Pages

சனி, ஜூலை 01, 2023

வீழ்த்தப்பட்ட வெள்ளை நம்பிக்கை

தொடர்: 5

அ.பாக்கியம்

வெள்ளை இனத்தின் மேன்மையை நிரூபிக்கவும்,  ஜாக் ஜான்சனை தோற்கடிக்கவும் மாபெரும் வெள்ளை நம்பிக்கை நீங்கள் ஒருவர் மட்டும்தான் என்று ஜேம்ஸ் ஜே ஜெப்ரிசை ஏற்றுக் கொள்ள வைத்தனர். பரிசுத்தொகை 65,000 டாலராக அறிவிக்கப்பட்டது. ஜாக் ஜான்சனை எளிதாக தோற்கடித்து விடலாம் என்ற இறுமாப்புடன் போட்டிக்கு தயாரானார் ஜெப்ரிஸ். 1909 அக்டோபர் மாதம் போட்டிக்கான ஒப்பந்தம் போடப்பட்டது.

1910,ஜூலை,4 அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று போட்டி துவங்கியது. நவடாவின் ரெனோ நகரத்தில் இந்த போட்டிக்காக அமைக்கப்பட்ட அரங்கத்தின் மேடையில் இரண்டு வீரர்களும் தோன்றினார்கள். இந்தப் போட்டிதான் அதுவரை நடந்த போட்டிகளிலேயே அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்ட போட்டி. அமெரிக்க நிறவெறியின் வெற்றி தோல்விக்கான போட்டியாக கருதப்பட்டது. நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. தந்தி மூலம் செய்திகள் பரவிக் கொண்டிருந்தது. அரங்கத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கூடினார்கள். அரங்கத்தில் துப்பாக்கிகள் தடை செய்யப்பட்டதுடன், மதுபானமும் தடை செய்யப்பட்டு, மது அருந்தியவர்களும், உள்ளேவரக்கூடாது என்று காவல்துறை கட்டுப்படுத்தியது. ஆப்பிள் நறுக்கும் கத்தி உட்பட சிறு ஆயுதங்கள் கூட  அரங்கத்தில் அனுமதிக்கப்படவில்லை. வெள்ளையர்களால் அரங்கம் நிரம்பி வழிந்தது. கருப்பர்களின் எண்ணிக்கை குறைவாக  இருந்தது.

ஜேம்ஸ் ஜே ஜெஃப்ரிஸ் "நீக்ரோவை விட வெள்ளைக்காரன் சிறந்தவன் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்த போட்டியில் நான் ஈடுபடுகிறேன்" என்று நிறவெறி திமிருடன் எக்காளமிட்டார். எனது எதிரியை பின் தொடர்ந்து சென்று அவரை விரைவில் நாக் அவுட் செய்வதுதான் என் நோக்கம் என்று ஆர்ப்பரித்து வெள்ளை நிற வெறியர்களின் வெறிக் கூச்சலுடன் வளையத்துக்குள் தோன்றினார். போட்டி துவங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஜாக் லண்டனிடம் கேட்ட பொழுது ‘‘ஜெப்ரிஸ் வெள்ளை இனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. இந்த முறை அவரே மகத்தானவர்" என்று தெரிவித்தார். கருப்பின வீரன் ஜாக் ஜான்சனிடம் கேட்ட பொழுது அவர் சொன்னார் "சிறந்த மனிதர் வெற்றி பெறட்டும்". வளையத்துக்குள் வீழ்த்துவதற்கு முன்னால்  நிறவெறியின் அநீதியை ஒரே வரியில் வளையத்திற்கு வெளியே  வீழ்த்தினார்.

