Pages

திங்கள், ஜூலை 31, 2023

வெள்ளை இனவெறியர்களை உலுக்கிய மதமாற்றமும் பெயர்மாற்றமும்

 தொடர்:13

அ.பாக்கியம்.


பிரம்மாண்ட வெற்றியின் மூலம் உலகப் புகழ்பெற்ற ஒரு மனிதர் அதை தக்கவைத்துக் கொள்வதற்காக அனைவரையும் அனுசரித்து செல்வது வழக்கமாக இருக்கும். ஆனால் உலகப்புகழ் பெற்றபிறகும் கேசியஸ் கிளே இனவெறிக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளவில்லை. இனவெறிக்கு எதிராக அவர் எதிர்வினை ஆற்றத் தயங்கவில்லை. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் முரண்பாடுகள் இருந்தாலும் வெள்ளை இனவெறிக்கு எதிர்வினையாக மதம் மாறுவது என்ற முடிவை போட்டியில் வெற்றிபெற்ற அடுத்தநாள் பிப்ரவரி 27 1964ஆம் ஆண்டு அறிவித்தார். 

மதமாற்றம் எந்த சமூக ஒடுக்குமுறைகளுக்கும் முழுமையான தீர்வு கண்டதில்லை என்பது வரலாறு. ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து அடக்கப்பட்டவர்கள் எதிர்வினை ஆற்றுவதற்கு ஒரு களமாக மதம் என்பது வரலாற்றில் இருந்து வந்திருக்கிறது. அவை தற்காலிக நிவாரணத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்துவதற்கு பக்கபலமாக இருந்துள்ளது. கேசியஸ் கிளேவும் இந்த வகையிலே தான் எதிர்வினை ஆற்றியுள்ளார். 

இஸ்லாம் தேசம் (Nation of Islam) என்ற அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த அமைப்பின் மதபோதகர் எலிஜா முகமது, கேசியஸ் கிளேவிற்கு முகமது அலி (புகழுக்குரியவர், மிக உயர்ந்தவர்) என்ற பெயரை சூட்டினார். கேசியஸ் கிளே தன் பெயர் மாற்றத்தில் மிகவும் உறுதியாக இருந்தார். ஏற்கனவே சூட்டப்பட்ட பெயரில் அடிமைத்தனத்தை சுமந்து கொண்டிருப்பதாக அவர் கருதினார்.

கேசியஸ் மார்செல்ஸ் கிளே ஜூனியர் என்பது அடிமைஉடைமையாளரின் பெயர். ஒரு வெள்ளை மனிதனின் பெயர் என்பதால் மாற்ற விரும்பினார். கேசியஸ் மார்செல் கிளே என்பவர் அடிமை ஒழிப்புவாதியாக இருந்தாலும் அவர் அடிமைகளை வைத்திருந்தார். வெள்ளை மேலாதிக்கத்தின் பிரதிநிதியாக இருந்தார். அவர் தனது தந்தையிடமிருந்து பெற்ற அடிமைகளை விட தன்காலத்தில் அதிகமான அடிமைகளை சேர்த்து இருந்தார். அடிமை ஒழிப்புச் சட்டம் அரசியல் சாசனத்தில் சேர்க்கிற பொழுது அதிகமான அடிமைகளை வைத்திருந்தவர்களில் கேசியஸ் மார்செல் கிளேவும் ஒருவர். 

அந்த அடிமை உடைமையாளரின் பெயரை முகமது அலி வெறுத்தார். அவரின் பெயரை நான் ஏன் சுமக்க வேண்டும்.? என் கருப்பின மூதாதையர்களை கண்ணுக்குத் தெரியாதவர்களாக, அறியப்படாதவர்களாக, மரியாதை அற்றவர்களாக நான் ஏன் மறைத்து வைத்திருக்க வேண்டும் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். முகமது அலி என்பது ஒரு சுதந்திர மனிதனின் பெயர் என்று அறைகூவல் விடுத்தார்.

வெள்ளை நிற அதிகார வர்க்கத்தை அதன் நிறுவனங்களை பகைத்துக் கொள்ள வேண்டும் என்ற சூழல் உருவானபொழுதும் அதற்காக முகமது அலி பயப்படவில்லை. துணிச்சலாக எதிர்வினை ஆற்றத் தொடங்கினார்."நான் அமெரிக்கா. நீங்கள் அடையாளம் காணாத பகுதி நான். நான் கருப்பு நம்பிக்கை. துணிச்சல் என்பது என் பெயர். அது உங்களுடையது அல்ல. என் மதம் உங்களுடையது அல்ல. என் இலக்குகள் என்னுடையது’ என்று வெள்ளை நிறவெறியாளர்களுக்கு சவால் விடுத்தார்.

முகமது அலியை ஆரம்பத்தில் இஸ்லாம் தேசத்தில் இணைத்துக் கொள்வதற்கு தயக்கம் காட்டினார் எலிஜா முகமது. அதற்கு அவரது குத்துச்சண்டை வாழ்க்கையை காரணம் காட்டினார்கள். மால்கம் எக்ஸ், முகமது அலியுடன் தொடர்பு கொண்டு அவரது ஆன்மீக அரசியல் வழிகாட்டியாக மாறினார். சன்னி லிஸ்டனை அவர் வென்ற பிறகு அவருடைய புகழ் ஓங்கியது. இந்த தருணத்தில் அவரை இஸ்லாம் தேசம் உடனடியாக உள்ளிழுத்துக் கொண்டது. இஸ்லாமில் தீவிர பற்றாளராகவே முகமது அலி இருந்தார். கடவுள் எல்லா மக்களையும் படைத்தார். அவர்களின் மதம் எதுவாக இருந்தாலும் சரி. மத ரீதியாக யாரும் ஒருவருக்கு ஒருவர் எதிராக இருக்கக் கூடாது. அவ்வாறு ஒருவர் இருந்தால் அது மிகப் பெரிய தவறு என்று முகமது அலி கூறினார்.

2001 செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த பொழுது முகமது அலி தனது கருத்தை இவ்வாறு தெரிவித்தார். "இஸ்லாம் ஒரு அமைதி மதம்; அது பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதும் இல்லை; மக்களை கொள்வதும் இல்லை. இந்த அழிவை ஏற்படுத்திய ஒரு குறிப்பிட்ட இஸ்லாமியரை உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது’ என்று கோபமாக கூறினார்.

