Pages

வியாழன், ஜூலை 13, 2023

மணிப்பூர் கலவரம்: வகுப்புவாத அரசியலின் விரிவாக்கம்

 அ.பாக்கியம்



இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மணிப்பூர் மாநிலம் மே 3 தேதியிலிருந்து  கலவரத்தீயில் கருகிக் கொண்டிருக்கிறது. வளமை நிறைந்த பள்ளத்தாக்கும், பசுமை நிறைந்த காடுகளும் கலவர தீ ஜுவாலைகளால் தங்களது நிறத்தை இழந்துவிட்டன. மாநிலத்தை ஆட்சி செய்யும்  பிரேன்சிங் தலைமையிலான பாஜதான்  இதற்கு காரணம் என்று பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

மணிப்பூர் மாநிலத்தில் இதற்கு முன்பும்  இனக்குழுக்களுக்கு இடையே மோதல்கள் நடைபெற்றுள்ளன. கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மோதல்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், தற்போதைய மோதல்,  ஆட்சியில் இருப்பவர்களின் வாக்குவங்கி அரசியலுக்காக  உருவாக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

மணிப்பூர் இந்தியாவின் வடகிழக்கில் உள்ள ஒரு மாநிலம். இம்பால் அதன் தலைநகரம். வடக்கே நாகாலாந்து, தெற்கில் மிசோரம், மேற்கில் அசாம், கிழக்கே மியான்மர் நாட்டின் சாகாயிங் பிராந்தியத்தை எல்லையாக கொண்டு அமைந்திருக்கிறது. சுமார் 8,621 சதுரமைல் பரப்பளவு உள்ளது. 1926 முதல் பிரிட்டிஷ் பர்மாவின் பக்கோக்கு மலைப்பகுதி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தது

1949 அக்டோபர் 15ம் தேதி மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது. மணிப்பூரின் மகாராஜா போதச்சந்திரா ஷில்லாங்கிற்கு வரவழைக்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டார். 1956 ல்  யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. 1971ல் வடகிழக்கு பகுதிகள் மறு சீரமைப்பு சட்டம் மூலமாக முழு அளவிலான மாநிலமாக உருவாக்கப்பட்டது. 2011ல் மக்கள் தொகை சுமார் 28 லட்சம். இதில் 57 சதவீத மக்கள் பள்ளத்தாக்கு (சமவெளி) மாவட்டங்களிலும் 43 சதவீதம் மலை மாவட்டங்களிலும் வாழ்கிறார்கள்.

 சமவெளி பகுதியில் மெய்தி மொழி பேசும் மக்களும் மலைப்பகுதியில் நாகா, குக்கி, ஜோமி என 35 அங்கீகரிக்கப்பட்ட  இனக் குழுக்கள் வாழ்கின்றார்கள். சமவெளியில் வாழக்கூடிய மெய்தி  மொழி பேசும் மக்கள் இந்துக்களாகவும் சிறுபகுதி பங்கல்கள் என்று அழைக்கக்கூடிய இஸ்லாமியர்களாகவும் உள்ளனர். பழங்குடி மக்களில் பெரும்பகுதியினர் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள்.

மணிப்பூரில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 19 தொகுதிகள் பழங்குடியின பிரிவுக்கும் ஒரு தொகுதி தாழ்த்தப்பட்ட பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜ 37, அதன் கூட்டணி கட்சி 17 இடங்களையும் கைப்பற்றி ஆளுங்கட்சியாக இருக்கிறது. காங்கிரஸ் 5, ஜனதா தளம் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

மெய்தி இன மக்கள் கடந்த 2012 ம் ஆண்டு முதல் தங்களை பழங்குடி இனபட்டியலில் சேர்க்க மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கில் ஏப்ரல் 20ம் தேதி, தீர்ப்பளித்த நீதிபதி முரளிதரன் (இவர் தமிழகத்தில் இருந்து சென்றவர்), மெய்தி சமூகத்தை அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்ப வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டார். இது பழங்குடி மக்களுக்கு அச்சத்தை உருவாக்கியது.  ஏப்ரல்28 அன்று முதலமைச்சர் பிரேன்சிங், சுராசந்த்பூர் மாவட்டத்தில் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைக்க இருந்தார். 

