண்டுகள் வரை பொறுத்திருந்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களை உருவாக்கி 1951 ஆம் ஆண்டு இறுதியில் அமைதியான முறையில் திபெத் சீனாவின் மத்திய அரசின் கீழ் வந்தது. ஆனால் ஏகாதிபத்தியவாதிகள் இன்று வரை சீனா திபெத் பகுதியை படையெடுத்து கைப்பற்றியதாக பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மை என்ன என்பதை இந்த தொடரில் பார்ப்போம்.

அமைதியான விடுதலை கொள்கை

1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டது. திபெத்திற்கு அருகாமையில் உள்ள சாம்டோ மாவட்டத்தில் இருந்த யுத்த பிரபுக்களை சீன மக்கள் விடுதலைப் படை தோற்கடித்தது. அத்துடன் செம்படை நின்றுக் கொண்டது. அந்தப் படை திபெத்தின் எல்லைக்குள் நுழையவில்லை. திபெத்தின் வரலாற்று நிலைமைகளையும், எதார்த்த நிலைமைகளையும் கருத்தில் கொண்டு ஒரு அமைதியான விடுதலை கொள்கையை சீன மத்திய அரசு உருவாக்கும் முயற்சிகளை செய்தது. திபெத்திலிருந்த உள்ளூர் ஆளும் வர்க்கம் நடத்தி வந்த உள்ளூர் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அதன் மூலமாக தீர்வு காண்பதற்காக காத்திருந்தது. ஒரு நாள் இரு நாள் அல்ல எட்டு மாதங்கள் வரை இந்த காத்திருப்பு நீடித்தது.

1951 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி புதுடெல்லியில் உள்ள சீனத்தூதரிடம் 14 ஆவது தலாய்லாமா ஒரு கடிதத்தை கொடுத்தார். சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அந்த கடிதத்தில் எழுதி இருந்தார். பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திபெத் ராணுவத்தளபதியான ந்காபோய் ந்காவாங் ஜிக்மாய் தலைமையில் ஐந்து பேர் கொண்ட திபெத்திய பிரதிநிதி குழுவை தலாய்லாமா பெய்ஜிங்கிற்கு அனுப்பினார். பெய்ஜிங்கில் மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் திபெத்தின் பிரதிநிதி குழுவும் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடத்தி 1951 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி ஒரு ஒப்பந்தத்தை இயற்றினார்கள். இந்த ஒப்பந்தம் 17 பிரிவு ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. திபெத்தின் மூத்த அரசியல்வாதிகள் மற்றும் படைத்தளபதிகளால் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. 16 வயது நிரம்பிய தலாய்லாமா மதத்தலைவர் என்ற முறையில் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்காக இவர் இரண்டு மாத காலங்கள் எடுத்துக் கொண்டார்.

மேற்கண்ட ஒப்பந்தத்தை திபெத்தின் ஒப்புதல் வாங்குவதற்காக மதக்குருக்களின் சபைகள், உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், மதசார்பற்ற அதிகாரிகள், திபெத்தின் தலைநகர் லாசாவில் இருந்த மூன்று பெரும் மடாலயங்களான சேரா, காண்டய்ன், ஜைபுங் மடாலயங்களின் பிரதிநிதிகள் உள்ளடக்கிய மாநாட்டை 1951 செப்டம்பர் 26 முதல் 29 வரை உள்ளூர் அரசாங்கம் கூட்டியது. இந்தப் பிரதிநிதிகள் மாநாட்டின் இறுதியில், மத மற்றும் உள்ளூர் அரசுத் தலைவர் தலாய்லாமாவிற்கு ஒரு தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தில்“திபெத்தின் பிரதிநிதிகளால் கையொப்பமிடப்பட்ட 17 பிரிவுகளைக் கொண்ட ஒப்பந்தம் தலாய் மதத்தின் மகத்தான நோக்கத்திற்கும், பௌத்தம், அரசியல், பொருளாதாரம், மற்றும் பிற வாழ்க்கை அம்சங்களுக்கும் நிகரற்ற நன்மை பயக்கும், எனவே இது இயற்கையாகவே செயல்படுத்தப்பட வேண்டும்” என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவை தவிர 10 ஆவது பஞ்சன்லாமா (எர்டேனி) அவரது காம்பஸ் சட்டமன்றத்தை கூட்டி இந்த ஒப்பந்தத்தை ஆதரித்து அறிக்கை அளித்தார். அந்த அறிக்கையில் இந்த ஒப்பந்தம் சீனாவின் அனைத்து இனக்குழுக்களின் மக்களுக்கும், குறிப்பாக திபெத்தியர்களின் நலன்களுக்கு முழுமையான பயன்தரும் என்று சுட்டிக் காட்டப்பட்டது.

தலாய்லாமாவின் வானலாவிய வரவேற்பு

இதன் தொடர்ச்சியாக 1951 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி 14 ஆவது தலாய்லாமா சீனப் பெருந்தலைவர் மாசேதுங் அவர்களுக்கு ஒப்பந்தத்தை ஏற்று ஒரு தந்தியை அனுப்பினார். அந்தத் தந்தியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். “நட்பின் அடிப்படையில் இருதரப்பு பிரநிதிகளும் 1951 மே 23 அன்று திபெத்தின் அமைதியான விடுதலைக்கான நடவடிக்கைகள் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். திபெத்தின் உள்ளூர் அரசாங்கமும், மத அமைப்புகளும், மடாலயங்களும், மதசார்பற்ற மக்களும் இந்த ஒப்பந்தத்தை ஒரு மனதாக ஆதரிக்கின்றனர். தங்களின் தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் மக்கள் விடுதலைப் படை தேசிய பாதுகாப்பிற்காகவும், வளர்ச்சிக்காகவும், திபெத்திற்குள் வரவேற்கப்படுகிறது. திபெத்திலிருந்து ஏகாதிபத்திய செல்வாக்குகளை வெளியேற்றுவதற்கும், திபெத் பிரதேசத்தினை ஒருங்கிணைப்பதற்கும், தாய்நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்கும் நாங்கள் தீவிரமாக உதவுவோம்” என்று தந்தியில் எழுதி இருந்தார்.

இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு சீன மத்திய அரசின் மக்கள் விடுதலைப் படை திபெத்திற்குள் மக்களால் வரவேற்கப்பட்டது. 17 பிரிவு ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்காக முயற்சியில் சீன அரசும், திபெத்தில் இருந்த உயர் வர்க்கத்தினர் கையில் இருந்த உள்ளூர் அரசாங்கமும் இறங்கினார்கள். இதனைத் தொடர்ந்து திபெத்தின் தனித்துவத்தை அங்கீகரிக்கக் கூடிய வகையில் சீன மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் துணைத் தலைவராக 14 ஆவது தலாய்லாமாவும், நிலைக்குழு உறுப்பினராக 10 ஆவது பஞ்சன்லாமாவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 1954 ஆம் ஆண்டு சீனத் தலைநகர் பெய்ஜெங்கில் நடைபெற்ற சீன மக்கள் காங்கிரஸில் தலாய்லாமாவும் பஞ்சன்லாமாவும் கலந்து கொண்டனர். 1951 ஆம் ஆண்டு திபெத் சீனாவுடன் அமைதியாக இணைக்கப்பட்ட பிறகு 17 பிரிவு ஒப்பந்தம் அமல்படுத்தியதின் வெற்றிகளை பற்றி தலாய்லாமா சீன மக்கள் காங்கிரஸில் விரிவாகப் பேசினார்.

சீன மக்கள் காங்கிரஸில் முதல் அரசியல் அமைப்பில் தேசிய பிராந்திய சுயாட்சி தொடர்பான கொள்கைகளையும், விதிகளையும் முன்வைத்த பொழுது அந்த வரைவு மசோதாவின் மீது வரவேற்றுப் பேசினார். முழுமையான ஆதரவை தெரிவித்தார். மதம் குறித்து இந்த காங்கிரஸில் பேசியபொழுது, திபெத்திய மக்கள் மத நம்பிக்கைகளை ஆழமாகப் பின்பற்றி வந்ததையும், கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்கள் அரசாங்கமும் மதத்தை ஒழித்துவிடும் என்று சிலரால் பரப்பப்பட்ட தவறான வதந்திகளால் நாங்கள் கவலை அடைந்தோம், ஆனால் நடைமுறையில் எங்கள் சொந்த அனுபவத்திலிருந்து திபெத்திய மக்களுக்கு மத நம்பிக்கை சுதந்திரம் உள்ளது என்பதை அறிந்து கொண்டோம் என்று அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்தார்.

17 பிரிவு ஒப்பந்தத்தின் சில  முக்கிய அம்சம்

  • 17 பிரிவுகளைக் கொண்ட அந்த ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சங்கள் குறிப்பிடத்தக்கவை. ஒன்றிணைந்த திபெத்தில் இருந்து ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு சக்திகளை விரட்ட வேண்டும்.
  • திபெத்தில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தக்கூடிய வகையில் உள்ளூர் அரசாங்கம் மக்கள் விடுதலைப் படைக்கு முழுமையாக உதவி செய்ய வேண்டும்.
  • திபெத்தில் பிராந்திய இன சுயாட்சி நிறுவப்படும். திபெத்தில் தற்போது உள்ள அரசியல் அமைப்பையோ அல்லது 14 ஆவது தலாய்லாமா, 10 ஆவது பஞ்சன்லாமா ஆகியோரின் அதிகாரங்களையோ, நிறுவப்பட்ட நிலைப்பாடுகளையோ, அதன் செயல்பாடுகளையோ சீன அரசு மாற்றாது.
  • திபெத்தின் உள்ளூர் அரசாங்கத்தில் பல்வேறு நிலைகளில் இருக்கக்கூடிய அதிகாரிகள் வழக்கம் போல் பதவியில் இருப்பார்கள். எந்த மாற்றமும் செய்யப்படாது.
  • மத நம்பிக்கை சுதந்திர கொள்கை நிலைநிறுத்தப்படும். திபெத்திய மக்களின் மதநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மதிக்கப்படும்.
  • மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக திபெத்திய இனக்குழுக்களின் மொழியும், பள்ளிக் கல்வியும் மேம்படுத்துவதுடன் விவசாயம், கால்நடை வளர்ப்பு, தொழில், வணிகம் ஆகியவையும் மேம்படுத்துவதற்கு மத்திய அரசு உதவி செய்யும்.
  • பிராந்தியம் சம்பந்தப்பட்ட வெளியுறவு விவகாரங்கள் மத்திய அரசின் ஒருங்கிணைந்த நிர்வாகத்தின் கீழ் இருக்கும்

இதைவிட முக்கியமாக குறிப்பிட வேண்டியது சீன மக்கள் குடியரசு எந்த அளவிற்கு நிதானமாக கையாண்டுள்ளது என்பதற்கு இதில் உள்ள ஒரு ஷரத்து சான்றாகும். சீனப்புரட்சியின் முக்கிய அம்சமான பண்ணை அடிமைகளை விடுவிப்பதாகும்.

திபெத்தில் சீர்திருத்தங்கள் தொடர்பான விஷயங்களில், மத்திய (சீன) அதிகாரிகளின் எந்த வற்புறுத்தலும் இருக்காது. சீர்திருத்தம் திபெத்திய உள்ளூர் அரசாங்கத்தால் அதன் சொந்த விருப்பப்படி மேற்கொள்ளப்படும் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. சீன நாடு முழுவதும் நிலப்பிரபுகளுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு எதிராகவும், சொத்துடமை வர்க்கத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை புரட்சிகர அரசு மேற்கொண்ட அதே நேரத்தில், திபெத்தில் மட்டும் மக்களை அரசியல் படுத்துவதற்கும், அவர்கள் புரிந்து கொள்வதற்குமான கால இடைவெளியை உருவாக்கி நெகிழ்வான முறையில் அணுகியது குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லாம் அறிந்து கொண்டே தான் மேற்கத்திய ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரங்களை செய்து வந்தார்கள். இப்போதும் அதனை தொடர்ந்து செய்கிறார்கள்.