மேலும், அவர்கள் உண்மையான இஸ்லாமியர்கள் அல்ல. அவர்கள் தங்களை இஸ்லாமியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் வெறியர்கள். இஸ்லாமிய ஜிகாதிகள் என்று அழைக்கப்படுகின்ற இரக்கமற்ற வன்முறை என்பது இஸ்லாம் மதத்திற்கு விரோதமானது என்று உண்மையான இஸ்லாமியர்கள் புரிந்து கொள்வார்கள். இஸ்லாமியர்களாகிய நாம் இஸ்லாத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக நிற்க வேண்டும். அரசியல் தலைவர்கள் இஸ்லாம் மதத்தைப் பற்றி சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டும். மேலும் இந்த பாதகச் செயலை செய்தவர்கள்,  இஸ்லாம் என்றால் உண்மையில் என்ன என்பதை பற்றிய மக்களின் பார்வையை திசை திருப்பி உள்ளார்கள் என்பதை தெளிவுபடுத்தி மக்களை வென்றெடுக்க வேண்டும் என்று கூறினார். 

1972ஆம் ஆண்டு மெக்காவுக்கு யாத்திரை மேற்கொண்ட அவர், பிரபலமான இஸ்லாமிய அறிஞர்களிடமிருந்து ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெற்றார்.

முகமது அலியின் பெயர்மாற்றமும் மதமாற்றமும் அமெரிக்காவில் மிகப் பெரும் சர்ச்சையையும், உணர்ச்சிபூர்வமான விவாதங்களையும், பல இடங்களில் இனமோதல்களையும் ஏற்படுத்தியது. பெயர் மாற்றமும் மதமாற்றமும் வெள்ளை நிற வெறியர்களுக்கு ஒரு பெரும் அடியாக இருந்தது. இதனால் அவர்மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. வெள்ளை நிற வெறியர்கள் மட்டுமல்ல… சக விளையாட்டு வீரர்களும் அவர் மீது தாக்குதல் தொடுத்தனர். கருப்பர்களுக்கான சிவில் உரிமைப் போராட்டத்தை நடத்தியவர்களும் முகமது அலியின் மீது கடுமையான தாக்குதலை தொடுத்தார்கள். இதற்கெல்லாம் முகமது அலி பொறுமையாக பதில் அளித்தார். 

இளைஞர்கள் முகமது அலியின் இந்த எதிர்வினையை கண்டு எழுச்சியுற்றார்கள். 1964ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் நடைபெற்ற கருப்பின மக்களின் சம உரிமை போராட்டத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தியது. இக்காலத்தில் பல ஆயிரம் சிவில் உரிமை போராளிகள் கைது செய்யப்பட்டார்கள். தெற்கு முதல் வடக்கு வரை இந்த போராட்டம் பரவிக் கிடந்தது. வெள்ளை நிறவெறி அமைப்பான கூக்லக்ஸை சேர்ந்தவர்கள் பத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்களை குண்டு வைத்து தகர்த்தனர். கருப்பர் பகுதியில் இருந்த 36க்கும் மேற்பட்ட வழிபாட்டுத்தலங்களை  தீக்கரையாக்கினார். வடஅமெரிக்காவில் உள்ள சேரிகளில் வாழ்ந்த கருப்பின இளைஞர்கள் கொதித்தெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அமெரிக்காவில் முதல் முதலாக நகர்ப்புற எழுச்சி நிகழ்ந்தது. குத்துச்சண்டையும், இதில் வெற்றி பெறும் கருப்பின வீரர்களின் செயல்களும் இனவெறிக்கு எதிரான எழுச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த மதமாற்றம் பெயர் மாற்றத்திற்கு பிறகு முகமது அலி கலந்து கொள்ளும் ஒவ்வொரு குத்துச்சண்டை போட்டியும் கருப்பின மக்களின் எழுச்சிக்கும் வெள்ளை நிறவெறியை ஆதரிப்பவர்களுக்கும் இடையிலான போட்டியாகவே பார்க்கப்பட்டது. ஜாக் ஜான்சனுக்கு பிறகு 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் குத்துச்சண்டை இனவெறி எதிர்ப்பு போராட்டத்தின் மையமாக மாறியது. அதன் அச்சாணியாக முகமது அலி இருந்தார்.

சனி, ஜூலை 29, 2023

நான் மிகவும் வேகமானவன்

தொடர்:12

தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டியில் 1960ல் அறிமுகமானார் கேசியஸ் கிளே. அந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி நடந்த போட்டியில் டன்னி ஹன்சேக்கர் என்பவரை ஆறு சுற்றில் வீழ்த்தி வாகை சூடினார். அதிலிருந்து 1963ம் ஆண்டு  இறுதி வரை வெற்றி தேவதை அவர் வீட்டு வேலைக்காரியாக இருந்தாள்.  19 தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் தொடர்ந்து அவர் வாகை சூடினார்.

நாக் அவுட் மூலம் மட்டுமே 15 வெற்றிகளைப் பெற்று வீறு நடை போட்டார்.  டோனி எஸ்பர்டி, ஜிம் ராபின்சன் , டோனி ஃப்ளீமன், அலோன்சோ ஜான்சன், ஜார்ஜ் லோகன், வில்லி பெஸ்மனாஃப், லாமர் கிளார்க் , டக் ஜோன்ஸ் மற்றும் ஹென்றி கூப்பர் உள்ளிட்ட குத்துச்சண்டை வீரர்களை வளையத்திற்குள் கேசியஸ் கிளேசிதறடித்தார். அதோடு மட்டுமல்லதனது முன்னாள் பயிற்சியாளரும் மூத்த குத்துச்சண்டை வீரருமான ஆர்ச்சி மூரையும் தோற்கடித்து குருவை வீழ்த்திய சிஷ்யனாக வலம் வந்தார்.

குத்துச்சண்டைப் போட்டிகளில் கோலோச்சிக் கொண்டிருக்கும்போதே மறுபுறத்தில்,  இனவெறிக்கு எதிரானத் தேடலையும் கேசியஸ் கிளே தொடர்ந்து கொண்டிருந்தார். மால்கம் எக்ஸ், கேசியஸ் கிளேவை கவர்ந்தது போலவே, கேசியஸ் கிளேவும் மால்கம் எக்ஸை கவர்ந்தார். மால்கம் எக்ஸ் அமெரிக்காவில் சிவில் உரிமை இயக்கத்தின் முக்கிய செயல்பாட்டாளர். மனித உரிமை ஆர்வலர். முஸ்லிம் தேசம் என்ற அமைப்பின் செய்தி தொடர்பாளர். 

