Pages

வெள்ளி, ஜூலை 21, 2023

குத்துச்சண்டை : இனத்தை கடக்கும் வழிமுறை.

தொடர்: 10

1955ஆம் ஆண்டில், மாண்ட்கோமெரி, அலபாமா நகர ஆணைப்படி கருப்பர்கள் நகரப் பேருந்துகளில் பிரிக்கப்பட்ட பின் பாதியில் அமர்ந்து செல்ல வேண்டும். முன்பாதி வெள்ளையர்களுக்காக ஒதுக்கப்பட்டது. பேருந்தின் முன்பாதி நிரம்பியிருந்தால், வெள்ளையர்களுக்குத் தங்கள் இருக்கைகளைக் கருப்பர்கள் கொடுத்துவிட வேண்டும். டிசம்பர் 1,1955, ஆப்பிரிக்க அமெரிக்க தையல் தொழிலாளி ரோசா பார்க்ஸ் (Rosa Parks) உள்ளூர் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் தனது பணியினை முடித்து மாண்ட்கோமரியின் கிளீவ்லேண்ட் அவென்யூ பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அவள் கருப்பர்களுக்காக ஒதுக்கப்பட்ட "கருப்பர்கள் பிரிவின்" (colored section.”) முன் வரிசையில் அமர்ந்திருந்தாள். வெள்ளை நிற இருக்கைகள் நிரம்பியதும், ஓட்டுநர் ஜே.பிரெட் பிளேக், பார்க்ஸ் மற்றும் மூன்று பேரை தங்கள் இருக்கைகளை காலி செய்து வெள்ளயருக்கு இடம் தரும்படி கூறினார். மற்ற கருப்பின பயணிகள் இருவரும் எழுந்து இடம் கொடுத்தனர். ஆனால் ரோசா பார்க்ஸ் மறுத்துவிட்டார். அவர் கைது செய்யப்பட்டு $10 அபராதமும் விதிக்கப்பட்டது

தனது பேருந்து இருக்கையை கொடுக்க மறுத்ததற்காக ரோசா பார்க்ஸ் கைது செய்யப்படுவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பு, 15 வயதான கிளாடெட் கொல்வின் அதே செயலுக்காக மாண்ட்கோமெரியில் கைது செய்யப்பட்டார்

பார்க்ஸ் கைது செய்யப்பட்ட நேரத்தில் அவர் சிவில் உரிமைகள் செயல்பாட்டாளராக இருந்தார். அவரும் அவரது கணவர் ரேமண்டும், உண்மையில், வண்ணமயமான(கருப்பு,பழுப்பு) மக்களின் முன்னேற்றத் திற்கான தேசிய சங்கத்தின் ( National Association for the Advancement of Colored People NAACP) உறுப்பினராகவும், பார்க்ஸ் அதன் உள்ளுர் செயலாளராகவும் பணியாற்றினார். அவர் கைது செய்யப்பட்டவுடன், பார்க்ஸ் ஒரு முக்கிய கருப்பினத் தலைவரான இ.டி. நிக்சனை அழைத்தார். சிறையில் இருந்த அவரை ஜாமீனில் விடுவித்து இந்த கைதுக்கு எதிராக போராடுவதற்கு திட்டமிட்டார்

சிவில் உரிமைகளுக்காகப் பணியாற்றும் கருப்பினப் பெண்களின் அமைப்பான பெண்கள் அரசியல் கவுன்சில் (The Women’s Political Council)   (WPC), பார்க்ஸ் முனிசிபல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் நாளான டிசம்பர் 5 அன்று பேருந்து பயணத்தை புறக்கணிக்க அழைப்பு விடுத்தது. இந்த புறக்கணிப்பு அழைப்பை பெண்கள் அரசியல் கவுன்சில் தலைவர் ஜோஆன் ராபின்சன் விடுத்தார்.

