Pages

புதன், ஜூலை 12, 2023

காலிஸ்தான்: இந்து ராஷ்டிராவின் எதிர் வினையா?

 

.பாக்கியம்.


கடந்த பிப்ரவரி 17ம் தேதி (17-02-23) பஞ்சாபில் உள்ள அஜ்னலா காவல் நிலையம், அம்ரித் பால் சிங் என்பவரின் தலைமையில் ஆயுதம் தாங்கியவர்களால் முற்றுகையிடப்பட்டது. போலீசாருடன் நடந்த கடும்மோதலுக்குபின், தன் உதவியாளர் லவ்பிரீத்தை காவல் நிலையத்திலிருந்து அம்ரித்பால் சிங் மீட்டுச் சென்றார். இந்த சம்பவத்தால் பஞ்சாப் கொதி நிலைக்குச் சென்றது. அம்ரித் பால் சிங் யார்? எனக் கேள்வி எழுந்தது. மீடியா வெளிச்சம் அம்ரித் பால் சிங் மீது விழுந்தது.

யார் இந்த அம்ரித் பால் சிங் (30)? வாரிஸ் பஞ்சாப் டே (பஞ்சாபின் வாரிசுகள்) என்ற அமைப்பின் தலைவர்தான் அவர். இந்த அமைப்பை உருவாக்கியவர் பஞ்சாப் நடிகரும் சமூக ஆர்வலருமான தீப் சித்து. டெல்லியில் மோடி அரசுக்கு எதிராக 2020ல் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றவர். 2021ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் நடந்த மதக்கொடி ஏற்றிய நிகழ்வில் பங்கேற்றார். இவருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கிறது என்று சிபிஐ குற்றம்சாட்டி கைதுசெய்தது. 2 மாத சிறைவாசத்துக்குப்பின் வெளியில் வந்த தீப் சித்து, 2021 செப்டம்பரில் வாரிஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பை ஆரம்பித்தார். பிந்திரன் வாலேயை நான் பயங்கரவாதியாக கருதவில்லை என்று கூறிய இவர்,  காலிஸ்தான் ஆதரவாளராக இருந்த சிம்ரஞ்சித் சிங் மானுக்காக நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பணியாற்றினார்.  எதிர்பாராதவிதமாக தீப் சித்து ஒரு கார் விபத்தில் மரணம் அடைந்தார். இந்நிலையில்தான், துபாயில் வேலை பார்த்துவிட்டு 2022ல் திரும்பிய அம்ரித் பால் சிங், வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவராக, பிந்திரன்வாலேயின் சொந்த ஊரான ரோட் கிராமத்தில், அவர்கள் வழக்கப்படி தலைப்பாகை கட்டி முடி சூட்டிக் கொண்டார். அப்போது காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் முழங்கப்பட்டன.

பிந்திரன் வாலேதான் என் உந்து சக்தி என்று  அறிவித்த அவர்,  பிந்தரன் வாலேயைப் போலவே வெள்ளை அங்கி, நீல நிற தலைப்பாகை, நீளமான வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வலம் வந்தார். பஞ்சாபின் பொருளாதார, கலாச்சார நெருக்கடி, சீக்கிய மதத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து போன்ற பிரச்சாரங்களை முன்னிறுத்தி இளைஞர்களை கவர்ந்தார். மத போதகர் என்ற முறையில் கிராமம், கிராமமாகச் சென்று போதை பழக்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து இளைஞர்களை வசீகரித்தார்.

காலிஸ்தான் இயக்கத்தை வளரவிட மாட்டோம் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார். இந்துத்துவவாதிகளுக்கு இந்துராஷ்டிரம் அமைக்க ஆசை இருக்கும்போது சீக்கியர்களுக்கு காலிஸ்தான் அமைக்க ஆசை இருக்காதா? வன்முறை இல்லாமல் எதையும் நிறுவ முடியாது. ஆயுதங்களை மகிமைப்படுத்துவது குற்றமல்ல. சீக்கிய மதத்திலும் பஞ்சாபின் கலாச்சாரத்திலும் இது பொதிந்து உள்ளது. சீக்கிய மதத்தை தனிமதமாக அங்கீகரிக்காத இந்திய அரசியலமைப்பு சட்டத்தை என்னால் ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார். அவருக்கு பரவலாக இளைஞர்களின் ஆதரவு கிடைத்தது. இதுபோன்ற இயக்கத்திற்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு கிடைப்பதற்கு காரணம் நவ தாராளமய காலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள்தான் என்பதை மறுக்க முடியாது.

பஞ்சாப்  இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் உணவுக் கூடை என்று அழைக்கப்பட்டது. பசுமைப் புரட்சி காலத்தில் 1967ஆம் ஆண்டு விவசாயிகளுடைய வருமானம் 70% அதிகரித்தது. 1974 ஆம் ஆண்டிலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு பஞ்சாபின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது. இந்தியாவின் நிலப்பரப்பில் 1.53 % உள்ள பஞ்சாப் கோதுமை உற்பத்தியில் 17 %  நெல் உற்பத்தியில் 12 % பால் உற்பத்தியில் 10% பங்களித்து வருகிறது. இவைதான் பஞ்சாப் முதன்மை மாநிலமாக இருந்ததற்கு அடிப்படை காரணம்.             

