Pages

திங்கள், ஜூலை 03, 2023

குத்துச்சண்டை: விடுதலை வேட்கையின் வடிவம்

 

தொடர்:6

அ.பாக்கியம்



            மிகவும் வன்முறையான இனவெறி சமூகத்தில், குத்துச்சண்டை என்பது மக்களின் கோபத்திற்கு ஒரு வெளிப்பாடாக மாறியது. தடுக்கப்பட்ட திறன், அங்கீகரிக்கப்படாத திறமைகள், இவைதான் இடைவிடாத சண்டை மனப்பான்மையை உருவாக்கியது. அமெரிக்க கருப்பின மக்களின் அனுபவத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த இடைவிடாத சண்டை மனப்பான்மை என்பது ஒரு அறநெறியின் செயலாகும்.

ஒரு சமூகத்தில் குத்துச்சண்டையில் செயல்பாடுகள் எவ்வாறு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடுதலைக்கான ஒரு வடிவமாக பயன்படுத்தப் பட்டது என்பதையும் அதற்காக தலைசிறந்த வீரர்கள் எவ்வாறு செயலாற்றி னார்கள் என்பதையும் இந்த குத்துச் சண்டைகள் மூலமாக புரிந்து கொள்ள முடியும்.

ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜோ லூயிஸ் (Joe Louis) என்ற கருப்பின வீரருக்கும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மேக்ஸ் செமெலிங் (Max Schmeling) என்ற வீரருக்கும் 1938 ஜூன் 22 ஆம் தேதி அமெரிக்காவின் யாங்கி ஸ்டேடியத்தில் சுமார் 70 ஆயிரம் பார்வையாளர்கள் கூடியிருந்த அரங்கில் நடைபெற்ற போட்டி பல வகைகளிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக மாறியது. இரண்டு ஆண்களுக்கு இடையிலான போட்டியல்ல… இரு வேறு சித்தாந்தங்களின் போர்க்களம் என்று பத்திரிகைகள் எழுதின. ஒருபுறம் நாஜி கொள்கையின் தலைமகன் ஹிட்லர் அவரது பிரச்சாரகர் கோயபல்ஸும் களத்தில் இறங்கினார்கள். மறுபுறம் அமெரிக்க கம்யூனிஸ்ட்களும் கருப்பின மக்களும் களம் கண்டார்கள். அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி பிராங்கிளின் ருஸ்வெல்ட் போட்டியை கவனிப்பதில் ஆர்வமாக இருந்தார். அமெரிக்கா மட்டுமல்ல, ஜெர்மனியும் கொதி நிலையில் இருந்தது.

இந்தப் போட்டி இரண்டாம் உலகப்போர் துவங்குவதற்கு முன்பு நடைபெற்ற போட்டி. இன மேலாண்மையை நிரூபிக்க நடைபெற்ற போட்டி. விளையாட்டை இனவாத அரசியலுக்குள் கொண்டு வந்த போட்டியாகும். 1908-ம் ஆண்டு கருப்பினத்தவர்களுக்கான நிறக்கோடு போட்டியை தகர்த்து எறிந்து வெள்ளையனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஜாக் ஜான்சனின் தொடர்ச்சியாகத்தான்  ஜோ லூயிஸ் களத்திற்கு வந்தார்.

இரண்டாம் உலகப்போருக்கு முன்னும் பின்னும் நாஜி எதிர்ப்பு உணர்வின் மையமாகவும், அதே நேரத்தில் வெள்ளை இன வெறி அடக்குமுறைக்கு எதிரான குறியீடாகவும் ஜோ லூயிஸ் திகழ்ந்தார். ஜோ லூயிஸ் இந்த நிலையை வந்தடைவதற்கான பாதை கரடு முரடானது மட்டுமல்ல, உத்திகள் நிறைந்ததாகவும் இருந்தது.

 

 

கையுறையை மறைக்கலாம்  புகழை மறைக்க முடியுமா:

குத்துச்சண்டைக்கான பொற்காலம் என்று விவரிக்கப்படும் 1930 முதல் 1955 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முடி சூடா மன்னனாக ஜோ லூயிஸ் திகழ்ந்தார். குத்துச்சண்டை போட்டியில் ஜாக் ஜான்சனுக்கு பிறகும் தொடர்ந்துஇருந்த நிறகோட்டை முழுமையாக தகர்த்து எறிந்த பெருமை ஜோ லூயிசை சேரும். நிறவெறி பிடித்த வெள்ளையர்களை தவிர மற்ற வெள்ளையர்களால் அதிகமாக ஆதரிக்கப்பட்டவர் ஜோ லூயிஸ். எல்லா காலத்திலும் மிகச்சிறந்த செல்வாக்கு மிக்க குத்துச்சண்டை வீரனாக கருதப்படக் கூடியவர் ஜோ லூயிஸ்.

