Pages

வியாழன், ஜூலை 03, 2025

சியோனிசம்∶ பாசிசத்தின் மறு வடிவம்

 

முன்னுரை: 




பாசிசத்தின்  மறு வடிவமாக சியோனிசம் உருவெடுத்து பாலஸ் தீனத்தை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது. ஹிட்லர், முசோலி னியின் மறுபிறப்பாக இஸ்ரேலின் பெஞ்சமின்  நெதன்யாகு காட்சியளிக்கிறார். 

சியோனிசத்தின்  நரவேட்டை நடவடிக்கைகளுக்கு உலக ரவுடிகளான அமெரிக்காவும் பிரிட்டனும் ரத்த காட்டேரிகளாக மாறி சியோனிசத்தின் உந்து சக்தியாகவும் ஆயுத உணவுகளை அள்ளிக் கொடுப்பவர்களாகவும் மாறி இருக்கிறார்கள். 

இஸ்ரேலின் ராணுவம் அமெரிக்க - பிரிட்டன் ஆயுதங்களுடன் பாலஸ்தீனத்தில் நடத்தி வரக்கூடிய இனப்படு கொலையை தங்களுடைய மேலாதிக்கம் நிலைநாட்டப்படுவதாக கருதி குதூகலித்து வருகிறார்கள். பாலஸ்தீன மக்கள் குண்டு மழைகளுக்கு இடையிலும், துப்பாக்கி குண்டுகளை மார்பிலே ஏந்தியும், சியோனிச ராணுவ டாங்கிகளை எதிர்கொண்டும் நிராயுதபாணிகளாக போர் புரிந்து வருகிறார்கள். எத்தனை இடர்பாடுகளை  சியோனிச ராணுவம் ஏற்படுத்தினாலும் புதை குழியிலிருந்து எழுந்து வருவது போல், பீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் மீண்டும் பாலஸ்தீன மக்கள் எழுந்து வந்து கொண்டு இருக்கிறார்கள். 

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பித்த போர் எட்டு மாதங்களைக் கடந்து அதாவது 230 நாள்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதல் 200 நாட்களைக் கடந்த பொழுது காசா பகுதியில் 15,000 குழந்தைகள் உட்பட 37,953 பேர் கொல்லப்பட்டிருக் கிறார்கள். 87266 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காணாமல் போய் உள்ளனர். சுமார் 19 லட்சம் காசா மக்கள் இடம்பெயர்ந்து உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதமாகும். ராபா, காசாவில் உள்ள ஒரு பகுதி. இந்தப் பகுதியை இஸ்ரேல் ராணுவம் சமீபத்தில் நிர்மூலமாக்கியது. இடம்பெயர்ந்த வர்களில் பெரும்பகுதி அதாவது 14 மக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். இங்கு 4000 பேருக்கு ஒரு கழிவறை தான் உள்ளது. இங்குள்ள 307 பள்ளிகளில் 288 பள்ளிகள் குண்டு வீசி அழிக்கப்பட்டுள்ளன. 34 மருத்துவமனைகளில் 31 மருத்துவமனைகளை தரைமட்டமாக்கிவிட்டனர். ராபா, மக்கள் வாழத் தகுதியற்ற நகரமாக மாற்றப்பட்டாலும் பாலஸ்தீன மக்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா பகுதியில் உள்ள 62  சதவீத வீடுகள் அதாவது 2,90,820 வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டுள் ளன. இந்தப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு 10 பள்ளிக்கூடங்களிலும் 8 பள்ளிக்கூடங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டு விட்டன. 26க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் தரைமட்டம் ஆக்கப்பட்டு விட்டன. மற்றவை கடும் சேதம் அடைந்திருக்கிறது. 

உயிரிழந்த மக்களின் உடல் உறுப்புகளை இஸ்ரேல் ராணுவம் திருடுகிறது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகளால் காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனுப்பி வைக்கப்படும் உணவுப் பொருட்களை தடுப்பது, மருந்து பொருட்களை கொடுக்க மறுப்பது என மிக சாதாரணமாக அனைத்து மனித உரிமைகளையும் மீறிக் கொண் டிருக்கிறது. 

அமெரிக்கா, பிரிட்டனின் ஆதரவு பெற்ற  சியோனிசத்திற்கு ரத்த வெறி அடங்கவில்லை; அதே நேரத்தில் பாலஸ்தீன மக்களின் விடுதலை வேட்கையை  அடக்கவும் முடியவில்லை.

