Pages

வெள்ளி, மே 06, 2022

நெல்லை சாதிய மோதல்களும் DYFIவெண்படையின் நடை பயணமும்:



                      1994-95-ம்ஆண்டுகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் சாதிய மோதல்கள் அடிக்கடி தலைதூக்க ஆரம்பித்தது. குறிப்பாக தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் கூடுதலாக சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தது. (அப்போது இந்த மாவட்டங்களுக்கு தூத்துக்குடி சிதம்பரனார் மாவட்டம் என்றும் நெல்லை கட்டபொம்மன் மாவட்டம் என்றும் பெயர் இருந்ததாக ஞாபகம்)

                  தமிழகஅரசு மாவட்டங்களுக்கும், அரசுபோக்குவரத்து கழகங்களு க்கும் தலைவர்களின் பெயர்களை சூட்டுவது, அடிக்கடி நடந்தது ஆட்சிகள் மாறிய பொழுது பெயர்களும் காட்சிகளும் மாறின. அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக வாக்குவங்கி அரசியலை மையமாக வைத்து இந்த பெயர் மாற்றங்கள் நடந்தேறிக் கொண்டிருந்தது. இதனால் பலஇடங்களில் பெயர்களில் மாற்றங்களை கோரி சிலர்போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தனர்.

            இவற்றுடன் வேலையின்மை, வறட்சி, போன்றகாரணங்களும் இளைஞர்களை சாதியசக்திகள் திசைதிருப்புவதற்கு காரணமாக அமைந்திருந்தது. குறிப்பிட்ட சில மாதங்களில் நடைபெற்ற மோதல்களில் 60 முதல் 70 பேர்கள் வரை இறந்தார்கள். ஒரு சில ஆண்டுகளில் 150 க்கு மேற்பட்டவர்கள் சாதிய மோதல்களால் இறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

                  பாதுகாப்பற்ற சூழலும் பதட்டமான சூழலும் நிலவியது. குறிப்பிட்ட சிலஊர்களிருந்து பேருந்தில் அல்லது சைக்கிலில் வந்தால் அவர்கள் என்ன சாதி என்று அடையாளம்கண்டு சாகடிப்பது. தோட்டங்களில் வேலை செய்பவர்களை சாதி அடையாளம் கண்டு படுகொலை செய்வது. பேருந்தில் பயணம் செய்வது, வேலைக்கு செல்வது, தோட்ட வேலைக்கு செல்வது, வழிபாட்டு தலங்களுக்கு செல்வது,  என எதுக்கு சென்றாலும் சாதி அடையாளம் தெரிந்தால் உயிருக்கு ஆபத்தான நிலைமை என்ற சூழல் பல இடங்களில் நிலவியது. நெல்லை புறநகர் பகுதியில் மோதல்கள் ஏற்பட்டு வீடுகள், பொருட்சேதம், உயிர்சேதம் ஏற்பட்டது.

              ஆட்சியாளர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. பல இயக்கங்கள் ஸ்தம்பித்துநின்றன. மக்கள்மத்தியில் நம்பிக்கை உருவாக் குவதற்கும், இளைஞர்களிடம் மாற்று சிந்தனையை ஏற்படுத்துவதற்கும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு இடையில் நடை பயணமாக செல்வது என்று முடிவெடுத்தது.

                மக்கள் ஒற்றுமையும், தென்மாவட்டங்களில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதற்கான தொழில்தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த நடைபயணத்தை நடத்தினோம்.

 

                    மாநிலக்குழு முடிவெடுத்தாலும் பதட்டமான சூழலில் நடைபயண த்தை நடத்துவது தொடர்பாக நெல்லை மாவட்ட நிர்வாகிகளிடம் தயக்கம் இருந்தது. இருப்பினும் அவர்கள் நிலைமையை ஆய்வுசெய்து, பல மாதங்களாக இந்த பதட்டமான நிலைமை நீடிக்கிறது. இது தொடர்ந்து நீடிப்பது மேலும் பல ஆபத்துகளை உருவாக்கும். எனவே இந்த நேரத்தில் துணிச்சலுடன் மக்கள்மத்தியில் நடைபயணத்தை நடத்துவதுதான் மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கமுடியும் என்று முடிவெடுத்து நடைபயணத்தை நடத்தட முடிவெடுக்கப்பட்டது.

                1995,டிசம்பர்,20-ம் தேதி ஒருநாள் நடைபயணம் நடைபெற்றது. தென் மாவட்டங்களில் இருந்து 1200 பேர்கள் வரை கலந்துகொள்வது என்று முடிவெடுத்து 1000பேர்கள் அந்த நடைபயணத்தில் கலந்து கொண்டார்கள். அனைவரும் வெள்ளைசீருடையுடன், வெள்ளைதொப்பியுடன், வெள்ளை கேன்வாஸ் ஷூ, வெள்ளைக் கொடி ஏந்தி அந்த நடைபயணம் நடந்தது.

