Pages

ஞாயிறு, ஜூலை 23, 2023

வளர்ச்சி: இந்தியா- சீனா சொல்லும் செயலும் பகுதி -꠲

 

உலக அரங்கில் சீனா-4


அ.பாக்கியம்



பகுதி -꠲

 

உண்மையானதன்னிறைவு முயற்சிகள்:

சீனா முடிந்தவரை பொருட்களை தங்கள் நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான முழு முயற்சிகளை எடுக்கிறது. இவை தற்சார்பையும் வேலைவாய்ப்பையும் உறுதிப்படுத்துகிறது. தொழிலாளர்களின் திறனைபயன்படுத்துகிறது. பொருளாதாரம் மேம்பாட்டையும் ஆற்றல் மிகு சுற்றுச்சூழலையும் ஏற்படுத்துகிறது.

இந்தியாவின் மேல் தட்டு மக்கள் தங்களது பயன்பாட்டிற்காக அந்நிய பொருட்களை வாங்குவதும் பயன்படுத்துவதும் அந்தஸ்தாக பார்க்கிறார்கள். -காமர்ஸ் செயல்பாட்டிற்கு அமேசானையும், மொபைல் கட்டணங்களுக்கு கூகுள் போன்றவற்றையும், சமூக ஊடகங்களுக்கு பேஸ்புக், ட்விட்டர், போன்றவற்றையும், 5ஜி இணையத்திற்கு நோக்கியா மற்றும் எரிக்சன் போன்றவைகளையும், கணினிகளுக்கு டெல் போன்றவைகளையும் சார்ந்து செயல்படு கிறார்கள்.

ஆனால் சீனாவில் ஒவ்வொன்றுக்கும் தங்களது நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்தி வருகிறார்கள். அலிபாபா,  பின்டுவாதுவா ஜேடி உட்பட 15க்கும் மேற்பட்ட  பிரதான -காமர்ஸ் இணையதளங்களும்,  சமூக ஊடகம், கணினி செயல்பாடுகள் என அனைத்திற்கும் சீனப் பதிப்பையே (தயாரிப்பை) பயன்படுத்து கிறார்கள். அதற்கான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வெற்றிகரமாக அமலாக்கி வருகிறார்கள்.

சீனாவின் வாகனத் தொழிலை கவனித்தால் தன்னிறைவின் வேகத்தை புரிந்து கொள்ள முடியும். 25 ஆண்டுகளுக்கு முன்பு சீன நிறுவனங்களுக்கு வாகன உற்பத்தி திறன் மிக மிக குறைவு. ஆனால் 2021ல் 20 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்தன. சீனாவின் உதிரி பாகங்கள் உட்பட ஆட்டோ மொபைல் ஏற்றுமதி வருடத்திற்கு 120 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. சீனாவின் உள்ளூர் கார் கம்பெனியான BYD அமெரிக்காவின் போர்டு மற்றும் ஜிஎம் ஆகியவற்றைக் காட்டிலும் சந்தை மதிப்பின் அடிப்படையில் அதிகமாக உள்ளது.

2017ஆம் ஆண்டு இந்தியா ஆப்பிள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் உற்பத்தியானது 4 மில்லியன் ஐபோன்கள் மட்டுமே. அதே நேரத்தில் சீனாவில் பாக்ஸ்கான் தொழிற்சாலை ஒரு வருடத்தில் 200 மில்லியன் ஐபோன்களை உற்பத்தி செய்து தள்ளியது. சீன உழைப்பு சக்தியின் உற்பத்தி திறன் வெகுவாக முன்னேறி இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

சீன அரசு தொழில் வளாகங்களை மற்றும் விநியோக சங்கிலி மூலம் நகரங்களின் பரந்த இணைப்புகளை உருவாக்கி உள்ளது. ஷாங்காய் நகரம் ரசாயனங்கள், மருந்துகள், ஆட்டோமொபைல், மின்னணு சாதனம், நிதி போன்றவற்றின் தொழில் வளாகங்களாக இருக்கிறது. ஷென்சென்நகரம் தகவல்தொழில்நுட்பம், தகவல்தொடர்பு, செமிகண்டக்டர் என்று சொல்லக்கூடிய குறைகடத்திகள், போன்றவற்றின் வளாகமாகவும், பெய்ஜிங்நகரம் தகவல் தொழில்நுட்பம், கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் போன்றவற்றின் வளாகமாக, குவாங்சுநகரம் ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக் உபகரணங்கள், ஜவுளி, ஆடைகள், பொம்மைகள், பெட்ரோ கெமிக்கல், போன்றவற்றின் வளாகமாக இருக்கிறது. இவை மில்லியன் கணக்கில் வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவுகிறது.