அவருடைய கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட  கேசியஸ் கிளே இஸ்லாம் மதத்திற்கு மாறுவது என்று முடிவு செய்தார். அமெரிக்காவில் இருந்த கிறிஸ்தவ மதம் கருப்பர்களின் அடிமைத்தனத்தை ஆதரிக்கிறது என்ற கருத்து அவருக்கு வலுவாக இருந்ததே இந்த முடிவுக்கு காரணமாகும். ஆனால் இந்த முடிவை உடனடியாக, வெளிப்படையாக அவர் அறிவிக்கவில்லை. அதற்கான தருணத்தை எதிர்நோக்கி அவர் காத்துக் கொண்டிருந்தார்.

அவரது குத்துச்சண்டை களம் அதிகமாக பேசப்பட்ட காலம் அது. 1964 ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி ஃப்ளோரிடா மாநிலம் மியாமி கடற்கரையில் சன்னி லிஸ்டன் என்ற உலக ஹெவி வெயிட் சாம்பியனுடனான போட்டி. லிஸ்டன் குத்துச்சண்டை அரங்கில், உலகில் மிகவும் அச்சுறுத்தும் வீரராக கருதப்பட்டார். உலக தரவரிசை வீரர்கள் 10 பேரில் எட்டு பேரை தோற்கடித்திருந்தார்.  அதில் ஏழு பேரை நாக்அவுட் மூலம் வீழ்த்தியிருந்தார். அதோடு மிகக் குறைவான நேரத்தில் மற்ற வீரர்களை வீழ்த்திய பெருமையும் சன்னி லிஸ்ட்டனுக்கு உண்டு.

லிஸ்டன் கருப்பினத்தவராக இருந்தாலும் வசதி படைத்த வெள்ளை மனிதர்களால் விரும்பப்பட்டார். காரணம் சன்னி லிஸ்டன் குத்துச்சண்டை வீரராக மட்டுமல்லமுதலாளிகளுக்கு அடியாளாக தொழிலாளர்களுடைய கூட்டங்களை கலைப்பவராக, அவர்களை காயப்படுத்துபவராக, கருப்பினத்தின் கருங்காலியாக அவர் செயல்பட்டார். கேசியஸ் கிளே ஒன்றும் பெரிய ஆளல்லஅவரை இரண்டே சுற்றுகளில் நாக்அவுட் செய்துவிடலாம் என்று  சன்னி லிஸ்டன் மனக்கணக்கு போட்டார். அதனால் போட்டி நடைபெறு வதற்கு முன்புவரை மிதமான பயிற்சிகளையே மேற்கொண்டார்.

இந்த குத்துச்சண்டைப்  போட்டியை கவர் செய்வதற்காக  நியமிக்கப் பட்டிருந்த 46 பத்திரிகையாளர்களில் 43 பத்திரிகையாளர்கள் சன்னி லிஸ்டன்  எளிதில் வென்று விடுவார்; கேசியஸ் கிளே குத்துச்சண்டை வளையத்தில் படுகாயம் அடைவது நிச்சயம். கேசியஸ் கிளேவின் அழிவைத் தடுக்க முடியாது. மிகவும் ஆபத்தான மனிதருக்கு எதிராக கேசியஸ் கிளே மோத தயாராகிக் கொண்டிருக்கிறார் என்று எழுதித் தள்ளினார்கள். கேசியஸ் கிளேவை சிறுமைப்படுத்தி, பயமுறுத்தி, அவரின் நம்பிக்கை குலையும் விதமாக செயல்பட்டனர். அவையனைத்தையும் கேசியஸ் கிளே அலட்சியப் படுத்தினார். தன்னுடை



வெற்றி உறுதி என்பதில் திடமாக இருந்தார்.

இந்தப் போட்டியை காண வந்திருந்த மால்கம் எக்ஸ், ‘‘கேசியஸ் கிளே சிறந்த கருப்பின வீரன். அவர் நிச்சயம் வென்று விடுவார்’’ என்றார். கிளேயின் பயிற்சியாளரோ,‘‘ எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் அவரை கேசியஸ் கிளே மண்ணைக் கவ்வ வைத்து விடுவார்’’ என்று உறுதிபடத் தெரிவித்தார். கேசியஸ் கிளேவோ தான் புயல்வேகம் கொண்டவன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக,  ‘‘நான் மிகவும் வேகமானவன். படுக்கை அறையில் ஸ்விட்ச்சை தட்டிவிட்டு விளக்கு அணையும் முன் படுக்கையில் கிடப்பேன்’’ என்று கூறினார்.

ஆரம்பத்தில் இந்த குத்துச்சண்டை போட்டியைக் காண பார்வையாளர்கள் குறைவாகவே பதிவு செய்திருந்தனர். போட்டியைக் காண அதிக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டதும், லிஸ்டன், கேசியஸ் கிளேயை அநாயசமாக அடித்து வீழ்த்தி விடுவார் என்ற ரசிகர்களின் எண்ணமும் போட்டியைக் காண ஆர்வம் ஏற்படாததற்கு காரணங்களாக சொல்லப்பட்டன. இதற்கெல்லாம் மேலாக, கேசியஸ் கிளே இஸ்லாம் மதத்தை தழுவப் போவதாக அவரது தந்தையின் மூலமாக வெளியான செய்திதான், போட்டியைக் காண பலரும் விரும்பாததற்கு காரணம் என கேசியஸ் கிளேவை ஸ்பான்சர் செய்த பில் மேக் டொனால்ட் உறுதியாக நம்பினார்.

