Pages

வியாழன், ஜூலை 27, 2023

ஏன் சீனாவில் சேரிகள் இல்லை?

 உலக அரங்கில் சீனா-5

பகுதி-1

அ.பாக்கியம்

நவதாராளமய காலத்தில் உலக அரங்கில் சீனாவின் வளர்ச்சி செல்வாக்கு செலுத்தக் கூடியதாக உள்ளது. சீனாவின் வளர்ச்சி உலக அரங்கில் செல்வாக்கு செலுத்துவதற்கு அதன் உள்நாட்டு பொருளாதாரக் கட்டமைப்பு அடிப்படை காரணமாக உள்ளது. குறிப்பாக உலகத்தில் நகரமயமாக்கல் சந்தித்துவரக்கூடிய குடிசைப்பகுதி பிரச்சனைகளில் சீனா வெற்றி கண்டுள்ளது. வேகமாக நகர்மயமாகியது மட்டுமல்ல, அதிக அளவு உள்ளூர் மட்டத்தில் வேலைவாய்ப்பிற்காக நகர்புறத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை இதர நாடுகளை விட அதிகமாக சீனாவில் இருக்கிறது. அவ்வாறு இருந்தும் ஸ்லம் உருவாகாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

நான் இந்த கட்டுரையில் சேரி, குடிசைப் பகுதி என்ற வார்த்தையினை தலைப்பு மற்றும் ஒரு இடத்தை தவிர இதர இடங்களில் பயன்படுத்தவில்லை. காரணம், இது போன்ற வாழ்விடங்கள்ஸ்லம்’ (SLUM) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இது தொடர்பான வரையறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. "மிக மோசமான சீரழிந்த வாழ்விடமாகவும் சமூக ரீதியில் புறக்கணிக்கப்பட்ட பகுதியாகவும் அன்றாட வாழ்க்கை செயல்பாடுகளை திருப்திகரமான முறையில் நடத்த முடியாத பகுதிதான்" ஸ்லம் (Shell of Languishing Urban Masses). இது தொடர்பாக நான் ஏற்கனவே எழுதியுள்ள வளர்ச்சியின் பெயரால் வன்முறை என்ற புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளேன். இப்போது இந்தக் கட்டுரையில் சேரி, குடிசை என்பது ஸ்லம் என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் ஷாங்காய் நகரமும், பெய்ஜிங் நகரமும் தலா 2 கோடி மக்கள் தொகை கொண்ட நகரங்களாகும். மேற்கண்ட இரு நகரங்களையும் உள்ளடக்கி டெல்லி, சாவோ பாலோ, டாக்கா, கெய்ரோ,  மெக்ஸிகோ சிட்டி உட்பட அனைத்தும் தெற்கு உலகில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரங்களாகும். இவை வடக்குலகில் உள்ள லண்டன், பாரிஸ், நியூயார்க் போன்றவற்றை மிஞ்சும் நகரங்களாகும்.வடக்குலகம் தெற்குலகம் என்பது  திசையை மட்டும் மையமாக வைத்தது அல்ல. வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகள் என்று பிரிக்கப்பட்ட அடிப்படையில் இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது.

தெற்குலகம் என்பது ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன், மற்றும் இஸ்ரேல், ஜப்பான், தென் கொரியா தவிர்த்த ஆசியாஆஸ்திரேலியா நியூசிலாந்து இல்லாத  ஓசியானியா ஆகிய பகுதிகளில் உள்ள நாடுகளைக் குறிக்கும். வடக்குலகம் என்பது வட அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல், ஜப்பான், தென்கொரியா அத்துடன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றை உள்ளடக்கியது.

மேற்கண்ட வடக்கு மற்றும் தெற்குலக நகரங்களில்  ஸ்லம் பகுதிகளையும், வீடற்றவர்களின் தெருவோர வாழ்க்கையையும் பரவலாக காண முடியும். ஆனால் சீனாவின் பெருநகரங்களில் அத்தகைய காட்சிகள் இல்லை என்பதுதான் அடிப்படை மாறுபாடு. 1930 ஆண்டுகளில் சீனாவின் நகரங்களில் அதாவது ஷாங்காய் முதல் சிறிய மாவட்ட நகரங்கள் வரை ஸ்லம் என்பது அசாதாரணமானது அல்ல. 1950 ஆண்டுகளில் பிரிட்டிஷ் ஆக்கிரமித்த ஹாங்காங் நகரத்திலும் ஸ்லம் என்பது சாதாரணமாக இருந்தது. மக்களுக்கு பாதுகாப்பற்ற பெரும் பகுதியான ஸ்லம் குடியிருப்புகளை சீனா எவ்வாறு குறைத்தது அல்லது முழுவதுமாக துடைத்தெறிந்து வளர்ச்சி கண்டது? இந்த வெற்றியின் பின்னணியில் உள்ள கட்டமைப்பு என்ன?

பெரும் நகரமயமாக்கல் சீனாவில் ஏன் ஸ்லம்களை உருவாக்கவில்லை?

