Pages

வெள்ளி, ஜூலை 04, 2025

27.உய்குர் அண்டப்புழுகும் அப்பட்டமான உண்மைகளும்

 

அறிக்கையும்அரசியல்நடவடிக்கையும்

2016 ஆம் ஆண்டில் பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட சேதாரங்களை எல்லாம் சேகரித்து ஜின்ஜியாங் மாநிலத்தின் தலைநகர் உரும்கியில் அரசு கண்காட்சி நடத்தியது. தீவிரவாதிகளின்  கொடுஞ்செயல்களை அம்பலப்படுத்துவதாக அந்தக்  கண்காட்சி இருந்தது. லட்சக்கணக்கான உய்குர் இன மக்களே அதை பார்வையிட்டது மட்டுமல்ல, 675 பேர் நேரடி சாட்சியமாகவும் இருந்தார்கள். நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பினார்கள்.

2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி ஜின்ஜியாங் மாநிலத்தின் உய்குர் பிரிவினைவாதிகள் நடத்திய வன்முறை தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கமிஷனுக்கு சீன மக்கள் குடியரசு 131 பக்கம் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது. அந்த அறிக்கையில் பல்வேறு விவரங்களை தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

ஜின்ஜியாங் மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றங்களையும் தீவிரவாதிகளை ஒழித்து மனித உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் எடுத்த நடவடிக்கைகளை 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை உலக சமுதாயத்திற்கு நேரடி சாட்சியாக சமர்ப்பிப்பதற்கான பணிகளை சீன அரசு மேற்கொண்டது. இந்த நான்கு ஆண்டுகளில் 138 நாடுகளிலிருந்து 2332 பிரமுகர்கள் 172 குழுக்களாக பிரிந்து ஜின்ஜியாங் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டதையும் நேரடியாக பார்த்தார்கள். இதில் ஐக்கிய நாடுகள் சபையின் முகவர்களும் சில நாடுகளின் ராஜதந்திரிகளும் பங்குபெற்று இருந்தனர். இவர்கள் சீன மக்களை நேரடியாக சந்தித்து பேசினார்கள். தீவிரவாதிகளை அரசியல் ரீதியாகவும் மக்கள் ஆதரவோடு தனிமைப்படுத்திய அதே நேரத்தில், குற்றம் இழைத்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதையும் ஒளிவுமறைவின்றி தெரிவித்தார்கள். சீன மக்கள் குடியரசின் சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில் எந்தெந்த சட்டங்கள் எவ்வாறு அமலாக்கப்பட்டது, வழக்குகள் எப்படி நடைபெறுகிறது என்பது உட்பட விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலும் அமெரிக்காவும் மேற்கத்திய ஊடகங்களும் ஜின்ஜியாங் மாநிலத்தில் உய்குர் இன மக்கள் 50 லட்சம் பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று பிரச்சாரம் செய்தன. ஜின்ஜியாங் மாநில அரசு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் உறுப்பினர்களையும் சில நாட்டின் பிரதிநிதிகளையும் மாநிலத்தில் உள்ள நிலைமையை பார்வையிட அழைத்தார்கள். அவ்வாறு வந்த பிரதிநிதிகள் குழு, காஷ்கர் நகரில் இருந்த சிறைச்சாலையையும், மருத்துவமனைகள், பள்ளி வகுப்பறைகள் நூலகங்கள், உணவு விடுதிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் தொழிற்சாலைகள், கூட்டம் நடத்தும் விடுதிகள் போன்ற எண்ணற்ற பகுதிகளை நேரடியாக பார்வையிட்டு, அங்குள்ளவர்களிடம் பேசி நிலைமையை புரிந்து கொண்டனர். தடுப்பு காவல் என்ற பிரச்சாரத்திற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும் சிறைச்சாலை வெளிப்படை தன்மையுடன் அனைத்து ஆவணங்களோடு இருக்கிறது என்பதையும் அந்தக் குழு கூறியதோடு, சீன அரசை பாராட்டியும் சென்றது. இந்நிலையில், சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது என்பதை சீன அரசாங்கம் கவனத்தில் கொண்டு இந்த மாநிலத்தின் பொருளாதார மேம்பாடுகளுக்கு மேலும் கூடுதல் அக்கறை செலுத்த ஆரம்பித்தது. அவற்றை பல தடைகளுக்கு மத்தியில் வெற்றிகரமாகவும் அமலாக்கி உள்ளது.