                    தூத்துக்குடி,நெல்லை மாவட்டம் இணைந்த பகுதிகளில் செல்வது என்ற அடிப்படையில் கோவில்பட்டியை துவக்க நிகழ்ச்சி நடத்துவது என்று முடிவு எடுத்து ஆயிரம் இளைஞர்கள் வெண்ணிறத்தைஏந்தி கோவில்பட்டியில் குவிந்தார்கள். கோவில்பட்டியில் பிரதான வீதிகளில் அதிகாலையில் ஊர்வலமாக சென்று பிரச்சாரம் செய்தோம். கோவில்பட்டி நகரில் அனைத்து வண்ணங்களையும் 1000 பேர் கொண்ட வெண்ணிநிற வண்ணம் அபகரித்துக் கொண்டது.

                 ஊர்வலம் முடித்து அங்கிருந்து வாகனத்தின் மூலம் நடைபயணம் துவங்க வேண்டிய கயித்தார் சென்று கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு நெல்லையை நோக்கி வெண்படை நடக்க ஆரம்பித்தது. அன்று இரவுக்குள் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு ஊடாக கடந்துசென்று நெல்லையில் பொது கூட்டத்தோடு முடிப்பது என்று எடுத்த முடிவுக்கு ஏற்ப பயணம் படுவேகமாக நடைபெற்றது.

               1000இளைஞர்கள், வெள்ளைநிறத்தில் காற்றில் படபடக்கும் வெள்ளைக் கொடியுடன், பயணித்துவந்த காட்சி கண்கொள்ளாகாட்சியாக இருந்தது. நீலவானத்தில் மேகக்கூட்டங்கள் மேலே பயணித்துக் கொண்டிருந்தது. அதன் எதிர் திசையில் சுட்டெரிக்கும் வெயிலில் கொதிக்கும் தார்சாலையில் வெள்ளைநிற மேகக்கூட்டங்களைப்போல் வாலிபர் சங்கத்தின் படை நடைபோட்டுக்கொண்டிருந்தது.

              சில இடங்கள் வனாந்தரமாக இருந்தது. பெரும்பாலான இடங்களில் சாலையோரங்களில் இருந்த கிராமங்களிலிருந்து மக்கள்  வந்து நடைபயணத்தை வரவேற்று உபசரித்தார்கள். சாலையில் செல்லக்கூடிய பேருந்துகளில் மக்கள் கையசைத்துக்கொண்டே சென்றார்கள். பல இடங்களில் பேருந்துஓட்டுநர்கள் தூரத்தில் பார்த்தவுடன் வாகனத்தை நிறுத்தி மரியாதையுடன் கூடிய ஆதரவை தெரிவித்தார்கள்

          வன்மங்களுக்கு எதிராக வெறுப்புகளுக்கு எதிராக, நம்பிக்கை இழந்த மக்களுக்கு நம்பிக்கையாக, தங்களின் உடலை வருத்திக்கொண்டு கால் வலிகளை பொறுத்துக்கொண்டு அந்த பயணம் சென்று கொண்டிருந்தது.

            தலைமைதாங்கிய எங்களுக்கு பாதிக்கப்பட்ட  இடங்களில் கடந்துசெல்ல இருக்கிறோம் இந்தப் பயணத்தின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்று எண்ணமும் படபடப்பும் இருக்கத்தான் செய்தது. ஒரே நாளில் 40 கிலோ மீட்டரை கடக்க வேண்டும் பொதுக்கூட்டமும் நடத்த வேண்டும். எனவே ஓய்வில்லாமல் நடக்கவேண்டிய நிலைமை இருந்தது. உணவும் பொட்டலங்களாக எடுத்துக்கொண்டு வழியிலேயே அவசர அவசரமாக சாப்பிட வேண்டிய நிலைமை. இவை அனைத்தும் இயல்பாக நடந்து முடிந்தது.

             நெல்லை நகர நெருங்குகிற பொழுது நகருக்குள் செல்ல வேண்டிய பாதையிலிருந்து பிரிந்து கிராமங்களுக்கு செல்லக்கூடிய பாதையில் நடந்தோம். பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்றபொழுது சற்றுபதட்டம் இருந்தது. ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்கள் விளக்குகளுடன், சில இடங்களில் தீப்பந்தங்களுடன ஒளியேற்றி சாலைக்குவந்து வரவேற்பு கொடுத்தனர். குடிப்பதற்கு நீரையும் இதர பானங்களையும் வழங்கினார்கள். இது பல இடங்களில் நடந்தது.