1970ஆம் ஆண்டுகளில் பிற்பகுதியில் சீனா தனது சீர்திருத்தத்தை ஆரம்பிக்கிற பொழுது மக்கள்தொகையில் 83 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசித்தார்கள். ஆனால் 2021 ஆம் ஆண்டு கிராமப்புற மக்கள் தொகையின் எண்ணிக்கை 36 சதவீதமாக குறைந்தது. இக்காலத்தில் நடைபெற்ற வெகுஜன நகர்மயமாக்கல் மூலமாக 60 கோடிக்கும் அதிகமான மக்கள் கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர். இவற்றை எளிதான முறையில் எடுத்துக் கொள்ள முடியாத இடப்பெயர்வு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த இடப்பெயர்வு கண்டிப்பாக நகர்ப்புறங்களில் வாழ்விட சீரழிவை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

புலம் பெயர்ந்தவர்களில் 22 கோடியே 60 லட்சம் பேர் தொழிலாளர்கள். நாட்டில் மொத்த பணியாளர்களில் 70 சதவீதத்திற்கு மேல் புலம் பெயர்ந்த தொழிலாளர் பகுதி ஆகும். சீனாவின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு பெரும் உந்து சக்தியாக இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்தார்கள். இதன் பயனாக உலகிலேயே அதிக அளவுக்கு குறிப்பாக 40 கோடி நடுத்தர வர்க்க பிரிவை இந்த புலம்பெயர் நிகழ்வு உருவாக்கியது.

வரலாற்றில் இடம்பெற்ற இந்த இடப்பெயர்வு சீனாவில் நகர்ப்புற கிராமங்களை உருவாக்கியது. தரமற்ற வாழ்க்கைநிலை போதிய உள்கட்டமைப்பு இல்லாத சவால்களை சந்திக்க வேண்டி இருந்தது. குடிநீர், மின்சாரம், எரிவாயு, தகவல் தொடர்பு போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டது. இருப்பினும் சுகாதாரம், பொது சேவைகள், தீப்பிடித்தலில் இருந்து பாதுகாப்பு, பிற வசதிகள் போதுமான அளவிற்கு இல்லை. அதிகமான வாடகை, குறைந்த செலவில் வீடுகளை வாங்க முடியாத நிலைமை போன்ற கடினமான சூழலை தொழிலாளர்கள் எதிர்கொண்டனர்

20 ஆண்டுகளாக தொடர்ந்த இந்த நிலைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்து வகையில் 2000 ஆண்டில் மிகப் பெரும் முன் முயற்சியுடன் நகரங்களில் உள்ள வாழ்விடங்களை மேம்படுத்தும் பணியில் சீன அரசாங்கம் ஈடுபட்டது. பழைய வீடுகளை அகற்றி புதிய வீடுகளை விரைவான முறையில் கட்டினார்கள். குவியலான குடியிருப்புகளால் ஏற்பட்ட சீரழிந்த சுற்றுப்புறங்களை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். 2008 ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுக்குள் "நகர்ப்புற கிராமங்களில்" குடியிருந்த தொழிலாளர்களுக்காக 12.6 மில்லியன் குடும்பங்களுக்கு தரமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இதே காலத்தில் அரசின் சார்பில் பொதுவான வாடகை வீடுகள் பல லட்சங்கள் கட்டப்பட்டது. இத்துடன் குறைவான மாத வருமானம் கொண்டவர்களுக்கான வாடகை வீடுகளையும் கட்டி முடித்தனர். ஷாங்காய் நகரில் 4200 யுவான்களுக்கு குறைவாக வருமானம் இருக்கக்கூடிய குடும்பம் அரசு கட்டிய  குறைந்த வாடகை வீட்டில் குடி இருக்கலாம். சில நூறு யுவான்கள் மட்டும்தான் வாடகையாக நிச்சயிக்கப்பட்டது. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் மாதாந்திர சம்பளத்தில் ஐந்து சதவீதத்திற்கு குறைவான அளவிற்குதான் வாடகை நிர்ணயிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் குறிப்பாக 14வது ஐந்தாண்டு திட்டத்தின் அடிப்படையில் 40 நகரங்களில் 65 லட்சம் குறைந்த வாடகை வீடுகள் கட்டப்பட்டது. இது 14 வது ஐந்தாண்டு திட்டத்தில் (2021-2025) கட்டப்பட்டு வருகிற மொத்த நகர்ப்புற வீடுகளில் 26 சதவீதம் மட்டுமே.

கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடப்பெயர்வு என்பது சீனாவில் மட்டும் நடந்த ஒரு நிகழ்வு அல்ல. உலகம் முழுவதும் நடைபெற்ற நிகழ்வாகும். 70களில் தெற்கு உலகில் நகர்மயமாக்கல் விகிதங்களை விட ஸ்லம் வளர்ச்சி விகிதம் அதிகமாகவே இருந்தது. ஆனால் இதர நாடுகளில் இருந்தது போல் நகரமயமாக்களில் சீனாவில் ஸ்லம் உருவாகவில்லை. இதற்கு காரணம் என்ன? மற்ற நாடுகளில் நகர்மயம்  ஸ்லம்களை  உருவாக்கிக் கொண்டே இருந்தது. சீனாவில் நகரமயமாக்கல் என்பது சோஷலிச கட்டுமானத்தின் பின்னணி அடிப்படையில் நடைபெற்றது என்பதுதான் அடிப்படை வேறுபாடு

தொடரும்……

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...