Pages

புதன், நவம்பர் 19, 2025

47 திபெத்: மக்களுக்கான கல்வி, மருத்துவம், வேலை சமூக பாதுகாப்பு

 

அ.பாக்கியம்

சோஷலிச கொள்கையை ஏற்றிருக்கக் கூடிய ஒரு அரசு உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக என்றென்றும் பாடுபடும். திபெத்தில் உள்ள அனைத்து மக்களுக்கான சமூக பாதுகாப்பை உத்திரவாதப்படுத்தக்கூடிய கட்டமைப்புகளை சோஷலிச கொள்கையை ஏற்றுள்ள ஒரு அரசு உருவாக்கி உள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம், பொது சுகாதாரம், வாழ்விடம் என அனைத்து வகையிலும் ஒருங்கிணைந்த சமூக பாதுகாப்பை சீன மக்கள் குடியரசு திபெத்திய மக்களுக்கு வழங்கி உள்ளது. திபெத்திய பகுதியில் மிக உயர்ந்த தரமான உள்கட்டமைப்பை உருவாக்கிய அரசு மக்களின் உதவியுடன் அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பையும் ஏற்படுத்தி உள்ளது

பூஜ்ஜியத்தில் இருந்து சதத்தை நோக்கி

திபெத்தை செம்படை விடுதலை செய்த பொழுது 95 சதவீதம் மக்கள் கல்வி அறிவற்றவர்களாக இருந்தார்கள். குறிப்பிடத்தக்க அல்லது விரல்விட்டு எண்ணக்கூடிய சில பள்ளிக்கூடங்கள் மட்டுமே இருந்தது. குறிப்பாக திபெத் பிராந்தியம் முழுவதும் வெறும் பத்து பள்ளிக்கூடங்கள் மட்டுமே இருந்தன. இந்தப் பள்ளிக்கூடங்களும் நிலப் பிரபுக்களுக்காக உருவாக்கப்பட்டவை.

அவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக மட்டும்தான் இந்த பள்ளிக்கூடம் பயன்பட்டது. ஏன் அவர்கள் படிக்க வேண்டும் ? எழுத்தறிவை தெரிந்து கொள்வதற்கும், கணக்குகளை புரிந்து கொள்வதற்கும், அரசுப் பணிகளை செய்வதற்கும் கடிதப் போக்குவரத்திற்காகவும் அடிப்படை கல்வி தேவைப்பட்டது தான். இதற்காக இந்தப் பள்ளிக்கூடங்கள் நடத்தப்பட்டன.

மேற்கண்ட பள்ளிக்கூடங்கள் தவிர ஆயிரக்கணக்கான திபெத்திய பௌத்த மடாலயங்கள் இருந்தன. இந்த மடாலயங்களில் கல்வி சொல்லிக் கொடுக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க மத தத்துவங்களை கற்றுக் கொடுப்பதாக இருந்தது. மதத் தத்துவத்துடன் திபெத்திய மருத்துவம், ஜோதிடம் போன்றவைகளையும் கற்றுக் கொடுத்தார்கள். இந்தக் கல்வியை கற்றவர்கள் தான் புத்த துறவிகளாகவோ அல்லது லாமாக்களாகவோ பட்டம் பெற்றார்கள். மடாலயங்கள் நடத்தும் இந்த கல்விக்கும் பொது மக்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. அது நவீன மதசார்பற்ற கல்வியும் அல்ல. எனவே மடாலயங்கள் கல்வி கற்றுக் கொடுக்கும் இடங்கள் என்று இருந்தாலும் நடைமுறையில் பொதுமக்களுக்கான கல்வியறிவு பூஜ்ஜியமாகவே இருந்தது.

1950 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு புரட்சி வெற்றி பெற்றவுடன் சீன மக்கள் குடியரசு திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் ஒரு நவீன கல்வி முறையை உருவாக்கியது. பாலர் பள்ளிகள், தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகள், தொழிற்கல்விகள், தொழில்நுட்ப பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள், சிறப்பு கல்விகளை கற்றுக் கொடுக்கும் நிறுவனங்கள் என நவீன முறைகளை உள்ளடக்கிய கல்வி வலைய மைப்பை ஏற்படுத்தியது.