இதே காலத்தில் மற்றொரு புறம் சீன அரசுக்கு அழுத்தம் ஏற்பட்டது. அமைதியான விடுதலைக்குப் பிறகு நிலப்பிரபுத்துவ அடிமை முறை சீர்திருத்தப்படாவிட்டால், திபெத்திய மக்களை ஒரு பொழுதும் அடிமை முறையில் இருந்து மீட்கவும் முடியாது. அவர்களுக்கு செழிப்பையும் ஏற்படுத்த முடியாது என்று உயர் மற்றும் நடுத்தர வர்க்கங்களை சேர்ந்த பல அறிஞர்களும், மக்களும் தெரிவித்தார்கள். ஆனால் சீன கம்யூனிஸ்ட் கட்சியும், அரசும் திபெத்திய வரலாறு மற்றும் பிராந்தியத்தின் சிறப்பு நிலையை கருத்தில் கொண்டு சமூக சீர்திருத்தம் குறித்த மிகவும் விவேகமான அணுகுமுறையை கடைபிடித்தது.

ஒரு வெளிநாட்டின் மீது படையெடுப்புகள் நடத்துவது போல் ஒரு படையெடுப்பை சீன மக்கள் விடுதலைப்படை திபெத்தின் மீது நடத்தவில்லை என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட தெளிவான உண்மையாகும். சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக திபெத்தை சீன மக்கள் கருதியதால் அதை எந்த வகையிலும் சீன மக்கள் படையெடுப்பாக கருதவில்லை. எனவே தான் சீன ராணுவம் சாம்டோவில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வரை எட்டு மாதங்கள் காத்திருந்து. ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு தான் உள்ளூர் அரசாங்க ஒப்புதலுடன் திபெத்திற்குள் படைசென்றது. சீன ராணுவத்தை தேசிய ராணுவம் என்று திபெத் அங்கீகரித்தது. மக்கள் பங்கு பெறாத எந்த சீர்திருத்தமும் வெற்றி பெறாது என்பதை மாசேதுங் உறுதியாக வலியுறுத்தினார். நமது நோக்கம் திபெத் என்ற நிலத்தை வெற்றி கொள்வது அல்ல, திபெத் மக்களை வெற்றிகொள்வது என்பதுதான் என்று அறிவித்தார்.

ஒருபுறத்தில் ஒப்பந்தத்தை அமைதியான முறையில் அமலாக்க முயற்சி செய்கிற அதே நேரத்தில் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த உயர்மட்ட தலைவர்கள் சிலர் சீர்திருத்தத்தை விரும்பாமல் பண்ணை அடிமை முறையை என்றென்றும் பாதுகாக்க விரும்பினார்கள். இவர்கள் சீன எதிர்ப்பு சக்திகளாக இருக்கக்கூடிய மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் ஒப்பந்தத்தை சீர்குலைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது 542 சமஸ்தானகள் இருந்தன. அவற்றின் ஹைதராபாத், திருவிதாங்கூர், காஷ்மீர் உட்பட பல சமஸ்தானங்கள் மிகப்பெரும் அரசாங்கங்களை நடத்திக் கொண்டிருந்தன. காஷ்மிரி இந்து மன்னர் பாகிஸ்தானுடன் இணைவது அல்லது தனி நாடு என்று அறிவித்தார். ஐதராபாத் நிஜாம் தனி நாடு என்று அறிவித்தார். திருவிதாங்கூர் மன்னர் அமெரிக்க மாதிரி அரசு என்று தனிநாட்டு கோரிக்கை முன் வைத்து கிளர்ச்சி செய்தார். அந்த அளவுக்கு கூட அதிகாரம் அற்றதாகத்தான் திபெத்தின் உள்ளூர் அரசு இருந்தது. அந்த அரசுடன் நிதானமான முறையில்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீன மக்கள் குடியரசு படையெடுப்பின்றி பேச்சுவார்த்தை நடத்தி இணைப்பை ஏற்படுத்தியது வரலாறு.

நாச வேலையும் சிஐஏ உதவியும்

1952 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மக்கள் மாநாடு என்ற ரகசிய அமைப்பை உருவாக்கினார்கள். இதற்கு உள்ளூர் அரசாங்கத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் ரகசியமான ஆதரவை வழங்கினார்கள். இந்த அமைப்பின் நோக்கம் திபெத்திலிருந்து மக்கள் விடுதலை ராணுவம் வெளியேற வேண்டும் என்பதாகும். 17 பிரிவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்தார்கள்.

1952 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி ஜைபுங், சேரா மடாலயங்களில் இருந்து சுமார் 1000 க்கும்மேற்பட்ட துறவிகள் லாசாவின் மையப் பகுதிக்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டார்கள். மத்திய அரசாங்கத்தின் அலுவலகத்தையும், அதில் வேலை செய்த ஊழியர்களையும் தாக்கினார்கள். சீன மக்கள் காங்கிரஸின் திபெத் அலுவலகங்களை முற்றுகையிட்டார்கள். 1955 ஆம் ஆண்டு திபெத்திய உள்ளூர் அரசாங்கத்தை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் திபெத்தியர்கள் அதிகமாக வசிக்கும் ஜிகாங்க மாகாணத்தில் ஆயுதம் தாங்கி கிளர்ச்சியை துவங்குவதற்கு ரகசியமாக திட்டமிட்டனர். இதன் தொடர்ச்சியாக 1956 ஆம் ஆண்டில் அங்கு ஒரு கிளர்ச்சி வெடித்தது. கிளர்ச்சியாளர்கள் உள்ளூர் அரசாங்க நிறுவனங்களை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்களையும் பொது மக்களையும் படுகொலை செய்தார்கள்.

1957 ஆம் ஆண்டு மே மாதம் “நான்கு ஆறுகள் ஆறு மலை தொடர்கள்” என்ற பெயரில் ரகசிய அமைப்புகளை உருவாக்கினார்கள். இந்த அமைப்புகளுக்கு கீழ் மத காவலர்கள் என்ற ஆயுதப் படைகளையும் நிறுவினார்கள், இந்த ஆயுதப் படைகளின் முக்கிய குறிக்கோள் சீர்திருத்தத்திற்கு எதிராக செயல்படுவதும், சீர்திருத்தத்தை நடக்க விடாமல் தடுப்பதும் அடிப்படை பணியாக அமைந்தது திபெத்திய சுதந்திரம் என்ற கோஷத்தையும் முன் வைத்தார்கள். திபெத்தின் பல்வேறு மாவட்டங்களை கலவரப் பகுதியாக மாற்றினார்கள். தகவல் தொடர்பு இணைப்புகளையும், ராணுவ துருப்புகளையும், மத்திய அரசு நிறுவனங்களையும் சேதப்படுத்தினார்கள். பொதுமக்களிடம் இருந்த பொருட்களை கொள்ளையடித்தது மட்டுமல்ல பெண்களை பாலியல் பலாத்காரமும் செய்தனர்

1957 ஆம் ஆண்டு காம்டோ பகுதிகளில் பிரிவினைவாதிகளுக்கும் மக்கள் விடுதலைப் படைக்குமான போராட்டம் தீவிரமடைந்தது. பல மடாலயங்கள் பிரிவினைவாதிகளை மறைத்து வைக்க கூடியதும் பயிற்சி அளிக்கக்கூடிய இடங்களாக பயன்படுத்தப்பட்டன. இந்தப் பகுதியிலிருந்து பிரிவினைவாதிகளுடன் அமெரிக்காவின் மத்திய உளவுத்துறை வலுவான தொடர்புகளை வைத்திருந்தது. அமெரிக்காவின் நேரடி ஆதரவை திபெத்திய பிரிவினைவாதிகள் கேட்ட பொழுது அன்றைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டூவைட் டி ஐசனோவரின் கீழிருந்த சிஐஏ நிறுவனம் கிளர்ச்சியாளர்களை ஆதரிக்க வேண்டும் என்றால் லாசாவிலிருந்து அதிகாரப்பூர்வமான கோரிக்கை வர வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். தலைநகர் லாசாவிலிருந்து எந்த கோரிக்கையும் தகவலும் இல்லாததால் சிஐஏ நிறுவனம் கிளர்ச்சியாளர்களுக்கு ரகசியமான ஆதரவை வழங்கியது. கிளர்ச்சியாளர்கள் லாசா நகரத்தில் பெரும் போராட்டங்களை நடத்தினார்கள்.

அமெரிக்காவின் சிஐஏ உளவுத்துறை வெளிநாட்டில் வசிக்கும் திபெத்திய இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வரைபடங்களைப் பற்றிய விபரங்களையும், வானொலி ஒளிபரப்பை நடத்துவது, துப்பாக்கிச்சுடும் பயிற்சி, பாராசூட் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதற்காக அமெரிக்காவின் குவாமூக்கு என்ற இடத்திற்கு அனுப்பி பயிற்சி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் கொலராடோவின் ஹேல் முகாமில் 170 திபெத்தியர்களுக்கு கொரிலா போர் பயிற்சியை அளித்தனர். பயிற்சி பெற்ற கொரிலாக்கள் சீன ஆக்கிரமிப்பை எதிர்க்க ஒரு பயனுள்ள எதிர்ப்பு இயக்கத்தை தொடங்குவதற்கு திபெத்திற்குள் விமானத்தின் மூலம் இறக்கி விடப்பட்டார்கள்.

அமெரிக்கா அத்துடன் நிறுத்தவில்லை. ரகசிய ஆதரவு என்ற பெயரில் 20 இயந்திர துப்பாக்கிகள், இரண்டு பெரும் மோட்டார்கள், 100 துப்பாக்கிகள், 600 கைக்குண்டுகள், 600 பீரங்கி குண்டுகள் மற்றும் 40 ஆயிரம் தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் சிகுலமா தாங்க் என்ற பீடபூமியில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு விமானத்தின் மூலம் வழங்கியது. இதே காலத்தில் ஷானன் பகுதியில் நிலை கொண்டுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு நிலம் வழியாகவும் ஆயுதங்களை அனுப்பியது.

நாடகத்தை முன்வைத்து நாடகமாடிய தலாய்லாமா

மேற்கத்திய நாடுகளின் தீவிரமான உதவியுடன் அடிமைத்தனத்தை தக்கவைத்துக் கொள்வதில் திபெத்திய அடிமை உடைமையாளர்கள் ஈடுபட்டதால் கிளர்ச்சி உச்சகட்டத்தை அடைந்தது. 1959 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி லாசாவில் விரிவாக திட்டமிடப்பட்ட ஆயுதக் கிளர்ச்சி வெடித்தது. கிளர்ச்சியின் துவக்கம் வதந்திகளை பரப்புவதில் இருந்து துவங்கியது, 14 ஆவது தலாய்லாமா திபெத்திலிருந்த நடனக் குழு, இசை குழுவின் நிகழ்ச்சியை காண வேண்டும் என்று ராணுவத்திடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தலாய்லாமா வருவதற்கான நேரங்களும் குறிக்கப்பட்டது. தலாய்லாமாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியையும் நேரத்தையும் சீன ராணுவம் திபெத்திய உள்ளூர் அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கும், தலாய்லாமாவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட துணை ஜெனரல் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 10 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தலாய்லாமா ராணுவ அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டது. மார்ச் 9 ஆம் தேதி லாசாவின் மேயர் 14 ஆவது தலாய்லாமாவை சீன ராணுவம் பெய்ஜிங்கிற்கு கடத்தி செல்வதற்காக விமானத்துடன் தயாராக உள்ளனர். எனவே திபெத்திய மக்களும் மடாலயங்களில் லாமாக்கள் அனைவரும் தலாய்லாமாவின் வீட்டிற்கு முன் அணி திரண்டு அவர் நிகழ்ச்சிக்கு போக விடாமல் தடுக்க வேண்டும் என்று மக்களை தூண்டி விட்டார். 2000க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் தலாய்லாமாவின் வீட்டை சுற்றி பிரார்த்தனை செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். தலாய்லாமாவிற்கு விஷம் கொடுத்துக் கொள்வதற்காக திட்டமிட்டுள்ளனர் என்ற வதந்தியும் பரப்பினார்கள்.

