Pages

வியாழன், நவம்பர் 06, 2025

45 திபெத் நீர் மின்சக்தி உள்கட்டமைப்பின் உச்சம்




அ.பாக்கியம்

முதலாளித்து சமூக அமைப்பு எப்பொழுதும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை மையப்படுத்தியே இருக்கும். கச்சா பொருட்கள், போக்குவரத்து வசதிகள், வரி சலுகைகள், சீதோசன நிலைகள், குறைந்த கூலிக்கான தொழிலாளர்கள் கிடைக்கக்கூடிய பகுதிகளில்  தான் முதலாளிகள் தங்களது மூலதனத்தை கொட்டுவார்கள். சந்தை பொருளாதாரத்தின் விதிகளில் ஒன்றாகவே இதை மாற்றி விட்டார்கள்.

சோசலிச சமூக அமைப்பை உருவாக்கும் கடமையை செய்யும் கம்யூனிஸ்ட்கள் திட்டமிட்ட பொருளாதாரம், சந்தை பொருளாதாரம் ஆகியவற்றை கடைப்பிடிக்கக்கூடிய அதே நேரத்தில் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை சமநிலைப்படுத்துவதற்கான திட்டங்களையும் உருவாக்குவார்கள்.

திபெத்தில் அவ்வளவு எளிதாக அடிப்படை உள்கட்டமைப்புகளை உருவாக்கிவிட முடியாது. ஏனெனில் அது உயரமான மலைகளும், கரடுமுரடான நிலப்பரப்பு, பனியும் பனிப்பாறைகளும் குளிரும் நிறைந்த பிரதேசமாகும். இங்கு உள்கட்டமைப்பை உருவாக்குவது மிக சவாலான பிரச்சனை மட்டுமல்ல மிகப்பெரும் அளவு லாபம் தராத முதலீடுகளை செய்ய வேண்டி இருக்கும். அதிலும் மிகவும் பின்தங்கிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற பிரதேசத்தில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மிக மிக பின்தங்கிய நிலைமையில் இருந்த திபெத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீன மக்கள் குடியரசு உலகமே ஆச்சரியப்படும் வகையிலான மாற்றங்களை  உருவாக்கியது.

எரிசக்தி துறைக்கான கட்டமைப்புகள்

உள்கட்ட அமைப்பின் மிக முக்கிய அங்கமாக இருக்கக்கூடிய எரிசக்தி, சாலை, ரயில், விமான போக்குவரத்து போன்றவற்றை அங்கு உருவாக்கினார்கள். சீன சோசலிசத்தை அடைய வேண்டும் என்ற இலக்கோடு அளப்பெரிய பணிகளை சீன மக்கள் குடியரசு பல தடைகளையும் தகர்த்தெறிந்து அங்கு உட்கட்டமைப்பை உருவாக்கியது. இத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியில் உருவான உள்கட்டமைப்பு சாதனைகளாகவும் அதிசய நிகழ்வுகளாகவும் காணப்படுகிறது.

 

மனித தேவைகள் உட்பட அனைத்து தேவைகளுக்கும் மின்சாரம் மிகவும் அடிப்படையானது. 1950 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு திபெத்தில் ஒரு நீர் மின் நிலையம் மட்டும்தான் இருந்தது. இதிலிருந்து பெறப்படும் மின்சாரம் நிலப்பிரபுக்களின் வீடுகளுக்கு மட்டும்தான் பயன்படுத்தப்பட்டது. புரட்சிக்குப் பிறகு தான் நீர் மின் சக்தி சூரிய, மின் சக்தி, காற்றாலை மின் சக்தி என பல புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்களை உருவாக்கி திபெத்தில் எரிசக்தி வலை அமைப்பை வெற்றிகரமாக நிர்மானித்து விட்டார்கள்.