அவரின் 11 வது வயதில் குத்துச்சண்டை அறிமுகமாகி இருந்தாலும் 1932 ஆம் ஆண்டு 17 வது வயதில்தான் குத்துச்சண்டை போட்டியில் அவர் கலந்து கொண்டார். ஜோ லூயிஸ் கலந்து கொண்ட 54 அமெச்சூர் குத்துச்சண்டை போட்டிகளில் 50 போட்டியில் வெற்றி பெற்றார். இவற்றில் 43 போட்டிகளில் நாக் அவுட்  மூலமாக வெற்றி பெற்றது அமெச்சூர் போட்டிகளில் முக்கிய சாதனையாகும். தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் 69 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவற்றில் 3 மட்டுமே தோல்வி . 52 போட்டிகளில் நாக் அவுட் மூலமாக பட்டத்தை பெற்றுள்ளார்.

ஜோசப் லூயிஸ் பாரோ (Joseph Louis Barrow)  1914 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி அலபாமாவில் உள்ள சேம்பர்ஸ் கவுண்டி என்ற இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் அடிமைகளின் குழந்தைகள். 1926 ஆம் ஆண்டு இவர்கள் குடியிருந்த பகுதியில், வெள்ளை நிறவெறி பிடித்த பயங்கரவாத கும்பல் கு கிலஸ் கிளன் (Ku Klux Klan) கலவரத்தை ஏற்படுத்தி, ஆயுதம் கொண்டு தாக்கியது. அதில் ஜோ லுயிஸ் குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டு அங்கிருந்து வெளியேறி மெக்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் பகுதிக்கு குடியேறினார்கள்.

ஜோசப் லூயிஸ் பாரோ கூச்ச சுபாவம் கொண்டவர்; அமைதியானவர்; படிப்பில் ஆர்வம் இல்லாதவர். யாரோடும் பேசமாட்டார் என்பதால், ‘‘ இவர் என்ன ஊமையா’’ என்று பலரும் கருதினர். இவரது தாயார் இவரை வயலின் இசை கருவி வாசிப்பதற்கான பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவருக்கு அதில் ஆர்வம் இல்லை. பதினோராவது வயதில் நண்பர் மூலமாக குத்துச்சண்டையில் ஆர்வம் ஏற்பட்டது. இது தெரிந்தால் தாயின் மனம் கஷ்டப்படும் என்பதால் அவருக்கு தெரியாமல் குத்து சண்டை பயிற்சி எடுத்துக் கொண்டார். இதற்காக வயலின் இசைக்கருவியில் குத்துச்சண்டை கையுறையை மறைத்து வைத்து எடுத்துச் சென்றார். இவரது சக்தி, வேகம், உள்ளார்ந்த உத்திகள் இவரை ஒரு சிறந்த வீரராக மாற்றுவதற்கு உதவியது. பெயரை வைத்து, குத்துச்சண்டை போட்டியில் தான் கலந்து கொள்வதை அம்மா கண்டுபிடித்து விடுவார் என்பதற்காக பெயரை சுருக்கி ஜோ லூயிஸ் என்று கொடுத்து வந்தார் இதுவே அவரது நிரந்தர பெயராக வரலாற்றில் பதிவாகிவிட்டது.

 

ஜாக் ஜான்சன் போஃபியா:

1933 வது ஆண்டு ஜோ லூயிஸ் ஜோ பிஸ்கிக்கு(Joe Biskey) என்பவரை வீழ்த்தி டெட்ராய்ட் ஏரியா கோல்டன் கிளவுஸ் பட்டத்தை வென்றார். உடனடியாக சிகாகோவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு மேக்ஸ் பாயர் (Max Bauer) என்பவரை வீழ்த்தி பட்டம் வென்றார். ஜோ லூயிஸ் ஆரம்ப காலத்தில் பங்கேற்ற தொழில் முறை போட்டிகள் அனைத்தும் சிகாகோ நகரை சுற்றியே அமைந்திருந்தது. 1934 ஜூலை 4 சிகாகோவில் தெற்கு பகுதியில் பேகன் கேசினோ என்ற இடத்தில் ஜாக் சிராக் என்பவருக்கு எதிராக மோதி முதல் சுற்றிலேயே அவரை வீழ்த்தினார். இதனால் ஜோ லூயிஸ் பிரபலமானார். 1934 ஆம் ஆண்டில் மட்டும் 12 தொழில் முறை குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு பத்து போட்டிகளில் நாக் அவுட் மூலம் வெற்றி பெற்றார். இதனால் கருப்பின வீரர்கள் உற்சாகமடைந்தனர். பலரும் போட்டி களத்தில் இறங்கினர். ஜோ லூயிஸ் தவிர்க்க முடியாத குத்துச்சண்டை வீரனாக மாறினார்.

