Pages

சனி, ஜூலை 15, 2023

நீதிமன்றம் முதல் வீதிமன்றம் வரை இனவெறி

 


தொடர்: 9

பழுப்பு நிற வெடிகுண்டு என்று அழைக்கப்பட்ட ஜோ லூயிஸ் 1937 முதல் 1949 வரை உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வைத்திருந்தார். இவர் அமெரிக்க அரசு நிர்வாகத்தை எதிர்த்து நேரடி களத்தில் ஈடுபடவில்லை. மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னணியில் நிற்கவில்லை. தனது குத்துச்சண்டை வளையத்துக்குள் இருந்து வெள்ளை நிறவெறி வீரர்களை வீழ்த்தியதன் மூலம் கருப்பின மக்களின் எழுச்சிக்கு காரணமாக இருந்தார்.

இவருக்கு முன்னால் முதல் உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜாக் ஜான்சன் கருப்பின மக்களின் பிரதிநிதியாக இருந்தார். "ஜாக் ஜான்சன் வெள்ளை சாம்பியன்களுக்கு அச்சுறுத்தலாக மட்டும் இருக்கவில்லை. இனம் பற்றிய அணுகுமுறைக்கு அவர் அச்சுறுத்தலாக இருந்தார். வெள்ளை நிற வெறியர்களின் குளிர்ந்த கனவுகளை வியர்க்க வைத்தார். வெள்ளையர்கள் அவரை கேலி செய்தால் அவர் மீண்டும் இரு மடங்கு அதிகமாக கேலி செய்தார். அவருடைய வெற்றியும் நடவடிக்கைகளும் அதிகாரத்தில் உள்ளவர்களை தொல்லைக்கு உள்ளாக்கியது. அவர் கருப்பராக இருந்தாலும் போர்க்குணம் மிக்கவர்; புத்திசாலியாக இருந்தார். ஜாக் ஜான்சன் அவரது காலத்தில் மிகவும் பிரபலமான அதே நேரத்தில் வெள்ளையர்களால் வெறுக்கப்பட்ட நீக்ரோ ஆவார்".

ஜாக் ஜான்சனைப் போல் மற்றொரு கருப்பின குத்துச்சண்டை வீரர் அமெரிக்காவின் இனக் குறியீடுகளை தைரியமாக சவால்விட வருவதற்கு ஏறக்குறைய அரை நூற்றாண்டுகள் ஆனது. சவால்விட்ட மனிதனின் பெயர் தான் காசியஸ் மார்செல்லஸ் கிளே ஜூனியர்

1942 ஜனவரி 17ஆம் தேதி அமெரிக்காவின் கெண்டகியில் உள்ள லூயிஸ் வில்லில் காசியஸ் மார்செல்லஸ் கிளே, ஒடேஷா ' கிரேடி கிளே என்ற தம்பதிக்கு பிறந்தார். காசியஸ் கிளே மற்றும் மூத்த சகோதரனை மத போதகராக உருவாக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்பி அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். காசியஸ் கிளே மத்திய உயர்நிலைப் பள்ளியில் படித்தார். படிப்பதிலும் எழுதுவதிலும் அவருக்கு சிரமங்களை உருவாக்கக்கூடிய டிஸ்லெக்ஸியா என்ற நோய் இருந்தது. இது அவருடைய கடைசி காலம் வரை தொடர்ந்தது.

காசியஸ் கிளே குத்துச் சண்டையில் நுழைகின்ற காலகட்டத்தில் அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு தீவிரமடைந்தது. அவருடைய தாயார் கருப்பர்கள் என்பதால் பல இடங்களில் குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்காத சம்பவங்களை சுட்டிக் காட்டினார். குறிப்பாக தாங்கள் வாழ்ந்த பகுதியில் இந்த இன வெறியை எதிர்த்து அக்கம் பக்கத்தார் பேசவில்லை என்ற நிலையும் நீடித்தது. தனது தாயின் மூலம் எம்மெட்டில் என்ற 14 வயது கருப்பின சிறுவனின் படுகொலையைப் பற்றி காசியஸ் கிளே அறிந்தான்.

