Pages

வியாழன், ஜூலை 31, 2025

திபெத்தை சீனா அபகரித்ததா ? அமைதியாக இணைத்ததா?

அ.பாக்கியம்

 

1949 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி மாசேதுங் தலைமையிலான புதிய ஜனநாயகப் புரட்சி சீனத்தில் வெற்றி பெற்றது. ஜப்பானிய படையெடுப்புகளை தோற்கடித்து, ஷியாங்காய் ஷேக் தலைமையிலான முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சியை வீழ்த்தி, யுத்த பிரபுக்களை விரட்டியடித்து சீனா முழுமைக்கும் மக்கள் விடுதலைப் படை வெற்றிகொண்டது. இதில் திபெத் பிரதேசத்தை செம்படை படையெடுத்து கைப்பற்றவில்லை. அதற்கு மாறாக இரண்டு ஆண்டுகள் வரை பொறுத்திருந்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களை உருவாக்கி 1951 ஆம் ஆண்டு இறுதியில் அமைதியான முறையில் திபெத் சீனாவின் மத்திய அரசின் கீழ் வந்தது. ஆனால் ஏகாதிபத்தியவாதிகள் இன்று வரை சீனா திபெத் பகுதியை படையெடுத்து கைப்பற்றியதாக பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மை என்ன என்பதை இந்த தொடரில் பார்ப்போம்.

அமைதியான விடுதலை கொள்கை

1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டது. திபெத்திற்கு அருகாமையில் உள்ள சாம்டோ மாவட்டத்தில் இருந்த யுத்த பிரபுக்களை சீன மக்கள் விடுதலைப் படை தோற்கடித்தது. அத்துடன் செம்படை நின்றுக் கொண்டது. அந்தப் படை திபெத்தின் எல்லைக்குள் நுழையவில்லை. திபெத்தின் வரலாற்று நிலைமைகளையும், எதார்த்த நிலைமைகளையும் கருத்தில் கொண்டு ஒரு அமைதியான விடுதலை கொள்கையை சீன மத்திய அரசு உருவாக்கும் முயற்சிகளை செய்தது. திபெத்திலிருந்த உள்ளூர் ஆளும் வர்க்கம் நடத்தி வந்த உள்ளூர் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அதன் மூலமாக தீர்வு காண்பதற்காக காத்திருந்தது. ஒரு நாள் இரு நாள் அல்ல எட்டு மாதங்கள் வரை இந்த காத்திருப்பு நீடித்தது.

1951 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி புதுடெல்லியில் உள்ள சீனத்தூதரிடம் 14 ஆவது தலாய்லாமா ஒரு கடிதத்தை கொடுத்தார். சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அந்த கடிதத்தில் எழுதி இருந்தார். பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திபெத் ராணுவத்தளபதியான ந்காபோய் ந்காவாங் ஜிக்மாய் தலைமையில் ஐந்து பேர் கொண்ட திபெத்திய பிரதிநிதி குழுவை தலாய்லாமா பெய்ஜிங்கிற்கு அனுப்பினார். பெய்ஜிங்கில் மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் திபெத்தின் பிரதிநிதி குழுவும் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடத்தி 1951 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி ஒரு ஒப்பந்தத்தை இயற்றினார்கள். இந்த ஒப்பந்தம் 17 பிரிவு ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. திபெத்தின் மூத்த அரசியல்வாதிகள் மற்றும் படைத்தளபதிகளால் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. 16 வயது நிரம்பிய தலாய்லாமா மதத்தலைவர் என்ற முறையில் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்காக இவர் இரண்டு மாத காலங்கள் எடுத்துக் கொண்டார்.

