Pages

திங்கள், ஜூலை 17, 2023

வளர்ச்சி: இந்தியா- சீனா சொல்லும் செயலும் பகுதி -𑅁

 

உலக அரங்கில் சீனா-2






அ.பாக்கியம்

பகுதி -𑅁

இந்தியாவின் முன்னேற்றத்தைப் பற்றி நமது பிரதமர் மீண்டும் மீண்டும் பேசுகிறார். இந்தியா உலகத்திற்கு வழிகாட்டுகிறது என்று வாய் ஓயாமல் வலியுறுத்துகிறார். கடந்த 30 ஆண்டுகளில் நமது நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன? இதே காலத்தில் சீனாவில் ஏற்பட்டிருக்க கூடிய முன்னேற்றம் என்ன? இரண்டு நாடுகளிலும் உள்ள படிப்பினைகள் என்ன? என்பதை ஆய்வுக்கு உட்படுத்தாமல் வார்த்தை ஜாலங்கள் மட்டுமே ஒரு நாட்டை முன்னேற்றி விடாது. அரசியல் ரீதியாக அமெரிக்கா, இந்தியாவை சீனாவுக்கு எதிராக நிறுத்தி மோதலை உருவாக்குகிறது. இதற்கு மோடி அரசாங்கம் இறையாகிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அமெரிக்கா சீனாவுடன் வர்த்தக உறவை பலப்படுத்திக் கொள்கிறது.

இந்தியாவும் சீனாவும் ஒரேகாலத்தில் விடுதலை அடைந்த நாடுகள். இரு நாடுகளும் காலனித்துவ நாடுகளாக சுமார் 250 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக சுரண்டப்பட்டன. இரு நாடுகளும் பின்தங்கிய நாடுகள். வறுமையில் வாடிய நாடுகள். மக்கள் தொகையிலும் அதிக எண்ணிக்கை கொண்டவை. ஒப்பீட்டளவில்  பொருளாதார அமைப்புடன், ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா சிறந்த நிலையில் இருந்தது. ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி பிரமிக்க தக்கதாக இருப்பது ஏன். இந்தியா பின்தங்கியது ஏன்?

மனதைக் கவரும் வளர்ச்சி

கடந்த 30 ஆண்டுகளில் சீனாவின் மனதைக் கவரும் வளர்ச்சி உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகில் உள்ள அனைத்து மெகா தொழிற்சாலைகளும் சீனாவில் தங்களது ஆலைகளை நிறுவி உள்ளனர். 1990 ஆம் ஆண்டு உலக ஒட்டுமொத்த உற்பத்தியில் சீனாவின் பங்கு 3% ஆகும். 2018 ஆம் ஆண்டு இது 25% உயர்ந்தது. தற்போது சீனா உலகில் 80% ஏர் கண்டிஷனர் களையும், 70% மொபைல் ஃபோன்களையும், 74% சோலார் செல்களையும், 60% காலணிகளையும், 50%  நிலக்கரி உற்பத்தி, 45% கப்பல் உற்பத்தி, 50 சதம் எக்கு, உலக சந்தைக்கு ஆப்பிள் ஏற்றுமதியில் 50 சதவீதம் சீனா ஏற்றுமதி செய்து முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா 6 சதவீதம் ஏற்றுமதி செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனாவின் மொத்த வைப்புத் தொகையில் 27.39 ட்ரில்லியன் டாலர்களுடன் சுமார் 40 ட்ரில்லியன் மதிப்புடன் உலகின் மிகப்பெரிய மொத்த வங்கித் துறை சொத்துக்களையும் சீனா கொண்டுள்ளது. சீனாவின் அன்னிய செலவாணி கையிருப்பு 3.1 ட்ரில்லியன் டாலர்களாகும்.

உலகின் மிகப்பெரிய 500 நிறுவனங்களில் 129 நிறுவனங்கள் சீனாவை தலைமையிடமாகக் கொண்டது. 2017ஆம் ஆண்டு இது 109 ஆக இருந்தது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 14.140 ட்ரில்லியன் டாலர்களாகும். உலகின் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதையே வாங்கும் சக்தி சமநிலை (PPP) அடிப்படையில் கணக்கிட்டால் அதன் உற்பத்தி மதிப்பு 27.307 ட்ரில்லியன் டாலராக அதாவது உலகின் முதல் இடத்தில் உள்ளது. அடுத்து வரும் காலத்தில் சீனா பொருளாதாரம் அமெரிக்காவை விஞ்சி முதலிடத்தை பிடிக்கும்..