2023 ஆம் ஆண்டு தரவுகளின் படி திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் தேவையான அளவிற்கு கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன. பாலர் பள்ளிகள் 2,399 இருந்தன. சீனாவில் கட்டாய கல்வித் திட்டத்தின் அடிப்படையில் தொடக்க கல்வி ஆறு ஆண்டுகளும் நடுநிலைக் கல்வி மூன்று ஆண்டுகள் என ஒன்பது ஆண்டுகள் கட்டாய கல்வி படிக்க வேண்டும். இதற்காக திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் 1,531 பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. தொழில் வல்லுனர்களை உருவாக்கக்கூடிய உயர்நிலைப் பள்ளிகள் 93 பள்ளிகளும், 7 பல்கலைக்கழகங்களும் அதன் கீழ் செயல்படும் பல கல்லூரிகளும் இருக்கின்றன. மொத்தமாக 36 லட்சம் மக்கள் தொகை கொண்ட திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் 4,300 க்கு மேற்பட்ட கல்வி நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் சுமார் 9.44 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள்.

2012 ஆம் ஆண்டு முதல் திபெத்தில் மாணவர்களின் விடுபடுதல் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது. பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஒவ்வொரு மாணவருக்கும் கல்வியின் அனைத்து நிலைகளிலும் அரசு நிதி உதவி செய்கிறது. பாலர் கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதம் 89.52% ஆகும். கட்டாய கல்விக்கான நிறைவு சதவீதம் 97.73 ஆகும். சீனியர் உயர்நிலைப் பள்ளிகளில் மொத்த சேர்க்கை விகிதம் 91.07% ஆகும். 2010 ஆம் ஆண்டு ஆண்டு நடத்தப்பட்ட அந்நாட்டின் ஏழாவது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திபெத்தில் ஒரு லட்சம் மக்களுக்கு 5,507 பட்டதாரிகள் இருந்தனர். இதுவே 2020 ஆம் ஆண்டு 11,019 என்ற அடிப்படையில் உயர்ந்தது. இந்த பிராந்தியத்தில் புதிதாக பணியில் சேருபவர்கள் 13.1 ஆண்டுகள் முறையான கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள்.

2012 முதல் 2022 வரை சீன அரசு திபெத் பிராந்தியத்தில் கல்வியை மேம்படுத்துவதற்காக 251.51 பில்லியனுக்கும் அதிகமான ஆர்எம்பி யுவான் பணத்தை ஒதுக்கியது.

திபெத்தில் உள்ள கல்வி நிலையங்களில் சீன மொழி, திபெத்திய மொழி என இரு மொழிக் கொள்கை கற்பிக்கப்படுகிறது. திபெத்திய மொழி குறித்த தனி பாடங்களும் உள்ளன. திபெத்திய கல்வி நிலையங்களில் கணிதம், அறிவியல், இலக்கியம், திபெத்திய வரலாறு, மற்றும் திபெத்திய கலாச்சாரம் ஆகிய பாடத்திட்டங்கள் உள்ளன. இவற்றுடன் கூடவே கருத்தியல் கல்வி அதாவது தேசபக்தி, மக்களின் பிராந்திய ஒருமைப்பாடு குறித்த கல்வியும் பாடத்திட்டங்களாக கற்பிக்கப்படுகிறது.

திபெத்திய பிராந்தியத்தில் தொலைதூரத்தில் வாழக்கூடிய மக்களுக்காகவும் நாடோடி வாழ்க்கை நடத்தக்கூடிய கால்நடை மேய்ப்பவர்களுக்காகவும் போர்டிங்(விடுதி) பள்ளிகளை திபெத் அரசாங்கம் நடத்துகிறது. இதற்கான அனைத்து விதமான செலவுகளையும் அரசு ஏற்றுக்கொள்கிறது. திபெத் கல்விக்கு அரசாங்கம் பொது மானியத்தை வழங்குகிறது. கிராமப்புற மாணவர்களின் கட்டாய கல்வி படிக்கிற காலகட்டத்தில் படிப்பு செலவுகளும், புத்தகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்தும் அரசு ஏற்றுக்கொள்கிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக குடும்பங்களுக்கு சிறப்பு நிதி உதவியும், ஊக்கத்தொகையும் அரசாங்கம் அளித்து வருகிறது.