மேற்கண்ட ஒப்பந்தத்தை திபெத்தின் ஒப்புதல் வாங்குவதற்காக மதக்குருக்களின் சபைகள், உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், மதசார்பற்ற அதிகாரிகள், திபெத்தின் தலைநகர் லாசாவில் இருந்த மூன்று பெரும் மடாலயங்களான சேரா, காண்டய்ன், ஜைபுங் மடாலயங்களின் பிரதிநிதிகள் உள்ளடக்கிய மாநாட்டை 1951 செப்டம்பர் 26 முதல் 29 வரை உள்ளூர் அரசாங்கம் கூட்டியது. இந்தப் பிரதிநிதிகள் மாநாட்டின் இறுதியில், மத மற்றும் உள்ளூர் அரசுத் தலைவர் தலாய்லாமாவிற்கு ஒரு தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தில்“திபெத்தின் பிரதிநிதிகளால் கையொப்பமிடப்பட்ட 17 பிரிவுகளைக் கொண்ட ஒப்பந்தம் தலாய் மதத்தின் மகத்தான நோக்கத்திற்கும், பௌத்தம், அரசியல், பொருளாதாரம், மற்றும் பிற வாழ்க்கை அம்சங்களுக்கும் நிகரற்ற நன்மை பயக்கும், எனவே இது இயற்கையாகவே செயல்படுத்தப்பட வேண்டும்” என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவை தவிர 10 ஆவது பஞ்சன்லாமா (எர்டேனி) அவரது காம்பஸ் சட்டமன்றத்தை கூட்டி இந்த ஒப்பந்தத்தை ஆதரித்து அறிக்கை அளித்தார். அந்த அறிக்கையில் இந்த ஒப்பந்தம் சீனாவின் அனைத்து இனக்குழுக்களின் மக்களுக்கும், குறிப்பாக திபெத்தியர்களின் நலன்களுக்கு முழுமையான பயன்தரும் என்று சுட்டிக் காட்டப்பட்டது.

தலாய்லாமாவின் வானலாவிய வரவேற்பு

இதன் தொடர்ச்சியாக 1951 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி 14 ஆவது தலாய்லாமா சீனப் பெருந்தலைவர் மாசேதுங் அவர்களுக்கு ஒப்பந்தத்தை ஏற்று ஒரு தந்தியை அனுப்பினார். அந்தத் தந்தியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். “நட்பின் அடிப்படையில் இருதரப்பு பிரநிதிகளும் 1951 மே 23 அன்று திபெத்தின் அமைதியான விடுதலைக்கான நடவடிக்கைகள் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். திபெத்தின் உள்ளூர் அரசாங்கமும், மத அமைப்புகளும், மடாலயங்களும், மதசார்பற்ற மக்களும் இந்த ஒப்பந்தத்தை ஒரு மனதாக ஆதரிக்கின்றனர். தங்களின் தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் மக்கள் விடுதலைப் படை தேசிய பாதுகாப்பிற்காகவும், வளர்ச்சிக்காகவும், திபெத்திற்குள் வரவேற்கப்படுகிறது. திபெத்திலிருந்து ஏகாதிபத்திய செல்வாக்குகளை வெளியேற்றுவதற்கும், திபெத் பிரதேசத்தினை ஒருங்கிணைப்பதற்கும், தாய்நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்கும் நாங்கள் தீவிரமாக உதவுவோம்” என்று தந்தியில் எழுதி இருந்தார்.

இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு சீன மத்திய அரசின் மக்கள் விடுதலைப் படை திபெத்திற்குள் மக்களால் வரவேற்கப்பட்டது. 17 பிரிவு ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்காக முயற்சியில் சீன அரசும், திபெத்தில் இருந்த உயர் வர்க்கத்தினர் கையில் இருந்த உள்ளூர் அரசாங்கமும் இறங்கினார்கள். இதனைத் தொடர்ந்து திபெத்தின் தனித்துவத்தை அங்கீகரிக்கக் கூடிய வகையில் சீன மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் துணைத் தலைவராக 14 ஆவது தலாய்லாமாவும், நிலைக்குழு உறுப்பினராக 10 ஆவது பஞ்சன்லாமாவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 1954 ஆம் ஆண்டு சீனத் தலைநகர் பெய்ஜெங்கில் நடைபெற்ற சீன மக்கள் காங்கிரஸில் தலாய்லாமாவும் பஞ்சன்லாமாவும் கலந்து கொண்டனர். 1951 ஆம் ஆண்டு திபெத் சீனாவுடன் அமைதியாக இணைக்கப்பட்ட பிறகு 17 பிரிவு ஒப்பந்தம் அமல்படுத்தியதின் வெற்றிகளை பற்றி தலாய்லாமா சீன மக்கள் காங்கிரஸில் விரிவாகப் பேசினார்.

