Pages

வியாழன், ஜூலை 03, 2025

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம்-1

 



1948 மே 14

சியோனிச இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் பென் குரியன் இன்று முதல் இஸ்ரேல் என்ற நாடு உதயமாகிறது என ஆரவாரத்துடன் அறிவித்தார். 19 ஆம் நூற்றாண்டு வரை உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற தேசம் இருக்கவில்லை. ஒரு தேசம் என்று வரையறுத்தால் தொடர்ச்சியான நிலப்பரப்பு, பொருளாதார நடவடிக்கை, கலாச்சாரம், ஒரே மொழி, நிரந்தர வாழ்விடம் என்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் மேற்கண்ட வரையறைக்குள் தொழிற்படாத ஒரு நாடாகத்தான் இஸ்ரேல் என்ற நாடு இருக்கிறது. 1978 ஆம் ஆண்டு தரவுகளின் படி 31 லட்சம் யூதர்கள் 102 நாடுகளில் இருந்து வந்தவர்கள். 51 மொழிகளை பேசக்கூடியவர்கள். உணவு, சமூக உறவு, மொழி, பண்பாடு, வரலாற்று இணைப்பு என விஷயங்களில் வேறுபட்டவர்கள். இதற்கு காரணம் என்னவென்றால், இஸ்ரேல் என்ற நாடு இயல்பாக உருவாகவில்லை என்பதுதான். அது ஏகாதிபத்திய சக்திகளால் சியோனிஸ்ட் கொள்கை உடையவர்களால் திணிக்கப்பட்டது. டேவிட் பென் குரியன் அறிவிக்கிற பொழுது, ‘‘இன்று முதல் எம்மக்கள் இஸ்ரேலியர்கள் என்று அழைக்கப்படுவார்கள்; எம்மதம் யூத மதம்’’ என்று கூறினார்.

தொன்மை வரலாறும் – புனைவுகளும்

மேற்காசிய பிரதேசங்களில் தொன்மைக் காலம் தொட்டு மனிதர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்றைய நாடுகளின் பெயர்களையோ, இனக்குழுக்களின் பெயர்களையோ, தொன்மைக்கால மனிதர்கள் மீது திணிப்பது அறிவியல் பார்வை ஆகாது. வரலாறு நெடுகிலும் மனிதர்களிடையே இனகுழுக்கள் கலப்பு, பண்பாடு கலப்பு, மொழிகளின் கலப்பால் ஏற்பட்ட வளர்ச்சி என மனித குலங்கள் வளர்ந்து வந்திருக்கிறது. அவ்வாறுதான் மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள யூதர்களாக இருந்தாலும் சரி, அரேபியர்களாக இருந்தாலும் சரி பல்வேறு இனக் குழுக்கலிருந்து பெருக்கமடைந்து காலப்போக்கில் வளர்ந்தவர்கள் என்பதுதான் வரலாற்று உண்மை. நெபால் என்பவர் நடத்திய டி.என். ஆய்வில் இஸ்ரேலியர்/பாலஸ்தீன அரேபியர்கள் மற்றும் யூதர்களிடையே கணிசமான மரபணு ஒன்றுடன் ஒன்று இணைந்து இருப்பதை கண்டறிய முடிந்தது. ஆனால் சியோனிஸ்டுகள் அறிவியல் ஆய்வு என்ற பெயரால் யூத இனம் தனி இனம்,தூய்மையானது என்று புனைவுகளை கட்டமைக்கின்றனர். இது போன்றுதான் முசோலினி இத்தாலிய இனத்தூய்மைவாதத்தை முன்வைத்தார்.

யூத மதத்தை தோற்றுவித்த ஆப்ரஹாம் பிறப்பதற்கு 46 ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே மனிதர்கள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்தனர். பாலஸ்தீனத்தில் முதலாவதாக குடியேறிய இனக்குழுக்கள் அமோரியர்கள், ஹராமியர்கள் ஆவார்கள். இந்த குடியேற்றம் பொது ஆண்டுக்கு முன்பு (கிமு) 3500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. பொஆமு (கிமு) 3000 ஆண்டுகளில் அரேபிய இனக்குழுவான கானானியர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறினார்கள். பொஆமு (கிமு) 1800 ஆம் ஆண்டுகளில் மெசபடோமியாவின் உர் பகுதியிலிருந்து ஆபிரஹாம் தனது இனத்துடன் புறப்பட்டு ஜெருசலேம் வந்தார். அங்கிருந்த ஜப்பூசிய மன்னன் ஆபிரஹாம் இனத்தவர்களுக்கு இடளித்தார். ஆபிரஹாம் மரணத்திற்கு பிறகு இவர்கள் எகிப்திற்கு சென்றனர். எகிப்தில் பாரோ மன்னர்களால் 400 ஆண்டுகளுக்கு மேல் அடிமைப் படுத்தப்பட்டார்கள்.

