Pages

ஞாயிறு, ஜூலை 09, 2023

செந்தில் பாலாஜி கைது: ஊழலுக்கு எதிராக மகா ஊழல்.


 அ.பாக்கியம்.

(ஆஸ்திரேலியாவில்  வெளியிடப்படும் தமிழ் பத்திரிக்கை எதிரொலியில் 25.6.23. அன்று எழுதிய கட்டுரை)

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு அமைச்சராக இருந்த(தற்போது இலாகா இல்லாத அமைச்சர்) செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திராவிட மாடல் ஆதரவாளர்களும், சங் பரிவார் சங்கிகளும் வலைதளங்களில் சகட்டுமேனிக்கு லாவணி கச்சேரி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.  இருந்தபோதிலும் செந்தில் பாலாஜி கைது, ஊழல் ஒழிப்பின் நடவடிக்கையா அல்லது அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்ற கேள்வி எழுகிறது. இதற்கான பதில், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றே கூறவேண்டும்.  

மகா ஊழலின் மன்னர்கள்:

ஊழல் ஒழிப்பு என்றால் பாஜ, ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சியாக இருக்க வேண்டும்.  அல்லது ஊழலுக்கு எதிராக கொஞ்சமாவது நடுநிலையான போக்கை கடைபிடிக்க வேண்டும். பாஜ ஆளும் மாநிலங்களில் ஊழல், நிர்வாக சீர்கேடு சந்திசிரித்துக் கொண்டு இருக்கிறது. எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் மீது ஊழல் புகார் சொல்வதும், அவர்கள் பாஜவில் இணைந்துவிட்டால் அவர்களுக்கு மிஸ்டர் கிளீன் சீட் கொடுப்பதையும் பாஜ வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறது. நரகலை நடுவீட்டில் வைத்துக் கொண்டு இந்த யோக்கியர்கள் தூய்மை உபதேசம் செய்து கொண்டிருக்கி றார்கள். முதலில் பாஜவின் ஊழலை கணக்கில் எடுத்த பிறகு செந்தில் பாலாஜி விவகாரத்துக்கு வருவோம்.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் விமானங்கள் வாங்குவதில் ஊழல் நடந்ததை பிரஞ்சு நாட்டு அதிகாரிகளே ஒப்புக் கொண்டார்கள். ஆனால், அந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க விடாமலேயே தடுத்து ஓடி ஒளிந்து கொண்டவர்கள்தான் பாஜ பாக்கியவான்கள். தேர்தல் பத்திரம் என்ற பெயரால் கார்ப்பரேட் முதலாளியிடம் இருந்து பணம் வாங்குவதற்கு சட்டம் இயற்றி சுமார் 90% கார்ப்பரேட் முதலாளிடமிருந்து பல நூறு கோடி ரூபாய் பணம் பாஜவிற்கு சென்றுள்ளது. இதற்கு கைமாறாக கார்ப்பரேட் களவாணிகளுக்கு வேதாந்தா, அதானி, அம்பானி போன்ற முதலாளிகளுக்கு பலருக்கும் மிகப்பெரிய சலுகை வழங்கியது.

ஊழலை சட்டப்பூர்வமாக்கி, மோடி அரசு செய்த  மிகப்பெரிய மோசடி தான் தேர்தல் பத்திரம். 2018 மற்றும் 2022க்கு இடையில் பாஜ தான் அதிக அளவில் தேர்தல் பத்திரங்கள் மூலமான நன்கொடைகளைப் பெற்று, ரூ.5,270 கோடி பணமாக்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.457 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளது வேதாந்தா. அதற்கு பிரதிபலனாக ஒரே ஆண்டில் 4 முக்கிய சுரங்கங்களை ஏலத்தில் கைப்பற்றி யுள்ளது வேதாந்தா நிறுவனம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனம்தான் வேதாந்தா. இதற்குத்தான் தமிழகத்தின் ஆளுநர் ரவி வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்.