சீன மக்கள் காங்கிரஸில் முதல் அரசியல் அமைப்பில் தேசிய பிராந்திய சுயாட்சி தொடர்பான கொள்கைகளையும், விதிகளையும் முன்வைத்த பொழுது அந்த வரைவு மசோதாவின் மீது வரவேற்றுப் பேசினார். முழுமையான ஆதரவை தெரிவித்தார். மதம் குறித்து இந்த காங்கிரஸில் பேசியபொழுது, திபெத்திய மக்கள் மத நம்பிக்கைகளை ஆழமாகப் பின்பற்றி வந்ததையும், கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்கள் அரசாங்கமும் மதத்தை ஒழித்துவிடும் என்று சிலரால் பரப்பப்பட்ட தவறான வதந்திகளால் நாங்கள் கவலை அடைந்தோம், ஆனால் நடைமுறையில் எங்கள் சொந்த அனுபவத்திலிருந்து திபெத்திய மக்களுக்கு மத நம்பிக்கை சுதந்திரம் உள்ளது என்பதை அறிந்து கொண்டோம் என்று அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்தார்.

17 பிரிவு ஒப்பந்தத்தின் சில  முக்கிய அம்சம்

  • 17 பிரிவுகளைக் கொண்ட அந்த ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சங்கள் குறிப்பிடத்தக்கவை. ஒன்றிணைந்த திபெத்தில் இருந்து ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு சக்திகளை விரட்ட வேண்டும்.
  • திபெத்தில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தக்கூடிய வகையில் உள்ளூர் அரசாங்கம் மக்கள் விடுதலைப் படைக்கு முழுமையாக உதவி செய்ய வேண்டும்.
  • திபெத்தில் பிராந்திய இன சுயாட்சி நிறுவப்படும். திபெத்தில் தற்போது உள்ள அரசியல் அமைப்பையோ அல்லது 14 ஆவது தலாய்லாமா, 10 ஆவது பஞ்சன்லாமா ஆகியோரின் அதிகாரங்களையோ, நிறுவப்பட்ட நிலைப்பாடுகளையோ, அதன் செயல்பாடுகளையோ சீன அரசு மாற்றாது.
  • திபெத்தின் உள்ளூர் அரசாங்கத்தில் பல்வேறு நிலைகளில் இருக்கக்கூடிய அதிகாரிகள் வழக்கம் போல் பதவியில் இருப்பார்கள். எந்த மாற்றமும் செய்யப்படாது.
  • மத நம்பிக்கை சுதந்திர கொள்கை நிலைநிறுத்தப்படும். திபெத்திய மக்களின் மதநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மதிக்கப்படும்.
  • மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக திபெத்திய இனக்குழுக்களின் மொழியும், பள்ளிக் கல்வியும் மேம்படுத்துவதுடன் விவசாயம், கால்நடை வளர்ப்பு, தொழில், வணிகம் ஆகியவையும் மேம்படுத்துவதற்கு மத்திய அரசு உதவி செய்யும்.
  • பிராந்தியம் சம்பந்தப்பட்ட வெளியுறவு விவகாரங்கள் மத்திய அரசின் ஒருங்கிணைந்த நிர்வாகத்தின் கீழ் இருக்கும்

இதைவிட முக்கியமாக குறிப்பிட வேண்டியது சீன மக்கள் குடியரசு எந்த அளவிற்கு நிதானமாக கையாண்டுள்ளது என்பதற்கு இதில் உள்ள ஒரு ஷரத்து சான்றாகும். சீனப்புரட்சியின் முக்கிய அம்சமான பண்ணை அடிமைகளை விடுவிப்பதாகும்.