இந்த உள்கட்டமைப்பு திபெத்தின் பொருளாதார வளர்ச்சியில் சிறப்பான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் அதே நேரத்தில் அண்டை நாடுகளுடனும் பொருளாதார இணைப்பை எளிதாக மாற்றி உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

திபெத்தின் புவியியல் நிலைமைகளை ஆய்வு செய்து இங்கு பிரதானமாக நீர் மின்சாரத்தை உருவாக்க முடியும் என்று அரசு தீர்மானித்தது. காரணம் வானுயர்ந்த மலைகளில் இருந்து பல ஆறுகள் பாய்ந்து ஓடுகிறது. இது பல பிரதேசங்களையும் சில நாடுகளையும் கடந்து செல்கின்றது. ஆயிரக்கணக்கான ஆறுகள் உள்ளன. 20க்கும் மேற்பட்ட ஆறுகள் 10,000 சதுர கி.மீ.க்கு மேல் வடிகால் பரப்பளவையும், 100 க்கும் மேற்பட்டவை 2,000 சதுர கி.மீ.க்கு மேல் பெரியதாகவும், மேலும் பல ஆயிரக்கணக்கான ஆறுகள்  100 சதுர கி.மீ.க்கு மேல் பரப்பளவையும் கொண்டவை.

நீர் மின் நிலையங்கள் கட்டமைப்புகள் அதிகரிப்பு

இங்கு நீர் மின் நிலையங்களை அமைத்தால் அவை நம்பகத் தன்மை உடையதாகவும், நிலையானதாகவும் இருக்கும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசு முடிவு செய்தது. நீர் மின் திட்டங்களை உருவாக்குவதற்கு பெரும் அளவு முதலீடுகளை மக்கள் சீன குடியரசு செய்தது. 1950 ஆம் ஆண்டு ஒரே நீர் மின் நிலையத்தைக் கொண்டிருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு மொத்த மின்சார உற்பத்தியில் நீர் மின் நிலையங்கள் மூலம் பெறப்படும் மின்சாரம் 94 சதவீதம் ஆகும். மீதம் உள்ள 6 சதவீதம் காற்றாலை மூலமாகவும், சூரிய சக்தி மூலமாகவும் பெறப்படுகிறது.

 

2024 ஆம் ஆண்டு தரவுகளின் படி திபத்தில் 193 நீர் மின் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கிறது. இவற்றில் நூற்றுக்கு மேற்பட்டவை சிறிய மின் உற்பத்தி நிலையங்கள். பத்து நீர் மின் நிலையங்கள் 50 மெகா வாட்டுக்கு மேல் உற்பத்தி செய்யக்கூடிய திறன் பெற்றது. மேலும் பலமெகா நீர் மின் நிலையங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டில் 11 திட்டங்களை தொடங்கி 700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்தது. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அதிகப்படுத்தியது. தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிலும் 15 திட்டங்களை உருவாக்கி அதன் மூலம் கூடுதலாக 860 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்தது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தொடர்ச்சியாக சீனா திபெத்தில் கவனம் செலுத்துகிறது.

பரந்த அளவிலான மின் உற்பத்தி நிலையங்கள் முதல் மிதமான மின் உற்பத்தி நிலையங்களையும் உள்ளூர் முக்கியத்துவம் வாய்ந்த முறையில் நிறுவி வருகிறது. இந்தத் திட்டங்களில் சில திட்டங்கள் முழுமையான மானிய விலையில் மக்களுக்கு கொடுக்கப்படுகின்றன. பல்வேறு விதமான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு தொழில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் இராணுவ வசதிகளுக்கும் இந்த மின் நிலையங்கள் உதவி செய்கின்றன.