இதன் உச்சக்கட்டுமாக அந்த கூட்டத்தில் நில உடமையாளர்களும் லாமாக்கலும் திபெத் சுதந்திரம் வேண்டும் என்றும், ஹான்சீனர்களை ஒழித்துக் கட்டுவோம் என்று கோஷங்களை எழுப்பினார்கள். பல சீன ராணுவ வீரர்களையும், ஒப்பந்தங்களை அமுல்படுத்துவதற்கு முயற்சி செய்த திபெத்திய அதிகாரிகளையும் கூட்டம் தாக்கி காயப்படுத்தியது. கிளர்ச்சி லாசாவை மையப்படுத்தி தீவிரமடைந்தது. மார்ச் 16 ஆம் தேதி தலாய்லாமா திபெத்திலிருந்த சீன பிரதிநிதிக்கு நான் கிளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக உள்ளூர் அதிகாரிகளிடம் கடும் முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை என்று கடிதத்தை எழுதினார். இந்த கடிதங்கள் எல்லாம் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இருப்பினும் உள்ளூர் நில உடமையாளர்கள் மற்றும் மேற்கத்திய சக்திகளின் உதவியுடன் மார்ச் 17 ஆம் தேதி மிக முக்கிய கிளர்ச்சி தலைவர்களுடன் லாசாவிலிருந்து தலாய்லாமா ஷானன் பகுதிக்கு சென்றார். திபெத்தில் ஆயுதக் கிளர்ச்சி தோல்வியடைந்த பிறகு தலாய்லாமாவும் அவருடைய தலைவர்களும் இந்தியாவிற்கு தப்பிச் சென்றனர்.

 அ.பாக்கியம்

30 தலாய் லாமாக்களின் வரிகளும் கட்டாய உழைப்பும்

 அ.பாக்கியம்



என் தாத்தாவின் தாத்தா பட்ட கடன்கள்

என் தந்தையின் தந்தையால் செலுத்த முடியவில்லை,

என் மகனின் மகனும்

வட்டியைக் கூட திருப்பிக் கொடுக்க முடியாது.

(திபெத்திய நாட்டுப்புறபாடல்)

திபெத்திய உள்ளூர் அரசாங்கத்தின் பெயர் காங்சாக் என்று அழைக்கப்படுகிறது. இதன் ஆவணங்களில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகள் மூலம் 200க்கும் மேற்பட்ட வரிவிதிப்புகள் இருந்துள்ளதை அறிய முடிகிறது. பண்ணைஅடிமைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலங்களில் அவர்கள் உழைக்க வேண்டும். இந்த நிலத்திற்கான வாடகை,வரிகளை நிலப்பிரபுகளுக்கு செலுத்த வேண்டும். வரிகளை பொருட்களாக, கால்நடைகளாக, பணமாக செலுத்தலாம். இந்த வகையில் இவர்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள்தான் மேற்கண்ட 200க்கும் மேற்பட்ட வரிகள் ஆகும். இதற்கு மேல் வாரத்திற்கு மூன்று நாட்கள் அல்லது நிலப்பிரபு, மதத்தலைவர்கள் கட்டளையிடுகிற பொழுது அவர்களுக்காக இலவச உழைப்பை கட்டாயம் செய்ய வேண்டும். ஆவணங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பண்ணை அடிமையும் தன்னுடைய உழைப்பில் 50 சதவீதத்திற்கு மேல் நிலப்பிரபுக்காக இலவச உழைப்பை செய்தார்கள் என்றும், சில காலங்களில் இந்த இலவச உழைப்பு அதிகபட்சமாக 80சதவீதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றால் இதன் கொடுமைகளை நாம் வேறு எங்கும் கண்டிருக்க முடியாது. அடிமைகளை விட கொடுமையான முறையில்பண்ணைஅடிமைகள் வாழ்ந்திருக்கிறார்கள்.

செரிங் ஜோல்மா என்ற நங்சான் அடிமை கழிப்பறைக்கு அடியில் வசிப்பதை காட்டும் புகைப்படம்
செரிங் ஜோல்மா என்ற நங்சான் அடிமை கழிப்பறைக்கு அடியில் வசிப்பதை காட்டும் புகைப்படம்

உள்வரி-வெளிவரி-பிறப்புவரி

உலா பண்ணை அடிமைகள் என்ற சுரண்டல் முறைகளை கடைபிடித்து உள்ளார்கள்.இந்த முறைகளில் கரும்புச்சாறை பிழிந்து எடுப்பதை போல் இவர்களை பிழிந்து எடுத்துள்ளனர். இதன்படி ஒரு பண்ணை அடிமை தனது பண்ணையாருக்கு வரி கொடுக்க வேண்டும், இலவச உழைப்பையும் செய்ய வேண்டும். பிரபுக்கள் தங்கள் விருப்பப்படி இவர்கள் மீது இலவச உழைப்பையும் வரி சுமைகளையும் போடலாம். இதன் மூலம் வருடத்திற்கு மூன்று இரண்டு பங்கு, சில நேரங்களில் நான்கில் மூன்று பங்கு நேரத்தை இந்த இலவச உழைப்பு உறிஞ்சிவிடும். இதற்கு உள்வரி என்று பெயர். இதற்கான விவரங்களை வெளிப்படையாக தெரிவிப்பது இல்லை.

இதைத் தவிர திபெத்திய உள்ளூர் அரசாங்கத்திற்கு தனியாக வரிகளை செலுத்த வேண்டும். உள்ளூர் அரசாங்கம் உருவாக்கியுள்ள திட்டங்களை நிறைவேற்றுவதற்கு இலவச உழைப்பை இந்த உலா பண்ணையடிமைகள் வழங்க வேண்டும். இவர்களை வேலை வாங்குவதற்காக உள்ளூர் அரசாங்கத்திடமிருந்து டோக்கன் வாங்கி இருக்க கூடிய அதிகாரிகள், துறவிகள், வணிகர்கள் இந்த அடிமைகளை அழைத்துச் சென்று வேலை வாங்குவார்கள். உலாபண்ணை அடிமைகள் மட்டுமல்ல பல நேரங்களில் இவர்களின் கால்நடைகளையும் எடுத்துச் சென்று வேலை செய்ய வேண்டும். உள்ளூர் அரசாங்கத்திற்கு தேவைப்படுகிற பார்லி, வெண்ணெய், மெத்தைகள் போன்ற பொருட்களையும், வெள்ளியிலான பணங்களையும் செலுத்த வேண்டும். இதற்கு வெளிவரி என்று பெயரிட்டு இருந்தார்கள்.

வெவ்வேறு அடிமை உடைமையாளர்களிடம் இருக்கக்கூடிய பண்ணை அடிமைகள்ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் இருவரும் தங்கள் பண்ணையாருக்கு மீட்பு கட்டணங்களை செலுத்த வேண்டும். அடிமைகளுக்கு குழந்தை பிறந்தால் இவர்களுக்கு பிறப்புவரி செலுத்த வேண்டும். குழந்தை பெற்றெடுத்த பெற்றோர் தங்களின் அடிமை எஜமானிடம் அவற்றை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் உரிமையாளருக்கு வாழ்நாள் முழுவதும் அடிமையாக இருப்பார்கள் என்று அர்த்தமாகும். அடிமைகள் வேறு இடங்களுக்குச் சென்று வாழ்க்கை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அவர்கள் வரி செலுத்த வேண்டும்.

ஒரு இடத்திலிருந்து வேறு வழியில்லாமல் மற்றொரு அடிமை உடமையாளரிடமோ சென்றால் வரி செலுத்தியதற்கான ரசீதை காட்ட வேண்டும். அவ்வாறு வரி செலுத்திய ரசீது இல்லை என்றால் அவர்கள் தப்பிஓடியவராக கருதப்பட்டு கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். “திபெத்தில் ஒரு எஜமானர் இல்லாமல் நீங்கள் வாழ முடியாது. உங்களுக்கு சட்டபூர்வ உரிமையாளர் இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் உங்களை ஒரு சட்டவிரோதியாக கைது செய்யலாம் என்ற நிலைமை தான் அங்கு இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

இந்த வரிகள் தான் உச்சம் என்று நினைத்துவிடாதீர்கள். இதற்கு மேல் மனிதனை சுரண்ட முடியாது என்ற அளவிற்கு மடாலயம் இருந்துள்ளது. லாசாவிலிருந்து மேற்கே சில மைல்கள் தொலைவில் ஷிகாட்ஸே செல்லும் நெடுஞ்சாலையில் டிரெபங் (ஜைபங்)  மடம்இருந்தது . இது திபெத்தின் மிகப்பெரிய மடாலயம். மிகப்பெரிய அடிமை உரிமையாளராகஇருந்தது.டிரெபங் சுமார் 25,000 அடிமை மக்கள்தொகை கொண்ட 185 இடங்களில்நிலங்களும், 16,000 கால்நடைமேய்ப்பர்களைக் கொண்ட 300 மேய்ச்சல் நிலங்களையும் வைத்திருந்தது.திபெத்தில் நில பிரபுத்துவ அரசு இருந்தது. டிரெபங் ஒரு நிலப்பிரபுத்துவ அரசுக்குள் ஒரு நிலப்பிரபுத்துவ நாடாக இருந்தது.

ஒரு கால் வெட்டப்பட்ட நிலையில் அம்டோ கவுண்டியில் க்யூட்டோ என்ற மேய்ப்பர்

“பெரிய மூன்று மடங்கள்” – டிரெபங், செரா மற்றும் காண்டன் – பல நூற்றாண்டுகளாக திபெத்தின் வாழ்க்கையை ஆதிக்கம் செலுத்திய பிற்போக்குத்தனமான அரசியல் இயந்திரத்தின் முதுகெலும்பாக இருந்தன. மிகப்பெரிய மடாலயமான டிரெபங், திபெத்தின் அரசாங்கத்தில் பல உயர் மதகுரு அதிகாரிகளை நியமிப்பதில் சிறப்பு சலுகைகளைப் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டில் நடைபெறும் பெரிய பிரார்த்தனை விழாவின் மூன்று வாரங்களுக்கு, டிரெபங்கின் மடத்தைச் சேர்ந்த”இரும்புப் பட்டை லாமாக்கள்” லாசா நகராட்சியின் முழு நிர்வாகத்தையும் எடுத்துக் கொள்வார்கள். விருப்பப்படி வரிகளையும், அபராதங்களையும் விதித்து, இதன் மூலம் தங்களையும் மடத்தையும் வளப்படுத்திக் கொண்டனர்.

டிரெபங் மடாலயத்தின் அரசியல் அதிகாரத்திற்கு பயந்து, பலசீனப் பேரரசர்கள், இம்மடத்தின் துறவிகள் 7,700 க்கு மேல் இருக்ககூடாது என்று கட்டுப்படுத்தினர். ஆனால் சில சமயங்களில் இவை ஒன்பது அல்லது பத்தாயிரமாக எண்ணிக்கை வளர்ந்தன. மத்திய மடாலயத்தைத் தவிர, டிரெபங் திபெத்திய பகுதிகளில் எழுநூறுக்கும் மேற்பட்ட துணை மடங்கள் இருந்தன.

மடத்தின் நிலத்தைப் பயன்படுத்துவதற்கான கட்டாய உழைப்பு, தானியக் கொடுப்புகளை தவிர ,எண்ணற்ற வகையான வரிகள் போடப்பட்டது. நாய் வரி, பூனை வரி, கோழி வரி, கழுதை வரி, ஒரு விலங்கு அணியும் மணிக்கான வரி, ஒரு பூச்செடியை வைத்திருப்பதற்கான வரி, தேர்தல் வரி, பிறப்பு வரி, இறந்தவரின் காதணிகள் மற்றும் ஆபரணங்கள் டிரெபங் மடத்திற்கு கொடுப்பதற்கான சிறப்பு வரி என பட்டியல் நீண்டது. ட்ரெபங்கின் மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு வட்டியிலிருந்து வந்தது. கடன்களுக்கான வட்டி இருபது சதவிகிதமாக இருக்க வேண்டும், ஆனால் உண்மையில் பல நிபந்தனைகள் மூலம் மிக அதிகமாக சென்றது.

ஒரு பண்ணை அடிமையை ரத்தம் சொட்ட சொட்ட சுரண்டுவது என்று சொன்னால் அதற்கு தலாய் லாமாவின் அடிமை ராஜ்ஜியம் உதாரணமாக அமைந்து விடும்.