புறக்கணிப்பு பற்றிய செய்தி பரவியதும், மாண்ட்கோமெரி (அலபாமாவின் தலைநகரம்) முழுவதும் அமெரிக்க கருப்பின தலைவர்கள் தங்கள் ஆதரவை வழங்கத் தொடங்கினர். ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்தில் புறக்கணிப்பை அறிவித்தனர், மேலும் மாண்ட்கோமெரி பொதுநல செய்தித்தாள், இது குறித்து முதல் பக்க கட்டுரையை வெளியிட்டது.

ஏறக்குறைய 40,000 கருப்பினப் பேருந்து பயணிகள் -நகரத்தின் பேருந்து பயணிகளில் பெரும்பாலோர் அவர்கள்தான் -டிசம்பர் 5-ஆம் தேதி பேருந்து பயணத்தை புறக்கணித்தனர். அன்று பிற்பகலில், கருப்பினத் தலைவர்கள் மாண்ட்கோமரி மேம்பாட்டு சங்கத்தை (Montgomery Improvement Association-MIA) அமைப்பதற்காக சந்தித்தனர். மாண்ட்கோமரியின் டெக்ஸ்டர் அவென்யூ பாப்டிஸ்ட் தேவாலயத்தின் 26 வயது நிரம்பிய போதகரான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரை (Martin Luther King Jr) அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை பேருந்து புறக்கணிப்பைத் தொடர முடிவு செய்யப்பட்டது.

ஆரம்பத்தில், பேருந்து பிரிவினைச் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. கருப்பர்களுக்கு மரியாதை, கருப்பின ஓட்டுநர்களை பணியமர்த்துதல், முதலில் வருபவர்களுக்கு முதலில் உட்காரும் கொள்கை ஆகியவற்றைக் மட்டும்தான் கோரியது. வழக்கறிஞர் ஃப்ரெட் டி. கிரே மற்றும் NAACP அமைப்பைசேர்ந்த ஐந்து பெண்களை உள்ளடக்கிய மாண்ட்கோமெரி பெண்கள் குழு,பேருந்துப் பிரிப்புச் சட்டங்களை முற்றிலும் செல்லாததாக்கக் கோரி அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் மாண்ட்கோமரி நகர நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடுத்தது. இதன்பிறகு போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக இது மாறியது.

மாண்ட்கோமரியின் பேருந்துப் பயணிகளில் குறைந்தது 75 சதவீதம் கருப்பர்கள் தான். ஆனாலும் நகர நிர்வாகம் கோரிக்கைகளை ஏற்க மறுத்தது. கருப்பின மக்கள் பயணம் செய்வதற்கு கடும் சிரமங்களை அனுபவித்தனர். சிரமங்களை சிரமேற்று புறக்கணிப்பை கைவிடாமல், நீட்டிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். எனவே, கருப்பினத் தலைவர்கள்கார்பூல்களை’ (carpool) ஏற்பாடு செய்தனர். வாகன உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் அவரவர் சொந்த காரை, கருப்பினத்தவர்களை வேலைக்கு அழைத்துச் சென்று, அழைத்து வர பயன்படுத்தினர்.  மேலும் நகரத்தின் கருப்பின டாக்சி ஓட்டுநர்கள் கருப்பின பயணிகள் டாக்சியில் பயணம் செய்ய பேருந்து கட்டணத்தையே வசூலித்தனர். பல கருப்பினத்தவர்கள் வேலைக்கும், பிற இடங்களுக்கு போய் வரவும் ‘நடராஜா சர்வீசை’ தேர்ந்தெடுத்தனர். புறக்கணிப்பை தொடர்வதற்கு கருப்பினத் தலைவர்கள் வெகுஜன கூட்டங்களை நடத்தினர்