சூரிய மின்சக்தி உற்பத்தி

திபெத்தின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க சொத்துக்களில் ஒன்றாக சூரிய மின்சக்தி உற்பத்தி முறையும் உள்ளது. லாசா பகுதி ஆண்டுக்கு 5,852 முதல் 8,400 MJ/m2 வரையிலான சூரிய கதிர்வீச்சை பெறுகின்றது. சுவாரஸ்யமான ஒரு அம்சம் திபெத்தின் உயர்ந்த பகுதிகளில் வெயில் மிகுந்த பகுதியும் ஒன்றாகும். மேற்கு பகுதிகளில் ஆண்டுக்கு 3000 மணி நேரத்திற்கும் அதிகமான சூரிய ஒளி கிடைத்தாலும் லாசாவில் மட்டும் சராசரியாக ஆண்டுக்கு 8,160 MJ/m2 சூரிய ஒளியும் கிடைக்கிறது. இதனால் யாங்பாஜிங் சூரிய பண்ணை நிறுவி 1.1 ஜிகா வாட் மின்சார தயாரிப்பை செய்ய முடிகிறது

திபெத்தில் உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரம் உயர் மின்னழுத்த மின்மாற்றிகள் மூலமாக ஏற்றத்தாழ்வான பிரதேசங்களில் உள்ள இடங்களுக்கு இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மின்சாரத்தை சீரான முறையில் விநியோகிக்கிறார்கள். மற்றொரு குறிப்பிட்ட தக்க சிறப்பம்சம் மின்விநியோகத்தில் இயற்கை சீற்றத்தால் தடை ஏற்படுகிற பொழுது மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்காக மிகப்பிரமாண்டமான பேட்டரி அமைப்புகளை உருவாக்கி அவற்றில் மின் சக்தியை சேமிப்பு செய்து விநியோகத்தை தொடர்கிறார்கள். இதற்காக ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பங்களில் அரசு மிகப் பெரும் முதலீடுகளை செய்கிறது.

திபெத்தில் உள்ள மொத்த கிராமங்களில் 96.5% கிராமங்களுக்கு மூன்று கட்டு மின்சார விநியோகத்தை கொடுக்கிறார்கள். இதனால் மின்சார நுகர்வு 2012 ஆம் ஆண்டு 2.88 பில்லியன் கிலோவாட் மணி நேரத்தில் இருந்து 2022 ஆம் ஆண்டு 11.98 பில்லியன் கிலோவாட் மணி நேரமாக பெருமளவு அதிகரித்து உள்ளது. இதனால் தொலை தூரத்தில் உள்ள மலைப்பிரதேசங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் வாழக்கூடிய மக்களுக்கு மின்சாரம் தடையின்றி கிடைக்கிறது. 2020 ஆம் ஆண்டு தரவுகளின்படி சீனா முழுவதும் 14.9 நிமிடங்கள் சராசரி மின் வெட்டாகும். ஆனால் மாறுபட்ட புவியியல் அமைப்பில் இருக்கிற திபெத்தின் மின்வெட்டு 5.5 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இவையெல்லாம் நாம் அறிந்திடாத, இந்தியாவில் நாம் அனுபவிக்க முடியாத மின்சார சேவையாகும்.

உலக நாடுகளின் மின் தேவையை பூர்த்தி செய்யும்

மிக முக்கியமாக இரண்டு நீர் மின் திட்டங்களை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். திபெத்திலிருந்து உருவாகிற யார்லோங் சாங்போ நதியில் பிரம்மாண்டமான நீர்மின் திட்டம் இந்த ஆண்டு (2025) கட்டப்படுகிறது. இது லீகியாங்க் சீனாவின் பிரதமராக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட நூற்றாண்டு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதன் முதலீடு 1.2 ட்ரில்லியன் யுவான் ஆகும். அதாவது 168 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சமமானது. இந்தத் திட்டமானது  சீனாவில் யாங்சே நதியில் 254.2 பில்லியன் யுவான் செலவில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள மூன்று கோர்ஜஸ் அணையின்  மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்ற 88.2 மில்லியன் மெகாவாட் மின்சாரத்தை விட அதிகமாக 300 மில்லியன் மெகாவாட் மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இந்தத் திட்டம் நிறைவேறுகிற பொழுது திபெத்திற்கு மட்டுமல்ல தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்து போன்ற மின் பற்றாக்குறை உள்ள நாடுகளுக்கும் மின்சாரம் வழங்க முடியும். இந்தியா உட்பட இந்த மின்சாரத்தை பெறுகிற பொழுது மலேசியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதியை குறைக்க முடியும் என்று இந்தத் திட்டத்திற்கான அறிக்கை கூறுகிறது.