பொஆமு (கிமு) 1250 இல்லீரியா என்ற இடத்தைச் சேர்ந்த பிலிஸ் தினியர்கள் கானான் தெற்கு பகுதியை கைப்பற்றி பிலீஸ்தீனம் என்று பெயரிட்டனர். பிலிஸ்தினியர்களும், கானானில் இருந்த இனக்குழுவும் இணைந்து பாலஸ்தீன இனமாக உருவானது. எகிப்தில் 400 ஆண்டுகள் அடிமையாக இருந்த யூத இனத்தவர்கள் அதற்கு எதிராக கலகம் செய்து மோசஸ் என்பவர் தலைமையில் புறப்பட்டு 40 வருடம் பாலைவன வாழ்க்கையை மேற்கொண்டார்கள். மோசஸ் இறந்த பிறகு யூதர்களின் பனிரெண்டு இனக்குழுக்கள் இணைந்து ஜோஸ்வா தலைமையில் பாலஸ்தீன நாட்டின் கிழக்குப் பகுதியை கைப்பற்றினார்கள். இந்த மோதல்கள் 200 வருடங்களுக்கு மேல் நீடித்தது. இதன் பிறகு பொஆமு (கிமு) 932 வரை இந்தப் பகுதியை யூத இனக்குழுக்களின் அரசர் சாலமன் ஆட்சி செய்தார். அவர் இறந்த பிறகு  நிலைமை மாறியது.

பாலஸ்தீனப் பிரதேசத்தை ஒரு குறிப்பிட்ட இனமோ, பேரரசோ நீண்ட காலம் தொடர்ந்து ஆட்சி செய்ததாக பழங்கால வரலாறு இல்லை. பொஆமு 721இல்சீரியர்கள் பாலஸ்தீனத்தை கைப்பற்றினார்கள். பொஆமு 587இல் பாபிலோனியர்கள் இப்பகுதியை வென்று யூதர்களை சிறைபிடித்து சென்றனர். பொஆமு 538 இல் பெர்சிய மன்னன் சைப்ரஸ் இப்பகுதியை கைப்பற்றி யூத பெண்களை மணந்து மீண்டும் யூதர்களை வரவழைத்தார். பொஆமு 332 இல் அலெக்சாண்டர் இப்பகுதியை கைப்பற்றினார். இவர் காசா பகுதியை கைப்பற்றுவதற்கு இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டார். அந்த அளவிற்கு எதிர்ப்பு இருந்தது. பொஆமு 63இல் ரோமப் படைத்தளபதி போம்பே பாலஸ்தீனத்தை கைப்பற்றினார்.

பொஆ (கிபி) 70 ரோம பேரரசர் டைடஸ் யூதர்களை ரோமுக்கு அடிமைகளாக கப்பல்களில் பிடித்து சென்றார். பொஆ(கி.பி.)135இல் ரோம தளபதி மீதமிருந்த யூதர்களை விரட்டி அடித்தார். ரோமானிய பேரரசர் கான்ஸ்டாண்டின் தி கிரேட் பொஆ (கிபி) 4ம் நூற்றாண்டில் கிறிஸ்துவ மதத்தை ரோமானிய பேரரசின் ஆதிக்க மதமாக மாற்றினார். அதன் தொடர்ச்சியாக அவர் கைப்பற்றி இருந்த மேற்காசிய பகுதியையும் பாலஸ்தீனம் உட்பட கிறிஸ்தவ மதம் திணிக்கப்பட்டது. யூதர்கள் பொருளாதார நெருக்கடி மற்றும் அடக்குமுறைகளால் வெளியேறினார்கள். கிபி 638 இல் கலீபாமர் பாலஸ்தீனத்தை வென்றார். 1099 ம் ஆண்டு ஐரோப்பிய சிலுவைப்படை பாலஸ்தீனத்தை கைப்பற்றியது. 1187ஆம் ஆண்டு மீண்டும் முஸ்லிம் படை பாலஸ்தீனத்தை கைப்பற்றி சலாவுதீன் ஆட்சி ஏற்பட்டது. 1229ம் ஆண்டு ஜெர்மன் சிலுவைப்படை ஜெருசலேமை கைப்பற்றியது. 1517 இல் துருக்கி ட்டோமான் பேரரசர் பாலஸ்தீனத்தை கைப்பற்றி 400 ஆண்டுகள் வைத்திருந்தார். 1917 இல் முதல் உலகப்போர் முடிவில் பாலஸ்தீன பகுதி இங்கிலாந்து மற்றும் பிரான்சின் கைவசம் வந்து

