Pages

செவ்வாய், ஜூலை 11, 2023

அனைத்தும் சாலைகளும் பெய்ஜிங் நோக்கி

உலக அரங்கில் சீனா-1

அ.பாக்கியம்

உலகளாவிய ஊடகங்களில் சீனாவுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளார்கள். ஆங்கில மொழி ஊடகங்கள் அனைத்தும் சர்வதேச சமூகம் சீனாவின் எழுச்சி கண்டு அஞ்சுகிறது, உலக அரங்கில் சீனா மிகப்பெரும் அளவுக்கு தனிமைப்பட்டு உள்ளது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இந்தியா உட்பட பல உள்ளூர் மொழிகளில் சீனாவுக்கு எதிரான கடுகளவு பிரச்சினையை கூட கடலளவு பெரிதாக காட்டுவதை காண முடிகிறது ஆனால் நடைமுறைகளும் உண்மை நிகழ்வுகளும் வேறாக இருக்கிறது. சீனா இந்த ஊடகத் தாக்குதலை கண்டு அஞ்சவும் இல்லை, தனிமைப்படவும் இல்லை. அதற்கு மாறாக உலகை தழுவிக் கொள்கிறது.

அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் பிலிங்கன் சீனப் பயணத்தை மேற்கொண்டார். இந்தப் பயணம் நடக்க வாய்ப்பில்லை என்று மேற்குலக ஊடகங்கள் பிரச்சாரம் செய்தது. காரணம் சவுதி அரேபியா வியட்னாமுக்கு சென்ற பொழுது அந்த நாட்டு கொடிகளை காட்டி அமெரிக்க கொடிகளை மறைத்து விட்டார்கள் என்று குற்றம் கூறினார்கள். எனவே அது போலவே சீனாவும் அவமதிக்கும் என்று எழுதினார்கள். ஆனால் சீனா அமெரிக்க வெளியுறவு செயலாளர் ராஜதந்திர நெறிமுறைகளுடன் சிறப்பான முறையில் வரவேற்பை வழங்கியது. அதே நேரத்தில் வெளியுறவுச் செயலாளர் அவர் நினைத்த அனைத்தையும் சாதிக்க முடியவில்லை என்றாலும் சில குறிப்பிட்ட மாற்றங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக அமெரிக்காவின் கருவூலத்துறை செயலாளர் எல்லன் அமெரிக்காவின் கடன் பிரச்சனை தொடர்பாக சீனாவுடன் உயர்மட்ட விவாதம் நடத்துவார் என்று முடிவு செய்யப்பட்டது அந்த அடிப்படையில் தற்போது கருவூலத்துறை செயலாளர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தை நடத்தி பயனுள்ளதாக அமைந்துள்ளது என்று கருத்தையும் தெரிவித்துள்ளார். எனவே அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் சீனப் பயணம் நேர்மறையாகவே அமைந்துள்ளது.

2023 மார்ச் மாதம் சீன மேம்பாட்டு அமைப்புடன்(china development forum) 40க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவன தலைவர்கள் பெய்ஜிங் சென்று எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பற்றி விவாதித்து உள்ளார்கள்.

2023 ஆம் ஆண்டு சீனாவின் தீவு மாநிலமான ஹைனாவில் போவோ அமைப்பின் (Boao Forum for Asia) சார்பில் வளர்ச்சிக்கான சந்திப்பை நடத்தியது. இந்த அமைப்பு பெரும்பாலும் "Asian Davos" என்று அழைக்கப் படுகிறது. இந்த சந்திப்புகள் உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை வெளிப்படுத்தியது. இந்த நிகழ்வில் சீனாவின் பிரதமர் லீகியாங்க் எம் எப் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, ஐந்து நாட்டின் பிரதமர்கள் சிங்கப்பூர்,ஸ்பெயின், மலேசியா, வெரி காஸ்ட், திமோர் லஸ்டி, முன்னால் அதிகாரிகள், 28 நாடுகளின் பொருளாதார துறை தலைவர்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பெரும் அதிகாரப் போட்டிக்கு அடிபணியாமல் மிகவும் நெகிழ்வான எதிர்காலத்தை உருவாக்குவது பற்றிய விவாதங்களே இந்த மாநாட்டில் நடைபெற்றது. உலகப் பொருளாதார வளர்ச்சியில் புதிய உத்வேகத்தையும் உயிர் சக்தியையும் புகுத்துவதற்கு உலகின் இரண்டாவது பொருளாதார நாடான சீனா தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது என்று சீனப் பிரதமர் குறிப்பிட்டார். ஆசிய பிராந்தியத்தில் குறிப்பாக ஆசிய பசிபிக் பகுதியில் ஏற்படக்கூடிய குழப்பங்கள் மற்றும் மோதல்களை எப்படி எல்லாம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் எச்சரிக்கையுடன் செயல்படுவதாக அறிவித்தார். சீனாவை உலக அமைதிக்கான நங்கூரமாக நிலை நிறுத்துவதன் மூலம் கூட்டுப் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க முடியும் என்று இந்த மாநாட்டின் மையக்கருத்தாக சீன பிரதமர் முன்வைத்தார்.