1978 ஆம் ஆண்டுக்கு முன்பு சீனா ஆண்டுக்கு 6% வளர்ச்சியை ஏற்படுத்தியது. 1978ஆம் ஆண்டுக்குப் பிறகு வருடத்திற்கு 9% அதிகமான சராசரியான வளர்ச்சியை ஏற்படுத்தியது. சில ஆண்டுகளில் வளர்ச்சியின் உச்சமாக 13% வரை வளர்ச்சியை கண்டது. கடந்த 15 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் 4 மடங்காக அதிகரித்துள்ளது . இந்த வளர்ச்சி ஆசியபுலிகள் என்று அழைக்கப்பட்ட ஹாங்காங், கொரியா, சிங்கப்பூர், (சீனாவின்)தைவான் நாடுகளின் வளர்ச்சிக்கான 7% விட அதிகமாக இருந்தது . தற்போது சீனா உலகின் மிகப்பெரிய உற்பத்தி பொருளாதாரம் மட்டும் அல்ல பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு. மேலும் உலகில் உள்ள மிகப்பெரிய பங்குச் சந்தைகளில் ஷாங்காய் பங்குச் சந்தையும் ஷென் சென் பங்குச்சந்தையும் மூலதனம் மற்றும் வர்த்தகஅளவு ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய பங்கு சந்தைகளில் ஒன்றாகும். உலகின் அடுத்த சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று ஷென்சென் நகரின் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடப்படுகிறது.

சீனாவின் இந்த வளர்ச்சி எப்படி ஏற்பட்டது என்று அறிந்து கொள்வதற்கு முன்பாக இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையிலான பொருளாதார ஒப்பீடுகளை அறிந்து கொள்ளலாம்.

சில பொதுவான ஒப்பீடுகள்

இந்தியா 1990 வரை வலுவான நிலையில் இருந்தது.  சீனாவின் தனிநபர் வருமானம் $318 ஆக  இருந்தபோது இந்தியாவின் தனிநபர் வருமானம் $368 ஆக இருந்தது. 1987ல், இரு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி  கிட்டத்தட்ட சமமாக இருந்தது. ஆனால் 2019 ஆம் ஆண்டில், சீனாவின் ஜிடிபி 14.140 டிரில்லியன் டாலர்களாகும். இந்தியாவை விட ($3.202 டிரில்லியன்) 4.78 மடங்கு அதிகமாகும். வாங்கும் சக்தி சமநிலை  (PPP) அடிப்படையில், சீனாவின் GDP $27.307 டிரில்லியன் ஆகும். வாங்கும் சக்தி சமநிலை அடிப்படையில் இந்தியாவின் ஜிடிபி ($11.321 டிரில்லியன்). 1998 ல் சீனா $1 டிரில்லியன் உற்பத்தி மதிப்பை கடந்துவிட்டது.  இந்தியா 9 ஆண்டுகளுக்குப் பிறகு 2007ல் மாற்று விகித அடிப்படையில் ஒரு ட்ரில்லியன் டாலரை கடந்தது.

உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம் கணக்குப் பார்த்தால் 1990 ஆம் ஆண்டு இந்தியா சீனாவை விட அதிகமாக இருந்தது 2019 ஆம் ஆண்டு சீனா இந்தியாவை விட சுமார் 4.61 மடங்கு தனி நபர் வருமானத்தில் முன்னணியில் உள்ளது. வாங்கும் சக்தி சமநிலை அடிப்படையில் பார்த்தால் 2.30 மடங்கு அதிகமாக உள்ளது. ஒரே அளவு மக்கள் தொகை கொண்டிருந்தாலும் உலக நாடுகளின் தனிநபர் வருமான பட்டியலில் இந்தியா 145 ஆவது இடத்திலும் சீனா 72 வது இடத்தில் உள்ளது.

2017ஆம் ஆண்டு இந்தியாவின் விவசாயத்துறை 15.4%, தொழில் துறை 23% சேவைத்துறை 61.5% என்ற வகையில் இருந்தது. இதே ஆண்டு சீனாவில் விவசாயம் 8.3% தொழில் 39.5% சேவை 52.2.% இருந்தது. இந்தியா சேவைதுறையை தனது முதுகெலும்பாக கருதிய பொழுது சீனா உற்பத்திதுறையை மேலும் முன்னெடுத்து உலகின் தொழிற்சாலையாக மாறிவிட்டது. கடந்த 30 ஆண்டுகளில் சீனா தொடர்ந்து பத்து சதவீத வளர்ச்சியுடன் சுமார் 80 கோடி மக்களை  வறுமையில் இருந்து மீட்டுள்ளது என்று உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.

தொடரும்…..

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...