             அவர்களை கடந்து செல்கிறபோது அந்த மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது மட்டுமல்ல நடைபயணத்தில் வந்தவர்களுக்கும் புதிய நம்பிக்கை உருவானது. ஒரு பயனுள்ள நடைபயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வரவேற்ற மக்களின் முகத்தின் வழியாக எங்களது  மனத்திரையில் பதிந்தது.

                       திருநெல்வேலி நகருக்கு சுற்றி வந்தபொழுது பலருக்கு கால்களில் கொப்பளங்கள் வந்து விட்டது. ஆனாலும் இன்னும் சிறிது தூரம்தான் என்பதை மனதில் இருத்தி நடந்து கொண்டே இருந்தார்கள். அதிகம் கொப்பளங்கள் வந்த தோழர்களை வாகனத்தில் ஏற்றி அனுப்ப முயற்சி செய்தோம். ஆனால் அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.

             ஒருசிலருக்கு காலில் ஏற்பட்ட வலியால் கண்களில் கண்ணீர் வடிந்ததை காணமுடிந்தது. கொப்பளங்கள் வெடித்து நீராகமாறி அவர்கள் அணிந்திருந்த கேன்வாஸ் ஷூ உட்பட நனைந்திருந்தது. அவர்களும் மாற்று ஆலோசனைகளை மறுத்து நடந்தே வந்த காட்சிகள் இன்றும் தலைமை தாங்கிஉடன் நடந்துவந்த எங்கள்மனதில் அழியாநினைவாக ஆழப்பதிந்துவிட்டது.

              நான் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இதை எழுதுகிறபொழுது அந்தக் காட்சிகள்தான் எனது மனதிலே அழிக்க முடியாமல் ஓடிக்கொண்டிருக் கிறது உடலை வருத்திக்கொள்வது என்று சொல்வார்களே அதற்கு உண்மையான அர்த்தமாக அந்த நடைபயணத்தில் வந்த தோழர்களின் செயல்பாடு இருந்தது.

                   ஒரு வழியாக அனைத்து இளைஞர்களும் பொதுக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தடைந்தோம். அப்போதெல்லாம் பொதுக்கூட்டத்தில் அமர் வதற்கு நாற்காலிகள் போடுவதில்லை. வந்தவர்கள் பெரும்பகுதி தரையில் அமர்ந்து விட்டார்கள்.

               தலைவர்கள் நாங்கள் மேடையில் அமர்ந்து விட்டோம்.மேடையில் அமர்ந்தவர்களை பேசுவதற்கு அழைத்தபோது எழுந்து பேசுவதற்கு சிரமப்பட வேண்டியநிலைமை உருவாகியது. அதைவிட சிரமமான விஷயம் யாரெல்லாம் கீழே உட்கார்ந்தார்களோ அவர்கள், கூட்டம் முடிந்து எழுவதற்கான முயற்சி செய்தால் எழுந்து கொள்ள முடியவில்லை. பலரின் உதவியால் அவர்கள் எழுந்து வெளியே சென்றார்கள். அடுத்த நாள் காலை மதுரை உட்பட தென்மாவட்டங்களிலிருந்து வந்த செய்திகள் நடைபயணத்தில் எந்த அளவு தோழர்கள் வலிதாங்கிகளாக இருந்துள்ளார்கள் என்பதை உணரமுடிந்தது. பேருந்தில் ஏறி அமர்ந்த தோழர்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று பேருந்திலிருந்து இறங்க எழுந்துபோது எழுந்திருக்க முடியவில்லை.  மற்றவர்களின் உதவியோடுதான் இறங்கி சென்றுள்ளனர்.

                 ஒவ்வொரு நிகழ்விலும் ஏதாவது ஒரு மாறுபட்ட சில விஷயங்கள் நடக்கும். சைக்கிள் பயணத்தின் போது ஒருசிலர் தூக்கத்தில் கால்களை அசைத்து சைக்கில் ஓட்டினார்கள். இப்படித்தான் அன்றைக்கும் ஒரு சம்பவம் நடந்தது. நடைபயணத்தில் களைப்பால் அனைவரும் பொதுக்கூட்டத்தில் அமைதியாக எழுந்திருக்க முடியாமல் அமர்ந்து விட்டோம்.

                     ஒருவர் மட்டும் அப்படி நடந்துவந்த களைப்பு தெரியாமல் கால்வலி இருப்பதாகவோ, வேறு கஷ்டங்கள் இருப்பதாகவோ, காட்டிக்கொள்ளாமல் மேடையில் இருந்தவர்களும், மேடைக்கு எதிரில் இருந்தவர்களுக்கும், டீ வாங்கிக் கொண்டு கொடுத்துக்கொண்டிருந்தார். மீண்டும் மீண்டும் அவர் நடந்து கொண்டிருப்பதை, டீ வாங்கிக்கொண்டு கொடுத்திருப்பதை, நானும் ரவீந்திரன், கருமலையான், மேடையில் இருந்தவர்கள் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தோம். அவர் வேறு யாருமல்ல தற்போது பழனி  நகர கட்சி செயலாளராக இருக்கக்கூடிய நகர்மன்றத் துணைத் தலைவர் தோழர்.கந்தசாமிதான் அந்த இளைஞர். ஒரு சிலரின் உடல் வாகு, மனவலிமை மாறுபட்டதாக தான் இருக்கிறது.

