Pages

திங்கள், ஜூலை 24, 2023

வந்தார் வரலாற்று நாயகன்

தொடர்-11

 அ.பாக்கியம்


நாட்களை எண்ணாதே நாட்களை கணக்கிடு  - அலி


குத்துச்சண்டை வீரர்களை கடவுளாக பார்த்த காலம் அது. குத்துச்சண்டை களத்தில் வெள்ளையரை கருப்பர் வீழ்த்தினால் அதை தங்கள் இன விடுதலைக்கான வெற்றியாக கருப்பர்கள் பார்த்தனர். குத்துச்சண்டையில் பெறும் வெற்றி, தங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சியை ஏற்படுத்தும் சக்தி உள்ளது என கருப்பின மக்கள் கருதினார்கள். அந்த காலகட்டத்தில்தான் கேசியஸ் கிளே குத்துச்சண்டை போட்டிகளில் காலடி எடுத்து வைக்கிறார். 


தனது 12வது வயதில் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற அவர், அமெச்சூர் போட்டிகளில் தொடர் வெற்றிகளை ஈட்டி வந்தார். பயில் முறை குத்துச்சண்டை போட்டிகளில் நூற்றுக்கும் அதிகமான வெற்றிகளை குவித்தார்.கென்டக்கி மாநில கோல்டன் க்ளோவ்ஸ் சாம்பியன் பட்டத்தை ஆறு முறை கைப்பற்றினார். தனது 16வது வயதில் 1958ல் சாம்பியன்ஸ் லைட் ஹெவிவெயிட் சிகாகோ கோல்டன் க்ளோவ்ஸ் போட்டியில் வென்ற அவர், 17 வயதில் சிகாகோ கோல்டன் க்ளோவ்ஸ் லைட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப், இன்டர்சிட்டி கோல்டன் க்ளோவ்ஸ், லைட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப், லைட் ஹெவிவெயிட்டில் பான் அமெரிக்கன் (PAN AMERICAN) வெற்றி என தொடர்ந்து வெற்றி வாகை சூடினார்.

1960ல் தனது 18வது வயதில், ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பில் சிகாகோ கோல்டன் க்ளோவ்ஸ் வெற்றி, இன்டர்சிட்டி கோல்டன் க்ளோவ்ஸ் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப், தேசிய லைட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப், அமெரிக்க ஒலிம்பிக் டிரையல்ஸ் லைட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் என அமெச்சூர் போட்டிகளில் வெற்றி மேல் வெற்றிகளை குவித்தார். பயில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வெற்றிகளை தொடர்ந்து பெற்று அடுத்த கட்டத்திற்கு கேசியஸ் கிளே முன்னேறினார். பயில்முறை போட்டிகளில் கேசியஸ் கிளேவின் வெற்றி ஒரு வரலாற்று சாதனை. அதற்கு முன் இந்தளவு வெற்றிகளை குவித்தவர் வேறு யாருமில்லை.

குத்துச்சண்டை உலகத்திற்கு புதிய வீரனையும் கருப்பின மக்களுக்கான போராளியையும் காலம் உருவாக்கிக் கொண்டிருந்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக இத்தாலியின் ரோம் நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள கேசியஸ் கிளே தேர்வு செய்யப்பட்டார்.

1960 ஆம் ஆண்டு இத்தாலியின் ரோம் நகரத்தில் கோடைகால ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை முக்கிய அங்கமாக இருந்தது. பத்து வகைபிரிவுகளில் குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டன. 51 கிலோ எடை பிரிவிலிருந்து 81 கிலோ எடை பிரிவு வரை இந்த 10 வகை குத்துச்சண்டை போட்டிகள் நடந்தன. இந்தப் போட்டியில் கேசியஸ் கிளே 81 கிலோ எடை பிரிவில் அதாவது லைட் ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை பெறுவதற்கான போட்டியில் கலந்து கொண்டார். ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 5 வரை இந்த போட்டிகள் நடைபெற்றன. கேசியஸ் கிளே பங்கேற்ற  பிரிவில் 19 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.