சியோனிச சித்தாந்தம்        

சியோனிசம் என்பது 19வது நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் யூதர்களுக்கு மத்தியில் தோன்றியது. யூதர்களுக்கான இன கலாச்சார தேசியவாத இயக்கமாக இது முன்னெடுக்கப்பட்டது. 1840 ஆம் ஆண்டுகளில் யுகோஸ்லாவாகிய நாட்டைச் சேர்ந்த யூதர் அல்கலே, 1861இல் ஜெர்மானிய நாட்டைச் சேர்ந்த யூதர் ஸ் கனிஷர், 1862 இல் மோசஸ், 1882இல் ரஷ்யாவின் லியோ பென்ஸ் கார் போன்றவர்கள் சியோனிச சித்தாந்தங்களை பிரச்சாரம் செய்து வந்தனர். 1896 ஆம் ஆண்டு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த யூதர் தியோட ஹெர்செல் சியோனிச இயக்கத்தை அரசியல் படுத்தினார். யூதர்களுக்கு தனிநாடும், தனி அரசும் தேவை என்பதை பிரகடனமாக வெளியிட்டார். பிரிந்து கிடந்த யூதர்களை ஒன்று திரட்ட ஆரம்பித்தார். 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா உட்பட பல பகுதிகளில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்களை பயன்படுத்தி சியோனிசம் என்ற அமைப்பையும் யூதர்களுக்கான தனிநாடு, தனிஅரசு என்ற கருத்தையும் நிலை நிறுத்தினார்.

சியோனிசம் உருவாக்கிட அதாவது யூத நாட்டை உருவாக்கி முதலில் பல்வேறு இடங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. துருக்கி, கென்யா, உகாண்டா, சைப்ரஸ், சினாய், இத்தாலியின் திரிபோலி, மொசாம்பிக், காங்கோ போன்ற பிரதேசங்களில் ஒரு பகுதியை யூத நாடாக உருவாக்க திட்டமிட்டார்கள். இறுதியில் யூதர்கள் அதாவது சியோனிஸ்டுகள் பாலஸ்தீனத்தை தேர்வு செய்தார்கள். காரணம் கடவுளுடன் இணைப்பதற்கான ஒரு சில வரிகளை விவிலிய நூலில் (பைபிள்) கண்டெடுத்தனர்.

விவிலிய நூல் பழைய ஏற்பாட்டின் படி அத்தியாயம் 15 பிரிவு 18 இல் நைல் நதிக்கும் ஜோர்டான் மேற்கு பகுதிக்கும் இடைப்பட்ட பிரதேசம் ஆபிரஹாம் வழித்தோன்றல்களுக்கு கொடுக்கப்பட்டது என்ற வார்த்தைகளின் அடிப்படையில் இதற்கான கதைகள் உருவாக்கப்பட்டது. கிமு 1800 ஆம் ஆண்டுகள் மெசபடோமியா நகரம் கடவுள்களால் ஹீப்ரு இன மக்களுக்கு கொடுக்கப்பட்டது என்றும் ஆபிரஹாம் அங்கு தனது இனக்குழுக்களுடன் இடம்பெயர்ந்தார். அதன் பிறகு எகிப்து நாட்டின் கானான் பகுதிக்கு கால்நடைகள் மேய்ப்பதற்கான வாழ்க்கையை தொடங்கினார்கள். இக்காலத்தில் ஆபிரஹாம் இறந்தார். அவரின் உடலை ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரையில் புதைத்தனர். ஆபிரஹாமின் இறப்புக்குப் பிறகு ஹீப்ரு இனக்குழுவினர் 400 வருடங்கள் எகிப்தில் அடிமையாக இருந்தனர். அதனைத் தொடர்ந்து கி.மு 1250 ஹீப்ருக்கள் மோசஸ் தலைமையில் தப்பிச்சென்று 40 ஆண்டுகள் வரை பாலைவன வாழ்க்கையை மேற்கொண்டனர். மோசஸ் இறந்த பிறகு ஜோஸ்வா இந்த இனக்குழுவிற்கு தலைமை தாங்கினார். ஹீப்ரு மன்னர்கள் டேவிட் மற்றும் சாலமன் புகழ்பெற்றவர்கள்.  சாலமன் மன்னர் சியோன் குன்றின் மீது யாகோவா கடவுளுக்கு கோவில் கட்டினார்.பொஆ 70 ஆம் ஆண்டு படை எடுப்பால் இக்கோவில் இடிக்கப்பட்டது. இப்பொழுதும் ஜெருசலேமின் யூத குடியிருப்புகளுக்கு கீழே பத்தடி ஆழத்தில் இந்த கோவிலுக்கான சுவர்கள் உள்ளது. இதைத்தான் யூதர்களின் அழுகைச்சுவர் என்று அ