பெயரற்ற வாழ்வும் மதிப்பற்ற உயிரும்

திபெத்தியஅடிமைகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பெயர்கள்வைக்ககூடாது. அடிமை உடைமையாளரின் பெயரை சொல்லியும் உடலின் சில அடையாளங்களை வைத்துமே அழைப்பார்கள். பெயர் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது தான் சட்டம்.சீனப் புரட்சிக்குப் பிறகு 1959 ஆம் ஆண்டு காலகட்டத்தில்தான், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பெயர் வைக்க வேண்டும் என்ற மாசேதுங்கின் உத்தரவு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.

பண்ணை அடிமைகளுக்கான உயிர் மதிப்பை உள்ளுர் அரசாங்கம் நிச்சயித்து இருந்தது. மக்கள் வெவ்வேறு பிரிவுகளாக இருப்பதால் ஒரு உயிரின் மதிப்பு அதற்கு ஏற்ப மாறுபடுகிறது என்று விதிகளுக்கான காரணங்களை கற்பித்தார்கள். உயர் குடியைச் சேர்ந்தவர்கள் அல்லது வாழும் புத்தர் போன்ற பட்டங்களை பெற்றவர்கள், பதவியில் உள்ளவர்களின் உயிரின் மதிப்பு என்பது இறந்த உடலின் அதே அளவு தங்கத்தின் மூலம் கணக்கிடப்படுகிறது.

பெண்கள், கசாப்பு, கடைக்காரர்கள், வேட்டைக்காரர்கள், கைவினைஞர்கள் போன்ற கீழ் வகுப்பைச் சேர்ந்த மக்களின் உயிர் ஒரு வைக்கோல் கயிற்றின் அளவுதான் என்று மதிப்பிடப்படுகிறது. அடிமைகளுக்கு உயிரின் மதிப்பே கிடையாது என்பது நாம் அறிந்த விஷயம். பெரும்பாலான பண்ணை அடிமைகளும் இவ்வாறு தான் நடத்தப்பட்டார்கள். இதுபோன்ற சமத்துவமின்மை அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் கடைபிடிக்கப்பட்டது. இவை தண்டனைகளை அளவிடுவதற்கும் ஒரு அளவுகோலாக இருந்தது.

அடிமைகள் திருமணம் செய்து கொள்ளவோ அல்லது குறுகிய காலங்கள் தனது எஜமானை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றாலும் எஜமானரின் அனுமதியை பெற வேண்டும். தன்னிடம் இருக்கக்கூடிய அடிமையை மற்றொரு அடிமை உடமையாளருக்கு எஜமானர் மாற்றலாம், அவ்வாறு மாற்றிய பொழுது கணவன் மனைவியை பிரிந்து விட வேண்டும். இதனால் திருமண முறிவுகள் இயல்பாக இருந்தது. பல நேரங்களில் நில உரிமைகள் கொண்ட பண்ணை அடிமைகளை தண்டனை என்ற பெயரில் அடிமைகளாக மாற்றப்பட்டனர்.

இதற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும் அது அமலாகவில்லை. சில நேரங்களில் சிறப்பான அடிமைகளுக்கு மேற்பார்வையாளராக அந்தஸ்தை அடிமை உடமையாளர் வழங்குவார். ஆனால் சில அடிமைகள் கால்நடைகளை வளர்ப்பது மூலமாகவோ, பிச்சை எடுப்பதன் மூலமாகவோ செழிப்படைந்தால் அவற்றை எஜமானர் கைப்பற்றிக் கொள்வார். ஒரு அடிமை செழிப்பாக மாறுவது அடிமை சமுதாயத்தில் பாதுகாப்பானதாக இருக்கவில்லை.

பண்ணை அடிமைகள் தங்கள் தனிப்பட்ட சொத்தாக நிலபிரபுக்களிடம் இருந்ததால், நிலபிரபுக்கள் அடிமைகளை வர்த்தகம் செய்து மாற்றலாம், பரிசுகளாக வழங்கலாம், கடனுக்காக அடமானம் வைத்து பரிமாறிக் கொள்ளலாம். வரலாற்று பதிவுகளின்படி, 1943 ஆம்ஆண்டில், பிரபுசெங்மோயிம் நோர்பு வாங்க்யாய், ஜிகுங் பகுதியில் உள்ள கார்ஷோல்கம்சாவில் ஒரு துறவி அதிகாரிக்கு ஒரு பண்ணை அடிமைக்கு 60 தைல் திபெத்திய வெள்ளி (சுமார் நான்கு வெள்ளி டாலர்கள்) விலையில் 100 பண்ணை அடிமைகளை விற்றார். மேலும், 3,000 பின் திபெத்திய வெள்ளி (சுமார் 10,000 வெள்ளி டாலர்கள்) கடனுக்காக 400 பண்ணை அடிமைகளை குண்டலிங் மடாலயத்திற்கு அடமானமாக அனுப்பினார்.

கொல்லாமையும் கொள்கையும் கொலைபாதக செயலும்

வீட்டில் இருந்த ஒவ்வொரு மேனர் வீடுகளும் மடாலயங்களும் தனக்கென தனித்தனியாக சிறைச்சாலைகளையும், தண்டனை கொடுக்கக் கூடிய இடங்களையும், தண்டனை கொடுக்கக் கூடிய கருவிகளையும் வைத்திருந்தார்கள். அந்த சிறைச்சாலை, வெளிச்சமும் காற்றும் இல்லாத கழிப்பறை வசதிகள் இல்லாத ஒரு பாதாள அறையில் கரடு முரடான கற்களால் அமைக்கப்பட்ட சிறைச்சாலை ஆகும்.

எஜமானருக்கு கீழ்ப்படியாத பண்ணையடிமைகள் அல்லது ஓடிப்போன அடிமையின் கைகள், கால்களை வெட்டுவது, கண்களை பிடுங்குவது அடிமை உடமையாளரின் உரிமையாக இருந்தது. இந்த தண்டனைகளை தொடை நாண் கட்டுதல், குதிகால் வெட்டுதல் அல்லது ஒரு அடிமையை ஊனமாக்குதல் போன்ற விதிகளின்படி அமலாக்கினார்கள்.

ஒரு அடிமை தனது எஜமானனை பற்றி உள்ளூர் அரசாங்கத்திடம் முறையிடக்கூடாது. அவ்வாறு முறையிடுவது தண்டனைக்குரிய குற்றம். அடிமைகள் மற்ற அடிமைகளிடம் தங்கள் குறைகளை வெளிப்படுத்துவது சட்டவிரோதமானது. நிலப்பிரபுத்துவமேனர்களில் அடிமைகள் தங்கள் குறைகளை எழுப்புவதும், மற்றவர்களை இழிவு படுத்தக்கூடிய முறையில் நடந்து கொள்பவர்களும் கைது செய்யப்பட்டு சவுக்கடி கொடுக்கப்பட்டது. ஒரு எஜமானரின் கட்டுப்பாட்டை எதிர்க்கும் எவரும் கைது செய்யப்பட வேண்டும். முக்கியமான விஷயங்களை உளவு பார்த்தால் கைது செய்யப்பட வேண்டும். ஒரு அதிகாரியை புண்படுத்தும் ஒரு சாதாரண மனிதர் கைது செய்யப்பட வேண்டும் என்ற விதிகள் உருவாக்கப்பட்டு அமலாக்கப்பட்டது.

ஒரு எஜமானனை காயப்படுத்திய ஒரு வேலைக்காரன் கைகள் அல்லது கால்களை வெட்ட வேண்டும் என்று விதி உருவாக்கப்பட்டுஇருந்தது.  அதே நேரத்தில் ஒரு வேலைக்காரனை காயப்படுத்தி எஜமானன் மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் உதவி செய்தால் போதும் என்ற விதியும் இருந்தது. வாழும் புத்தரை அதாவது உயர் அடுக்கு நபரை காயப்படுத்தும் செயலில் ஈடுபட்டால் அவரது கண்கள் பிடுங்கப்பட வேண்டும். கால்கள் கைகள் வெட்டப்பட வேண்டும் அல்லது மரண தண்டனை கூட விதிக்கப்படலாம். கை கால்களை வெட்டுவது, நாக்குகளை அறுப்பது, கண்களை பிடுங்குவது, உடம்பு தோலை உரிப்பது, தண்ணீரில் தள்ளி விடுவது, மலைகளிலிருந்து கீழே தள்ளுவது போன்ற தண்டனைகளை அமல்படுத்தினார்கள்.

1934ஆம் ஆண்டில் திபெத்தின் உள்ளூர் அரசாங்கத்தில் உயர்மட்ட அதிகாரியாக ட்சேபோன் லுங்ஷார் அதிகாரியாக செயல்பட்டார். இவர் 1920 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் கல்வி கற்றவர். பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். ஆனால் அவற்றை நடைபெறவிடாமல் நிலப்பிரபுக்களும், மதகுருமார்களும் தடுத்து அவரை தோற்கடித்தார்கள். அரசியல் போராட்டக் களத்தில் தோற்கடிக்கப்பட்ட அவருக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டது. அவரது கண்களை குருடாக்க வேண்டும் என்று தண்டனை வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட விதம் மிகக் கொடூரமானது.

 

உடமையாளரால் கை துண்டிக்கப்பட்ட அடிமை

கைதியின் முகத்தில் தோல் போன்ற இறுக்கமான துணிகளை கட்டிவிட்டு கண்கள் மட்டும் தெரியக்கூடிய வகையில் பின்புறத்தில் இருந்து தாக்கி இமைகள் வெளியே வரும் வரை தலையில் அடிப்பது நடந்தது. அவ்வாறு இருந்தும் ஒரு கண்கள் மட்டுமே வெளியே வந்தது. மற்றொரு கண்ணையும் வெளியே கொண்டு வர ராக்யபா என்ற தீண்டத்தகாதவர்களை அழைத்து கண்ணை தோண்டி எடுத்தார்கள். பிறகு கண்களின் குழிகளில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றப்பட்டது. இது கொடுமையான முறையில் நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்பு போதைப் பொருட்களைக் கொண்டு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. துரதிஷ்டவசமாக தண்டனை பெறுபவருக்கு அவை முழுமையான பலன் அளிக்காததால் தண்டனை மிகக் கொடூரமான முறையில் இருந்தது என்று வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க புலனாய்வு துறையுடன் தொடர்பு

1949 ஆம் ஆண்டு திபெத்திய 14வது தலாய்லாமா அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தார். அவர்கள் திபெத்திற்கு ரகசியமாக வந்து சென்றார்கள். டர்க்லஸ் மெக்யர்ன் அவ்வாறு வந்த பொழுது அடையாளம் தெரியாத காரணத்தினால் திபெத்திய எல்லை காவலர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த ஆறு காவலர்களுக்கும் உறுப்புகளை சிதைக்கும் தண்டனை கொடுக்கப்பட்டது. அந்த ஆறு பேரில் தலைமை காவலருக்கு மூக்கும் இரண்டு காதுகளும் வெட்டப்பட வேண்டும். முதலில் சுட்ட நபருக்கு இரண்டு காதுகளை அறுக்க வேண்டும். மூன்றாவது நபருக்கு ஒரு காதை அறுக்க வேண்டும். மற்ற மூன்று பேருக்கும் தலா 50 கசையடிகள் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு எழுதப்பட்டது. மற்றொரு சி ஐ ஏ முகவர் பிராங்க் பேசக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தண்டனைகள் கசையடிகளாக குறைக்கப்பட்டது.

1942 ஆம் ஆண்டில் தலாய்லாமாவின் நடனக் குழுவில் நடன கலைஞராக இருந்த ஒருவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாமல் போனதால், அவருடைய 13 வது வயதிலேயே மிகக் கடுமையான முறையில் உடம்பு தோல்கள் உறிந்து போகிற அளவிற்கு சவுக்கடி கொடுக்கப்பட்டதாக பதிவு செய்துள்ளார். 1950 ஆம் ஆண்டுகளில் திபெத் தன்னாட்சி பகுதி ஆவணக்காப்பகத்தில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தலாய்லாமாவின் பிறந்தநாளை கொண்டாட அனைத்து மக்களும் தலாய்லாமாவின் புகழ் பாடுகின்ற வரியை உச்சரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த சடங்குகளை நடத்துவதற்காக மனிதனின் தோல்,இரண்டு மண்டை ஓடுகள், சில கால்நடைகளின் ரத்தம், இன்னும் பல உறுப்புகளை கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட சம்பவம் இந்த கடிதத்தின் மூலம் தெரிய வந்தது.

