Pages

வியாழன், ஆகஸ்ட் 28, 2025

35 திபெத்: தடம் புரண்ட இந்தியா

 


அ.பாக்கியம்

இந்திய சீன உறவுகளை சீர்குலைப்பதற்கு இரு நாடுகளையும் எதிர் எதிரே நிறுத்துவதற்கு திபெத்திய பிரச்சனை மட்டும்தான் அடிப்படையாக இருக்கும் என்பதை அமெரிக்கா புரிந்து கொண்டுள்ளது. நரேந்திர மோடியின் அரசு இந்தியாவில் பதவியேற்று பிறகு அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாறியது. எனவே பல நேரங்களில் இரட்டை நிலை எடுத்து அம்பலப்பட்டு நிற்கக்கூடிய காட்சிகளையும் காண முடிந்தது. தலாய்லாமாவே நல்ல முடிவை அமைதியான முறையில் நிறைவேற்ற விரும்பினாலும் அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள், இந்தியாவில் உள்ள சீன எதிர்ப்பு சக்திகள் அவற்றை அனுமதிக்காது.

அரசியல் சுழற்சியில் பிறந்தநாள்

ஒருபுறத்தில் பிரிக்ஸ் நாடுகளின் மாநாடு பிரேசிலில் கூடியது. இந்த அமைப்பு அமெரிக்காவின் ஒற்றை உலகத்திற்கு (சர்வதேச வர்த்தகத்தில் உலக நாடுகள் அமெரிக்காவை மட்டுமே சார்ந்திருக்கும் நிலை) சவால் விடக்கூடிய அமைப்பு. இதில் இந்தியாவும் உறுப்பினர். இந்த அமைப்புக்குள் முரண்பாடுகளை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு இந்தியா மட்டும்தான் பொருத்தமானது என அமெரிக்கா முடிவு செய்திருந்தது. காரணம் இந்தியாவின் இரட்டை நிலைப்பாடுகள். ஏற்கனவே சீனாவிற்கு எதிரான அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளடக்கிய ஆசிய நாட்டில் குவாட் ராணுவ கூட்டணியை அமெரிக்க உருவாக்கி இருந்தது. இதே காலத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. எனவே இந்த இரண்டு நிகழ்வுகளையும் சீர்குலைப்பதற்கு அமெரிக்கா, மேற்கத்திய, மற்றும் இந்தியாவில் இருந்த சீன எதிர்ப்பு சக்திகளும் தலாய்லாமாவின் பிறந்தநாளை பயன்படுத்த ஆரம்பித்தனர்.

தலாய்லாமாவின் பிறந்தநாள் மிக சாதாரண ஒன்றுதான். ஆனால் சில மாதங்களாக அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் இந்தியாவிலிருந்த உளவுத்துறை அமைப்புகளையும் இணைத்து அவற்றை சிறப்பாக கொண்டாட முடிவெடுத்திருந்தனர். அந்த முடிவையே மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளையும் சீர்குலைக்க பயன்படுத்தினர். 2025ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி தலாய்லாமாவின் பிறந்தநாளை ஒருவார காலம் அமெரிக்கா முழுவதும் கொண்டாட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. தலாய்லாமாவின் பிறந்த நாளை அமெரிக்காவிலும் மேற்கத்திய நாடுகளிலும் அந்த அரசு நிதி உதவி செய்து கொண்டாட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? சீன எதிர்ப்பு கூட்டணியை உருவாக்குவது தான் அடிப்படை நோக்கம். பிறந்த நாளை முன்னிட்டு தலாய்லாமா தனது மறுபிறவி வாரிசை அறிவித்த நிகழ்வில் சர்வதேச பத்திரிக்கையாளர்களும் கலந்து கொள்ள வைத்துள்ளார்கள் என்றால் அதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அரசியலையும் அறிந்து கொள்ள முடியும்.