திபெத்தில் சீர்திருத்தங்கள் தொடர்பான விஷயங்களில், மத்திய (சீன) அதிகாரிகளின் எந்த வற்புறுத்தலும் இருக்காது. சீர்திருத்தம் திபெத்திய உள்ளூர் அரசாங்கத்தால் அதன் சொந்த விருப்பப்படி மேற்கொள்ளப்படும் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. சீன நாடு முழுவதும் நிலப்பிரபுகளுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு எதிராகவும், சொத்துடமை வர்க்கத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை புரட்சிகர அரசு மேற்கொண்ட அதே நேரத்தில், திபெத்தில் மட்டும் மக்களை அரசியல் படுத்துவதற்கும், அவர்கள் புரிந்து கொள்வதற்குமான கால இடைவெளியை உருவாக்கி நெகிழ்வான முறையில் அணுகியது குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லாம் அறிந்து கொண்டே தான் மேற்கத்திய ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரங்களை செய்து வந்தார்கள். இப்போதும் அதனை தொடர்ந்து செய்கிறார்கள்.

இதே காலத்தில் மற்றொரு புறம் சீன அரசுக்கு அழுத்தம் ஏற்பட்டது. அமைதியான விடுதலைக்குப் பிறகு நிலப்பிரபுத்துவ அடிமை முறை சீர்திருத்தப்படாவிட்டால், திபெத்திய மக்களை ஒரு பொழுதும் அடிமை முறையில் இருந்து மீட்கவும் முடியாது. அவர்களுக்கு செழிப்பையும் ஏற்படுத்த முடியாது என்று உயர் மற்றும் நடுத்தர வர்க்கங்களை சேர்ந்த பல அறிஞர்களும், மக்களும் தெரிவித்தார்கள். ஆனால் சீன கம்யூனிஸ்ட் கட்சியும், அரசும் திபெத்திய வரலாறு மற்றும் பிராந்தியத்தின் சிறப்பு நிலையை கருத்தில் கொண்டு சமூக சீர்திருத்தம் குறித்த மிகவும் விவேகமான அணுகுமுறையை கடைபிடித்தது.

ஒரு வெளிநாட்டின் மீது படையெடுப்புகள் நடத்துவது போல் ஒரு படையெடுப்பை சீன மக்கள் விடுதலைப்படை திபெத்தின் மீது நடத்தவில்லை என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட தெளிவான உண்மையாகும். சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக திபெத்தை சீன மக்கள் கருதியதால் அதை எந்த வகையிலும் சீன மக்கள் படையெடுப்பாக கருதவில்லை. எனவே தான் சீன ராணுவம் சாம்டோவில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வரை எட்டு மாதங்கள் காத்திருந்து. ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு தான் உள்ளூர் அரசாங்க ஒப்புதலுடன் திபெத்திற்குள் படைசென்றது. சீன ராணுவத்தை தேசிய ராணுவம் என்று திபெத் அங்கீகரித்தது. மக்கள் பங்கு பெறாத எந்த சீர்திருத்தமும் வெற்றி பெறாது என்பதை மாசேதுங் உறுதியாக வலியுறுத்தினார். நமது நோக்கம் திபெத் என்ற நிலத்தை வெற்றி கொள்வது அல்ல, திபெத் மக்களை வெற்றிகொள்வது என்பதுதான் என்று அறிவித்தார்.