அது மட்டுமல்ல சீயோன் மலை என்பது ஜெருசலேமில் உள்ளது. சீயோன் எபிரேய பைபிள்களில் பயன்படுத்தும் ஒரு சொல். எபிரேய மொழி பொஆமு முதலாம் நூற்றாண்டுவரை யூதர்கள் பயன்படுத்திய மொழியாகும. அதன் பிறகு வழக்கொழிந்துபோய்விட்டது.யூதர்கள் பாபிலோனியாவிற்கு நாடு கடத்தப்பட்ட காலத்திலிருந்து இந்த மலையை தங்களின் பூர்வீகமாக கருதி வருகின்றனர்.

யூதர்கள் ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் அரசு அமைப்பதற்கான தார்மீக உரிமை மட்டுமல்ல, வரலாற்று உரிமையும் இருக்கிறது என்ற நம்பிக்கைதான் சியோனிசத்தின் அடிப்படையாகும். யூதர்கள் அல்லாதவர்கள் மத்தியில் வாழ்ந்த யூதர்களிடம் ஊடுருவிய வேறு அடையாளங்களை சியோனிஸ்டுகள் அழிக்க முற்பட்டனர். யூத கலாச்சாரத்தில் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற முயற்சிகளை மேற்கொண்டனர். சியோனிச உருவாக்கத்தோடு சேர்ந்து யூத இனக்குழு பழமையானது, அதுதான் பாலஸ்தீன பகுதியில் வாழ்ந்தது என்பதற்கான இன அறிவியலை கட்டமைக்க முயற்சி செய்தனர். இந்தக் கருத்து உருவாக்கம் யூத அடையாளத்திற்கான புதிய கட்டமைப்பை கொடுத்தது. இஸ்ரேலிய நிலத்திலிருந்து யூதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான இனவழிக் கதைகளையும் உருவாக்க முடிந்தது.

புதிதாக ஒரு இடத்தை கைப்பற்றுவதற்கான குடியேற்றத்தை நடத்துகிற பொழுது, உழைப்பை கைப்பற்றுதல் என்ற கோட்பாட்டை முன் வைத்தனர். பிரத்தியேகமாக யூத உழைப்பாளர்களை வேலைக்கு அமர்த்துவது என்ற கோட்பாடு பாலஸ்தீனத்தில் யூத நிலத்தை உத்திரவாதப்படுத்துவதற்கு உதவி செய்வது. 100 சதவீத யூத உழைப்பு என்ற பிரத்தியேகமான திட்டத்தையும், அதிக உற்பத்தி திறன் கொண்ட பொருளாதார அடிப்படையில் தூய்மையான யூத குடியேற்றத்தை உருவாக்க திட்டமிட்டனர். புலம்பெயர்ந்த யூதர்கள் பல நாடுகளில் இடைத்தரகர்களாகவும் தொழிலாளர்களாகவும் இருந்தனர். அவ்வாறு யூத நாட்டில் இல்லாமல், உருவாக்கப்படும் யூத நிலத்தில் தொழில், விவசாயம், சுரங்கம், போன்ற அடிப்படை துறைகளை வளர்ப்பது என்றும் இதற்கு யூத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது என்ற சியோனிச கருத்துக்கள் உருவாக்கப்பட்ட யூத குடியேற்றங்களில் கடைபிடிக்கப்பட்டது.

சியோனிஸ்ட்களின் முயற்சிகளுக்கு பிரிட்டன் பக்கபலமாக இருந்தது மட்டுமல்ல... பிரிட்டனுக்கும் யூதர்களுக்கான தனி நாட்டை அமைத்துக் கொடுப்பதற்கான அரசியல் தேவை இருந்தது. எனவே பிரிட்டன் 1840 ஆம் ஆண்டுகளில் இருந்து மேற்காசிய நாடுகளின் இயற்கை வளங்களின் மீது தனது கவனத்தை செலுத்தி வந்தது. மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட அரசியலின் நிலையற்ற தன்மை, பொருளாதார நெருக்கடிகள், மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் எண்ணெய் வளங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளின் விளைவாகவே பாலஸ்தீன பகுதி யூதநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம்-1

  1948 மே 14 சியோனிச இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் பெ ன் குரியன் இன்று முதல் இஸ்ரேல் என்ற நாடு உதய மா கிறது என ஆரவாரத்துடன் அறிவித்தார் ....