 

பண்ணை உடமையாளர்களால் கைகளில் விலங்கு மாட்டி வேலை வாங்கப்பட்ட அடிமை

1959 ஆம் ஆண்டு ஜனநாயக   சீர்திருத்தத்திற்கு முன்பு நீண்ட காலமாக லாமாக்கள் மற்றும் நிலப்பிரபுக்களின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் அடிமைத்தன சமூகமாக இருந்தது. இது இடைக்கால ஐரோப்பிய அடிமைத்தனத்தை விட இருண்டதாகவும் கொடூரமானதாகவும் இருந்தது என்று பல வரலாற்று தரவுகள் உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

திபெத் என்ற பகுதி சீன புரட்சிக்கு முன்பு எந்த அளவு பின்தங்கி இருந்தது என்பது மட்டுமல்ல மிகக் கொடூரமான பண்ணை அடிமை முறைகளை அனுபவித்தது என்பதையும் அறிய முடியும். திபெத்தியபௌத்தம் நிலப்பிரபுத்துவ ஆட்சியின் தலைமை பாத்திரம் வகித்து மக்களை சுரண்டி உள்ளது. மக்களை மதத்தின் பெயரால் மயக்கி வைத்திருப்பது மட்டுமல்ல, மாற்றங்கள் விரும்புவோரை அடக்கி வைப்பதையும் செய்துள்ளனர். மாற்றங்களை எதிர்பார்த்த அவர்களுக்கு சீனப் புரட்சி ஒரு விடியலை கொடுத்தது.

1949 ஆம் ஆண்டு சீனப் புரட்சி நடந்தாலும் 1959 ஆம் ஆண்டு தான் திபெத்தில் சீர்திருத்தத்தை ஆரம்பித்தார்கள். இடைப்பட்ட காலத்தில் சீனா படையெடுத்தது என்ற குற்றச்சாட்டுகள் உண்மையா? சீனா திபெத்தில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை அடுத்த தொடரில் பார்க்கலாம்.

.பாக்கியம்

சனி, ஜூலை 19, 2025

ரத்த வாடை அடிக்கும் தலாய் லாமாக்களின் சாம்ராஜ்யம்

 


-

அ.பாக்கியம்

 

கருணை பொங்கும் கண்கள்; பரிவு கொண்ட பார்வை; அன்பை உபதேசிக்கும் உதடுகள்; அமைதியை விரும்பும் வதனம்; சாந்த சொரூபி என்பதற்கான சரியான எடுத்துக்காட்டு, உயிர் கொல்லாமை, ஜனநாயகம், சுதந்திரம் போன்றவற்றின் மீது காட்டும் பற்று என்றெல்லாம் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் தஞ்சம் அடைந்திருக்கும் 14 ஆவது தலாய்லாமாவை, அமெரிக்காவும், மேற்கத்திய ஊடகங்களும் போற்றிப் புகழ்ந்து ஒரு போலி பிம்பத்தை கட்டமைத்துள்ளனர். போதாத குறைக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வேறு வழங்கி கவுரவித்திருக்கிறார்கள்.

இந்த போலி பிம்பங்களை புறந்தள்ளிவிட்டு தலாய் லாமாக்களின் உண்மை சொரூபத்தை ஆராய்ந்தால், வரலாற்றின் பக்கமெங்கும் ரத்த வாடை தான் அடிக்கிறது. மனிதர்களை அடிமைகளாக அல்ல, அதைவிடவும் மிக கீழ்த்தரமாக நடத்திய வரலாற்று உண்மைகளை அறியும்போது, நெஞ்சம் பதறுகிறது. தலாய் லாமாவின் வரலாற்று தடமெங்கும் அடிமைகளின் ரத்தச் சுவடுகள். மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், அவர்கள் நடத்திய ஆட்சியின் பெயரால் 95 சதவீத மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளானதை உண்மை வரலாறு நமக்கு புரிய வைக்கிறது.

 

14 ஆவது தலாய் லாமா

இந்த 14 ஆவது தலாய் லாமாவின் இயற்பெயர் லாமோ தோண்டப் (Lhamo Thondup). இவர் மிகப்பெரிய நிலவுடைமை செல்வந்த  குடும்பத்தில் 1935, ஜூலை 6 அன்று பிறந்தார். அவர் 14 ஆவது தலாய் லாமாவாக பதவியேற்ற பிறகு டென்சின் கியாட்சோ (Tenzin Gyatso) என திபெத் மரபு படி அவருக்கு மற்றொரு பெயர் சூட்டப்பட்டது.

 

1959 ஆம் ஆண்டு சீனாவில் முன்னெடுக்கப்பட்ட சீர்திருத்தத்தால் தனது நிலவுடைமை மற்றும் மத ஆதிக்கம் சரிவதை ஏற்றுக்கொள்ளாமல் இந்தியாவில் உள்ள தர்மசாலாவில் தஞ்சம் புகுந்தார்.இவர் எவ்வளவு நிலம் மற்றும் சொத்துகளுக்கு அதிபதியாக இருந்தார் எவ்வளவு அடிமைகளை வைத்திருந்தார் என இக்கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

அடிமைகளும்-பண்ணை அடிமைகளும்

1959 ஆம் ஆண்டு சீனமக்கள் குடியரசால் திபெத்தில் சீர்திருத்தங்கள் துவங்குவதற்கு முன் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அது நிலப்பிரபுத்துவ அடிமை சமுதாயமாக இருந்தது. இந்த சமூகத்தை மத நிர்வாக நிலப்பிரபுத்துவம் ஆட்சி செய்தது. திபெத்திய பௌத்தத்தின் கெலுக் பிரிவின் தலைவராக 14 ஆவது தலாய்லாமா இருந்தார். இவர்தான் திபெத்தின் உள்ளூர் அரசாங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். ஒரே நேரத்தில் அரசியல் மற்றும் மத அதிகாரத்தை வைத்திருந்தார். அதாவது கடவுளாகவும், ராஜாவாகவும் இருந்தார். நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தின் முக்கிய பிரதிநிதி இவர் தான்.

திபெத்தில் நிலப்பிரபுத்துவம் என்ற ஆளும் வர்க்கமும், அடிமைகள், பண்ணை அடிமைகள் என்ற உழைப்பாளி வர்க்கமும் இருந்தன. வர்க்கங்கள் என்ற அடிப்படையில் ஒரு நிலப்பிரபுத்துவ சமூகத்தில் பண்ணை அடிமைத்தனம் மேலோங்கி இருந்தது. உயர் அடுக்கில் இருந்த நிலப்பிரபுத்துவம் மூன்று வகைகளில் செயல்பட்டது.

ஒன்று – உள்ளூர் நிர்வாக அதிகாரிகள்,

இரண்டாவது – நிலப்பிரபுக்களும் அவர்களின் முகவர்களும்,

மூன்றாவதாக – திபெத்திய பௌத்த மடங்களின் உயர் பதவியில் இருந்த லாமாக்களும், அவர்களின் முகவர்களும் ஆளும் வர்க்கமாக இருந்தார்கள்.

மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 5 சதவீதம் மட்டுமே. இந்த 5 சதவீதத்திலும் இரண்டு சதவீதம் பேர் உயர் அடுக்குகளிலும், மூன்று சதவீதம் பேர் நிலப்பிரபுக்கள், மடாதிபதிகளின் முகவர்கள், மேற்பார்வையாளர்கள், தனியார் படைகளின் மேலாளர்கள் என்ற அடிப்படையில் இருந்தனர். இவர்கள்தான் 95 சதவீதம் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

 

திபெத்திய சமூக பொருளாதார அமைப்பு நிலப்பிரபுத்துவ மற்றும் மத அதிகார முறைகளின் கலவையாக இருந்தது. எனவே தான் மத நிர்வாக நிலப்பிரபுத்துவம் என்று இதை அழைத்தார்கள். அடிமைகளும், பண்ணை அடிமைகளும் அடிப்படையில் சுதந்திரமற்ற உழைப்பாளிகளாகவே இருந்தனர். இருப்பினும் சட்டபூர்வ தன்மையில் மெல்லிய வேறுபாடுகள் உண்டு. ஒரு அடிமை, அடிமை உடைமையாளரின் சொத்தாக, கால்நடை போன்ற ஒரு பொருளாக, பாவிக்கப்படுவார். அந்த அடிமையின் உடல், உயிர், உழைப்பு, அவர்களின் குழந்தைகள் ஆகியவற்றின் முழுமையான அதிகாரம் அடிமை உடமையாளருக்கு இருக்கும். அடிமைகளை வாங்கவும், விற்கவும், பரிமாறிக் கொள்ளவும் உடமையாளருக்கு உரிமையுண்டு.

பண்ணை அடிமை என்பது ஒரு சொத்து போன்றது அல்ல. வரையறுக்கப்பட்ட சில சட்ட உரிமைகள் உள்ளவர்கள். அடிமைகளை வேறு பணிகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால் பண்ணை அடிமைகள் நிலத்தோடு பிணைக்கப்பட்டிருப்பார்கள். ( நிலப்பிரபுத்துவ மற்றும் பாரம்பரிய வழக்கத்தால் ஒரு குறிப்பிட்ட நிலத்துடன் பிணைக்கப்பட்டவர்). பண்ணை அடிமையின் நிலை நிலத்துடன் தொடர்புடையது. நிலம் விற்கப்பட்டாலோ அல்லது பரம்பரையாக மாற்றப்பட்டாலோ பண்ணை அடிமைகளும் அதனுடனேயே பிணைக்கப்பட்டு இருப்பார்கள். அவர்களை நிலத்திலிருந்து தனியாக பிரிக்க முடியாது. அடிமைகளுக்கு பொதுவாக எதுவும் சொந்தமில்லை. அவர்கள் உற்பத்தி செய்வது அனைத்தும் எஜமானருக்கே சொந்தம். அவர்களுக்கு உயிருடன் இருக்க உணவு மற்றும் தங்குமிடம் மட்டுமே வழங்கப்பட்டது.

பண்ணை அடிமைகள் நிலப்பிரபுக்களின் நிலத்தில் வேலைகள் செய்வதற்கும், நிலபிரபுக்களுக்கு வாடகையை பொருளாகவோ, பயிர் அல்லது கால்நடைகள் போன்றவைகளாகவோ, பணமாகவோ செலுத்துவதற்கு கடமைப்பட்டவர்கள். அடிமைகளுக்கு சட்டபூர்வ குடும்ப உரிமைகள் இல்லை. திருமணங்கள் செய்தாலும் அது பெரும்பாலும் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படுவதில்லை. திருமணமானவர்களை விற்பனை செய்கிற போது அந்தக் குடும்பங்கள் பிரிந்துவிடும்”.

பண்ணை அடிமைகளுக்கு திருமணம் செய்து குடும்பம் அமைக்க பெயரளவில் உரிமை இருந்தது. இதற்கு நிலப்பிரபுவின் அனுமதி தேவை. மேற்கண்ட பொதுவான தன்மைகளுடன் திபெத்திய நிலப்பிரபுத்துவத்தில் மேலும் பல கட்டுப்பாடுகள் நிறைந்ததாக அடிமை முறை இருந்தது. ஐரோப்பாவை விட அதிகமான அடக்குமுறைகளை, சுரண்டல்களை திபெத்திய அடிமைகள் எதிர்கொண்டனர். ஐரோப்பாவில் மடாலயங்கள் தனியாக இருந்தன. அவற்றிற்கு சொத்துக்களும் இருந்தன. ஆனால், அரசு அதிகாரத்தில் நேரடியாக இல்லை. திபெத்தில் மதத்தின் தலைவர் கையெழுத்து போட்டால் மட்டும் தான் சட்டங்கள் செல்லும். திபெத்தில் அடிமைகள் இருந்தார்கள். ஆனால் பண்ணை அடிமைமுறை உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்தது. இவை தவிர நாங்சான் என்று அழைக்ககூடிய வீட்டு வேலைகள் செய்யக்கூடிய அடிமைகள் இருந்தார்கள். இவர்களுக்கு எந்த விதமான பொருளும் சொந்தமில்லை. சுதந்திரம் இல்லாதவர்கள். திபெத்தில் இவர்களை நிலப்பிரபுக்கள் “பேசும் மிருகங்கள்” என்று அழைத்தார்கள்.

