-
அ.பாக்கியம்
கருணை
பொங்கும் கண்கள்; பரிவு கொண்ட பார்வை; அன்பை உபதேசிக்கும் உதடுகள்;
அமைதியை விரும்பும் வதனம்; சாந்த சொரூபி
என்பதற்கான சரியான எடுத்துக்காட்டு, உயிர் கொல்லாமை, ஜனநாயகம், சுதந்திரம் போன்றவற்றின் மீது காட்டும்
பற்று என்றெல்லாம் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் தஞ்சம்
அடைந்திருக்கும் 14 ஆவது தலாய்லாமாவை, அமெரிக்காவும்,
மேற்கத்திய ஊடகங்களும் போற்றிப் புகழ்ந்து ஒரு போலி பிம்பத்தை
கட்டமைத்துள்ளனர். போதாத குறைக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வேறு வழங்கி
கவுரவித்திருக்கிறார்கள்.
இந்த
போலி பிம்பங்களை புறந்தள்ளிவிட்டு தலாய் லாமாக்களின் உண்மை சொரூபத்தை ஆராய்ந்தால், வரலாற்றின்
பக்கமெங்கும் ரத்த வாடை தான் அடிக்கிறது. மனிதர்களை அடிமைகளாக அல்ல, அதைவிடவும் மிக கீழ்த்தரமாக நடத்திய வரலாற்று உண்மைகளை அறியும்போது,
நெஞ்சம் பதறுகிறது. தலாய் லாமாவின் வரலாற்று தடமெங்கும் அடிமைகளின்
ரத்தச் சுவடுகள். மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால்,
அவர்கள் நடத்திய ஆட்சியின் பெயரால் 95 சதவீத
மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளானதை உண்மை வரலாறு நமக்கு புரிய வைக்கிறது.
14 ஆவது தலாய் லாமா
இந்த
14 ஆவது
தலாய் லாமாவின் இயற்பெயர் லாமோ தோண்டப் (Lhamo Thondup). இவர்
மிகப்பெரிய நிலவுடைமை செல்வந்த
குடும்பத்தில் 1935, ஜூலை 6
அன்று பிறந்தார். அவர் 14 ஆவது தலாய் லாமாவாக பதவியேற்ற
பிறகு டென்சின் கியாட்சோ (Tenzin Gyatso) என திபெத் மரபு படி
அவருக்கு மற்றொரு பெயர் சூட்டப்பட்டது.
1959 ஆம் ஆண்டு சீனாவில் முன்னெடுக்கப்பட்ட சீர்திருத்தத்தால் தனது நிலவுடைமை
மற்றும் மத ஆதிக்கம் சரிவதை ஏற்றுக்கொள்ளாமல் இந்தியாவில் உள்ள தர்மசாலாவில்
தஞ்சம் புகுந்தார்.இவர் எவ்வளவு நிலம் மற்றும் சொத்துகளுக்கு அதிபதியாக இருந்தார்
எவ்வளவு அடிமைகளை வைத்திருந்தார் என இக்கட்டுரையின் இறுதியில்
குறிப்பிட்டப்பட்டுள்ளது.
அடிமைகளும்-பண்ணை அடிமைகளும்
1959 ஆம் ஆண்டு சீனமக்கள் குடியரசால் திபெத்தில் சீர்திருத்தங்கள்
துவங்குவதற்கு முன் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அது நிலப்பிரபுத்துவ அடிமை
சமுதாயமாக இருந்தது. இந்த சமூகத்தை மத நிர்வாக நிலப்பிரபுத்துவம் ஆட்சி செய்தது.
திபெத்திய பௌத்தத்தின் கெலுக் பிரிவின் தலைவராக 14 ஆவது
தலாய்லாமா இருந்தார். இவர்தான் திபெத்தின் உள்ளூர் அரசாங்கத்தின் தலைவராகவும்
பணியாற்றினார். ஒரே நேரத்தில் அரசியல் மற்றும் மத அதிகாரத்தை வைத்திருந்தார்.