திபெத்தில் மற்றொரு வகையான சிறப்புப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. நடுநிலைப் பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயில்வதற்காக, பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காக சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. 1985 ஆம் ஆண்டு முதல் இந்த முறை செயல்படுகிறது. இதனை நெய்டி கல்வி முறை என்று அழைக்கிறார்கள். இதில் தேர்ச்சிப் பெறக்கூடிய மாணவர்கள் திபெத்திய பகுதியிலிருந்து பெய்ஜிங், ஷாங்காய், செங்டு போன்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு உயர்தரம் வாய்ந்த கல்வியை பெறுகிறார்கள். இங்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தரமாக மேம்ப்படுத்தக்கூடிய முறையில் திறமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகிறார்கள்.

 

மேற்கண்ட விடுதி அடிப்படையிலான கல்வி முறைகளையும், நெய்டி சிறப்பு கல்வி திட்டத்தையும் பிற்போக்கு வாதிகள், தலாய்லாமா ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். காரணம் விடுதிக்குச் சென்றபிறகு, உயர்கல்வி கற்றவர்கள் பிற்போக்கு கருத்துக்களில் இருந்து விடுபடுகிறார்கள் என்பதுதான். குறிப்பாக திபெத்தில் தொலைதூரத்தில் இருக்கக்கூடிய மாணவர்களில் 70 சதவீதத்திற்கு மேல் அரசு நடத்தக்கூடிய விடுதிகளில் தங்கி படிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது அடிமை சமுதாயத்திலிருந்து அறிவுப்பூர்வமாக திபெத் மக்களை விடுதலை செய்வதற்கான ஒரு வடிவமாக இன்று இருக்கிறது. ஆகவேதான் இந்த கல்வி முறைகளை கடுமையாக பிற்போக்கு வாதிகள் எதிர்க்கின்றனர்.

சீன மக்கள் குடியரசின் மூலம் நவீன கல்வி முறைகள் திபெத்திற்குள் வளர்ந்த பிறகு திபெத்தில் நவீன அறிவும், அறிவியல், மற்றும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டவர்கள் அதிகமாய் இருக்கிறார்கள். இது இவர்களின் வாழ்க்கைத் தரத்தை பல மடங்கு மேம்படுத்தி உள்ளது. இரு மொழி கல்விக் கொள்கையும் சீனாவில் எங்கு சென்றாலும் வெற்றி பெற முடியும் என்ற முறையில் நடத்தக்கூடிய நெய்டி பள்ளிகளும் புதிய நம்பிக்கையை உருவாக்கி உள்ளது. திபெத்திய மொழியையும் கலாச்சாரத்தையும் கல்வி முறைக்குள்ளேயே பாதுகாத்து அவற்றின் மேம்படுத்தக்கூடிய பணிகளையும் சீன மக்கள் குடியரசு செய்து வருகிறது.

மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்

மருத்துவமும், பொது சுகாதாரமும் திபெத் மக்களின் வாழ்நாளை அதிகப்படுத்தியது மட்டுமல்ல மக்கள் தொகையையும் வீழ்ச்சியிலிருந்து வளர்ச்சியை நோக்கி கொண்டு வந்து உள்ளது. 1950 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு திபெத் மக்களுக்கு எந்தவிதமான மருத்துவமனைகளோ பொது சுகாதார முறைகளோ இல்லை. குறிப்பாக பண்ணை அடிமைகள் சிகிச்சை பெறுவதற்கான உரிமைகள் கூட இல்லை. 1950 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக சீர்திருத்தம் ஆரம்பித்தவுடன் மருத்துவம் மற்றும் பொது சுகாதார துறைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவமனைகளை திட்டமிட்டு உருவாக்கினார்கள். அடிப்படை மருத்துவ சேவைகள், மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, திபெத்திய மருத்துவ முறை அவற்றின் சிகிச்சை முறை ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான மருத்துவ கட்டமைப்பும், பொதுசுகாதார அமைப்பையும் சீன மக்கள் குடியரசு நிறுவியது. சீனாவின் இதர பகுதிகளில் இருந்தும், அருகாமையில் இருந்த நகரங்களில் இருந்தும் மருத்துவ நிபுணர்களின் குழுக்கள் திபெத்திய பிராந்தியத்திற்குள் அனுப்பப்பட்டு மருத்துவத் துறையை மேம்படுத்தினார்கள். இதனால் பல மருத்துவமனைகள் தரத்துடன் செயல்பட தொடங்கியது. புதிய மருத்துவமனைகளும் உருவாக்கப்பட்டன.

திபெத்திய பிராந்திய மக்கள் மாவட்ட தலைநகர சிறப்பு மருத்துவமனைகளில் மிகக் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய 400 கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு மேலே சுமார் 2,400 சாதாரண நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவைகள் அனைத்திற்கும் தாங்கள் வாழக்கூடிய உள்ளூர் அளவிலான மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான மருத்துவ அமைப்புகளும், மருத்துவர்களும், மருந்துகளும் கிடைக்கக் கூடிய முறையில் மருத்துவ துறைகள் மேம்பட்டது.

1950ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் பிரசவத்தின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 5000 ஆக இருந்தது. 2022 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு 45.8 என்ற அளவில் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டது. மேலும் இதே கால இடைவெளியில் குழந்தைகளின் இறப்பு விகிதம் 430% லிருந்து 7% என்ற அளவில் குறைந்துள்ளது. திபெத் மக்களின் சராசரி ஆயுள் காலம் 1950 களில் 35 ஆண்டுகள் என்பதிலிருந்து இன்று 72.19 என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.

இப்பிராந்திய மக்கள் செய்து வந்த தொழில், வேலை காரணமாக பிறக்கும் பொழுதே அவர்களை பாதிக்கக்கூடிய மிக முக்கியமான நோய்களான இதய நோய், கண் புரை நோய் உள்ளிட்ட அனைத்தும் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளன. நீரின் தரத்தையும், உணவு முறைகளை மாற்றியதும், உள்ளூரில் குடியிருப்புகளை மேம்படுத்தியதும், இந்த நோய்களை கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகித்தது.

தற்போது திபெத்தில் பல்வேறு வகையான 1642 மருத்துவ நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 11 நிறுவனங்கள் உயர்ந்த தரம் கொண்ட மருத்துவ நிறுவனங்களாகும். ஆயிரம் பேருக்கு 4.9 மருத்துவ படுக்கைகள் உள்ளது. ஆயிரம் பேருக்கு 5.89 மருத்துவ ஊழியர்கள் இருக்கிறார்கள். இந்த மருத்துவ சேவைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் பொது சுகாதாரத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

1950 ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய 200 ஆண்டுகளில் திபெத்திய மக்கள் தொகையில் எண்ணிக்கை 10 லட்சம் பேர் குறைந்து போனார்கள். மருத்துவ வசதியும், பொது சுகாதார சீர்கேடுகளும் மக்கள் தொகையில் பெரும் சரிவை ஏற்படுத்தியது. ஆனால் ஜனநாயக சீர்திருத்தம் ஆரம்பித்து 15 ஆண்டுகளில் 4 லட்சம் மக்கள் தொகை அதிகரிப்பு நடந்தது. மிகவும் உட்புறப் பகுதியான காடுகளில் வாழ்ந்த மான்பாஸ், லோபாஸ், டெங்ஸ் போன்ற சிறிய இனக்குழுக்களின் மக்கள் தொகை உட்பட இக்காலத்தில் அதிகரித்துள்ளது.