ஜூன்5,1956 அன்று, மாண்ட்கோமெரி ஃபெடரல் நீதிமன்றம், பேருந்துகளில் இனரீதியாகப் பிரிக்கப்படுவது அமெரிக்க அரசியலமைப்பின் 14 வது திருத்தத்தை மீறுவதாகத் தீர்ப்பளித்தது. அரசியல் சட்டம் அனைத்து குடிமக்களுக்கும்-இனத்தைப் பொருட்படுத்தாமல்-சம உரிமைகள் மற்றும் மாநில மற்றும் கூட்டாட்சி சட்டங்களின் கீழ் சமமான பாதுகாப்பை உறுதி செய்கிறது என்றும் தீர்ப்பளித்தது. நகரநிர்வாகம் இதை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் டிசம்பர் 20, 1956 ல் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. டிசம்பர்21,1956இல் மாண்ட்கோமரியின் பேருந்துகளில் கருப்பர்கள் பயணிக்க துவங்கினர். 381 நாட்கள் நீடித்த மாபெரும் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இது அமெரிக்காவில் சிவில் உரிமைகளுக்காக

நடைபெற்ற வெகுஜன இயக்கம்,

ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு

நியாயமான உரிமைகள் கிடைப்பதற்கு

நீதிமன்றத்திற்கு வெளியே

கூடுதல் பெரிய அளவிலான

நடவடிக்கைகளுக்கு களம் அமைத்தது.

தீர்ப்பிற்கு பிறகு கருப்பின மக்கள் தாக்குதலை சந்தித்தனர். தனித்தனி பேருந்து நிலையங்களை அமைத்தனர். கருப்பர் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஒரு துப்பாக்கி சுடும் வீரர் ஒரு கருப்பின பயணியின் இரு கால்களையும் உடைத்தார். ஜனவரி 1957 இல், நான்கு கருப்பின தேவாலயங்கள் மற்றும் முக்கிய கருப்பினத் தலைவர்களின் வீடுகள் குண்டுவீசித் தாக்கப்பட்டன; மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் வீட்டில் இருந்த வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

மாண்ட்கோமெரி பஸ் புறக்கணிப்பு பல முனைகளில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இது அமெரிக்காவில் சிவில் உரிமைகளுக்காக நடைபெற்ற வெகுஜன இயக்கம், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு நியாயமான உரிமைகள் கிடைப்பதற்கு நீதிமன்றத்திற்கு வெளியே கூடுதல் பெரிய அளவிலான நடவடிக்கைகளுக்கு களம் அமைத்தது. MIA இன் தலைமைத்துவத்தில், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சிவில் உரிமைகள் இயக்கத்தின் ஒரு முக்கிய தேசியத் தலைவராக உருவெடுத்தார்.இந்த புறக்கணிப்பு அமெரிக்காவில் நிகழும் சிவில் உரிமைப் போராட்டங்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச கவனத்தை கொண்டு வந்தது, 100 க்கும் மேற்பட்ட நிருபர்கள் புறக்கணிப்பின் போது மாண்ட்கோமரிக்கு விஜயம் செய்தனர். ரோசா பார்க்ஸ், தனது வாழ்நாள் முழுவதும் அமெரிக்க சிவில் உரிமைகள் செயல்பாட்டாளராக இருந்தார். வரலாற்றில் ஒரு மதிப்பிற்குரிய நபராக இருந்தார். 1999 ஆம் ஆண்டில், அமெரிக்க காங்கிரஸ் தனது உயரிய கௌரவமான காங்கிரஸின் தங்கப் பதக்கத்தை அவருக்கு வழங்கியது.

இதற்கு முன்பு பேருந்தில் வெள்ளையர்களுக்கு இடம் கொடுக்காததால் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவை தொடர் போராட்டங் களுக்கு வழி வகுக்கவில்லை. எம்மெட் டில் என்ற 14 வயது சிறுவனின் மரணம் அமெரிக்கா முழுவதும் பேரதிர்ச்சியை உருவாக்கியது. கொந்தளிப்புக்கான தருணங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொழுது ரோசா பார்க்கின் பேருந்து கைது கருப்பின மக்களை களத்தில் இறக்கியது.