அதாவது கடவுளாகவும், ராஜாவாகவும் இருந்தார். நிலப்பிரபுத்துவ
அடிமைத்தனத்தின் முக்கிய பிரதிநிதி இவர் தான்.
திபெத்தில்
நிலப்பிரபுத்துவம் என்ற ஆளும் வர்க்கமும்,
அடிமைகள், பண்ணை அடிமைகள் என்ற உழைப்பாளி
வர்க்கமும் இருந்தன. வர்க்கங்கள் என்ற அடிப்படையில் ஒரு நிலப்பிரபுத்துவ
சமூகத்தில் பண்ணை அடிமைத்தனம் மேலோங்கி இருந்தது. உயர் அடுக்கில் இருந்த
நிலப்பிரபுத்துவம் மூன்று வகைகளில் செயல்பட்டது.
ஒன்று
– உள்ளூர் நிர்வாக அதிகாரிகள்,
இரண்டாவது
– நிலப்பிரபுக்களும் அவர்களின் முகவர்களும்,
மூன்றாவதாக
– திபெத்திய பௌத்த மடங்களின் உயர் பதவியில் இருந்த லாமாக்களும், அவர்களின்
முகவர்களும் ஆளும் வர்க்கமாக இருந்தார்கள்.
மொத்த
மக்கள் தொகையில் இவர்கள் 5 சதவீதம் மட்டுமே. இந்த 5 சதவீதத்திலும் இரண்டு
சதவீதம் பேர் உயர் அடுக்குகளிலும், மூன்று சதவீதம் பேர்
நிலப்பிரபுக்கள், மடாதிபதிகளின் முகவர்கள், மேற்பார்வையாளர்கள், தனியார் படைகளின் மேலாளர்கள்
என்ற அடிப்படையில் இருந்தனர். இவர்கள்தான் 95 சதவீதம் மக்களை
அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.
திபெத்திய
சமூக பொருளாதார அமைப்பு நிலப்பிரபுத்துவ மற்றும் மத அதிகார முறைகளின் கலவையாக
இருந்தது. எனவே தான் மத நிர்வாக நிலப்பிரபுத்துவம் என்று இதை அழைத்தார்கள்.
அடிமைகளும், பண்ணை அடிமைகளும் அடிப்படையில் சுதந்திரமற்ற உழைப்பாளிகளாகவே இருந்தனர்.
இருப்பினும் சட்டபூர்வ தன்மையில் மெல்லிய வேறுபாடுகள் உண்டு. ஒரு அடிமை, அடிமை உடைமையாளரின் சொத்தாக, கால்நடை போன்ற ஒரு
பொருளாக, பாவிக்கப்படுவார். அந்த அடிமையின் உடல், உயிர், உழைப்பு, அவர்களின்
குழந்தைகள் ஆகியவற்றின் முழுமையான அதிகாரம் அடிமை உடமையாளருக்கு இருக்கும்.
அடிமைகளை வாங்கவும், விற்கவும், பரிமாறிக்
கொள்ளவும் உடமையாளருக்கு உரிமையுண்டு.
பண்ணை
அடிமை என்பது ஒரு சொத்து போன்றது அல்ல. வரையறுக்கப்பட்ட சில சட்ட உரிமைகள்
உள்ளவர்கள். அடிமைகளை வேறு பணிகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால் பண்ணை அடிமைகள்
நிலத்தோடு பிணைக்கப்பட்டிருப்பார்கள். ( நிலப்பிரபுத்துவ மற்றும் பாரம்பரிய
வழக்கத்தால் ஒரு குறிப்பிட்ட நிலத்துடன் பிணைக்கப்பட்டவர்). பண்ணை அடிமையின் நிலை
நிலத்துடன் தொடர்புடையது. நிலம் விற்கப்பட்டாலோ அல்லது பரம்பரையாக மாற்றப்பட்டாலோ
பண்ணை அடிமைகளும் அதனுடனேயே பிணைக்கப்பட்டு இருப்பார்கள். அவர்களை நிலத்திலிருந்து
தனியாக பிரிக்க முடியாது. அடிமைகளுக்கு பொதுவாக எதுவும் சொந்தமில்லை. அவர்கள்
உற்பத்தி செய்வது அனைத்தும் எஜமானருக்கே சொந்தம். அவர்களுக்கு உயிருடன் இருக்க
உணவு மற்றும் தங்குமிடம் மட்டுமே வழங்கப்பட்டது.