மோடி அதிரடியாக அறிவித்த பண மதிப்பு நீக்கம் என்பது திட்டமிடப்பட்ட ஊழல் நடவடிக்கையாகும். பாஜவினரிடம் அவர்களின் ஆதரவாளர்களிடம் ஒட்டுமொத்த பணத்தையும் கொண்டு சேர்த்து, இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிற சக்தியாக உள்ள பணத்தை தன் வசம் கொண்டு வந்து அதன் மூலம் இந்திய அரசியலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையின் பிரதான பகுதிதான் பண மதிப்பு நீக்க நடவடிக்கையாகும். இதில் மத்திய ரிசர்வ் வங்கிக்கு வராமலேயே 2000 ரூபாய் நோட்டுகள் ஆயிரக்கணக்கான கோடி வெளியில் சென்றதை ஆதாரங்களுடன் பார்க்க முடியும். தமிழகத்தில் சேகர்ரெட்டி என்பவரிடம் பிடிபட்ட பல கோடி ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் எங்கிருந்து வந்தது என்று ரிசர்வ் வங்கிக்கே தெரியவில்லையாம். அதனால் அந்தப் பணத்தை சேகர்ரெட்டிக்கே திருப்பி கொடுத்து விட்டார்கள்.  எல்லாம் அந்த திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கே வெளிச்சம். வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அவற்றை திருப்பி செலுத்தாமல் 90 பேருக்கு மேல் வெளிநாடு சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தவிர்ப்பது ஒன்றிய அரசின் உலகம் தழுவிய ஊழலுக்கான ஒத்தாசையாகும். பாஜ ஆளும் மத்திய பிரதேசத்தில் மகாராஷ்டிராவில் நடைபெறக்கூடிய ஊழல்கள் எல்லாம் நாடறிந்தவை.

கர்நாடக மாநிலத்தில் 40 சதவீதம் கமிஷன் வாங்கும் அரசு என்று ஊழலுக்குப் பெயர் பெற்ற அரசாகத் திகழ்ந்ததால்தான் சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜ அரசு படுதோல்வி அடைந்தது. பாஜ ஆளும் மாநிலங்களில் எல்லாம் ஒன்றிய அரசின் மத்திய ஏஜென்சிகள் தமது சுண்டு விரலைக்கூட அசைப்பதில்லை. எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும் அங்கு தேர்தல் கமிஷனோடு, எதிர்க்கட்சியினரை மிரட்டுவதற்காக பாஜ சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, என்ஐஏ உள்பட எல்லா மத்திய ஏஜென்சிகளையும் களத்தில் இறக்குவது தொடர்ந்து நடைபெறுகிறது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கிறோம் என்று பாஜ பேசுவது சாத்தான் வேதம் ஒதுவதைப் போலத்தான்.

கடந்த கால காட்சிகள்:

               தமிழகத்தில் அஇஅதிமுக ஆட்சியில் இருந்தபோது ஒரு சில அமைச்சர்களை  தவிர்த்து பலரின் மீதும் மத்திய அரசின் ஏஜென்சிகள் வழக்கு பதிவு செய்தன. அன்றைய தினம் தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் அறையில் சோதனை நடத்தியது. அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் சோதனை நடத்தியதைக் கண்டித்தார். இன்று செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய பொழுது அதிமுக தலைமை வரவேற்றது.

ராம் மோகன் ராவ் அறையிலும் வீட்டிலும் நடைபெற்ற சோதனையின் முடிவு என்ன ஆனது என்று இன்று வரை தெரியவில்லை. அதிமுக மந்திரிகள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள், பாஜக அரசியல் பேரம் பேசுவதற்கு வைத்துக் கொண்டதே தவிர இன்று வரை அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

மேற்கு வங்காளத்தில் பாஜகவுடன் கடுமையாக மோதுகின்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மந்திரிகளை கைது செய்தார்கள். உத்தவ்தாக்கரே அரசியல் ரீதியாக வேறுபட்டவுடன் அவர் கட்சியின் தலைவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. டெல்லி துணை முதலமைச்சர் உட்பட பலரையும் ஊழல் குற்றச்சாட்டுகள் என்ற பெயரால் வழக்கில் சிக்க வைத்தார்கள். முன்னாள் ஜம்மு காஷ்மீரின் கவர்னராக இருந்த சத்திய பால் மாலிக்  ராணுவ வீரர்கள் மரணமடைந்த விஷயத்தில் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத் தியதற்காக உடனடியாக அவரது வீட்டில் அமலாக்கதுறை புகுந்து சோதனை நடத்தியது. பாரதிய ஜனதா கட்சி , அரசியல் ரீதியாக தங்களுக்கு எதிராக உள்ள மாநிலங்களின் மீது அமலாக்க துறையை, மத்திய புலனாய்வுத் துறையை பயன்படுத்துவதை ஒரு கொள்கை முடிவாகவே எடுத்து அமலாக்கி வருகிறது.