உய்குர்: வேர்வரை சென்ற சிறப்பு திட்டங்கள்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது மாநாட்டில் பொதுச் செயலாளர் ஜி  ஜின் பிங் சிறுபான்மை மக்கள்,  எல்லைப் பகுதிகளில் உள்ள மக்கள், ஏழைகள் அதிமாக உள்ள பகுதிகளில் குறிப்பாக ஜின்ஜியாங் மாநிலத்தில் முதலீட்டுக்கான தேவைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பேசினார். இதற்காக வடமேற்கில் பெரிய வளர்ச்சி என்ற பொருளாதார ஊக்கத்திட்டத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி தயாரித்தது. இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமலாகி லட்சக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்புகளை பெற்றார்கள்.

2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு வறுமை, வேலையின்மை, கல்வியின்மை போன்றவற்றை ஒழிக்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்திருந்தார். மேற்கண்டவனை அனைத்தும் மதரீதியில் மக்களை சுரண்டுவதற்கு பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நா. சபையின் அறிக்கையை சுட்டிக்காட்டிய சீனா, ஜின்ஜியாங் மாகாணத்தில் எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டது. இதன் மூலம் பிரிவினைவாதிகளையும் தீவிரவாதிகளையும் தனிமைப்படுத்தியது. 1960 ஆம் ஆண்டு சீனா தனது அணுசக்தி சோதனை நிலையத்தை தாரிகாம் படுகையில் அமைத்தது. இங்கு தான் 1964இல் அணு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் எண்ணெய் மற்றும் எரிசக்தி துறையில் கூடுதலாக முதலீடு செய்யப்பட்டது. ஒரு காலத்தில் விவசாயம் சார்ந்த இந்தப் பகுதியை 1949 ஆம் ஆண்டுக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சியின் மையமாக மாற்றினார்கள். சீனாவின் எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தியில் 60 சதவீதம் இந்த மாநிலத்தில் நடைபெறுகிறது. இந்த மாநிலத்தின் வழியாகத்தான் மத்திய ஆசியாவிற்கும் அதற்கு அப்பால் உள்ள நாடுகளுக்கும் குழாய்கள் மூலம் எண்ணெய் வளங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது.

2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிற்பயிற்சி கூடங்களை உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ற வகையிலும், தேவைகளை கணக்கில் கொண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் சிறு உற்பத்தியாளர்கள் ஊக்குவிக்கப்பட்டார்கள். அவர்கள் உற்பத்தி செய்த பொருள்களுக்கான சந்தைகளையும் அரசாங்கம் உருவாக்கிக் கொடுத்தது. இது வறுமையில் வாழக்கூடிய, வேலைவாய்ப்பின்றி இருக்கக்கூடிய மக்களை தீவிரவாதத்தை நோக்கி செல்வதை தடுத்தது.

மாநிலத்தின் பட்ஜெட் செலவுகளில் 70 சதவீதம் வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவ நலன், சமூக பாதுகாப்பு, குழந்தைகள் காப்பகம், முதியோர் காப்பகம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக செலவழிக்கப்பட்டது. சீனாவின் இதரப் பகுதிகளில் பிரம்மாண்டமான சாலைகள் அமைக்கப்பட்டு இருந்தது. சீனாவின் உலகின் மிகப்பெரிய திட்டமான பெல்ட் அன்ட் ரோடு திட்டம் இந்த மாகாணத்தின் வழியாக செல்கிறது. எனவே மாகாணத்தின் அனைத்து சாலைகளையும் சீனாவின் பிரதான சாலைகளோடு இணைத்தது மட்டுமல்ல மக்களுக்கான பஸ் போக்குவரத்தை பன் மடங்கு உயர்த்தினார்கள். அதற்கு மேலாக இந்த மாநிலத்தின் மலைப்பிரதேசங்களிலும் கிராமங்களிலும் இருக்கக்கூடிய மக்கள் அனைவருக்கும் இணையதள வசதிகளை முழுமையாக ஏற்பாடு செய்து கொடுத்தார்கள் இதன் மூலம் குறிப்பாக காணொலிகள் மூலம் இந்த மக்கள் உலகத்துடன் இணைக்கப்பட்டார்கள்.

