Pages

வெள்ளி, ஜூலை 07, 2023

பாசிச முசோலினியின் வீரர் வீழ்த்தப்பட்டார்

 

தொடர் 7

அ.பாக்கியம்


:

குத்துச்சண்டைக்கும் முசோலினிக்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம். அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் மக்களிடம் ஏதாவது ஒரு வகையில் அறிமுகமானவர்களை தங்கள் கொள்கையின் பிரதிநிதியாக காட்டிக் கொள்வது வழக்கமானது. இன்றும் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. 1935 ஆம் ஆண்டு ஜோ லூயிஸ் 13 முறை குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டார். ஆனால் அவரை ஊடகத்திற்கும் உலகத்திற்கும் வெளிச்சம் போட்டு காட்டிய குத்துச்சண்டை போட்டி ஜூன் 25 1935 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியாகும். ஜோ லூயிஸ் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பிரைமோ கார்னீரா (Primo Carnera) என்பவருடன் மோதினார். குத்துச்சண்டை வரலாற்றில் மிக உயரமானவர். வெற்றி மேல் வெற்றி பெற்றவர்.

அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை இந்த கார்னீராவை அசுரன் (The Monster) என்று அழைத்தது. பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்தப் பிரைமோ கார்னீரா, எர்னிஷாப் என்பவரை பதினொன்றாவது சுற்றில் நாக்அவுட் செய்தார்.  அடுத்த 4 நாட்களில் எர்னிஷாப் மரணம் அடைந்தார். இத்தாலியின் பெனிட்டோ முசோலினி, பிரைமோ கார்னீராவை தன்னுடைய பிரதிநிதியாக அறிவித்தார். அவருடன் ஜோ லூயிஸ் மோத இருந்தார். ஆப்பிரிக்கா கண்டத்தின் எத்தியோப்பியா நாட்டின் மீது முசோலினி படையெடுக்க ஆயத்தம் செய்தார். இந்த பின்னணியில் எத்தியோப்பியா மீது படையெடுப்பை எதிர்த்து ஜோ லூயிஸ் களம் காண்கிறார் என்ற உணர்வு கருப்பர்கள் மத்தியிலும் ஆப்பிரிக்கர்கள் மத்தியிலும் மேலோங்கியது.

மிக அதிக பலம் வாய்ந்த பிரைமோ கார்னீராவை ஜோ லூயிஸ் ஆறாவது சுற்றில் நாக் அவுட் மூலமாக வீழ்த்தினார். ஆப்பிரிக்காவும் அமெரிக்கா கருப்பர்களும் முசோலினியை வீழ்த்தியதாக துள்ளி குதித்தனர். மறுபுறத்தில் எத்தியோப்பியாவை தரைமட்டமாக்க பாசிச முசோலினி தீவிரம்காட்டத் தொடங்கினார். அமெரிக்காவின் இனவெறி பிடித்த பத்திரிகைகள் ஜோ லூயிசை புகழாமல் இருக்க முடியவில்லை. அவரது பழுப்பு நிறத்தையும், கருப்பு நிறத்தையும் குறிப்பிட்டு பல பட்டங்களை சூட்டினார்கள். ஒரு சில பத்திரிகைகள் ஜோ லூயிஸ் பற்றி இதமாக எழுதினாலும் பல பிரபலமான பத்திரிகைகள் கருப்பருக்கு எதிராகவே எழுதி இனவெறியை வெளிப்படுத்தினார்.

விரட்டும் வெள்ளை; விடாது கருப்பு:

1930 ம் ஆண்டுகளில் குத்துச்சண்டை தேக்க நிலையை அடைந்தது 1929 ஆம் ஆண்டு ஜாக் டெம்ப்சே(Jack Dempsey) உலகச் சாம்பியன் பட்டத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு குத்துச்சண்டைகள் சூதாட்டங்களால் சூழப்பட்டது. கருப்பின வீரர்கள் முன்னேறுவதை வெள்ளையர்கள் விரும்பவில்லை. அவர்களை அங்கீகரிக்க மறுத்தனர். ஆனாலும், இவற்றை எல்லாம் மீறிய ஜோ லூயிஸ் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. நியூயார்க் டைம்ஸ் கட்டுரையாளர், ஜோ லூயிஸ் குத்துச்சண்டைக்கு ஒரு வரப்பிரசாதம் என்று எழுதினார். ஜாக் டெம்ப்சே விளையாட்டை மந்த நிலையிலிருந்து வெளியே கொண்டு வந்தார். ஜோ லூயிஸ் குத்துச்சண்டை விளையாட்டை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். மீண்டும் குத்துச்சண்டை சூடு பிடிக்க ஆரம்பித்தது.