ஸ்பெயின் நாட்டின் பிரதமர் சுழற்சி முறையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் முக்கியத்துவம் கருதி சீன ஜனாதிபதியை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் பங்கேற்றார். சீனாவின் குறிக்கோள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயல்படுவதே தவிர போட்டி போடுவது அல்ல என்பதை சீன ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். ஐரோப்பாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக தற்போது சீனா உள்ளது. சமீப காலத்தில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனாவின் வர்த்தக பங்காளியாக உயர்ந்துள்ளது. அதேபோன்று ஐரோப்பா சீனாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. 2020 ஆம் ஆண்டு ஐரோப்பாவுடன் சீனாவின் வர்த்தக மதிப்பு 709.1 பில்லியன் டாலர்களாகும். ஐரோப்பாவுடன் அமெரிக்காவின் வர்த்தக மதிப்பு 671 பில்லியன் டாலர்களாகும். சீனா ஐரோப்பாவை வெற்றி கொள்வதை விட இணைந்து செயல்படுவது என்ற அமெரிக்காவிற்கு நேர் எதிரான அணுகுமுறையை கடைபிடிக்கிறது.

சீனாவுடன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக இருப்பது ஏசியன் (ASEAN) அமைப்பாகும். இந்த அமைப்பில் இந்தோனேசியா, வியட்நாம், லாவோஸ்,புருனே,தாய்லாந்த், மியான்மர், பிலிப்பைன்ஸ், கம்போடியா, சிங்கப்பூர், மலேசியா,திமோர் லிஸ்ட்(Timor-testi) ஆகிய 11 நாடுகளை உள்ளடக்கிய அமைப்பாகும். ஏற்கனவே வியட்நாம் லாவோஸ் கம்போடியா வர்த்தக உறவை பலப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாட்டின் பிரதமர்கள் மார்ச் 27 முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை சீனாவிற்கு விஜயம் செய்து பொருளாதார வளர்ச்சிக்கான உயர்தர ஒப்பந்தம் செய்து கூட்டு பிரகடனத்தை வெளியிட்டார்கள்.

இதே போன்று இந்த ஆண்டு மே மாதம் சீனாவின் ஷான்சி மாகாணத்தின் சியான் நகரில் நடைபெற்ற சீன-மத்திய ஆசிய உச்சி மாநாட்டிற்கு அதிபர் ஜி ஜின்பிங் தலைமை தாங்கினார். கஜகஸ்தானின் ஜனாதிபதி காசிம்-ஜோமார்ட் டோகாயேவ், கிர்கிஸ்தானின் ஜனாதிபதி சதிர் ஜாபரோவ், தஜிகிஸ்தானின் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான், துர்க்மெனிஸ்தானின் ஜனாதிபதி செர்தார் பெர்டிமுஹமடோவ் மற்றும் உஸ்பெகிஸ்தானின் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் ஆகியோர் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த ஐந்து நாடுகளின் ஜனாதிபதிகளும் சீனாவுடன் ஒப்பந்தங்கள் செய்து எதிர்காலத்தில் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர். இதே நேரத்தில் ஜப்பானில் கூடிய ஜி 7 அமைப்புகளின் நாடுகள் உக்ரைன் போர் நடந்து கொண்டிருந்த பொழுதும் அவற்றை தீர்ப்பதற்கான முயற்சிகளைப் பற்றிவிவாதிக் காமல் சீனாவை எதிர்கொள்வது தொடர்பாகவே அதிகம் பேசி முடித்துக் கொண்டார்கள்.