ஒருபுறத்தில் ஒப்பந்தத்தை அமைதியான முறையில் அமலாக்க முயற்சி செய்கிற அதே நேரத்தில் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த உயர்மட்ட தலைவர்கள் சிலர் சீர்திருத்தத்தை விரும்பாமல் பண்ணை அடிமை முறையை என்றென்றும் பாதுகாக்க விரும்பினார்கள். இவர்கள் சீன எதிர்ப்பு சக்திகளாக இருக்கக்கூடிய மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் ஒப்பந்தத்தை சீர்குலைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது 542 சமஸ்தானகள் இருந்தன. அவற்றின் ஹைதராபாத், திருவிதாங்கூர், காஷ்மீர் உட்பட பல சமஸ்தானங்கள் மிகப்பெரும் அரசாங்கங்களை நடத்திக் கொண்டிருந்தன. காஷ்மிரி இந்து மன்னர் பாகிஸ்தானுடன் இணைவது அல்லது தனி நாடு என்று அறிவித்தார். ஐதராபாத் நிஜாம் தனி நாடு என்று அறிவித்தார். திருவிதாங்கூர் மன்னர் அமெரிக்க மாதிரி அரசு என்று தனிநாட்டு கோரிக்கை முன் வைத்து கிளர்ச்சி செய்தார். அந்த அளவுக்கு கூட அதிகாரம் அற்றதாகத்தான் திபெத்தின் உள்ளூர் அரசு இருந்தது. அந்த அரசுடன் நிதானமான முறையில்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீன மக்கள் குடியரசு படையெடுப்பின்றி பேச்சுவார்த்தை நடத்தி இணைப்பை ஏற்படுத்தியது வரலாறு.

நாச வேலையும் சிஐஏ உதவியும்

1952 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மக்கள் மாநாடு என்ற ரகசிய அமைப்பை உருவாக்கினார்கள். இதற்கு உள்ளூர் அரசாங்கத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் ரகசியமான ஆதரவை வழங்கினார்கள். இந்த அமைப்பின் நோக்கம் திபெத்திலிருந்து மக்கள் விடுதலை ராணுவம் வெளியேற வேண்டும் என்பதாகும். 17 பிரிவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்தார்கள்.

1952 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி ஜைபுங், சேரா மடாலயங்களில் இருந்து சுமார் 1000 க்கும்மேற்பட்ட துறவிகள் லாசாவின் மையப் பகுதிக்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டார்கள். மத்திய அரசாங்கத்தின் அலுவலகத்தையும், அதில் வேலை செய்த ஊழியர்களையும் தாக்கினார்கள். சீன மக்கள் காங்கிரஸின் திபெத் அலுவலகங்களை முற்றுகையிட்டார்கள். 1955 ஆம் ஆண்டு திபெத்திய உள்ளூர் அரசாங்கத்தை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் திபெத்தியர்கள் அதிகமாக வசிக்கும் ஜிகாங்க மாகாணத்தில் ஆயுதம் தாங்கி கிளர்ச்சியை துவங்குவதற்கு ரகசியமாக திட்டமிட்டனர். இதன் தொடர்ச்சியாக 1956 ஆம் ஆண்டில் அங்கு ஒரு கிளர்ச்சி வெடித்தது. கிளர்ச்சியாளர்கள் உள்ளூர் அரசாங்க நிறுவனங்களை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்களையும் பொது மக்களையும் படுகொலை செய்தார்கள்.

1957 ஆம் ஆண்டு மே மாதம் “நான்கு ஆறுகள் ஆறு மலை தொடர்கள்” என்ற பெயரில் ரகசிய அமைப்புகளை உருவாக்கினார்கள். இந்த அமைப்புகளுக்கு கீழ் மத காவலர்கள் என்ற ஆயுதப் படைகளையும் நிறுவினார்கள், இந்த ஆயுதப் படைகளின் முக்கிய குறிக்கோள் சீர்திருத்தத்திற்கு எதிராக செயல்படுவதும், சீர்திருத்தத்தை நடக்க விடாமல் தடுப்பதும் அடிப்படை பணியாக அமைந்தது திபெத்திய சுதந்திரம் என்ற கோஷத்தையும் முன் வைத்தார்கள். திபெத்தின் பல்வேறு மாவட்டங்களை கலவரப் பகுதியாக மாற்றினார்கள். தகவல் தொடர்பு இணைப்புகளையும், ராணுவ துருப்புகளையும், மத்திய அரசு நிறுவனங்களையும் சேதப்படுத்தினார்கள். பொதுமக்களிடம் இருந்த பொருட்களை கொள்ளையடித்தது மட்டுமல்ல பெண்களை பாலியல் பலாத்காரமும் செய்தனர்