ஹமாஸ் அமைப்பை துடைத்தெறியும் வரை யுத்தம் தொடரும் என்று பெஞ்சமின் நெதன்யாகு கொக்கரித்தார். 8 மாதங்கள் ஆன பிறகும் அவர் எண்ணம் பலிக்கவில்லை. இஸ்ரேலிய இராணுவம் தளர்வு கண்டிருப்பதை பல செய்தி ஊடகங்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதோடு மிக மோசமான சவால்களையும் அது எதிர்கொள்ள வேண்டி உள்ளது.  ஆள் பற்றாக்குறையால் சோர்வடைந்து இருப்பதும், ராணுவத்தை விட்டு வெளியேறுவதும் அதிகமாகி உள்ளது. இஸ்ரேலிய ராணுவ பத்திரிக்கையாளர் அமீர் ராஃபா போர்டு எழுதுகிற பொழுது, இஸ்ரேல் ராணுவத்தில் தலைமை பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. வீரர்களின் உடல் மற்றும் மனசோர்வு, தீக்காயங்கள் போன்றவை ராணுவத்தினரை கவலை கொள்ள செய்து நிலைகுலைய வைத்திருப் பதாக குறிப்பிடுகிறார். 

அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கி  644 ராணுவ வீரர்கள் இறந்ததாகவும் 3703 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. உண்மையில் இது மிகக் குறைவான எண்ணிக்கையாகும்.  ஏப்ரலில் மட்டும் 7200 வீரர்கள் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கணக்கில் காட்டப்பட்டதைவிட பல மடங்கு அதிகமாக இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் இறந்துள்ளனர் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலஸ்தீனியர்களின் தாக்குதல்கள் இஸ்ரேலிய ராணுவத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரேலிய செய்தி தளமான ‘ஒய்நெட்’ (Ynet) தகவலின் படி இஸ்ரேலிய ராணுவ பணியில் உள்ள அதிகாரிகள் 42 சதவீதம் பேர் மட்டுமே தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக தெரியவந்துள்ளது. போரின் போது மன உறுதி அதிகமாகும் என்ற கணிப்பு பொய்யாகிவிட்டது. விமானத்தில் இருந்த பாராசூட் மூலம் குதித்து சண்டையிட பயிற்சி பெற்ற  பாராட்ரூப்ஸ் (paratroops) வீரர்கள் 30க்கும் அதிகமானோர் கடந்த ஏப்ரல் மாதம் நாங்கள் வேலை செய்ய மாட்டோம் என்று திட்டவட்டமாக மறுத்து விட்டனர். இப்படி எண்ணற்ற செய்திகள் இஸ்ரேல் ராணுவத்தை பற்றி வெளியாகி இருக்கிறது. இதிலிருந்து இஸ்ரேல் ராணுவத்தில் உள்ளவர்களுக்கு காஸாவில் யுத்தத்தை தொடர்வதில் ஆர்வம் இல்லை என்பது வெளிப்படுகிறது. 

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக யுத்தத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். 30 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் நெதன்யாகு உள்நாட்டில் ராணுவ டாங்குகளை தனியாருக்கு கொடுத்ததில் மிகப்பெரிய ஊழல் செய்துள்ளார் என்று அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது. அவர் பதவி இழந்த மறுநிமிடம் அந்த நாட்டு சட்டப்படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட சபையில் 64 பேர் அவருக்கு ஆதரவளிப்பதால் தப்பி பிழைத்து வருகிறார். ஒருபுறத்தில் நெதன்யாகுவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் இஸ்ரேலில் தொடர்ந்து நடைபெறுகிறது. மறுபுறத்தில் இஸ்ரேலிய இராணுவ வீரர்களின் மரணம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சூயஸ் கால்வாய் வழியாக இஸ்ரேலுக்கு வருகின்ற கப்பல்களை ஹைதி இயக்கத்தினர் வழிமறித்து தாக்குகின்றனர். இதனால் ஐரோப்பிய பொருளாதரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இஸ்ரேல் நாட்டின் வடக்கு பகுதியில் ஹிஸ்புல்லா படையினர் புகுந்துள்ளனர். எகிப்து பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினர் எதிர்த்து நிற்கிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் 2000 கிலோமீட்டர் நீளத்திற்கு ரத்த நாளங்களை போன்ற சுரங்கப்பாதைகளை ஹமாஸ் இயக்கத்தினர் நிறுவி இருப்பது மிக முக்கியமானது. வடக்கு தெற்கு செங்கடல் என எல்லா பக்கமும் இஸ்ரேல் சூழப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள 20 ஆயிரம் ராணுவ வீரர்களின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிசம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால் தனக்கு ஆதரவாக முழுமையாக செயல்படுவார் என்ற நம்பிக்கையில் இந்த போரை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நீட்டிக்க விரும்புகிறார்.