1955 ம் ஆண்டு நடைபெற்ற இந்த படுகொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தப் படுகொலையைப் பற்றி பிற்காலத்தில் தனது மகளிடம் தெரிவிக்கின்ற பொழுது எதுவுமே அசைக்க முடியாத என்னை எம் மெட்டில் படுகொலை அசைய வைத்தது என்று அவர் கூறினார்.இனவெறி சூழ்ந்திருந்த நிலையில்தான் காசியஸ் கிளே வளர்ந்து வந்தார். எம்மெட் டில் படுகொலை, சிவில் உரிமை போராளிகளின் பேருந்து புறக்கணிப்பு இயக்கம், மற்றும் இனவெறிக்கு எதிரான குத்துச் சண்டையைப் பற்றிய கருப்பின மக்களின் மதிப்பீடு ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளை அறிந்து கொண்டு காசியஸ் கிளேயின் குத்துச்சண்டை அரசியல் வாழ்க்கைக்கு செல்வோம்.

நீதிமன்றம் முதல் வீதிமன்றம் வரை

எம்மெட்டில் 1941 ஜூலை 25ஆம் தேதி சிககாகோவில் பிறந்து வளர்ந்தான். விடுமுறை காலத்தில் மிசிசிபி அருகில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்கிறான். அங்கு மளிகை கடை நடத்தி வரும் கரோலின் என்ற 21 வயது பெண்ணுடன் பேசுகிறான். அவளுடன் அரட்டை அடிக்கிறான். ஒரு கருப்பின சிறுவன் வெள்ளை இனப் பெண்ணுடன் பேசுவது, பழகுவது, அரட்டை அடிப்பது இன வெறியர்களின் பார்வையில் மிகப்பெரும் குற்றமாகும். எனவே எம்மெட்டில் கரோலினாவை கிண்டல் செய்தான் என்று அந்த பெண்ணின் உறவினர்கள் பிராண்ட் ராய், ஜே.டபிள்யூ. மிளாம் ஆகிய இருவரும் குற்றம் சாட்டினர். அவர்களோடு இன்னும் சிலரும் சேர்ந்து ஆயுதங்களுடன் எம்மெட் டிலின் உறவினர் வீட்டுக்கு சென்றனர். அங்பிருந்து அவனை அடித்து இழுத்துச் சென்று சித்ரவதை செய்து துப்பாக்கியால் சுட்டு உடலை டல்லாஹாட்ஸ் ஆற்றில் தூக்கி வீசினர். மூன்று நாட்கள் கழித்து சிறுவனின் சிதைந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அச்சிறுவனின் தாய் மாமி டில் பிராட்லி தனது ஒரே மகனை இழந்த வேதனை தாங்க முடியாமல் இருந்தாலும் இன வெறியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோபாவேசத்துடன் பேசினார். கிறிஸ்துவ முறைப்படி சவப்பெட்டியில் சடலத்தை வைத்து எடுத்துச் செல்வார்கள். ஆனால் அந்த சிறுவனின் தாய் இந்த கொடுமையை ஊர் அறியச்செய்ய முடிவுசெய்தார். வேண்டும் என்று மரபுகளை மாற்றி, சிறுவனின் உடல் முழுவதும் இருந்த காயங்கள், சித்ரவதையின் கொடுமைகள், சிதைந்திருந்த உடல் ஆகியவற்றை அனைவரும் பார்க்கக் கூடிய முறையில் திறந்து வைத்தபடி தேவாலயத்திற்கும் கல்லறைக்கும் சவ ஊர்வலமாக எடுத்துச் சென்றார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அமெரிக்க ஜனநாயகத்தின் அவ லட்சணங்களை அந்த சிறுவனின் சிறிது தூர சவ ஊர்வலம், உடல் காயங்களும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

கருப்பின மக்களுக்கு ஆதரவான பத்திரிகைகள் அந்த கொடூர கொலையின் சிதைந்த உடலின் படங்களைப் போட்டு செய்தியை வெளியிட்டன. கருப்பின மக்களை ஒன்றிணைத்தும் வெள்ளை இனத்தவரின் அனுதாபங்களை அணி திரட்டியும் தங்களது பங்கை செலுத்தின. உள்ளூர் செய்தி பத்திரிகைகள், அதிகாரிகள் கொலையாளிகளுக்கு ஆதரவான முறையிலேயே இருந்து, சட்டம் தன் கடமையை செய்யும் என்று வசனம் பேசி இனவெறி வன்முறைக்கு வக்காலத்து வாங்கினார்கள்.