ஆனால், 1980ஆம் ஆண்டுகளுக்குப்பிறகு பஞ்சாப் நெருக்கடிகளை சந்திக்க துவங்கியது. குறிப்பாக நவதாராளமயக் கொள்கை 92ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட பொழுது அதன் முதல் பலிகடாவாக பஞ்சாப் மாறியது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 1980-ல் முதல் மாநிலமாக இருந்த பஞ்சாப்,  2020-ல் 16-வது இடத்திற்கும் தள்ளப்பட்டது. தற்போது மாநிலத்தின் கடன் சுமை ஒட்டுமொத்த ஜிடிபி உற்பத்தியில் 50 சதவீதத்தை கடந்து உள்ளது.

நவ தாராளமயம் விவசாயத்தை வணிகமயமாக்கி சந்தைப் படுத்தலை நோக்கி தள்ளியது. 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை கடன் கொடுத்ததை மாற்றி 3 லட்சம் வரை கடன் கொடுக்க வங்கிகள் தங்களது விதிகளை தளர்த்தினார்கள். சந்தைப்படுத்தலின் விளைவாக இடைத்தரகர்கள் இதில் மேலாதிக்கம் செலுத்தினர். இடுபொருள்களின் விலை ஏற்றமும், விளைப் பொருட்களின் விலைசரிவும் விவசாயிகளை கடன் சுமைக்கு ஆளாக்கியது. கடன் சுமையால் 2000-2018 இடைப்பட்ட காலத்தில் 9 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். நவதாராள மயத்திற்கு பிறகு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் தற்கொலைகள் சுமார் 20,000 என்று அதிகாரப்பூர்வமாகவே கணக்கிடப் பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலையில் 88% கடன் சுமையால் நடந்தது.

கால்வாய் பாசனம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. வணிகமய விவசாயத்தின் உந்துதலாலும், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கிடைத்ததால்  14 லட்சம் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு அதலபாதாளத்திற்கு சென்றவிட்டது. பஞ்ச(ஐந்து) நதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலம் வறட்சியை நோக்கி தள்ளப்படுகிறது.

விவசாய நிலம் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி தனது வளத்தை இழந்தது. நிலத்தின் வளம் இழப்பால் விவசாயத்திற்காக காடுகள் அழிக்கப்பட்டு 33 சதவீதம் இருக்க வேண்டிய இடத்தில் 6 சதவீதம் மட்டுமே காடுகள் இருக்கிறது.

வேலையின்மை அதிகரிப்பு, இயந்திர மயமாக்கல், பூச்சிக் கொல்லி, பணப்பயிர் அறிமுகம், வணிகமயம் என அனைத்தும்  சேர்ந்து விவசாயத்தை அழித்து பஞ்சாபை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

விவசாய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு மாறாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் நிர்வாக சீர்கேட்டிலும் லஞ்ச ஊழல் போன்றவற்றிலும் ஈடுபட்டு நிலைமையை மேலும் சீரழித்தனர். நவ தாராளமயத்தில் உருவான புதிய பணக்காரர்கள் அரசியல் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

மக்களின் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு பதிலாக அகாலி தள கட்சி பாஜவுடன் கூட்டு சேர்ந்து மாநிலத்தை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியதால் மக்களிடமிருந்து தனிமைப்பட்டது. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சியோ மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அக்கறை காட்டாமல் இருந்தது. இதனால் மக்கள் ஆம் ஆத்மி கட்சியை தேர்வு செய்தார்கள். ஆம் ஆத்மி அரசின் ஓராண்டு கால செயல்பாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

கிராமப்புற விவசாயிகள் தங்களின் பிரச்சனைகளை தீர்க்க அதிக உணர்வு திறன் கொண்ட அரசியல் அமைப்பை எதிர்பார்க்கிறார்கள். அரசியல் வெற்றிடம் மாற்றை தேடுகிற பொழுது இளைஞர்கள் அம்ரித் பால் சிங் பின்னால் அணி திரளுகின்றனர். இந்த வெற்றிடத்தில் இருந்து தீவிரவாத சிந்தனைக்கு ஆதரவான போக்குகள் தென்படுகிறது. குறிப்பாக ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் பகவந்த் மான், தன் எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் சங்ரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. அதில் காலிஸ்தான் ஆதரவாளராக இருந்த, சிம்ரஞ்சித் சிங் மான் வெற்றி பெற்றார். மூன்று மாதத்திற்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த இவர், அதன் பிறகு நடந்த எம்பி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுகிறார் என்றால் பஞ்சாப் அரசியல் போக்கின் தன்மையை புரிந்து கொள்ளலாம்.