சீனாவின் சில மாநிலங்களைப் போல் இங்கும் வறுமை இருந்தது. சீனாவில் ஒட்டுமொத்தமாக கடந்த 12 ஆண்டுகளில் வறுமை முழுமையாக ஒழிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜின்ஜியாங் மாநிலத்தில் வறுமை ஒழிக்க சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டது.த்திட்டத்தின் மூலமாக 35 மாவட்டங்களில் இருந்த  3,666 கிராமங்களில் இருந்த 31 லட்சம் மக்களை வறுமை கோட்டில் இருந்து மீட்டெடுத்தார்கள்.

2014 ஆம் ஆண்டு மாநில அரசு அறுபதாயிரம் ஊழியர்களை பன்னிரண்டாயிரம் பணி குழுக்களாக பிரித்து கிராமப்புற மக்களின் வாழ்நிலைகளை நேரடியாக கண்டுபிடித்து அதற்கான மாற்றங்களை உருவாக்குவதற்கான செயல் திட்டத்தை அமலாக்கியது. இந்தத் திட்டத்தின் படி 2021 ஆம் ஆண்டு 24,133க்டேரில் மரங்கள் நடப்பட்டது. 15,533 எக்டேரில் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டது. மேலும் 45,133 எக்டேரில் பழத் தோட்டங்கள் அமைக்கப்பட்டு  மக்களுக்கு வேலை வழங்கப்பட்டது. இதே காலத்தில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களும் 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களும் பொருளாதார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.

மேற்கண்ட முயற்சிகள் மூலம் கிடைக்கும் பலன் சில மாதங்கள் காலதாமதம் ஆகலாம் என்பதை அறிந்து கொண்டு மற்றொரு திட்டத்தையும் நிறைவேற்றினார்கள். மக்களின் சிரமங்களுக்கு உடனடி உதவி என்ற பெயரில் 2021 ஆம் ஆண்டு 100 கோடி யுவான் செலவில் 8 லட்சத்து ஐம்பதாயிரம் குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இதே ஆண்டில் சுமார் 400 கோடி யுவான் தொகையை பல்வேறு வழிகளில் மக்களுக்கு மானியமாக வழங்கினார்கள். இக்காலத்தில் அரசால் அமைக்கப்பட்ட பனிரெண்டாயிரம் குழுக்களால் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டதில் 32 லட்சம் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இப்படி பொருளாதாரத் திட்டங்களின் வளர்ச்சி நேரடி பயனை கொடுத்துக் கொண்டிருக்கிற பொழுது மற்றொரு திட்டத்திற்கான முடிவுகள் எடுத்து அமலாக்கினார்கள். 2016 ஆம் ஆண்டு சுமார் பதினோரு லட்சம் அரசு ஊழியர்கள், ஜின்ஜியாங் மாகாணத்திற்கு உள்ள நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் சென்று பல்வேறு இன குழுக்கள் இணைந்து வாழ்வதற்கான பல நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சிகள் மூலம் இனக்குழுக்கள் மத்தியிலான உறவுகள் மேம்படுத்தப்பட்டது. கலவரங்களால் ஏற்பட்ட வெறுப்புக்கள் மறைந்தன.

இதே ஆண்டு அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் சுமார் 100 கோடி யுவான் மதிப்புள்ள நிதி வசூலித்தும், ஆறு கோடி யுவான் மதிப்புள்ள, பொருட்களை வசூலித்தும் அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் நேரடியாக உதவிகளை செய்தார்கள். இந்த பொருளாதார நடவடிக்கைகள் அனைத்துமே ஜின்ஜியாங் மாநிலத்தின் கடை மட்டத்தில் இருக்கக்கூடிய மனிதனுக்கும் சென்று சேர்ந்தது. வறுமை ஒழிப்பு என்பதை வெறும் சோற்றுப் பிரச்சினையாக பார்க்காமல் உணவு, இருக்க இடம், வேலை வாய்ப்பு, நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் வசதிகள் இவை அனைத்தும் கிடைக்கச் செய்வது தான் வறுமை ஒழிப்பு என்ற முறையில் சீனாவில் இந்தத் திட்டத்தை சிறுபான்மை மக்களிடம் நிறைவேற்றினார்கள்.

கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல்

ஜின்ஜியாங் மாநிலத்தில் உய்குர் உட்பட பல இனக்குழுக்கள் வாழ்கின்றன. இந்த இனக்குழுக்களின் கலாச்சார பாரம்பரியங்களை பாதுகாப்பதையும் இந்த மாநில அரசு செய்து வருகிறது இம் மக்களுக்காக கல்விச்சாலைகளில் அவர்களின் மொழியில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளது. இந்த மக்களின் பாரம்பரிய விழாக்களை நடத்துவதற்கான உதவிகள் அனைத்தையும் அரசு செய்துள்ளது. இம்மக்கள் பயன்படுத்திய பாரம்பரியமான பொருட்களின் பட்டியல் ஏற்கனவே பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும், இக்காலத்தில் தேசிய பாரம்பரிய பொருட்களின் பட்டியலில் 96 பொருட்களை சேர்த்து உள்ளார்கள். இதேபோன்று மாநிலத்தில் உள்ள கலாச்சார பாரம்பரிய பொருட்களை பாதுகாக்கும் மியூசியத்தில் 315 பொருட்களை பட்டியலிட்டு பாதுகாத்து வருகிறார்கள். இது மக்களின் இலக்கியங்களை இனக்குழு மொழிகளிலேயே வெளியிட்டும் மேலும் 9 மொழிகளில் வெளியிட்டும் பாதுகாத்து வரப்படுகிறது.

சோலிசத்தின் விரோதிகளால் கட்டமைக்கப்பட்ட அனைத்தும் தகர்க்கப்பட்டு உய்குர் இன மக்களின் வாழ்க்கையை உயர்த்தி பிடித்து அவர்களின் உரிமைகளை உரிய முறையில் அங்கீகரித்து ஒன்றுபட்ட சீனாவின் உணர்வாக மாற்றியுள்ளார்கள். இருந்தாலும் ஏகாதிபத்திய ச(க்)திகள் விக்கிரமாதித்தன் கதைபோல் மீண்டும் மீண்டும் சீனாவை வீழ்த்துவதற்கான பொய் பிரச்சாரங்களை செய்து கொண்டே இருக்கின்றன.

சீனாவில் உய்குர் மக்களின், மக்கள் தொகையை திட்டமிட்டு குடும்ப கட்டுப்பாடு செய்து குறைக்கிறார்கள் என்று ஒரு பெரும் பிரச்சாரத்தை இஸ்லாமிய நாடுகள் மத்தியில் செய்து கொண்டிருக்கிறார்கள். 1975 ஆம் ஆண்டு சீனாவில் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் கொண்டுவரப்பட்டது. 1992 ஆம் ஆண்டு ஜின்ஜியாங் மாநிலத்திற்கு ஏற்ற வகையில் பல தளர்வுகளுடன் குடும்ப கட்டுப்பாடு திட்டம் உருவாக்கப்பட்டு அமலாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் படி இந்த மாநிலத்தில் நகர் புறப்பகுதியில் உள்ள ஹான் சீனர்கள் ஒரு குழந்தையும் கிராமப்புறத்தில் உள்ள ஹான் சீனர்கள் இரு குழந்தைகளையும் பெற்றுக் கொள்ளலாம்