தலாய்லாமாவின் மறுபிறவி வாரிசு விஷயத்தில் சீனா தலையிடக்கூடாது என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள். திபெத்திய பௌத்த மதத்தில் இருக்கக்கூடிய பௌத்தர்கள் 95 சதவீதம் பேர் சீனாவில் இருக்கிறார்கள். அவர்கள் இது பற்றிய முடிவு எடுப்பதற்கு உரிமை இல்லை என்று சொல்வதற்கு இவர்கள் யார் என்று தான் திபெத்திய மக்கள் கேட்கிறார்கள். அதே நேரத்தில் எந்த விதத்திலும் தலாய்லாம பிறந்த நாளில் தொடர்பு இல்லாத அமெரிக்காவும், இந்தியாவில் இருக்கக்கூடிய நிறுவனங்களும், மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்களும் இந்த மறுபிறவி வாரிசு பற்றி முடிவு எடுப்பதற்கு என்ன அதிகாரம் அல்லது தொடர்பு இருக்கிறது என்ற கேள்வி உருவாகிறது.

இந்தியா பஞ்சசீலக் கொள்கை ஒப்பந்தத்தின்படியும், 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் ஏப்ரல் மாதம் ஹுனானில் சந்தித் அடிப்படையில் நாடு கடத்தப்பட்ட தலாய்லாமா அல்லது திபெத் அரசு நடத்தும் நிகழ்வுகளுக்கு அரசு அதிகாரிகள் செல்லக்கூடாது என்ற சுற்றறிக்கைகளும் இந்தியாவால் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜு தலாய்லாமாவையும் அவருடைய உரிமைகளையும் பகிரங்கமாக ஆதரித்து பேசினார். தலாய்லாமாவின் மறுபிறவி விஷயத்தில் சீனாவிற்கு எந்தப் பங்கும் இல்லை என்று பேசினார். சீனாவை இழிவுபடுத்தக்கூடிய முறையில் தலாய்லாமாவிற்கு மட்டுமே தனது வாரிசை தேர்ந்தெடுக்க உரிமை உண்டு என்று ஜூலை 4 ஆம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா தலைப்புச் செய்தியை வெளியிட்டு இருந்தது. சீனாவிற்கு வெளியே வாழக்கூடிய ஐந்து சதவீதத்திற்கும் குறைவான திபெத்திய பௌத்தர்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் செய்திகள் வெளியிடப்படுகிறது.

மத்திய அமைச்சர் மட்டுமல்ல, பிறந்த நாள் கொண்டாட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எல்லை மாநிலங்களாக இருக்கக்கூடிய சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம் முதல்வர்களும் கலந்து கொண்டார்கள். பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளையும் சேர்ந்த 9 இந்திய எம்.பி.க்கள் குழு, திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளுக்கு வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்தது. இதற்கு மேலும் பிரதமர் நரேந்திர மோடி தலாய்லாமாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இவர்களுக்கு மத்தியில் தான் சீனாவுக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என்றும் நான் ஒரு சுதந்திர நாட்டில் மறுபிறவி எடுப்பேன் என்றும் கூறினார். அவர் சுதந்திர நாடு என்று அறிவித்தது வேறு எங்கும் அல்ல. இந்தியாவில்தான் என்பதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். இவை அனைத்தும் சீனாவை ஆத்திரமூட்டக்கூடிய செயல்கள் மட்டுமல்ல பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியாவின் பங்களிப்பை குறைப்பதும் ஆகும். இந்திய அரசு திபெத் கொள்கையில், சுயசார்பிலிருந்து விலகி ஏகாதிபத்திய சார்பு கொள்கைக்கு சென்று விட்டது.