இந்தியாவும் தொழில்துறை நெட்வொர்க்கை தொழில் பூங்காக்களை தொடங்கியுள்ளது. மாநிலங்கள் முயற்சி செய்வதற்கான அறிவிப்புகளையும் செய்துள்ளது. ஆனால் இதற்கான காலங்கள் எவ்வளவு என்பது தெரியாது. முன்னேற்றங்கள் மெதுவாக நடைபெறு கிறது.

அரசு மற்றும் தொழில் கூட்டான்மை:

சீனா உள்ளூரில் அரசுத்துறை தனியா,ர் துறை போன்ற இரு துறைகளிலும் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் துறை செயல்படுவதற்கான பரந்த வாய்ப்புகள் சட்டரீதியாக அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வெளிநாடுகளில் தனது பொருளாதார நடவடிக்கைகளை விரிவு படுத்துவதில் சீன அரசு நேரடியாக ஈடுபட்டு உள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் தி பெல்ட் அண்ட் ரோடு திட்ட முன்முயற்சியாகும். 2013 ஆம் ஆண்டு சீன அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உலகளாவிய உள்கட்டமைப்பு திட்டமாகும். இதில் தற்போது 138 நாடுகளும் முப்பதுக்கு மேற்பட்ட சர்வதேச நிறுவனங்களும் இணைந்து பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த திட்டங்களின் படி துறைமுகங்கள், ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள், மின் நிலையங்கள், விமான மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகள், போன்றவைகள் உருவாக்கப்படுகின்றன. பாகிஸ்தானில் உள்ள குவாடார் துறைமுகம் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகம், மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில், அரேபிய நாடுகளில் ரயில் பாதைகள், துறைமுகங்கள் என்று சீன நிறுவனங்கள் கட்டுகிறது. உலகின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்கள் இப்பொழுது சீன நாட்டைச் சேர்ந்ததாகும்.

இந்தியா பெரும்பாலும்  முதலாளிகளுக்கு இத்துறையை திறந்து விட்டுள்ளது. கென்யாவில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் தொழிற்சாலை நவீன மயமாக்குவது, கானா நாட்டின் ஜனாதிபதி அலுவலகம்,  காம்பியா நாட்டின் தேசிய சட்டமன்ற கட்டிடம் சூடானில் கோஸடிமின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை இந்திய நாட்டின் நிறுவனங்கள் கட்டிக் கொடுத்தாலும் சீனாவுடன் ஒப்பிடும்போது இந்த திட்டங்கள் கடுகளவானது என்பதை பார்க்க வேண்டும். பெரும் உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்ற இந்தியா வெகு தூரம் செல்ல வேண்டும்.

திறன்மிகு அரசியலும், அரசியல் ஸ்திரதன்மையும்.

சீனாவின் வளர்ச்சிக்கு மற்றொரு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது அரசியல் நிலைத்த தன்மையாகும். இது ஒரு காரணமாக இருந்தாலும் இதுதான் முழுமையான காரணம் என்று ஏற்க முடியாது. பல நாடுகளில் நீண்ட காலமாக ஆட்சியில் நிலைத்த தன்மையுடன் இருக்கிறார்கள். இருந்தும் முன்னேற்றம் இல்லை. ஆனால் அதைவிட  மக்களுக்கான கொள்கையை அமுல்படுத்தக்கூடிய அரசாக இருக்க வேண்டும், மக்கள் பங்கேற்பு செய்யக்கூடிய அரசாக இருக்க வேண்டும். கொள்கை உருவாக்கத்தில் ஆரம்பித்து அமுலாக்கம் வரை மக்களின் பங்கேற்பு சீனாவில் கடைபிடிக்கப்படுவது உலகறிந்த விஷயம். தேர்தல் மட்டுமே முழு ஜனநாயகம் அல்ல. தேர்தலும் ஜனநாயகத்தின் ஒரு முக்கிய பகுதி தான். வாக்களிப்பது மட்டும்தான் மக்கள் பங்கேற்பு என்று மட்டமான சிந்தனை ஓட்டத்தில் இந்திய அரசியல் மூழ்கிக் கிடக்கிறது.