                    இந்த நடை பயணத்திற்கு பிறகு அந்த பகுதியில் குறிப்பாக தென் மாவட்டத்தில் பல பகுதிகளில் வாலிபர் சங்கம் பரவலாக சென்றடைந்தது. வேலை கொடுக்க வேண்டும் என்ற கோஷம் வேலையின்மை சமூக மோதல்களுக்கு ஒரு காரணமாக இருக்கிறது என்ற அம்சமும் விவாதப் பொருளாக மாறியது. அன்றாடம் பதட்டப்பட்டுக் கொண்டிருந்த மக்களிடம் பதட்டத்தை குறைத்து வழக்கமான பணிகளில் ஈடுபடுவதற்காக ஒரு சூழலை உருவாக்கியது.

              அரசும் மாவட்டத்தின் பெயர்களை, போக்குவரத்துக்கழகங்களின் பெயர்களை சாதி சமூக அடிப்படையில் வைத்திருப்பதன் பாதிப்புகளை உணர ஆரம்பித்து மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சிகள் எடுத்துக் கொண்டு இருந்தது. இந்த பயணம் தென் மாவட்டங்களில் பரவலாக சென்றடைந்தது. எல்லோருக்கும் வேலை எல்லோருக்கும் கல்வி என்ற ஒற்றை கோரிக்கை அனைவரையும் ஈர்த்தது.

            அன்றைய மாநிலச் செயலாளராக இருந்த டி.ரவீந்திரன். மாநில தலைவராக இருந்த நான், மாநிலத் துணைத் தலைவராக இருந்த தோழர் என். குணசேகரன் அன்றைய தினம் சிதம்பரனார் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட செயலாளராக எஸ்.கே.மகேந்திரன் திருநெல்வேலி மாவட்ட தலைவர் செயலாளராக இருந்த தோழர் சேவியர்,கே.ஜி.பாஸ்கரன் மாநில நிர்வாகிகள் இருந்த தோழர்.கருமலையான் தென்மாவட்ட வாலிபர் சங்க நிர்வாகிகள் இதில் முனைப்புடன் பங்குபெற்றனர்.

 

               தென்மாவட்ட வாலிபர் சங்க வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டிய மிக முக்கியமான நிகழ்வு. தலையிட வேண்டிய நேரத்தில் தலையிட்டு புதிய நம்பிக்கையை உருவாக்கி, அடுத்த கட்டத்திற்கு செல்லக்கூடிய பணியை வாலிபர் சங்க தலைவர்கள், வாலிபர் சங்கம் செய்து முடித்தது. எனது நினைவுகளில் இருந்து மட்டும் தான் இந்த பதிவை நான் போடுகிறேன் இன்றைக்கு முகநூல் வழியாக பங்கு பெற்றவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் பொழுது இந்த பதிவை முழுமைப்படுத்த முடியும்.

 

               நான் மதுரை ராஜாஜி மருத்துவமனை போராட்டத்தைப் பற்றி எழுதிய பதிவு பல்லாயிரக் கணக்கானவர்களை சென்றடைந்து. பயனுள்ள பின்னூட்டங்களை தெரிவித்திருக்கிறார்கள். மேலும் அவற்றை முழுமைப்படுத்தி நிறைவான பதிவாக பதிவு செய்து வைக்க முடியும்.

                   துரதிஷ்டவசமாக அன்றைய தினம் புகைப்படங்களை எடுத்து பாதுகாத்து வைப்பதற்கான வாய்ப்புகள் என்பது குறைவாக இருந்தத. இரண்டாவதாக செய்த விஷயங்களை மூலமாக பதிவு செய்வது ஏன் மிகைப்படுத்திச் சொல்கிறோமோ என்ற உணர்வு சில நேரங்களில் மேலோங்கி விடுவதால் இது தற்புகழ்ச்சியாக மாறிவிடுமோ என்ற எண்ணங்கள் அன்றைக்கே இருந்ததால் ஆவணங்கள் முழுமைப்படுத்தபடாமல் இருந்துவிட்டது. எனவேதான் போராட்டக் காலத்தில் இருந்தவர்கள் பங்களிப்பதன் மூலமாக இந்த பதிவை முழுமைப்படுத்த முடியும்.

அ.பாக்கியம்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...