மறுபுறத்தில் உலக நாடுகளில் இருந்து இஸ்ரேல் தனிமைப்படும் அபாயத்தை எதிர்நோக்கி இருக்கிறது. அமெரிக்காவும் இதிலிருந்து தப்பிப்பதற்காக சில பூச்சாண்டி வேலைகளை செய்து நடுநிலை வேஷம் போட்டுக்கொண்டு பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக பம்மாத்து காட்டிக்கொண்டு இருக்கிறது. 

இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்யாததை முன்வைத்து உலக நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 2024 மே 10 தேதி அன்று கூடிய ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பாலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று அரபு நாடுகளின் கூட்டமைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் கூட்டப்பட்ட அவசர ஐநா சபை கூட்டத்தில் 193 நாடுகளிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 143 நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், அர்ஜென்டினா உள்ளிட்ட 9 நாடுகள் எதிராக வாக்களித்தன. 25 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன. ஐநா சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேறியது. இஸ்ரேல் கோபமடைந்து தீர்மான நகலை கிழித்துப் போட்டு விட்டது. 

இதுவரை அமெரிக்காவின் சொல்படி நடந்து கொண்டிருந்த ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள், அதிலிருந்து மாறுபட்டு, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாக அறிக்கை வெளியிட்டன. நார்வே நாட்டுப் பிரதமர் பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் அளிக்காவிட்டால் மத்திய கிழக்கில் அமைதி ஏற்படாது; தனி நாடாக செயல்படுவதற்கான உரிமை பாலஸ்தீனத்திற்கு உள்ளது. இஸ்ரேலுடன் சமாதானத்தை ஏற்படுத்த இது உதவும் என்ற நம்பிக்கையில் சுதந்திர பாலஸ்தீன அரசை எங்கள் நாடு அங்கீகரிக்கும் என்று தெரிவித்தார். 

அதேபோல, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், ``தன் நாட்டு மக்களின் பெரும்பான்மை உணர்வை எதிரொலிக்கும் வகையில் பாலஸ்தீனத்தின் அரசு அங்கீகரிக்கப்படும். இந்த முயற்சி நீதி, சமாதானம், ஒத்திசைவு போன்ற வார்த்தைகளில் இருந்து செயலுக்கு நகர்ந்திருக்கிறது!" எனக் கூறினார். அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ், ``இரு நாடுகளின் தீர்வு இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் மற்றும் அவர்களின் மக்களுக்கும் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான ஒரே நம்பகமான பாதை! இன்று அயர்லாந்து பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கிறது என அறிவித்துவிட்டார்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர், மூன்று நாடுகளையும் கடுமையாக எச்சரித்தார். விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று பயமுறுத்தினார்.

இப்படி, உலக நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரான நிலையை எடுத்த சூழலில்,  இஸ்ரேலை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court -ICC) கொண்டுபோய் தென் ஆப்பிரிக்கா நிறுத்தியுள்ளது. இஸ்ரேல், போர் குற்றவாளி என்று தென் ஆப்பிரிக்கா வழக்கை தொடுத்துள்ளது. 

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்  தலைமை வழக்கறிஞர் கரீம் கான், ``காஸா மீதான போர் மூலம் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை பட்டினி போட்டது; வேண்டுமென்றே அவர்கள்மீது தாக்குதல் நடத்தியது; உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. ஆனால், சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்கு இணங்க வேண்டிய கடமையிலிருந்து இஸ்ரேல் தப்ப முடியாது!" எனக் கண்டனம் தெரிவித்தார். 

அதேபோல, ``ஹமாஸ் அமைப்பின் தலைவர்களும் கொலை, பிணைக்கைதிகளை பிடித்தல், சித்ரவதை செய்தல் உள்ளிட்டப் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக் கின்றனர்" என இருதரப்பின் மீதும் கடுமையான குற்றங்களை சுமத்தி, தொடர்ந்து போர் குற்றங்களை நிகழ்த்தி வரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கைது வாரன்ட் கோரினார். அவரின் கோரிக்கையை மனித உரிமை அமைப்புகள் வரவேற்றன. அதேநேரம் இஸ்ரேல், பிரிட்டன், அமெரிக்கா நாடுகள் கடுமையாக எதிர்த்தன.

பிரிட்டன் வீட்டு வசதி துறை அமைச்சர் மைக்கேல் கோ, ‘‘ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு. இஸ்ரேல் ஒரு நாடு. அது தன் மக்களை பாதுகாக்க முயற்சிக்கிறது. இரண்டையும் சமமாக பார்க்கக்கூடாது’’ என்று இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு வக்காலத்து வாங்குகிறார்.