குத்துச்சண்டை போட்டி நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக கேசியஸ் கிளேவை சந்தித்த டொனால்ட், ‘‘இஸ்லாம் தேசம் என்ற அமைப்பிற்கான உன் ஆதரவை வாபஸ் பெறவில்லை என்றால் போட்டியே ரத்து செய்யப்படும்’’ என்று எச்சரித்தார். இஸ்லாம் தேசம் என்ற அமைப்பை ஆதரித்து வந்த கேசியஸ் கிளே, அலட்சியமாக பதிலளித்தார். ‘‘நான் அந்த அமைப்புக்கு ஆதரவாகத்தான் செயல்படுவேன். அதை மறைக்க மாட்டேன். இஸ்லாம் தேசத்திற்கான என் ஆதரவு எப்போதுமே இருக்கும். நீங்கள் போட்டியை நிறுத்த விரும்பினால் அது உங்கள் விருப்பம். குத்துச் சண்டையை விட இனவெறிக்கு எதிர்வினை ஆற்றக்கூடிய இஸ்லாம் மதம்தான் முக்கியம்என்றார். தான் இஸ்லாம் மதத்தை தழுவ இருப்பதை இந்த தருணத்தில்தான் அவர் முதல் முறையாக சூசகமாக வெளிப்படுத்தினார்.

அதன்பிறகு போட்டியின் விளம்பரம் கொஞ்சம் சூடு பிடித்தது. குறிப்பிட்ட தேதியில் போட்டியும் துவங்கியது. பார்வையாளர் அரங்கில் அதிகளவில் வெள்ளையர்கள் இருந்தனர். அதில் பெரும்பாலானோர் ஆண்களாக இருந்தனர். சிகரெட் மற்றும் சுருட்டு புகை மண்டலத்தால் அரங்கம் பனிமூட்டமாக இருந்தது. பிரபல பாடகர் சாம் குக், கால்பந்து நட்சத்திரம் ஜிம் பிரவுன், மால்கம் எக்ஸ், கேசியஸ் கிளேவின் பெற்றோர் மற்றும் நூற்றுக்கும் அதிகமான அமெரிக்க பெரும்புள்ளிகள் பார்வையாளர் மாடத்தில் வீற்றிருந்தனர்.

கேசியஸ் கிளேவின் சொந்த ஊரான லூயிஸ் வில்லியில் தொலைக்காட்சி ஒளிப்பரப்பை காண ஆயிரக்கணக்கானோர் கூடியிருந் தனர். நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளிலும் போட்டியைக் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக 7 லட்சம் ரசிகர்கள் முன்பணம் செலுத்தி இருந்தனர். போட்டியை நடத்தியவர்களின் காட்டில் டாலர் மழை பொழிந்தது.

போட்டி தொடங்குவதற்கான மணி ஒலித்தது. இரு வீரர்களும் மேடையில் தோன்றி பார்வையாளர்களைப் பார்த்து கையசைத்தனர்.  சன்னி லிஸ்டனுக்கு ஆதரவான குரல்கள் மேலோங்கி இருந்தது. முதல் இரண்டு சுற்றுகள் சமமாக போனது. அடுத்தடுத்த சுற்றுக்களில் கேசியஸ் கிளே தனது தாக்குதலை தீவிரப்படுத்தினார். பின் வாங்கும் உத்தி, வளையத்துகள் நடனமாடும் முறை, வேகமான செயல்பாடு என கேசியஸ் கிளே பலமுனை தாக்குதலை தீவிரப்படுத்தி சன்னி லிஸ்டனை நிலைகுலைய வைத்தார்.

எட்டாவது சுற்றில், உலகப் புகழ்பெற்றகுத்துச்சண்டைப் போட்டியாளர் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருந்த சன்னி லிஸ்டனை,  22 வயது நிரம்பிய கேசியஸ் கிளே மண்ணைக் கவ்வ வைத்தார். உலகம் முதலில் அதிர்ச்சியடைந்தது; பின்னர் ஆச்சரியப்பட்டது. கருப்பின மக்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். சொந்த நாட்டில் நிறவெறியால் நிராகரிக்கப்பட்ட கேசியஸ் கிளே உலகம் முழுவதும் ஆராதிக்கப்பட்டான்.

போட்டி அறிவிப்புக்கு பின்னும், போட்டிக்கு முன்னும், போட்டியின் போதும் தன்னை சிறுமைப்படுத்தும் செயல்களையும், பேச்சுக்களையும் கேசியஸ் கிளே பொருட்படுத்தவில்லை. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தன் மீதான நம்பிக்கையை அவர் தளர விடவில்லை. கடைசி வரை தன் நம்பிக்கையை அவர் அடர்த்தியாகவே வைத்திருந்தார். பல்வேறு கணிப்புக்களை பொய்யாக்கி வெற்றி வாகை சூடினார். லிஸ்டனை மூக்கில் குத்தி வீழ்த்தியதன் மூலம் உலகையே மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தார்; வியக்க வைத்தார்.

அந்தப் போட்டி இருபதாம் நூற்றாண்டின் நான்கு முக்கிய போட்டிகளில் ஒன்றாக கருதப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லருக்கும் ஸ்டாலினுக்கும் நடந்த யுத்தம் போன்ற ஒரு போட்டி என்று அந்தப் போட்டியை சில பத்திரிகைகள் சிலாகித்தன. நாடு முழுவதும் உள்ள மது விடுதிகளிலும், திரையரங்குகளிலும் கருப்பின மக்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கேசியஸ் கிளேவின் வெற்றி அவர்களை எழுச்சி கொள்ள செய்தது. கருப்பின மக்களின் உணர்ச்சிகள் ஆனந்தக் கண்ணீராகவும், ஆட்டம் பாட்டுக்களாகவும் வெளிப்பட்டது.

போட்டியின் எட்டாவது சுற்றில் லிஸ்டனை மட்டுமல்லபோட்டிக்கு முன்பாக பத்திரிக்கைகளும், பிரபலங்களும் தன்னை பழித்தும் இழித்தும் கூறிய  கருத்துக்களையும் காலடியில் கேசியஸ் கிளே வீழ்த்தினார். வெற்றிக் களிப்பில் குத்துச்சண்டை மேடையில் வீறுகொண்டு எழுந்தார். வளையத்தைச் சுற்றி சுற்றி ஓடினார். ‘‘நானே மகத்தானவன்நானே உலகத்தின் ராஜா’’ என்று கைகளை உயர்த்தி காற்றின் காதுகளில் வானம் எட்டும் வரை மீண்டும் மீண்டும் முழங்கினார். நானே மகத்தானவன் என்ற வார்த்தை குத்துச்சண்டை வளையத்துக்குள் அவரது வாழ்நாள் வரை நிரந்தர வாசம் செய்தது.