“பண்ணை அடிமைகள் நிலப்பிரபுக்களின் நிலத்தில் வேலைகள் செய்வதற்கும்,
நிலபிரபுக்களுக்கு வாடகையை பொருளாகவோ, பயிர்
அல்லது கால்நடைகள் போன்றவைகளாகவோ, பணமாகவோ செலுத்துவதற்கு
கடமைப்பட்டவர்கள். அடிமைகளுக்கு சட்டபூர்வ குடும்ப உரிமைகள் இல்லை. திருமணங்கள்
செய்தாலும் அது பெரும்பாலும் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படுவதில்லை.
திருமணமானவர்களை விற்பனை செய்கிற போது அந்தக் குடும்பங்கள் பிரிந்துவிடும்”.
பண்ணை
அடிமைகளுக்கு திருமணம் செய்து குடும்பம் அமைக்க பெயரளவில் உரிமை இருந்தது. இதற்கு
நிலப்பிரபுவின் அனுமதி தேவை. மேற்கண்ட பொதுவான தன்மைகளுடன் திபெத்திய
நிலப்பிரபுத்துவத்தில் மேலும் பல கட்டுப்பாடுகள் நிறைந்ததாக அடிமை முறை இருந்தது.
ஐரோப்பாவை விட அதிகமான அடக்குமுறைகளை,
சுரண்டல்களை திபெத்திய அடிமைகள் எதிர்கொண்டனர். ஐரோப்பாவில்
மடாலயங்கள் தனியாக இருந்தன. அவற்றிற்கு சொத்துக்களும் இருந்தன. ஆனால், அரசு அதிகாரத்தில் நேரடியாக இல்லை. திபெத்தில் மதத்தின் தலைவர் கையெழுத்து
போட்டால் மட்டும் தான் சட்டங்கள் செல்லும். திபெத்தில் அடிமைகள் இருந்தார்கள்.
ஆனால் பண்ணை அடிமைமுறை உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்தது. இவை தவிர நாங்சான்
என்று அழைக்ககூடிய வீட்டு வேலைகள் செய்யக்கூடிய அடிமைகள் இருந்தார்கள்.
இவர்களுக்கு எந்த விதமான பொருளும் சொந்தமில்லை. சுதந்திரம் இல்லாதவர்கள். திபெத்தில்
இவர்களை நிலப்பிரபுக்கள் “பேசும் மிருகங்கள்” என்று அழைத்தார்கள்.
மக்கள்
பிரிந்து கிடப்பது ஆளும் வர்க்கத்திற்கு அத்தியாவசிய தேவை அல்லவா? திபெத்தில் இந்த
அடிமைகளை மேலும் ஒன்பது துணைப்பிரிவுகளாக பிரித்து வைத்தனர். இவர்களிடையே ராக்யபா
என்று அழைக்கப்படும் தீண்டத்தகாதவர்களின் ஒரு சாதியும் இருந்தது. சுருக்கமாகச்
சொன்னால் 300 உன்னத நிலப்பிரபுத்துவ, மடாதிபதிகளின்
குடும்பங்கள் தவிர திபெத்தில் உள்ள அனைத்து சாதாரண மனிதர்களும், பெண்களும், எஜமானருக்கு அடிமைகளாக இருந்தார்கள்
என்று திபெத்தை பற்றிய நீண்ட ஆய்வுகள் செய்த மெல்வின் கோல்ட் ஸ்டைன்
எழுதியுள்ளார்.