குத்துச்சண்டை இனத்தை கடக்க ஒரு வழிமுறை:

எம்மெட் டில் படுகொலையும், ரோசாப் பார்க்கின் பேருந்து எதிர்ப்பு போராட்டமும் கருப்பின மக்களின் வெகுஜன எழுச்சியை உருவாக்கியது . சட்டபூர்வ போராட்டங்களை முன்னெடுக்க உதவியது. கருப்பினத்தவர்கள் அதைவிட அதிமாக எதிர்ப்பின் வடிவத்தை எதிர்பார்த்தனர். அதுதான் குத்துச்சடை. நிறவெறிக்கு எதிராக அவர்கள் வெளிப்படையாக தங்கள் வலிமையும் மேன்மையையும் காட்டுவதற்கு குத்துச்சண்டை ஒரு களமாக அமைந்தது.

1950ஆம் ஆண்டுகளில் கருப்புஇன அமெரிக்கர்கள் பொருளாதார வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் வெள்ளையர்களால் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். குத்துச்சண்டை போட்டியானது மிகவும் அசாதாரணமான வழிகளில் இந்த கட்டுப்பாட்டையும் இனத்தையும் கடந்து செல்வதற்கு உதவியது. கருப்பின விளையாட்டு வீரர்கள் வெள்ளை விளையாட்டு வீரர்களுடன் சமதளத்தில் போட்டியிடுவதற்கும், வெளிப்படையாக தங்கள் வலிமையை காட்டுவதற்கும், வெள்ளை இன வீரர்களுக்கு சமமான அளவில் பணம் சம்பாதிப்பதற்கும் குத்துச்சண்டை பயன்பட்டது என்று கருப்பின மக்கள் நம்பினார்கள். அதற்காக பாடுபட்டார்கள்

காசியஸ் கிளே தலைமுறையைச் சேர்ந்த பல கருப்பர்கள், சமமான மரியாதையை பெறுவதற்கு கருப்பின மக்களின் கல்வியும் பண சேமிப்பும் போதுமானதாக இல்லை என்று நம்பினார்கள். ஒருவரின் முஷ்டியின் பலம், நெம்புகோல் செயல்பாடு, அச்சத்தை தூண்டக்கூடிய ஒரு வழிமுறை ஆகியவைதான் சமமான மரியாதையை பெற்றுக் கொடுக்கும் என்று நம்பினார்கள். அந்த அச்சத்தை கொடுக்க கூடிய செயலாக குத்துச்சண்டை யைப் பார்த்தார்கள்.

1955 காலங்களில் குத்துச்சண்டை அமெரிக்க கலாச்சாரத்தின் மையமாக மாறிவிட்டது. விளையாட்டு ரசிகர்களுக்கு ஹெவி வெயிட் சாம்பியன் சண்டையைப் போல வேறு எந்த விளையாட்டு நிகழ்வையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. வேறு எந்த விளையாட்டு வீரருக்கும் கிடைக்காத தனிப்பட்ட மரியாதை குத்துச்சண்டை வீரருக்கு கிடைத்தது. சண்டையில் சிறந்த வீரர்கள் மட்டுமே எங்கு சென்றாலும் வாழ்நாள் முழுவதும் சாம்பியன் என்று அழைக்கப்பட்டார்கள். குத்துச்சண்டையின் ஒரு ஹெவி வெயிட் வீரன் கடவுளுக்கு நிகராக கருதப்பட்டான். அதிகாரத்தை பயமுறுத்தக்கூடிய ஆண்மை, துணிச்சல் கொண்ட ஒரு உருவமாக குத்துசண்டை வீரர்கள், விளையாட்டு ரசிகர்களால் பார்க்கப்பட்டார்கள். குறிப்பாக கருப்பின விளையாட்டு வீரர்கள் இவ்வாறு போற்றப்பட்டார்கள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...