 

வெள்ளி, ஜூலை 28, 2023

கம்யூனிச நெறியின் இலக்கணம் தோழர்.ஏ. நல்லசிவன்


 

தோழர்.வி.எம்.எஸ்

ன்றும் நினைவில் நிற்கும் நல்லசிவனைப்பற்றி மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கட்சியின் கடந்தகால வரலாறு இன்றைய இளம் மார்க்சிஸ்ட்டுகளின் மனதைத் தைக்கிற அளவிற்கு எழுதப்படவில்லை. நல்வாய்ப்பாக தோழர்.என்.ராமகிருஷ்ணனும் தோழர் ஜி.ராமகிருஷ்ணனனும். கம்யூனிசஇயக்கக் களப்பணியாளர்கள் குறித்த தகவல்களை திரட்டி  வரலாற்றை எழுத உதவி வருகின்றனர். இவைகளிலும் 1964க்குமுன் உள்ள பங்களிப்புகள் அவ்வளவாக இடம் பெறவில்லை. 

ஒன்றுபட்ட கட்சியின் வரலாற்று தகவல்களையும் இணைப்பது அவசியமானது. பல சிற்றோடைகளாக பிரிந்து கிடக்கும் கம்யூனிஸ்ட் இயக்கம் கடந்துவந்த பாதையைப் பற்றி சரியான புரிதல் இன்று கம்யூனிஸ்ட்டுகள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு இல்லையானால் வெற்றியை எட்ட இயலாது. வரலாறு தெரியவில்லையானால் அந்த இயக்கம் பாதைதவறி வறண்டுவிடும். எதிரிகளின் பிரச்சாரத்தினால் தவறுகளின் தொகுப்பாகவே கட்சியின் வரலாற்றை புரிந்து கொள்வர்., வாய்ச் சொல்வீர்ர்களும், அரைவேக்காடுகளும், டுதட்டிகளும் .சந்தர்ப்பவாதிகளும், கொண்ட குட்டைகளாக தேங்கிவிடும்.

    இந்தக் கட்டுரையில் களப்பணியாளரான தோழர் நல்லசிவனைப்பற்றி எனக்கு தெரிந்தவற்றை பதிவு செய்கிறேன். நல்லதொரு தமிழக வர்க்கபோராட்ட அரசியல் வரலாறு எழுத இது உதவும் என கருதுகிறேன்.

கம்யூனிச நெறியோடுவாழ தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்ட தோழர் நல்லசிவனோடு நெருக்கமாக அறிந்தவர்களில் நானும் ஒருவன். எனது பள்ளி பருவத்தில் பாலதண்டாயுதம், மீனாட்சிநாதன், ஏ.நல்லசிவன் .பிராமமூர்த்தி இவர்களைப்பற்றிகேள்விபட்டிருக்கிறேன். 1952 சட்ட மன்ற தேர்தலில் அம்பை தொகுதியில் எனது தந்தையின் நெருங்கிய நண்பர் தியாகி பாப்பான்குளம் சொக்கலிங்கம் பிள்னை சுயேச்சை வேட்பாளராக கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவோடு நின்றார். அப்பொழுது எங்களது குடும்பம் அம்பை தொகுதிக்கு உட்பட்ட சிலகாலம் பாரதி நடமாடிய கடையத்தில் இருந்தது. நான் அன்று 9ம்வகுப்பு பள்ளி மாணவன். 

கல்லூரி மாணவனாக இருந்த அறம்வளர்த்த நாதன் என்பவர் கடையம் வாக்குச் சாவடிக்கு பொறுப்பாகச் செயல்பட அம்பையிலிருந்து வந்திருந்தார். இவர் நெல்லைசதி வழக்கில்சேர்க்கப்பட்டு பின்னர் நீதிமன்றம் நீக்கியதால் கல்லூரியில் சேரமுடிந்தது என்பதை அறிந்தேன். வேட்பாளர் தியாகி சொக்கலிங்கம் பிள்ளையும் எனது தந்தையும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் கடையத்திலும் சுற்றுவட்டாரத்திலும் பிரச்சாரம் செய்ய வந்தபோது எங்கள் வீட்டிலே தங்கினார். அவரோடு கல்லூரி மாணவன் அறமும் வந்ததால் அவரது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. வாக்குச் சீட்டுக்களை எழுத என்னையும் எனது நண்பர்களையும் அறம் பயன்படுத்திக்கொண்டார். 

வேட்பாளரும் அறமும் சிறந்த மேடை பேச்சாளர்கள் என்பதால் எங்கள் மனதில் நீங்கா இடம் பெற்றனர். அறத்தோடு கலந்துறையாடும் பொழுது தொழிற்சங்க தலைவர் ஏ.நல்லசிவனைப்பற்றி அவரது அறிவாற்றலைப்பற்றி அடிக்கடி கூறுவார். தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை காங்கிரஸ் சோசலிஸ்ட்டாக இருந்து வெளியேறிய சொக்கலிங்கம்பிள்ளை தோற்கடித்தார். இதற்கு முக்கிய காரணம் அம்பை தொகுதியில் குத்தகை விவசாயிகளின் உரிமைக்காக கம்யூனிஸ்ட்கட்சி விவசாய சங்கத்தை கட்டி போராடியது என்பதை பின்னர்தான் புரிந்து கொண்டேன். 

காங்கிரஸ்கட்சி நில உடமையாளர்களாக இருந்த மடங்களுக்கும் பெருநில உடமையாளர்களுக்கும் துணையாக இருந்தது. காவல்துறையை ஏவி கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடியது .விவசாயிகள் மீது பொய்வழக்குகள் பாய்ந்த்தது. பாப்பான்குளம் சொக்கலிங்கம்பிள்ளை காங்கிரஸ் தியாகியாக பிரபலமாகி இருந்தாலும் குத்தகை விவசாயிகள் போரட்டத்தை ஆதரித்து களப்பணி செய்தவர் என்பதால் வெற்றி பெற்றார். தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியாக இருந்த ஏ.நல்லசிவனின் கம்யூனிஸ்ட்பாணி செயல்பாட்டினால் தொழிலாளர்-விவசாயிகள் சங்கங்களின் உறுப்பினர்கள் சொந்தச் செலவில் வாக்கு சேகரித்தனர். தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது என்பதை எனக்கு அன்று உணர வாய்ப்பில்லை..