 

மற்றொரு முக்கியமான திட்டம் தென்மேற்கு சீனாவில் உள்ள யுன்னான் மாகாணம் வழியாக கிழக்கு மியான்மரில் பாய்ந்து அந்தமான் தீவுக்கடலில் கலக்கும் நூ நதியின் துணை  நதியில் செயல்படுகின்ற நீர் மின் நிலையம் ஆகும். இங்கு இருக்கிற நீர்மின் நிலையத்தில் தற்போது 80 டன் எடையுள்ள டர்பனை சீனா சொந்தமாக தனது நாட்டில் வடிவமைத்து பொருத்தி உள்ளது. இது உலகத்திலேயே மிகப்பெரிய டர்பன் ஆகும். இந்த மின் நிலையம் மொத்தம் ஒரு மில்லியன் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்டதாகும். ஆண்டுதோறும் சுமார் 4 பில்லியன் கிலோவாட் மணி நேரங்களை உற்பத்தி செய்யும் வகையில் இந்த ராட்சச டர்ன் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 1.3 மில்லியன் டன் நிலக்கரிகளை எரிப்பது குறையும். அதேபோல கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றம் 3.4 மில்லியன் டன் குறையும். சீனா 2060 ஆம் ஆண்டு கார்பன் நடுநிலையை அடைய வேண்டும் என்ற இலக்கை வெற்றிகரமாக முடிக்க திட்டமிட்டுள்ளது. திபெத்தில் நீர்மின் சக்தி உற்பத்தி மிக முக்கியமான எரிசக்தியாக உள்ளது. ஏனெனில் இது திபெத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது என்பதையும் கடந்து சீனாவின் கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டை பெருமளவு குறைக்க உதவுகிறது. சீனாவின் மின்சார உற்பத்தியில் 25 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின்சாரமாக 2030 ஆம் ஆண்டு மாற்ற வேண்டும் என்ற இலக்கு அதற்கு முன்பாகவே நிறைவேறுவதற்கான கட்டமைப்பை துரிதப்படுத்தி உள்ளது.

தன்னளவில் அனைத்தையும் பெற முடியாத ஒரு பிரதேசமாக இருளில் உலர்ந்து கொண்டிருந்த திபெத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, இன்று உலகின் பல பகுதிகளுக்கு மின்சாரத்தையும், இதர உற்பத்திகளையும் வழங்கக்கூடிய அளவிற்கு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது என்பதில் இருந்து  சீன சோசலிசத்தின் மகிமையைப் புரிந்து கொள்ள முடியும்.

டிஜிட்டல் யுகத்தில் திபெத்

உள்கட்டமைப்புகளில் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக டிஜிட்டல் வசதிகள் மாறிவிட்டன. உள்ளூர் துவங்கி உலகம் முழுவதும்   இணைக்க கூடிய ஒரு தொழில் நுட்பமாக டிஜிட்டல் தொழில் நுட்பம் கோலோச்சுகிறது. திபெத்தின் மலைக் கிராமங்களில், தொலைதூர வீடுகளுக்கும் டிஜிட்டல் வசதியை செய்து கொடுப்பதில் சீன மக்கள் குடியரசு குறிப்பிடத்தக்க சாதனை நிகழ்த்தி உள்ளது.