1935 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் சாம்பியன் மேக்ஸ் பயர்(Max Baer) என்பவருடன் ஜோ லூயிஸ் போட்டியிடுவதற்கான களம் தயார் செய்யப்பட்டது. விளம்பரங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்தது. கருப்பன் சாம்பியன் ஆகி விடக்கூடாது என்பதற்காக மீண்டும் வெள்ளை நிற மேலாண்மையைப் பற்றி பத்திரிகைகள் எழுதத் தொடங்கின. வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கையில் போட்டி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, மேக்ஸ் பயர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் அவர் குத்துச்சண்டை வளையத்துக்குள் நோர்டிக் (அதாவது வெள்ளை இனத்தின் மேன்மையை பறைசாற்றும் பூர்வீக பெயர்) மேன்மையை பாதுகாப்பார் என்று எழுதியது. ஆனால், ஜோ லூயிஸ் இனவெறியை பேசிய மேக்ஸ் பயரை நான்காவது சுற்றிலேயே வீழ்த்தினார்.

மேக்ஸ் பயர் தனது தொழில் முறை குத்துச்சண்டை போட்டியில் ஒரு முறை மட்டும் தான் தோல்வி அடைந்துள்ளார். தற்போது ஒரு கருப்பின போராளியிடம் எழமுடியாத தோல்வியை சந்தித்துள்ளார். கருப்பின வீரர்கள் தங்களது வெற்றியை உடல் பலம், மன பலம், அறிவுத்திறன் ஆகியவற்றையெல்லாம் கடந்து இனவெறி தாக்குதலை எதிர்கொண்டுதான் வெற்றி பெற வேண்டிய சமூக சூழலில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அடுத்தடுத்து ஜோ லூயிஸ் பலரை வீழ்த்தி வெற்றிபெற்றார். அதன் முலம் அவர் ஹெவி வெயிட் குத்துச்சண்டை பிரிவில் நம்பர்ஒன் போட்டியாளராக தரவரிசைப் படுத்தப்பட்டார்.

அணிவகுத்தேன்; ஆரவாரம் செய்தேன்; கத்தினேன்; அழுதேன்:

ஜோ லூயிஸ் முதல் தரவரிசைக்கு வந்தவுடன் ஜெர்மனியைச் சேர்ந்த மேக்ஸ் நாஜி அதிகாரிகள் (Max Schmeling) என்ற ஜெர்மானியருடன் மோதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேக்ஸ் ஷ்மெலிங் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டார். குறிப்பாக ஜோ லூயிஸ் பலவீனம் என்ன என்பதை கண்டுபிடித்து அவற்றின் மீது தாக்குதல் தொடுக்க திட்டமிட்டார். ஜோ லூயிஸ் தன் இடது கையை அடிக்கடி கீழே இறக்கும் பழக்கத்தை கண்டுபிடித்து அந்த இடத்தில் தாக்குதல் தொடுத்து வீழ்த்த திட்டமிட்டார். ஜோ லூயிஸ் சண்டைக்கான உரிய பயிற்சிகளை மேற்கொள்ளவில்லை. வெற்றி பெற்று விடலாம் என்று மதிப்பீடு இருந்ததால் அவர் கோல்ப் விளையாட்டில் கவனம் செலுத்தினார். 1936 ஜூன்19 அன்று அமெரிக்காவின் யாங்கி ஸ்டேடியத்தில் போட்டி நடைபெற்றது. பன்னிரண்டாவது சுற்றில் மேக்ஸ் ஷ்மெலிங்,  ஜோ லூயிசை வீழ்த்தினார். இந்த தோல்வி வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு வழி வகுத்தது. உலகின் மிகவும் பிரபலமான குத்துச்சண்டை போட்டி நடைபெறுவதற்கான  களத்தை இது அமைத்துக் கொடுத்தது.

வெள்ளை இன வெறியர்கள் மிகப் பெரும் மகிழ்ச்சி அடைந்து தெருக்களிலே ஆட்டம் போட்டார்கள். நியூயார்க்போஸ்ட் என்ற பத்திரிக்கை ஒரு சிலை வீழ்ந்தது என்று எழுதியது. ஜெர்மனியின் ஹீரோவாக மேக்ஸ் ஷ்மெலிங் கொண்டாடப்பட்டார். மேக்ஸ் ஷ்மெலிங்கை தங்களது இன வெற்றியாளனாக நாஜி அதிகாரிகள் வர்ணித்தார்கள். ஹிட்லர், ஷ்மெலிங்கின் மனைவியைத் தொடர்பு கொண்டு, அவருக்கு மலர்களையும் ஒரு செய்தியையும் அனுப்பினார்: "எங்கள் மிகச்சிறந்த ஜெர்மன் குத்துச்சண்டை வீரரான உங்கள் கணவரின் அற்புதமான வெற்றிக்கு, நான் உங்களை முழு மனதுடன் வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஷ்மெலிங் போட்டியில் வெற்றியடைந்த பிறகு ஜெர்மன் பத்திரிகை நிருபரிடம் இனவாத கருத்துக்களை வெளியிட்டார். இந்த நேரத்தில் நான் ஜெர்மனியிடம் சொல்ல வேண்டும், குறிப்பாக Fuehrer க்கு தெரிவிக்க வேண்டும், இந்த சண்டையில் என் நாட்டு மக்கள் அனைவரின் எண்ணங்களும் என்னுடன் இருந்தன. பியூரியர் (Fuehrer) தலைவர்-இட்லர்)  அவருடைய விசுவாசிகளும் என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார்கள். இந்தச் சிந்தனை எனக்கு இந்தப் போராட்டத்தில் வெற்றிபெற பலத்தை அளித்தது. ஜெர்மனியின் இனமேன்மை வெற்றியை வெல்வதற்கான தைரியத்தையும் சகிப்புத்தன்மையையும்  எனக்கு அளித்தது என்று கருத்துக்களை வெளியிட்டார்.