தற்போது பீகார் துணை முதலமைச்சர் மீது, தெலங்கானாவில் பி ஆர் எஸ் தலைவர், அந்த மாநில முதலமைச்சர்  சந்திரசேகர ராவ் மகள் மீதும், கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் மீதும் அமலாக்கத்துறை வழக்குகளை பதிவு செய்து அரசியல் தேவை வரும் பொழுது கைது செய்ய காத்திருக்கிறது. எனவே ஒன்றிய அரசும் பாஜகவும் செந்தில் பாலாஜி கைது செய்திருப்பது ஊழல் ஒழிப்பதற்கான நடவடிக்கை அல்ல என்பது திட்ட வட்டமானது. உண்மையில் ஒன்றிய அரசு ஊழலை ஒழிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால் செந்தில் பாலாஜி மீது 1988 ஆம் ஆண்டு லஞ்ச தடுப்புச் சட்டம் மற்றும் பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் இவைகளின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு தொடர்பில்லாத மணி லாண்டரிங் சட்டத்தின் கீழ் வழக்கை பதிவு செய்திருப்பது பேரம் பேசுவதற்காக மட்டும்தான். இந்த மணிலாண்டரி சட்டம் போதைப் பொருள் கடத்தி இருந்தால் அதற்கு தான் அதிகமாக பொருந்தும். மற்றவை அனைத்தும் வருமான வரி தொடர்பானது. எனவே அரசியல் பகடைக்காய் விளையாட்டிற்காக செந்தில் பாலாஜியை பயன்படுத்துகிறது.

செந்தில் பாலாஜி நல்லவரா? கெட்டவரா? என்று கேட்டால் நாயகன் படத்தில் வரும் வேலு நாயக்கர் போல ‘‘தெரியலப்பா’’ என்று பதில் சொல்லமுடியாது. செந்தில் பாலாஜி அதிமுக அமைச்சராக இருந்தபோது, அவர் மீது திமுக தலைமைதான் கடுமையான ஊழல் புகார்களை கூறியது. அரசியலில் பணம் செலவழித்து அதிகாரத்திற்கு வந்த பிறகு செலவழித்த பணத்தை பல நூறு மடங்காக சம்பாதித்து பணபலம், படைபலம் என செல்வாக்காக திரிவது என்பது புதிய கலாச்சாரமாகவே மாறிவிட்டது. அப்படிபட்டவர்தான் செந்தில் பாலாஜி. ஜெயலலிதா, சசிகலா, டிடிவி ஆதரவாளராக செயல்பட்ட செந்தில் பாலாஜியின் செல்வாக்கு திமுகவுக்கு தேவைப்பட்ட பொழுது, தன்  செல்வாக்கை தக்க வைக்க வேண்டும் என்றால் அடுத்து ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள கட்சி திமுகதான் எனக் கருதி மீண்டும் திமுகவில் இணைந்தார். (இவர் அரசியலில் முதலில் காலடி வைத்த இடம் திமுகதான்).

இவர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது வேலை நியமனத்திற்கு லட்சக்கணக்கான ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு வேலை கொடுக்கவில்லை என்று 81 பேர் போலீசில் புகார் செய்தார்கள்.  போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுத்ததால் நீதிமன்றத்தை அணுகி உத்தரவு பெற்று வழக்கு பதிய வைத்தார்கள். அன்றைய அதிமுக அரசு செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக இருந்தது. புகார் கொடுத்த பலரும் மிரட்டப்பட்டனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் போக்குவரத்து துறையில் வேலை கொடுக்க முடியாதவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டது எனவே வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டதை உயர் நீதிமன்றம் ஏற்று வழக்கை முடித்து வைத்தது.

பணம் கிடைக்காத சிலர் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றனர். நீதிமன்றம் வேலை கொடுப்பதற்கு பணம் வாங்கிக்கொண்டு வேலை கொடுத்தது லஞ்சம் ஆகாதா?பணத்தை திருப்பி கொடுத்து விட்டால் அது லஞ்சம் நடைமுறை இல்லையா? என்று கேள்விகளை எழுப்பி வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று உத்திரவிட்டது.  உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஒன்றிய பாஜ அரசு தனக்கு சாதகமாக  பயன்படுத்தி திமுகவை மிரட்ட நினைக்கிறது.

செந்தில் பாலாஜியின் மீது அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கொடுத்த புகார் மீதுதானே நடவடிக்கை எடுக்கிறோம். இதற்குப் போய் குய்யோ முய்யோ என்று கத்துகிறார்களே என்று பாஜ கேட்கிறது. வாஸ்தவம்தான். அப்படி என்றால் செந்தில் பாலாஜி மீது மட்டுமா அன்றைக்கு மு.க.ஸ்டாலின் புகார் கொடுத்தார். அதிமுக அமைச்சர்கள் பலர் மீதும்தானே ஆளுநரிடம் புகார் கொடுத்தார். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு  பாஜவால் பதில் சொல்ல முடியாது.