நடுத்தர
வர்க்கம் நடைமுறையில் அங்கு இல்லை. சிறு வணிகர்களும், கைவினைஞர்களும்,
தங்களது எஜமானர்களுக்காக வேலை செய்தார்கள். அதே நேரத்தில் கைவினை
தொழிலில் ஈடுபடவும், வர்த்தகம் செய்வதற்காகவும் தங்களது
எஜமான நிலப்பிரபுக்களுக்கு வரி செலுத்திய அடிமைகளாகவே இவர்கள் இருந்தார்கள்.
அதிலும் வெளிநாட்டு வர்த்தகங்களை உயர் குடும்பங்களில் இருந்த லாமாக்களே செய்து
வந்தார்கள். நிலப்பிரபுத்துவ மற்றும் மடாதிபதிகளின் உயர் குடும்பங்களில் இருந்து
வந்தவர்கள் பௌத்த மடாலயங்களுக்குள் சொந்தமாக வீடுகளை வைத்திருப்பது மட்டுமல்ல
அவர்களே மடாலய தலைவர்களாகவும் உருவானார்கள்.
அங்கிருந்த
அடிமைகளோ தங்களுக்கு பிறக்கும் பிள்ளைகளை மடாலயங்களில் கொடுத்து விடுவார்கள்.
மடாலயத்தில் இந்த அடிமைகள் இலவச பணியில் ஈடுபடுவார்கள். அவர்கள் அனைவரும் துளிகளாக
அதாவது “அடிமைத் துறவிகளாக” இருந்தனர். இதனால்
துறவிகளுக்குள்ளும் சமத்துவம் இல்லை அடிமை துறவிகள் மற்றும் உடமையாளர்
துறவிகள் என்ற இரு வர்க்கம் அங்கேயும் நீடித்தது.
சமூகத்தை
ஏற்றத் தாழ்வான பிரிவாக வைத்துக்கொள்வதற்கு பௌத்தத்தின் போதனைகளை பயன்படுத்திக்
கொண்டார்கள். ஏற்றத்தாழ்வுகளை மத ரீதியாக நியாயப்படுத்தினார்கள். பௌத்தத்தில்
சொல்லப்பட்டிருக்கக் கூடிய கருமவிதி என்ற கோட்பாட்டை பயன்படுத்தினர்.“எல்லா
உயிரினங்களுக்கும் செயல்கள் (கர்மா) சொந்தமாக, அவற்றின் பரம்பரையாக, அவற்றின் பிற விகாரணமாக, அவற்றின் உறவினர்களாக,
அவற்றின் அடைக்கலமாக உள்ளன. கர்மாதான் உயிரினங்களை தாழ்ந்த மற்றும்
உயர்ந்த நிலைகளாக வேறுபடுத்துகிறது.” பண்ணை அடிமைகளாக இருப்பதற்கு கர்மா தான்
காரணம் என்பதை பிரச்சாரம் செய்தார்கள். பௌத்தம் உயிர்க்கொல்லாமையை போதித்தால்,
அடிமைகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு அவர்களின் உடல் உறுப்புகளை
வெட்டி எடுத்தார்கள். மரணதண்டனைகளும் 1913ம் ஆண்டு வரை
இருந்தது குறிப்பிடத்தக்கது.
வரம்பற்ற பொருளாதார சுரண்டல்
முதலாளித்துவ
பொருள் உற்பத்தி முறைகளில் உழைப்பாளி மக்களிடம் செய்யக்கூடிய சுரண்டல்
வெளிப்படையாக தெரியாது. ஆனால்,நிலப்பிரபுத்துவ பொருள் உற்பத்தி முறையில் சுரண்டல் வெளிப்படையாக
தெரியக்கூடியது என்று காரல் மார்க்ஸ் மூலதனத்தில் எழுதினார்.