இந்த அரசியல் நெருக்கடியின் உண்மையான காரணங்களை புரிந்து கொள்ளாமல் பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆம் ஆத்மி அரசை குறை சொல்வதும், பஞ்சாபில் நிலவும் சூழ்நிலைகளுக்கு பாகிஸ்தானின் .எஸ். போன்றவற்றை மட்டுமே காரணமாக சொல்லுவது பிரச்சனைகளை தீர்க்க விரும்பாத நோக்கமாக உள்ளது.

பஞ்சாபின் சமூக நெருக்கடியும் இந்த விளைவுகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. 1980-90ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு கிடைக்காத நிலையில், டெல்லியில் சீக்கிய படுகொலைகள் ஏற்படுத்திய ஆறாத தழும்புகள், ஆபரேஷன் ப்ளூ ஸ்டாருக்கு பிறகு நடந்த அத்துமீறல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது. சீக்கிய மத அமைப்புகள் பிளவுண்டு கிடப்பதால், ஆளுகிறவர்கள் அதை பயன்படுத்துகிறார்கள். பாஜக எழுப்பும் இந்தி இந்து இந்தியா என்ற ஆக்ரோஷமான கோஷங்களால் சீக்கியர்களை இந்து மதத்தில் இணைத்துக் கொள்வார்கள் என் அச்சம் மேலோங்கி வருகிறது.

பஞ்சாப் பல்கலைக்கழக பேராசிரியரான மஞ்சித் சிங்" மீண்டும் சீக்கிய தீவிரவாதத்திற்கான அரசியல் வெளி உருவாக்கப் பட்டுள்ளது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள தீவிர சீக்கிய சித்தாந்த வாதிகள் இளைஞர்களிடையே உள்ள வெற்றிடத்தை நிரப்ப விரும்புகிறார்கள். அதில் ஒன்றுதான் வாரிஸ் பஞ்சாப் டே" என்கிறார்

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று உரிமை கோரும் பொழுது காலிஸ்தான் இயக்கத்தை மட்டும் கட்டுப்படுத்துவது, சீக்கிய மதத்தை தனி மதமாக அங்கீகரிக்காமல் இருப்பதை எப்படி ஏற்க முடியும். கடந்த எட்டு ஆண்டுகளாக இந்துத்துவப் பெரும்பான்மை அரசு முஸ்லிம்களை அடித்துக் கொல்கிறது; கிறிஸ்தவர்களை தனிமைப்படுத்துகிறது. நாடாளுமன்றமே மதகோஷங்களால் நிரம்பி வழிகிறது. இந்துராஷ்டரா போன்ற கோரிக்கைகளை அமல்படுத்துவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்து இந்தி இந்தியா என்ற இந்துத்துவவாதிகளின் ஆக்ரோஷம், காலிஸ்தான் வேண்டும் என்ற எதிர் கோரிக்கையை தூண்டி விட்டுள்ளது. இந்துத்துவ வாதிகள் இந்துராஷ்டிரத்தை கோரினால் சீக்கியர்கள் காலிஸ்தானை தேடுவதில் என்ன தவறு என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

பஞ்சாப் தீவிரத்தன்மை கொண்ட அரசியலில் நிரந்தர தொடர்பு கொண்டு இருந்தாலும் அவற்றை பெரும்பாலான மக்கள் விரும்ப வில்லை. வெகுஜன இயக்கங்கள் தான் பஞ்சாபின் மாற்றங்களில் அடித்தளமாக இருக்கிறது. குறிப்பாக 1958- 59 இல் பஞ்சாப் அரசுக்கு எதிராக நடத்திய வரி எதிர்ப்பு இயக்கம், 2020 ஆம் ஆண்டுகளில் துவங்கிய விவசாயிகளின் போராட்டம் என வெகு மக்களின் இயக்கம் தான் பஞ்சாபின் போக்குகளை தீர்மானித்து உள்ளது.

இன்றைய தினம் காலிஸ்தானை அர்த்தப்படுத்துவது பஞ்சாபின் பொருளாதார அரசியல் சமூக நெருக்கடிகளும் அதனால் எழக்கூடிய மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளும் தான். இவை வெகுஜன இயக்கங்களால் தீர்க்கப்பட வேண்டியவை. இதற்கான அரசியல் தீர்வை நோக்கி முன்னேற வேண்டும்.

இந்த நெருக்கடிகளை நீடிக்கச் செய்வதில் ஆளும் கார்ப்பரேட் இந்துத்துவா சக்திகள் விரும்புகிறது. "ஏகம்" உருவாக்க இந்து ராஷ்ட்ரா என்ற கோரிக்கையை முன்வைக்கும் இந்துத்துவவாதிகளுக்கு மாற்றாக காலிஸ்தான், சீக்கிஸ்தான் போன்ற கோரிக்கைகள் எழத்தான் செய்யும். இவ்வாறு பிளவுபடுவதை  ஆளுகிறவர்களும் விரும்புகிறார்கள். மக்களை மோதவிட்டு அரசியல் செய்வதுதான் அவர்களின் வாடிக்கை.

.பாக்கியம்.

25.06.23 எழுதியது. ஆஸ்திரேயாவிலிருந்து வெளிவரும் எதிரொலி  பத்திரிக்கையில் மே இதழில் வெளிவந்தது

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...