Pages

புதன், ஆகஸ்ட் 13, 2025

33 வெள்ளை பொய்களின் வரலாறு

 

அ.பாக்கியம்

திபெத் தீர்வுச் சட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 2024 ஆகஸ்ட் 21 அன்று கைழுத்து போட்டார் என்ற செய்தியை அமெரிக்காவில் இருந்த 90 வயது தலாய்லாமாவிடம் தெரிவிக்கப்பட்டது என்ற செய்தி ஏகாதிபத்திய ஊடங்கங்களால் உலகம் முழுவதும் வெளிடப்பட்டது. சீனாவின் உள்நாட்டு பகுதியான திபெத்தில் அமெரிக்கா தலையிடுவது புதிய செய்தி அல்ல. 1949 ஆம் ஆண்டு சீனப் புரட்சி வெற்றி பெற்று விடும் என்ற சூழல் வந்த உடனேயே அமெரிக்க முதலாளிகளை சிவப்பு பூதம் பயமுறுத்தியது. இதனால் கம்யூனிஸ்டுகளை சிவப்பு பயம் என்று பெயரால் அமெரிக்கா முழுவதும் 1948 முதல் 1958 ஆம் ஆண்டு வரை வேட்டையாடினார்கள்.

சீனாவில் புரட்சி வெற்றி பெற்ற பிறகு சீனாவை வீழ்த்துவதற்கு அதன் உள்நாட்டு பிரச்சினைகளில் நேரடியாக தலையிட்டது. 1950 ஆம் ஆண்டுகளில் துவங்கி  1970 ஆம் ஆண்டுகள் வரை அமெரிக்க தலையீடு தீவிரமாக இருந்தது. 1970 ஆம் ஆண்டு முதல் ஹென்றி கிஷிங்கர் அமெரிக்க அதிபர் நிக்சன் ஆகிய இருவரும் சீனாவுடன் உறவுகளை மேம்படுத்தி நிலைமைகளை மாற்றினார்கள். 2000 ஆண்டு வரை இவை நீடித்தது. மீண்டும் 2000 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவை அச்சம் கொள்ள செய்தது

1949 ஆம் ஆண்டு சீனப் புரட்சி வெற்றி பெற்ற பிறகு திபெத்தில் தலையிடுவதற்காக அமெரிக்க மத்திய உளவுத்துறை திபெத்திய திட்டம் என்ற ரகசிய திட்டத்தை தயார்செய்து அமலாக்கியது. சீனாவை எதிர்த்து வந்த பல்வேறு குழுக்கள் தனிமைப்பட்டு கிடந்தன. இவற்றையெல்லாம் ஒன்றுபடுத்தி சீனாவுக்கு எதிராக வலுப்படுத்துவதை அமெரிக்காவின் மத்திய உளவுத்துறை செய்தது. இதற்கு 14 ஆவது தலாய்லாமாவின் சகோதரர் கியாலோ தோண்டப் அனைத்து உதவிகளையும் செய்தார். இவரை சிஐஏவின் சொத்து என்று அழைப்பார்கள். 1950 ஆம் ஆண்டு சிஐஏ தனது குறிப்பாணை அறிக்கையில் திபெத்தில் சீனா தனது இறையாண்மையை வலுப்படுத்தினால், இந்தியா வழியாக மேற்கத்திய சக்திகளின் சாத்தியமான படைஎடுப்பது தடைபட்டு விடும்  என்று தெரிவித்திருந் தார்கள். 1957ஆம் ஆண்டு சிஐஏ தளவாடப் பிரச்சினைகள் குறித்த அறிக்கைகளை அளித்தது. இந்த அறிக்கையில் திபெத் மக்களிடம் கம்யூனிச செல்வாக்கு அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் கம்யூனிச கருத்துக்கள் பரவுவது அமெரிக்காவிற்கு ஆபத்து. அது மட்டுமல்ல மூன்றாம் உலகப்போர் நடந்தால் சீனாவிற்கு திபெத் மிகப்பெரும் தளமாக இருக்கும் என்பதையும் சிஐஏ தெரிவித்தது. இதனால் திபெத்தை சீனாவிடமிருந்து கபளீகரம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்கள்.