இஸ்ரேல் 1948 இல் சட்டவிரோதமாக துப்பாக்கி முனைகள் மீது பாலஸ்தீனத்தின் மீது திணிக்கப்பட்ட ஒரு நாடு. ஹமாஸ் தேசிய ஒடுக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிரான பாலஸ்தீனிய மக்களின் நியாயமான ஆயுதமேந்திய எதிர்ப்பின் ஒரு வடிவமாக உள்ளது. இதை பிரிட்டன் அமைச்சர் தலைகீழாக மாற்றிப் பேசுகிறார்

ஒடுக்கப்பட்டவர்களின் நியாயமான எதிர்ப்பிற்கும் ஒடுக்குமுறையாளரின் அநியாய மற்றும் இனப்படுகொலை வன்முறைக்கும் இடையில் எந்த சமத்துவமும் இருக்க முடியாது என்பதை அந்த மந்தி(ரி)யால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இதையேதான் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் வேறு வார்த்தைகளில் வாந்தி எடுத்திருக்கிறார். இஸ்ரேலிய பிரதமருக்கு கைது வாரன்ட்  கேட்பது சிறுபிள்ளைத்தனமானது என்று அவர் சீறியிருக்கிறார்.  உலக ரவுடியான அமெரிக்காவுக்கு தொடர்ந்து ஒத்தாசை செய்து வரும் இஸ்ரேலுக்கு ஜோ பைடன் பரிவு காட்டுவது இயல்பானதுதான்.

எது எப்படியோ சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்  தலைமை வழக்கறிஞர் கரீம் கான், இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக கைது வாரன்ட் கோரியிருப்பது உலக அளவில் பேசு பொருளாகி விட்டது. இதன் மூலம் இஸ்ரேலின் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை கடந்த பல ஆண்டுகளாக செயல்பட விடாமல் இஸ்ரேல் அச்சுறுத்தி வந்திருக்கிறது. நீதிமன்ற அதிகாரிகளை இஸ்ரேலிய உளவுத்துறை மிரட்டுவது, தகவல் தொடர்புகளை கைப்பற்றுவது, தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல் போன்றவற்றை இடைமறித்து இடையூறு செய்வது போன்ற குடைச்சல்களை தொடர்ந்து கொடுத்து வந்தது. தற்போது ஐசிசியின் தலைமை வழக்கறிஞர், இஸ்ரேல் பிரதமருக்கு கைது வாரன்ட் கோரியிருப்பதன் மூலம் சரியான ஆப்பு வைக்கப் பட்டுள்ளது.

 

பாலஸ்தீனத்தில் நடைபெறக்கூடிய கொடூரமான தாக்குதல்களை சில ஊடகங்கள் மட்டுமே வெளிப்படுத்துகின்றன. பல ஊடகங்கள் வெளிப்படுத்துவது இல்லை. அவை அமெரிக்க ஆதரவு நிலையில் இருந்து செயல்படுகின்றன. இஸ்ரேலிய இராணுவத்தின் பலவீனங்களை அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் வெளியிடாததோடு இஸ்ரேலுக்கு எதிராக நடைபெறக்கூடிய போராட்டங்களையும் இருட்டடிப்பு செய்கிறார்கள். சமூக வலைதளங்களில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டத்தை வெளியிடாமல் தடுக்கப்படுகிறது. முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவைகளை நடத்தும் மார்க் சக்கர்பெர்க் ஒரு யூதர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நடத்தும் பில் கேட்ஸ் ஒரு யூதர். பெப்சி கோக் நிறுவனங்கள், லேவி ஜீன்ஸ் போன்றவைகள் யூதர்களால் நடத்தப்படக் கூடியது ஆகும். இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் இரண்டு கட்சிகளுக்கும் நிதிகளை அள்ளிக் கொடுப்பவர்கள். அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இரு கட்சிகளுக்குமே இவர்களின் நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. யூதர்களை எதிர்த்து பேசினால் அமெரிக்க ஜனாதிபதிகளையே அம்பலப்படுத்த கூடிய அளவுக்கு பொருளாதார பலம் படைத்தவர்களாக ஜியோனிச ஆதரவாளர்களான யூதர்கள் இருக்கிறார்கள். 