கருப்பர்கள் தூக்கமற்ற இரவை சந்தித்தார்கள். முற்றிலும் எதிர்பாராத ஒரு முடிவு என்று வருத்தம் அடைந்தனர். லூயிஸ் தோல்வி அடைந்த அந்த இரவை இறுதிச் சடங்கு போல் இருந்தது என்று கருப்பின எழுத்தாளர்கள் எழுதி தீர்த்தார்கள். ஹார்லெம் மறுமலர்ச்சியின் முக்கிய நபரும் இலக்கியவாதியுமான லாங்ஸ்டன் ஹியூஸ் (Langston Hughes)  லூயிஸின் தோல்விக்கான தேசிய எதிர்வினையை இவ்வாறு விவரித்தார். நான் ஏழாவது அவென்யூவில் நடந்தேன். வளர்ந்த ஆண்கள் குழந்தைகளைப் போல அழுவதையும், பெண்கள் தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதையும் பார்த்தேன். அன்றிரவு ஜோ டக் அவுட் ஆன செய்தி வந்தபோது நாடு முழுவதும் மக்கள் கதறி அழுதனர்.

தோல்வி அடைந்த ஜோ லூயிஸ் அடுத்தடுத்து பலரை வீழ்த்தி பட்டம் வென்றார். 1936 ஆகஸ்ட் 18 அன்று ஜாக் ஷார்கியை வீழ்த்தினார். 1937 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி  ஜேம்ஸ் ஜே பிராடாக் (James J.Braddock) என்பவருடன்  மோதி வெற்றி பெற்றார். தனது எட்டாவது சுற்றில் பிராடாக்கை ஜோ லூயிஸ் வீழ்த்தினார். பிராடாக் நாக் அவுட் ஆனது இதுவே முதல் முறையாகும். ஜோ லூயிசின் இந்த வெற்றி கருப்பர்கள் மத்தியில் உற்சாகப் பெருக்கெடுத்து ஓடியது. புகழ்பெற்ற எழுத்தாளர் லாங்ஸ்டன் ஹியுஸ், ‘‘ஜோ லூயிஸ் ஒவ்வொரு முறையும் சண்டையில் வெற்றி பெற்ற பொழுது ஏழைகளும், ஆயிரக்கணக்கான கருப்பின அமெரிக்கர்களும், மைதானங்களிலும், தெருக்களிலும், அணிவகுத்து உற்சாகத்துடன் கத்துவதும், ஆனந்தக் கண்ணீர் விடுவதுமாக  இருந்தனர். அமெரிக்காவின் வேறு யாரும் நீக்ரோ உணர்ச்சிகளின் மீது இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது இல்லை’’ என்று எழுதுகிறார். நானும் அணிவகுத்தேன்; ஆரவாரம் செய்தேன்; கத்தினேன்; அழுதேன் என்று தனது வரிகளை முடிக்கிறார்.

அமெரிக்காவின் புகழ் பெற்ற இன சமத்துவ போராளி மால்கம் எக்ஸ், ஜோ லூயிசின் இந்த வெற்றியைப் பற்றி குறிப்பிடுகிற பொழுது, நடந்து செல்லக்கூடிய ஒவ்வொரு நீக்ரோ சிறுவனும் அடுத்த பிரவுன் பம்பர் ஆக விரும்பினான் என்று எழுதுகிறார். இந்தப் போட்டிக்குப் பிறகும் ஜோ லூயிஸ் கீழ்க்கண்டவாறு கூறினார். நான் மேக்ஸ் ஷ்மெலிங்கை தோற்கடிக்கும் வரை என்னை வீரன் என்று அழைப்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றார். ஆனால் மேக்ஸ் செமலிங் உடன் மோதுவதற்கு ஜோ லூயிஸ் தயாராக இருந்த பொழுது ஜெர்மனி போட்டிக்கு தயாராக இல்லை. இதற்கிடையில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த டோனிபாண்டிடெரர் என்று அழைக்க கூடிய பிரிட்டனின் சாம்பியன் டாமி பார்(Tommy Farr) என்ற வீரனை ஆகஸ்ட் 30, 1937ல் புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி வெற்றிவாகை சூடினார்.

அ.பாக்கியம்

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...