செந்தில் பாலாஜி தமிழக முதலமைச்சருக்கு அதிகம் நெருக்கம் உள்ளவராக  கருதப்படுகிறார். அதனால்தான் பாஜ அவர் மீது குறி வைக்கிறது என்ற கருத்து பரவலாக உள்ளது. அதிமுகவில் அவர் இருந்த பொழுது அன்றைய டாஸ்மாக் விற்பனையில் என்னென்ன முறைகேடு நடந்ததோ அதே தான் இன்றும் செந்தில் பாலாஜி துறையில் நடக்கிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. சட்ட விரோத மதுபான பார்கள், 24 மணி நேரமும் டாஸ்மாக் மது தாராளமாக கிடைப்பது, ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 அதிகமாக குடிமகன்களிடம் வசூலிக்கச் சொல்வது என்று செந்தில் பாலாஜி மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இதையெல்லாம் காரணம் காட்டி அமலாக்கத்துறை  தற்போது எடுத்துள்ள நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது. விசாரணை என்ற பெயரில் அவருக்கு நெஞ்சுவலி வர வைத்திருக்கிறார்கள். இதயத்தில் 4 அடைப்புகளை நீக்கி காவேரி மருத்துவ மனையில் அவருக்கு பெரிய ஆபரேஷன் செய்திருக்கிறார்கள்.

ஆளுநர் மீண்டும் மீண்டும் அத்துமீறல்

தமிழகத்தில் மட்டுமல்ல பாஜவிற்கு அரசியல் ரீதியாக மாற்றாக உள்ள கட்சிகள் ஆளக்கூடிய மாநிலத்தில் ஆளுநர்கள் தலையீடு அத்துமீறிக் கொண்டிருக்கிறது. அதிலும் பாஜவிற்கு கொள்கை ரீதியாகவும் எதிராக உள்ள கேரள இடதுமுன்னணி அரசாங்கத்தின் மீது, கேரள ஆளுநரும் மத்திய ஏஜென்சிகளும் கொடுக்கின்ற குடைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல… கொள்கை அடிப்படையிலும், மக்கள் ஆதரவாலும் அவற்றை எல்லாம் முறியடித்துக் கொண்டிருக்கிறது இடதுமுன்னணி அரசு.  சனாதன ஆதரவாளரான தமிழக ஆளுநர் ரவி, முதல்வரின் அதிகார விஷயத்திலும் மூக்கை நுழைத்திருக்கிறார். செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக்க ஒப்புதல் தர மறுத்திருக்கிறார்.  மந்திரிகளின் இலாகாக்களை முடிவு செய்வது முதலமைச்சரின் உரிமையாகும். இதை அங்கீகரிக்க மறுப்பது மாநில நிர்வாகத்தில் ஆளுநரின் அதிகபட்ச அத்துமீறலாகும்.

செந்தில் பாலாஜி மீது அரசியல் நோக்கம் கொண்ட  ஒரு நடவடிக்கை எடுக்கப்படும்போது, அதை காரணம் காட்டி, ஆளுநர் அமைச்சரவை மாற்றம் விவகாரத்தில்  தலையிடுவது,  மேலும் அந்த அரசியல் நோக்கத்தை உறுதிப் படுத்துவதாக உள்ளது.  

செந்தில் பாலாஜியின் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் அவர் விசாரிக்கப்பட வேண்டியவர் என்பதில் திமுக உட்பட யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அவரை அமலாக்கத்துறை கைது செய்வதற்காக எடுத்த முயற்சியும், நெஞ்சுவலியுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவரை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக காட்டிய தீவிரமும் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய பாஜவின் அரசியலை அம்பலப்படுத் துகிறது.

ஆளுங்கட்சியாக இருக்கிறபோது ஒருநிலைப்பாடும், எதிர்க்கட்சியாக இருக்கிறபோது ஒருநிலைப்பாடும் எடுப்பது தமிழகத்தில் இருதுருவ அரசியல் கலாச்சாரமாகவே மாறிவிட்டது. செந்தில்பாலாஜி விவகாரத்திலும் தற்போது தமிழகத்தில் அந்த சூழ்நிலைதான் நிலவுகிறது.

.பாக்கியம்
25.06.23எழுதியது,ஆஸ்திரேயாவிலிருந்து வெளிவரும் எதிரொலி  பத்திரிக்கையில் 
ஜீலை இதழில் வெளிவந்தது

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...