1957 ஆம் ஆண்டு காம்டோ பகுதிகளில் பிரிவினைவாதிகளுக்கும் மக்கள் விடுதலைப் படைக்குமான போராட்டம் தீவிரமடைந்தது. பல மடாலயங்கள் பிரிவினைவாதிகளை மறைத்து வைக்க கூடியதும் பயிற்சி அளிக்கக்கூடிய இடங்களாக பயன்படுத்தப்பட்டன. இந்தப் பகுதியிலிருந்து பிரிவினைவாதிகளுடன் அமெரிக்காவின் மத்திய உளவுத்துறை வலுவான தொடர்புகளை வைத்திருந்தது. அமெரிக்காவின் நேரடி ஆதரவை திபெத்திய பிரிவினைவாதிகள் கேட்ட பொழுது அன்றைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டூவைட் டி ஐசனோவரின் கீழிருந்த சிஐஏ நிறுவனம் கிளர்ச்சியாளர்களை ஆதரிக்க வேண்டும் என்றால் லாசாவிலிருந்து அதிகாரப்பூர்வமான கோரிக்கை வர வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். தலைநகர் லாசாவிலிருந்து எந்த கோரிக்கையும் தகவலும் இல்லாததால் சிஐஏ நிறுவனம் கிளர்ச்சியாளர்களுக்கு ரகசியமான ஆதரவை வழங்கியது. கிளர்ச்சியாளர்கள் லாசா நகரத்தில் பெரும் போராட்டங்களை நடத்தினார்கள்.

அமெரிக்காவின் சிஐஏ உளவுத்துறை வெளிநாட்டில் வசிக்கும் திபெத்திய இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வரைபடங்களைப் பற்றிய விபரங்களையும், வானொலி ஒளிபரப்பை நடத்துவது, துப்பாக்கிச்சுடும் பயிற்சி, பாராசூட் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதற்காக அமெரிக்காவின் குவாமூக்கு என்ற இடத்திற்கு அனுப்பி பயிற்சி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் கொலராடோவின் ஹேல் முகாமில் 170 திபெத்தியர்களுக்கு கொரிலா போர் பயிற்சியை அளித்தனர். பயிற்சி பெற்ற கொரிலாக்கள் சீன ஆக்கிரமிப்பை எதிர்க்க ஒரு பயனுள்ள எதிர்ப்பு இயக்கத்தை தொடங்குவதற்கு திபெத்திற்குள் விமானத்தின் மூலம் இறக்கி விடப்பட்டார்கள்.

அமெரிக்கா அத்துடன் நிறுத்தவில்லை. ரகசிய ஆதரவு என்ற பெயரில் 20 இயந்திர துப்பாக்கிகள், இரண்டு பெரும் மோட்டார்கள், 100 துப்பாக்கிகள், 600 கைக்குண்டுகள், 600 பீரங்கி குண்டுகள் மற்றும் 40 ஆயிரம் தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் சிகுலமா தாங்க் என்ற பீடபூமியில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு விமானத்தின் மூலம் வழங்கியது. இதே காலத்தில் ஷானன் பகுதியில் நிலை கொண்டுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு நிலம் வழியாகவும் ஆயுதங்களை அனுப்பியது.