மக்கள் பிரிந்து கிடப்பது ஆளும் வர்க்கத்திற்கு அத்தியாவசிய தேவை அல்லவா? திபெத்தில் இந்த அடிமைகளை மேலும் ஒன்பது துணைப்பிரிவுகளாக பிரித்து வைத்தனர். இவர்களிடையே ராக்யபா என்று அழைக்கப்படும் தீண்டத்தகாதவர்களின் ஒரு சாதியும் இருந்தது. சுருக்கமாகச் சொன்னால் 300 உன்னத நிலப்பிரபுத்துவ, மடாதிபதிகளின் குடும்பங்கள் தவிர திபெத்தில் உள்ள அனைத்து சாதாரண மனிதர்களும், பெண்களும், எஜமானருக்கு அடிமைகளாக இருந்தார்கள் என்று திபெத்தை பற்றிய நீண்ட ஆய்வுகள் செய்த மெல்வின் கோல்ட் ஸ்டைன் எழுதியுள்ளார்.

நடுத்தர வர்க்கம் நடைமுறையில் அங்கு இல்லை. சிறு வணிகர்களும், கைவினைஞர்களும், தங்களது எஜமானர்களுக்காக வேலை செய்தார்கள். அதே நேரத்தில் கைவினை தொழிலில் ஈடுபடவும், வர்த்தகம் செய்வதற்காகவும் தங்களது எஜமான நிலப்பிரபுக்களுக்கு வரி செலுத்திய அடிமைகளாகவே இவர்கள் இருந்தார்கள். அதிலும் வெளிநாட்டு வர்த்தகங்களை உயர் குடும்பங்களில் இருந்த லாமாக்களே செய்து வந்தார்கள். நிலப்பிரபுத்துவ மற்றும் மடாதிபதிகளின் உயர் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் பௌத்த மடாலயங்களுக்குள் சொந்தமாக வீடுகளை வைத்திருப்பது மட்டுமல்ல அவர்களே மடாலய தலைவர்களாகவும் உருவானார்கள்.

அங்கிருந்த அடிமைகளோ தங்களுக்கு பிறக்கும் பிள்ளைகளை மடாலயங்களில் கொடுத்து விடுவார்கள். மடாலயத்தில் இந்த அடிமைகள் இலவச பணியில் ஈடுபடுவார்கள். அவர்கள் அனைவரும் துளிகளாக அதாவது “அடிமைத் துறவிகளாக” இருந்தனர். இதனால்  துறவிகளுக்குள்ளும் சமத்துவம் இல்லை அடிமை துறவிகள் மற்றும் உடமையாளர் துறவிகள் என்ற இரு வர்க்கம் அங்கேயும் நீடித்தது.

சமூகத்தை ஏற்றத் தாழ்வான பிரிவாக வைத்துக்கொள்வதற்கு பௌத்தத்தின் போதனைகளை பயன்படுத்திக் கொண்டார்கள். ஏற்றத்தாழ்வுகளை மத ரீதியாக நியாயப்படுத்தினார்கள். பௌத்தத்தில் சொல்லப்பட்டிருக்கக் கூடிய கருமவிதி என்ற கோட்பாட்டை பயன்படுத்தினர்.“எல்லா உயிரினங்களுக்கும் செயல்கள் (கர்மா) சொந்தமாக, அவற்றின் பரம்பரையாக, அவற்றின் பிற விகாரணமாக, அவற்றின் உறவினர்களாக, அவற்றின் அடைக்கலமாக உள்ளன. கர்மாதான் உயிரினங்களை தாழ்ந்த மற்றும் உயர்ந்த நிலைகளாக வேறுபடுத்துகிறது.” பண்ணை அடிமைகளாக இருப்பதற்கு கர்மா தான் காரணம் என்பதை பிரச்சாரம் செய்தார்கள். பௌத்தம் உயிர்க்கொல்லாமையை போதித்தால், அடிமைகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு அவர்களின் உடல் உறுப்புகளை வெட்டி எடுத்தார்கள். மரணதண்டனைகளும் 1913ம் ஆண்டு வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.

வரம்பற்ற பொருளாதார சுரண்டல்

முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறைகளில் உழைப்பாளி மக்களிடம் செய்யக்கூடிய சுரண்டல் வெளிப்படையாக தெரியாது. ஆனால்,நிலப்பிரபுத்துவ பொருள் உற்பத்தி முறையில் சுரண்டல் வெளிப்படையாக தெரியக்கூடியது என்று காரல் மார்க்ஸ் மூலதனத்தில் எழுதினார்.

இதுதான் திபெத்தில் பண்ணை அடிமை முறையில் நடந்த அதீத சுரண்டலாகும். திபெத்தில் விவசாயம் மற்றும் கால்நடைகள் மேய்த்தல் முக்கிய தொழிலாகும். திபெத்தில் இருந்த அனைத்து நிலங்களும், பெரும்பாலான கால்நடைகளும் நிலப்பிரபுகளுக்கும், மதத் தலைவர்களுக்கும் சொந்தமானது. 1959 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு 24.3 சதவீத நிலம் நேரடியாக நிலப்பிரபுக்களுக்கு சொந்தமாக இருந்தது.36.8 சதவீதம் மடாலயங்களுக்கு சொந்தமாக இருந்தது. மீதமுள்ள 38.9 சதவீத நிலம் திபெத்திய உள்ளூர் அரசாங்கத்தின் கைகளில் இருந்தது. உற்பத்தி கருவிகளை ஆளும் வர்க்கம் தனது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக வைத்திருந்தது.

 

தற்போது இந்தியாவில் தங்கி இருக்கக் கூடியவர் 14 ஆவது தலாய்லாமா. 1959 ஆம் ஆண்டுக்கு முன்பு அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் இருந்த சொத்துக்களை அறிந்தால் அவர் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் பெரும் பிரதிநிதி என்பதை எளிதாக புரிந்துகொள்ள முடியும். 14 ஆவது தலாய்லாமாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் 27 மேனர்கள், அதாவது பாரம்பரிய வீடுகளை உள்ளடக்கிய, மிகப்பெரும் விவசாய நிலங்களைக் கொண்ட பண்ணைகளை தனக்கு சொந்தமாக வைத்திருந்தார். 30க்கும் மேற்பட்ட மேய்ச்சல் நிலங்கள் தலாய்லாமாவிற்கும் அவருடைய குடும்பத்திற்கும் சொந்தமாக இருந்தது. இந்த நிலங்களில் வேலை செய்ய 6000 க்கும் மேற்பட்ட அடிமைகள் இருந்தனர். (நிலத்தோடு பிணைக்கப்பட்டு இருந்த பண்ணை அடிமைகளும் அடக்கம்). இந்த நிலத்திலிருந்தும், மேய்ச்சல் நிலங்களில் இருந்தும், கால்நடைகளில் இருந்தும் இவருக்கு கிடைத்த வருமானத்தை பார்த்தோம் என்றால் சுரண்டலின் உச்சத்தை பளிச்சென்று தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு ஆண்டும் 33,000 “கே” கிங்க் கே ஹைலேண்ட் பார்லி கிடைத்தது. ஒரு கே என்பது 14 கிலோவிற்கு சமமானது. ஆண்டுக்கு 462 டன் ஆகும். கிங்க்கே ஹைலேண்ட் பார்லி மலைப்பிரதேசங்களில் விளையக்கூடிய உயர்தர பார்லி.இது உள்ளூர் முக்கிய உணவாக மட்டும் இருக்கவில்லை பீர் உட்பட மதுபானம் தயாரிப்பதற்காக அதிகம் பயன்படக்கூடிய தானியமாகும். இதைத் தவிர 2500 கே அதாவது 35 டன் வெண்ணெய். 300க்கும் மேற்பட்ட செழிப்பான பசுக்களும், பல நூறு செம்மறி ஆடுகளும், பிற விவசாயத்திற்கு பயன்படக்கூடிய கால்நடை மந்தைகளுக்கும் உடமையாளராக இருந்தார்.

மிக விலை உயர்ந்த பாரம்பரிய புலு கம்பளி துணிகள் 175 பண்டல்களையும், இரண்டு மில்லியன்களுக்கு அதிகமான அளவு வெள்ளி பொருட்கள், தலாய்லாமாவின் குடும்பத்தினர் சொந்தமாக வைத்திருந்தனர். 14 ஆவது தலாய்லாமா 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பட்டுத்துண்டுகள், ரத்தினங்களாலும் உயர்தர கற்களாலும் உருவாக்கப்பட்ட உயர்தர பர் ஆடைகளையும், நூற்றுக்கு மேற்பட்ட கடிகாரங்களையும் தனிப்பட்ட முறையில் தனக்கு சொந்தமாக வைத்திருந்தார்.

1959 ஆம் ஆண்டு சீர்திருத்தம் துவங்கிய காலகட்டத்தில் கைகளால் செய்யப்பட்ட 1,60,000 தங்கக் கட்டிகளும், வெள்ளிக்கட்டிகளும் வைத்திருந்தார். 20,000க்கும் மேற்பட்ட தங்க நகைகளும் வைத்திருந்தார். இவை அனைத்தும் தங்களிடம் இருந்த அடிமைகள், பண்ணை அடிமைகள் மூலமாக விவசாயத்திலும், கால்நடைகள் மூலமாகவும் சுரண்டி சேகரித்த செல்வங்களாகும். 14ஆவது தலாய்லாமா மதத் தலைவராக, உள்ளுர் அரசு தலைவராக மட்டும் இருக்கவில்லை, மிகப்பெரிய அடிமை உடமையாளராகவும் இருந்தார்.

திபெத்தில் ஐந்து சதவீதம் மக்கள் தொகையை மட்டுமே கொண்ட மத தலைவர்களும் நிலப்பிரபுகளும் உற்பத்தி கருவிகளின் பெரும் பகுதியை வைத்திருந்தனர். திபெத்திய பௌத்த மடங்களும், நிலங்களையும், அடிமைகளையும் சொந்தமாக வைத்திருந்தனர். திபெத்திய தலைநகரம் லாசாவில் மிகவும் புகழ்பெற்ற மிகப்பெரிய மடங்களான சேரா, காண்டெயின், ஜைபாங் ஆகிய மூன்று பெரிய மடங்கள் உள்ளன. இந்த மடங்களுக்கு மட்டும் 1,47,000 கியூ என்று சொல்லக் கூடிய பத்தாயிரம் ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலமும்,26 இடங்களில் மேய்ச்சல் நிலங்களும் இருந்தன. சுமார் 40,000 அடிமைகளையும், பண்ணை அடிமைகளையும் வைத்திருந்தார்கள்.

ஐரோப்பிய அடிமை முறைகளை விட மிகக் கொடூரமான முறையில் பல காலங்களில் திபெத்திய அடிமை முறைகள் இருந்தது என்று பல வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளார்கள். 1959 வரை 14 ஆவது தலாய்லாமா இந்த வர்க்கத்தின் தலைவராக இருந்து தான் மக்களை மதம் என்ற போர்வையில் ஆட்சி செய்து கொண்டிருந்தார். 1959 ஆம் ஆண்டு அவர் இந்தியாவிற்கு தஞ்சம் புகுந்த காலம் வரை அவர் லாசாவில் 13 மாடிகள், 1000 க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட பொட்டாலா அரண்மனையில் தான் குடியிருந்தார். அந்த சொர்க்க புரியில் தான் தலாய்லாமா உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்.

கி.பி. 1649 இல் இந்த அரண்மனை திறக்கப்பட்ட காலத்தில் இருந்து, தலாய் லாமாக்களின் குளிர்கால அரண்மனையாக இருந்தது. அடிமை உரிமையாளர் வகுப்பைச் சேர்ந்த தற்போதைய தலாய்லாமா வளர்க்கப்பட்ட இடமும் இந்த அரண்மனைதான். 1959 இல் நடந்த சீனப்புரட்சியால் அவர், தனது சொர்க்கத்தை இழந்தார்.