ஆனாலும், இன்று இந்தியா போன்ற சில நாடுகளைத் தவிர உலகம் முழுவதும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் பள்ளி குழந்தைகளில் ஆரம்பித்து கல்லூரி மாணவர் வரை போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 45 பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் போராட்டக் களத்தில் உள்ளனர். 1250 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுடன் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஏராளமான தொழில் நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் என்று அந்த கல்வி நிறுவனங்களை இஸ்ரேலியர்கள் மிரட்டி உள்ளார்கள். ஆனாலும், பட்டமளிப்பு விழாவில் பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தி வந்து மாணவர்கள் பட்டத்தை பெறுகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போன்றவர்களின் பொது நிகழ்வில் கூட எதிர்வலைகள் எழுந்துள்ளன. இந்த செய்திகள் வெளியாகாமல் ஊடக மற்றும் சமூக வலைதள உரிமையாளர்கள் தடுக்கின்றனர். டிக் டாக் போன்ற செயலிகள் மூலமாக இன்று இது வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் கூட பிரபலமான பத்திரிகைகள் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவம் நடத்தும் கொடுமைகளைப் பற்றிய செய்திகளை வெளியிடுவது இல்லை.  உலக ஏகாதிபத்தியத்தையே எதிர்த்து, ஊடக ஏக போக அடக்கு முறைகளை எதிர்த்து பாலஸ்தீன மக்களும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறார்கள்.

 

***

இந்த சூழலில்தான் அறிஞர் வெ. சாமிநாத சர்மா எழுதிய ‘‘பாலஸ்தீனம்’’ என்ற நூலை பாரதிய புத்தகாலயம் மறு வெளியீடாக கொண்டு வந்துள்ளது. தமிழ்கூறும் நல்லுலகிற்கு வெ. சாமிநாத சர்மாவைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர் ஒரு தமிழறிஞர், அறிவியல் தமிழின் முன்னோடி, பன்மொழி அறிஞர், இதழாசிரியர் எனப் பல ஆளுமை கொண்டவர். “பிளாட்டோவின் அரசியல்”, “சமுதாய ஒப்பந்தம்”, கார்ல் மார்க்ஸ், “புதிய சீனா”, ”பிரபஞ்ச தத்துவம்” என்று வாழ்க்கை வரலாறு நூல்கள், வரலாற்று நூல்கள், அரசியல் நூல்கள் என்று 75க்கும் அதிகமான நூல்களை தமிழுக்கு தந்திருக்கிறார். உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழர்களுக்கு தந்தவர் அவர்.

வெ.சாமிநாத சர்மாவின், ‘‘பாலஸ்தீனம்’’ என்ற நூல் பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் என்ற பதிப்பகத்தால் 1939 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரங்கோனில் (இன்றைய யாங்கூன்) வெளியிடப்பட்டுள்ளது. உள்ளங்கைக்குள் ஒட்டுமொத்த உலகம் மட்டுமல்ல… பிரபஞ்சத்தை அடக்கி விடக்கூடிய தகவல் தொழில்நுட்ப புரட்சி உச்சத்தில் இருக்கும் காலம் இது. ஆனால், மிக மிக குறைவான தகவல்களை மட்டுமே பெற வாய்ப்புள்ள காலகட்டத்தில் அறிஞர் வெ.சாமிநாத சர்மா, பாலஸ்தீன பிரச்சனையை அதன் வரலாறு, பண்பாடு, அரசியல், பொருளாதார வளம், ஏகாதிபத்திய தலையீடு என்ற அம்சங்களுடன் வர்க்க ரீதியான பார்வைகளையும் உள்ளடக்கி ‘‘பாலஸ்தீனம்’’ என்ற நூலை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. 1938 ஆம் ஆண்டுகள் வரை பாலஸ் தீனத்தின் பிரச்சினைகளை ஆய்வு செய்து கொடுத்துள்ளார். பாலஸ்தீன நிலப்பகுதி எப்படி இருந்தது? யார் யார் ஆதிக்கம் செய்து பேரழிவை ஏற்படுத்தினார்கள் என்பதில் ஆரம்பித்து லண்டனில் நடைபெற்ற சமரச மாநாடுகள் வரை இந்த நூலில் கொண்டு வந்திருக்கிறார்.  

இன்று பல்வேறு விதமான தகவல்கள் நமக்கு எளிதில் கிடைத்தாலும் சமகாலத்தில் வாழ்ந்த ஒருவர் அன்றைய நிலைமைகளை விளக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த நூலின் விவரங்களை இந்த முன்னுரையில் விவரிப்பது பொருத்தமாக இருக்காது. அறிஞர் சாமிநாத சர்மாவின் எழுத்துக்களில் அவற்றை வாசித்து உள்வாங்குவது தான் பொருத்தமாக அமையும். அவர் தனது முன்னுரையில் (முன்னணி என்று குறிப்பிட்டுள்ளார்) முடிக்கிற பொழுது "வெளிநாட்டு விவகாரங்களில் தமிழர்களாகிய நாம் இன்னும் அதிகமான சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே என் கோரிக்கை" என்று முடிக்கிறார். 