சமூக பாதுகாப்பின் மற்றொரு முக்கிய அம்சம் காப்பீட்டு முறைகள் ஆகும். முதியோர்களுக்கான காப்பீடு, மருத்துவ காப்பீடு, வேலையின்மைக்கால காப்பீடு, வேலைஇடங்களில் ஏற்படும் காயம் தொடர்பான காப்பீடு, மகப்பேறு காப்பீடு என ஐந்து வகையான காப்பீட்டு முறைகளை திபெத் பிராந்தியத்தில் அமல்படுத்துகிறார்கள். இந்தத் திட்டங்களின் மூலம் திபெத் மக்கள் தொகையில் 3.43 மில்லியன் மக்கள் அதாவது 36 லட்சம் மக்கள் தொகையில் 34 லட்சம் மக்கள் காப்பீட்டு முறையில் பாதுகாக்கப்படுகிறார்கள். இது மொத்த மக்கள் தொகையில் 95% க்கு மேலாகும்.

சமூக பாதுகாப்பின் மற்றொரு அம்சம் மதம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு செய்யக்கூடியதாகும். திபெத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து துறவிகளுக்கும் கன்னியாஸ்திரிகளுக்கும் மருத்துவ காப்பீடு ஓய்வூதிய திட்டங்கள் வாழ்வாதார உதவித்தொகை விபத்து காயம் காப்பீடு சுகாதார சோதனை செலவுகள் போன்றவற்றை ஈடுகட்ட அரசாங்கம் காப்பீடு திட்டத்தை வழங்கி உள்ளது. துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கான படிப்பு வாழ்க்கை நிலைமைகளை நவீன மயமாக்குவதற்கு மதங்களையும் கோயில்களின் உள்கட்டமைப்பையும் மேம்படுத்தி உள்ளது.

திபெத்தில் பாரம்பரியமாக மருத்துவ முறைகள் மக்களால் பயன்படுத்தப்பட்டது. அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு மருத்துவம் கிடைக்காதபோது அவர்களால் இவை கண்டுபிடித்து பயன்படுத்தப்பட்டன. அவற்றையும் சிகிச்சைக்கு பயன்படுத்துவது என்ற முறையில் சீன மக்கள் குடியரசு மிகவும் அத்தியாவாசிய மருந்துகள் பட்டியலில் அதிகமான திபெத் மருந்துகளை சேர்த்துள்ளது. எந்த ஒரு மருத்துவ முறைகளும் மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் இருந்தால் அதை அழிந்து விடாமல் மேம்படுத்தக்கூடிய செயலின் ஒரு வெளிப்பாடு தான் பாரம்பரிய திபெத்திய மருத்துவத்தை பயன்படுத்துவதாகும்.

மேற்கண்ட முறையில் பல அடுக்கு சமூக பாதுகாப்பு முறை திபெத் சமூகத்தில் பரவலாக அமுலாக்கப்படுவதால் மக்களின் வாழ்க்கை தரம், சராசரி வாழ்நாள் மேம்பட்டு வந்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற குடியிருப்பாளர்களின் அடிப்படை மருத்துவ காப்பீட்டு முறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது. இந்த காப்பீட்டு அட்டைகளை மாகாணங்கள் கடந்து செல்கிற பொழுதும் பயன்படுத்தலாம் என்ற சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டு திட்டத்திற்கு நிலையான மானியம் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு ஆண்டுக்கு 585 ஆர்எம்பி யுவான் அதாவது சுமார் 8000 ருபாய் வழங்கப்படுகிறது. தொடர்ந்து சமூக பாதுகாப்புக்கான முறைகளில் குறைகள் வரும்பொழுது களைந்து முன்னேறுகிறார்கள்.