நாடகத்தை முன்வைத்து நாடகமாடிய தலாய்லாமா

மேற்கத்திய நாடுகளின் தீவிரமான உதவியுடன் அடிமைத்தனத்தை தக்கவைத்துக் கொள்வதில் திபெத்திய அடிமை உடைமையாளர்கள் ஈடுபட்டதால் கிளர்ச்சி உச்சகட்டத்தை அடைந்தது. 1959 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி லாசாவில் விரிவாக திட்டமிடப்பட்ட ஆயுதக் கிளர்ச்சி வெடித்தது. கிளர்ச்சியின் துவக்கம் வதந்திகளை பரப்புவதில் இருந்து துவங்கியது, 14 ஆவது தலாய்லாமா திபெத்திலிருந்த நடனக் குழு, இசை குழுவின் நிகழ்ச்சியை காண வேண்டும் என்று ராணுவத்திடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தலாய்லாமா வருவதற்கான நேரங்களும் குறிக்கப்பட்டது. தலாய்லாமாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியையும் நேரத்தையும் சீன ராணுவம் திபெத்திய உள்ளூர் அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கும், தலாய்லாமாவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட துணை ஜெனரல் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 10 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தலாய்லாமா ராணுவ அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டது. மார்ச் 9 ஆம் தேதி லாசாவின் மேயர் 14 ஆவது தலாய்லாமாவை சீன ராணுவம் பெய்ஜிங்கிற்கு கடத்தி செல்வதற்காக விமானத்துடன் தயாராக உள்ளனர். எனவே திபெத்திய மக்களும் மடாலயங்களில் லாமாக்கள் அனைவரும் தலாய்லாமாவின் வீட்டிற்கு முன் அணி திரண்டு அவர் நிகழ்ச்சிக்கு போக விடாமல் தடுக்க வேண்டும் என்று மக்களை தூண்டி விட்டார். 2000க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் தலாய்லாமாவின் வீட்டை சுற்றி பிரார்த்தனை செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். தலாய்லாமாவிற்கு விஷம் கொடுத்துக் கொள்வதற்காக திட்டமிட்டுள்ளனர் என்ற வதந்தியும் பரப்பினார்கள்.

இதன் உச்சக்கட்டுமாக அந்த கூட்டத்தில் நில உடமையாளர்களும் லாமாக்கலும் திபெத் சுதந்திரம் வேண்டும் என்றும், ஹான்சீனர்களை ஒழித்துக் கட்டுவோம் என்று கோஷங்களை எழுப்பினார்கள். பல சீன ராணுவ வீரர்களையும், ஒப்பந்தங்களை அமுல்படுத்துவதற்கு முயற்சி செய்த திபெத்திய அதிகாரிகளையும் கூட்டம் தாக்கி காயப்படுத்தியது. கிளர்ச்சி லாசாவை மையப்படுத்தி தீவிரமடைந்தது. மார்ச் 16 ஆம் தேதி தலாய்லாமா திபெத்திலிருந்த சீன பிரதிநிதிக்கு நான் கிளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக உள்ளூர் அதிகாரிகளிடம் கடும் முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை என்று கடிதத்தை எழுதினார். இந்த கடிதங்கள் எல்லாம் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இருப்பினும் உள்ளூர் நில உடமையாளர்கள் மற்றும் மேற்கத்திய சக்திகளின் உதவியுடன் மார்ச் 17 ஆம் தேதி மிக முக்கிய கிளர்ச்சி தலைவர்களுடன் லாசாவிலிருந்து தலாய்லாமா ஷானன் பகுதிக்கு சென்றார். திபெத்தில் ஆயுதக் கிளர்ச்சி தோல்வியடைந்த பிறகு தலாய்லாமாவும் அவருடைய தலைவர்களும் இந்தியாவிற்கு தப்பிச் சென்றனர்.

 அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

33 வெள்ளை பொய்களின் வரலாறு

  அ.பாக்கியம் திபெத் தீர்வுச் சட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 2024 ஆகஸ்ட் 21 அன்று கைழுத்து போட்டார் என்ற செய்தியை அமெரிக்காவில் இரு...