சர்க்கஸ் கம்பெனி பெயரால் சதித்திட்டம்

சிஐஏ உருவாக்கிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமெரிக்காவின்  தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்புக்குழு இத்திட்டத்தை அமலாக்கிட பல்வேறு குறியீட்டுப் பெயர்களைக் கொண்ட அமைப்புகள் உருவாக்கப்பட்டது. எஸ்டி சர்க்கஸ் (ST CIRCUS) அமெரிக்காவில் உள்ள சைபன் தீவிலும், கொலராடோவில் உள்ள கேம்ப் ஹேலிலும் திபெத்திய சீன எதிர்ப்பு கொரிலாக்களுக்கு பயிற்சி கொடுக்கக்கூடிய திட்டத்திற்கு இப்பெயர் வைத்தனர். ஆயுதங்களை கையாளுவது, கொரில்லா முறைகள், தகவல் தொடர்பு திறன்கள், உயிர் காத்துக் கொள்வதற்கான நுட்பங்கள் என கடுமையான ராணுவ பயிற்சியை கொடுத்தார்கள். திபெத்திய பீடபூமியின் கரடு முரடான நிலப்பரப்பை கருத்தில் கொண்டு மலைப்பகுதி போர்ப்பயிற்சி கொடுக்கப்பட்டது. திபெத்திய கொரில்லாக் களுக்கு அமெரிக்காவில் உள்ள கேம்ப்ஹல் பகுதி தேர்ந்தெடுக்கப்பட காரணம் இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து பத்தாயிரம் அடி உயரத்தில் அமைந்திருந்த மலைப்பாங்கான பகுதி. அமெரிக்காவில் பயிற்சி இவர்கள் திபெத்தில் தளம் அமைத்து சீனாவிற்கு எதிராக செயல்படுத்தப்பட்டது. 1959 ஆம் ஆண்டு தலாய்லாமா இந்தியாவிற்கு தப்பிச் சென்ற பிறகு வடமேற்கு நேபாளத்தில் முஸ்டாங்கில் இந்த சிஐஏ வின் படை  தளம் அமைத்து 1969 ஆம் ஆண்டு வரை செயல்பட்டது.

எஸ்டி பர்ணம் (ST BARNUM) என்ற பெயரில் ரகசிய படை அமைத்தனர். திபெத்திற்கு சிஐஏ வின் ஏஜெண்டுகள் அனுப்புவது, அவர்கள்  செயல்படுவது. ராணுவப் பொருட்களை அனுப்புவது. ராணுவத்திற்கு துணை உபகரணங்களை விமானத்தின் மூலமாக கொண்டு செல்வதற்கு இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது. விமானங்கள் மூலம் திபெத்திற்குள் ஆரம்பத்தில் கொண்டு சென்றார்கள். சீனாவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட பொழுது இந்தியா மற்றும் நேபாளம் வழியாக ரகசியமாக ஆயுதங்களை அமெரிக்கா திபெத் கொரில்லாக்களுக்கு வழங்கியது.

எஸடி பெய்லி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட அமைப்பு  திபெத்த்தில் சீனாவின் செல்வாக்கை குறைப்பதற்கு பிரச்சாரம் செய்ய பயன்படுத்தினார்கள். திபெத்திய சுதந்திரம், சுயாட்சி என்ற வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் வானொலி ஒளிபரப்பல்கள் செய்வது, சர்வதேச ஆதரவை திரட்டுவதும், சீன ஆட்சியின் கீழ் திபெத்தில் மனித உரிமைகள் மீறப்படுகிறது என்ற கட்டுக்கதைகளின் உற்பத்தி இடமாக இந்த எஸ்டி பெய்லி நிறுவனம் இருந்தது.