மோடி டிரம்ப் சந்திப்பு தலாய்லாமாவின் பாதுகாப்பு

2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் டிரம்பை அமெரிக்காவில் சந்தித்து பேசினார். அதே தேதியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் ஹைதராபாத்தில் இருந்து கர்நாடகாவில் உள்ள மிகப்பெரிய திபெத்திய குடியிருப்பான பைல குப்பேயில் தங்கி இருந்த தலாய்லாமாவை சந்தித்து பேசினார். முழங்கால் சிகிச்சை பெற்று வந்த தலாய்லாமாவிடம் ஆசி பெறுவதற்காக சென்றதாக கூறினார். சிகிச்சை பெற்ற காலத்தில் ஆசி பெற சென்ற ரகசியம் என்ன? மற்றொரு சம்பவமும் இதே தேதியில் நடந்தது. இந்தியாவின் உள்துறை அமைச்சர் ஒருவர் தலாய்லாமாவை தொடர்பு கொண்டு அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளதாக தெரிவித்தார். நாடு தழுவிய அளவில் அவரது பாதுகாப்பை இனிமேல் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விஐபி பிரிவு பொறுப்பேற்கும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்தது

இதற்கு முன்பு தலாய்லாமாவிற்கு இமாச்சலப்பிரதேச காவல் துறையின் பாதுகாப்பு இருந்தது. டெல்லி அல்லது பிற இடங்களுக்கு செல்லும் பொழுது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. தற்போது அவருக்கு ஒரே ஷிப்டுகளில் பணிபுரியும் சுமார் 30 சிஆர்பிஎப் கமாண்டோக்கள் கொண்ட ஒரு பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த கடந்த 65 ஆண்டுகளாக இந்தியாவில் எந்த விதமான அசம்பாவிதமும் இல்லாமல் பாதுகாப்பாக இருந்து வந்த தலாய்லாமாவிற்கு இப்போது பாதுகாப்பு கொடுக்கக்கூடிய அளவிற்கு என்ன ஆபத்து வந்தது என்ற கேள்வி எழலாம். அமெரிக்காவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், அதனுடன் நெருக்கமான உறவு வைத்துள்ள இந்திய நிறுவனங்களும் சீனாவில் இருந்து தலாய்லாமாவிற்கு ஆபத்து இருக்கிறது என்ற ஒரு கட்டுக் கதையை உலக ஊடகத்திலும் இந்திய ஊடகத்திலும் கட்டி எழுப்பினார்கள். இதை பூதாகரமாக மாற்றி இந்திய அரசு இசட் பாதுகாப்பு என்ற முடிவை அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் திபெத் தீர்வு சட்டத்திற்கு இந்தியா வளைந்து கொடுத்துள்ளது என்பதன் வெளிப்பாடுதான் இந்த நடவடிக்கைகள்.

 

 

பைலேகுப்பே மற்றொரு தர்மசாலா 

பைலேகுப்பே என்பது மைசூரில் இருந்து கூர்க் செல்லும் வழியில் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த திபெத்திய குடியிருப்பில் 70,000 திபெத்தியர்கள் வசிக்கிறார்கள். இவர்களில் துறவிகள் உட்பட அப்பகுதியில் அமைந்துள்ள ஏழு மடங்களில் வாழ்ந்து வருகிறார்கள். திபெத்தியர்களின் மறுவாழ்வுக்காகவும் மீள்குடியேற்றத் திற்காகவும் 1961 ஆம் ஆண்டு அப்போதைய கர்நாடக முதல்வர் நிஜ லிங்கப்பா மைசூர் அரசாங்கத்தின் சார்பில் 3,504 ஏக்கர் மனை நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் திபெத்தியர்கள் பயிரிடவும், வீடுகள் கட்டவும், பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டிக் கொள்வதற்கான அனுமதிகள் காலப்போக்கில் கொடுக்கப்பட்டது. காலப்போக்கில் இது 15,000 ஏக்கர் பரப்பளவாக மாறியது. இங்கு மட்டும் ஐந்து பகுதிகளில் திபெத்திய அகதிகள் வாழ்ந்து வருகிறார்கள். இந்தியா முழுவதும் பத்து மாநிலங்களிலும் இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் கடந்த 50 ஆண்டுகளாக திபெத்தியர்கள் வசிக்கிறார்கள்.