சட்டம் தன் கடமையை நிறைவேற்றுவதற்கு 1955 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்து நாட்கள் தொடர் விசாரணையை நடத்தியது. ஊரின் கொதிநிலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தெரிந்தது. சுமார் 280 பார்வையாளர்களால் நீதிமன்றம் நிரம்பி வழிந்தது. நீதிமன்றத்தை சுற்றிலும் மக்கள் குழுமியிருந்தனர். சட்டத்தை இயற்றுவது சட்டமன்றமாக இருந்தாலும் அதை அமலாக்குவதில் இருக்கக்கூடிய மீறல்களை தண்டனைக்கு உள்ளாக்குவது நீதிமன்றத்தின் கடமை. அடிமை முறைக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றிய பிறகும், நிறவெறி குற்றம் சட்டங்கள் இருந்த பொழுதும் நீதிமன்றத்தில் வெள்ளையர்களும் கருப்பர்களும் தனித்தனி பகுதியில் அமர வைக்கப்பட்டார்கள். பத்திரிக்கையின் நிருபர்கள் கருப்பர்களாக இருந்தால் கருப்பர் பகுதியில் உட்கார வைக்கப்பட்டனர். நீதிபதியின் பீடத்திலிருந்து கனிசமான தூரத்தில் தான் கருப்பர்களின் இருக்கை இருந்தது.

வெள்ளையர்கள் நீதிமன்றத்திற்குள் துப்பாக்கியை கொண்டு வருவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். வெள்ளை அதிகாரிகள் கருப்பர்களை பார்த்து சர்வ சாதாரணமாக நீக்ரோக்கள் என்று கிண்டல் செய்தார்கள். நீதிமன்றத்தின் பகிரங்கமான காட்சிகளே தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிவித்துவிட்டது. பிரயன்ட் ராய், ஜே.டபிள்யு மிளாம் இருவரும் குற்றவாளிகள் இல்லை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தீர்ப்பை விட சட்டத்தின் ஆட்சியை எள்ளி நகையாடும் சம்பவங்கள் ஓராண்டில் நடந்தன. 1956 ஆம் ஆண்டு லுக்(Look) என்ற தினசரிக்கு குற்றவாளிகள் இருவரும் பேட்டி கொடுத்த பொழுது சிறுவனை சித்ரவதை செய்து கொலை செய்தோம் என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்கள். அமெரிக்க சட்டமும், நீதித்துறையும் இந்த நேர்காணலை கண்டு கொள்ளவில்லையா அல்லது இனவெறி வெற்றியில் மூழ்கினார்களா என்பது தெரியாது.

தனது மகனின் கொடூரமான படுகொலையை - நிறவெறி கொடுமையை அவனது தாயார் மாமி டில் பிராட்லி நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார். பிற்காலத்தில் சிறுவனின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளை அமைப்பு இனவெறிக்கு எதிரான மனித உரிமை காக்க பிரச்சாரம் செய்தது. 2006 ஆம் ஆண்டில் சிறுவனின் நினைவாக ஒரு நினைவுச் சின்னத்தை அவனின் ஊரில் அமைத்தார்கள். வெள்ளை இன வெறி பிடித்த குக்கிளக்ஸ் என்ற அமைப்பு அந்த சின்னத்தை சிதைத்து கருப்பு நிறத்தை பூசி சென்றது. 2007 ஆம் ஆண்டு டில்லின் நினைவாக எட்டு இடங்களில் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டது. அச்சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட ஆற்றின் பகுதியில் நினைவுச் சின்னத்தை உருவாக்கினார்கள்.

வெள்ளை நிற வெறியர்கள் அந்த சின்னத்தை உடைத்து ஆற்றில் வீசி விட்டார்கள். மீண்டும் புதிய சின்னம் அமைக்கப்பட்டது. மீண்டும் அந்த நினைவிடத்தை நூற்றுக்கும் மேற்பட்ட தோட்டாக்களால் துளைத்து சேதப்படுத்தினார்கள். இதற்காக மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். வெள்ளையர்கள் எத்தனை முறை உடைத்தாலும் அதை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருந்தனர். 230 கிலோ இரும்பை கொண்ட மிக தடிமனான முறையில் யாராலும் தகர்க்க முடியாத முடியாத நினைவுச் சின்னம் மீண்டும் அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் இனவெறி இருபதாம் நூற்றாண்டின் நிகழ்வாக இல்லை 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்கிறது என்பதற்கான இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் சாட்சியாக இருக்கிறது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...