மேற்கண்ட மூன்று குறியீட்டுப் பெயர்களில் முதல் இரண்டும் பிரபலமான சர்க்கஸ் கம்பெனிகளின் பெயர்கள். மூன்றாவதாக உள்ள அமைப்பின் பெயர் அமெரிக்காவில் இருந்த பிரபலமான பிரச்சார கம்பெனியின் பெயராகும் இந்து நிறுவனத்தில் அமெரிக்க சமூகத்தில் மேல்தட்டு வர்க்கம் ஆதிக்கம் செலுத்தியது.

கொட்டப்பட்ட கொரில்லாக்கள்

திபெத்  கொரிலாக்களை சிஐஏ அமைப்பு தேர்வு செய்கிற பொழுது கிடைத்தவர்களை எல்லாம் சேர்த்துக் கொள்ளவில்லை. கிழக்கு திபெத்தில் உள்ள மத வெறி பிடித்த திபெத்திய வஜ்ராயன பௌத்த பிரிவை சேர்ந்தவர்களை தேர்வு செய்தது. மத அர்ப்பணிப்பு உடையவர்களை எளிதில் பயன்படுத்த முடியும் என்று சிஐஏ கருதியது. இதே போன்று தான் ஆப்கானிஸ்தானத் தில் உள்ளே நுழைவதற்கு தீவிர மத பற்று உள்ளவர்களை தேர்வு செய்து திட்டங்களை அமலாக்கியது.

சிஐஏ உளவுத்துறை அமைப்பால் நடத்தப்படுகிற சிவில் ஏர் டிரான்ஸ்போர்ட் மூலமாக சீனாவின் மீதும், தீபத்தின் மீதும் 200க்கும் மேற்பட்ட விமானங்களை பறக்க விட்டனர். 1959-1960 ஆண்டு மே மாதத்துக்குள் 35 முதல் 40 விமானங்கள் மூலம் சீன எதிர்ப்பு கொரில்லாக்களுக்கு ஆயுதங்களையும் பொருட்களை யும் வழங்கினார்கள். சிஐஏ ஆதரவுடன் திபத்திய கொரில்லாக் களின் தலைவரான கோம்போதாஷி திரிகுதாங்கல் என்ற இடத்தில்  தலைமையகத்தை நிறுவினார்.

பௌத்தத்தை பாதுகாப்பதற்கான தன்னார்வப் படை என்று இதற்குப் பெயர் வைத்தார். சிஐஏ இதற்கான வானொலிகளை அமைத்துக் கொடுத்தது. 1959 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் சிஐஏ பாராசூட் மூலம் சாக்ரா முதல் பல்வேறு இடங்களில் அமெரிக்காவில் பயிற்சிபெற்ற கொரில்லாக்களை இறக்கியது. இதனுடன் ஆயுதங்களையும் அளித்தது. ஒவ்வொரு கொரிலாவிற்கும் வயர்லெஸ் செட்டுகள், சைனட் மாத்திரை கொடுத்தார்கள்.

சிஐஏ பயிற்சி மூலமாக நேபாள எல்லையில் 2000கும் மேற்பட்ட துணைப்படையை உருவாக்கியிருந்தார்கள். மற்றொரு துணை ராணுவப் படையை உருவாக்கவும் முயற்சி செய்தார்கள். 1964 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தரவுகளின் படி சிஐஏ திபெத்திற்கு  1.7 மில்லியன் டாலர்களை அதாவது 17 லட்சம் டாலர்களை ஒதுக்கீடு செய்தது. 1960 முதல் 1972 ஆம்  ஆண்டுவரை கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா நேரடியாக பணம் கொடுத்தது என்று மூத்த கொரில்லா போராளியான பால்டன் வாங்காள் கூறினார். எங்கள் வீரர்கள் சீன வாகனங்களை தாக்கி  அரசாங்கத்தின் சில ஆவணங்களை கைப்பற்றி கொடுத்தால் அமெரிக்கர்கள் எங்களுக்கு சம்பளத்தை அதிகரித்து கொடுத்தனர்  என்றும் தெரிவித்தார்.