 

அ.பாக்கியம்

வியாழன், ஜூலை 10, 2025

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம் - 5

 


இந்துத்துவா- சியோனிஸ்டுகள் இணையும் புள்ளி

இந்தியாவில் பாஜகவின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள் ஆர்எஸ்எஸ் இன் நவபாசிச கூறுகளை அம்பலப்படுத்த கூடியவர்களை இந்து விரோதிகள் என்று பிரச்சாரம் செய்வது மட்டுமல்ல, வேட்டையாடுவதும் நடக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெய்வங்களை கையில் எடுத்துக் கொண்டு அந்தந்த ஊரில் இருக்கக்கூடிய மதசார்பற்ற ஜனநாயக சக்திகளை இந்து விரோதிகள் என்று சித்தரித்து, தங்களது இந்துத்துவா கொள்கைகளை நிலை நிறுத்திக் கொள்கிறார்கள். இதேபோன்றுதான் இஸ்ரேலின் சியோனிஸ்டுகள் தங்களது சியோனிச கொள்கைகளை பாதுகாக்க அவர்களை விமர்சிப்பவர்களை யூதவிரோதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள்.

மிகக் கொடுமையான விஷயம் ஒன்று அரங்கேறி இருந்தது. மே மாதம் 2024 இல். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதன்யாகு மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டிற்கு கைது வாரண்ட்களை பிறப்பித்தது. அவ்வாறு பிறப்பித்த நீதிபதியை முன்னாள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞராக இருந்த ஒருவர் நவீன காலத்தில் மிகப்பெரிய யூத எதிர்ப்பாளர்களில் ஒருவர் என்று அந்த நீதிபதியை சைபாடினார். உலகம் முழுவதும் பொங்கி எழும் யூதவிரோத நெருப்பில் இரக்கமின்றி பெட்ரோல் ஊற்றுகிறார் என்றும் யூதர்களுக்கு எதிரான நாஜிகளின் இனச் சட்டங்களை அங்கீகரித்த ஜெர்மன் நீதிபதிகளுடன் அவரை ஒப்பிட்டு அவதூறு செய்தார். இஸ்ரேலின் பிரதமர் நெதயான்கு இஸ்ரேலிய கொள்கைகளை எந்த மேற்கத்திய தலைவர் விமர்சித்தாலும் அவர்களை யூத விரோதிகள் என்றும் இழிவானவர்கள் என்றும் சாடினார்.

காசா மக்களை இனப்படுகொலை செய்த பொழுது நெதயான்கு இனப்படுகொலையாளர் என்று விமர்சித்தவர்களுக்கு  நாங்கள் யூதர்களாக இருக்கிறோம் என்ற எளிய உண்மையின் காரணமாக எங்கள் மீது இத்தகைய குற்றச்சாட்டு என்றுநெதயான்கு திசைதிருப்பினார். இஸ்ரேலுக்கு எதிரான ஒவ்வொரு விமர்சனமும் யூத எதிர்ப்பு அல்ல, நீங்கள் அதை யூத எதிர்ப்பு வெறுப்பு என்று சொல்லும் தருணம் விமர்சனத்தின் நியாயத்தன்மைகளை நீக்கிவிட்டு மற்றவர்களை நசுக்குவதற்காக முயற்சிக்கிறீர்கள் என்று இஸ்ரேலிய வரலாற்று ஆசிரியர் டாம் செகவ் குற்றம் சாட்டுகிறார். அது மட்டும் அல்ல நெதயான்கு நீண்ட காலமாக யூத நெருக்கடிகளை தனது அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தி வருகிறார் என்று விமர்சிக்கிறார்.

புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் ஜெர்மி போவன் , பிரிட்டிஷ் நாட்டின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி லார்ட் சம்பசன் கூறியதை விளக்கியுள்ளார். இஸ்ரேலிய அதிபர் நெதயான்கு மற்றும் அவரது அமைச்சரவை பாலஸ்தீனத்தில் இருந்து அரபுமக்களை கொலை செய்வது மூலமாகவும், பட்டினி போடுவது மூலமாகவும் 100 சதவீதம் அப்புறப்படுத்துவது. மேலும் ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா மசூதியை இடித்து விட்டு யூதர்களின் மூன்றாவது புனித கோவிலை கட்டுவது என்ற திட்டமும் வைத்திருக்கிறார்கள் என கூறுகிறார். யூதர்களின் புனித கோவில் பொஆமு 10  மற்றும் 6ம்  நூற்றாண்டு களுக்கு இடையில் சாலமன் கோயில் என்ற பெயரில் இருந்ததாக எபிரேய மொழியிலான பைபிளில் கதைகளில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரம் இல்லை. இரண்டாவதாக பொஆமு 516-ல் கோயில் கட்டப்பட்டது. இது யூதர்களின் இரண்டாவது கோயில் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் ஏரோது மன்னனால் மேம்படுத்தப்பட்டது. பொஆ 70களில் போரினால் இந்த கோயில் சிதளம் அடைந்தது. தற்போது அல் அக்சா என்ற மசூதி இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித ஸ்தலம். 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அவற்றை இடித்துவிட்டு மூன்றாவது யூத கோயிலை கட்ட வேண்டும் என்ற திட்டம் தொடர்ந்து மேற்காசிய நாடுகளை பதட்டத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது. மசூதி இடிப்பு இந்துத்துவா வாதிகளுக்கும் சியோனிஸ்டிகளுக்கும் ஒத்த நிலைப்பா டாக இருக்கிறது.

ஐரோப்பிய உலகம்தான் ஹிட்லர் காலத்திலும், அதற்கு முன்பும்- பின்பும் யூதர்களுக்கு எதிரான கொடுமைகளை செய்தது. எந்த விதத்திலும் பாலஸ்தீனர்களும், அரேபியர்களும் அதை செய்யவில்லை. ஆனால் இஸ்ரேலிய தேசம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்த பொழுது ஐரோப்பாவில் ஒரு அங்குல இடத்தை கூட பரிந்துரைக்க மறுத்தது ஐரோப்பிய வலதுசாரி தலைமை.

மக்களின் எதிர்ப்பும் மகுடங்களின் தள்ளாட்டமும்

ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் இஸ்ரேலை எதிர்த்து பிரம்மாண்டமான மக்கள் இயக்கங்கள் உருவாகி வருகிறது. நடந்து கொண்டு இருக்கிறது. அமெரிக்காவின் 18க்கு மேற்பட்ட தலைநகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். இத்தாலியில் நவபாசிச மெலோனிஅரசாங்கத்தின் இஸ்ரேல் சார்பு நிலைப்பாட்டை எதிர்த்து மூன்று லட்சம் மக்கள் ஜூன் மாதம் ரோம் நகரில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு மெலோனி அரசு இஸ்ரேல் காசாவில் தன்னுடைய ராணுவ நடவடிக்கை நிறுத்தி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஆனாலும் மக்கள் இந்த நடிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையான எதிர்ப்புக்கு வரவேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ் அரசின் லண்டன் மாநகரில் பல போராட்டங்களை காண முடிகிறது. பிரிட்டிஷ் அரசின் வெளியுறவு அலுவலகத்தில் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காசாவின் மோதலில் அரசாங்கத்தின் அணுகுமுறையை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் புறக்கணித்து வருவதை அவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், உலகளாவிய விதிமுறைகளை இஸ்ரேல் குழி தோண்டி புதைத்து வருகிறது என்றும் கூறுகிறார்கள். சின்னஞ்சிறிய நெதர்லாந்து நாட்டின் தலைநகரங்களில் மனித தலைகளால் மூடுகிற அளவிற்கு மக்கள் திரண்டு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதை வாபஸ் வாங்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டங்கள் ஐரோப்பிய தலைவர்கள் மத்தியில் ஆட்டம் காண செய்துள்ளது

மே மாதம் 19 ஆம் தேதி மக்கள் எழுச்சியின் காரணமாக பிரிட்டன், பிரான்ஸ், கனடா ஆகிய மூன்று நாடுகளும் இஸ்ரேலின் மிக மோசமான செயல்களை கண்டித்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டார்கள். இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை சகிக்க முடியாது என்று அவர்கள் விவரித்தார்கள். இது நீடித்தால் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று வீராவேசத்துடன் மக்களுக்கு பயந்து அறிக்கை விட்டனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் துணைத் தலைவரும் காசாவில் இஸ்ரேல் செய்வது பேரழிவு என்றும் தங்கள் ஒப்பந்தத்தை ரத்துசெய்வது பற்றி  பரிசீலனை செய்து வருவதாகவும் அறிக்கை விட்டார். ஒப்பந்தங்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை இஸ்ரேலின் ஆராய்ச்சி துறை, தொடர்பாகவும் கல்வித்துறை தொடர்பாகவும் இருக்கக்கூடிய ஒப்பந்தங்கள் ரத்து செய்வோம் என்றார்கள். மக்களின் எழுச்சியால் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான ஸ்பெயின், அயர்லாந்து பாலஸ்தீன அரசு அங்கீகரித்தன. ஏற்கனவே நார்வே பாலஸ்தீனத்தை அங்கீகரித்து உள்ளது. வேறு வழி இல்லாமல் ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் பொது தொலைக்காட்சியில் காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தின் குறிக்கோள் என்னவென்று எனக்குப் புரியவில்லை என்ளும்  மாஸ் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்று இதை  நியாயப்படுத்த முடியாது என அறிக்கை விட்டார். உள்நாட்டில் மக்களின் எழுச்சி அலைகளை அதிகரித்து வந்ததால் பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மூன்று நாடுகளும் ஜூன் 10ம் தேதி இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அமைச்சர்கள் இடாமர் பென்-க்விர் மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் பாலஸ்தீனுக்கு எதிரான வன்முறை, பாலஸ்தீன உரிமைகளை துஷ்பிரயோகம் செய்தல், குடியேறிகளின் வன்முறையை தூண்டுதல், யூத குடியேற்றங்களை விரிவுபடுத்தல் ஆகியவற்றை மீண்டும் மீண்டும் செய்ததால் அவர்கள் மீது தடை விதித்ததாக அறிவித்தன.

நிறைவாக.....

போரைப் போல் பெரிய லாபகரமான தொழில் மற்றொன்று மில்லை. அதன் கிளர்ச்சிகளை பரப்பும் ஊடகங்களுக்கு அமைதி கவர்ச்சியாக தெரிவதில்லை. அமைதி என்று எழுந்து நிற்கும் என்ற ஏக்கம் உலகத்தின் ஏக்கமாக மாறிக் கொண்டிருக்கிறது.

போரின் லாபகரமான தொழிலுக்கு புனித இடங்கள் எல்லாம் ரத்தக் களரியாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் சரி வேறு சில இடங்களிலும் இந்த நிகழ்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ராஜ்யத்தை துறந்து காட்டுக்குச் சென்ற ராமனுக்கு இடம் வேண்டுமென்று ஒரு பெரும் போரையும், லட்சக்கணக்கான மக்களின் உயிர்களையும், ரத்தங்களையும் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெருசலேம் என்றால் அமைதியான நகரம் என்று பொருள். இந்த நகரம் 1000 ஆண்டுகளாக அமைதியை கண்டதே இல்லை. 1096  ஆண்டு அப்போதைய  போப் இரண்டாம் அர்பன் புனித போருக்கு அழைப்பு விடுத்தார். போரில் என்ன புனிதம் இருக்கிறது என்று கேட்காதீர்கள். கிறிஸ்துவின் புனித நகரம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவற்றை மீட்க வேண்டும் என்று சிலுவைபடையினருக்கு அறைகூவல் விடுத்தார். ஜெருசலேமை நோக்கி குருசேடர்கள்(சிலுவைபடை) புறப்பட்டார்கள். ஜெருசலேமில் இருந்த யூதர்களையும், இஸ்லாமியர்களையும் ரத்த வெள்ளத்தில் போப் அனுப்பி வைத்த குருசேடர்கள் (சிலுவைபடை) மூழ்கடித்தார்கள். இங்கிருந்த யூதர்களையும் முஸ்லிம்களையும் ஒழித்துக் கட்டினார்கள்.