***

1938ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற விஷயங்களை சுருக்கமாக இங்கே நாம் கவனத்தில் கொள்வது இந்த நூலை வாசிப்பதற்கு உதவி செய்யும். அவற்றை பார்ப்போம்…

 

பிரிட்டிஷார் மற்றும் அமெரிக்க மேலாதிக்கத்தை அரபு பகுதியில் நிலை நிறுத்துவதற்கு ஜியோனிசம் என்ற இஸ்ரேல் தேவைப்பட்டது. அவர்களின் முழு ஆதரவுடன் சியோனிஸ்டுகள் மூன்று விதமான திட்டங்களை வகுத்து பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்தனர். 1920 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட குடியேற்ற அவசர சட்டத்தை பயன்படுத்தி இதை நிறைவேற்றினர். 1926 ஆம் ஆண்டு நாலு சதவீதம் நிலங்களை வாங்கினார்கள். 1936 இல் ஐந்து சதவீத நிலங்களை வாங்கினார்கள். இது 1945 இல் 6 சதவீதமாகவும் 1948 இல் 8.6 சதவீதமாகவும் அதிகரித் தது. நிலத்தை வாங்கியதோடு, தங்கள் நிலத்தில் அரேபியர்கள் வேலை செய்யக்கூடாது என்று தடை விதித்து அவர்களை வெளியேற்றி னார்கள்.இரண்டாவதாக பெருங்குடியேற்றங்களை உருவாக்கி னார்கள். 

 

1903 பாலஸ்தீனத்தில் 25 ஆயிரம் யூதர்கள் இருந்தார்கள். இந்த எண்ணிக்கை  1914 இல் 40 ஆயிரமாக உயர்ந்து. 1923 இல் மக்கள் தொகையில் பன்னிரண்டு சதவீதமாக மாறினர். அதன் பிறகு  மக்கள் தொகையில் 1928 இல் பதினாறு சதவீதமாகவும் 1939இல் 30 சதவீத மாகவும் 1945 இல் 32 சதவீதமாகவும் குடியேற்றங்களை அதிகப் படுத்தினர். மூன்றாவதாக சியோனிச அமைப்புகளால் உருவாக்கப் பட்டிருந்த தீவிரவாத படைகள் மூலம் அரபு மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் கலவரம் செய்து அங்கிருந்து அவர்களை வெளியேற்றி னார்கள். 

இந்தப் பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனத்துக்கு உள்ளே இஸ்ரேலை உருவாக்குவது என்ற முறையில் ஒரு கமிஷனை அமைத்தார்கள். 1947 ஆம் ஆண்டு மே மாதம் பிரிட்டிஷ் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த குழு அமைக்கப்பட்டது. இந்த சிறப்புக்குழுவில் ஆஸ்திரேலியா, கனடா, செக்கோஸ்லோவேகியா, கௌதிமாலா, இந்தியா, ஈரான், நெதர்லாந்து,  பெரு,  ஸ்வீடன், உருகுவே, யுகோஸ்லோவேகியா ஆகிய 11 உறுப்பு நாடுகள் இருந்தன. இந்தக் குழுவில் இருந்த  7 உறுப்பினர்கள் இரு நாடாக பிரிப்பதற்கான ஆலோச னைகளை கொடுத்தனர். இந்தியா, ஈரான், யுகோஸ்லோ வேகியா ஆகிய மூன்று நாடுகள் ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தின. ஆஸ்திரேலியா நடுநிலை வகித்தது. இந்தக் குழுவின் பரிந்துரைப்படி 1947ம் ஆண்டு நவம்பர் 29 அன்று ஐ.நா. பொது சபையில் தீர்மான முன்மொழிவு பெற்று மொத்தம் இருந்த 58 நாடுகளில் 37 நாடுகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 12 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தன. 9 நாடுகள் நடுநிலை வகித்தன.

1948 மே 14 அன்று சியோனிச அமைப்பு அதன் முக்கிய தலைவர் டேவிட் பென் கொரியன் இஸ்ரேல் இன்று முதல் தனி நாடு என்று அறிவித்தார். அவர் அறிவித்த அன்றே அமெரிக்க ஜனாதிபதி ஹாரி எஸ்.ட்ரூமன் இஸ்ரேல் அரசை அங்கீகரித்தார். 1949 மே 11 அன்று தான் ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலை அங்கீகரித்தது. 