சிஐஏ தலாய்லாமாவுக்கு அளித்த நிதிகள் பற்றிய விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. நேபாளத்தில் இயங்கிய கொரில்லாக்களுக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர்கள், நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் உள்ள திபெத்தியர்களுக்கு 75 ஆயிரம் டாலர், கொரில்லாக்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக 8,55, 000 டாலர்கள், தலாய்லாமாவிற்கு சிஐஏ கொடுத்த மாத சம்பளம் 1,80,000 டாலர்கள் இதர செலவுகள் 1.25 டாலர். எந்த அளவு நிதி உதவி செய்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறிய முடியும். தலாய்லாமா சி ஐ ஏ வின் சம்பள பட்டியலில் இருந்தார். இப்பொழுதும் இருக்கலாம். ஆண்டுக்கு 1,80,000 டாலர் அவருக்கு சம்பளம் அளிக்கப்பட்டதை இந்தியாவில் உள்ள நாடுகடத்தப்பட்ட அரசுக்கு பயன்படுத்தினார் என்று அரசு சொல்லுகிறது.  முழுக்க முழுக்க அமெரிக்காவின் சிஐஏ வின் செயல்பாட்டில், நிதி உதவியில் சீனாவிற்கு எதிரான சதிச்செயல்கள் முன்னெடுக்கப்பட்டது என்பதை பட்டவர்த் தனமாக அறிய முடிகிறது.

சீனாவுடன் உறவும் ஆயுதபயிற்சி நிறுத்தமும்

1972ஆம் ஆண்டு சீனாவின் தலைவர் மாசேதுங்கிற்கும் அமெரிக்கா ஜனாதிபதி நிக்சனுக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்க சீன உறவை இயல்பாகியது. இதனால் அமெரிக்கா திபத்திற்கு சிஐஏ மூலம் வழங்கி வந்த உதவியை நிறுத்தியது. இதன் விளைவாக சிஐஏவில் பயிற்சிபெற்ற 1500 திபெத்திய கொரில்லாக்களுக்கு ஒவ்வொருவரும் இந்தியாவில் நிலம் வாங்க அல்லது ஒரு தொழிலை தொடங்க ரூபாய் 10,000 கூடுதலாக வழங்கப்பட்டது. சீன அமெரிக்க உறவுகளை சேதப்படுத்தும் பயிற்சிகளை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உத்தரவு போட்டது.

தலாய்லாமா அமெரிக்காவின் முடிவை விமர்சித்தது மட்டுமல்ல, திபெத்திய மக்களுக்கு உதவுவதை தவிர வேறு மறைமுக நோக்கங்கள் இருப்பதை நிரூபிப்பதாக அறிவித்தார். சிஐஏ வின் சொத்து என்று அழைக்கப்பட்ட தலாய்லாமாவின் மூத்த சகோதரர் கியாலோ தோண்டப் சிஐஏ வின் முடிவுகளை கண்டு விரக்தியை வெளிப்படுத்தினார். 2009 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில் அவர் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார். “நான் ஒருபோதும் சிஐஏ இடம் ராணுவ உதவியை கேட்கவில்லை. நான் அரசியல் உதவி மட்டும்தான் கேட்டேன். திபெத் நிலைமையை விளம்பரப் படுத்தவும், மற்றவர்களிடம் தெரிவிக்கத்தான் நான் விரும்பினேன். அமெரிக்கர்கள் திபெத்தை ஒரு சுதந்திர நாடாக மாற்ற உதவுவதாக உறுதி அளித்தனர்.

அந்த வாக்குறுதிகள் அனைத்தும் மீறப்பட்டன என்று தெரிவித்தார். மேலும் அமெரிக்கா திபெத்துக்கு உதவ விரும்பவில்லை. அது சீனாவுக்கு பிரச்சனை ஏற்படுத்த விரும்பியது. திபெத்.துக்கு தொலைநோக்கு கொள்கை இல்லை. ரகசிய நடவடிக்கைகளுக்கு நான் பயிற்சி பெறவில்லை. அதிகார அரசியல் பற்றி எங்களுக்கு தெரியாது” என்று தனது கருத்தை கோபத்துடன் வெளிப்படுத்தினார்.

சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் சர்வதேச சூழ்நிலையில் சீனாவின் செல்வாக்கும் பெருகியது. அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளித்து கொள்கைக்கு எதிராக சீன சோசலிச கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தனது மேலாதிக்கும் கேள்விக்குள்ளாகிற நிலை ஏற்பட்டதால் அமெரிக்கா சீனாவிற்கு எதிராக திபெத்தை மீண்டும் கையில் எடுத்தது.

மூன்று சட்டங்களும் அத்துமீறல்களும்

2002 ஆம் ஆண்டு அமெரிக்கா திபெத்திய கொள்கை சட்டம் என்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இது திபெத்திய மக்களின் அடையாளத்தை பாதுகாப்பது, மனித உரிமைகளை மேம்படுத் துவது, சீனாவிற்கும் தலாய்லாமாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையை துவங்குவது என்று இந்த சட்டத்தில் எழுதி இருந்தார்கள். இந்த சட்டத்திலும் திபெத்தை சீனாவில் ஒரு பகுதியாக அங்கீகரிக்கிறது. அதே நேரத்தில் தலாய்லாமா திபெத் சுதந்திரம் கேட்கவில்லை மாறாக சுயாட்சி கேட்கிறார் என்று அவர்கள் சட்டத்தில் எழுதுகிறார்கள். இந்த சட்டத்தினை அமுலாக்க அமெரிக்கா வெளியுறவுத்துறையில ஒருவரை பொறுப்பாக்கியது. திபெத்தியர்களுக்கு பொருளாதார மேம்பாடு, கலாச்சார பாதுகாப்பு, சுகாதார பாதுகாப்பு, கல்வி அளிப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின்  நிலைத்த தன்மையை அமெரிக்கா ஆதரிக்கும் என்று சட்டத்தில் கூறப்படுகிறது.

அதாவது திபெத் பகுதியில் அமெரிக்கா எல்லா வகையிலும் தலையிடுவோம் என்று தான் இந்த சட்டப் பிரிவுகளின் அர்த்தம். உலகில் வேறு எந்த நாடும் இப்படி ஒரு சட்டத்தை இயற்றாது. மிக தூரத்தில் இருக்கக்கூடிய சீன நாட்டின் உள்நாட்டில் சுகாதாரம், பொருளாதாரம், கல்வி பற்றி அமெரிக்கா சட்டம் இயற்றுகிறது என்றால் எந்த அளவுக்கு நாட்டான்மை தன்மை என்பதை புரிந்து கொள்ள முடியும். ஜிசாங் திபெத் தன்னாட்சி மாநில தலைநகர் லாசாவில் ஒரு அமெரிக்க தூதரகத்தை நிறுவ வேண்டும் என்று இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சீனாவிற்கும் திபெத்திற்கும் பேச்சுவார்த்தை நடத்தி உறவுகளை மேம்படுத்த இந்த சட்டம் உதவும் என்று மாறுவேடம் தரித்து பேசியது.

2020 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி திபெத்திய கொள்கை மற்றும் ஆதரவு சட்டம் என்ற சட்டத்தை 2002 ஆம் ஆண்டின் சட்டத்தின் தொடர்ச்சியாக விரிவு படுத்துகிறார்கள். சட்டம் அமெரிக்க காங்கிரஸில் நிறைவேற்றப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி திபெத் தீர்வு சட்டம் என்ற ஒரு சட்டத்தை அமெரிக்க காங்கிரஸில் நிறைவேற்றுகிறார்கள் இந்த சட்டம் ஏற்கனவே இருந்த இரு சட்டங்களிலிருந்து மாறுபட்ட தன்மையுடன் அமைந்துள்ளது. இந்த சட்டத்திற்கு ஜோபைடன் ஒப்புதல் கொடுத்து கையெழுத்து போடுகிறார். சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதற்கு இயற்றப்பட்ட மூன்றாவது குறிப்பிடத் தக்க சட்டமாகும் இது