பைலேகுப்பேயில் வசிக்கும் உள்ளூர் திபெத்திய பிரதிநிதிகள் மத்தியில் இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்தார்கள். 1950 இல் இருந்து வாழும் தங்களுக்கு ஆதார் அட்டை இல்லை என்றும், அதற்காக சிறப்பு ஆதார் மையத்தை நிறுவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். சாலை விரிவாக்க திட்டத்தினால் எங்கள் நிலங்கள் பாதிக்கப்பட்டதால் அந்த நிலங்களுக்கு முறையான இழப்பீடு தர வேண்டும் என்றார்கள். உள்ளூர் விவசாயிகளுக்கு கர்நாடக அரசின் நிதிஉதவி நலத்திட்டங்களில் பைலேகுப்பேயில் உள்ள திபெத்திய விவசாயிகளையும் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இவை அனைத்தும் 1959 ஆம் ஆண்டு தலாய்லாமா இந்தியாவுக்கு வந்த பொழுதும், நாடு கடத்தப்பட்ட அரசாங்கம் உருவாக்கப்பட்ட பொழுதும் தடை செய்யப்பட்டிருந்தது. அகதிகளுக்கான சலுகைகளை கல்வி, மருத்துவம் போன்றவற்றை வழங்குவது சட்டத்துக்கு உட்பட்டது. அவர்களின் வாழ்வாதாரத்திற்கான அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும். சாரண உழைக்கும் திபெத்திய மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த மக்களை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுவது ஆபத்தாகும.

இந்த பைலேகுப்பேக்குவிற்கு மற்றொரு அம்சம் உள்ளது. நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசாங்கத்தின் இன்றைய தலைவராக இருக்கக்கூடிய சிக்யோங் பென்பா செரிங் 1967 இல் இங்கு தான் பிறந்தார். இவர் இங்கு பிறந்திருந்தாலும் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் வளர்க்கப்பட்டார். குறிப்பாக அமெரிக்காவில் தலாய்லாமாவின் பிரதிநிதியாக செயல்பட்டார். டெல்லியில் உள்ள திபெத்திய நாடாளுமன்றம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். நாடு கடத்தப்பட்ட அரசாங்கத்தின் தலைவர் தர்மசாலாவிற்கு பதிலாக பைலேகுப்பேயில் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு தனது நிர்வாகத்தின் சாதனைகளை விளக்கினார். தலாய்லாமாவின் ஊழலை எதிர்க்கும் பிரிவு அதாவது ஷூட்டன் வழிபாட்டு முறைகளை கடைபிடிக்கக் கூடியவர்கள் இங்கு தான் பலமாக இருக்கிறார்கள். தலாய்லாமாவின் நிர்வாகம் ஊழல் நிறைந்தது, உறவினர்களுக்கு சலுகை கொடுக்கக்கூடியது என்பதை இவர்கள் வலுவாக முன் வைத்தார்கள். எனவே தான் பென்பா செரிங் தனது அரசின் சாதனைகளை பைலேகுப்பேயில் விளக்கினார்.

முழங்கால் சிகிச்சை அல்ல மூளை சிகிச்சை 

2011 ஆம் ஆண்டு திபெத்திய விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியூர் துறையின் ஒருங்கிணைப்பாளர் அதாவது துணைச் செயலாளர் மரியா ஒட்டேரோ உட்பட பல அமெரிக்க அதிகாரிகள் கர்நாடகாவில் உள்ள பைலோகுப்பே பகுதிக்கு வருகை தந்தனர். இவர்கள் அங்கு இருக்கக்கூடிய பலரையும் சந்தித்து பேசினார்கள். இந்திய அரசு அனுமதியுடன் அமெரிக்க அதிகாரிகள் திபெத்திய குடியிருப்பாளர்களை சந்தித்து சீனாவிற்கு எதிரான செயல்களுக்கு திட்டமிட்டனர். இந்த நிகழ்விற்கு சீனாவின் ஊடகவியலாளர்களை தவிர அமெரிக்க சார்பு, அரசு சார்பு பத்திரிக்கையாளர்கள் மட்டுமே அனுமதித்தினர்.