கருப்பின குத்துச்சண்டை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதில் வெள்ளை நிற பயிற்சியாளர்கள் பாரபட்சம் காட்டினார்கள். அதற்கு காரணம் கருப்பர்கள் முன்னேறக்கூடாது என்ற நோக்கம் இருந்தது. அதே நேரத்தில் கருப்பினத்தவருக்கு பயிற்சி அளிப்பதால், வெள்ளையர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்தது. அதனால் கருப்பினத்தவரை பயிற்சியில் சேர்த்துக் கொண்டு மேலோட்டமான பயிற்சிகளை மட்டும் கொடுத்தனர்.

கருப்பின வீரர்களின் உடல் ஆரோக்கியத்தை பற்றியோ, உணவு முறைகள் பற்றியோ, இருப்பிட வசதிகளை பற்றியோ, வெள்ளை நிற பயிற்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை. ஜோ லூயிஸ் போன்றவர்கள் ஹெவி வெயிட் சாம்பியன் பட்டம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்த பொழுது அவற்றை தடுப்பது அல்லது தள்ளி வைக்கும் சதி வேலைகளிலும் ஈடுபட்டனர். குத்துச்சண்டையில் நிறவெறி கோடு அதிகாரப்பூர்வமாக இல்லை என்றாலும் கருப்பர்கள் சாம்பியன் பட்டம் பெறுவதை வெள்ளையர்கள் விரும்பவில்லை.

மற்றொரு முக்கியமான காரணம் ஜாக் ஜான்சன் தனது வெற்றியின் மூலமாக ஏற்படுத்திய அதிர்வலைகள் வெள்ளையர்களை அச்சத்திலேயே வைத்திருந்தது. ஜாக் ஜான்சனின் வெற்றியால் கருப்பர்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு எழுச்சி மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதற்காக கருப்பின சாம்பியன்கள் உருவாவதை வெள்ளையர்கள் விரும்பவில்லை. ஜாக் ஜான்சன் வெற்றி, அவரது சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, சமரசமற்ற மோதல் இவை அனைத்தும் வெள்ளையர்கள் விரும்பாத விஷயம். மேலும் ஜான்சன் பற்றி தவறான கருத்துக்களையே கருப்பின வீரர்களிடையே அவர்கள் பரப்பி வந்தார்கள்.

ஜான்சன் 1912 ஆம் ஆண்டு பழுப்பு மற்றும் கருப்பு நிற மக்களுக்கான உணவு விடுதி திறந்தார். இந்த உணவு விடுதியை ஜாக் ஜான்சனின் வெள்ளை மனைவி கவனித்து வந்தார். அவர் குத்துச்சண்டையில் புகழ்பெற்ற பிறகு வெள்ளை நிறப் பெண்ணை திருமணம் செய்ததை காரணம்காட்டி, இதர வெள்ளை நிற பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று குற்றச்சாட்டை முன்வைத்தும் அன்றைய தினம் அமலில் இருந்த மான் சட்டத்தின்படி (Mann Act 1910)ஜாக்சனை கைது செய்தனர். வெள்ளை நிற பெண்களுடன் தொடர்பு, திருமணம் போன்றவை, விபசாரம், ஆள் கடத்தல்,குற்றங்களாக   இந்த மான்   சட்டத்தின்படி கருதப்படும். ஜான்சனை இந்த சட்டத்தின்படி கைது செய்தனர். இவற்றையெல்லாம் கருப்பின வீரர்களிடம் பிரச்சாரம் செய்து அவர்கள், தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று நிர்பந்தம் கொடுத்தனர்.

எனவே ஜோ லூயிஸ் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்வதற்கு ஏராளமான கட்டுப்பாடுகளை, போட்டியை நடத்தக் கூடியவர்களும் பயிற்சியாளர்களும் விதித்தனர். இந்த நிபந்தனைகளை ஒரு உத்தியாகவே ஜோ லூயிஸ் ஏற்றுக்கொண்டார். நான் வளையத்தில் பேசுவேன்; வளையத்துக்கு வெளியே என் பயிற்சியாளர் பேசுவார் என்று அவர் தெரிவித்து விட்டார். வெள்ளை நிற பெண்களுடன் படம் எடுக்கக் கூடாது. போட்டியில் தோல்வியடைந்த வீரரை பார்த்து சிரிப்பது, கேலி செய்வது கூடாது. சுத்தமாக கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என ஏகப்பட்ட நிபந்தனைகள். கருப்பின வீரர்கள் தங்களிடம் போதுமான வலிமையும், உழைப்பும், முயற்சியும், இருந்த பொழுதும், சாம்பியன் பட்டம் பெறுவதற்காக ஏராளமான தடைகளையும், நிறவெறி அடக்குமுறைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை நீடித்தது.

அ.பாக்கியம

தொடர் 5
வீழ்த்தப்பட்ட வெள்ளை நம்பிக்கை
http://bakkiam.blogspot.com/2023/06/blog-post_30.html

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...