கேசியஸ் கிளே தன் 18வயதில் ரோம் நகரத்திற்கு சென்றார். ரோம் நகரம் செல்வதற்கான விமானப் பயணம் அவருக்கு அச்சத்தையும் பதைபதைப்பையும் ஏற்படுத்தியது. குத்துச்சண்டை வளையத்தில் கேசியஸ் கிளேவின் கைகள் பேசும். அதேபோல் வெளியே அவரின் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும். ஆரம்பத்தில் அவருடையகைப்பேச்சைவிடவாய்பேச்சுதான் அவரை அதிகம் பிரபலமாக்கியது. ஒலிம்பிக் கிராமத்தில் அனைவருடனும் கலகலப்பாக பேசி பிரபலமானார், அமெரிக்காவின் பிரதிநிதியாக போட்டியில் பங்கேற்க சென்ற அவர்,  அமெரிக்காவிற்கு பதக்கம் பெற்றுத் தரவேண்டும் என்ற உணர்விலேயே  போட்டியில் பங்கேற்றார். அவர் முதன்முதலாக குத்துச்சண்டை போட்டியில் குதித்த ஆறாவது வாரத்தில் முதல் வெற்றியைப் பெற்றார். அதேபோல் ஆறாவது வருடத்தில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை பெற்றார்.

முதல் ஆட்டத்தில் பெல்ஜிய வீரர் இவோன் பெகாஸ்சுக்கு எதிராக கேசியஸ் கிளே களம் கண்டார். கேசியஸ் கிளேவின் அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியாமல் பெல்ஜிய வீரர் திணறினார், திக்குமுக்காடினார். அவர் நாக் அவுட் மூலம் பெரிய காயங்களை சந்திக்க நேரிடும் என்பதால் நடுவர், இரண்டாவது சுற்றிலேயே போட்டியை முடித்து கேசியஸ் கிளேவை வெற்றியாளராக அறிவித்தார்.

கால் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் ஜெனடி இவனோவிச் ஷட்கோவை கேசியஸ் கிளே எதிர்கொண்டார் ஷட்கோவ் தனது வாழ்க்கையில் 227 அமெச்சூர் குத்துச்சண்டை போட்டிகளில் 215 போட்டிகளில் வெற்றி வாகை சூடியசவர். 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் மிடில்வெயிட் போட்டியில்  தங்கப் பதக்கம் வென்றவர். தன் 26 வயதில், அவர் லைட் ஹெவிவெயிட் போட்டி  வரை சென்றார். குத்துச்சண்டையில் பயிற்சியும் அனுபவமும் நிறைந்த வீரரான ஷட்கோவை கால்இறுதிப் போட்டியில் கேசியஸ் கிளே வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அனைவரின் கவனமும் கிளே பக்கம் திரும்பியது.

அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த டோனி மடிகான் என்பவரை எதிர்கொண்டார். மடிகான் மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட அனுபவம் மிக்கவர். அவரையும் கேசியஸ் கிளே வீழ்த்தினார்.

இறுதிப்போட்டி செப்டம்பர் 5 1960 ரோமின் பல்லாச டெல்லா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. போலந்து நாட்டின் ஸ்பிக்னியூ பீட்ர்சிகோவ்ஸ்கியின்(25) என்பவரை எதிர்கொண்டார்.போலந்து வீரர் வலிமையானவர். அதிக அனுபவம் பெற்றவர். மூன்று முறை ஐரோப்பிய சாம்பியன் பட்டம் பெற்றவர். இறுதிப்போட்டியில் அவர் தான் வெற்றி பெறுவார் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால், பீட்ர்சிகோவ்ஸ்கியை வீழ்த்தி கேசியஸ் கிளே தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்

போட்டியின்போது கேசியஸ் கிளே சகிப்பு தன்மையுடன் செயல்பட்டார். நிறைவான முறையில் செயல் திறனைக் காட்டினார். அவரின் அதிவேக செயல்பாடு களத்தில் அவருக்கு வெற்றியை ஈட்டித் தந்தது.  இந்த வெற்றியின் மூலம் கேசியஸ் கிளே அமெரிக்கா முழுவதும் அறியப்பட்டார். கருப்பின மக்களின் எழுச்சி நாயகனாக மாறினார். அமெரிக்காவிற்காக பட்டம் வென்றேன் என்ற பெருமிதத்தில் பூரிப்புடன் அமெரிக்கா திரும்பினார். ஒட்டு மொத்த அமெரிக்காவும் இதை வரவேற்கும் என்ற யதார்த்தமான எதிர்பார்ப்புடன் வந்தார்.