நிகழ்ச்சிக்கு முதல் நாள் 27ஆம் தேதி, அந்த உடற்பயிற்சி கூடம் போராட்டக்காரர்களால் கொளுத்தப் பட்டது. இதையடுத்து முதல்வரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. உடனடியாக எட்டு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் (ATSUM) சார்பாக பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு நடத்த அழைப்பு விடுத்தது. மே 3ம் தேதி அன்று சுராச்சந்துபூர் மாவட்டத்தில்  பழங்குடி மாணவர்களின் பேரணியில் 60,000அதிகமானோர் கலந்து கொண்டனர். பேரணியை தொடர்ந்து கலவரங்களும் வெடிக்க ஆரம்பித்தது.

இம்பாலில் இருந்த 500க்கும் மேற்பட்ட பழங்குடியினரின் வீடுகள் எரித்து நாசமாக்கப்பட்டது. 27க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் எரிக்கப்பட்டன. 45 ஆயிரம் பேர்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். வன்முறை தொடர்கிறது. 10,000 ராணுவ வீரர்கள் அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.  அரசியல் சட்டப் பிரிவு 355-ஐ அமல்படுத்தி  மாநிலத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒன்றிய அரசு கையில் எடுத்துக் கொண்டது. மே 26 ஆம் தேதி வரை இணையதள முடக்கம் நீட்டிக்கப்பட்டது.  இதற்கிடையில் பாஜவை சேர்ந்த எட்டு எம்எல்ஏக்களும், கூட்டணி கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்களும், பழங்குடி மக்களுக்கான தனி நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். வன்முறையை அரசு மவுனமாக ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார்கள்.

மணிப்பூரில் ஏற்கனவே நடந்து வந்த பழங்குடி இன மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான மோதல் 2008ம் ஆண்டு சமாதான உடன்படிக் கையின்படி முடிவுக்கு வந்தது.  அரசு பழங்குடி இன மக்கள் மீது ஆயுத தாக்குதல் நடவடிக்கையை நிறுத்தியது. கடந்த மார்ச் மாதத்தில் அரசு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்தப் பகுதியில் கஞ்சா பயிரிடுவதை ஒழிக்கிறோம் என்ற பெயராலும், மியான்மரில் இருந்து வந்து குடியேறியவர்களை விரட்டுகிறோம் என்ற பெயராலும்,  குக்கி, ஜோமி    பழங்குடிமக்களை வாழ்விடங்களிலிருந்து  விரட்டியது. இது பெரும் கொந்த ளிப்பை ஏற்படுத்தியது. இந்த பின்னணியில்  உயர் நீதிமன்ற தீர்ப்பு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக அமைந்தது.

பழங்குடி மக்கள் ஏன் இந்த இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள்? மாநிலத்தில் 83 சதவீதம் கரடு முரடான மலைப் பகுதியில் 42 சதவீதம் பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். 17 சதவீதம் உள்ள சமவெளி நிலப்பரப்பில் 50 சதவீதம் மெய்தி இன மக்கள் வாழ்கிறார்கள். பொருளாதார ரீதியிலான செழிப்பும் அரசியல் ரீதியிலான செல்வாக்கும் உடையவர்களாக மெய்தி மக்கள் உள்ளார்கள். மணிப்பூர் சட்டமன்றத்தில் 40 பொது தொகுதிகளிலும் மெய்தி இனத்தவர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பழங்குடி மக்கள் 42 சதவீதம் இருந்தாலும் சட்டமன் றத்தில் அனைத்து பழங்குடியினருக்கும் சேர்ந்து 20 இடங்கள் (33%)  மட்டுமே கிடைக்கின்றன. 