அதே நேரத்தில் இந்த மாகாணத்தில் இருக்கக்கூடிய சிறுபான்மை மக்களான உய்குர் மக்கள் உட்பட அனைத்து சிறுபான்மை மக்களும் நகர்ப்புறங்களில் இரண்டு குழந்தைகளும், கிராமப்புறங்களில் மூன்று குழந்தைகளும் பெற்றுக் கொள்ளலாம் என்று திட்டம் உருவாக்கப்பட்டு அமலாக்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை 25 ஆண்டுகள் திட்டம் அமலாக்கப்பட்ட பிறகு 2017 ஆம் ஆண்டு பெரும் பொருளாதார மேம்பாடுகளை அடைந்து சமநிலை ஏற்பட்ட பிறகு குடும்ப கட்டுப்பாடு பொதுத்திட்டம் அமலாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் படி நகர்ப்புறங்களில் அனைவரும் இரு குழந்தைகளும் கிராமப்புறங்களில் அனைவரும் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதே போன்று தான் மக்கள் தொகை குறைந்துவிட்டது என்ற கட்டுக்கதைகளின்  குட்டுக்களும் உடைத்தெறியப்பட்டது. சீனாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1953ம் ஆண்டு துவங்கியது. அந்த ஆண்டு ஜின்ஜியாங் மாநிலத்தின் மக்கள் தொகை 47 லட்சம் ஆகும். 2020 ஆம் ஆண்டு 2 கோடியே 50 லட்சம் என்ற அளவில் உயர்ந்தது. 1953ம் ஆண்டு காலத்தில் உய்குர் இன மக்களின் மக்கள் தொகை 35 லட்சம் ஆகும். 2020 ஆம் ஆண்டு ஒரு கோடியே 10 லட்சம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இம்மக்களின் சராசரி வாழ்நாள் 1949 இல் 30 வயதாக இருந்தது. 2020 ஆம் ஆண்டு 75.65  என்ற அளவில் உயர்ந்துள்ளது.

இந்த மாகாணத்தில் சிறுபான்மை மக்களை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு கேமராக்களை எல்லா இடங்களிலும் சீன அரசு வைத்து அடக்குமுறை செய்கிறது என்று அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பிரச்சாரம் செய்கின்றன.  கண்காணிப்பு கேமராக்கள் பொது பாதுகாப்பானது, எந்த மக்களையும் குறி வைத்தது இல்லை என்பதை சீனா தெளிவாக விளக்கி இருக்கிறது. கண்காணிப்பு கேமரா என்பது உலக வழக்கத்தில் ஒன்றாக மாறிவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. 2010 ஆம் ஆண்டு கணக்கின்படி பிரிட்டனில் மட்டும் 42 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதே ஆண்டில் உலகில் அமைக்கப்பட்டிருந்த ஒட்டுமொத்த கண்காணிப்பு கேமராக்களில் நான்கில்  ஒரு பகுதி பிரிட்டனில் மட்டும் இருந்தது. அப்படி என்றால் பிரிட்டன் மக்களை கட்டுப்படுத்துவதற்கும் அடக்குவதற்கும் கண்காணிப்பு கேமராவை பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்ட முடியும் அல்லவா? அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அனைத்து தெருக்களிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பாதசாரிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது மட்டும் அல்ல அவர்களின் செல்ஃபோன்களை  துப்பறியவும் விபரங்களை சேகரிக்கவும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையில் இருந்த தொழில்நுட்பவியலாளர் எட்வர்ட் ஸ்நோடன்,  நாசாவின் மூலம் இது நடக்கிறது என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறார். சீன விரோதிகளின் கண்காணிப்பு கேமரா அவதூறு பிரசாரமும்  சாயம் வெளுத்து விட்டது.

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஆஸ்திரேலிய ஸ்டேட்டர்ஜி பாலிசி இன்ஸ்டியூட் என்ற அமைப்பு செயற்கைக்கோளில் கண்காணித்ததாக 380 இடங்களின் படத்தை வெளியிட்டு ஜின்ஜியாங் மாகாணத்தில் 20 லட்சம் மக்களை தடுப்பு காவலில் வைத்திருப்பதாக ஒரு செய்தியை வெளியிட்டது. ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் கட்சியின் தொலைக்காட்சி பிரிவு ஆஸ்திரேலியா அலர்ட் சர்வீஸ் என்ற நிறுவனம் இவை அபத்தமானது என்று அம்பலப்படுத்தி உள்ளது. இந்தப் படங்கள் அனைத்தும் ஜின்ஜியாங் மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், மக்கள் வாழும் குடியிருப்புகள் மற்றும் கடைகள் என்று அவற்றை வெளியிட்டதும் குறிப்பாக இரண்டு படங்கள் அந்த மாநிலத்தின் தொழில்நுட்பத் துறை அலுவலகமும், மற்றொன்று வீரர்களின் நலன் காக்கும் துறை அலுவலகம் என்பதையும் அம்பலப்படுத்தியது. போலி செய்திகளை பரப்புவதில் ஏகாதிபத்தியம் ஈடு இணையற்றது.