ஜூன் 2024 இல் குடியரசுக் கட்சி மெக்கால் தலைமையிலான அமெரிக்காவிலிருந்து வந்த இரு கட்சி பிரதிநிதிகள் குழு இந்தியாவின் தர்மசாலாவுக்குச் சென்று, அமெரிக்க காங்கிரஸால் நிறைவேற்றப்பட்ட இரு கட்சி மசோதாவான “தி ரிசால்வ் திபெத் ஆக்ட்” இன் சட்டகப்படுத்தப்பட்ட நகலை தலாய் லாமாவிடம் வழங்கியது. (அரசு ஊடகம், DD அறிக்கை 20 ஜூன் 2024). உண்மையில், தலாய் லாமாவுடன் கலந்தாலோசித்த பிறகு திரும்பிய அமெரிக்க பிரதிநிதிகளை சந்தித்த பிறகு மோடி எழுதினார்: “மிகவும் நல்ல கருத்துப் பரிமாற்றமாக இருந்தது”, மேலும் “இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை முன்னேற்றுவதில் வலுவான இருகட்சி ஆதரவை” மதிப்பதாகக் கூறினார். வெளியுறவு அமைச்சரையும் இந்தியாவின் உளவுத்துறை அமைப்பான ரா அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்த அஜித் தோவாலையும் சந்தித்து பேசினார்கள். பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ரா ஆகியோர் அமெரிக்க விளையாட்டில் வெளிப்படையாக உடந்தையாக இருந்தனர்:

இந்த சந்திப்புகளுக்கு பிறகு தலாய்லாமா உடனடியாக முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை என்ற பெயரால் விமானத்தில் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை இந்தியாவில், டெல்லியில் மற்ற முக்கிய தலைநகரங்களிலும் மிகச்சிறந்த மருத்துவமனைகளால் செய்யப்படுகிறது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் இந்தியாவிற்கு வந்து முழங்கால் அறிவை சிகிச்சை செய்கிறார்கள். உண்மையிலேயே இது முழங்கால் அறுவை சிகிச்சை அல்ல தலாய்லாமாவிற்கு மூளை சிகிச்சை கொடுப்பதற்காக அழைத்துச் சென்றார்கள் என்பது உலகறிந்த ரகசியமாகும்.

பிறந்தநாள் முடிந்த பிறகு தலாய்லாமாவை லடாக் பகுதியில் பிரச்சினைகள் உள்ள எல்லைப் பகுதிக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் ஏற்கனவே பதட்டமாக உள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஜம்முவை இந்துக்களுக்கு என்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கை இஸ்லாமியர்களுக்கென்றும் தடாப் பகுதியை புத்த மதம் என்றும் மத ரீதியான பிரிவினைகளை உருவாக்கி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது தலாய்லாமா அங்கு அழைத்துச் செல்லப்படுவது மேலும் புதிய வகையான மோதல்களை உருவாக்கும். சீனாவிற்கு எதிராக பௌத்த ராஜதந்திரம் என்ற அமெரிக்கா உருவாக்கிய புதிய கொள்கையை நோக்கி இந்தியா நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

 

இதற்கு முன்பு 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி லடாக்கின் கால்ஷேட்ஸ் பகுதியில் நடந்த வரவேற்பு விழாவில் தலாய்லாமா கலந்து கொண்டது மட்டுமல்ல, அங்கு 45 நாட்கள் தங்கி இருந்தார். இவர் செல்வதற்கு முன்பு இந்தியாவின் பல அமைச்சர்கள் அங்கு சுற்றுப்பயணம் சென்று வந்தார்கள். இதற்கும் தலாய்லாமா சென்றதற்குமான நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்று சீனா குற்றம் சாட்டியது.