நீதிமன்ற தீர்ப்பின்படி  மெய்திகளுக்கு இடஓதுக்கீடு கொடுத்தால் பழங்குடி மக்கள் தங்கள் வேலைவாய்ப்பு பறிக்கப்படும் என அஞ்சுகின்றனர். அவர்களுக்கு(மெய்தி இன மக்கள்) எஸ்சி, ஓபிசி, ஈடபிள்யுஎஸ் பிரிவுகளில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பழங்குடி மக்களாகிய தங்களுக்கு இல்லை என்று அவர்கள் கருதுகின்றனர். மலைப்பகுதி நிலங்களை வாங்கும் உரிமை மெய்தி இனத்தினருக்கு கிடைத்தால், பழங்குடி மக்கள் தங்கள் வாழ்வுரிமை பறிக்கப்படும் என்று அஞ்சுகின்றனர். மாநிலத்தின் புவியியல் பகுதியில் 83 சதவீதம் பழங்குடியினப் பகுதிகள். ஆனால் மாநில அரசின் பட்ஜெட், மேம்பாட்டுப் பணிகளில் பெரும்பாலானவை மெய்தி ஆதிக்கம் செலுத்தும் இம்பால் பள்ளத்தாக்கிற்கு ஓதுக்கப்படுகிறது.

மெய்தி  மக்கள் ஏன் இந்த இட ஒதுக்கீட்டை கேட்கிறார்கள்?  மூதாதை யர்களின் நிலம், பாரம்பரியம், கலாச்சாரம் பாதுகாக்க எஸ்டி பிரிவில் சேர்க்க வேண்டும். சுருங்கி வரும் இம்பால் பள்ளத்தாக்கில் பழங்குடிகள் நிலம் வாங்க முடியும் . மலைப்பகுதியில் மெய்தி மக்கள் வாங்க முடியாது. வெளிநாட்டினர் மலைகளில் குடியேறி வருகின்றனர். எங்களின் மக்கள் தொகை சுருங்கி வருகிறது  என்று அவர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

மாநிலத்தில் உள்ள பாஜ அரசு  பழங்குடி மக்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் அவர்களுக்கு எதிராகவும், மெய்திஇன மக்கள் இந்துக்கள் என்பதால் அவர்களுக்கு ஆதரவாகவும் பகிரங்கமாக செயல்படுகிறது. மெய்திகள் தங்கள் அரசியல் செல்வாக்கின் மூலம் பழங்குடி மக்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

மணிப்பூர் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநில் அரசு மேல் முறையீடு செய்யவில்லை. இந்த தீர்ப்பை பழங்குடி தலைவர் தின்காங்லுங் காங்க்மாய் கடுமையாக விமர்சனம் செய்தார். பழங்குடி மாணவர் அமைப்பு தலைவரும் விமர்சித்தார். இதையடுத்து உயர் நீதிமன்றம், இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்து அவர்களை கோர்ட்டில் ஆஜராக்க  வேண்டும் என்று டிஜிபிக்கு உத்தரவிட்டது. இந்தப் பின்னணியில் பழங்குடி தலைவர் தின்காங்லுங் காங்க்மாய், மாணவ அமைப்பு தலைவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவர்களின் மனுவில், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், தங்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்யவும் கோரியிருந்தனர். மேலும், ஆளும் கட்சி ஆதரவுடன் பழங்குடி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது, தேவாலயங்கள் உட்பட பழங்குடி மக்களின் அனைத்து வழிபாட்டுத் தலங்க ளுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு மீது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட்,  ‘‘எந்த மாநில அரசுக்கும் அல்லது எந்த நீதிமன்றத்திற்கும் யார் யார் பழங்குடி மக்கள் என்று சேர்ப்பது சம்பந்தமான உத்தரவை அளிப்பதற்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு ஏற்கனவே தீர்ப்பு சொல்லியுள்ளது என்பதை சுட்டிக் காண்பித்து உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு தவறானது என்று கூறியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

மாநில அரசும், ஒன்றிய அரசும் பழங்குடி மக்களுக்கு எதிராக இருக்கிறது என்பதற்கு மற்றொரு உதாரணம் என்னவென்றால், வழக்கு தொடுத்த பழங்குடி தலைவர் தின்காங்லுங் காங்க்மாயை வழக்கை திரும்பபெற வைத்தனர். இந்த வழக்கை பழங்குடி மாணவர் அமைப்பு தலைவர்  பட்டின்தாங் லூபெங் (Poatinthang Lupheng) நடத்துகிறார். ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி உயர் நீதிமன்ற  தீர்ப்பு குறித்து அனைவருடன் பேசலாம் என்று தெரிவித்துள்ளது அப்பட்டமான இந்துத்துவா அரசியலாகும்.