ஜின்ஜியாங் மாநிலத்தில் தங்களது பாச்சா (சதி வேலைகள்)  பலிக்காததற்கான அடிப்படைக் காரணம் அங்கு ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி என்பதை புரிந்து கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம், அதையும் சீர்குலைப்பதற்கான முயற்சியில் இறங்கியது. ஜின்ஜியாங் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் கட்டாய உழைப்புக்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்ற காரணத்தைச் சொல்லி 2021 ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரஸ் உய்குர் கட்டாய தொழிலாளர் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. இதன் மூலம் அமெரிக்கா பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பொருட்களை வாங்குவதற்கு தடை விதித்தது.

ஜின்ஜியாங் மாநிலத்தில் தற்போது 2 கோடியே 60 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு உய்குர் இன மக்களும், கசாக் இன மக்களும் ஆவார்கள். இவர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் செயலாகத்தான் அமெரிக்காவின் சட்டம் உள்ளது. கட்டாய தொழிலாளர் திட்டங்களில் ஈடுபட்டதாக 80க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்பு துறை தடை செய்துள்ளது. சீனா இந்தத் தடைகளை எல்லாம் முறியடித்து இதர நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகப்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவின் ஒரு தலைப்பட்சமான முடிவுகளுக்கு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பட்டியலில் உள்ள ஜவுளி, பருத்தி, ஆற்றல், ஒளி மின்னழுத்தம், சிலிக்கான், தக்காளி பதப்படுத்தல் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதற்கான வழக்குகளை தொடுத்து உள்ளது. ஜின்ஜியாங் மனித உரிமைகள் குறித்த குற்றச்சாட்டுகளை போலியான முறையில் தயாரித்து வழங்கிய ஜெர்மன் ஆராய்ச்சியாளர் மீது வழக்கு தொடுத்து உள்ளது.

சீனாவில் உள்நாட்டு குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு பல வழிகளிலும் பொய் பிரச்சாரங்கள், செயற்கைக்கோள் போலியான படங்கள், எல்லைப்புறங்களில் தலையிடுவது என்ற எண்ணற்ற தாக்குதல்களையும் மீறி சீன மக்கள் குடியரசு சீன மக்களை ஒற்றுமைப்படுத்தியது மட்டுமல்ல, சிறுபான்மை மக்களையும் சீன தேசம் என்ற உணர்வில் ஒன்றிணைத்திருக்கிறது. இவை சீன மக்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு, கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள், பாரம்பரிய பாதுகாப்பு, சுதந்திரம் போன்ற அடிப்படையான மனித மாண்புகளை உயர்த்திப் பிடிப்பதிலிருந்து இந்த ஒற்றுமையை உருவாக்கி இருக்கிறார்கள். ஏகாதிபத்தியம் இருக்கும் வரை சோலிசத்தின் வளர்ச்சியை அனுமதிக்காது. ஏகாதிபத்தியம் இருக்கிற வரை சோசலிசம் முழு வெற்றியடைய முடியாது. எனவே இந்த போரில் சீனா சோசலிசத்தை நோக்கி முன்னேறிக் கொண்டு வருகிறது.

அ.பாக்கியம்

 

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

27.உய்குர் அண்டப்புழுகும் அப்பட்டமான உண்மைகளும்

  அறிக்கையும்அரசியல்நடவடிக்கையும் 2016 ஆம் ஆண்டில் பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட சேதாரங்களை எல்லாம் சேகரித்து ஜின்ஜியாங் மா...