 

தன்னாட்சிப் பிராந்தியத்தில் மின்-அரசு வலைதளங்கள், ஒருங்கிணைந்த அடிப்படை கிளவுட்தளம், பெரிய அளவிலான தரகட்டுப்பாட்டுமையம் ஆகியவை பெரும்பாலும் திபெத்தின் அனைத்துப்  பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ளது. திபெத்தின் கிழக்குப் பகுதிகளிலிருந்து வளர்ச்சிக் குறைவான மேற்குப் பகுதிக்கு அதிக கணினி அமைப்புகளை உருவாக்குவதில் சிறப்புக் கவனம் செலுத்தி சாதித்து இருக்கிறார்கள்.

5ஜி இணைப்புகளை வழங்கக்கூடிய 8,099 நிலையங்களை அமைத்திருக்கிறார்கள். இதன் மூலமாக 3,12,600 கிலோமீட்டர் தூரத்திற்கு பைபர் ஆப்டிக்கேபிள்கள் அமைக்கப்பட்டு இணைப்புகள் தடையின்றி கிடைக்கின்றது. திபெத் தன்னாட்சிப்  பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் முக்கிய நகரங்களுக்கும் 5ஜி நெட்வொர்க் இணையதளம் வழங்கப்பட்டுள்ளது. இதனையும் கடந்து இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு அதன் உட்பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் மொபைல் சிக்னல் கிடைக்கக்கூடிய அளவுக்கு கோபுரங்கள் நிறுவப்பட்டு உள்ளது.

பைபர் பிராட்பேண்ட், 4ஜி, ரேடியோ, தொலைக்காட்சி சிக்னல்கள் திபெத் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நிர்வாக கிராமங்களுக்கும் கிடைக்கிறது. இவை அனைத்தும் உள்ளூர் மக்களை உலகத்துடன் ஆன்லைனில் இணைத்து உள்ளது.

ஆப்டிகல் கேபிள்களும், செயற்கைக் கோள்களை கொண்ட நவீன தகவல் தொடர்பு வலை அமைப்புகளும் தகவல் விரைவுச் சாலையின் ஒரு மிகப்பெரிய பகுதியாகும். திபெத் முழுவதும் இந்தத்  தகவல் விரைவுச் சாலை முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆப்டிகல் பிராட்பேண்ட் கவரேஜ் திபெத்தில் 99 சதவீதத்தை அடைந்துள்ளது. இதனால் சேவை தொழில்கள் பரவலான வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலமாக மின் வணிக சேவை அதாவது ஆன்லைன் சில்லறை விற்பனை மிகப்பெரும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இக்காலத்தில் ஆன்லைன் சில்லறை விற்பனை 20 பில்லியன் ஆர்எம்பி யுவானை கடந்துள்ளது. திபெத்தில் டிஜிட்டல் பொருளாதரத்தின் அளவு 33 பில்லியன் ஆர்எம்பி யுவான் ஆகும். 2019 ஆம் ஆண்டு 5ஜி நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பொருளாதார வளர்ச்சியின் வேகம் அதிகபட்டுள்ளது.

 

கல்வி வட்டாரங்களிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. கலாச்சாரத்துறையை மேம்படுத்துவதற்கும் டிஜிட்டல் அருங்காட்சியகங்கள், டிஜிட்டல் கலாச்சார மையங்கள் போன்றவை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. திபெத்தில் டிஜிட்டல் மையம் என்பது தகவல் பரவலை விரிவுபடுத்துவதுடன், அறிவுவளர்ச்சியும் ஏற்படுத்துகிறது. உழைப்பு, மூலதனம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற உற்பத்திக் காரணிகளில் மேம்பாட்டை உருவாக்குகிறது. நகர்ப்புற கிராமப்புற இடைவெளியை குறைக்கிறது.

அ.பாக்கியம்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

45 திபெத் நீர் மின்சக்தி உள்கட்டமைப்பின் உச்சம்

அ.பாக்கியம் முதலாளித்து சமூக அமைப்பு எப்பொழுதும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை மையப்படுத்தியே இருக்கும். கச்சா பொருட்கள் , போக்குவரத்து வசதிக...