1953ல்நான் இந்து கல்லூரி மாணவனாகச் சேர்ந்தபோது எதிர்பாராத விதமாக அதே கல்லூரியில் சீனியர்மாணவனாக அறத்தை சந்திக்க நேர்ந்தது. சந்திக்க நேர்ந்ததுமட்டுமல்ல மாணவர்களுக்காகக் கட்டப்பட்டிருந்த மூஸ்லீம் லாட்ஜில் (அப்போது அதன் பெயர்) இருவரும் தங்கி படிக்க நேரிட்டது. அங்குதான் முதன் முறையாக ஏ.நல்லசிவனை சந்திக்கநேர்ந்தது. அறத்தை சந்திக்க அவர் அடிக்கடி வருவார், அந்த சந்திப்பின்போது இருவரும் படித்த புத்தகங்களைப் பற்றிய சர்ச்சை, உலக அரசியல்களை  விடிய விடியப் பேசுவர். அவர்கள் இருவரும், ஸ்டூடன்ட் டுடோரியல் காலேஜ் நடத்திய என். வாவாமலை வீட்டிற்குச் சென்று கலந்துரையாடுவர். 

தாமிரபரணி ஆற்றின் சுலோசனாபாலத்தருகே இக்கரையில் முஸ்லீம் லாட்ஜ் என்றால் பாலத்தை தாண்டி அவர் வீடு இருந்தது (கொக்கிரகுளம் பகுதி).என்.வானமாமலையை நான் முன்பே அறிவேன். அவர் எனது சித்தப்பாவின் கல்லூரி நண்பர். நான் கல்லூரியில் சேரும்பொழுதே எனது சித்தப்பா என்னை வானமாமமலைக்கு அறிமுகப்படுத்தியிருந்தார் அவர் என்னிடம் மீனாட்சி உனது அறிவுச் சொத்து பாடப்புத்தகத்தில்இல்லை அது உனது கல்லூரியின் நூலகத்தில் இருக்கிறது. அங்கு படிக்க எதை தேர்வு செய்கிறாயோ அதைப் பொறுத்து அது வளரும்” என்று சொன்னார். “படிக்க தவறுபவர்களை படிக்கவைக்கிற வேலையில் ஈடுபடுபவன் நான்” என்று தன்னைப் பற்றிக் கூறினார் அப்பொழுது அவரது டுடோரியல் கலேஜ் ஒரு கம்யூனிசப் பள்ளி என்பதை நான் அறியேன் எனக்கு படிக்கிற பழக்கமுண்டு ஆனால் எதை எப்படிப் படிக்க வேண்டுமென்ற அறிவு கிடையாது.

வானமாமலைக்கு தெரிந்தவன் என்பதால் ஏ.என்னும், அறமும் அவரை சந்திக்க போகிற நேரத்தில் எல்லாம் என்னையும் கூட்டிச் செல்வர்.. அறம், ஏ.என்,என்.வானமாமலை இவர்களது தொடர்பால் அறிவியல்,  தத்துவம், சோசலிச இலக்கியம் இவைகளை பற்றிய நூல்களை படிக்க தொடங்கினேன். எனது கல்லூரி நூலகத்தில் இவர்கள் குறிப்பிடுகிற எந்த புத்தகமும் கிடையாது .எனது கல்லூரிக்கு நேர்எதிரே இருந்த நெல்லை பப்ளிஷிங்ஹவுஸ் என்ற புத்தக விற்பனை நிலையத்தில் கிடைத்தன.அதை நடத்திய சன்முகம் பிள்ளைஅண்ணாச்சி அங்கிருக்கிற சோவியத் புத்தகங்களை எதைத்தொட்டாலும் அதில் என்ன இருக்கிறது என்பதை சுருக்கமாக சொல்லிவிடுவார். படிக்கும் ர்வத்தைத் தூண்டிவிடுவார். 

காங்கிரஸ் சோசலிஸ்டாக இருந்த அவர் கம்யூனிஸ்டுகளை நேசித்தார். அன்று சோசலிசத்தில் பல வகை உண்டு ஒவ்வொரு வர்க்கமும் அதன் நலனை மையமாக வைத்து சோசலிசம் பேசும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு மட்டுமல்ல அன்றைய கம்யூனிஸ்டுகளில் பெரும்பாலோருக்கும்  தெளிவான பார்வை இல்லை என்றே சொல்ல வேண்டும்.இந்த வேறுபாடுகளை கம்யூனிஸ்ட் இலக்கியங்களை படித்து தெரிந்து கொண்ட ஏ.என் காந்தியவாதியாக இருந்தவர் கம்யூனிஸ்டானார். இவர்மட்டுமல்ல அன்றைய கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டிய பலர் முன்னாள் காந்தியவாதிகளே. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியை நேசித்த பலர் நேருவின் சோசலிசம் ஒரு காகிதப்பூ என்பதை உணரவில்லை.

ஏ.என், அறம் இவர்களது தொடர்பால் அன்று நான் கம்யூனிஸ்ட் ஆகவில்லை. புத்தகப்பிரியனானேன். த்தோடு தூயசைவ உணவு சாப்பிடும் குடும்பத்தைச் சார்ந்த நான் நெல்லை சுல்தானியா ஹோட்டல் பிரியாணியின் ரசிகனானேன். அன்று கம்யூனிஸ்ட் இயக்கதினர் மீது காந்தி சுமத்திய முதல் குற்றச்சாட்டு இந்து சைவஉணவுப் பாரம்பரியத்தை அவமதிக்கும் அசைவ உணவு பண்பாட்டைப் பரப்பியது என்பதாகும். முதலில் காந்தியவாதியாக இருந்து  கம்யூனிஸ்ட்டான நல்லசிவனும், அறமும் சைவஉணவுக் குடும்பப் பாரம்பரியத்தை உதறியவர்கள் என்பதை பின்னர் அறிந்தேன்

தோழர் ஏ.என் குடும்ப சூழல் விவரங்கள் தெரிந்தபோது கம்யூனிஸ்ட்கட்சியின் முழுநேர ஊழியன் ஆவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்தேன். முற்றும் துறந்த முனிவர்களைபற்றி பெரிதாக கூறுவார்கள் அவர்கள் ஆசைகளோடு கடமைகளையும் துறந்தவர்கள். அவர்களால் சமூகத்திற்கு எந்தவித பயனுமில்லை. ஆனால் ஆசைகளை துறந்து சமூகக் கடமைகளை மறவாத ஒருவனே கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியனாகமுடியும் என்பதை உணர்ந்தேன். ப்போது எனக்குத் தோழர் ஏ.என் மீது தனிமரியாதை ஏற்பட்டது. பின்நாளில் அவரோடு இணைந்து பணி செய்வேன் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது. சென்னை வாழ்க்கைதான் என்னை மாற்றியது. அவரோடு சிஐடியு மாநில மையத்திலும் பின்னர் மாநில செயற்குழுவிலும் பணிசெய்தேன்.