மிகப்பெரும் ஆரவாரத்துக்கு இடையே போட்டி துவங்கியது. மொத்தம் 24 சுற்றுகள் நடைபெற வேண்டும். வெள்ளையர்களின் வெறிக்கூச்சல் ஜெப்ரிசுக்கு ஆதரவாகவே இருந்தது. போட்டியின் 15 வது சுற்றில் ஜெப்ரிஸை ஜாக் ஜான்சன் வீழ்த்தி பட்டத்தை வென்றார். ஜெப்ரிஸ் தனது வாழ்நாளில் முதன்முறையாக இரண்டு தடவை தரையில் வீழ்த்தப்பட்டார். ஜாக் ஜான்சன் இந்த போட்டி பற்றி கூறுகிற பொழுது நான்காவது சுற்றிலேயே சண்டை முடிந்து விட்டதாக நான் கருதினேன். ஜெப்ரிஸின் தோற்றத்தை பார்த்து பழைய கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன் என்று தெரிவித்தார். இந்தப் போட்டி முடிந்தவுடன் தோல்வி அடைந்த ஜெப்ரிசை கேட்ட பொழுது என்னால் ஜான்சனை எப்பொழுதுமே வீழ்த்தி இருக்க முடியாது என்றார்.

சல்லிவன் என்ற புகழ்பெற்ற விளையாட்டு வீரர் இந்த போட்டியை பற்றி சொல்லி இருப்பது பொருத்தமானது. "நூற்றாண்டின் சண்டை முடிந்து விட்டது. ஒரு கருப்பின மனிதன் உலகின் மறுக்க முடியாத சாம்பியன். ஒரு தலைப்பட்சமான போட்டி தான். காரணம் 15 சுற்றுக்களிலும் ஜான்சனின் கைதான் ஓங்கிஇருந்தது. ஜெப்ரிஸ் தன்னைப் பற்றி பெருமையாக குறிப்பிட்டது எதுவும் நடக்கவில்லை. நீக்ரோவிற்கு (ஜான்சனுக்கு) சில நண்பர்கள் மட்டுமே அரங்கத்தில் இருந்தார்கள். ஆனால் அவருக்கு எதிராக போட்டி நடைபெறும் பொழுது பார்வையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பார்வையாளர்களின் பெரும்பகுதி ஜெப்ரிஸ் பக்கம் இருந்தாலும் ஜாக் ஜான்சனின் ஆட்டத்தை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் அவர் விளையாட்டு வீரர்களால் போற்றப்படக் கூடியவர். எல்லா நேரங்களிலும் நியாயமாக விளையாடினார். நியாயமாக போராடினார். எல்லாவற்றிலும் நல்ல குணம் கொண்டவராக இருந்தார். சிறந்த மனிதர் வெற்றி பெற்றார்" என்று சல்லிவன் தெரிவித்தார்.

அரங்கிற்கு வெளியே வெறியாட்டம் தொடங்கியது:

ஜெப்ரிஸ் என்றவெள்ளை நம்பிக்கை’  மூலமாக நிறவெறியை நிலைநிறுத்த வெள்ளையர்கள் கண்ட கனவு தகர்ந்தது. ஜெப்ரிஸ் தோல்வியால் வெள்ளையர்கள் அவமானம் அடைந்தனர். ஜாக் ஜான்சன் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த கருப்பர்களோ அந்த வெற்றியை தங்கள்  இன முன்னேற்றத்திற்கான வெற்றியாக கருதினர். கவிதைகள், கதைகள் என படைக்கத் தொடங்கினர்.

நியாயப்படியும், சட்டப் படியும் தோற்றவர்கள், அனைத்தையும் மீறி அட்டூழியங்களில் இறங்கினார்கள். போட்டி முடிவடைந்த ஜூலை 4 ம் தேதி மாலையே நிறவெறி பிடித்தவர்களின் கலவரம் தொடங்கியது. ஜாக் ஜான்சன் வெற்றியை தந்தி மூலம் அறிவித்த ஒரு மணி நேரத்திற்குள் நியூயார்க் நகரத்தில் 11 இடங்களில் கலவரங்கள் வெடித்தன. வெள்ளை இன வெறியர்கள் கருப்பர்களின் கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். கடைகளை அடித்து நொறுக்கினர். சிலரை படுகொலை செய்தனர். நூற்றுக்கு மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். நூர்போக் நகரத்தில் இனவெறி பிடித்த வெள்ளை கடற்படை மாலுமிகள் 300 பேர், கருப்பர்களை தாக்கினார்கள்.