அமெரிக்க பெருமிதமும்-அவமாகத்திக் ஆரம்பமும்

அமெரிக்காவிற்காக தங்கம் வென்றதை நினைத்து கேசியஸ் கிளே பூரித்துப் போனார். பழைய கேசியசைவிட நீ சிறந்தவன் என்று ஒலிம்பிக் வளாகத்தில் கிரேக்கர்கள் அவரைப் புகழ்ந்து தள்ளினார்கள். அமெரிக்க தேசத்தின் காலடியில் என் வெற்றியை ஒப்படைக்கப் போகிறேன் என்று இறுமாப்புடன் இருந்தார். கழுத்தில் அணிவிக்கப்பட்ட தங்கப் பதக்கத்தை அவர் கழட்டவில்லை. பதக்கத்தை அணிந்தபடியேதான் விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஒலிம்பிக் சாம்பியனான நான் கடந்த 48 மணி நேரமாக எனக்கு அணிவிக்கப்பட்ட தங்கப்பதக்கத்தை கழட்டவில்லை என்றார்.

நான் படுக்கும் பொழுது கூட பதக்கத்துடன் தான் படுத்தேன். அது என் உடலை அழுத்தும் என்பதற்காக திரும்பி கூட படுக்காமல் நிமிர்ந்தே படுத்திருந்தேன். என்னால் சரியாக தூங்கக்கூட முடியவில்லை என்று கூறினார்.  தான் ஒரு அமெரிக்க வீரன் என்ற அவருடைய உள் மனக் கிளர்ச்சி அவருக்கு அதிகமாக இருந்தது. உற்சாகம் அவரிடம் கரை புரண்டு ஓடியது. ஆனால், யதார்த்தமோ வேறு விதமாக இருந்தது. அமெரிக்க சமூகத்தை இன வெறி ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது  என்பதை அனுபவம் அவருக்கு கற்றுக் கொடுத்தது.

இன வெறியின் கொடுமைகளை ஏற்கனவே தாயின் மூலமாக கேட்டு அறிந்திருந்தாலும் ஒரு மாறுபட்ட சூழலில் நேரடி அனுபவத்தின் மூலம் அவர் புரிந்து கொண்டார். சாதாரண ஒரு கருப்பின இளைஞனாக இன ஒதுக்கலுக்கு ஆளாகி இருந்தால் கேசியஸ் கிளேவிடம் என்ன தாக்கம் ஏற்பட்டிருக்கும் என்று தெரியாது. ஆனால், அமெரிக்காவிற்காக பதக்கம் வென்று அமெரிக்கா முழுவதும் அறியப்பட்ட ஒரு கருப்பின இளைஞனுக்கு ஏற்பட்ட அனுபவம் அவரை, இனவெறிக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்தது.

கழுத்தில் அணிவிக்கப்பட்ட ஒலிம்பிக் பதக்கத்துடன் கேசியஸ் கிளே, தன் நண்பருடன் லூயிஸ் வெள்ளியில் உள்ள ஒரு உணவு விடுதிக்கு உணவருந்த சென்றார். அங்கே கருப்பன் என்ற காரணத்தால் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தார்கள். நீ கருப்பன் என்பதால் உனக்கு உணவு பரிமாற முடியாது என்று எள்ளி நகையாடினர். இப்படி ஒரு அவமானம் தனக்கு நேரும் என்று கேசியஸ் கிளே நினைத்துக்கூட பார்த்ததில்லை. கோபத்தின் உச்சத்திற்கே சென்றார்.

அமெரிக்காவிற்காக பெல்ஜியனை, ரஷ்யனை, ஆஸ்திரேலிய வீரனை, போலந்து வீரனை நான் தோற்கடித்தேன். ஆனால், இங்கே நான் ஒரு அமெரிக்கனாக அங்கீகரிக்கப்படவில்லையே என்று வெதும்பினார். அமெரிக்க தேசம் அனைவருக்குமானது அல்ல; நிறவெறி சிறையில் இருக்கும் கூடாரம் என்ற கோபம் பொங்கி எழ, கழுத்தில் அணிந்திருந்த தங்கப் பதக்கத்தை கழட்டி அருகில் ஓடிக்கொண்டிருந்த ஓகியோ ஆற்றில் வீசினார்.

அதுவரையில் இருந்த அவரது உணர்ச்சி பிழம்புகள் அனைத்தும் எதிர்மறையாக மாறியது. இனவெறிக்கு எதிராக எதிர்வினை ஆற்ற அவருடைய சிந்தனை நடை போட்டது. அதற்கான தேடலை துவங்கினார். வழி காட்டவும் வழி மாற்றவும் மால்கம் எக்ஸ் என்ற கருப்பின போராளி அறிமுகமானார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...