சீனாவின் நடவடிக்கைகள் அனைத்தும் சமாதானத்தை உருவாக்குவது, மோதலை தவிர்ப்பது, இணைந்து செயலாற்றுவது, ஒவ்வொருவரும் வெற்றி வெற்றி என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கரம் கோர்ப்பது என அமைந்துள்ளது. சவுதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இருந்த சில பத்து ஆண்டுகள் கடந்த மோதலை தீர்த்து ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதனால் மத்திய கிழக்கில் ஓரளவு ஸ்திரதன்மையும் இயல்பான நிலைமையும் கொண்டு வர உதவியது. இதேபோன்று பெரும்பாலான ஆய்வாளர்கள் சீனாவின் முயற்சியால் ஏமன் உட்பட அரபு நாடுகளில் அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளது என்று கூறியுள்ளார்கள்.

இதற்கு அடுத்ததாக ஜூன் மாதம் கடைசியில் பாலஸ்தீனத்தின் ஜனாதிபதி மஹமூத் அப்பாஸ் சீனாவிற்கு 4 நாள் விஜயம் செய்து ஜனாதிபதியை சந்தித்து பேசினார். பாலஸ்தீன பிரச்சனையை தீர்ப்பதற்கு இந்த சந்திப்பு உதவிடும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சீன அரபு மாநாட்டில் சீன ஜனாதிபதி பாலஸ்தீன பிரச்சினையை தீர்ப்பதற்காக பாடுபடுவேன் என்று தெரிவித்ததோடு இந்த சந்திப்பு தொடர்கிறது. இந்தப் பின்னணியில் தற்போதைய இஸ்ரேலிய பிரதமர் சீனாவிற்கு விஜயம் செய்வேன் என்று அறிக்கை கொடுத்துள்ளார் இது அமெரிக்கா போன்ற நாடுகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. காரணம் அமெரிக்காவின் மிக முக்கிய மத்திய கிழக்கு நட்பு நாடு சீனாவிற்கு விஜயம் செய்வதாக அறிவித்திருப்பது அமெரிக்க விருப்பத்திற்கு மாறானது என்பது அனைவரும் அறிந்ததே.

ஏற்கனவே இந்த ஆண்டின் துவக்கத்தில் பார்படாஸ், மங்கோலியா, நியூசிலாந்து, வியட்நாம் பிரதமர்கள் சீனாவிற்கு விஜயம் செய்து பல ஒப்பந்தங்களை செய்துள்ளனர். உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டத்திற்காக வியட்நாம் பிரதமரும் சீனாவிற்கு வந்துள்ளார். இந்த உலக பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் வணிகத் தலைவர்கள், கல்வியாளர்கள், சர்வதேச நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் சுமார் 1500 பேர்கள் சீனாவின் தியான் ஜெனில் சந்தித்து கொண்டு பொருளாதார ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளார்கள்.

ஆசிய உறவுகளை சீனா உறுதிப்படுத்துவதுடன் உலக அளவில் ராஜதந்திர மற்றும் பொருளாதார வெற்றியும் ஏற்படுத்தி வருகிறது. தென் பசிபிக் பிரதேசத்தில் சீனாவின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதேபோன்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மேலாதிக்கத்திற்கு மாற்றுகளைத் தேடும் தலைவர்கள், குறிப்பாக கரீபியன் தீவுகள், ஆப்பிரிக்காவின் நாடுகளின் தலைவர்கள் சீனாவிற்கு வருகை தந்துள்ளார்கள். தான்சானிய ஜனாதிபதி, எத்தோப்பிய துணை பிரதமர், காங்கோ ஜனநாயக குடியரசுத் தலைவர், எரித்திரியா அதிபர், ஆகியோர் சீனாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

அது ஒருபுறம் இருக்க, சமீபகாலம்வரை ஹோண்டுராஸ் சீனாவின் நண்பராக இல்லை. தற்போது ஜனாதிபதி சியோமாரா காஸ்ட்ரோ சீனாவிற்கு பயணத்தை மேற்கொண்டுஇரு நாடுகளும் தூதரகத்தை திறப்பதற்கான ஒப்பந்தங்களை செய்துள்ளனர். அவர் நீண்ட நாளைய நட்பு நாடு போன்று சிறப்பான முறையில் வரவேற்கப்பட்டு ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் சிறப்பிக்கப்பட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பலமான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது. மற்றொரு குறிப்பிட்ட தக்க அம்சம் இரு நாடுகளும் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் பங்கேற்க கையெழுத்திட்டனர்.

பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி மக்ரோன் சீன நாட்டிற்கு விஜயம் செய்து மிக முக்கியமான பொருளாதாரம் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளார். இது ஜி 7 நாடுகளுக்கு சங்கடமான நிலைமையை ஏற்படுத்தியது. சீனாவை தனிமைப்படுத்த ஜி 7 கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அதன் தீவிரத்தை குறைத்ததில் மக்ரோன் பங்கு முக்கியமானதாக இருந்தது.

எலோன் மஸ்க் சமீபத்தில் சீனாவிற்கு விஜயம் செய்து சீன நிறுவனங்களை தொழிலாளர்களை சந்தித்து பேசி பல திட்டங்களை நிறைவேற்ற ஒப்பந்தமிட்டார். அமெரிக்கர்கள் வேலையை தவிர்க்கிறார்கள் சீனநர்கள் வேலையை அதிகாலையிலேயே துவங்கி முடிக்கிறார்கள் என்று பாராட்டினார்

ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குனர் டிம் குக் சீனாவிற்கு விஜயம் செய்தார். அப்போது அவர் சீன நாட்டினர் தொழில் நுட்பங்களை காப்பி அடிக்கிறார்கள் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் சீனா அனைத்தையும் விட ஒரு படி மேலே சென்று சீனாவின் கண்டுபிடிப்புகளை இன்று உலகின் பிற நாடுகள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டன என்பதை உணர வேண்டும் என்றார். மிக சமீபத்தில் வெளியிடப்பட்ட தர ஆராய்ச்சிக்கான அறிக்கையில் உலக தரவரிசையில் சீனா ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் மற்றும் கால்டெக் ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளி உலக ஆராய்ச்சியில் 22 சதவிகிதம் பங்களிப்பு செய்து முன்னேறி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தற்போது ஜூன் மாதம் பில் கேட்ஸ் சீனாவிற்கு வந்துள்ளார் 2015 ஆம் ஆண்டு சீன ஜனாதிபதியுடன் சந்தித்த பிறகு சீனாவுடனான உறவை தொடர்ந்து பராமரித்து வருகிறார் பில் கேட்ஸ். கொரோனா வைரஸ் காலத்தில் பில்கேட்ஸின் அறக்கட்டளை உலக நாடுகளுக்கு செய்த உதவியை 2020 ஆம் ஆண்டு சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின் பிங் பாராட்டி கடிதம் எழுதினார் தற்போதைய விஜயமும் பொருளாதாரம் மேம்பாட்டுக்கான வருகையாகும்.

இவர்கள் ஏன் சீனாவிற்கு வருகிறார்கள்? மனித உரிமை மீறல்கள், ராணுவ விரிவாக்கம், கடன் பொறி ராஜதந்திரம் போன்ற கற்பனையான விமர்சனங்களை இவர்கள் முன்வைப்பதற்கு வரவில்லை. இத்துடன் கூடவே சீனாவின் வெளிநாட்டு வணிகங்களை பாதுகாப்பதற்காக சீனா இவர்களுக்கு வரவேற்பு கொடுக்கிறது என்று அமெரிக்க மேற்குலக பிரச்சாரம் செய்கிறது. உண்மையில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை மூலமாக உலகம் சந்தித்து வரக்கூடிய நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக பல நாடுகளின் தலைவர்கள் சீனாவுடன் உறவே மேம்படுத்துகிறார்கள். பொருளாதார எதிர்காலம் வளர்ச்சி அடைய பன்னாட்டு நிறுவன தலைவர்கள் சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்கள்.

இவ்வளவு நடந்த பிறகும் அமெரிக்க மேற்கத்திய உலகங்கள் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உலக நாடுகளோடு அமைதிக்கான உடன்பாடுகளை ஏற்படுத்துவதைக் கண்டு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கதிகலங்கிப் போய் உள்ளது. எங்கு சந்தித்தாலும் எப்போது பேசினாலும் சீனாவை எதிர்கொள்வதைப் பற்றியே புலம்புகிறார்கள். எனவே உலகம் அஞ்சுகிறது என்றும் சீனா தனிமைப்படுகிறது என்றும் பிரச்சாரத்தை செய்கிறார்கள் ஆனால் நடைமுறையோ சீனா அஞ்சவும் இல்லை தனிமைப்படவும் இல்லை உலகை ஆரத் தழுவி முன்னேறி வருகிறது.

.பாக்கியம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...