ஜெருசலேமில் இருக்கும் மலையின் மீது முஸ்லிம்களுக்கு எல் குட்ஸ் ன்ற புனித இடம், யூதர்களுக்கு அவர்களின் அரசன் தாவீது காலத்திலிருந்து இந்தமலை தலைநகரம். கிறிஸ்தவர்களுக்கு இயேசுபிரான் சிலுவை ஏறிய மலை இது. இவற்றை யாருக்கென்று பகிர்ந்து கொடுப்பது. பகிர்ந்து கொள்வதற்காக ஆயிரம் ஆண்டுகளாக எருசலேம் கண்ணீராலும் இரத்தத்தாலும் மிதந்து கொண்டு இருக்கிறது.ஆயிரக்கணக்கான நவீனரக ஆயுதம் தாங்கிய வீரர்களுக்கு மத்தியில் அமைதியை போதிக்க வந்தவர்கள்  உயிரும் உடலும் அற்றவர்களாக சிறைபட்டுக் கிடக்கிறார்கள்.

மோதிக் கொண்டிருப்பவர்கள் யார்? ஒரே பகுதியை சேர்ந்த மக்கள். யூதர்களின் புனித நூல் டோராவின் கதையும், பைபிளின் கதையும், குர்ஆனின் கதையும் ஒன்றாகத்தான் பயணித்திருக்கிறது. மூன்றும் மோசஸ் ஆபிரகாம் கதைகளை தான் சொல்கிறது. மோசஸ் மூசாவாகவும், டேவிட் தாவுத்தாகவும், சாலமன் சுலைமானாகவும், ஐசக் இஷாகாகவும் ஜேக்கப் யாக்கூப்பாகவும் மாறி இருக்கிறார்கள். விரிந்து பறந்த பாலஸ்தீனப் பகுதியில் ஒரு மக்களிடம் இருந்து தோன்றிய இந்த மதங்கள் நவீன உலகத்தில் ரவேட்டை ஆடக்கூடிய ஏகாதிபத்திய கொள்கைகளின் இரத்தம் படிந்த கைக்ளில் சிக்கிகொண்டுள்ளது.

யூதர்கள் நாஜிகளால் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பது உலகறிந்த வரலாறு. கொடுமைக்கு பலியான இனம் எழுந்து வலுவாக நிற்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த எழுச்சி மீண்டும் அப்படி ஒரு கொடுமையை எந்த இனத்திற்கும் ஏற்படக் கூடாது என்பதற்கான எழுச்சியாக இருந்தால் அது மனித சமூகத்திற்கும்  அவர்களது மதம் போதிக்கும் சமாதானத்திற்கு உதவி செய்வதாக இருக்கும். இனப்பகையின் நெருப்பில் வெந்துமடிந்த யூத மக்கள் மற்றொரு இனத்தை அதே வடிவத்தில் அழித்தொழிப்பது எழுச்சியின் அடையாளமாகாது அழிவுக்கு போடக்கூடிய அடித்தள மாகும்.

பாலஸ்தீன மண் என்றாவது ஒரு நாள் மனிதர்களுக்கு கிடைக்க வேண்டும்.

அ. பாக்கியம்

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம் - 4

 


வதை முகாமிலிருந்து மரண முகாமிற்கு

பாலஸ்தீனத்தின் காசாமீது இஸ்ரேல் போர் தொடங்கி ஒரு வருடம் எட்டு மாதங்கள் முடிந்து விட்டது. சுமார் 55,000பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களின் வீடுகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட சமன்படுத்தப்பட்டு விட்டது. மோதல் துவங்கி முதல் ஐந்து மாதத்தில் 12,300 குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். இது உலகில் எந்தப் போர்களிலும் குறுகிய காலத்தில் இவ்வளவு குழந்தைகள் சாகடிக்கப்பட்டது இல்லை. 2025 ஜனவரி மாதம் காசாவில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 14,500 மேலும் 17000 குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டார்கள். குறைவான மக்கள் தொகை இருந்தாலும் உலகிலேயே அதிக மாற்றுத்திறனாளிகள் உள்ள பகுதியாக தற்போது காசா பகுதி மாறியுள்ளது. 2007 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் காசாவை முழுமையாக முற்றுகையிட்டு இருந்தது. தரைவழி, வான்வழி, கடல்வழி அனைத்தும் அடைக்கப்பட்டு திறந்தவெளி சிறைச்சாலையாக காசாக இருந்தது. 2023 ஆம் ஆண்டு இஸ்ரேல் துவங்கிய யுத்தத்தின் மூலமாக காசா ஒரு மரண முகமாக மாறி உள்ளது.

இவ்வளவு சிறிய முற்றுகையிடப்பட்ட பகுதியில் இவ்வளவு நீண்ட காலமாக ( காசாவில்) சிக்கித் தவிக்கும் மக்களை நான் பார்த்ததில்லை. கண்முடித்தனமான குண்டு வெடிப்புகளும், அவர்களுக்கு மறுக்கப்படுகிற சுகாதாரமும், பத்திரிகைகளை நடத்த விடாமல் தடுக்கக்கூடிய முறைகளும் மிகக் கொடூரமானது என்று மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் ஜான் எக்லான்ட் குறிப்பிட்டுள்ளார். காசாவின் உள்கட்டமைப்பு, சுகாதார அமைப்பு, நகராட்சி அமைப்புகள், கல்வி நிலைய வலை அமைப்புகள், மசூதிகள், தேவாலயங்கள், சுருக்கமாக மனித வாழ்க்கையை ஒழுங்கமைத்த ஒவ்வொரு கட்டமைப்பையும் அழிப்பதில் இஸ்ரேல் வெற்றி பெற்றுள்ளது என்று அரசியல் ஆர்வலர், பத்திரிக்கையாளர் அபெத் அபு சாதே குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் ஓர் இயந்திரம் காசாவையும் அதன் மக்களையும் தூசியாக அரைத்து அழித்து வருகிறது. உலகம் பார்வையாளராகவே காட்சி தருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இரட்டை நிலை

2025 ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த பொழுது, ஹமாசை முற்றிலும் அகற்றுவதுடன் இணைத்து அறைகூவல் விடுத்தது. இதன் மூலம் இஸ்ரேல் அந்தப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை ஆதரித்தது. ஜெர்மனியும், நெதர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் இல்லாத இங்கிலாந்தும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் தொடுத்த பொழுது, அனைத்து சர்வதேச சட்டங்களையும் மீறியதாகவும், ரஷ்யாவுக்கு எதிரான மிகப்பெரும் பொருளாதார தடைகளை விதித்த ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா பற்றிய எந்த செய்தியையும் ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பினராக இருக்கக்கூடிய நாடுகளில் ஒளிபரப்ப கூடாது என்று தடைவிதித்தும், மிகப்பெரிய ஆக்கிரமிப்பாளனாக சித்தரித்தார்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று ஈரானின் ஆதரவுடன் ஹமாஸ் இஸ்ரேலை அழிக்கத் துடிப்பது போல் ரஷ்யா உக்ரைனை வரைபடத்தில் இருந்து அழிக்க விரும்புவதாக பொருத்தமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள்.

ஐரோப்பிய தலைவர்கள் ஹிட்லரின் ஹாலோகாஸ்ட் கொடுமைகளை புறம் தள்ளிவிட்டு அரேபியர்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் ஒரு வெறுப்புணர்வை உருவாக்கக்கூடிய பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். ஹிட்லரின் ஹாலோகாஸ்டின்போது ஐரோப்பிய நாடு முழுவதும் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். குறிப்பாக ஜெர்மனியில் யூதர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் உலகம் மறக்க முடியாது, ஆனால் இன்று அந்த யூத மதத்தை கேடயமாக வைத்துக் கொண்டு சியோனிஸ்டுகள் நடத்தக்கூடிய புவிசார் அரசியலுக்கு ஜெர்மனி அப்பட்டமான ஆதரவை தெரிவித்து வருகிறது. ஆயுதங்களை வழங்கி வருகிறது. இஸ்ரேலின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டுதான் இருக்கிறது என்று முன்னாள் ஜெர்மனியினுடைய சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் கருத்து இதை வெளிப்படுத்தியது.  சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா உட்பட இஸ்ரேல் மீது வழக்கு தொடுத்த பொழுது ஜெர்மனி இஸ்ரேலை ஆதரித்தது

எனவே ஐரோப்பா ஒன்றியநாடுகள் யூதர்களுக்கு எதிராக மிகப்பெரும் தாக்குதலை நடத்தியவர்கள். தற்பொழுது பாலஸ்தீனர்களை அழிப்பதற்கு, தங்களால் அழிக்கப்பட்டயூதர்களை  உயிர்த்தெழ வைக்கிறார்கள். பாலஸ்தீனமும் தீவிரவாதிகளை உருவாக்குகிறது என்று உரக்க கத்துகிறார்கள் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள். தீவிரவாதிகளை தாலிபான் முதல் காலிஸ்தான் வரை மூளை முடுக்கெல்லாம் உற்பத்திசெய்தவர்கள் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும். 1930 ஆம் ஆண்டுகளில் பாலஸ்தீனத்தில் சியோனிஸ்டுகள் தீவிரவாதிகளாக அழைக்கப்பட்டார்கள். ஜெர்மனியில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது அதற்கு எதிராக போராடிய யூதர்களை சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று அழைத்தார்கள். பிற்காலத்தில் இஸ்ரேலின் பிரதமரான  பெகின் 1940 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் தீவிரவாதி என்று அறிவித்தது. பாலஸ்தீனத்தில் இருந்து கொண்டு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இஸ்ரேலில் ஆரம்பிக்கப்பட்ட படையின் கமாண்டராக போராடினார். 1946 ஆம் ஆண்டு ஜெருசலேமில் ஆங்கிலேய ராணுவ முகாமை அதன் பிரதான அலுவலகத்தை குண்டு வைத்து தகர்த்தார். அவரை சிறை பிடிப்பதற்கு உதவினால் 50 ஆயிரம் டாலர் பரிசாக அளிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு அறிவித்தது. அதே பெகின் பிரிட்டிஸ் அரசின் நண்பர் ஆனது மட்டுமல்ல, அமைதிக்கான நோபல் பரிசையும் மேற்கத்திய நாடுகள் அவருக்கு வழங்கியது. இப்போது பாலஸ்தீன இயக்கத்தை தீவிரவாதிகள் என்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

எதிர்ப்பு அச்சை அழிப்பது

இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பு அச்சை அழிப்பது முக்கிய குறிக்கோளாக மேற்கத்திய நாடுகளும், அமெரிக்காவும் கொண்டுள்ளன. ராணுவ சக்தியாக விளங்கும் ஈரானை அழித்து விடுவதும், ஆசிய கண்டத்திலிருந்து பாலஸ்தீனம் என்ற கடைசி மனிதனையும் துடைத்தெறிந்து எறிவது என்றும் இஸ்ரேலின் மெதன்யாகுவும், அமெரிக்காவின் ட்ரம்பும் கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கி இருக்கிறார்கள். இதற்கு யூதமக்களை தன்பக்கம் நிறுத்துவதற்கான முயற்சிகளில் சியோனிஸ்டுகள் ஈடுபட்டிருக் கிறார்கள். இஸ்ரேலிய மற்றும் மேற்கத்திய ஊடகங்களில், இஸ்ரேல் ரத்த வெள்ளத்தில் காசா மக்களை மூழ்கடிக்கும் எந்த செய்தியும், படங்களும் வெளியிடுவது இல்லை. அதற்கு மாறாக இஸ்ரேலியர்களுக்கு ஹமாஸ் அமைப்பு செய்கிற அட்டூழியங்கள் என்ற பெயரில் படங்களையும் மற்ற கதைகளையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் இருக்கக்கூடிய யூதர்களுக்கு தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ஆழமான உணர்வை உருவாக்குகிறது. இதனால் பெரும்பாலான இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டின் அந்தஸ்து அதிகரித்து வருவதையும் அதன் நடத்தை குறித்த விமர்சனங்களை தவிர்த்து பெருமை கொள்கின்றனர். இஸ்ரேலின் சியோனிஸ்டுகள் நடத்தும் மிருகத்தனமான தாக்குதல்களை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.

40 திபெத்∶ நாஜிகளின் நண்பர் தலாய்லாமா

    அ.பாக்கியம் திபெத்திய தலாய்லாமா பௌத்த மத துறவி என்பதை உலகமே அறியும். ஆனாலும் அவரது வரலாறு அவரின் துறவித்தன்மையை மீறிய முறையில் அமை...