நிதியால் மதி இழக்கும் நிலை

நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு பல அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து பணம் பெறக்கூடாது என்று தடை விதித்தது. அவர்களுக்கு வந்த நிதியை நிறுத்தியது. ஆனால் அமெரிக்கா மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களால் நாடு கடத்தப்பட்ட திபெத்திய நிர்வாகத்திற்கு சட்டவிரோதமாக நிதியளிப்பது தங்கு தடை இன்றி நடந்து வருகிறது. அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட நிதிகளில் ஒரு சில அம்சங்கள் மட்டும் கீழே சுட்டிக்காட்டப்படுகிறது. அமெரிக்கா தலாய்லாமாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு அதனுடைய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்வது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய திபெத்தியர்களுக்கு நிதி உதவி செய்வதை இக்காலத்தில் அமெரிக்கா பல மடங்கு அதிகரித்து உள்ளது

நாடு கடத்தப்பட்ட திபெத் அரசாங்க நிர்வாகத்துடன் தொடர்புள்ள அரசு சாரா நிறுவனங்களுக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர்களை வழங்கி உள்ளது. திபெத்திய அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் கலாச்சாரம் மொழியை பாதுகாக்க என்ற பெயரால் 8 மில்லியன் டாலர்களை ஒதுக்கி இருக்கிறது. இந்தியா மற்றும் நேபாளத்தில் இருக்கிற தலைவர்களின் திறன்களை வளர்ப்பதற்காக, ( சீன எதிர்ப்பு திறன்கள் என்பதை குறித்துக் கொள்ள வேண்டி உள்ளது) மூன்று மில்லியன் டாலர்களை ஒதுக்கி உள்ளது. இதற்கும் மேலாக தலாய்லாமா நாடு கடத்தப்பட்ட அரசு அமைத்துள்ள தர்மசாலாவில் நகர மேம்பாட்டுகளை நவீனப்படுத்துவதற்கு 75க்கும் மேற்பட்ட திட்டங்களை அமெரிக்க நிதி உதவியுடன் நடந்து வருகிறது. சென்ற அத்தியாயத்தில் தலாய்லாமா சிஐஏ சம்பள பட்டியலில் இருந்தார் என்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிருந்தோம். எண்ணற்ற நிதிகளை ஒதுக்கி சீனாவிற்கு எதிரான திபெத்தியர்களை போராட வைப்பதும் தீக்குளிக்கவும் வைக்கிறார்கள். அதனால்தான் டொனால்ட் டிரண்ட் சகாப்தத்தில் மோடி தலைமையிலான இந்தியா அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்க நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து அடிபணிந்து வருகிறது.

நியாயத்தின் கேள்விகள் 

பொதுநல வழக்கு கண்காணிப்பு குழுவின் (PIL – public interest litigation) நிறுவனர் டாக்டர் பி எஸ்சாஹ்னி 6.10.2023 வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. அதில் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பி இருந்தார்.

தலாய்லாமா 1959 முதல் பல தசாப்தங்களாக சிஐஏ நிதியை பெற்றுள்ளார் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அவரும் அவரது ஆதரவாளர்களும் சீனாவில் இருந்து திபெத்தின் சுதந்திரத்தை கோரி ஒரு முகாமை அமைக்க விசா இல்லாமல் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தனர். இந்திய அரசு ஏன் இந்த திபெத்திய பிரிவினைவாதிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்

திபெத்திய போராட்டக்காரர்கள் சில பேர் தீக்குளித்துக் கொள்ளுதல் உட்பட வன்முறை போராட்டங்களில் ஈடுபடுவதை குறித்து இந்திய ஊடகங்கள் பெரிதாக செய்தி வெளியிடுவதை போல் சிஐஏ நிதி உதவி செய்வது குறித்து செய்திகள் ஏன் வெளியிடுவது இல்லை.

காஷ்மீர் இயக்கத் தலைவர்கள் சுயநிர்ணய உரிமையை கோரியதற்காக சிறையில் அடைக்கப்பட்டாலும் தலாய்லாமாவின் பிரிவினைவாத நடவடிக்கைகளை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டார்.