ஐ.நா.சபையின் ஆலோசனைப்படி 43 சதவீதம் நிலம் அரபுகளுக் கும், 56 சதவீதம் நிலம் இஸ்ரேலுக்கும் ஒதுக்கப்பட்டது. ஒரு சதவீத நிலமான ஜெருசலேம் ஐ.நா. சபையின் கட்டுப்பாட்டில் 10 ஆண்டுகள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அரேபியர்கள்(பாலஸ்தீனர்கள்) இதை ஏற்க மறுத்தனர். இஸ்ரேலுக்கு ஒதுக்கப்பட்ட 56 சதவீத நிலப்பகுதியில் ஐந்தரை லட்சம் அரபுக்களும் நாலு லட்சம் யூதர்களும் இருந்தார்கள். பாலஸ்தீனத்திற்கு ஒதுக்கப்பட்ட 43 சதவீத நிலப்பரப்பில் ஏழரை லட்சம் அரபுக்களும் ஒரு லட்சம் யூதர்களும் இருந்தார்கள். 

1948 மே 14ல் இஸ்ரேல் தனி நாடு என்ற அறிவிக்கப்பட்ட உடனேயே இஸ்ரேல் தன் படைகள் மூலமாக பாலஸ்தீனர்கள் வாழும் கிராமங்கள்  மீது தாக்குதல் நடத்தி அங்குள்ள மக்களை வெளியேற்றினர். பாலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமிக்க தொடங்கினார்கள். இந்த காலகட்டத்தில் மட்டும் ஏழு லட்சம் அரேபியர்கள் தங்கள் நிலத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். அவர்கள் வசிப்பிடங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது. சரி பாதியாக இருந்த நிலப்பகுதியை இஸ்ரேல் படிப்படியாக ஆக்கிரமித்து இன்று 20,770 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. பாலஸ்தீனம் மேற்கு கரை மற்றும் காசா பகுதி என சுருக்கப்பட்டு 6020 சதுர கிலோமீட்டர் பரப்பளவாக மாறிவிட்டது. இந்த குறைவான நிலப்பகுதியில் பெரும்பாலான இடங்களை இஸ்ரேலிய படைகள் ஆக்கிரமித்து உள்ளன. 

அரபு நாடுகள் இஸ்ரேல் நாட்டை அங்கீகரிக்கவில்லை. 1948,1953,1967,1973 ஆகிய வருடங்களில் இஸ்ரேல்-அரபு யுத்தம் நடைபெற்றது. இஸ்ரேல், அமெரிக்க பிரிட்டிஷ் ஆதரவுடன் அரபு நாடுகளை வெற்றி கொண்டு பாலஸ்தீனத்தை மேலும் ஆக்கிரமித்தது. 

இதற்கிடையில் பாலஸ்தீன மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக 1957 இல் யாசர் அராபத் அல்-ஃபதா என்ற கட்சி ஆரம்பித்தார். அதன் பிறகு பாலஸ்தீன விடுதலை இயக்கம் - பி எல் ஓ (Palestine Liberation Organization -PLO) என்ற அமைப்பை உருவாக்கினார். இதற்கு தனியாக இராணுவ பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. 1973-74 இல் கூட்டப்பட்ட அனைத்து அரபு நாடுகள் பங்கேற்ற அரபு உச்சிமாநாட்டில், பாலஸ்தீன மக்களின் ஒரே சட்ட பூர்வமான  பிரதிநிதியாக பி எல் ஓ அமைப்பு அங்கீகரிக்கப்பட்டது .இதையடுத்து பி எல் ஓ அமைப்பு ஐ.நா. சபைக்கு பார்வையாளராக அழைக்கப்பட்டது. பி எல் ஓ வில் 13 க்கும் அதிகமான அமைப்புகள் உள்ளன. ஹமாஸ் இதன் உறுப்பினராக இல்லை. 

1987 ஆம் ஆண்டு யாசர் அராபத் தலைமையில் பி எல் ஓ அமைப்பு ‘‘இன்டிஃபாடா’’  என்ற இயக்கத்தை தொடங்கி 7 ஆண்டுகள் வரை இடைவிடாத கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இதனால், எண்ணற்ற அழிவுகளும் உயிர் சேதங்களும் ஏற்பட்டாலும் போராட்டங்கள் ஓயவில்லை.

1988 ஆம் ஆண்டு யாசர் அராபத் பாலஸ்தீனத்தை தனி நாடு என்று அறிவித்தார். இதனால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் கடும் கோபம் கொண்டு யாசர் அராபத்தை மூர்க்கமாக எதிர்க்கத் தொடங்கின. ஐக்கிய நாடுகள் சபையில் பார்வையாளராக கலந்து கொள்ளக்கூடிய யாசர் அராபத்துக்கு விசா வழங்க  அமெரிக்கா  மறுத்துவிட்டது. இதனால் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தை ஜெனிவாவில் நடத்தி யாசர் அராபத்தை கலந்து கொள்ள வைத்தனர். 