இதுதான்
திபெத்தில் பண்ணை அடிமை முறையில் நடந்த அதீத சுரண்டலாகும். திபெத்தில் விவசாயம்
மற்றும் கால்நடைகள் மேய்த்தல் முக்கிய தொழிலாகும். திபெத்தில் இருந்த அனைத்து
நிலங்களும், பெரும்பாலான கால்நடைகளும் நிலப்பிரபுகளுக்கும், மதத்
தலைவர்களுக்கும் சொந்தமானது. 1959 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு 24.3 சதவீத நிலம் நேரடியாக நிலப்பிரபுக்களுக்கு சொந்தமாக இருந்தது.36.8 சதவீதம் மடாலயங்களுக்கு சொந்தமாக இருந்தது. மீதமுள்ள 38.9 சதவீத நிலம் திபெத்திய உள்ளூர் அரசாங்கத்தின் கைகளில் இருந்தது. உற்பத்தி
கருவிகளை ஆளும் வர்க்கம் தனது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக வைத்திருந்தது.
தற்போது
இந்தியாவில் தங்கி இருக்கக் கூடியவர் 14 ஆவது தலாய்லாமா. 1959 ஆம் ஆண்டுக்கு முன்பு
அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் இருந்த சொத்துக்களை அறிந்தால் அவர்
நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் பெரும் பிரதிநிதி என்பதை எளிதாக புரிந்துகொள்ள
முடியும். 14 ஆவது தலாய்லாமாவிற்கும் அவரது
குடும்பத்திற்கும் 27 மேனர்கள், அதாவது
பாரம்பரிய வீடுகளை உள்ளடக்கிய, மிகப்பெரும் விவசாய
நிலங்களைக் கொண்ட பண்ணைகளை தனக்கு சொந்தமாக வைத்திருந்தார். 30க்கும் மேற்பட்ட மேய்ச்சல் நிலங்கள் தலாய்லாமாவிற்கும் அவருடைய
குடும்பத்திற்கும் சொந்தமாக இருந்தது. இந்த நிலங்களில் வேலை செய்ய 6000 க்கும் மேற்பட்ட அடிமைகள் இருந்தனர். (நிலத்தோடு பிணைக்கப்பட்டு இருந்த
பண்ணை அடிமைகளும் அடக்கம்). இந்த நிலத்திலிருந்தும், மேய்ச்சல்
நிலங்களில் இருந்தும், கால்நடைகளில் இருந்தும் இவருக்கு
கிடைத்த வருமானத்தை பார்த்தோம் என்றால் சுரண்டலின் உச்சத்தை பளிச்சென்று தெரிந்து
கொள்ளலாம்.
ஒவ்வொரு
ஆண்டும் 33,000 “கே” கிங்க் கே ஹைலேண்ட் பார்லி கிடைத்தது. ஒரு கே என்பது 14 கிலோவிற்கு சமமானது. ஆண்டுக்கு 462 டன் ஆகும்.
கிங்க்கே ஹைலேண்ட் பார்லி மலைப்பிரதேசங்களில் விளையக்கூடிய உயர்தர பார்லி.இது
உள்ளூர் முக்கிய உணவாக மட்டும் இருக்கவில்லை பீர் உட்பட மதுபானம் தயாரிப்பதற்காக
அதிகம் பயன்படக்கூடிய தானியமாகும். இதைத் தவிர 2500 கே
அதாவது 35 டன் வெண்ணெய். 300க்கும்
மேற்பட்ட செழிப்பான பசுக்களும், பல நூறு செம்மறி ஆடுகளும்,
பிற விவசாயத்திற்கு பயன்படக்கூடிய கால்நடை மந்தைகளுக்கும்
உடமையாளராக இருந்தார்.