ஆனால், பல பத்தாண்டுகளாக திபெத்திய “நாடுகடத்தப்பட்ட அரசாங்கத்தை” இந்தியா நடத்தி வருவதையும், அதன் புதுப்பிக்கப்பட்ட அரசியல் நடவடிக்கைகளையும், இப்போதும் நடத்துவதைஅனைவரும் காணலாம். இது சர்வதேச சட்டத்தின் அனைத்து விதிகளுக்கும் ஐ.நா. சாசனத்திற்கும் எதிரானது,

திபெத்திய வாழ்க்கை பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. தலாய்லாமா காலத்தில் மிகவும் பின்தங்கிய அடிமைத்தனம் இருந்தது. தற்போது நம்ப முடியாத அளவிற்கு வளர்ச்சி அடைந்து உள்ளது. சீனாவிற்கு எதிராக முணுமுணுக்கும் திபெத்திய புலம்பெயர்ந்தோர் சுமார் 1.5 லட்சம் பேர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். இவர்களில் 75% பேர் இந்தியாவில் உள்ளனர். மேலும் 10 சதவீதம் பேர் தெற்காசியாவிற்குள் இருக்கிறார்கள். திபெத்திய தன்னாட்சி பகுதியை ஒப்பிடுகிற பொழுது மிக மிக சிறு பகுதி மட்டுமே வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திபெத் என்ற மாநிலம் தொடர்ந்து 25 ஆண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சியை அடைகிறது. திபெத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9,315 டாலர் ஆகும். இந்தியா 2500 டாலர் ஆகும். திபெத்தின் வளர்ச்சி தெற்கு ஆசியாவிலேயே மிக அதிகம். வறுமை 2013 ஆம் ஆண்டிலேயே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது 2019 ஆம் ஆண்டு திபெத் முழுவதும் வறுமை ஒழிக்கப்பட்டது.

எனவே இந்தியாவின் திபெத் தொடர்பான கொள்கைகள் ஆரம்பத்தில் சுயசார்பு தன்மையுடன் இருந்தது. 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்காவின் மேலாதிக்க புவிசார் அரசியலுக்கு சாதகமாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதைப் பற்றி தலாய்லாமாவின் மூத்த சகோதரர் கியாலோ தோண்டப் பிப்ரவரி 8, 2025 அன்று அவர் இறப்பதற்கு முன் அளித்த கடைசி நேர்காணலில் கீழ்க்கண்டவாறு கூறியிருந்தார்

சிஐஏவின் இலக்கு ஒருபோதும் திபெத்திற்கு சுதந்திரம் அளிப்பது அல்ல. அமெரிக்கர்கள் உண்மையில் உதவ விரும்பியதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் திபெத்தியர்களைப் பயன்படுத்தி சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தவறான புரிதல்களையும் கருத்து வேறுபாட்டையும் உருவாக்க பிரச்சனையை கிளப்ப விரும்பினர். இறுதியில் அவர்கள் அதில் வெற்றி பெற்றனர்”: தலாய் லாமாவின் மூத்த சகோதரர் கியாலோ தோண்டப் (ஜிடி), 1959 இல் சிஐஏவின் திபெத் திட்டத்தில் அதன் தொடக்கத்திலிருந்து பணியாற்றியவர், மேலும் நீண்ட காலமாக ஒரு உயர் CTA தலைவராக இருந்தார். ( ஜிடியின் சுயசரிதையான தி நூடுல்மேக்கர் ஆஃப் கலிம்போங்கிலிருந்து (2016) அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் புகழ்பெற்ற சக ஊழியரான மனோஜ் ஜோஷி மேற்கோள் காட்டினார் ).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நௌஜவான் பாரத் சபா கொள்கையும்-செயல்பாடுகளும்

    அ.பாக்கியம்   வெறுப்பு அரசியலின் அமைப்புகள் தங்களது நூற்றாண்டை போற்றுகிறார்கள். வகுப்புவாத கலவரத்தின் ரத்த ஆற்றில் மிதந்து   நூற...