அமெரிக்காவின் அட்லாண்டா, சின்சினாட்டி, ஹூஸ்டன், நியூயார்க, செயின்ட்லூயிஸ் போன்ற முக்கிய நகரங்கள், கீஸ்டோன், மேற்கு வர்ஜீனியா, மவுண்ட்ஸ், இல்லினாய்ஸ் போன்ற சிறிய நகரங்கள் என நாடு முழுவதும் கலவரங்கள் நடந்தன. பால்டிமோர், சிகாகோ, கிளார்க்ஸ்பர்க், மேற்கு வர்ஜீனியா, கொலம்பஸ், ஓஹியோ , டேட்டன், ஓஹியோ, ஃபோர்ட் வொர்த், ஜான்சன் கவுண்டி, மிசோரி, கன்சாஸ் சிட்டி, மிசோரி, லிட்டில் ராக், லாஸ் ஏஞ்சல்ஸ், லூயிஸ்வில், நியூ ஆர்லியன்ஸ், நோர்போக், வர்ஜீனியா, ஒமாஹா, பிலடெல்பியா, ரோனோக், வர்ஜீனியா , ஸ்பிரிங்ஃபீல்ட், இல்லினாய்ஸ், செயின்ட் ஜோசப், மிசோரி மற்றும் வீலிங், மேற்கு வர்ஜீனியா என எல்லா எல்லா இடங்களிலும் இன மோதல்கள் நடந்தன.

கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை முறையாக பதிவு செய்யவில்லை. ஒரு சில நாட்களில் 26 பேர் இறந்தனர். 1910 ஆம் ஆண்டு மட்டும் 67 கருப்பர்கள் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக் கானவர்கள் காயம் அடைந்தனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் 99  சதவீதம் பேர் கருப்பர்களே.

ஜாக்ஜான்சனின் வெற்றியை கருப்பர்கள் எங்கெல்லாம் கொண்டா டினார்களோ அங்கெல்லாம் வெள்ளையர்கள் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். இரண்டே நாட்களில் ஆறு மாநிலங்களில் 10 கருப்பர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அமெரிக்காவில் அதுவரை நாடு தழுவிய அளவில்  இன கலவரங்கள் ஒரே நேரத்தில் நடந்ததாக பதிவு செய்யப்படவில்லை. ஒரு கருப்பனின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் நாடு தழுவிய இனக் கலவரத்தை நடத்திய முதல் நிகழ்வாக இது அமெரிக்க வரலாற்றில் கருதப்படுகிறது. தொடர்ந்து கலவரங்களை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க அரசாங்கம் போட்டிகளுக்காக விளம்பரம் செய்யக்கூடாது; சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது; சுவரொட்டிகளை அண்டை மாநிலங்களுக்கு அனுப்பக் கூடாது என்ற தடைகளை விதித்தது. இந்தத் தடை 1940 வரை அமெரிக்காவில் அமலில் இருந்தது

நிறவெறியின் அடக்குமுறை எதிர்த்த போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு அங்குல முன்னேற்றத்திற்கும் நூற்றுக்கணக்கான கருப்பர்களின் உயிர்களும், உடைமைகளும் சுயமரியாதையும் பலியாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலநிகழ்விலும் கருப்பின மக்களின் விடுதலை உணர்வுகளை கட்டிஎழுப்புவதற்கு ஒருவீரன் தேவைப்பட்டு இருக்கிறான். இந்தப் போராட்டம் ஜாக் ஜான்சனுடன் முடிவடைய வில்லை இன்னும் தொடர்கிறது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...