திபெத்திய வரலாறு, திபெத்திய மக்கள், தலாய்லாமாதிபெத் நிறுவனங்களை குறித்தும் சீனா தவறான தகவல்களை பரப்புகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செயல்படு வதற்காக அமெரிக்கா நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இந்த சட்டம் அங்கீகரிக்கிறது. இதற்கான நிதிஒதுக்கீடு களையும் செய்தனர்.  இதற்குமுந்தைய சட்டங்களில் சீனாவின் ஒரு பகுதி என்று அங்கீகரித்து வந்த அமெரிக்கா, பண்டைய காலங்கலிருந்து சீனாவின் ஒரு பகுதி என்று சொல்வதை ஏற்க முடியாது என்று சட்டத்தில் மாறுபட்ட கருத்தை திணிக்கிறார்கள். இந்த சட்டம் தலாய்லாமாவுடன் நிபந்தனை யற்ற பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்து கிறது. அதைவிட அதிகமாக சென்று திபெத்திய தன்னாட்சி பகுதியை மாற்றி சரியான புவியியல் பகுதியை அது மேலும் சில மாநிலங்களை சேர்த்து பெரிதாக்க வேண்டும் என்று சட்டத்தில் தெரிவிக்கிறார்கள்.

சீனாவில் இருக்கக்கூடிய ஒரு மாநிலம் எப்படி இருக்க வேண்டும், என்பதை அமெரிக்க சட்டம் தீர்மானிக்கிறது என்றால் அமெரிக்க அத்து மீறல்களின் உச்சத்தில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். 2002 ஆம் ஆண்டு சட்டம் சீனா சுயாட்சி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. 2020 ஆம் ஆண்டு சட்டம் நாடு கடத்தப்பட்ட தலாய்லாமாவின் அரசு ஜனநாயக அடிப்படை யில்   தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு என்றும், அதனோடு பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் போட வேண்டும் என்ற அளவிற்கு சென்றது. 2024 ஆம் ஆண்டு சட்டம் முன்நிபந்தனை இல்லாமல் சீனா பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று நிறைவேற்றி இருப்பதுடன் கலாய்லாமாவின் வாரிசு தேர்ந்தெடுப் பதற்கு சீனா தலையிடக்கூடாது என்று சட்டத்தில் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த சட்டத்தின் மூலம் இரண்டு முக்கியமான பிரச்சனைகளை அமெரிக்கா முன்வைக்கிறது. தலாய்லாமாவும் அமெரிக்காவும் ஒரே புள்ளியில் இணைந்துவிடுகிறார்கள். முதலாவதாக,  2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தர்மசாலாவில் தலாய்லாமா வுடன்  அமெரிக்க உயர்மட்ட குழு சந்திப்பை நடத்தியது. சீனாவுக்கு எதிராக திபெத்யர்களை கலவரத்திற்கு தூண்டி விடுவதற்கான சந்திப்பாக இது அமைந்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஒருங்கிணைப்பாளராக திபெத் பகுதிக்கு சட்டவிரோத சட்டத்தின் மூலம் நியமிக்கப் பட்டவர், நேபாளத்தில் இருக்கும்  திபெத்தியர்களுக்கான சலுகைகளை கூடுதலாக வழங்க வேண்டும் என்று நேபாள அரசை அச்சுறுத்தினார்.

அதாவது சீனாவிற்கு எதிராக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம். திபெத்தின் தலைநகரான லாசாவில் அமெரிக்க தூதரகம் நிறுவப்பட அனுமதிக்கும் வரை சீன மக்கள் குடியரசின் எந்த ஒரு கூடுதல் தூதரகங்களையும் அமெரிக்காவில் நிறுவுவதற்கு, அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் அங்கீகாரம் கொடுக்கக்கூடாது என்று தெரிவித்தார். இது அந்த சட்டத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 2024 ஜூலை மாதம் அமெரிக்காவின் ஹீஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தை அமெரிக்கா மூடியது. சீனா பதிலுக்கு திபெத்தின் முக்கிய நுழைவாயிலாக கருதப்படும் செங்குடுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடியது.