சீனாவின் முன்னேற்றத்திற்கு மற்றொரு முக்கியமான காரணமாக இருப்பது அரசியல்வாதிகள் உந்துசக்தியுடன் செயல்படுவதாகும். அரசியல்வாதிகளுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி, வறுமையை போக்குவது, மாசுக்கட்டுப்பாடு போன்றவற்றின் அடிப்படையில் அவர்கள் அடைய வேண்டிய இலக்குகள் தீர்மானிக்கப்படுகிறது. திறன்மிகு அரசியல்வாதிகளால் மட்டுமே இதை வெற்றி கொள்ள முடியும். சீனாவில் ஒருவர் கவர்னராக வேண்டும் என்றால் அடி  மட்டத்தில் கிராம,நகர,மாவட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் பணியாற்றி இருக்க  வேண்டும். இந்தியாவில் ஆட்சியில் இருப்பதற்கு மட்டுமல்ல அரசியல் கட்சிகளின் பொறுப்புகளுக்கும் வாரிசு என்ற பெயரால், நெருக்கமானவர்கள், உறவினர்கள், வேண்டப்பட்டவர்கள், தனக்கான எடுபிடிகள் என்ற எண்ணில் அடங்காத காரணங்களுக்காக திறனற்ற அரசியல் வாதிகள் ஆட்சியின் பொறுப்புகளில், அமைப்பின் பொறுப்புகளில் வந்த அமர்வது முட்டாள்தனமான வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் போன்றவை இந்திய நாட்டின் ஒட்டுமொத்தமான வளர்ச்சியை பாதிக்கிறது.

நிறைவாக

சீனாவின் அதிவேக வளர்ச்சிக்கு அங்கு நடைபெற்ற கம்யூனிஸ்கட்சி தலைமையிலான புரட்சியும், பொதுவுடமை கொள்கைகளால் நிர்மாணிக்கப்பட்ட விவசாய தொழில் துறை வளர்ச்சியின் அடிப்படையிலும், 1978 ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்டவிழ்த்து விடப்பட்ட உற்பத்தி சக்தியின் எழுச்சியும், இவற்றை யெல்லாம் தலைமை தாங்க கூடிய மக்கள் நலன் சார்ந்த கொள்கை யுடைய. அதே நேரத்தில் அனுபவம், திறன்மிகு தலைவர்களை உள்ளடக்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சி  பிரதான காரணமாக இருக்கிறது. 30 ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்ட புதிய பொருளாதார அதிசயத்தை நிகழ்த்தியது அதிக உற்பத்தி திறன் வாய்ந்த தொழிலாளர்கள்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சீனத் தொழிலாளர்களின் எண்ணிக்கை போலவே, கூர்மையான நீடித்த உற்பத்தித்திறன் பொருளாதார ஏற்றத்திற்கு உந்து சக்தியாக இருந்தது. உற்பத்தி திறன் அடிப்படையில் வளரும் பொருளாதாரம் நீடித்து நிலைக்கக் கூடியது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தியாவிற்கு மிகவும் அதிகமான வாய்ப்பு உள்ளது. இந்தியா மிகப்பெரிய சந்தை. இளைஞர்களை அதிகமாக கொண்ட உழைப்பு சக்தி மிகுந்த ஒரு நாடு. சீனாவிடமிருந்து ஏராளமான படிப்பினைகளை வளரும் நாடுகள் கற்றுக் கொள்ள முடியும். அமெரிக்கா இவற்றை தடுப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. இந்தியா உற்பத்தித் துறையில் முதலீடு செய்ய வேண்டும் சிறு, குரு, மற்றும் நடுத்தர தொழில்களின் முதலீடுகளை அதிகமாக்கி விரிவு படுத்துவதன் மூலம் சீனாவைப் போன்று வேலைவாய்ப்புகளையும் உள்நாட்டு சந்தைகளையும் உருவாக்க முடியும். 1950ஆம் ஆண்டு இந்தியாவைப் போன்று சமூக பொருளாதார கட்டமைப்பில் இருந்த சீனா இன்று 140 கோடி மக்கள் தொகையுடன் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளதால் சீன நாட்டின் நுணுக்கங்களை இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும் என்று பல்வேறு ஆய்வுகளும் அறிக்கைகளும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள்.

அ.பாக்கியம்

முற்றும்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...