1993 ஆம் ஆண்டு நார்வே நாட்டிலுள்ள ஒஸ்லோ என்ற இடத்தில் இஸ்ரேல் பிரதமர் இட்சாக் மற்றும் பி எல் ஓ தலைவர்களில் ஒருவரான  முகமது அப்பாஸ் இடையே  பேச்சு வார்த்தை துவங்கி நடைபெற்று கடைசியாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது ஓஸ்லோ ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. இதன்படி இஸ்ரேல்  பாலஸ்தீனியர்களின்

பிரதிநிதியாக பி எல் ஓ வை ஏற்றுக் கொண்டது. இந்த ஒப்பந்தம் பாலஸ்தீனிய சுய அரசாங்கத்தை மேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் படிப்படியாக செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

 

பாலஸ்தீன அதிகார சபை பாலஸ்தீன பகுதியில் நிறுவப்பட்டது. மேற்கு கரை மற்றும் காசா பகுதியில் பி எல் ஓ பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டது. அதன் பிறகு, பி எல் ஓ, இஸ்ரேல் அரசை முதன்முறையாக அங்கீகரித்தது. ஆனாலும் இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை மீறியது. பாலஸ்தீனர்கள் அதிகம் வசிக்கக்கூடிய ஜெருசலேம் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது.

 

ஓஸ்லோ ஒப்பந்தத்தை பாலஸ்தீன மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக ஹமாஸ் அமைப்பு இதை எதிர்த்ததோடு, தேர்தலில் வெற்றி பெற்று காசா பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இஸ்ரேல் இதைவெற்றியை  ஏற்கவில்லை. இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கும் பி எல் ஓ விற்கும் மோதலை உருவாக்கி குளிர் காய நினைத்தது. ஆனால் அதன் எண்ணம் பலிக்கவில்லை. ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய முறையில் தொடர்ந்து போராடி வந்து கொண்டிருக்கிறது. 

இந்தப் பின்னணியில் தான் ஹமாஸ் அமைப்பை அழித்தே தீர வேண்டும் என்ற கொலை வெறியுடன் 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கி காசா பகுதியை இடுகாடாக்கி வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், நிரந்தர யுத்த நிறுத்தத்திற்கு இன்று வரை ஒப்புதல் அளிக்கவில்லை. அரபு நாடுகள் மீது தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு இஸ்ரேல் என்ற நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகக் கொடூரமான அடியாளை தயார் செய்து ஏவிக் கொண்டிருக்கிறது. 

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் அரபு நாடுகளையும் ஆப்பிரிக்க நாடுகளையும் சூறையாடி வருகின்றனர். இக்காலத்தில் சீனாவும், ரஷ்யாவும் அமெரிக்கா ஆதிக்கத்திற்கு எதிராக வளர்ந்து பன்முக உலகை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.  இந்த புவிசார் அரசியலில் அமெரிக்கா தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக இஸ்ரேலை ஆதரித்து வருகிறது. 

 

இந்த ஏகாதிபத்திய நாடுகள் ஏன் இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள் அதற்கான 1920 ஆம் ஆண்டுகளில் என்ன தேவை ஏற்பட்டது? 1938 ஆம் ஆண்டுகளில் என்ன தேவை ஏற்பட்டது? என்பதை எல்லாம் அறிஞர் சாமிநாத சர்மா அவர்கள் இந்த புத்தகத்தில் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார். அது மட்டுமல்ல இஸ்ரேலின் சியோனிச கொள்கைகளையும் அதன் முதலாளி வர்க்க நலன்களையும் அரபு பகுதியில் எப்படி செயல்படுத்தினார்கள் என்பதை வர்க்க ரீதியான உதாரணங்களுடன் அறிஞர் சாமிநாத சர்மா விளக்கி இருக்கிறார். 

 

1939 ஆம் ஆண்டு வெளிவந்தாலும் வரலாற்றின் அரசியலை, சமாதான போர்வையில் நடக்கும் யுத்தங்களை தெள்ளத் தெளிவாக விளக்கி இருக்கிறார். இந்த நூலை வாசிப்பது பாலஸ்தீன பிரச்னை பற்றிய புரிதலை மேலும் மேம்படுத்தும். 


 அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம்-1

  1948 மே 14 சியோனிச இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் பெ ன் குரியன் இன்று முதல் இஸ்ரேல் என்ற நாடு உதய மா கிறது என ஆரவாரத்துடன் அறிவித்தார் ....