இரண்டாவதாக, திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் அதன் அருகாமையில் உள்ள மாநிலமான கிங்காய், சிச்சுவான், கன்சு, யுன்னான் ஆகிய பகுதிகளையும் இணைக்க வேண்டும் என்று அமெரிக்காவின் திபெத் சீன தீர்வு சட்டம் வலியுறுத்துகிறது. கிங்காய் என்பது திபெத்தை போன்று புவியியல் அமைப்பு சார்ந்த மிகப்பெரிய பகுதியாகும். கிங்காய்  உலகின் கூரை என்ற பட்டத்தையும் திபெத்துடன் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு உயரமானது. இதை சுற்றியுள்ள வடகிழக்கு பகுதி 7000 முதல் 8000 அடி உயரத்தில் இருந்தாலும் அதன் தெற்குப் பகுதி 13000 அடி உயரத்தில் பெரிய மழை தொடர்கள் மற்றும் உயரமான பள்ளத்தாக்குகளையும் கொண்டுள்ளது. இந்த மாகாணத்தின் எல்லை 1928ஆம் ஷியாங்காய் ஷேக் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. கிங்காய் மலையில் மட்டும் 10 பெரிய ஆறுகளின் ஆதாரம் உள்ளது.

கிங்காய் மாநிலத்தில் 8 வெவ்வேறு தேசிய இனங்களையும் பண்பாடுகளையும் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள். 2022 ஆண்டு தரவுகளின்படி 60 லட்சம் மக்கள் வாழுகிறார்கள். இதில் ஹான் இனத்தவர்கள் 54 சதவீதம், திபெத்தியர்கள் 21 சதம், உய் இன முஸ்லிம்கள் 16 சதம் குடியிருக்கிறார்கள். இந்த மாகாணத்தில் மக்கள் தொகை வசிப்பிடங்களுக்கு ஏற்ப ஐந்து மாவட்டங்கள் திபெத்திய மாவட்ட தன்னாட்சி பகுதியாக இருக்கிறது. அதாவது திபெத்திய் மக்கள் அதிகம் வாழும் பகுதிக்கு மாவட்ட சுயாட்சி கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் மேய்ச்சல் நிலங்கள் தெற்கு பகுதியில் இருப்பதால் திபெத்திற்கு தொடர்பு இல்லை. வடக்கில் இருக்கக்கூடிய திபெத்தியர்களுக்கும் தெற்கே உள்ள திபெத்தியர் களும் மாறுபட்ட சூழல் வளர்ந்தவர்கள். கிங்காயில் உள்ள திபெத்தியர்கள் லாசாவில் இருக்கும் மொழியை பேசுவதில்லை. திபெதத்திய பௌத்த மதத்தை கடைபிடிக்கி றார்கள் என்பதை தவிர, பூகோள ரீதியிலும், மொழியிலும் வேறுபட்டவர்கள். சீன வரலாற்றின் எந்த காலகட்டத்திலும் திபெத்திய லாசாவுடன் கிங்காய் மாநிலத்தில் உள்ள திபெத்தியர்கள் இணைந்தது இல்லை. எனவே பரந்த திபெத் என்ற சுதந்திரநாடு வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக் காவும், தலாய்லாமாவும் முன் வைப்பது அரசியல் பின்னணியைக் கொண்டது

திபெத் சுதந்திரம் என்று அழைக்கப்படுவது உண்மையில் பழைய மற்றும் புதிய ஏகாதிபத்தியவாதிகளால் உருவாக்கப் பட்டது என்பதையும், சீனப் பிரதேசத்தை பிரித்து எடுக்கும் மேற்கத்திய ஆக்கிரமிப்பாளர்களின் திட்டத்தின் ஒரு பகுதி என்பதையும் வரலாற்று உண்மைகள் வெளிப்படுத்து கின்றன.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

33 வெள்ளை பொய்களின் வரலாறு

  அ.பாக்கியம் திபெத் தீர்வுச் சட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 2024 ஆகஸ்ட் 21 அன்று கைழுத்து போட்டார் என்ற செய்தியை அமெரிக்காவில் இரு...