மிக
விலை உயர்ந்த பாரம்பரிய புலு கம்பளி துணிகள் 175 பண்டல்களையும், இரண்டு
மில்லியன்களுக்கு அதிகமான அளவு வெள்ளி பொருட்கள், தலாய்லாமாவின்
குடும்பத்தினர் சொந்தமாக வைத்திருந்தனர். 14 ஆவது தலாய்லாமா 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பட்டுத்துண்டுகள், ரத்தினங்களாலும்
உயர்தர கற்களாலும் உருவாக்கப்பட்ட உயர்தர பர் ஆடைகளையும், நூற்றுக்கு
மேற்பட்ட கடிகாரங்களையும் தனிப்பட்ட முறையில் தனக்கு சொந்தமாக வைத்திருந்தார்.
1959 ஆம் ஆண்டு சீர்திருத்தம் துவங்கிய காலகட்டத்தில் கைகளால் செய்யப்பட்ட 1,60,000 தங்கக் கட்டிகளும், வெள்ளிக்கட்டிகளும்
வைத்திருந்தார். 20,000க்கும் மேற்பட்ட தங்க நகைகளும்
வைத்திருந்தார். இவை அனைத்தும் தங்களிடம் இருந்த அடிமைகள், பண்ணை
அடிமைகள் மூலமாக விவசாயத்திலும், கால்நடைகள் மூலமாகவும்
சுரண்டி சேகரித்த செல்வங்களாகும். 14ஆவது தலாய்லாமா மதத்
தலைவராக, உள்ளுர் அரசு தலைவராக மட்டும் இருக்கவில்லை,
மிகப்பெரிய அடிமை உடமையாளராகவும் இருந்தார்.
திபெத்தில்
ஐந்து சதவீதம் மக்கள் தொகையை மட்டுமே கொண்ட மத தலைவர்களும் நிலப்பிரபுகளும்
உற்பத்தி கருவிகளின் பெரும் பகுதியை வைத்திருந்தனர். திபெத்திய பௌத்த மடங்களும், நிலங்களையும்,
அடிமைகளையும் சொந்தமாக வைத்திருந்தனர். திபெத்திய தலைநகரம் லாசாவில்
மிகவும் புகழ்பெற்ற மிகப்பெரிய மடங்களான சேரா, காண்டெயின்,
ஜைபாங் ஆகிய மூன்று பெரிய மடங்கள் உள்ளன. இந்த மடங்களுக்கு மட்டும் 1,47,000 கியூ என்று சொல்லக் கூடிய பத்தாயிரம் ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலமும்,26 இடங்களில் மேய்ச்சல் நிலங்களும் இருந்தன. சுமார் 40,000 அடிமைகளையும், பண்ணை அடிமைகளையும்
வைத்திருந்தார்கள்.
ஐரோப்பிய
அடிமை முறைகளை விட மிகக் கொடூரமான முறையில் பல காலங்களில் திபெத்திய அடிமை முறைகள்
இருந்தது என்று பல வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளார்கள். 1959 வரை 14 ஆவது தலாய்லாமா இந்த வர்க்கத்தின் தலைவராக இருந்து தான் மக்களை மதம் என்ற
போர்வையில் ஆட்சி செய்து கொண்டிருந்தார். 1959 ஆம் ஆண்டு
அவர் இந்தியாவிற்கு தஞ்சம் புகுந்த காலம் வரை அவர் லாசாவில் 13 மாடிகள், 1000 க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட
பொட்டாலா அரண்மனையில் தான் குடியிருந்தார். அந்த சொர்க்க புரியில் தான் தலாய்லாமா
உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்.
கி.பி.
1649 இல்
இந்த அரண்மனை திறக்கப்பட்ட காலத்தில் இருந்து, தலாய்
லாமாக்களின் குளிர்கால அரண்மனையாக இருந்தது. அடிமை உரிமையாளர் வகுப்பைச் சேர்ந்த
தற்போதைய தலாய்லாமா வளர்க்கப்பட்ட இடமும் இந்த அரண்மனைதான். 1959 இல் நடந்த சீனப்புரட்சியால் அவர், தனது சொர்க்கத்தை
இழந்தார்.
அ.பாக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக