Pages

ஞாயிறு, மே 15, 2022

பெருங்குடி திடக்கழிவு: பயோமைனிங் முறை பலன் தருமா?


 

                 பெருங்குடியில் இருக்கிற திடக்கழிவு குப்பைமேட்டில் தீ பிடித்து எரிந்த பிறகு மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதுபற்றிய செய்திகள் ஊடகங்களிலும் பல சமூக ஆர்வலர்களும் அரசியல் தலைவர்களும் பெருங்குடி தீப்பிடித்தல் தொடர்பாகவும், நன்னீர் சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாகவும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

            பெருங்குடியில் மட்டுமல்ல சென்னை முழுவதும் திடக்கழிவு மூலமாக ஏற்படும் விளைவுகளை அரசு விரைவாக செயல்பட்டு தீர்க்க வேண்டும்.பெருங்குடியில் மட்டும் 34 லட்சம் கனமீட்டருக்கு மேல் திடக்கழிவுகள் உள்ளன. இந்த திடக்கழிவுகளை பிரித்தெடுப்பதற்கு  முயற்சிகள் மேற்கொள்வது மிக மிக மந்தமாகவும் தேவையான அளவு  இல்லாமல் இருக்கிறது. 

         கடந்த பத்தாண்டு காலத்தில் இருந்து அரசு பெரிதாக முயற்சி எடுக்கவில்லை என்று தெரிகிறது. அரசு துரிதகதியில்  தேவையான அளவு முயற்சி எடுக்கவில்லையென்றால் இந்த திடக்கழிவு பிரச்சனை சென்னையில் மிகப்பெரும் பிரச்சனையாக மாறும்.

         34 லட்சம் கனமீட்டர் குவிந்துள்ள குப்பை மேடுகளில் கணிசமானது மரபு கழிவுகள் (legacy waste) ஆகும். மரபுக் கழிவு என்பது  நீண்டகாலமாக கொட்டப்பட்டு இறுகிப் போய் இருக்கக்கூடிய குப்பைகள். இவற்றில் அனைத்தும் பிரிக்கப்படாமல் இருக்கும் மாசுபட்ட கட்டிடப் பொருட்கள் மற்றும் கட்டமைப்பு பொருட்கள், பிளாஸ்டிக், அசுத்தமானமண், புதைக்கப் பட்ட கழிவுகள், தகர டப்பாக்கள், என அனைத்தும் பிரிக்கப்படாமல் கொட்டப்பட்ட கழிவுகள்.

            இவற்றையெல்லாம் பயோ மைனிங் (biomining) முறையில் பிரித்து எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது ஆனால் தேவைக்கும் நடைபெறக்கூடிய பணிக்கும் இருக்கிற இடைவெளி மலைக்கும் மடுவுக்குமான இடைவெளியாக இருக்கிறது.

                பயோ மைனிங் என்பது உயிர் உயிரினங்கள் அல்லது காற்று மற்றும் சூரிய ஒளி போன்ற இயற்கைக் கூறுகளை கொண்டு மரபுக் கழிவுகளை அகற்றுவதாகும். இந்த பயோ மைனிங் மூலமாக மரபுக் கழிவுகளை காற்று மற்றும் சூரியனுக்கு வெளிப்படுத்தினால் அதன் அடுக்குகளில் உள்ள மக்கும் கழிவுகள் இயற்கையான செயல்முறை மூலம் சிதைந்து விடும். அவற்றைப் பிரித்து மக்காத குப்பைகளை தனியாக அப்புறப்படுத்துவது.

           தற்போது  6 இடங்களில் இந்த பயோ மைனிங் முறை அமுல் படுத்தப் படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருங்குடியில் ஒவ்வொரு இடத்திற்கும் 35 ஏக்கர் 22 ஏக்கர்36 ஏக்கர் என்று பயோமைனிங் செய்வதற்காக பிரித்து கொடுத்திருக்கிறார்கள். 

          2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அக்டோபர் மாதம்தான் செயல்படத் துவங்கியது. 39 மாதங்களில் மரபு கழிவுகள் முழுமையாக அகற்றப்படும் என்று ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் பயோமைனிங் முறைகளால் கிடைக்கும் பலன்கள் பற்றி நிறைய பேசப்படுகிறது. 

                      குப்பை கிடங்கில் நிலத்தை மீட்டெடுப்பதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 3.75 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைக்க முடியும். இந்த செயல்முறை சிமெண்ட் ஆலைகளில் நிலக்கரிக்கு மாற்று எரிபொருளாக கழிவு பெறப்பட்ட எரிபொருளை (RDF) பயன்படுத்தப்படும் முடியும்.

              பெருங்குடி கழிவு பெறப்பட்ட எரிபொருளை( RDF) செயலாக்கம் 2.29லட்சம்  டன் கார்பன் சேமிக்க முடியும். இது ஒரு வருடத்தில் 2.81 லட்சம் ஏக்கர் காடுகளில் உருவாகும் கார்பனுக்கு சமமானதாகும் என்ற பலவிஷயங்களை ஒப்பந்ததாரர்களும் அதிகாரிகளும் அள்ளிவிடுகின்றனர். ஆனால் இதற்கு ஏற்ற நிர்வாக ஏற்பாடுகளும் நிதி மற்றும் இயந்திர அளிப்புகளும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

                 தற்போது 8 மாதங்கள் ஆகி இருக்கிறது. தினசரி ஆயிரம் மெட்ரிக்  டன் மரபுக் கழிவுகளை பயோமைனிங் செய்தால்கூட புதிதாக பிரிக்கப்படாத குப்பைகள் கொட்டப்பட்டு கொண்டே இருக்கும். இவைகுறிப்பிட்ட காலத்தில் மரபுக்கழிவுகளாக மாறிவிடும.

               திடக்கழிவு மொத்தமாக ஒழுங்குபடுத்தபட வேண்டுமானால் அரசும், பெருநகர சென்னை மாநகராட்சியும்  தேவையான அளவு பயோமைனிங் முறைகளை கொண்டுவர வேண்டும். மறுசுழற்சிக்கு வரக்கூடிய குப்பைகளை இதர பயன்பாட்டிற்கு கொண்டு செல்வதற்காக முறையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம்பிரித்து வாங்குவதை அடிமட்டத்திலிருந்து செய்யவேண்டும். 

             எனவே திடக்கழிவு மேலாண்மை தொடர்பான விரிவான திட்டத்தை விரிவான முறையில் தேவைக்கு ஏற்ற முறையில் அமுலாக்க முயற்சி செய்வது மட்டுமே இன்றைய நெருக்கடியிலிருந்து மீள முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...