1965 ஆம் ஆண்டு பழங்குடி மக்களை அடையாளம் காண்பதற்கு லோகூர் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி ஐந்து அளவுகோல்களை பரிந்து ரைத்தது. பழமையான பண்புகள், தனித்துவமான கலாச்சாரம், புவியியல் தனிமைப்படுத்துதல், சமூகத்துடன் பெரிய அளவில் தொடர்பு கொள்வதில் கூச்சம், பின்தங்கிய நிலைமை, ஆகிய ஐந்தையும் அளவுகோலாக முன்வைத்தது. இந்த ஐந்தும் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு உட்பட்ட மெய்தி மக்களுக்கு பொருந்தாது.

2002-2004  வரை பூரியா கமிஷன்  அமைக்கப்பட்டு அரசியல் சட்டம் 5 வது அட்டவணையில்  பழங்குடியினரின் நிலம்,காடுகள், சுகாதாரம், கல்வி, பஞ்சாயத்துகளின் வேலை மற்றும் பழங்குடியின பெண்களின் நிலை போன்ற பல்வேறு பிரச்சனைகளில் கவனம் செலுத்தி பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பரிந்துரை செய்தது. மேலும் பழங்குடியின சமூகங்கள் தொடர்பான 5 முக்கியமான பிரச்சினைகளை ஆய்வு செய்ய பேராசிரியர் விர்ஜினியஸ் க்ஸாக்ஸாவின் தலைமையில் 2013ல் உயர்நிலைக் குழு (HLC) அமைக்கப்பட்டது (1) வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, (2) கல்வி, (3) சுகாதாரம், (4) விருப்பமில்லாத இடப்பெயர்வு மற்றும் இடம்பெயர்வு, (5) சட்ட மற்றும் அரசியலமைப்பு விஷயங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மணிப்பூர் மக்களின் வாழ்வை, பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய முறையில் ஊடுருவலை தடுக்க, எல்லைப் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு, அண்டை நாடுகளுடன் பொருளாதார, ராஜதந்திர உறவை வலுப்படுத்துவது, அமைதியை நிலைநாட்ட உள்ளூர் கிளர்ச்சி குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது, ஆயுதப்படை சட்டத்தை ரத்து செய்வது, பாதுகாப்பு படையினரின் அதிகார அத்துமீறல்களை தடுப்பது,  உரிமை மற்றும் சொந்தம் என்ற உணர்வை தூண்டுவதற்கு முடிவெடுக்கும் இடத்தில் பிராந்திய மக்களின் பங்களிப்பை அரசாங்கம் அதிகப்படுத்த வேண்டும் போன்ற எண்ணற்ற ஆலோசனைகளை பாஜ தலைமையிலான மாநில அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் தனது குறுகிய அரசியல் அதிகாரத் திற்காக வாக்கு வங்கியை தக்க வைப்பதற்காக வகுப்புவாத திட்டமிடலை செயல்படுத்தி உள்ளது.

வடகிழக்கு மாநிலத்தில் நூற்றுக்கணக்கான இனக்குழுக்கள் மலைப் பிரதேசங்களில் தனிமைப்பட்டு வாழ்கிற சூழலில் பாஜ மேற்கொள்ளும் இந்துத்துவ அரசியல் இந்திய ஒற்றுமையை சீர்குலைப்பதோடு மிகப் பெரும் பாதிப்பையும் உருவாக்கும்.

அ.பாக்கியம்

25.05.23 எழுதியது ஆஸ்திரேயாவிலிருந்து வெளிவரும் எதிரொலி  பத்திரிக்கையில்  ஜின் இதழில் வெளிவந்தது

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...