முழுமையான வீட்டு வசதி

சோஷலிஸ்ட் சமூகத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று வாழ்விட வசதி. திபெத் மக்களுக்கு வாழ்விட வசதியை செய்வதற்கு சீன மக்கள் குடியரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. நகர்ப்புறங்களில் மலிவு விலை வீடுகளை அரசாங்கம் கட்டிக் கொடுத்தது. கிராமப்புறங்களில் மக்கள் வாழமுடியாத இடங்களில் இருந்து வாழத் தகுதியான இடங்களுக்கு மாறுவதற்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்தனர்.

இது மட்டுமல்ல ஏற்கனவே பாழடைந்து போன வீடுகளையும் புதுப்பித்துக் கொள்வதற்காக நிதி உதவியை செய்து புதுப்பித்துக் கொடுத்தார்கள். 2016 ஆம் ஆண்டு முதல் விவசாயம் மற்றும் மேய்ச்சல் நிலப் பகுதிகளில் உள்ள சுமார் 43,600 வீடுகளுக்கு அரசு மானிய உதவிகளை வழங்கி புதுப்பித்துக் கொடுத்துள்ளது. இவை தவிர வீடுகளின் தரத்தை, சுகாதாரத்தை உயர்த்தக்கூடிய முறையில் குறைந்த வருமான குழு உள்ளிட்ட பகுதிகளை கணக்கில் எடுத்து புதுப்பித்துக் கொடுத்தார்கள். மற்றொரு முக்கிய அம்சம் வீடுகள் பூகம்பத்தின் அதிர்வுகளை தாங்க கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத வீடுகளை பட்டியல் எடுத்து பூகம்ப அதிர்வுகளை தாங்கக்கூடிய வீடுகளாக மாற்றி அமைத்தனர்.

 

நகர்ப்புறங்களில் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு இவற்றின் வளர்ச்சி அதிகமான பொழுது தீவிரமான நகர்மய வளர்ச்சி ஏற்பட்டது. நகர்ப்புறங்களில் குடியிருப்பவர்களின் தனிநபர் ஒருவருக்கு 2020 ஆம் ஆண்டு 33.4 சதுர மீட்டர் வாழ்விடமாக இருந்தது. கிராமப்புறத்தில் விவசாயிகள் மற்றும் மேய்ப்பர்களின் வாழ்விடம் 41.46 சதுர மீட்டராக இருந்தது. இந்த வளர்ச்சி வாழ்விடத்திற்கான ஒரு நிலையான முன்னேற்றத்தை குறிக்கிறது. 1950 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு 90% மக்களுக்கு தனி குடியிருப்புகள் கிடையாது.

வீட்டு வசதிகளில் ஏற்படுத்தி இந்த மாற்றம் பல முன்னேற்றங்களை அடைந்தது. 2019 ஆம் ஆண்டு திபெத் நகர்மயமாக்கல் 31.5% உயர்ந்தது. 2020 ஆம் ஆண்டில் மக்களின் தனிநபர் செலவழிப்பு வருமானத்தை 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகிற பொழுது அது இரட்டிப்பாகி உள்ளது. இவை அனைத்தும் தனி நபர்களின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்தியது மட்டுமல்ல திபெத் பிராந்தியத்தில் உள்ள 95% மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. குடும்பத்துக்கு ஒருவர் வேலையில் இருக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்றைய உலகமய சமூக சூழலில் ,உலகம் சார்ந்த பொருளாதார வளைய அமைப்புகள் உருவான காலத்தில், சோஷலிசத்தின் கொள்கையை நோக்கி செல்வதற்கு பெரும் முயற்சிகள் செய்ய வேண்டி உள்ளது. இந்தக் கொள்கையில் பற்றுடைய சீன கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் பின்தங்கிய ஒரு பிரதேசத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியதையும் கடந்து, அடிப்படை கட்டுமானத்தை உருவாக்கியதையும் கடந்து, பல அடுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.

அ.பாக்கியம்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

47 திபெத்: மக்களுக்கான கல்வி, மருத்துவம், வேலை சமூக பாதுகாப்பு

  அ.பாக்கியம் சோஷலிச கொள்கையை ஏற்றிருக்கக் கூடிய ஒரு அரசு உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக என்றென்றும் பாடுபடும். திப...