நிறைகுறைகள் இல்லாத மானுடன் இருக்க முடியாது. அது, ஏ.என்னுக்கும் பொறுந்தும். அவர் தமிழக மேலவை உறுப்பினராக மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அந்த சபையில் பி.ராமமூர்த்தி, உமாநாத், போல மிளிரவில்லை.

ஆனால் கட்சியைக் கட்டுவதில் கம்யூனிச நெறிகளைப் பின்பற்றுவதில் குழுவின் கருத்தொற்றுமையை, செயலொற்றுமையை உருவாக்குவதில் ஈடற்றவராக விளங்கினார். இதனைப் புரிந்துகொள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு மற்றும் கோட்பாடு பற்றிய தெளிவு தேவைப்படுகிறது.

பலரின்கூட்டு முயற்சியால் உருவாவதுதான் கம்யூனிஸ்ட்கட்சி. வழிபட தலைவர், சேவைசெய்ய தொண்டர்கள் என்ற சாதி பிரிவினை இங்கு கிடையாது. ஒருவருக்கொருவர் ஆசிரியராகவும் மாணவனாகவும், தோழனாகவும் சொல்லாலும் செயலாலும் இணைந்திருப்பதின் மூலமே கம்யூனிச இயக்கம் இயங்குகிறது. அவ்வாறு இயங்குவதற்காக சிறு குழுக்களை கொண்டு இயங்கும் அமைப்பாகும்.

இந்த உண்மை பலர் கண்ணில் படாது. கம்யூனிஸ்ட்க் கட்சியை கட்டுபவர்கள் அனைவரும் கடசிப் பணியில் ஈடுபடும் பொழுது கம்யூனிச நெறிகளைப் பினபற்றுபவர்களாக உயர்கிறார்களே தவி கம்யூனிஸ்ட்டுகளாக பிறந்தவர்களல்ல. இதில் தோல்வி அடைபவர்களும் உண்டு. காந்தியவாதியாக இருந்த ஏ.என் கம்யூனிஸ்டாக உயர அவரது உறுதியையும் சகதோழர்களின் பங்களிப்பையும் அவ்வளவு எளிதில் எழுதிட முடியாது. பாலதண்டாயுதம், ஏ.என் இருவரும், ஒரே குழுவில் இருந்தவர்கள், கடைசிவரை பாலதண்டாயுதத்தால் கம்யூனிஸ்டாக இருக்க இயலவில்லை. மோகன் குமாரமங்கலம் வழியில் காங்கிரசோடு இணைப் போகும்பொழுது விமானவிபத்தில் உயிர் துறக்கநேரிடுகிறது. ஆனால் நெல்லை பகுதியில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர பாலதண்டாயுதத்தின் பங்களிப்பை நிராகரிக்க முடியுமா? நிச்சயம் முடியாது. நெல்லை சதி வழக்கின் தீர்ப்பைப் படித்தால் அறிந்துகொள்ளமுடியும். .

ஆசைகளைத் துறந்து கடமைகளை மறவாத முழுநேர ஊழியனாக மகிழ்ச்சியோடு வாழ்ந்த ஏ.நல்லசிவன் உயர்ந்து நிற்பதற்குப் பலவற்றைக் கூறமுடியும். என்மனதில்பட்டதை பட்டியலிடுகிறேன் 1)சிறந்த உரையாடலாளர். உரையாடல் என்பது, மேடைப்பேச்சோ, உபன்யாசமோ, உபதேசமோ அல்ல. சிறு குழக்களாகவோ, இருவரோ உரையாடுவதாகும். பெரும்பாலும் இவைகளே மனமாற்றத்தை உருவாக்குகிறது. இது ஒரு கலை, நறுக்குத்தெறித்தால் போல் பேசுவதும், சிந்தனையை தூண்டுகிற கேள்வி கேட்பதுவும் எளிதானதல்ல.

நெருங்கி ஆராய்ந்தால் கட்சி பற்றாளர்கள் பலரைக் கேட்டால் அவர்கள் கிளை உறுப்பினர் உரையாடல் மூலமே ஈர்க்கபட்டவர்களாக இருப்பர். ஏ.என் மேடைப் பேச்சாளர் இல்லை என்றாலும் உரையாடலில் மிளிர்பவராக இருந்தார். இது கிளர்ச்சிபிரச்சாரத்தின் முக்கியவடிவ மாகும்.

ஏ.என் விக்கிரமசிங்கபுரம் ஹார்விமில் தொழிற்சங்கபணியில் இருந்த போது அந்த தொழிலாளர்களிடமிருந்து மாணவனாக அவர் கற்றது ஏராளம் அந்த தொழில் சம்மந்தமான அனைத்து தொழில் நுட்பப் பிரச்சினைகளையும் கேள்விகளாக கேட்டு அறிந்து கொள்வதில் வல்லவராக இருந்தார். அந்த தொழிற்சங்க முன்ணி ஊழியர்களுக்கு சட்டம், லாபநட்ட கணக்கு பற்றிய பொதுஅறிவு, வேலைப்பழுவை கணக்கிடும் முறை அரசியல் பொருளாதாரம் போதிக்கும் ஆசிரியனாகவும் இருந்தார். மதுரைமில்லில் இவர் போலவே முழுநேர ஊழியராக இருந்த தோழர்.கார்மேகம் இவரைப் போலவே தொழில்பற்றிய ஞானத்தோடு இருந்தார். 

அதுதான் கம்யூனிஸ்ட்பாணி வேலைமுறை என்பதை பின்னர் அறிந்தேன். கற்றலும் கற்பித்தலும் இல்லாமல் ஒருமுழுநேர ஊழியன் கட்சியில் நீடிக்க இயலாது. அதில் குறையுள்ளவர்கள் பின்நாளில் கடுதட்டிவர்களாக ஆகிவிடுகிறார்கள். வாய்ச்சொல் வீரர்கள் கட்சிதாவி விடுகிறார்கள். இந்த இடத்தில் எனது அணுபவத்தையும் பதிவு செய்ய வேண்டும். 1968 நானும் ஏ.என்னும் சி.ஐ.டியுவில் பணிபுரிந்த பொழுது அரைவேக்காடாக இருந்த எனக்கு, வேலை நிறுத்தம் பற்றி கருத்து வேறுபாடு இருந்தது. வர்க்கப் போராட்டத்திற்கும் தொழிற்சங்க போரட்டத்திற்கும் உள்ள நுணுக்கமான வேறுபாட்டை புரியாத எனக்கு நல்லசிவன் வர்க்கசமரசவாதியாகத் தெரிந்தார். 

தொழிற்சங்க போராட்டத்திற்கு அரசியல்முனை இல்லையென்றால் அது புலிவாலை பிடித்தவன் கதி ஏற்படும் என்பார். அந்த காலங்களில் சென்னை நகரில் தொழிற்சங்க தலைவர்கள் ஒன்றுபட்டு கூட்டுப்போராட்டங்கள் வீறு கொண்டு எழுந்த நேரம். நல்லசிவன் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்தார் . நான் மாவட்ட செயலாளர். செயற்குழுவில் அடிக்கடி அறிவுறுத்துவார். தொழிற்சங்கத்திற்கு தலைமை தாங்குபவர் ஒற்றுமை கருதி அரசியல் பேசமுடியாது. அந்த வேலையை கட்சி கிளைகள் உரையாடல் மூலம் வர்க்கபோராட்ட அரசியலை கொண்டு செல்ல வேண்டும். அந்த வேலையில் பழுது இருக்குமானால் உழைக்கும் மக்களை புரட்சிகர அரசியலுக்கு வெல்ல முடியாது. உழைக்கும் மக்களில் போராடும் குணமுள்ள ஒரு சிறுபகுதி நம்மோடு நிற்கும் பெரும்பகுதி பூர்சுவாகட்சிகளுக்கு விசவாசமாக இருப்பர் என்பார். 

சென்னையில் 1970-80களில் தொழிற்சங்கங்களின் கூட்டுப் போராட்டம் சாத்தியமானதுக்குக் காரணம் புதிதாக முளைத்த தேசிய முதலாளிகள் தொழிலாளர்கள் தங்களது சங்கத்திற்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுத்தனர் அந்த பொது அம்சமே கூட்டுப் போராட்டத்தை வெற்றிஅடையச் செய்தது. அந்த உரிமை கிடைத்த பிறகு இன்று நிலமை என்ன? உழைக்கும்மக்களை அரசியல்சக்தியாக அந்த தொழிற்சங்க போராட்டம் உயர்த்தவில்லை.  

தோழர்.நல்லசிவன் சந்தர்ப்பவாத அரசியலையும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புரட்சிகர மாற்றங்களை உருவாக்குவதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தியவர். கூட்டணி அரசியலின் தத்துவார்த்த அடிப்படையை உள்கட்சி விவாதங்களிலுக்குள் உலுக்கி நெறிபிறழா உறவிற்கு போராடியவர். ஏகாதிபத்தியவாதிகளிடையே நிலவிய முரண்பாட்டால் அன்று சோவியத் புரட்சி கரைஏறியது. அதுபோல் சந்தர்ப்பம் கிடைத்தால் பயன்படுத்த தவறக்கூடாது, ஆனால் பூர்சுவாஜனநாயக கட்சிகளோடு உறவு என்பது வர்க்க போராட்ட அரசியலை கைவிட்டு உறவு கொள்ள கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். பாட்டாளிவர்க்க கட்சியின் உறுப்பினர்களைபற்றி கொண்டிருக்கும் அந்நியகருத்துக்களை இடைவிடாத விவாதங்கள் மூலம் சரி செய்வதற்கு முன்னுரிமை கொடுத்தார். 

ஒன்றை குறிப்பிட வேண்டும். மூலதனத்தை மொழி பெயர்த்த தியாகு மார்க்சிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்ட கட்சி உறுப்பினராக சேர்ந்தார். தியாகு நக்ஸலைட்டாக இருந்து அந்த பாதை தவறு என்று எழுதிதால் விடுதலை பெற்றார். அதற்கு உள்ளே இருந்த மார்க்சிஸ்ட்டுகளும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவும் உதவின.

அவர் வெளியே வந்ததின் நோக்கம் வேறு. மூலதனத்தை மொழிபெயர்த்தவர் என்பதால் கட்சி உறுப்பினர்களிடையே நன்மதிப்பை பெற்றார். அவரது குட்டி பூர்சுவாதனத்தை மெச்சுகிறசிலரை வைத்துக் கொண்டு மாவட்டக் குழுமீதும். மார்க்சிஸ்ட் கட்சிமீதும் அவநம்பிக்கையை விதைத்தார். பகுதிக்குழு மாநாட்டிலும், மாவட்ட மாநாட்டிலும் ஆவேசமாகபேசி சீர்குலைக்க முயற்சித்தார். அந்த கட்டத்தில் தோழர் ஏ.என் கட்சியின் அரசியல் பாதையை வலியுறுத்தி பேசிய பேச்சுக்களே கட்சியை காப்பாற்றியது. சிறிதுநாளில் தியாகு அவராகவே வெளியேறினார். பூர்சுவா ஊடகங்கள் மார்க்சிஸட் கட்சியை சீர்குலைக்க இவரைஅவ்வப்போது பயன்படுத்த தவறியதில்லை.

சுருக்கமாக சொன்னால் தோழர்ஏ.என். கற்றல் கற்பித்தல் என்ற கம்யூனிச நடைமுறைக்கு எடுத்துக் காட்டானார். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் பாட்டாளிவர்க்க அரசியலுக்கும், சந்தர்ப்பவாத அரசியலுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தப் போராடினார. தொழிற்சங்க பணியில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கினை தெளிவுபடுத்துவதில் சிறந்து விளங்கினார் கட்சிக்குள் அந்நியக் கருத்துக்களை சேதாரமில்லாமல்அகற்றிடும் செயலுக்கு எடுத்துக் காட்டாக இருந்தார்.

 தோழர்.வி.எம்.எஸ்



சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...